வகுப்பறை கதைகள் 27 (Vagupparai Kathaikal):- பெரியசாமி சின்னசாமி - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | www.bookday.in | பள்ளி மாணவர்கள் கதை

வகுப்பறைக் கதைகள் 27:- பெரியசாமி சின்னசாமி – விட்டல்ராவ்

பெரியசாமி சின்னசாமி

வகுப்பறைக் கதைகள் – 27

– விட்டல்ராவ்

அரையாண்டுத் தேவுக்கு இன்னும் இருமாதங்களிருக்கும், டி.பி. பெரியசாமி தன் கிராமம் தண்டே குப்பத்துக்கு கூப்பிட்டுக் கொண்டேயிருக்கிறான்.

ராதாகிருஷ்ணனின் இடத்தை நட்புரீதியாக பெரியசாமி பிடித்துக் கொண்டிருந்தான். மதறாசுக்குப் போகும் கிருஷ்ணகிரி- பர்கூர் நெடுஞ்சாலையில் காட்னாம்பட்டி முருகன் கோயிலுக்கு எதிர் வாடையில் பிரியும் மண்சாலையில் ஒண்ணரை மைல் தூரம் நடந்தால் பெரியசாமியின் ஊர் தண்டேகுப்பம் வந்துவிடும். ராகியோ, நெல்லோ பச்சைப் பசேலென்று ஒரு ரம்மியமான சூழல்.

சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த என்னைப் பார்த்ததும் பெரியசாமியின் அம்மா, ‘‘இதாரு, சின்னசாமி?’’, என்று சிரித்துக் கொண்டே என்னைக் காட்டிக் கேட்டாள்.

‘‘கூடப்படிக்கிறவன்’’ என்றான் பெரியசாமி. பகல் பன்னிரெண்டு, வெயில் எரித்தது.

‘‘கால், கை களுவிகினு சாப்புட வாங்க’’, என சொல்லிவிட்டு குடிசைக்குள் நுழைந்தாள் அவனம்மா. குடிசை மிகவும் பெரியது. பூசணிக் கொடி ஏறிப் படர்ந்து பரவியிருந்தது. உள்ளே இரண்டு அறைகள் தாராளமாக. சமையலறை, சிறு கூடம் என்றிருந்தது. மின்சார வசதியில்லை. மின்சார கனெக்ஷனுக்கு அவனப்பா எழுதிப் போட்டிருக்கிறாராம். ஏற்றக் கிணற்றுக்கு நீர் இரைக்கும் பம்புசெட் ஏற்பாட்டுக்கும் கூடவே எழுதிக் கேட்டிருக்கிறாராம். கழிக்க குளிக்கவெல்லாம் வெட்டவெளிதான். புதர் மறைவுமுண்டு. ஒளிவு மறைவு அதிகமற்ற இயற்கைச் சூழலிலும் ஆரோக்கியமான அன்றாட வாழ்விலுமாய் அங்கே அது. வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் கை, கால் கழுவும்போது, ‘‘குளிக்கிறியா, நாங்குளிக்கப் போறேன்’’, என்றான் பெரியசாமி.

தயங்கியபடி, ‘‘வேணாம்பா’’ என்றேன்.

‘‘பொம்பளைங்க ஆரும் வரமாட்டாங்க’’ என்று சொல்லிவிட்டு சிரித்தவன், ‘‘கோமணம் வேணும்னா புதுசா தர்ரேன்’’ என்றான். அவனிடம் கூச்சம் துறந்துபோனவனாக, ‘‘அண்ணா கயிறே இல்லே, அறுந்துபோச்சி’’ என்றேன்.

‘‘யோவ் நாந்தர்ரேன்’’, என்று கூறிவிட்டு குடிசைக்கு ஓடிப்போய் புதிய கருப்பு அரைஞாண் கயிற்றையும், வெள்ளை வேட்டியிலிருந்து கிழித்தெடுத்த கெளபீனத் துண்டுத் துணியையும் கொண்டு வந்து நீட்டினான் பெரியசாமி. குளித்து முடித்துவிட்டு குடிசைக்குள் நுழைந்தோம். சுடச்சுட கேழ்வரகுக் களியுருண்டை வாழையிலையில் உட்கார்ந்திருந்தது. களியுருண்டையின் நடுவில் பள்ளமாக்கிக் கொள்ளச் சொன்னாள் பெரியசாமியின் அம்மா.

‘‘ஒங்கய்யா எங்கப்பா?’’, என்று கேட்டேன்.

‘‘அவங்கய்யா வருவாரு. புதுசா மாடு புடிச்சாற போய்க்கீறாரு’’, என்று பதிலளித்தாள் அவனம்மா. களியுருண்டையில் உண்டாக்கிய சிறு பள்ளத்தில் நெய்விட்டு பூண்டு மணம் தூக்கும் கீரை மசியிலை ஊற்றினாள். புளிச்சக்கீரையும் களியும் இருக்க எதையெதையோ தேவாம்ருதமென்று நினைத்து அழைத்துப் பிதற்றுகிறார்களே என நினைக்கவேண்டியிருந்தது. களியை நாவுக்குள் வழுக்கிவிட்டு விழுங்கினேன். வயற்காட்டைச் சுற்றிக் காட்டினான் பெரியசாமி.

வரிசையாக தென்னை மரங்கள். இளநீர் பறித்து வெட்டித் தந்தான். கிருஷ்ணகிரி தட்பவெப்பம் குளிர்ச்சியானது. சாத்துக்குடி, பப்ளிமாஸ் எல்லாம் வளர்க்கப்பட்டு பலன் தந்த குளிர்ந்த இன பழ வகைகள் அங்கே. பெரியசாமியின் அப்பாவும் ஏழெட்டு சாத்துக்குடி பழமரங்களையும் ஒரு பப்ளிமாஸ் மரத்தையும் வைத்து வளர்த்திருந்தார். பழமாகப் பார்த்து சாத்துக்குடி ஒன்றைக் கொய்து உரித்துத் தந்தான்.

‘‘என்னடா வண்றே?’’ என்று முரட்டுத்தனமாய்க் கேட்டுக் கொண்டே வந்த மனிதரைக் கண்டதும் வெலவெலத்துப் போன பெரியசாமி, ‘‘எங்கய்யா’’ என்றான். நான் வணக்கம் செய்தேன். ‘‘ம், வூடெங்கே?’’ என்றார். சொன்னேன்.

‘‘படிக்கவே மாட்டேங்கிறான். கொஞ்சம் புத்தி சொல்லு,’’ என்றார்

‘‘சரி, போயி மடைகட்றா’’ என்றார் மகனிடம்.

வயலில் பாத்திகள் நிறைந்து வந்தன. பெரியசாமி மண்வெட்டி கொண்டு வேக வேகமாய் பாத்திகளை மடை கட்டிக் கொண்டே போனான். மற்றொரு ஆளும் அதே வேலையை செய்துகொண்டேயிருந்தார். ‘‘அது எங்க மாமன்’’, என்றான்.

மத்தியானம் தென்னை மரத்தடியில் அமர்ந்து ஆங்கிலப் பாடம் படித்தோம். இலக்கணமும் கடின பதங்களுக்கான பொருளும் சொல்லித் தந்தேன். அதை ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருந்துவிட்டு கண்டிப்போடு கூறினார் அவனப்பா.

‘‘இந்த வருசம் மட்டும் பாசாவலேனா, பள்ளிக்கூடத்தவுட்டு நிறுத்திடப்போறேன். நெறய மாடுங்க இருக்கு. களனியில வேலையிருக்கு’’ என்று சொல்லிவிட்டு

‘‘அரைப் பரீட்ச எப்போ?’’ என்று கேட்டார். ஒரு மாதம் இருப்பதாய்ச் சொன்னேன். அப்போது அங்கு வந்து நின்ற பெரியசாமியின் அம்மா சிரித்துக் கொண்டே என்னைப் பார்த்து, ‘‘ஏ சின்னசாமி, எங்க பெரிசாமிக்கு ரவா இங்கிலீசெல்லாம் சொல்லிக் குடு. என்னாத்துக்கு மாடு மேய்க்கணும், படிக்கட்டும்’’, என்றாள்.

‘‘ஊம்.. ஊம், படிப்பாம் படிப்பான் பாத்துகினேயிரு. பாக்கலாம், இந்த அரப் பரீச்சையில என்னா கிளிக்கறானு. பெயில் மார்கு வாங்கிகினு மாத்தரம் வர்டும், மவனே ஒந் தோல உரிச்சி உப்ப தடவனேனா இல்லியா பாரு’’, என்றார் அவனப்பா. பேச்சுக்குப் பேச்சு பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்திவிடுவதிலேயே இருந்தார்.

‘‘சொம்மாருங்க, பெயங்காட்டாதீங்க. நீ நல்லா படிடா. சின்னசாமி, கொஞ்சம் சொல்லிக்குடு’’, என்றாள் அவனம்மா. அவனப்பாக்கு அன்றைய எரிச்சல் எதனாலோ எதன்மீதோ. பெரியசாமி அகப்பட்டான் பிள்ளையார்கோயில் ஆண்டியாக அவருக்கு, பாப்பாரப்பட்டி சந்தையில் பார்த்துப் பேசிய மாடு விலை படியவில்லை. பக்கத்தில் பர்கூரில் பார்த்ததையே வாங்கித் தொலைப்பதாய் அம்மாவிடம் அலுத்துக் கொண்டிருந்துவிட்டு கடப்பாரையுடன் எழுந்து எங்கோ போனார். அவர் வெகுதூரம் போனதும் பெரியசாமியின் அம்மா கேட்டுக் கொண்டாள்.

‘‘சின்னசாமி, எங்க பெரியசாமிக்கு தெரியறத கொஞ்சம் சொல்லிக் குடு, கண்ணு’’

மனம் கஷ்டமாயிருந்தது. அரையாண்டுத் தேர்வு நெருங்கிற்று. வீட்டில் ஏகப் பிரச்சனை. மின்கட்டணம் செலுத்தாததால் அந்தத் துறைக்காரன் வந்து ஃபியூஸைப் பிடுங்கிக் கொண்டு போய்விட்டான். மீண்டும் வீடு, ஓசூர் அரூர் மேச்சேரியனுபவமாய் இருளோவென்றானது.

‘‘பரீட்சை வருது, லைட்டில்லே, எப்பிடி படிக்கிறது’’ என்று மோகனாக்கா அலுத்துக் கொண்டாள். ராமு புருஷோத்தமன் வீட்டுக்கு படிப்பதற்குப் போய்விட்டான். தெருவில் வீட்டுக்கெதிர் வாடையில் கொஞ்ச தூரத்தில்தான் இருந்தது தெருவிளக்கு, அதன் வெளிச்சம் இளம் மஞ்சளாயும் மங்கலாயும்தானிருக்கும். அதற்கு நேர் கீழே உட்கார்ந்தால் அல்லது நின்றால்தான் எதையும் படிக்க முடியும். சற்றுத் தள்ளிப்போனால் சரியாக வெளிச்சம் கிடைக்காது. அதேசமயம் பல்வேறு பறக்கும் சிறு ஜீவராசிகள் விளக்கை மொய்த்தபடியிருக்கும். அதன் கீழேயிருந்தால் நம்மீது பொத் பொத்தென்று விழும். எப்படியோ படித்து கிழித்தோமென்று அரையாண்டுத் தேர்வையும் ஒருவாறு கடந்தாயிற்று.

வீட்டில் செலவினங்களுக்கு அப்பா தடுமாறிக் கொண்டிருந்தார். பென்ஷன் இன்னும் வரவில்லை. பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவன் தன் சகல பவிஷுகளையும் இழந்து, தான் பணியாற்றிய அலுவலகத்துக்குள் நிராயுதபாணியாக ஓர் அந்நியன் மாதிரி நுழைகிறான். பென்ஷன் சம்மந்தமான கோப்பு எங்கே போயிருக்கிறது-என்ன நிலைமையிலிருக்கிறதென்ற எவ்வித துப்பையும் துலக்கவே இயலவில்லை. பரணில் பித்தளைப் பாத்திரங்கள் பூதாகாரமான அளவில் அண்டா குண்டா போகிணி கங்காளம் தவலையென்று களிம்பேறிக் கிடந்தன. எல்லாம் அம்மாவுக்கு அவள் வீட்டில் கல்யாணச் சீராகத் தந்தது. அவை இப்போதுதான் முதன் முதலாக அநாவசியமானதாயும் இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதாயும்பட்டன.

‘‘பகல்ல வேணாம், கொஞ்சம் இருட்டட்டும்’’, என்றாள் வசந்தாக்கா. இருட்டத் தொடங்கினதும் அவற்றில் ஒவ்வொன்றாக வாரத்தில் இருமுறை அப்பா உடன்வர வசந்தாக்கா இடுப்பில் வைத்துக் கொண்டு பழைய பேட்டை பஜாருக்குப் போய்விட்டு வருகையில் அரிசி பருப்பு மளிகைச் சாமான்களோடு திரும்புவார்கள். அம்மா வீட்டுச் சீதனம் ஓரிரு மாதங்கள் தாக்குப் பிடிக்க வைத்தன. அம்மா சமையலில் கெட்டி, அம்மாவின் சமையலுக்கு சில வீடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்பகுதி கர்ணம் கோபாலசாமி வீட்டுக்கு ஒருவேளைச் சமையல் காரியத்தை அம்மா ஏற்றுக் கொண்டாள். வசந்தாக்காவை அப்பா வக்கீல் ஒருவர் வீட்டில் வேலைக்கு அனுப்பிவிட்டார். மோகனா அம்மாவுக்கு உதவியாகப் போய்விட்டாள். வறுமை வந்தால் பத்தும் பறந்து போகக்கூடியதே.

இந்த சமயம் அரையாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை நாட்களும் கழிந்தன. தேர்வுத் தாள்கள் திருத்தப்பட்டு அவ்வந்த வகுப்பாசிரியர்கள் அவற்றை மாணவர்களுக்கு வினியோகித்தனர். எனக்கும் ராமுவுக்கும் ஆங்கிலம் தமிழ் சமூகப் பாடங்களில் உயர்ந்த மதிப்பெண்கள் கிடைத்திருந்தன. ராதாகிருஷ்ணனும் பெரியசாமியும் எல்லா பாடங்களிலும் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள்கூட பெற்றிருக்கவில்லை.

‘‘எம் பேப்பருங்கள நீயே வச்சிரு, அப்பறமா வாங்கிக்கிறேன்’’, என்று கூறி பெரியசாமி தன் எல்லா விடைத்தாள்களையும் என்னிடம் கொடுத்து வைத்திருந்தான். மறுநாள் காலையில் பெரியசாமி சைக்கிளில் வந்து இறங்கினான். அன்று சனிக்கிழமையாதலால் பள்ளி விடுமுறை.

‘‘வா, ஏறு’’, என்றான்.

‘‘எங்கேப்பா?’’

‘‘தர்மபுரிக்கு’’

‘‘அங்க யாரு இருக்காங்க?’’

‘‘வா, சொல்றேன்.’’

‘‘சைக்கிளில்லியா?’’

‘‘ஏறு.. சொல்றேன்’’

‘‘என்னாப்பா, சரியா சொல்லு’’, என்று கேட்டபடி பின்னால் ஏறியமர்ந்தேன். உட்காருமிடத்தில் எட்டாக மடித்த சாக்குப் பையை வைத்திருந்தான். உட்கார சுகமாயிருந்தது.

‘‘அங்கென்னா வேலை?’’

‘‘சும்மாதான்..’’

‘‘சைக்கிள்ளியா தர்மபுரிக்கு?’’

‘‘ஓட்டறேன் பாரு..’’

‘‘என்னாயிது?’’

‘‘மாடுங்களுக்கு தவுடு வாங்கியானு அனுப்பிச்சாங்க. அதுக்குதான் பெரிய சாக்கு.’’

‘‘தவுடு வாங்கவா தர்மபுரிக்கு?’’

பெரியசாமி பதில் சொல்லாமல் வேகமாய் சைக்கிளை மிதித்தான். தபோவனத்தைத் தாண்டிவிட்டால் கிருஷ்ணகிரி சுங்கச் சாவடி வந்துவிடும். நகரைத் தாண்டி வெகுதூரம் போயிருப்போம். காரிமங்கலம், காவேரிப்பட்டணம் எல்லாம் தாண்டும்போது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. மழை பெய்யத தொடங்கிவிட்டது.

‘‘ஐயோ, பெரியசாமி, மழை! இப்ப என்ன செய்றது?’’ என்றேன்.

‘‘ஒண்ணுமாவாது.’’ என்றவன் வேகமாய் மிதித்தான். மழை வலுத்துவிட்டது. மழைத்திரை எதிரில் வருவதை மறைத்தது. தெப்பமாய் நனைந்துவிட்டிருந்தோம். குளிரத் தொடங்கியது. அடியில் மடித்துப் போடப்பட்டுள்ள கோணியை எடுத்து விரித்து போர்த்திக் கொள்ளட்டுமா என்ற கேட்டது மழையின் ஓசையில் அவன் காதில் விழுந்திருக்காது அல்லது என் குரல் மங்கிப்போய் எடுபட்டிருக்காது. தர்மபுரி எல்லையை எட்டியபோது வெடவெடப்பு அதிகரித்தது.

‘‘குளுறுது பெரியசாமி, ரொம்பக் குளுருது.’’

‘‘ஆச்சி வந்திட்டோம் சின்னசாமி.’’

‘‘எங்கே போறோம்?’’

அப்போதுதான் தான் கிருஷ்ணகிரியிலிருந்து தர்மபுரிக்கு வந்ததன் காரணத்தையே வெளியிட்டான் பெரியசாமி.

‘‘எங்கய்யா என் அரப் பரீட்சப் பேப்பரையெல்லாம் கொணாந்து காட்டச் சொன்னாரு. இதோ அதோனு ரண்டு நாள் தள்ளிட்டனா, அய்யாக்கு யம்மேல சந்தேகமாப் போச்சி. நீயா கொணார்ரியா, இல்ல நானே இஸ்கூலுக்குப் போவட்டானு கேட்டுப் போட்டாரு. தோ போயி கொணார்ரேனு சைக்கிள எடுத்தேன். எங்கம்மா இருந்துகினு வாரயில அப்பிடியே தவுடு வாங்கியானு காசு தந்தாங்க. உப்ப ஆன்சர் பேப்பர கொண்டுபோயி அவுருகிட்ட காட்டினாக்கா மார்க்கப் பாத்துப்போட்டு அடிச்சி சாவடிச்சிருவாரு. இப்பிடி ரண்டு நா எங்காச்சி ஓடிப் போயிட்டு வூட்டுக்குப் போனா கோவமெல்லாம் போயிருக்கும். காணமே காணமேனு இருப்பாங்க’’ என்றான் பெரியசாமி.

‘‘ஐயோ, அதுக்கு தொணயா நானா அம்புட்டேன், இப்பிடி மளயில கூட்டியாந்தியே பெரியசாமி.’’

‘‘மளை வருமினு எனக்குத் தெரியாதே சின்னசாமி’’

அவன் தவிடு வாங்க வைத்திருந்த காசில் சுடச்சுட வாழைக்காய் பஜ்ஜியும் தேநீரும் வாங்கித் தந்தான். பஜ்ஜி கசப்பாயிருந்தது. உடல் வெடவெடப்பில் எகிறியெகிறிக் குதித்தது. பெரியசாமி சின்னசாமியை அணைத்து கதகதப்பூட்டிப் பார்த்துவிட்டு தேநீர் பாய்லர் அருகில் நிறுத்தி சூடேற்றினான். இரவு எட்டை நெருங்கிற்று. அன்றிரவை அந்த ஊரில் கழிக்க வேண்டியிருந்தது. எங்கே தங்குவது என்ற கேள்வி யோசனையாயிற்று.

‘‘ஏ சின்னசாமி, ஒனக்கு ஆராச்சி தெரியுமா இந்தூர்ல?’’

உடம்பில் கொதிநிலை அதிகரித்தது.

‘‘நாம் படிச்ச ஸ்கூல் ஒண்ணிருக்கு. அங்க போய்ப் பாக்கலாம்.’’

‘‘சரி, என்ன கெட்டியா புடிச்சிகினு பின்னால ஒக்காரு’’.

மழை ஓய்ந்துவிட்டிருந்தது. மங்கலான மஞ்சள் நிற தெரு விளக்கொளியில் அன்றைய விட்டல்ராவ் பள்ளிக்கூடம் படுகேவலமான தோற்றத்தில் காட்சியளித்தது. நுழைவாயிலில் நறுமணம் கமழ வரவேற்கும் நித்திய மல்லிக்கொடி புதராக மண்டி மழைக்குச் சரிந்து விழுந்து வாயிலை அடைத்துக் கொண்டிருந்தது. சிரீ ராம வித்யாசாலா என்ற பெயர்ப் பலகை பிய்ந்து கீழே கிடந்தது. கூரைக் கொட்டகை வகுப்புகளின் கூரையெல்லாம் பிய்ந்தும் பறந்தும் தொங்கியும் சரிந்தும் போயிருந்தன. உள்ளே உருப்படியாய் தோன்றின நாழியோடு வேய்ந்த வகுப்பறைகள் ஒன்றுக்குள் அடியெடுத்து வைத்தோம். அதிலும் தேள் தொந்தரவு இருக்காது என்பதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை. வாட்சுமேன் என்று எவரையும் காணோம். பக்கத்து வீடுதானே துக்காஜிராவின் குடியிருப்பு என்று போய்ப்பார்த்தால் அங்கு வீடேயில்லை. வேறெங்கோ போய்விட்டிருக்கக்கூடும் என்று நினைத்தவாறு பழைய அறைக்குள்ளேயே நுழைந்தோம். மழைநீரில் நனைந்து ரோமங்களையெல்லாம் சிலிர்த்துக் கொண்டு பெருச்சாளியொன்று பரிதாபமாக எங்களைக் கண்டு பயமேற்பட்டு அலைபாய்ந்துகொண்டிருந்தது. பெஞ்சுகள் இருக்கவே சாய்ந்தேன்.

‘‘சின்னசாமி.. சின்னசாமி, இங்க பாரு, என்னப்பாரு, என்னா செய்து?’’ என்று தோளைப் பிடித்து பலமாய் உலுக்கினான் பெரியசாமி. எதுவும் நினைவில்லை.
காலையில் வெயில் வந்திருந்தது. சூரியக் கதிர்கள் கூரையிடுக்கு வழியே தயங்கித் தயங்கி விட்டல்ராவ் பாடசாலை வகுப்பறைக்குள் பீய்ச்சிக் கொண்டிருந்தன.

தடுமாறி எழுந்து நிற்க முடிந்தது. பெரியசாமி சைக்கிள் சக்கரங்களுக்கு காற்றடித்துக் கொண்டு வந்தவன் என்னை நடக்க முடியுமாவென்று கேட்டான். பிறகு சைக்கிள் கேரியரில் உட்காரச் சொல்லி தள்ளிக் கொண்டு பஸ் ஸ்டாண்டருகிலுள்ள சீனிவாசா கபேக்கு கொண்டுபோய் சூடான இட்லி சாம்பார் காபி வாங்கித் தந்தான். இதமாயும் தெம்பாயுமிருந்தது. அத்தோடு தவிட்டுப் பணமும் காலி என்றான் பெரியசாமி. கஷ்டப்பட்டு சைக்கிள் பின்னால் ஏறியமர்ந்தேன்.

காவேரிப்பட்டணம் ஆற்றுப் பாலத்தைக் கடந்தபோது இறங்கச் சொன்னான். பின் சக்கரம் பஞ்சராகிவிட்டிருந்தது. சாலையோர மரத்தடியிலிருந்த சைக்கிள் பஞ்சர் கடையில் பஞ்சரை சரி செய்துகொண்டு மீண்டும் கிருஷ்ணகிரியை நோக்கிய பயணம். மதியம் ஒரு மணிக்கு என் வீட்டில் இறக்கிவிட்டு மீண்டும் வந்து பார்ப்பதாய் சொல்லி போய்விட்டான்.

அடுத்த நாள் அவன் வரும்போதும் வீட்டில் யாருமில்லை தொட்டுத் தொட்டுப் பார்த்துவிட்டு கவலையோடு கேட்டான்.

‘‘ஆசுபத்தரிக்கு வர்ரியாப்பா?’’

பதிலில்லை. ‘‘சரி வா’’, என்னை தூக்கினான். சைக்கிள் பின்னால் அமர்த்தி தள்ளிக் கொண்டே சர்க்கார் ஆசுபத்திரிக்கு கொண்டுபோனான்.

‘‘அட்மிட் பண்ணியாகணும் தம்பி. நீ போய் இவன் அப்பாவ கூட்டுட்டு வா’’, என்று கூறி பெரியசாமியை அனுப்பவும் அவன் என் வீட்டுக்குப் போய் விஷயத்தைச் சொல்லி அப்பாவை சைக்கிளில் உட்கார வைத்து ஆசுபத்தரிக்கு அழைத்துக் கொண்டுவந்துவிட்டான்.

அந்த டாக்டரின் கண்களில் இயல்பாகவே கருணையும் கவலையும் கலந்தாற்போன்ற பாவம் தோன்றும்.

‘‘ஒங்க பையனுக்கு நிமோனியா டைஃபாய்டு. அட்மிட் பண்ணியிருக்கோம். கூட துணைக்கு யாராவது இருக்கணும்’’, என்றார் டாக்டர்.

அப்பாவின் மனம் தவித்தது. டாக்டரின் அறையை விட்டு வெளியே வந்தவர் பெயர்ப்பலகையைப் பார்த்தார்.

டாக்டர் டபுள்யூ. எஸ்.சுந்தரம், ஆர்.எம்.ஓ. என்றிருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தார். பெரியசாமி எப்பவோ இடத்தைக் காலி செய்துவிட்டிருந்தான்.

அடுத்தவாரம் அப்பா ஆசுபத்திரிக்கு வந்திருக்கையில் டாக்டர் நர்ஸ் மெடில்டாவுடன் ரெளண்ட்ஸ் வந்து கொண்டிருந்தார். அப்பாவைக் கண்டதும், ‘‘என்னா மேன், பேஷண்ட்கூட ஒருத்தர் இருக்கணும்னு சொன்னேன். யாருமில்லையே..’’ என்றார். அப்பா கைகளைப் பிசைந்தபடி நிற்கையில் டாக்டர் குரலைச் சற்றுத் தாழ்த்திப் பேசினார். ‘‘பையன் கேஸ் கொஞ்சம் சீரியஸ் சார். இப்போ இதுக்கு க்ளோரோமெஸட்டின் அப்படின்னு ஒரு காப்சூல் புதுசா வந்திருக்கு. க்ளோரம் ஃபெனிகால்னு ஒரு அற்புதமான மருந்தாலானது. இங்கே கிடைக்காது. சேலம் போனாத்தான் கிடைக்கும். விலையும் ரொம்ப ஜாஸ்தி. சேலத்துக்குப் போய் வாங்கிட்டு வந்து குடுங்க. கேஸ் ரொம்ப சீரியஸ். உயிருக்கே ஆபத்தானது’’ என்றார் டாக்டர்.

‘‘என்ன விலையிருக்கும் டாக்டர்?’’

டாக்டர் அந்த மருந்தின் விலையை காகிதத்தில் எழுதிக் காட்ட, அதைப் படித்துவிட்டு அப்பா ஆடிப்போய் நின்றார். டாக்டர் வேகவேகமாய்க் கூறினார்.

‘‘போய்ட்டு வர்ரீங்களா சேலத்துக்கு’’

‘‘டாக்டர்’’

‘‘சொல்லுங்க, என்ன விஷயம்?’’

‘‘ஒங்ககூட கொஞ்சம் தனியா பேசலாமா?’’

‘‘ஓ.கே.நோ ப்ராப்ளம். அரை மணி நேரம் வெய்ட் பண்ணுங்க. ரெளண்ட்ஸ் முடிச்சிட்டு வந்து கூப்பிடறேன், வாங்க’’

‘‘தாங்க் யூ டாக்டர்.’’

‘‘ஸ்டாஃப்’’

மெடில்டா நர்ஸ் வேகமாய் வந்து கிருமி நாசினி கலந்த தண்ணீருள்ள சிறு இனாமல் பேசினை நீட்ட டாக்டர் தன் கைகளை நன்கு நனைத்துவிட்டு நர்ஸ் நீட்டிய துண்டால் துடைத்துக் கொண்டுபோனார். சற்று நேரம் கழித்து வார்டுபாய் ஒருவர் வந்து டாக்டர் அழைப்பதாகக் கூறி அப்பாவை ஆர்.எம்.ஓவின் அறைக்கு அழைத்துச் சென்றார். அப்பாவை உட்காரச் சொல்லி அவரை பேசவிட்டார் டாக்டர். பிறகு மெளனமாக அப்பா எழுந்து ஒரு முறை வார்டுக்குள் நுழைந்துவிட்டு வெளியேறினார்.

மறு வாரம் திங்கட்கிழமை முதல் நர்ஸ் மெடில்டாவை நிமோனியா டைஃபாய்டு நோயாளிப் பையனுக்கு, தான் சேலத்திலிருந்து வாங்கி வந்த விலையுயர்ந்த மருந்தை-க்ளோரமெஸிட்டினை- வேளா வேளைக்குத் தரச் சொல்லிவிட்டார் ஆர்.எம்.ஓ.டாக்டர் சுந்தரம்.

‘‘டாக்டரோட பையனுக்கும் நிமோனியா டைஃபாய்டுதான். டாக்டரே கார்ல சேலத்துக்குப் போயி ரெண்டு யூனிட் வாங்கிட்டு வந்திருக்காரு’’ என்று அப்பாவிடம் சொன்னாள் நர்ஸ். மனித உருவில் தெய்வம் வரும் என்பார் அப்பா – சிலசமயம்

எழுதியவர்:-

கி. விட்டால் ராவ் - தமிழ் விக்கிப்பீடியா

✍🏻 விட்டல்ராவ்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *