எழுத்துக்கூலி
வகுப்பறைக் கதைகள் – 28
– விட்டல்ராவ்
‘‘டேய், அந்த அண்ணன் தம்பிங்க என்னடா ஆனாங்க? ஒரு மாசத்துக்கு மேலே ஆறது, க்ளாசுக்கே வரக்காணோம். அவங்க வீடு யாருக்குத் தெரியும்?’’ என்று வகுப்பறைக்குள் நுழைந்து இருக்கையில் உட்கார்ந்து ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு கேட்டார் வகுப்பாசிரியர் மாதவராவ் சார்.
‘‘சின்னவனுக்கு டைபாயிடுனு இவன் சொன்னான் சார்,’’ என்று ராதாகிருஷ்ணனைக் காட்டினான் நாகேந்திரன்.
‘‘ஆமாங்க சார். நாந்தான் பெரியாசுபத்திரியில கொண்டு போய் சேத்தினேன்’’ என்றான் பெரியசாமி எழுந்து நின்று.
‘‘சரி, இப்போ எப்பிடியிருக்கானாம். போய் பார்த்தியா?’’ என்று கேட்டார் சார்.
பெரியசாமி பதிலெதுவும் பேசவில்லை.
‘‘உன்னத்தாண்டா, டி.பி.?’’ என்றார் பெரியசாமியைப் பார்த்து. சின்னவனை ஆசுபத்திரியிலிருந்து வெளியேற்றியதும் அவனை வீட்டில் போய் பார்க்கச் சென்ற பெரியசாமியை அம்மா கன்னா பின்னாவென்று திட்டியனுப்பிவிட்டாள். கண்ட கண்ட எடத்துக்கு கொட்டற மழையில கூட்டிட்டுப் போய் விஷக்காய்ச்சல வாங்கி ஆசுபத்திரியில படுக்கவச்சிட்டு மறுபடியும் வந்திட்டயா. வராதே வீட்டுப் பக்கம் என்று விரட்டிவிட்டதை பெரியசாமி சொல்லவில்லை.
‘‘இவந்தான் சார் ராமுவுக்கு ரொம்ப பிரண்டு’’ என்று புருஷோத்தமனைக் காட்டினார்கள்.
‘‘என்னடா புருஷ உத்தமனே?’’ என்றார் மாதவராவ்.
‘‘சார், அவங்கய்யாக்கு வேலையில்லையாம் சார். ரொம்ப கஸ்டங்க சார். சின்னமுத்தூர்ல அணைக்கட்டு கட்றாங்க சார். அங்கே ராமுவை எதோ வேலைக்கி சேர்த்திருக்காரு அவங்கய்யா.’’ என்றான் புருஷோத்தமன். அதைக் கேட்டு வகுப்பாசிரியர் மாதவராவின் உள்ளம் அடித்துக் கொண்டது. கண்கள் கலங்கிக் கொண்டு வந்தன. அண்ணனும் தம்பியும் அருகருகாக உட்கார்ந்திருந்த பெஞ்சைப் பார்த்தார். இன்னும் அது இரண்டு பேர் உட்கார்ந்திருந்த இடமாக காலியாகவே கிடந்தது.
‘‘ரிடையராயிட்டாரா, பாவம், நல்லா படிக்கிற பசங்க’’ என்று தமக்குள் சொல்லிக் கொண்டார். பிறகு மாணவர்களைப் பார்த்து மனம் பொறுக்காமல், ‘‘டேய், அலங்க வீடு தெரியுமா?’’ என்று கேட்டார்.
‘‘சார், அவங்கிருந்த வீடு பூட்டிக் கெடக்குது. ஒரு மாசமாவே பூட்டிக் கெடக்குது. பக்கத்தில கேட்டா சரியா சொல்ல மாட்டேங்கறாங்க’’ என்றான் பெரியசாமி. இப்போது ராதா கிருஷ்ணன் வாயைத் திறந்தான்.
‘‘சார், மூணு மாசமா வீட்டு வாடகை தர்லேனு வீட்டுக்காரர் காலி பண்ணச் சொல்லிட்டாராம். இப்போ அவங்க சிங்காரப்பேட்டை ரோடில பாலத்துக்கு கிட்டே இருக்காங்க. தெருவெல்லாம் இல்லே. அவனோட நாம் பேசறதில்ல.’’
‘‘டேய் சாமாச்சார் நீ போய் அவங்கப்பாவப் பாத்து நா வரச் சொன்னேனு சொல்லு. ராதா, நீயும் கூடப் போய் வீட்டக் கட்றா’’ என்றார் வகுப்பாசிரியர். சாமாச்சார் போய் பார்த்துவிட்டு வந்து வகுப்பாசிரியர் மாதவராவ் சாரிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அவர்கள் இப்போது குடியிருப்பது சேரி போன்ற பகுதியொன்றில்.
ஓலைக் குடிசையில். சாப்பாடு துணி மணிக்கு மிகவும் கஷ்டம். அவர்களின் அப்பாவைப் பார்க்க முடியவில்லை. எங்கோ எதோ வேலைக்குப் போய் வருவதாய் அக்கம் பக்க விசாரிப்பில் கிடைத்த தகவல். ஆளாளுக்கு எங்கெங்கோ கிடைத்த காசுக்கு கிடைத்த வேலையை செய்து கொண்டிருப்பதாயும், இரவு போய் பார்த்தால் வீடு திறந்திருக்குமென்றும் சாமாச்சார் விஷயமறிந்து வந்து மாதவராவிடம் சொன்னான். அவர் மனம் பின்னும் சஞ்சலத்தால் துவண்டது. அதே சமயம் பள்ளிக்கூட மணியுமடித்தது. கூச்சலும் ஓசையுமாய் பிள்ளைகள் வெளியேறினர்.
மாதவராவ் வீட்டில் சாயங்காலத்தில் இரண்டு மணி நேரத்துக்கு ஆங்கிலமும் கணிதமும் டியூஷன் சொல்லித் தருவார். அதிகமில்லை, ஒரு இருபது பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லித்தருவார். அன்று டியூஷன் முடியும் வேளை. சாமாச்சார் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த என்னை நயமாய்ப் பேசி சார் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டான். மாதவராவ் சாரின் முகம் என்னைப் பார்த்ததும் முதலில் பரவசமுற்றது.
‘‘கொஞ்சம் வேலையிருக்கு. நீங்கெல்லாம் இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமே வீட்டுக்குப் போகலாம்’’, என்றார் டியூஷன் பிள்ளைகளைப் பார்த்து. அவர்கள் மகிழ்ச்சியோடு மூட்டை கட்டினர்.
‘‘சார், ஹோம் ஒர்க் என்ன?’’, என்று மாணவி ஒருத்தி கேட்டுக் கொண்டாள்.
‘‘முந்தா நாள் தந்த கணக்குங்களையே ஹோம் ஒர்க் பண்ணி கொண்டாங்க. அதிலே பரீட்சைக்கு வர்ர முக்கியமான கணக்குங்க மூணு இருக்கு. இன்னைக்கு நடத்தின போயம் மனப்பாடம் பண்ணிட்டு வாங்க. நாளைக்கு ஒப்பிக்கணும்’’, என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டு, ‘‘நீயும்கூட போயிடு. இவங்கூட கொஞ்சம் தனியா பேசணும்’’, என்று சாமாச்சாரைப் பார்த்துச் சொன்னார். அவன் சற்று தயங்கிவிட்டு வெளியேறினான். சார் என்ன பேசப் போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள ஓர் ஆவலில்.
மாதவராவ் வீட்டில் கோயிலுக்குப் போய்விட்டிருந்தார்கள். அவர் மாத்திரம் இருந்தார். சமையலறைக்குப் போய் தாமே காபி போட்டு எடுத்து வந்து எனக்கு முன்னால் நீட்டி ‘‘சாப்புடு’’ என்றார் வாஞ்சையோடு. காபியைப் பருகத் தொடங்கிய நான் தலையைத் தூக்கிப் பார்த்து திடுக்கிட்டேன். நான் குடிப்பதையே பார்த்துக் கொண்டிருந்த வகுப்பாசிரியரின் முகத்தில் சஞ்சலம் குடிகொண்டிருந்தது.
‘‘எல்லாம் கேள்விப்பட்டேன்’’, என்று பேசத் தொடங்கியவர் ஏனோ தம் பேச்சை குறைத்துக் கொள்ளும் விதமாக, ‘‘தலையெழுத்து எப்படியோ அப்படி நடக்கட்டும்’’, என்று சொல்லிவிட்டு சற்று மெளனமானார். பிறகு, ‘‘ஒங்கப்பா எங்கே?’’ என்று கேட்டார். தெரியும் என்றாலும் ஏனோ தெரியவில்லை, தெரியாது என்றே பதிலளித்து வைத்தேன். கடந்த சில மாதங்களில் எல்லா கேள்விகளுக்குமே சட்டென்று கைவரப்படும் பதிலாக தெரியாது என்பதுதான் இருந்து வருகிறது. உண்மையிலேயே தெரியாததைவிட உண்மையிலேயே தெரிந்தும் தெரியாது எனும் பதில்கள்தான் அதிகமாயிருக்கும். அப்பா எங்கே இருப்பார் என்பது தெரியும். அவர் இருக்குமிடம் அவர் பணியாற்றிய அலுவலகம். ஒரே ஒருமுறைதான் அப்பா பணியாற்றி ஓய்வு பெற்ற தாலுகா கச்சேரிக்கு போயிருக்கிறேன். மற்ற ஊர்களிலிருந்தபோது அவரே என்னையும் மோகனாக்காவையும் தன் அலுவலகங்களுக்கு அழைத்துப் போயிருக்கிறார். இவ்வூர் தாலுகா ஆபீசுக்கு ஒரே ஒருமுறைதான் அதுவும் என்னை மட்டும் அழைத்துச் சென்ற நாள் ஆயுத பூஜை. பூஜை முடிந்து சிப்பந்திகள் அனைவருக்கும் பொறிகடலைப் பையொன்றைத் தந்து அனுப்பினர். தட்டில் கற்பூரம் கொளுத்தி ஏற்றி எடுத்து வந்து தொட்டும் தொடாமல் கண்களில் ஒத்திக் கொள்ள எனக்கும் நீட்டியவர்கள் எனக்கும் தனியாக ஒரு பொறிகடலைப் பையைத் தரவில்லை.
பாருங்கள்! அப்பாவுக்கு மட்டும் பை கிடைத்தது. எங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு அவர்கள் தந்த பொறிகடலையின் அளவு எதிர்விகிதத்தில் இருந்தது.

கருப்புக் கடப்பைக் கற்பாளங்கள் வேய்ந்த நீண்ட ஆளோடி அது. அதன் ஒரு மூலையில் சிறிய மரமேஜை நாற்காலியைப் போட்டு அதிலமர்ந்து என்னமோ எழுதிக் கொண்டிருந்தார் அப்பா. அப்பாவுக்கு எதிரே மேஜைக்கு அருகாக கிராமத்தான் ஒருவர் கை கட்டி நின்றிருந்தார். அப்பா எழுதி முடித்துவிட்டு, ‘‘இங்கே ஒங்க கையெழுத்தப்போடுங்க.. கையெழுத்து போட வருமா?’’ என்றார். அந்த மனிதர் சற்று நடுங்கும் கையால் சமாளித்து கையொப்பமிட்டானதும் அப்பா அவரிடம்,
‘‘இந்த விண்ணப்பத்த உள்ளே கொண்டுபோயி முதல் டேபுள்காரர் கிட்டே குடுத்திடுங்க’’, என்றார்.
‘‘அவருக்கு எதாச்சி குடுக்கணுங்களா?’’, என்றார் கிராமத்து மனிதர். பார்டி.
‘‘அது தெரியாது’’, என்றார் அப்பா.
‘‘ஒங்களுக்கு எழுத்துக் கூலி எவ்வளோங்க?’’ என பணிவோடு கேட்டார் அந்த ‘‘பார்டி’’
‘‘குடுங்க, ஒர்ரூபா’’, என்றார் அப்பா. பார்டி நீட்டிய ஒரு ரூபாய்த் தாளை தன் ஜேபியில் போட்டுக் கொண்ட வேகத்திலேயே என்னையும் பார்த்துவிட்டார்.
அப்பாவைப்போல பணியிலிருந்து ஓய்வுபெற்ற இன்னொருவரும் அங்கே இருந்தார். அப்போதிருந்த தாசில்தார் கருணைமிக்கவராயிருக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்கள் விரும்பினால் கச்சேரி தாழ்வாரத்தில் அமர்ந்து விண்ணப்பம் முதலியன பார்டிகளுக்கு எழுதித் தந்து எதாவது சிறு சம்பாதனை தேடிக் கொள்ளட்டும் என அனுமதித்ததோடு பழைய மேஜை நாற்காலிகளையும் போட்டுக் கொடுத்திருந்தார். ஆனால் இந்த பரோபகார ஏற்பாடும் நீடிக்கவில்லை. இந்த தாசில்தார் உத்தியோக மாற்றலில் போய்விட வேறொரு புதிய தாசில்தார் வேறெங்கிருந்தோ மாற்றலில் இந்த இருக்கைக்கு வந்தமர்ந்தார். உட்கார்ந்த வேகத்தில், முன்னவர் செய்து வைத்திருந்த ஏற்பாடுகள் பலதை கலைத்துப் போட்டு மறுசீரமைப்புக்கு உத்தரவிட்டார். அதில் அகப்பட்டது அப்பாவின் எழுத்துக் கூலியும். வந்தவர் கச்சேரியின் நீண்ட வெராண்டாவைத்தான் முதலில் கண் வைத்தார். புதிய தாசில்தாருக்கு புதிய டபேதார் ஒருவரும் ஏற்பாடாகிவிட்டிருந்தது.
‘‘யார் இந்த பெட்டிஷன் ரைட்டர்கள்? இவங்களை யார் அனுமதிச்சது?’’, என்று கேட்டார் புதிய தாசில்தார். தலைமை குமாஸ்தா எழுந்து பணிவாக இப்படியிப்படியென்று விளக்கினார். அங்கு பழைய தாசில்தாரிடம் அனுமதிபெற்று உட்கார்ந்திருந்த விண்ணப்பம் எழுதித்தரும் எழுத்துக்கூலிகளை வெளியேறும்படி செய்தார் புதியவர். புதிய டபேதார் நல்லவிதமாகவே தாசில்தாரின் உத்தரவை செயல்படுத்திக் கொண்டிருந்தார்.
‘‘நீங்கெல்லாம் பத்திரம் ஸ்டாம்பு விக்கிற ஸ்டாம்ப் வெண்டார் ஒக்காந்திருக்கிற கொட்டாயிக்குப் போயி ஒக்காந்துக்கங்க.’’ என்று சொல்லி இடத்தைக் காலி செய்ய வைத்தார் புது தாசில்தாரின் புது டபேதார். பழைய தாசில்தார் அப்பா உட்கார்ந்து எழுத இரவல் தந்திருந்த சிறுமர நாற்காலி மேசைகள் எடுத்து உள்ளே கொண்டுபோய் வைக்கப்பட்டன. அந்த மற்றொரு எழுத்துக்கூலி தன் வீட்டிலிருந்த கணக்குப் பிள்ளை டெஸ்கை எடுத்து வந்துபோட்டு தரையிலமருந்து காரியம் பார்த்தார். இங்கே வீட்டில் அப்படி எதுவுமில்லாததால் அப்பா, வைத்து எழுதுவதற்கு ஓர் அட்டையை மாத்திரம் மடிமீது வைத்துக் கொண்டு எழுதித் தந்து கூலி பெற்றுக் கொண்டார். அலுவலக ஆளோடியில் தாசில்தாரின் ஏற்பாட்டில் வரிசையாக கண்ணைக் கவரும் வண்ணங்களில் பூச்செடிகளையும் குரோட்டன்ஸ் வகை தாவரங்களையும் கொண்ட சட்டிகளை வைத்து அலுவலகத்தை சிங்காரிக்கச் செய்யப்பட்டது.
என்னை அனுப்பிவிட்டு எங்கேயோ யோசித்தார் வகுப்பாசிரியர் மாதவராவ். பிறகு எதோ முடிவுக்கு வந்தவராய் அப்பாவைத் தேடிக் கொண்டு தாலுகா அலுவலக வளாகத்துக்குச் சென்றார். விசாரித்தறிந்து அப்பா உட்கார்ந்திருக்கும் கொட்டகைக்கு வந்தார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அப்பாவை அங்கிருந்த சிறிய காபி கிளப்புக்கு அழைத்துச் சென்று காபிக்கு சொன்னார்.
‘‘ஸ்கூல விட்டு நிறுத்தித்தான் ஆகணுமா?’’, என்று கேட்டார் மாதவராவ். பதிலளிக்க கஷ்டமாயிருந்தது அப்பாவுக்கு.
‘‘வேறே வழியில்லே, எல்லாருமே அவங்கவங்களால ஆன வேலைக்குத்தான் போறாங்க. பெரியவன சின்னமுத்தூர் டேம்ல வேலைக்கு வுட்ருக்கேன். கலாசி வேலைதான்.’’
மாதவராவ் மெளனமாய் மேற்கூரையையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு சிவப்பான குளவியொன்று சிறு ஓசையுடன் கூடுகட்ட தோதான இடம் தேடிக் கொண்டிருந்தது. கடைசியாக தன் யோசனையை வெளியிட்டார் மாதவராவ்.
‘‘எனக்கு தெரிஞ்ச வக்கீல் ஒருத்தர் இருக்காரு. அவர் கிட்டே ஒங்க சின்னவனை அனுப்பறேன். எதாவது ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ணுவாரு. அவரோட வக்கீல் குமாஸ்தாகிட்டே காப்பி எடுக்கற வேலைக்கு விடலாம்னு. சாயங்காலம் அஞ்சி மணிவரை இருக்கச் சொல்லுவார். அப்பறம் எங்க வீட்டுக்கு வந்து டியூஷன் பசங்களோடே உட்கார்ந்து இவனும் கவனிக்கட்டும். இங்கிலீஷும் கணக்கும் டியூஷன் சொல்லித் தர்ரேன். இவனும் டியூஷன் படிக்கட்டும், மறந்து போகாமே இருக்குமேனு. டியூஷன் ஃபீஸ் எதுவும் தரவேணாம்.’’ என்றார். அப்பாவுக்கு அது மிகவும் சரியாகவே பட்டது. சரியென்று சொல்லிவிட்டு கூடவே இதையும் சொன்னார்.
‘‘பென்ஷன் வர்ர வரைக்கும்தான் இந்தக் கஷ்டம். பென்ஷன் சாங்ஷனாயி வந்துட்டா பசங்கள ஸ்கூல்ல சேத்திடுவேன்..’’ என்றார்.
மறுநாள் மாதவராவ் சார் டியூஷனை முடிக்கும் நேரம். இரவு எட்டுமணி பத்து நிமிடம். மாணவ-மாணவிகள் கிளம்பிப்போனபின், அவர்கள் அனைவரும் போயாயிற்று என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தேன். வகுப்பு மாணவர்கள் ஏழெட்டு பேர் டியூஷன் படிப்பவர்கள். அவர்களுடைய கண்ணில் பட கூச்சமாயிருந்தது. பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளை தலைநிமிர்ந்து பார்க்கவே கூச்சமாயிருந்தது. இல்லாமை இயலாமையை சேர்த்தது. இரண்டும் சேர்ந்து தாழ்வு மனப்பான்மையை வளர்த்தது. பள்ளிக்கூடக் கட்டிடத்தை பார்க்கும்போதெல்லாம் ஒரு மிரட்சி ஏற்பட்டது. ஊரே கசந்தது. வீட்டுக்குப் போவதிலும் ஒரு வித வெறுப்பேற்பட்டது. எங்காவது கண்காணாத இடத்துக்கு ஓடிப்போய்விட வேண்டும் என்றிருந்தது. பேசநினைப்பதை சட்டென்று பேசவரவில்லை. வகுப்பாசிரியர் மாதவராவ் ஏழை. நான்கு பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டிருப்பவர். மனைவி ஆஸ்துமாக்காரி. ஆனால் அவருக்கு மனசு பெருசு. யாருக்கும் கருணை காட்டி ஆறுதல் மட்டுமே சொல்ல முடிந்தவர். வழிமுறைகளைக் காட்டிவிடுவார். அவர் சொல்லி வைத்த இடமான வக்கீல் ஒருவரைப் போய்ப் பார்த்தேன்.
வெளியிலேயே அரைமணி நேரம் காத்து நிற்க வைத்துவிட்டு உள்ளே வரச் சொன்னார்.
‘‘சின்னப் பையனாயிருக்கையே, சரி எங்கே, இதைப் பாத்து எழுது பார்க்கலாம்’’ என்றார். ஒரு பத்து வரிகள் தமிழில் இருந்ததை எழுதிக் காட்டினேன்.
‘‘குட், கையெழுத்து குண்டு குண்டா நல்லாயிருக்கு அப்பிடி உக்காரு. என்னோட வக்கீல் குமாஸ்தா வரட்டும். சைக்கிள் வருமா?’’ என்றார் வக்கீல்.
‘‘வராது’’ என்றேன்.
‘‘அதெல்லாம் தெரியணும். கோர்ட்லேருந்து தினமும் போஸ்டாபீசுக்குப் போய் அவர் தர்ரதையெல்லாம் ரெஜிஸ்டர் பண்ணி அனுப்பிச்சுட்டு வர்ணுமேப்பா.
போஸ்டாபீசு ரொம்ப தூரமாச்சே… சைக்கிள் தெரிஞ்சா செளகரியமாயிருக்கும்’’ என்றார் வக்கீல். சிறிது நேரத்திற்கெல்லாம் வக்கீல் குமாஸ்தா சக்கரபாணி சைக்கிளில் வந்து இறங்கினார். நான் எழுதியிருந்ததை அவரும் பார்த்துவிட்டு கையெழுத்து நன்றாக இருப்பதாய் சொன்னார். காலை ஒன்பதுக்கெல்லாம் கோர்டுக்கு வந்துவிடும்படி சொல்லிவிட்டு வீடெங்கே என்று கேட்டு வைத்தார்.
எனக்கொரு உத்தியோகம், கெளரவமான வேலை, கிடைத்துவிட்டது. என் வயதுக்கு, என் படிப்புக்கு ஓர் உத்தியோகம். மறுநாளிலிருந்து பதினோறுமணி வரை வக்கீல் குமாஸ்தா சக்கரபாணி தரும் வக்கீல் விசயங்களை என் கையெழுத்தில் எழுத வேண்டும். அவர் கையெழுத்து படிக்கவே கஷ்டமாயிருக்கும். அவ்வப்போது, இதென்ன சார், அதென்ன சார் என்று கேட்டுக்கொண்டேயிருப்பேன். போகப்போக சக்கரபாணியின் எழுத்துருவின் சங்கேதம் விளங்கிக் கொண்டு வரலாயிற்று.
அவருடைய கையெழுத்து விஷயமாய் அவரிடம் சந்தேகம் கேட்பது குறைந்துவந்தது. அவரும் என் குடும்ப விவரங்களைக் கேட்டறிந்துவிட்டு கடைசியில், ‘‘பாவம், படிக்கிற வயசு. யாருமே உதவமாட்டார்களா’’ என்று இரக்கம் தொனிக்க சொல்லுவார். முதல்நாளே முகத்தை கொஞ்சம் இறுக்கமாய் வைத்துக் கொண்டு கேட்டார்,
‘‘வக்கீல் எழுத்துக்கூலி பத்தி எதாவது சொல்லி வச்சாராப்பா? சரி, உனக்கு தினமும் எழுத்துக்கூலி எட்டணா தர்ரேன். அதில மத்தியானமே நாலணா குடுத்துடறேன்.
பக்கத்தில நம்பூதிரி கடையிருக்கு. எதாச்சும் சாப்புட்டுக்கோ. இல்லே, வீட்லேருந்து எதாச்சும் சாப்புட கொண்டுவருவியா. எப்படின்னாலும் மத்தியானமே எழுத்துக் கூலியில பாதியை வாங்கிக்கோ. சாயங்காலம் வீட்டுக்குப் போறச்சே பாக்கி நாலணா தருவேன். கொண்டுபோய் வீட்ல குடு. ரெண்டு மாசமாகட்டும் ஒன் சமர்த்த பாத்துகிட்டு எட்டணாவ ஒர் ரூபாவாக்குவேன்’’, என்றார் சக்கரபாணி.
நம்பூதிரியிடம் இரண்டணாக்கு நான்கு இட்லிகள் கிடைக்கும். காலையில் அரைத்த சட்னியாக இருக்கும். ஒரு மாதிரிதான் வாடையடிக்கும் என்றாலும் பரவாயில்லை என்று மனம் ஏற்கும். சாம்பார் இருக்காது. மரத்தடியில் கொதிக்கக் கொதிக்க கொத்தமல்லி காபி கிடைக்கும், அரையணாதான் ஒரு கிளாஸ்.
போதும் எனக்கு.. பாக்கி ஒண்ணரையணாவை வைத்துக் கொள்ளுவேன். வார இறுதியில் தாராளமாக சினிமா செலவுக்கு அந்த சேமிப்பு வகை செய்தது. கொஞ்சம் கொஞ்சமாய் பள்ளிக்கூடம், சகமாணவர்கள், ஆசிரியர்கள், பாடம் படிப்பது என்பதெல்லாம் மேலெழுந்த வாரியாக மறக்க முடிந்தது. ஆனால் நிஜமல்ல அது. சிறு கவனமும் ஆழ் மனதில் அமிழ்ந்து கிடந்த அந்த நினைவையும் உணர்வையும் கிளர்ந்தெழுந்து மேலே வந்து சிலிர்க்க வைத்துவிடும்.
முதல்நாள் அம்மாவிடம் அன்றைய எழுத்துக்கூலியில் நாலணாவைக் கொடுத்துவிட்டு விவரம் சொன்னபோது அம்மா ஓசையின்றி அழுதாள்.
மறுநாள் சக்கரபாணி சற்று தாமதமாக வந்தார். ‘‘பெரியவனானதும் எம்மாதிரி நீயும் ஒரு நல்ல வக்கீல்கிட்டே வக்கீல் குமாஸ்தாவாயிடுவே. நிறைய வருமானம் வரும்’’, என்பார் சக்கரபாணி. தானே சைக்கிள் ஓட்டவும் கற்றுத் தருவதாகச் சொல்லிக் கொண்டேயிருந்தார். இந்த உறுதிமொழியை ஒவ்வொருமுறை தபாலாபீசுக்கு என்னை அனுப்பும்போதும் தவறாமல் சொல்லிவந்தார்.
அந்த வருடம் அந்த வகையாகவே கழிந்துவிட்டது. எனக்கு நண்பர்களாயிருந்த ராதாகிருஷ்ணனும் பெரியசாமியும் என்னைத் தேடிவந்து பேசுவதேயில்லை. ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை தாரா தியேட்டரில் சொர்க்கவாசல் திரைப்படம் பார்க்கப் போனபோது என்னை ராதாகிருஷ்ணன் பார்த்துவிட்டு கைகளைப் பிடித்துக் கொண்டான்.
‘‘ஸ்கூலுக்கே இனிமே வரமாட்டியா?’’ என்று கேட்டான். நான் என் கதையை அவனுக்குச் சொன்னேன். நான் ஒய்யாரிபாமா கீலுகுர்ரம் பார்த்த கணக்கில் தனக்குத் தரவேண்டியதாய் அவன் கேட்டுக் கொண்டிருந்த இரண்டு ரூபாயைத் தரவே வேண்டாமென்ரு சொன்னான். ஆண்டு விடுமுறையில் கடையைப் பார்த்துக் கொள்ளுவதாய்க் கூறினான். இரு மாதங்கள் ஓடிவிட்டன. அப்பாவின் பெயருக்கு பதிவுத் தபாலில் ஒரு கடிதம் வந்தது. வீடு பூட்டியிருந்ததால் அடுத்த வீட்டில் தெரிவித்துவிட்டு மறுநாள் வருவதாய்ப் போய்விட்டார் தபால்காரர். இரவுதான் எல்லோருமே வீடு திரும்பினர். அடுத்த வீட்டுக்கார அம்மாள் தபால்காரர் வந்து போனதைத் தெரிவிக்கவும் அப்பா எச்சரிக்கையானார்.
மறுநாள் அப்பா வெளியில் போகாமல் வீட்டிலேயே இருந்தார். தபால் வந்ததும் உறையைப் பிரித்து கடிதத்தை பரபரப்போடு படித்தவரின் அகமும் முகமும் பிரகாசமடைந்தது. அப்போது வீட்டில் அவரைத்தவிர வேறு யாருமேயில்லை. ஒவ்வொருவரும் அவரவர் வேலையிலிருந்தார்கள். மாதவராவ் வீட்டில் டியூஷன் முடிந்து இரவு வீடு திரும்பினேன். வீடு ஒரே குதூகலத்தில் துள்ளிக் கொண்டிருந்தது. ராமு சின்னமுத்தூர் அணைக்கட்டிலிருந்ததால் சனிக்கிழமை இரவுதான் வருவான். வந்த பிறகே அவனுக்குத் தெரியவரும் அப்பாவே மாலைபோய் வசந்தாக்காவை அழைத்து வந்துவிட்டார்.
‘‘பென்ஷன் வந்திடுச்சிடா!’’ என்றாள் அம்மா, அப்பா கண்கள் பளபளக்க என்னைப் பார்த்தார்.
‘‘வர்ர வருஷம் எல்லாரும் ஸ்கூலுக்குப் போகலாம்’’, என்றார். மோகனா ‘‘இந்த வருஷம் வீணாப் போயிட்டது’’, என்றாள். அதைவிட வருத்தம் இதே வகுப்பில் அடுத்த வருடமும் சேர வேண்டுமே என்பதுதான்.
‘‘இந்த ஊரே வேணாம். போதும் இந்த வூர். சேலத்துக்கு போயிடலாம்’’, என்றார் அப்பா. எல்லாரும் அதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தனர். மறுநாள் முதல் எழுத்துக் கூலி வேலைக்குப் போவதை நிறுத்திக் கொள்ளச் சொல்லிவிட்டார் அப்பா. வக்கீல், சக்கரபாணி, மாதவராவ் சார் எல்லோரிடமும் போய் சொல்லிக் கொள்ளவேண்டும். ராதா, பெரியசாமி இருவரையும் வீட்டில் போய் பார்க்க வேண்டும். கடைசியாக வாங்கிய எழுத்துக்கூலியில் மிஞ்சிய நாலணாவை வழக்கம்போல அம்மாவிடம் நீட்டியபோது, வேணாம்டா ராஜா, நீயே வச்சுக்கோ என்றாள் அம்மா, காலையில் தாலுகா அலுவலகத்துக்குப் போக வேண்டுமென்று அப்பா சொல்லிக் கொண்டிருந்தார்.
எழுதியவர்:-

✍🏻 விட்டல்ராவ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
