சிறுமலரின் நறுமணம்
வகுப்பறைக் கதைகள் – 29
– விட்டல்ராவ்
ராஜூ நாயக்கர் ஒரு பட்டதாரி குமாஸ்தா என்றாலும் வருவாய்த் துறையின் கோப்புகளில் சரியானபடி ஆங்கிலத்தில் ‘‘டிராஃப்டு’’கள் தயாரித்து கலெக்டரின் பார்வைக்கு வைக்குமளவுக்கு திறமையும் அனுபவமும் பெற்றிருக்கவில்லை. அதனால் பழந்தின்று கொட்டை போட்ட பழம்பெருச்சாளிகளின் கேலிக்கும் கிண்டலுக்கும் அடிக்கடி ஆளானவர். அப்பா பணியிலிருந்து ஓய்வு பெற ஓரிரு மாதங்கள் இருக்கையில்தான் ராஜூ பணியில் சேர்ந்தவர். ராஜூவுக்கு அப்பா ரெவின்யூ டிராஃப்ட் தயாரிப்பதில் டியூஷன் வகுப்பு எடுத்தவர். பிறகும்கூட ராஜு அவ்வப்போது அப்பாவை சந்தித்து தன் டிராஃப்ட் அறிவை பட்டைத் தீட்டிக் கொண்டிருந்தவர். பென்ஷன் சற்று விரைவில் கிடைக்குமாறு சென்னை ஏஜி அலுவலகம் வரை சென்று ஆளைப் பிடித்து காரியம் கை கூடச் செய்தவர் ராஜூநாயக்கர். சேலம் சின்னக்கடைத் தெருவிலிருந்து பாவடிக்குச் செல்லும் வழியில் ராஜூவுக்கு சொந்த வீடு இருந்தது. அவரது உதவியில்தான் சேலத்தில் வீடு பிடித்து குடியேற முடிந்தது.
அந்த ரோமன் கத்தோலிக்க மிஷன் உயர்நிலைப் பள்ளி மாவட்டத்திலேயே புகழ்பெற்றது. ஆனால் ராமுவுக்கு இடம் தர மறுத்துவிட்டார் பள்ளித் தலைமையாசிரியர் ரெவரண்ட் ஃபாதர் புஷ்பநாதர். அந்தப் பள்ளியில் இடம் கிடைத்து கல்வி கற்பதென்பதை ஒரு பெரும் பாக்கியமாய் கருதுபவர்கள் சேலத்தில் அதிகம். அதன் பழைய மாணவன் என்று கூறிக் கொள்ளுவதில் ஒருவன் அடையும் பெருமையும் உயர்வு மனப்பான்மையும் அதேயளவுக்கு பிறரும் அவனை அழைத்து கெளரவிப்பதிலுமிருந்து வந்தவை. அந்த வகுப்பிலிருந்த பிள்ளைகள் பெரும்பாலும் செல்வச் செழிப்பும் கற்றறிந்தோர் உள்ள பின்புலத்திலிருக்கும் குடும்பச் சூழ்நிலையிலிருப்பவர்கள் என்பதை யூகிக்க முடிந்தது. நான் அவர்களுக்கு ஒரு பொருட்டாக படவில்லை. என் கவனம் பள்ளியைச் சுற்றி பதிந்தது. அது பெங்களூர் சாலை. நீலநிற தண்ணீர் பரந்து விரிந்த அரைவட்ட வடிவ ஏரியை அடுத்திருந்த மிஷன் பள்ளி சிறுமலர் உயர்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானம் மிகப் பெரியது. அதன் ஓரமாய் வளர்ந்து கிளை பரப்பி இலைகள் அடர்ந்த தூங்குமூஞ்சி மரம் மைதானத்தின் மூன்றில் ஒரு பங்கைத் தன் பரந்த நிழலால் குளிரூட்டிக் கொண்டிருந்தது.
‘‘நீ சான்ஸ்கிரிட்டா?’’, என்று ஒரு பையன் என்னைக் கேட்டான். புரியவில்லை. அவன் பெயரைக்கூட இன்னும் தெரிந்தவனில்லை. வலக் கையில் மெல்லிய இரும்புக் காப்பு ஒன்றை அணிந்திருந்தான். ஒரு ஸ்டைல் போலும் என்றுதான் நினைக்க வைத்தது. இஸ்திரி போடாத நிஜார்- சட்டையை உள்ளுக்கு விட்டு நிக்கர் அணிந்திருந்தான். அதே கேள்வியை மறுபடியும் கேட்டான். ‘‘அப்படின்னா என்ன?’’, என்று கேட்டேன். இதற்குள் அவனை இன்னொருவன், ‘‘டேய் ஓல்டு, வா நேரமாச்சி, ராமோதந்தம் கொணாந்தயா?’’ என்று கேட்டபடியே கையை இழுத்தான்.
‘‘எல்லாம் சும்மாருங்கப்பா, ஜோசப் சாமி வர்ராரு’’ என்றார்கள். பேச்சு அடங்கியது. ஃபாதர் ஜோசப் நுழைந்தார்’’ குள்ளம்- குண்டு- கருப்பு-நீண்ட கருப்பு தாடி. வெள்ளை சாமியார் அங்குக்குள் அடங்கிய அவர் உடல் நடக்கும்போது சாவி கொடுத்த ஆமை பொம்மை ஊர்ந்து வருவதுபோல இருந்தது. திடீரென்று மூலையிலிருந்து ஓர் இசை…
‘‘கிருஷ்ணா நீ பேகனே பாரோ..’’
சட்டென்று மேற்கொண்டு தொடராது நின்றுவிட்ட பாட்டையடுத்து, ‘‘யாரு? யாருடா அது பாடினது?’’, என்று கேட்டார் ஜோசப் சாமியார்.
‘‘ஃபாதர், சித்ராதான் பாடினது’’, என்றான் ஒருவன்.
‘‘சித்ரா வா இங்கே..’’ என்றார் ஃபாதர் ஜோசப்
‘‘சங்கீதம் கத்துக்கிறியா என்ன?’’ என்று கேட்டார். சித்ரா என்று அழைக்கப்பட்ட மாணவன் கடைசி பெஞ்சிலிருந்து எழுந்து வந்தான். பளிச் சென்ற கரிய மேனியில் வாசனை எண்ணெயைத் தடவி தலையைப் படிய வாரிவிட்டிருந்தான் சித்ரா எனும் சித்தரஞ்சன்தாஸ். ஒரு வித இங்கிலீஷ் வண்ண அரைக்கைச் சட்டையை நிக்கருக்குள் செருகி சிக்கென்று தோன்றினான். கஞ்சி போட்டு இஸ்திரி செய்யப்பட்ட உடையில் கம்பீரமாயிருந்தான்.
‘‘இந்தப் பாட்டை ஒன்னோட சர்ச்சில பாடுவியா?’’ என்று நக்கலாய்க் கேட்டார்.
‘‘எங்க சாமியாருக்கு எல்லா நல்ல பாட்டும் புடிக்கும் ஃபாதர்’’என்றான் சித்தரஞ்சன்.
‘‘வாத்தியம் எதெல்லாம் பழகறே?’’
‘‘புல் புல் தாரா, மெளத்தார்கன் மானுவல் கிடார்’’,
‘‘வெரி குட் வெரி குட்..’’
‘‘இவரு நமக்கு இல்லே. சும்மா வந்திருக்காரு’’என்றான் ஓல்டு என்று அழைக்கப்பட்டவன்.
ஜோசப் சாமியார் மிருதுவாக மேஜையைத் தட்டிவிட்டு ‘‘இப்போ எத்தனைப் பசங்க புதுசா சேர்ந்திருக்கீங்க. நில்லுங்க’’ என்று அவர் சொன்னதும் என்னையும் சேர்த்து பத்து பிள்ளைகள் எழுந்து நின்றோம். ஃபாதர் ஜோசப் ஒவ்வொருவரையும் எந்த ஊரிலிருந்து எந்தப் பள்ளியிலிருந்து வந்திருக்கிறோம் என்பதை சொல்லும்படி கேட்டார். நாங்கள் பதிலளிக்கையில் எங்களையே விதம் விதமாகக் கவனித்தார்கள் மற்ற பையன்கள். சித்ரா நாங்கள் பேசுவதைக் கிளிப்பிள்ளைபோல பின்னாலேயே பேசி நக்கலடித்தபடியிருப்பதைக் கவனித்துவிட்டு படபடவென அவனைத் திட்டினார். வேகமாய் திட்டிய ஜோசப் சாமியாரின் வசவுச் சொற்களில் இரு கெட்ட வார்த்தைகளும் கலந்திருந்தன.
‘‘அவரு அப்படித்தான் திட்டினாலும் சரி, புகழ்ந்து பாராட்டும்போதும் சரி தன்னையறியாம ஒரு ரெண்டு கெட்ட வார்த்தையும் கலந்து வரும்… ஆனா, ரொம்ப நல்ல சாமியார்’’, என்றான் ஓல்டு.
‘‘புதுசா வந்தவங்கள்ளே யாரெல்லாம் சான்ஸ்கிரிட் எடுத்திருக்கீங்க?’’ என்று ஃபாதர் ஜோசப் கேட்டபோது எனக்கான கேள்விக்கும் விடை கிடைக்கும்போலிருந்தது. பக்கத்திலிருந்தவனை மெதுவாகக் கேட்டேன், ‘‘என்ன கேக்கறாரு?’’ என்று, அவன் பதில் சொல்ல தவிர்த்தான்.
‘‘நம்ம சேஷூ பாட்டி எங்கே காணோம்’’ என்று கேட்டுவிட்டு, ‘‘ஓல்டு, இங்க வா’’, என்றார் ஜோசப் சாமியார்.
‘‘சேஷாதிரி லீவு சார்’’, என்று யாரோ பதிலளித்தார்கள்.
‘‘இவரெல்லாம் நமக்கில்ல, சும்மா வந்திட்டுப் போவாரு. செகண்ட் பாரம் வரைதான் இவர் கிளாஸ் எடுப்பாரு’’, என்றான் அருகிலமர்ந்திருந்தவன். யார் பெயரும் அறிமுகமாகாத நிலையில் தெரியவில்லை. சாய்வு மேஜைமீது யாருடைய ஆங்கிலப் புத்தகமோ தெரியவில்லை. கச்சிதமாக பழுப்பு நிற அட்டைப் போர்த்திக் கிடந்தது. எடுத்துப் பிரித்துப் பார்க்க ‘‘ஜெயராமன்’’ என்று எழுதியிருந்தது. அந்தப் பெயருக்குப் பக்கத்தில் வேறெவரோ வேறு நிற மையால் ‘‘ஓல்டு’’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்கள். ஓல்டு என அழைக்கப்படும் மாணவன் பெயர் ஜெயராமன் என்பது தெரிந்துவிட்டது. ஜெயராமன் தன் புத்தகப் பையிலிருந்து ஒரு புத்தகத்தையும் நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். அவனைப் போல இன்னொரு பதினைந்து பேரும் புறப்பட்டனர்.
‘‘ஜெயராமன்’’ என்று கூவினேன். திரும்பிப் பார்த்தான்.
‘‘இங்கிலீஷ் புக்’’, என்று சொல்லி, காட்டினேன்.
‘‘அங்கியே இருக்கட்டும், வந்திடுவேன்’’, என்றான் அவன். அவர்களெல்லாம் எங்கே கிளம்பிவிட்டார்கள் என்று பக்கத்திலிருப்பவனைக் கேட்டேன்.
‘‘சாணிச் சட்டி கிளாசுக்குப் போறாங்க’’ என்றான்.
‘‘அதென்னது?’’
‘‘சமஸ்கிருதம்’’, என்று கூறிவிட்டு சிரித்தான். பிறகு ‘‘சாரி’’ என்று சொல்லிவிட்டு, ‘‘நீ தமிழ்தானே?’’, என்றான்.
‘‘தமிழ்தான்’’ என்றேன்.
‘‘பேரென்ன?’’, என்று அவன் கேட்டதற்கு என் பெயரை நான் சொல்லவும், அவன் தன் பெயர் கோபால் என்று சொல்லிக் கொண்டான். சமஸ்கிருதம் எடுத்தவர்களுக்கு
வேறொரு இடத்தில் அதற்கென்றே இருக்கும் சமஸ்கிருத வகுப்பறையில் பாடம் நடத்தப்படுகிறது என்றான் கோபால். ஒவ்வொரு படிவத்திலும் ‘‘பி’’-பிரிவு வகுப்புதான் சமஸ்கிருதம் படிக்கும் மாணவர்கள் இருப்பது என்றும் கூறினான். ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் சமஸ்கிருதம் எப்படி போதிக்கப்படுகிறது என்ற கேள்வி எனக்கிருந்தது. அதற்கு கோபால் பதிலளிக்கவில்லை. கேள்வி ஆச்சரகியத்தையும் உள்ளடக்கியிருந்தது. வகுப்பு முடிந்து வந்தவர்கள் ஒருவருக்கொருவர்,
‘‘ராமோதந்தம்… ராமோதந்தம்,’’என்று சொல்லிச் சொல்லி தமக்குள் விவாதிக் கொள்ளுவதைப் பார்த்துவிட்டு மெதுவாக கோபாலிடம் கேட்டேன்.
‘‘என்ன பேசிக்கறாங்க?’’
‘‘அந்த புஸ்தகத்தில இருக்குனு பேசிக்கிறாங்க. ராமோதந்தம் அவங்களுக்கு அரிச்சுவடி சமஸ்கிருத பாடப் புத்தகம்.’’
‘‘அதெல்லாம் ஒனக்கெப்புடி தெரியும்?’’
‘‘நானும் அந்த கிளாஸ்லதான் சேந்து ஒரு வாரம் பாத்தேம்பா. ஒத்துவர்ல. வேணானிட்டு தமிழ் படிக்கிறதா எழுதிக் குடுத்துட்டேன். ராமோதந்தம்கூட வாங்கிட்டேன்.
பிரேம் விலைக்கு வாங்கிட்டான்.’’
‘‘யார் பிரேம்?’’
‘‘தோ, குள்ளமா ஸ்டைலா, பாலங்கிட்டே கத்தறான் பாரு அவந்தான். வீட்ல மலையாளம் பேசுவான். ரொம்ப அல்டி… பாலனும் சான்ஸ்கிரிட்தான்.’’
‘‘மத்தவங்க சரி, இவனுங்க ரெண்டுபேரும் எதுக்கு சான்ஸ்கிரிட் எடுத்துக்கிட்டாங்க?’’
‘‘அதுவா, கால் பரீட்சை முடிஞ்சி மார்க் வரும் பாரு அப்போ, தெரிஞ்சிக்குவ..’’
‘‘சொல்லுப்பான்னா?’’
‘‘சான்ஸ்கிரிட்ல சொளை சொளையா மார்க் வரும்.’’
‘‘அதெப்படிப்பா?’’
‘‘அப்பிடியே டப்பா உரு அடிச்சி எழுதறதுதான். சொந்தமா எழுதறதுக்கு எதுவுமில்லே. ராமோதந்தத்தில நடத்தறதை அப்பிடியே டப்பா மனப்பாடம் பண்ணி எழுதுவாங்க. ராமானுஜம் எம்பது தொண்ணூறுனு வாங்குவான். அவங்க எல்லாருமே அம்பதுக்கு மேலே சுலபமா வாங்கிடுவாங்க. மனப்பாடம் பண்றதுதானே.’’
பிற்பகல், உணவு இடைவேளை, காலை மாலைகளிலும் மூன்று வேளையிலும் கிறிஸ்தவப் பிரார்த்தனையை கத்தோலிக்க மாணவர்களைக் கொண்டு கோரஸ் பாட்டுபோல நடத்துவார்கள். பழகிவிட்டால் காதுக்கு இசைபோல சுகமாகத்தானிருக்கும். மற்ற எல்லோரும் அமைதியாக கேட்டபடி தத்தம் வகுப்புகளில் நிற்க வேண்டும்.இவ்வளவு ஆச்சாரமான கிறிஸ்தவப் பள்ளியில் சமஸ்கிருதப் பாடம் எப்படி வைக்கப்பட்டிருக்கிறது என்ற கேள்வி மனதில் வந்தபடியே இருந்தது.
என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை. ஒவ்வொருவரும் புத்திசிகாமணிகளாக பீற்றிக் கொண்டார்கள். புதியதாய் வந்து சேர்ந்தவர்களை கிள்ளுக்கீரையாகப் பார்த்தனர். கிராமங்களிலிருந்தும் அரசாங்க ஜில்லா போர்டு பள்ளிகளிலிருந்தெல்லாம் வந்து சேர்ந்த புதிய மாணவர்களை ஓர் இளக்கார உணர்வோடு பார்த்தனர்.
மூன்று நாட்கள் ஓடியாயிற்று.
ராமுவும் மோகனாவும் சேலம் பாவடிப் பகுதியிலிருந்து முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்துவிட்டனர். சிறுமலர் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் படிப்புக்கு கட்டணமுண்டு. மூன்றாம் படிவம் எனும் எட்டாம் வகுப்புக்கு மாதச் சம்பளம் மூன்றரை ரூபாய். ஒவ்வொரு வகுப்பிலும் எ.பிரிவு கத்தோலிக்கர்களுக்கு மட்டுமேயான ஒதுக்கப்பட்ட பிரிவு. கத்தோலிக்கர் அல்லாத மற்ற பிரிவு கிறிஸ்தவர்களை பி. மற்றும் சி. பிரிவுகளில்தான் சேர்ப்பார்கள் என்பதையும் கோபால் சொன்னான். அந்த விதமாய் எங்கள் வகுப்பில் ப்ரொடஸ்டண்ட் கிறிஸ்தவ பிரிவினனான சாமுவேல் ஹாரீஸ் சித்தரஞ்சன் தாஸ் வந்திருந்தான். காலை, மதியம், மாலை நேரங்களில் கத்தோலிக்க கிறிஸ்தவ பிரார்த்தனையை கத்தோலிக்க மாணவர்களில் உயர் வகுப்புகளில் படிக்கும் ஏ- பிரிவினரால் நடத்தும்போது மற்ற அனைவரும் அமைதியாக நிற்க வேண்டும்.

அரிதாக எப்போதாவது தலைமையாசிரியர் ரெவரண்ட் ஃபாதர் புஷ்பநாதர் வகுப்பறைகளைப் பார்வையிட ஓசைப்படாமல் வந்து போவார். சிரிக்காத முகம் போலவும், புன்சிரிப்பும் சிடுசிடுப்பும் ஒன்று சேர்ந்த முகம் போலவும் தோன்றும் அவரது முகம். அவருக்கு அடுத்து தலைமைப் பொறுப்புக்கு தயாராகி வந்து கொண்டிருந்த ஃபாதர் ரொஸாரியோ அப்போதே பெரியவரை முந்திக் கொண்டு பேசுவதிலும் காரியத்திலும் தம் எதிர்கால அதிகாரத்தைக் குறிப்பால் உணர்த்துவார். ஃபாதர் புஷ்பநாதர் பி-பிரிவு வகுப்பறைக்கு வருகைதரும்போதெல்லாம் தவறாது அவரது பார்வை கடைசி பெஞ்சிலமர்ந்து குறும்புச் சிரிப்போடு சாமியாரை மெளனமாகவே நக்கல் புரியும் சித்ராவைத்தான் நோட்டம் போடும்.
‘‘என்னடா சித்தரஞ்சன் வாலு’’, என்று ஒரு விசாரிப்பு அவனை மட்டுமே கொண்டதாயிருக்கும். அதில் சீர்திருத்த கிறிஸ்தவ பிரிவின்பால் தமக்குள்ள ஒவ்வாமையும் தனிப்பட்ட முறையில் ஹாரிஸ் சித்தரஞ்சன் பேரிலுள்ள பாசமும் பிரியமும் கலந்து வெளிப்படும். ஒரு விளையாட்டு வீரரான ஃபாதர் புஷ்பநாதருக்கு பிள்ளைகளின் வால்தனம் மிகவும் பிடிக்கும். ‘‘ஜஸ்ட் டேக் இட் ஸ்போர்டிவ்லி’’ என்பார் பார்க்க வேண்டுமே.
வகுப்பறையில் முதல் பெஞ்சில் பேச்சு அதிகரித்தது. ஃபாதர் ஜோசப் போய்விட்டபின் பேச்சு அதிகரித்தது. பிரேம்குமாரும் பாலனும் விவாதத்திலீடுபட்டிருந்தனர். பிரேம் தற்பெருமையும் தலைக் கனமும் மிக்கவன் என்பது மூன்றாவது நாளன்றே தெரிந்தது.
‘‘நீ என்ன சொன்னே?’’ என்று ஆரம்பித்தான் பிரேம்.
‘‘சையன்சுக்கு திவ்யநாதன் சார் வருவாருனு சொன்னேன்’’ என்றான் பாலன். பாலன் விளையாட்டு வீரன் என்று கோபால் சொல்லி வைத்தான். பள்ளிக்கூடம் விட்டதும் தினமும் மாலையில் மைதானத்தில் ஒரு மணிநேரம் கால்பந்து பயிற்சியிலீடுபடுவான். டைனமோ விளக்கு பொருத்திய பளபளக்கும் பச்சைநிற ஹம்பர் சைக்கிளில் வருவான். செல்வச் செழிப்பான் எண்ணெய் வியாபாரக் குடும்பம்.
‘‘நீ சொன்னது தப்பு. திவ்வி சார் வர்லே. நமக்கு சயன்சுக்கு யார் வர்ராங்க தெரியுமா?’’, என்றான் பிரேம்.
‘‘திவ்யநாதன்தானு சொன்னாங்க.’’
‘‘யாரு சொன்னாங்க? கிடையாது, அவரில்லே’’
‘‘பந்தயம்?’’
‘‘என்ன பந்தயம்?’’
‘‘ஒர் ரூபா’’
பிரேம் சட்டென பின் வாங்கினான். அவன் வீட்டில் பாக்கெட் மணியெல்லாம் தரமாட்டார்கள்.
‘‘திவ்வி சாரில்லே. அனாவசியமா பந்தயம் வெந்தயம்னு பேசாதே..’’
‘‘அப்ப யாரு வர்ராங்க?’’
‘‘அப்புடி வா வழிக்கி.. மரிய சூசை… மரியசூசை சார் தான் நமக்கு சயன்சுக்கு வரப்போறது..’’ என்றான் பிரேம்.
சட்டென்று என் மூளையில் பொறி தட்டியது. அந்தப் பெயர் மரியசூசை! அவர்தானா? அவராய்த்தான் இருப்பாரா. எண்ண அலைகள் புரண்டெழுந்து கரையிலிருந்து பின்னோக்கி ஆழ் மனக் கடலுக்குள் சென்றது. மேட்டூர் அணைப் பள்ளிக்கூடமும் பயிற்சி ஆசிரியர்களும் நினைவுக்கு வருகையில் மரிய சூசையும் தெரிகிறார். அவரது இறுதி வகுப்பில் பாட்டு பாடக் கேட்டதற்கிணங்கி அவர் பாடியது, பள்ளியாண்டுவிழாவில் தலைமையாசிரியரின் நிபந்தனைப்படி பாடலின் வரியில் வரும் காதல் என்ற சொல்லுக்குப் பதிலாக அன்பு என்ற சொல்லைப் போட்டு பாடலின் சுவையை இழந்து பாடியதையெல்லாம் நினைவுக்கு கொண்டு வந்தேன். ஆனால் அவரேதானா? விஞ்ஞான பாட வகுப்பு மூன்றாவது பீரியடு.
எல்லோரும் எழுந்து வணக்கம் தெரிவித்த வேகத்திலேயே அவரும் ஒரு சுற்று பார்வையை ஒட்டிவிட்டு, அவராகவே புதியதாக சேர்ந்திருக்கும் மாணவர்களை விசாரித்தார். என்னை நெருங்கினார். அவரேதான். என்னைப் பற்றி சொல்லிவிட்டு கேட்டேன்.
‘‘சார், இப்பவும் பாடறது உண்டா?’’
மரிய சூசை வியப்போடு உற்றுப் பார்த்தார்.
‘‘என்ன கேட்டே, இப்பவும் பாடறேன்னா? அப்போ எப்பவோ நா பாடினத நீ கேட்டிருக்கே. எங்கே?’’
‘‘மேட்டூர் டேம்ல. அப்ப நீங்க ஸ்டூடண்ட் டீச்சர்’’
‘‘எஸ்.. எஸ்.. நீ அங்கே படிச்சியா?’’
‘‘ஆமாங்க சார்…’’
மாணவர்கள் இப்போது திரும்பித் திரும்பி என்னையே பார்ப்பதை பெருமையோடு எடுத்துக் கொண்டேன். எதோ ஒரு விதத்தில் தான் கவனம் பெறுகிறேன். உணவு இடைவேளையில் கொஞ்சம் பேர் வீட்டுக்குப் போனால், பெரும் பகுதி மாணவர்கள் மைதானத்து தூங்குமூஞ்சி மரத்தடியில்தான் தங்கள் உணவுப் பாத்திரங்களோடு உட்காருவார்கள். அங்கு அன்று சில மாணவர்கள் என்னருகில் உட்கார்ந்து என் முந்தய பள்ளியனுபவங்களை சொல்லக் கேட்டார்கள். எனக்கு ஒரு நட்பு வட்டம் சேரவாரம்பித்தது. ஆயினும் இருவர் மட்டும் என்னை நெருங்காது விலகியிருந்தே கவனிப்பார்கள். அது படிப்பில் முதல் மாணவன் எனப்பட்ட
ராமானுஜனும் எடுப்பாய் உடுத்து ெசயற்கையாய் முடியை வளைவுகளாக்கி அலட்டிக் கொள்ளும் பிரேமும்.
மறுநாள் வகுப்பாசிரியர் என்று கோபால் குசுகுசுத்த கோவிந்தராஜன் என்பவர் லட்சணமாய் உயரமாய் வகுப்பில் நுழைந்து தான் முதலில் கை கூப்பி, பிறகு பிள்ளைகளின் வணக்கத்தை ஏற்றார். அன்று மாலை விளையாட்டு வகுப்பென எல்லோரும் வரிசையில் போய் அங்கு வரிசையாய் போடப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சுகளில் அமர்ந்தோம். பாலன் கத்தினான், ‘‘ஒக்காராதீங்கப்பா, சுறுசுறுப்பா எழுந்து நில்லுங்க. டிரில் மாஸ்டர் பாத்தாக்கா ஏசுவாரு’’, பாலன் விளையாட்டு வீரன். உடற்பயிற்சியாசிரியருக்கு செல்லப்பிள்ளை. உயரமாய் தாடி மழிக்காத முகமாய் – அதனாலேயே ஒருவித ஐயோபாவ தோற்றமாய் குறும்புக்கார சிரிப்புடன் காக்கி சட்டையும் கால் கட்டையும் விசிலுமாய் கான்வாஸ் ஷூவில் அந்த மனிதர் வருவதைப் பார்த்ததும் எல்லோரும் விரைப்பாய் நின்றனர்.
‘‘எடோ காட்டுக் கழுதை, அன்னைக்கு ஏது படிப்பிச்சிக் குடுத்தது? சாயபு, நீ வாடா இவ்விடே’’ என்றார், உடற்பயிற்சி மாஸ்டர் நூருதீன் என்பவனைப் பார்த்து. நூருதீன் மளிகைக் கடைக்காரரின் மகன், சாதுவானவன்.
‘‘மாஸ்டர் பேரென்ன?’’ என்று ஜெயராமனைக் கேட்டதற்கு, ‘‘ஜோசப் சார்’’, என்று ரகசியம் பேசியவன். ‘‘ரொம்ப நல்லவருப்பா. தமாஷானவரு’’, என்றான்.
உடற்பயிற்சியாசிரியர் முதலில் எல்லோரையும் ராணுவ அணிவகுப்புபோல உயரத்துக்கேற்றபடி நிற்க வைத்து கை, கால்களை சேர்ந்து நில்- விலகி நில் என்று கட்டளையிட்டு சில உடலசைவுகளைக் கற்றுத் தந்தபின் விளையாட்டுப் பயிற்சிக்கு மாறுவார். அவர் செய்து காட்டுவதை மாணவர்களும் செய்கையில் திடீரென ஒரு கூக்குரல்… எல்லோரும் பதறிப்போய், ‘‘சார், ஜெயராமன்.. ஜெயராமன்’’, என்று கத்தினர். பாலன், ‘‘ஓல்டு.. ஓல்டு, என்னப்பா ஆச்சி?’’ என்று கேட்டு முடிப்பதற்குள் ஜெயராமன் கீழே விழுந்து கை, கால்களைப் போட்டு விலுக் விலுக்கென்று இழுத்துக் கொண்டான். கண்கள் மேலே செருகிக் கொண்டன. அவன் வாயிலிருந்து நுரை குதப்பிக் கொண்டு எட்டிப்பார்த்தது. காற்று வரட்டும், நெருக்கமாய் சூழ்ந்து நிற்க வேண்டாமென்றார் ஜோசப் சார். யாரும் சொல்லாமலே நான் ஓடிப் போய் தலைமையாசிரியரைப் பார்த்து நடந்ததைக் கூறி அவரை அழைத்து வந்தேன். எல்லோரும் பீதியில் ஜெயராமனைக் கவனித்தனர். அவன் மயக்கத்தில் கிடந்தான்.
நான் ஓடிப்போய் தண்ணீர் கொண்டு வந்தேன். தலைமையாசிரியர் என் பெயரைக் கேட்டுக்கொண்டு, ‘‘திஸ் இஸ் பெடிட் மால்’’, என்றார் ஜெயராமனின் வலிப்பை.
‘‘நோ பாதர், இட் இஸ் கிராண்ட் மால்’’, என்றார் உடற்பயிற்சியாசிரியர், ஜெயராமனின் காக்காய் வலிப்பைக் கண்டு, வாயில் வழியாமல் நிற்கும் நுரையைக் காட்டி.
ஏதாவது இரும்பை-சாவிபோல- அவன் கையில் திணிக்கும்படி ஒருவர் சொன்னபோது, ‘‘அதுக்குத்தான் அவங்கையில இரும்புக் காப்பு போட்டுருக்காங்க.
அதெல்லாம் பிரயோஜனமில்ல’’ என்று இன்னொரு ஆசிரியர் சொன்னார்.
‘‘அடிக்கடி வருமா?’’
‘‘இல்ல, எப்பனாச்சிதான்.’’
ஓல்டு மீது தனி அக்கறையும் பரிவும் ஏற்பட்டது. டிரில் மாஸ்டர் அவனை சற்றுத் தொலைவிலுள்ள பெரிய ஆசுபத்தரிக்கு கொண்டுபோய் காட்ட வேண்டுமென்று கூறி, பள்ளிக்கூட பியூன் மகிமைநாதனை விட்டு குதிரை வண்டி பிடிக்கச் சொன்னார். சாமியார் செலவுக்கு எதோ கொடுத்தார். தன்னோடு மாணவன் யாராவது ஒருவன் வரலாமென்று பி.டி.மாஸ்டர் ஜோசப் சார் அழைத்தபோது யாரும் முன்வர தயங்கினபோது நான் முன்னால் வந்தேன். ஜெயராமன் விழிப்பு அடைந்துவிட்டான் என்றாலும் எழுந்து உட்கார சக்தியற்றவனாய் படுத்தே கிடந்தான். மகிமையும் ஜோசப் மாஸ்டருமாய் அவனைத் தூக்கி குதிரை வண்டியில் படுக்க வைக்கும்போது பயத்தில் ஓல்டு அழுதான். சாமியார் தொட்டு அன்போடு நீவிக் கொடுத்து ஒண்ணுமில்லே.. ஒண்ணுமில்லே, பயப்படாதே.. என்று கூறிவிட்டு, அவனோடு ஏறி உட்கார்ந்த என் பெயரை மீண்டும் கேட்டுக் கொண்டார். ‘‘கொஞ்ச நேரத்திலேயே மறந்திடுவாரு நம்ம ஃபாதர். மறுபடியும் ஒம்பேரைக் கேப்பாரு.
வேணா பாரேன்,’’ என்று காதில் பேசினான் கோபால். அவனுடைய புத்தகப் பையை வகுப்பிலிருந்து கொண்டுவரச் சொல்லி, ஆசுபத்திரியிலிருந்து அதே குதிரை வண்டியில் அவனை அவனது வீட்டிற்கு கொண்டுபோய் விட்டுவிட்டு வண்டியிலேயே பள்ளிக்குத் திரும்பி வரும்படி ஜோசப் சாரையும் என்னையும் சொன்னார் சாமியார். இப்போது என் பெயரை மறந்துவிடாமல் இருமுறை குறிப்பிட்டுவிட்டார். இந்தமுறை எல்லாரது கவனமும் ஜெயராமன் பால் சென்ற அதேயளவுக்கு என் மீதும் கவிந்தது. திரும்பி வந்தவனை ஆசிரியர்களும் மாணவர்களும் சூழ்ந்து கொண்டு ஜெயராமனைப் பற்றி விசாரித்தனர். ஜோசப் சாமியார் தன் அறைக்கு என்னை அழைத்து, ‘‘நம்ம ஓல்டு எப்பிடியிருக்கான்?’’, என்று கேட்டுவிட்டு அவனுக்கு ஜபித்தார். ஜெயராமனை அவர் கதை சொல்லச் சொல்லுவாரென்றும், அவன் மிகப் பழைய பாட்டிக் கதைகளையே சொல்லுவான் என்றும் அதனால் அவனுக்கு ஓல்டு என்ற பெயரைத் தான்தான் சூட்டிய தென்றும் கூறினார் ஃபாதர் ஜோசப். மீண்டும் ஒரு ஞாயிறன்று ஜெயராமனின் வீட்டுக்குப் போயிருந்தபோது அவன் எப்போதும்போல நன்றாக காணப்பட்டான். தன் சமஸ்கிருதப் பாடப் புத்தகம் ராமோதந்தத்திலிருந்து எதையோ மனப்பாடம் செய்துகொண்டிருந்தான். கேட்டதற்கு ‘‘கிளாஸ் டெஸ்ட்’’, என்றான்.
‘‘நீ சான்ஸ்கிரிட் எடுக்கல்லியா?’’, என்று அவனப்பா என்னைக் கேட்டார். இல்லையென்றதும் ஏன் என்றார். பிடிக்காது என்று சொன்னதும் ஒரு மாதிரி பார்த்தார்.
‘‘தமிழ்தான் பிடிக்கும்’’, என்றேன்.
‘‘அவங்கவங்க இஷ்டம். சமஸ்கிருதத்தில மார்க் நிறைய வாங்கலாம். காலேஜ் போறச்சே டோட்டல் மார்க் ரொம்ப இருக்கணும்..’’, என்றார் ஜெயராமனின் அப்பா.
‘‘அதுக்காகத்தான் அதைப் படிக்கிறதா?’’, என்று கேட்டேன்.
‘‘அப்படின்னு இல்லே. ஒங்க ஸ்கூல் கிறிஸ்தவ மிஷன் ஸ்கூல். ஒரு போட்டிக்குதான் சமஸ்கிருதத்தை வச்சிருக்காங்க. இந்து மகாஜன ஸ்கூல் வந்தப்ப சான்ஸ்கிரிட்டை அவங்க கொண்டுவந்தப்ப நிறைய பேர் அதுக்காக சேர்ந்தாங்க. உடனே ஒங்க ஸ்கூலும் அதைக் கொண்டுவரவும் இங்கேயும் அதைப் படிக்கிறவங்க நிறைய சேர்ந்தாங்க.. போட்டிதான்..’’ என்றார்.
நானும் ஜெயராமனும் வெளியில் கிளம்பினோம்.. மறுநாள் வகுப்பாசிரியர் கோவிந்தராஜன் என்பவர் வந்ததும் நிறைய பேசினார். புதியதாக வந்து சேர்ந்த மாணவர்களுக்கு அந்த சிறுமலர் உயர்நிலைப் பள்ளியின் நீக்குப் போக்குகளையெல்லாம் சுருக்கமாய் எடுத்துக்கூறிவிட்டு ஆங்கில மொழியறிவை வளர்த்துக் கொள்ளும் சில வழிமுறைகளை சொல்லும் விதத்தில் பாடப்புத்தகத்தோடு செய்தித்தாள், சஞ்சிகைகள், கதைப் புத்தகங்களையும் படிக்கும்படி கூறினார். வாரம் ஒரு வகுப்பு நூல் நிலைய வாசிப்புப் பயிற்சிக்கென அப்பள்ளியில் இருப்பதைக் குறிப்பிட்டு அங்குள்ள ஆங்கிலப் புத்தகங்கள் எட்டாம் வகுப்பு மொழியறிவை ஒட்டி சுருக்கமாயும் எளிமையாகவும் எழுதப்பட்டவையெனக் கூறி அவ்வகுப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளச் சொன்னார். கேள்விக்கான பதில்களை டப்பா மனப்பாடம் செய்து எழுதுவதைத் தவிர்க்க வேண்டுமென்றும் வாக்கியங்களை சொந்தமாய் ஒரு சொல்லுக்குரிய வேறொரு சொல்லை வைத்து எழுதிப் பழக வேண்டுமென்றும் புதுப்புது சொற்களை தேடியறிந்து உபயோகிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தினார். அப்பா இந்த வழியில் என்னை மூன்றாண்டு காலமாய் பயிற்சியளித்து வந்திருப்பவர். மறுநாள் வகுப்பாசிரியர் பாடம் நடத்தவாரம்பித்தார்.
‘‘TO CARRY-இதுக்கு பெயர்ச் சொல் என்ன? தெரிஞ்சா கையத் தூக்கு’’, என்றார் வகுப்பாசிரியர். அமைதி குடிகொண்டது.
‘‘என்ன யாருக்கும் தெரியில்லையா?’’ நான் தயங்கியபடி கையை தூக்கினேன்.
‘‘எஸ், ஏன் தயங்கறே, சொல்லுப்பா’’
‘‘Carrier என்று சொல்லலாமா சார்?’’ என்றேன்.
‘‘வெரிகுட். புதுப் பையன். பேரென்ன? எந்தப் பள்ளிக்கூடத்திலேந்து வந்து சேந்தே?’’
‘‘கிருஷ்ணகிரி ஜில்லாபோர்டு ஹைஸ்கூல் சார்.’’
‘‘குட், அப்பா என்னா செய்யராறு?’’
இப்போது எல்லா பிள்ளைகளும் தலையைத் திருப்பித் திருப்பி மூன்றாவது பெஞ்சின் கோடியிலிருந்த என்னைப் பார்ப்பதை உணர்கிறேன். ராமானுஜன் திரும்பிப் பார்க்கிறான்.
ஆசிரியர் பாடத்தை தொடர்ந்தார்.
Once Upon A Time– என்று ஒரு சொற்றொடரை வாசித்த வகுப்பாசிரியர், ‘‘இதை வேற மாதிரியும் சொல்லலாம். யாருக்காச்சும் வருமா?’’ என்று கேட்டார்.
‘‘சொல்லுப்பா, ஒனக்குத் தெரியாது?’’ என்று ராமானுஜனைக் கேட்டான் பாலன். அவன் சும்மாயிருந்தான்.
‘‘நீ டப்பா உருப்போட்டு எழுதியே எம்பது மார்கு வாங்கிடறே. சொந்தமா எங்கே எழுதுவது?’’, என்றான் பாலன்.
‘‘யாருக்காச்சும் தெரியுமா?’’, என்று கேட்டார் ஆசிரியர். மீண்டும் நான் தயங்கினபடியே எழுந்து நின்றேன். இந்த மாதிரியெல்லாம் அப்பா நிறைய சொல்லிக் கொடுத்து என் ஆங்கில அறிவை வளர்த்தவர்.
‘‘எஸ்.. சொல்லுப்பா ஏன் தயங்கறே’’ என்றார்.
‘‘In Course of Time னு சொல்லலாம் சார்’’, என்றேன்.
‘‘வெரிகுட்.. வெரிகுட்.. எந்த ஸ்கூல்ல படிச்சே?’’
‘‘இதெல்லாம் ஸ்கூல்ல சொல்லித் தர்ல சார். எங்கப்பா தான் சொல்லித் தருவாரு.’’
‘‘ஓ.. இப்பிடித்தான் சொந்தமா எழுதிப் பாக்கணும். புஸ்தகத்தில் வந்திருக்கிறதையே மனப்பாடம் பண்ணி எழுதக்கூடாது. ஆச்சா, புதுசு புதுசா வார்த்தை போட்டு எழுதணும். எல்லாரும் மெதுவா ஒரு தபா கைதட்டுங்க இவனுக்கு..’’
ராமானுஜனும் சேர்ந்து கைதட்டினான்.
‘‘சிறுமலர் பள்ளியில நிறைய நறுமணம் கமழும் சின்னச் சின்னப்பூக்கள் மலர்கின்றன’’, என்றார் வகுப்பாசிரியர்.
எழுதியவர்:-

✍🏻 விட்டல்ராவ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
