வகுப்பறை கதைகள் 30 (Vagupparai Kathaikal):- கதை இஞ்ஞாசிரியர் கூடமும், தூங்குமூஞ்சி மரமும் - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | www.bookday.in | பள்ளி மாணவர்கள் கதை

வகுப்பறைக் கதைகள் 30:- கதை இஞ்ஞாசிரியர் கூடமும், தூங்குமூஞ்சி மரமும் – விட்டல்ராவ்

கதை இஞ்ஞாசிரியர் கூடமும், தூங்குமூஞ்சி மரமும்

வகுப்பறைக் கதைகள் – 30

– விட்டல்ராவ்

“நாலு மணிக்கு எல்லாரும் வரிசையா செயிண்ட் இக்னேஷியஸ் ஹாலுக்கு போய் ஒக்காருங்க. ஹெட்மாஸ்டர் பேசுவார்”, என்றார் வகுப்பாசிரியர். இப்போது கோபால், நான், ஜெயராமன் மூவரும் ஒரே பெஞ்சு, அதிலும் சிலருக்கு பொறாமை.

“சின்னவரும் பேசுவாரா?”, என்று கோபாலைக் கேட்கும்போதே, பியூன் மகிமை சுற்றறிக்கையோடு வகுப்பில் நுழைந்தார். வகுப்பாசிரியர் அதை வாங்கிப் படித்துவிட்டு தம் கையெழுத்தைப் போட்டு மகிமையிடம் திருப்பிக் கொடுத்ததும் அவர் வாங்கிக்கொண்டு அடுத்த வகுப்புக்கு போய்விட்டார்.

“பெரியவர்தான் பேசுவாரு,” என்றான் ஜெயராமன். சின்னவர் என்பது பாதர் அருள் ரொஸாரியோவை. அவர் காலாண்டுத் தேர்வையொட்டி எல்லா மாணவர்களுக்கும் மைக்கில் அறிவுரை தந்துவிட்டார். பெரியவர் தலைமையாசிரியர் – பாதர் புஷ்பநாதர், அவர் அரையாண்டு முழு ஆண்டு தேர்வு சமயங்களில் புனித இஞ்ஞாசிரியர் கூடத்தில் எல்லா வகுப்பு மாணவர்களையும் அழைத்து உட்காரவைத்து தேர்வு குறித்து பேசி, அறிவுறுத்தி, வாழ்த்தி, இறைவனிடம் பிரார்த்தித்து அனுப்புவார், இது ஒரு சடங்கு போல நடந்து வந்தது.

செயிண்ட் இக்னேஷியஸ் ஹால் எனும் புனித இஞ்ஞாசிரியர் மன்றம் மிக மிக நீளமும் அகலமுமான கூடம். முதற் படிவமெனும் ஆறாம் வகுப்பு முதல் ஆறாம் படிவமெனும் பதினோறாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் தாராளமாய் அமரக்கூடிய வசதி கொண்ட இடம். விளக்கு அமைப்பும் மைக் வசதியும் கொண்ட நாடக மேடையுண்டு. திரைப்படங்கள் திரையிட்டுக் காட்ட வெள்ளைத் திரையும் சொந்தமாக திரைப்பட புரொஜெக்ட்டருமுண்டு, மரியசூசை சார் அல்லது திவ்வியநாதன் சார் அதை இயக்குவார்கள் என்றான் கோபால்.

தலைமையாசிரியர் – பாதர் புஷ்பநாதர் பள்ளியின் பெயரை சிறிய புஷ்பம் உயர்நிலைப் பள்ளியென்றே எப்போதும் சொல்லுவார். ஆண்டுதோறும் மாணவர்களிடையே பேச்சுப்போட்டி, வசனப்போட்டி, பாட்டுப்போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப்போட்டி ஆகியவையும் நாடகமும் இங்கு நடைபெறும். செயிண்ட் இக்னேஷியஸ் ஹால் எனும் புனித இஞ்ஞாசிரியர் கூடம் லிட்டில் ஃப்ளவர் உயர்நிலைப் பள்ளியின் கலை கலாச்சார குறியீடாக விளங்கி வந்தது.

அன்றைக்கு ஐந்தாவது படிவம் எனும் பத்தாம் வகுப்பு விளையாட்டு வீரர் அணிக்கும் ஆறாம் படிவ வீரர் அணிக்கும் மாலையில் ஹாக்கிப் போட்டியிருந்தது. சிறுமலர் உயர்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானம் பிரம்மாண்டமானது. அவ்வளவு பெரிய மைதானம் சேலத்தில் வேறெங்குமில்லை என்றான் ஜெயராமன்.

“பெரிய பசங்களோடே சேர்ந்து பெரிய சாமியாரும் ஹாக்கியாடுவாரு. ரொம்ப நல்லா ஹாக்கி ஆடுவாரு நம்ம ஃபாதர். நீ ஹாக்கி பாத்திருக்கியா? ஒங்கூர்ல ஹாக்கியாடுவாங்களா?” என்று கேட்டான் கோபால்.

“ஒசூர், கிருஷ்ணகிரியில யெல்லாம் ஃபுட்பால்தான் பாத்துருக்கேன். இங்கதான் ஹாக்கி பாக்கணும்”  என்றேன்.

“கிரிக்கெட் தெரியுமா?”  என்று கேட்டான் ஜெயராமன்.

“பாத்ததில்லே, படிச்சிருக்கேன்”  என்றேன்.

“என்னய்யா, கிரிக்கெட்ட படிச்சிருக்கிறேங்கறே?”

“ஆமாய்யா! கண்ணன் பத்திரிகையில ராம்சிங்னு ஒரு கிரிக்கெட் வீரரு கிரிக்கெட் கற்றுக்கொள்னு ஆட்ற விதமெல்லாம் படம் புடிச்சிப் போட்டு எழுதுவாரு. அதைப் படிச்சிருக்கேன்”, என்றேன்.

“கிரிக்கெட்டே பாத்ததில்லேன்னா, பேஸ்பால் எங்கே பாத்தி ருக்கப்போறே ?” என்று கேட்டான் பாலன்.

“பாலன் பேஸ்பால் ரொம்ப நல்லா ஆடுவாம்பா!”

“அதென்ன வெளயாட்டுப்பா?”

“பப்ளிமாஸ் தெரியுமா? அந்த மாதிரி அதே சைசுக்கு ஒரு பந்திருக்கும். அதை ஒருத்தன் வீசுவான். பெரிய குண்டாந்தடி ஒன்னால அதை ஓங்கியடிச்சிட்டு சுத்தி ஓடிவந்து நிக்கோணும். அமெரிக்கன் பேஸ் பால்னு சொல்றது. அத்த தேசத்து ஆட்டம். பாலன் பிரம்மாதமா ஆடுவான்”.

இந்த விளையாட்டுக்களையெல்லாம் இதுவரை இருந்த ஊர்களில் கேள்விப்பட்டதேயில்லை. ஹாக்கி விளையாட்டுக்கு ரெஃபரியாக அருளப்பன் என்ற மற்றொரு பி.டி. ஆசிரியர் இருந்தார். கால் பந்து, கிரிக்கெட், பேஸ்பால் என்றால் ஜோசப்சார்தான் பயிற்சியாளரும் ரெஃபரியாகவுமிருப்பார் என்றான் கோபால்.

“தூங்குமூக்சி மரத்துக்கிட்டே போயிடலாம். மரத்தச் சுத்தியிருக்கிற மேடை மேலே ஏறியொக்காந்துகிட்டாக்கா ஆட்டத்த சௌகரியமா பாக்கலாம்.” என்றான் ஜெயராமன்.

தூங்குமூஞ்சி மரம் பிரம்மாண்டமானது. அதன் பிரம்மாண்டம் புனித இஞ்ஞாசிரியர் கூடத்துக்கும் பள்ளி மைதானத்துக்கும் நிகரானது. இம்மூன்றும் இப்பள்ளிக்கூடத்தின் சிறப்பு அம்சங்கள். மரத்தைச் சுற்றி வட்டமாய் எழுப்பப்பட்டிருந்த பெரிய மேடை மீது நூறு பேர் உட்கார்ந்து மைதானத்தைக் கவனிக்கலாம். அதிவீரராமப் பாண்டியர் பனை மரத்தையும் ஆலமரத்தையும் ஒப்பிட்டு எழுதிய கவிதையில் ஆலமரத்தைப் பற்றிய வருணனையில், “அண்ணல் யானை அணிதேர் புரவி, ஆட் பெரும் படையொடு மன்னர் இருக்க நிழலாகுமே” என்று சொல்லியிருப்பதை ஐந்தாம் வகுப்பில் வாசித்த நினைவு இந்தப் பள்ளியின் தூங்கு மூஞ்சி மரத்துக்கும் ஏற்றதாயிருந்தது.

சிறுமலர் உயர்நிலைப்பள்ளியின் தூங்குமுஞ்சி மரம் பள்ளி மாணவர்களுக்கு மேலும் இரு வழிகளில் இன்றியமையாத சேவையைப் புரிந்து வந்தது. மதிய உணவு இடைவேளையில் மாணவர்களில் பேர் பாதிக்கு சைக்கிளிலும் நடந்தும் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வருபவர்கள். பாலன், கோபால் எல்லாம் அப்படியானவர்கள். பிரேம், ராமசாமியெல்லாம் வீடு பக்கம் என்பதால் நடந்து போய்விட்டு வருவார்கள். மற்றவர்கள் இக்னேஷியஸ் கூடத்தின் நீண்ட ஆளோடியிலும், தூங்குமூஞ்சி மரத்தின் மேடை மற்றும் மரநிழலில் புல்தரையிலுமாய் அமர்ந்து தங்கள் உணவுப் பாத்திரத்தைத் திறப்பார்கள். மரத்தைப் போலவே அதன் பிரம்மாண்ட கிளைகளும் இலை குலைகளும் தரும் நிழல் விரிப்பும் பிரம்மாண்டமானது. என் வயது பிள்ளைகள் சினிமா விவரங்கள், விளையாட்டு செய்திகள் என்று அலுக்க சலிக்க பேசியபடியே மரநிழலில் புல்தரை மீதமர்ந்து சுப்பிடுவார்கள். அந்த நேரமறிந்து தெரு நாய்களும் வந்து சாப்பிடுபவர்களைத் தள்ளி, படுத்து வாய் பார்க்கும். சிறுமலர் உயர்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானத்து தூங்குமூஞ்சி மரம் அப்பள்ளியின் உடலாரோக்கியம் மற்றும் விளையாட்டுத் திறன், விளையாட்டு ஆர்வம் என்பனவற்றைக் குறிக்கும் குறியீடாக விளங்கி வந்தது. மேலும் தேர்வுகளின்போது உட்கார்ந்து படிக்க, படித்ததை மீள்பார்வையிட அந்த மேடையும் மர நிழலும் பேருதவியாயிருந்தது. சாப்பிட்டபின் மாணவர்கள் அங்கேயே உட்கார்ந்து படிப்பதும், ஒருவருக்கொருவர் கலந்தாலோசிப்பதுமாயிருப்பார்கள்.

அரைப் பரீட்சையும் வந்து போய்விட்டது. விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண்களைப் பார்க்கையில் ஒரு புறம் நிறைவும் இன்னொரு புறம் சஞ்சலமுமாயிருந்தது. விடைத்தாள்களை அவ்வந்த பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் மாணவர்க்கு வழங்குகையில் பெற்றிருக்கும் மதிப்பெண்களுக்கு ஏற்றாற் போல அறிவுரைகளையும் எச்ரிக்கையையும் சேர்த்தே வழங்கினர். கணிதம் என்னைக் காலை வாரிவிட்டது. பாஸ் மார்க் கிடைத்து விட்டது. கணித ஆசிரியர் கடுமையாக எச்சரித்து அனுப்பினார். தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏ,பி,சி, மூன்று வகுப்புகளிலும் நான்தான் அதிக உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். கணிதத்தில் குறைந்து போனதால் இரண்டாம் நிலையிலிருந்தேன். ராமானுஜன் ஆங்கிலம், தமிழ் பாடங்களில் எனக்கு கீழே போனாலும் கணிதத்திலும் சமஸ்கிருதத்திலும் நூற்றுக்கு நூறு வாங்கி முதல் மாணவனாக நின்றான். தமிழிலும் ஆங்கிலத்திலும் மூன்று வகுப்புகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற என்னை இப்போது நிறைய மாணவர்கள் நெருங்கி வந்தனர். என் நட்புறவை அவர்கள் வேண்டி நெருங்க முயற்சிக்கும் விதம் கண்டு சிலர் பொறாமையுடன் கவனித்தனர். என் இருப்பிடம்கூட சிலருக்கு தேவைப்பட்டது.

“ஒங்க வீடு எங்கே?”

“ஏன்?”

“சும்மா, தெரிஞ்சிக்கிறதுக்குதான்”

“ரொம்ப தூரம்பா!”

“இருக்கட்டுமே, எங்கே ?”

“எருமாபாளையம் ரோடு, கிச்சிப்பாளையம்”

“ஐயோ, எங்கிருக்கு அந்த ரோடு?”

“பாரத் சினிமா தியேட்டர் தெரியுமா?”

“செவுத்தில ஒட்ன போஸ்டர்ஸ்ல அந்தத் தியேட்டர் பேரைப் பாக்கறேன். தியேட்டரப் பாத்ததில்ல. பழைய படங்கள மட்டும் போடற தியேட்டர், இல்லையா?”

“அதுக்கு எதிர்லதான் எங்க வீடு”

“சரி, அங்கெல்லாம் தேடி வர்றது கஷ்டம், நீயே எங்க வீட்டுக்கு வந்திடறியா ?”

இவ்வளவையும் கேட்டவன் பிரேம்குமார்.

“வீடு தெரியாது”

“நாங்கூட்டிட்டுப் போறேன்?“

“இருய்ய!. நீ இப்ப வந்து ஒராயரே, நாங் கூப்புட்டுகிட்டேயிருக்கேன். எங்க வீடு அவனுக்குத் தெரியும். முதல்லே எங்க வீட்டுக்குத்தான் வருவான். எங்கப்பா இவன சாப்பாட்டுக்கு வரச் சொல்லிருக்காரு“, என்றான் ஜெயராமன். அப்போது பாலன் வந்து நின்று கேட்டான்.

“என்னப்பா தகறாறு?”

“தகறாறு எதுவுமில்லே பாலா, அவன எங்க வீட்டுக்கு வானு கூப்புடறோம்”.

“சரி சரி, பிரேம் ஒனக்கும் வேணாம், ஜெயராமனுக்கும் வேணாம், எங்கூட்டுக்கு நாங்கூட்டிட்டுப் போப்போறேன். எங்கூட்டுக்கு வாய்யா நீ. சைக்கிள் பின்னால் ஏறிக்க. திரும்பி ஒங்கூடு வரை சைக்கிள்ல ஒக்கார வச்சி கொணாந்து வுடறேன். ஸ்கூல் விட்டதும் போலாம்,” என்றான் பாலன்.

“இன்னிக்கி வேணம் பாலா, ஹாக்கி மாட்ச் பாக்கணும். நான் ஹாக்கியே பாத்ததில்லே. நாம்ப இன்னொரு நாள் வச்சிக்கலாம், “

மைதானத்தில் நீண்ட விசில் ஒலி வந்ததையடுத்து இரு ஆட்ட அணிகளும் ஹாக்கித் தடிகளோடு வரிசையாக நின்றவாறே – சும்மா நிற்காமல் நின்ற நிலையிலேயே உடம்பை அப்படியுமிப்படியும் அசைத்து, வளைத்து, முறுக்கி, கால்களை ஓரிரு முறை உதறிவிட்டுக்கொண்டனர். ரெவரண்ட் ஃபாதர் புஷ்பநாதர் அதையே சற்று வேறு விதமாய்ச் செய்து பார்த்துக்கொண்டார். அவரது அணியின் தலைவன் குணா சாமியாருக்கு மட்டும் கேட்குமாறு என்னமோ சொல்லி கையிலுள்ள ஹாக்கி தடியை ஆட்டிக் காட்டினான். அவரும் புரிந்து கொண்டு நன்றி கூறும் விதமாய் அவனுடைய தோளைத் தட்டிக் கொடுத்தார். அந்த சமயம் மற்றவர்களுக்குப் பார்த்துப் பழகிப் போனதாய்ப்பட்ட ஒரு காட்சி எனக்கு வேறு விதமான சிலிர்ப்பை ஏற்படுத்திவிட்டது. பள்ளியில் வந்து சேர்ந்து ஒன்பது மாதங்களாகிறது. ஜோசப் சாமியாரின் பேச்சில் அரிதாக வரும் ஆபாசச் சொற்களையடுத்து சில யோசனைகள். மற்றபடி அவர் கழுத்திலிருந்து பாதம் மறையுமளவுக்கு கூடை கவிழ்த்தாற் போல அணிந்த நீண்ட வெள்ளை அங்கியை மீறி அவரது காலணியை கூட பார்த்ததில்லை. ஒருமுறை சித்தரஞ்சனிடம் கேட்டிருக்கிறேன். சித்ரா என் ஐயத்தை ஓரளவுக்கு தீர்த்தான். “க்ரே கலர் இல்லாட்டா காக்கி பாண்ட் போடுவாரு நம்ம ”பாதர்” என்றான் சித்தரஞ்சன் மிகவும் வசதியான சீர்திருத்த கிறிஸ்தவ குடும்பத்திலிருந்து வருபவன். ஏழாம் வகுப்புவரை செவ்வாப்பேட்டையிலுள்ள லண்டன் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்து வீட்டு இங்கு வந்து சேர்ந்தவன். அவனப்பா டாவ்ஸன் முனிசிப் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கறிஞர். அவனம்மா அரிசிப் பாளையம் செயிண்ட் மேரிஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியை. மேனாட்டு இசைக் கருவிகள் சிலதில் பயிற்சி பெற்று வருபவன் சித்தரஞ்சன். அவர்களின் தேவாலயம் சேலத்தின் முக்கியமான சின்னங்களில் ஒன்று, என்று கூறி அப்பா காட்டியிருக்கும் அந்த சி.எஸ்.ஐ. தேவாலயம் முழுக்கவும் சிவப்பு நிறத்தாலானது. கலெக்டர் அலுவலகத்துக்கும் பெரிய மருத்துவமனைக்கும் இடையில் பச்சை பசேலென்ற மரங்களின் செறிவினூடே உயர்ந்து தெரியும் அத் தேவாலயம் மிகப் பழையது என்றும் அப்பகுதி கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் சேலம் கோட்டையிருந்த இடமென்றும் அப்பா கூறுவார்.

அதே சமயம் ஹாரிஸ் சித்தரஞ்சன் தாஸ் பழகுவதில் எச்சரிக்கையானவன். யார் உறவையும் வகுப்பறை, விளையாட்டு மைதானத்தோடு வைத்துக்கொள்ளுவான். யார் வீட்டுக்கும் போகமாட்டான். யாரையும் தன் வீட்டுக்கு அழைக்கவுமாட்டான். பிரேம் இதற்கு நேர்மாறானவன், மற்றவர்களை வீட்டில் போய் சந்திக்க ஆவல் கொண்டவன். தன் வீட்டுக்கு அழைத்து பேசிக்கொண்டிருப்பவன். கொஞ்சம் ஆபாச நகைச்சுவையில் தாராளமானவன். மிகவும் வசதியான குடும்பம். சொந்த ஊர் பாலக்காட்டையடுத்த அத்திக்கோடு என்பான். செம்ப்ரோடு களம், பணி ஞார் வீடு என்றும் முகவரி தருவான். அவனப்பா அந்தக் கால பிஏஎல்டி ஆசிரியர். சேலம் ஜில்லா போர்டு பள்ளிகளில் தலை மையாசிரியராயிருந்து பணி ஓய்வுபெற்ற பின் கேரளத்து பாரம்பரியமாய் மரவள்ளிக்கிழங்கு மாவைக் கொண்டு ஜவ்வரிசி தயாரிக்கும் தொழிலில் இறங்கிக் கடுமையாகக் கையைச் சுட்டுக் கொண்டவர், பிறகு கேரளத்தின் மற்றொரு பிரபல தொழிலான ரப்பர் டயர் வல்கனைசிங் தொழிலை நடத்தி வருபவர்.

ஹாக்கியாட்டம் தொடங்கியது. ரெவரண்ட் ஃபாதர் புஷ்பநாதரின் கைக்குட்டை அளவில் பெரியது. அதை முக்கோண வடிவில் மடித்துத் தலைக்குக் கட்டிக்கொண்ட முறையில் அவரது கண் கண்ணாடியையும் ஓட்டத்தின் வேகத்தில் நழுவி விடாதபடி கைக்குட்டை இறுகப் பற்றியிருந்தது. அடுத்து, சித்ராவிடம் நான் கேட்ட கேள்விக்கு பதிலாக சாமியார் தம் பாதத்தை மூடி தொங்கும் நீண்ட வெள்ளை அங்கியை வழித்து முழங்கால் உயரத்துக்குத் தூக்கி இருகக் கட்டிக்கொண்டார். அன்று அவர் அணிந்திருந்த இருண்ட சாம்பல் நிற முழுக் கால் சட்டை தெரிந்தது.

“பௌல்!” இந்தச் சொல் இரண்டு அணிகளிடமிருந்து அடிக்கடி வந்தது. அருளப்பன் அடிக்கடி விசிலடித்து ஆட்டத்தை ஒருகணம் நிறுத்தி தவறேற்பட்ட இடத்தில் பந்தை நிறுத்தி அடிக்க விட்டார். கால்பந்தாட்டத்தைக் காட்டிலும் ஹாக்கியில் ஃபெளல் அதிகம் செய்யப்பட்டு ரெஃபரியின் அடிக்கடி கேட்கும் விசில் ஒலி விறுவிறுப்புக்கு இடைஞ்சலாக இருந்தது. சாமியாரின் ஓட்டம் திகைப்பூட்டிற்று. எவ்வளவு சுறுசுறுப்பு. என்னமாய் எதிரியிடமிருந்து பந்தைத் தான் ஹாக்கித் தடியால் பறித்துத் தன் பக்கமாய் இழுத்து உருட்டியோட்டிச் செல்லுகிறார் ஃபாதர் புஷ்பநாதர். எதிரிகள் சுற்றிக் கொண்டு விட்டால் சட்டென பின்னுக்காய் ஜகா வாங்கி, பக்கவாட்டில் தயாராக நிற்கும் தன்னுடைய அணிக்காரனிடம் பந்தைத் தள்ளி விடும் லாவகம், அவரது ஓடும் திறன் அபாரமானது. கோணி மூட்டைகளிடையே சுண்டெலி ஓடுவது மாதிரி கூட்டத்தில் மட்டையோடு பந்தைத் துரத்தியும், பந்தை மட்டையில் எடுத்தும் நிற்காது ஓடும் அந்தத் துரிதம். எதிரியின் கோல் பகுதியை நெருங்கிவிட்டால் அவர் மிகவும் டென்ஷனாகிவிடுவார். அவரது அணிக்காரர்கள் எங்கே அவர் கோல் போடுவதில் கோட்டை விட்டுவிடுவாரோ, இவ்வளவு தூரம் பந்தை எடுத்துவந்த மனிதர் பதட்டத்தில் பந்தை எதிரியிடம் பறிகொடுத்துவிடுவாரோ என்ற அவநம்பிக்கையில், எப்படியாவது அவரது முயற்சியை யாராவது தோள் கொடுத்து கோலாக மாற்றிவிடும் எத்தனிப்பில், “ஃபாதர், ஃபாதர் இங்கே பாஸ் பண்ணுங்க.. பந்தை இங்கே பாஸ் பண்ணுங்க ஃபாதர்!” என்று கத்துவார்கள். ஆனால் ஃபாதர் புஷ்பநாதர் பந்தை விடமாட்டார். தாமே அந்தக் கோலைப் போட்டு விடவேண்டுமென்ற ஆவலும் உறுதியும் அவரிடம் விடாப்பிடியாகி நிற்கும். தம் மீது அந்தத் தருணத்தில் சாமியாருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை பிசாசு பிடித்தாற்போல வந்துவிடும்.

“லீவ் இட்… லீவ் இட்…” என்று உரக்க கத்தினபடியே ஹாக்கி கோலால் பந்தை உருட்டியும் தூக்கி ஏந்தியும் கோல் போஸ்டை நெருங்கிவிட்டதும் அசுர பலத்தோடு ஓங்கியடித்தார் சாமியார்.

“கோல்!,” ரெவரண்ட் ஃபாதர் புஷ்பநாதர் கத்தினபடியே தம் ஹாக்கி மட்டையை உயரத் தூக்கி குதித்த வேகத்தில் முட்டி வரை தூக்கிக் கட்டியிருந்த வெள்ளை அங்கி பாவாடை நழுவுவது போல அவிழ்ந்து தொங்கிய பாதங்களையணைத்தது. அது கோலேதான். அந்த ஒரே ஒரு கணத்தில் சாமியாரை அவரது அணியினர் இறுகக்கட்டித் தூக்கிக் கொண்டாடுவார்கள். அந்தக்கணம் அற்புதமானது. அங்கே அப்போது தலைமையாசிரியர், மாணவர்கள், கத்தோலிக்க சாமியார்  என்ற எவ்வித உணர்வும் வேலையே செய்யாது. அன்றைய போட்டியில் ஃபாதர் புஷ்பநாதரின் அணி ஒரு கோல் இழப்பில் தோல்வியுற்றது.

எழுதியவர்:-

கி. விட்டால் ராவ் - தமிழ் விக்கிப்பீடியா

✍🏻 விட்டல்ராவ்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *