வகுப்பறை கதைகள் 31 (Vagupparai Kathaikal):- புதியதோர் திசை தொடக்கம் - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | www.bookday.in | பள்ளி மாணவர்கள் கதை

வகுப்பறைக் கதைகள் 31:- புதியதோர் திசை தொடக்கம் – விட்டல்ராவ்

புதியதோர் திசை தொடக்கம்

வகுப்பறைக் கதைகள் – 31

– விட்டல்ராவ்

ஜோசப் சாமியார் எல்லோரிடமும் வந்து விடைபெற்றுக் கொண்டது மாணவர்களைக் கண்கலங்கடித்துவிட்டது. கிருஷ்ணகிரிக்கு அருகிலுள்ள சிற்றூர் எல்தகிரி. அந்த எல்தகிரியில் ஒரு தேவாலயமும் உயர்நிலைப்பள்ளியும் நிறுவி அப்பள்ளிக்கு தலைமையாசிரியராக ஃபாதர் ஜோசப்பை நியமித்திருந்தது சிறுமலர் பள்ளி நிர்வாகம். அவர் அங்கு போய் பொறுப்பேற்கப்போகிறபடியால் மாணவர்களிடம் வகுப்பு வகுப்பாய் தாமே சென்று விடை பெற்ற காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

“ஓல்டு, சேஷுப்பாட்டி, ஞாபகம் வச்சிக்கங்க.”, என்று அவர் கூறும்போது சேஷத்திரி அழுதுவிட்டான். ஆனால் சற்று நேரங்கழித்து மற்றொரு காட்சி வேறு விதமாயிருந்தது. தூங்குமூஞ்சி மரத்தடியில் வைத்து மகிமைநாதனோடு ஜோசப் சாமியார் காரசாரமாய் என்னவோ பேசிக் கொண்டிருந்தார்,

“சண்டையா?” என்று கேட்டான் கோபால் பாலனைப் பார்த்து, அவன் சிரித்தபடியே பதிலளித்தான்,

‘கொஞ்ச நேரத்தில பாரு, சண்டையாயிடலாம்.”

“என்னத்துக்கு அது?”

“லேவாதேவி?”

“அப்படின்னா?”

“வட்டிக்கு கடன் தர்றதுப்பா, நம்ப சாமியாரு ஜோசப்பு வட்டிக்கு வுடறாரு தெரியுமா?” என்றான் நாகராஜன். நாகராஜனின் தந்தைக்கு சேலத்தில் ஓரளவுக்கு பிரபலமான சைவச் சிற்றுண்டி விடுதிகள் இரண்டு இருந்தன: நாகராஜன் கூறியதைக் கேட்டு அங்கு சிரிப்பொலி எழுந்தது.

“மகிமைநாதன்தான் அதுக்கு ஏஜெண்டு. அவருகிட்ட குடுத்துத்தான் சாமியார் வட்டிக்கு உடறாரு. மகிமை வெளியில் வட்டிக்கு உட்டு, பணத்த மூட்டு எடுப்பாரு. ஏஜெண்டுக்கு கமிஷன் உண்டு. லேவாதேவி நல்லாவே போகுதுனு கேள்வி. இப்போ இவர வேறே ஊருக்கு மாத்திட்டதாலே கொடுக்கல் வாங்கல்ல எதோ கசாமுசா”, என்றான் நாகராஜன்.

இதுவரை இருந்து விட்டு வந்த சிற்றூர்கள், சிறுநகரங்கள், அவற்றின் பள்ளிக்கூடங்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் இந்த பெரிய நகரமும், இந்தப் பள்ளிக்கூடமும், ஆசிரியர்களும், மாணவர்களும் பிறவும் எவ்வளவு வித்தியாசமானவர்களாயும் வித்தியாசமானவையாயும் இருக்கின்றன என்ற நீண்ட யோசனை போய்க்கொண்டேயிருந்தது.

அன்று மதியம் தூங்குமூஞ்சி மரத்தடியில் மாணவர்கள் வகுப்பு வாரியாக குழுக் குழுவாய் அமர்ந்து பல்வேறு பறவையினங்கள் பல்வேறு குரல்களில் பேசிக்கொள்ளுவது போல பேசிக்கொண்டே தத்தம் டப்பாக்களைத் திறப்பதும் திறந்ததும் ஒவ்வொருவர் வீட்டு உணவின் நறுமணத்தால் கண் மூடி பாராட்டிக்கொள்ளுவதுமாயிருந்த சமயம்…

“என்னப்பா, ஒண்டப்பாவத் தொறந்ததும் ஒரே ஊச வாடை அடிக்குது?” என்றான் என்னை நோக்கி இன்னொருவன். “அம்மாவால் அவ்வளவு சீக்கிரம் எதையும் தயாரித்து டப்பா கட்டி பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முடியவில்லை. அக்காவும் அண்ணனும் படிக்கும் பாவடி முனிசிபல் பள்ளி வீட்டுக்குப் பக்கம் என்பதால் அவர்கள் மத்தியானம் வீட்டுக்கே வந்து சாப்பிட்டுவிட்டுப் போவார்கள். என் ஒருவனுக்குத்தான் அவ்வளவு காலையில் எதாவது செய்ய கஷ்டப்பட வேண்டும். எனவே வீட்டருகில் இட்லி தோசை சாம்பார் சட்னியென்று செய்து விற்கும் புட்டுக்காரம்மாவிடம் இட்லி சாம்பார் வாங்கி அலுமினிய டிபன் பாக்சிலிட்டு கொடுத்தனுப்பி விடுவாள் அம்மா, அது மத்தியானம் வரை தாங்கவில்லை. ஊசிப் போய் விட்டிருந்தது.”

“வேணாம், கொட்டிடு நாய்க்கு” என்றான் முகத்தைச் அளித்துக்கொண்டு பூஞ்சோலை. இவன் சின்னதிருப்பதியிலிருந்து வருபவன். உடனே உத்திரு சாமி சொன்னான்.

“எங்க சாப்பாட்லிருந்து ஆளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தர்றோம்பா ” உத்திரு சாமி உடையாப்பட்டியிலிருந்து பஸ்ஸில் வந்து போகும் பண்ணையார் வீட்டுப் பிள்ளை.

“அட நீ வாய்யா, கூட்டாஞ்சாறு சாப்புடலாம். இனிமே வூட்லரிருந்து எதுவும் எடுத்துக்கிட்டு வராதே” என்றான் ராம் மோகன். இவனுக்கு வாய் சில சமயம் திக்கும். அம்மா கஷ்டத்தோடு கஷ்டமாய் காசு கொடுத்தும், இல்லாதபோது கடன் சொல்லியும் வாங்கியதை ஊசியே போயிருந்தாலும் தூக்கியெறிய மனம் ஒப்பவேயில்லை. இதற்குள் பூஞ்சோலை அதை இழுத்து நாய்க்கு எறிந்துவிட்டான். ஊசலை உண்பது வறுமை, வறுமை எனக்குப் பழகிப் போன ஒன்று. பசி நேரத்துக்கு ஊசிப் போனதும் பரவாயில்லை என்ற கணக்கு. நண்பர்கள் தம் வெவ்வேறு வித சாப்பாட்டு தினுசுகளைப் போட்டி போட்டுக்கொண்டு என்னோடு பகிர்ந்துகொண்டனர். என்றென்றைக்கு அம்மா காலையில் தயாரித்து அனுப்ப முடியாதோ அன்றைக்கெல்லாம் கண்ட இட்லி தான். அந்த சமயம் அதை அப்போதே சாப்பிட்டுவிட்டு வெறுமனே பள்ளிக்குப் போய்விடுவதென்றானது. பெரும்பாலும் வெறும் தண்ணீர் குடித்துவிட்டு உணவு இடைவேளையில் வகுப்பறையிலேயே இருந்து விடுவேன்.

அன்றைக்கு ஜெயராமன் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியோடு வகுப்பிற்குள் நுழைந்தான்.

“நமக்கு ஸ்காலர்ஷிப் வருது” என்றான்.

அது அரைகுறையான தகவலாக பட்டாலும் ஆனந்தமாயிருந்தது. மாலை மூன்று மணியளவில் மகிமைநாதன் சுற்றறிக்கையோடு வகுப்புக்கு வரவும் ஜெயராமன் தந்த தகவல் உறுதியாயிற்று. அதே சமயம் அவன் சொன்ன ஸ்காலர்ஷிப் என்பதைச் சற்று வேறுவிதமாகப் புரிந்து கொள்ள வைத்தது சுற்றறிக்கை. இது ஒரு படிப்புக்கான கட்டணச் சலுகை. மாதச் சம்பளம் கட்டுவதில் பேர்பாதிக் கட்டணம் குறைத்து வசூலிக்கப்படும். இச் சலுகையைப் பெற இரு நிபந்தனைகள் கண்டிருந்தன. மாத வருமானம் மிகவும் குறைவான குடும்பப் பின்னணியிலிருக்கும் பிள்ளைகளுக்குத்தான் இச்சலுகை பொருந்தும். அத்தோடு அவர்களுக்கும் தேர்வு ஒன்றை சிறுமலர் உயர் நிலைப்பள்ளி நிர்வாகம் வைத்திருக்கிறது. அத்தேர்வை எழுதி வெற்றி பெறுபவர்கள் மட்டுமே இக்கட்டணச் சலுகைக்கு கவனிக்கப்படுவார்கள். வசதிமிக்க மாணவர்கள் சொல்லாமலே தேர்வில் கலந்துகொள்ளவில்லை. பிரேம், பாலன், சித்தரஞ்சன், நாகராஜனெல்லாம் சம்பளச் சலுகைச்சான பரீட்சையில் கலந்து கொள்ளாமல் வழிவிட்டு நின்றனர், நான், ஜெயராமன், கோபால் மூவரும் பெயர் கொடுத்தோம், எழுதினோம்; இந்த மூவருமே அந்த வகுப்பில் தேர்ச்சி பெற்று படிப்புக் கட்டணச் சலுகை பெற முடிந்தது. அப்பாவுக்கும் சிறியதொரு பெருமூச்சு, பள்ளிப் படிப்புக்கான மாதச் சம்பளம் மூன்றரை ரூபாயிலிருந்து ஒண்ணே முக்கால் ரூபாயாக பேர்பாதியாகிவிட்டது.

மகிமையின் சுற்றறிக்கையைக் கையில் பிடித்துக்கொண்டே கேட்டார் வகுப்பாசிரியர், ஏசிசியிலே சேர விருப்பம் இருக்கறவங்க அருளப்பன் கிட்டே பேர் குடுக்கலாம்.”

“என்னங்க சார் அது?”

“ஆக்ஸிலரி கேடட் காப்ஸ்னு பேரு, ஏ.சி.சி. யூனிஃபாரமெல்லாம் நீங்களே தச்சிக்கணும். கான்வாஸ் ஷு, நேதாஜி கேப்பெல்லாம் காசு குடுத்து வாங்கணும், டிரில் உண்டு. ரோடு போடறது, அது இதுனு பொதுச் சேவை செய்யவும் சொல்லித் தருவாங்க” என்றார் ஆசிரியர், ‘சிந்தரஞ்சனும் ‘கோபாலும்’ பெயர் கொடுக்க தயாராயினர்.

“அடுத்த வருஷம் பக்கா டிரெயினிங்கா என்.சி.சி வரப்போகுது ஸ்கூல்ல. அதுதான் நல்லது. வேலைக்கு சேர, மிலிடெரியில சேர்ரதுக்கெல்லாம் என்.சி.சி. சர்டிபிகேட் ரொம்ப முக்கியம், அது வரட்டும், அதில சேரலாம்”  என்று பாலனும் பிரேமும் சொன்னார்கள்.

அன்றைக்கு சமூகவியல் பாட வகுப்புக்கு ஆசிரியர் துரை பழனி வேல் வராததால் ஃபாதர் அமல்ராஜ் வருவாரென்றும் அதுவரை அமைதியாக எதையாவது செய்யும்படி சொல்லிவிட்டு போனார் மரியசூசை. நடு வரிசை பெஞ்சிலிருந்த சம்பத்தைச் சுற்றி நாலுபேர் முசுவாயிருந்தனர், பிரேமுக்கும் பாலனுக்கும் அதில் ஆர்வமில்லை. ஜெயராமன் சம்பத்துக்கு என்னைக் காட்டி, “சேத்திக்கலாமா இவனை?” என்று கேட்கவும் என்னை அழைத்தார்கள்.

“என்னாது?”

“அட்ரஸ் தர்றோம், கார்டுலே எழுதிப் போட்டா இலவசமா புஸ்தகமெல்லாம் அனுப்புவாங்க…” என்றான் சம்பத்.

ஒங்க வீட்டுக்கே வரும்,” என்றான் பாச்சா எனும் பார்த்தசாரதி. சம்பத்தும் பாச்சாவும் ராமானுஜனுக்கு தூர உறவினர்கள் என்றான் ஜெயராமன்,

“காசு?”

“பைசா கிடையாது, ஓசிதான்”

“நானும் எழுதிப் போடறேன் என்று சொல்லவும் சம்பத்தும் பாச்சாவும் என்னையும் தங்கள் ஓசிப் புத்தகக் குழுவில் சேர்த்துக்கொண்டனர். முதலில் உமா கோல்டு கவரிங் நகைக்கடை காட்லாக் ஒன்று ஓசியில் வீட்டுக்கு அரையணா கார்டு எழுதிப்போட்டதில் வந்தது. முதலில் பரிகாசம் செய்த அப்பா மேலும் மூன்று தபால் கார்டுகளை வாங்கித் தந்தார், சம்பத் அடுத்து நற்கருணை வீரன் பத்திரிகையை தவறாது பெற எழுதிப்போடுமாறு விலாசத்தை கொடுத்தான். என்னைப் பார்த்து பிரேமும் இணைந்தான்.

Vittal Rao's Vagupparai Kathaikal Series 31 About Little Flower High School Student And Their Teachers

“போக்கத்த வேலை” என்றான் பாலன். நற்கருணை வீரன் கிறிஸ்தவ எவாஞ்செலிகல் சொசைட்டியிலிருந்து இலவசமாய் மாதமிருமுறை வீட்டுக்கு வரத்தொடங்கிற்று, கதைகள் அழகிய சித்திரங்கள் எல்லாமிருந்தன. எல்லாமே கிறித்தவ சமய சம்பந்தமாகவே இருந்தாலும் அறிந்து கொள்ள நிறைய விஷயங்கள் நற்கருணை சீரனில் இருந்தன. இந்த ஓசித் தபால் விளையாட்டில் மிகவும் முக்கியமானது அமெரிக்காவின் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ஓசி தபால்தான், சம்பத் இதை உடனே எல்லாருக்கும் எழுதிப்போட தந்து விடமாட்டான். அவனது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாய்த் தோன்றினால்தான் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் முகவரியைத் தந்து எப்படி எழுதுவது என்று சொல்லித் தருவான். எழுதிப் போடுவதும் அதற்கு அனுப்பி வைக்கப்படுவதும் மதறாசிலிருந்துதான், அமெரிக்கன் ரிபோர்ட்டர் எனும் பத்திரிகை மாதமிருமுறை இலவசமாய்த் தவறாது வீட்டுக்கு வரத்தொடங்கியது. பிறகு அமெரிக்க ஐக்கிய நாட்டு தேசப்படம் அற்புதமான சிற்றோவியங்களோடு வந்து சேர்ந்தது. அமெரிக்க குடியரசின் ஒவ்வொரு நகரையும் குறித்து. அங்குள்ள சிறப்பான விஷயத்தை சித்திரமாய் காட்டியிருப்பார்கள். அதில் முக்கியமானது அமெரிக்காவிலுள்ள சேலம் என்ற பெயரிலுள்ள ஊர் எடுப்பாகக் குறிக்கப்பட்டிருக்கும் விஷயம். இதெல்லாம் வந்ததா என சம்பத் கேட்டுக்கொண்டான்.

ஒரிரு வாரங்களில் ஓர் இசைத்தட்டும் தபாலில் வந்தது. ஏற்கெனவே சம்பத் சொல்லியிருந்தான், முதலில் பத்திரிகையும் அடுத்து தேசப்படமும் கடைசியாக ரிக்கார்டும் அனுப்பி வைப்பார்கள் என்று.

“என்ன ரிக்கார்டுப்பா?”

“நம்ம கிராமபோன் பிளேட் மாதிரியே. ஆனா பிளாஸ்டிக்கிலே ஆனது, ஒருபக்கம் ஐசனோவர் பேச்சும் இன்னொரு பக்கம் ஜவகர்லால் நேரு பேச்சுமிருக்கும் ” என்றான் சம்பத்.

“அந்த இங்கிலீஷ் புரியுமா?”

“நேரு பேசறது புரியும் ”

“சரிப்பா, அதை வச்சி கேக்கறதுக்கு எங்க வீட்ல் கிராமபோன்

பெட்டியில்லையே?”

“பிரேம்குமார் வீட்டுக்குப் போ, அவங்க வீட்ல இருக்கு”

வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா அனுப்பிவைத்த இலவச ரிக்கார்டின் ஐசனோவர் – நேரு பேச்சைக் கேட்பதற்காக பிரேம்குமாரின் வீட்டுக்கு முதன் முதலாகப் போனேன். அவர்கள் வீட்டில் ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் கிராம போன் பெட்டி இருந்தது. அதில் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா கார்டு தட்டைப் போட்டு ஓடவிட்டான் பிரேம். நேருவின் ஆங்கிலம் சுமாராகப் புரிந்தது. ஒரு முறைக்கு இரு முறை வைத்துக் கேட்ட பின் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு புறப்பட்டேன். அன்று முதல் நானும் பிரேமும் மிகவும் நெருக்கமானோம். அதே சமயம் இப்படி தபாலில் ஓசி சமாச்சாரங்களை வரவழைக்கும் வேலை விரைவில் சலிப்பேற்பட்டு நிறுத்திவிட்டேன். கதைகள் வாசிப்பதும் கதைகள் சொல்லுவதும் அவ்வப்போது சந்துருவுடன். சனி, ஞாயிறு காலைக் காட்சிகளாய் மலிவான டிக்கெட்டில் ஆங்கில சினிமா பார்க்கும் பழக்கம் அதிகரித்தது. வகுப்பறையில் வரலாற்று பீரியட் வந்தால் துரை பழனிவேல் சார், தான் பார்த்த வரலாற்று தொடர்பான ஆங்கில சினிமா பற்றி கூறி ஆர்வமூட்டி விடுவார். போய்ப் பார்க்கும்படியும் கூறுவார். பிரேம் வீட்டிலிருந்த ரேடியோவை வியப்போடு பார்ப்பேன், தொட்டும் பார்ப்பேன், அதை இயக்கும் விதம், வெவ்வேறு நிலையங்களுக்கு நகர்த்தித் திருப்பிக் கேட்டது பற்றியெல்லாம் பிரேம் சொல்லித் தந்து என்னையே இயக்கவும் விடுவான், நாடகம், பாடல்கள், பிரசங்கங்கள் எல்லாம் கேட்க வைத்தது அவர்கள் ரேடியோ,

பள்ளி ஆண்டு விழா நெருங்கி வந்தது. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு போட்டிகள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் கலந்து கொள்ள பெயர்கள் வரவேற்கப்பட்டன. இசை, தமிழ்ப் பேச்சு, கட்டுரைப் போட்டிகளுக்கு பெயர் தந்த போது பிரேம்குமாரைத் தவிர மற்ற மாணவர்கள் வியப்போடு பார்த்தனர், முக்கியமாக இசைப்போட்டியில் கலந்துகொள்ளுவது எல்லோருக்குமே சந்தேகமாய் வியப்பாய் வினோதமாய்கூட தோன்றியது. நான் பேசும் குரலை வைத்து ராமானுஜன் கிண்டலடித்து அந்தக் குரலில் நான் பாடுவது எவ்வாறு இருக்கும் என்று செய்து காட்டினான்: என்னை மிகவும் உற்சாகப்படுத்தியவர்கள் ஹாரிஸ் சித்தரஞ்சன் தாசும் பிரேமும்தான்.

போட்டிகள் யாவும் புனித இஞ்ஞாசிரியர் மன்றத்தில்தான் நடைபெறும், தமிழ் பேச்சுப் போட்டிக்கு நடுவர்களாய் தமிழாசிரியர் சித்தன், சண்முகனார் இருவருமிருந்தனர். போட்டி தொடங்குவதற்கு அரைமணிநேரம் இருக்கும்போதுதான் போட்டிக்கான மூன்று தலைப்புகளைத் தந்து அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பேசக் கூறினார்கள். ஒவ்வொரு பேச்சாளரும் பதினைந்து நிமிடங்களில் பேசிமுடிக்கவேண்டும். கீழ் வகுப்புகளிலும் மேல் வகுப்புகளிலும் ஐந்தைந்து பேர் போட்டியில் பேச இருந்தனர் பத்திரிகைகள் வாசிப்பதன் அவசியமும் பயனும் என்ற தலைப்பை தேர்ந்தெடுத்த நான் அரைமணி அவகாசத்தில் ஒரு மாதிரி உருவகித்து வைத்தேன். வீட்டில் அப்பா வார மாத இதழ்கள் தினசரிகளை வாங்கியது யாவும் மனதில் ஓடியது. என் முறை வந்தது. மேட்டூர் அணை, அரூர், கிருஷ்ணகிரியில் பத்திரிகைகள் வாசித்த அனுபவம் கைகொடுக்க, பதினைந்து நிமிடங்களை முழுமையாகவும் கச்சிதமாகவும் பயன்படுத்திக்கொண்டு தலைப்புக்கேற்றவாறு பேசிமுடித்தேன், எடுப்பான என்குரல் செயிண்ட் இக்னேஷியஸ் ஹாலின் சுவர்களிலும் கூரையிலும் பட்டு எதிரொலித்தது. என் பேச்சை அனைவரும் கூர்ந்து கவனித்தது தெரிந்தது. சாமியார் புன்சிரிப்போடு கவனித்தார். பலத்த கைதட்டல் எழுந்தது.

மறுநாள் காலை இறை வணக்கத்தின்போது பேச்சுப்போட்டியின் முடிவை ஃபாதர் அருள் ரொவலியோ அறிவித்தார். ஜூனியர் தமிழ்ப் பேச்சுப்போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. வகுப்பில் தமிழய்யா சண்முகனார் என்னை அழைத்து மேஜையருகில் நிற்க வைத்து எல்லோரையும் கைத் தட்டச் சொன்னார், உனக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும் என்றார். மறுநாள் கட்டுரைப்போட்டி. பிரேம் ஜெயராமன், ராமானுஜன், பூஞ்சோலை ஆகியோரும் பெயர் கொடுத்திருந்தனர். பேச்சுப்போட்டியைப் போலவே இதற்கும் அரைமணி நேரம் முன்பாகத்தான் மூன்று தலைப்புகள் தந்து அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து இரண்டு பக்கங்களுக்கு ஒருமணிநேரத்தில் எழுதி முடிக்க வேண்டும். எழுதினோம், மூன்றாம் படிவம் சி – பிரிவைச் சேர்ந்த மொஹம்மட் என்ற மாணவனுக்கு தமிழ் கட்டுரைப் போட்டியில் முதற் பரிசும் எனக்கு இரண்டாம் பரிசும் அறிவிக்கப்பட்டது.

மூன்றாம் நாள், எல்லோரும் எதிர்பார்த்திருந்த பாட்டுப்போட்டி. சீனியரில் பத்தாம் வகுப்பு மாணவன் சீனிவாச டாங்கேயின் பெயர் பிரபலமானது. ஜூனியராயிருந்த போதே தொடர்ந்து இரு முறை இசையில் முதற் பரிசு பெற்றவன் டாங்கே. எவ்வளவு வற்புறுத்தியும் சித்ரா பாட்டுப் போட்டியில் பெயர் கொடுக்க மறுத்துவிட்டான், தன்னால் குரலெடுத்து பாட முடியாதென்றும், இசைக்கருவிகளை மட்டுமே வாசிக்க முடியுமென்றும் சொல்லிவிட்டான். கத்தோலிக்க மாணவர்கள் ஏழு பேர் போட்டியிலிருந்தனர். சி-பிரிவிலிருந்து ரூஸ்வெல்ட் என்ற சீர்திருத்த கிறித்தவ மாணவனும் கோதாவில் இறங்கியிருந்தான். நானும் இருந்தேன்: என்ன பாடப்போகிறான், எப்படி பாடப்போகிறான் பேசும்போது இவனுக்குள்ள கரகரப்பேறிய கட்டைக்குரலில் பாடிக்காட்டுவான் என்றுதான் ராமானுஜன் மற்றும் ஆசிரியர்கள் மரியசூசை, ராமசேஷய்யர், வைத்தியநாத ஐயரெல்லாம் நினைத்திருக்கவேண்டும். ஃபாதிரிமார்கள் நடுவர்களாயில்லாவிடினும் தங்கள் ஏ.பிரிவு மாணவர்கள் இருவரின் வெற்றிக்காக பிரார்த்தித்தபடியிருப்பதாக சித்தரஞ்சன் கிண்டலடித்தான். ஒவ்வொருவராக பாடத் தொடங்கினர். எல்லோரும் அவரவர் வழிபடும் இறைவனைப் போற்றித் துதித்துப் பாடி முடித்தனர், சீனியரில் சீனிவாச டாங்கே சினிமாப் பாட்டொன்றை பாடினான். “கணவனே கண்கண்ட தெய்வம்” படத்திலிருந்து “அன்பில் மலர்ந்த நல் ரோஜா, கண் வளராய் என் ராஜா” என்ற பாட்டை மிக அற்புதமாகப் பாடி அடங்காத கைத்தட்டலைப் பெற்றான் டாங்கே. அவனுக்குத்தான் சீனியருக்கான பரிசு என்பதை கைத்தட்டல்களின் பேரோசையே உறுதி செய்து விட்டது.

மீண்டும் – கடைசியாக ஜூனியரின் முறையாக என் முறை வந்தது. புதிய முகம். வெளியிலிருந்து சிற்றுரிலிருந்து வந்து சேர்ந்தவன். என் குரல் இசைக்கேற்றதாக தெரியாதிருந்த கணம் வரை எனக்கான கேலியும் கிண்டலும் என் வகுப்புத் தோழர்களிடமிருந்துதான் எனக்கு வந்தபடியிருந்த பரிசுகளும் பாராட்டும்… என் இசைத் திறமையிலும் குரல் நயத்திலும் நம்பிக்கை வைத்திருந்த ஒரே ஒருவன் ஹாரிஸ் சித்தரஞ்சன்தாஸ்தான். நான் அழைக்கப்பட்டேன். ராமசேஷய்யர், வைத்தியநாத ஐயர் இருவரும் மேல் வகுப்புக்கு பாடம் நடத்தும் பிஏஎல்டிகள். மரியசூசை கீழ் வகுப்புகளில் பாடமெடுக்கும் ஆசிரியர் என்றாலும் பாடகர் மற்றும் பள்ளியின் இசையமைப்பாளர். இவர்கள் தம் மதிப்பெண் குறிப்பேடுகளோடு என்னை ஆவலோடு கவனித்தனர். சிறிது தண்ணீர் குடித்துவிட்டு எடுப்பிலேயே குரலெடுத்து கணீரென்று பாடவேண்டிய அப்பாடலை பாடினேன்.

“இந்த உலகினில் இருக்கும் மாந்தரில்

எழிலுடையோன் எங்கள் தமிழன் – மேலாம்

எழிலுடையோன் எங்கள் தமிழன்.

கந்த மூலமே புசிக்க நேரினும்”

கடமை தவறவே மாட்டான் – தமிழன் – எனும் அப்பாடல் நாற்பதுகளின் தமிழ் சினிமா ‘கஞ்சன்’ என்ற படத்தில் எம்.ஏம்.மாரியப்பாவின் குரலில் ஒலித்த பாடல். இந்த விவரம் ராமசேஷய்யருக்கும் மரியசூசைக்கும் மட்டுமே தெரிந்திருந்த ஒன்று. மாணவர்கள் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. பதினைந்து நிமிடங்களாயிற்று பாடி முடிக்க. இசைத்தட்டின்  அடுத்த பக்கத்தில்… “வள்ளுவன் குறள் வையகமெல்லாம் வாரி இறையடா தமிழா!” என்று தொடங்கும் மாரியப்பாவின் பாடல் இசைத்தட்டின் இருபுறமும் பதிவானதாகும். பலத்த கைதட்டல். சாமியார் பற்களைக்காட்டிச் சிரித்தபடி என்னைப் பார்த்து கையால் ஆசிர்வதித்தார்.

“நீதானய்யா! நீதான் உனக்குத் தான்? என்றான் பிரேம். சித்ரா அணைத்துக் கொண்டான். மறுநாள் வகுப்பறையில் ஆசிரியர்களும் மாணவர்களும் என்னைப் பெரிதும் பாராட்டினர், சீனியரில் மூன்றாம் முறையாக சீனிவாச டாங்கேயும் ஜூனியரில் முதல் முறையாக பத்து பேரை முந்திக்கொண்டு நானும் முதற்பரிசு பெற்றவர்களென அறிவிக்கப்பட்டோம். மரியசூசை என் கையைப் பிடித்துக் குலுக்கி விட்டு, உனக்கு புதிய திசைகள் காத்திருக்கு” என்றார்.

“நீ எங்க வீட்டுக்கு வாப்பா! ஒன்னப் பத்தி வீட்ல சொன்னேன். கூட்டிட்டு வரச் சொன்னாங்க என்றான் சாமுவேல் ஹாரிஸ் சித்தரஞ்சன் தாஸ். தன் வீட்டுக்கு முதல் முறையாக தன் வகுப்புத் தோழன் ஒருவனை சித்தரஞ்சன் வரச்சொல்லி அழைப்பது அதுவே முதல் முறை.

***

எழுதியவர்:-

கி. விட்டால் ராவ் - தமிழ் விக்கிப்பீடியா

✍🏻 விட்டல்ராவ்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *