வகுப்பறை கதைகள் 32 (Vagupparai Kathaikal):- கையெழுத்துப் பத்திரிகை - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | www.bookday.in | பள்ளி மாணவர்கள் கதை

வகுப்பறைக் கதைகள் 32:- கையெழுத்துப் பத்திரிகை – விட்டல்ராவ்

கையெழுத்துப் பத்திரிகை

வகுப்பறைக் கதைகள் – 32

– விட்டல்ராவ்

நாளையிலிருந்து நீண்ட விடுமுறை. மாணவர்கள் நிறைய பேர் விடுமுறையின்போது அயலூர்களிலும் உள்ளூர்களிலுமுள்ள தங்கள் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று கொஞ்ச நாளிருந்துவிட்டு வருவது குறித்து வகுப்பறையின் அவ்வாண்டுக்கான கடைசி நாளன்று பெருமையடித்துக் கொண்டிருந்தனர். பிரேம்குமார் கேரளாவுக்குப் போய் பத்து நாளிருந்துவிட்டு வரப்போவதை சொல்லிக் கொண்டிருந்தான். சந்துரு மைசூருக்குப் போவதாய் சொன்னான். உறவினர் வீடு – வெளியூர் பயணம் என்று சொல்லிக்கொண்டு போய் தங்கிவிட்டு வரும் விதமாக எனக்கு நாதியெதுவும் இல்லாததால் சொல்லிக்கொள்ள வாயே இல்லை. ஆனால் சினேகிதர்கள் சும்மாயில்லாமல் கிளறிக் கொண்டேயிருந்தார்கள். ‘நீ எங்கயும் போலயாப்பா?” “ஊஹூம்”

“யாருமில்லையா?”

“ஆமா”

“நானும் அப்பிடித்தான். எங்க வீட்டுக்கு வா. எதாச்சி பேசிக்கிட்டே இருக்கலாம்; என்றான் பூஞ்சோலை.

“யோவ்! எங்க வீட்டுக்குப் போலாம் வாய்யா! கதை பேசிக்கிட்டேயிருக்கலாம்”, என்றான் கோபால்.

ஜெயராமன் வேறொரு யோசனையிலிருந்தான்.

“என்னப்பா ஓல்டு, ரொம்பவே யோசனை?” என்று பாச்சா கேட்கவும் நான் கண்டிப்புடன் கூறினேன், “தோ பாருப்பா இனிமே நாம்ப யாருமே யாரையும் பட்டப்பெயர் வச்சி கூப்புடறதையெல்லாம் வுட்றணும். தெரிஞ்சதா, அவங்கவங்க அப்பா, அம்மா அழகா வச்ச பேரைத்தான் எல்லாரும் சொல்லிக் கூப்புடணும். அப்படின்னா என்னோட ஃபிரெண்டாயிருங்க. இல்லாட்டி நா தனியா போயிடறேன்.”

அதிர்ச்சியுற்று மெளனமாயும் வாயைப் பிளந்தபடியும் என்னையே பார்த்தார்கள். ஜெயராமன் நல்ல பையன். தன் வீட்டுக்கு வந்து போகும்படி வேண்டினான். வீடு தெரியும்.

இந்த சமயம் அப்பாவுக்கு ஓரிடத்தில் வேலை கிடைத்திருந்தது. சேலம் பாங்கு கட்டிடத்தின் மாடியில் ஒரு லாரி புக்கிங் அலுவலகம். அதில் அப்பாவுக்கு குமாஸ்தா வேலை போட்டுக் கொடுத்திருந்தார்கள். சம்பளம் – பரவாயில்லை.

பிரேம் ஒரு வாரம் கழித்துத் திரும்பிவிட்டான். கிரிக்கெட் குழு ஒன்றைத் தொடங்கலாமென்று பிரேம் யோசனை கொடுத்தான். ராமசாமி பிரேமின் வீட்டுக்கு அருகில்தான் வசிப்பவன். அவனும் அவன் தம்பி கஸ்தூரியும் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டினர். ராமசாமி பந்துவீச்சில் நிபுணன். அதுவும் வேகப் பந்துவீச்சு. பி.டி, மாஸ்டர் ஜோசப் சாரின் கண்டு பிடிப்பு அவன்.

“அடெ, காட்டுக் கழுதை, ராமசாமி, இவ்விடெ வாட, இப்பிடி பந்து புடி என்று செல்லமாய்த் திட்டித் திட்டியே ஜோசப் சார் அவனை சிறந்த வேகப் பந்துவீச்சாளானாக தயாரித்து வந்தார். கிரிக்கெட்டில் நான் கை நாட்டு. ஆனால் நண்பர்கள் எனக்கு அரிச்சுவடியிலிருந்தே திண்ணைப் பள்ளிக்கூட கிரிக்கெட்டாக கற்றுத்தந்து விடப் போவதாக சபதமெடுத்தனர். பிரேமின் அண்ணன் தேவன் விளையாட்டுத்தனமும் சிறுபிள்ளைத்தனமுமானவர். எங்கள் பேச்சிலும் யோசனைகளிலும் தன்னையும் சேர்த்துக் கொள்ளுவார். அவர்களிருந்த பகுதி சென்னகிருஷ்ணபுரம். சென்னகிருஷ்ணபுரம் ஜூனியர்ஸ் என்ற கிரிக்கெட் குழுவை பெயரிட்டவர் தேவன்தான். நாங்கள் அவரை மரியாதை அன்போடு தேவண்ணே தேவண்ணே என்றழைப்போம்.

கிரிக்கெட் குழுவிற்கு தலைவனாக பிரேம்குமாரையும் செயலாளனாக ராமசாமியையும் தேர்ந்தெடுத்தோம். அப்பகுதியில் சற்று வயதில் மூத்தவனும் காசு புழக்கமுள்ளவனுமான ஹேட்டமணி என்பவனை பொருளாளனாக்கினோம். ஹேட்டமணி முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிப்பவன். அவனப்பா முத்துக் கவுண்டர் பொம்மிடி – கடத்தூர் பகுதியில் ஏராளமான விவசாய நிலங்களுக்கு சொந்தக்காரர். குழுவில் நான் ஒருவன்தான் அசலூரான். அதாவது சென்னகிருஷ்ணபுரத்தைச் சாராது கிச்சிப்பாளையத்திலிருந்து வருகை தருபவன்,

விளையாட்டை அடுத்து வேறொரு விஷயத்துக்கு நான் யோசனை கொடுத்தேன். இந்தப் பேச்சிலும் பிரேமின் அண்ணன் தேவனை இணைத்துக்கொண்டோம். அவர் மௌனமாக கவனித்தார். மேட்டூர், அரூரில் பத்திரிகைகள் ஏராளமாய் வாசித்திருக்கும் அனுபவம் ஒருமாதிரி தினவெடுத்தபடியே இருந்தது. என்ன செய்யலாம்- – என்ற தினவு அது. அனைவரையும் பார்த்து கேட்டேன்.

“கையெழுத்துப் பத்திரிகை ஆரம்பிக்கலாமா?”

“என்னது அது?” எல்லோரும் கேட்டார்கள்.

“நாம்ப எல்லாருமா சேர்ந்து கையாலேயே எழுதிக் கொண்டுவர்ற பத்திரிகை” என்றேன்.

“வெரிகுட். வெரிகுட். செய்யிங்க, என்றார் தேவண்ணன் அவரே ஒரு கேள்வியும் கேட்டார்,

“யார் படிக்கிற மாதிரியான பத்திரிகை?”

“நாம்ப படிக்கிறமாதிரி தேவண்ணே!”

“அதாவது, ஒங்க மாதிரி பசங்க படிக்கிற மாதிரியா, இல்லே எங்கமாதிரி பெரியவங்களும் படிக்கிற மாதிரியா?”

“எப்படினு சொல்லத் தெரியில்லயே தேவண்ணே!”

“அம்புலிமாமா, கண்ணன், கல்கண்டு மாதிரியா, இல்லே, குமுதம், ஆனந்தவிகடன் மாதிரியா? தேவண்ணன் எங்கள் வாசிப்பு அறிவைத் தூண்டிப் பார்த்துக் கேட்கிறார் என்பது புரிந்தது. எப்படி என்று சொல்லத்தெரியவில்லை. தன் தம்பி பிரேமைப் பார்த்து முதலில் கேட்டார் தேவன். அவனை வீட்டில் கண்ணன் என்றுதான் அழைப்பார்கள்.

“டேய் கண்ணா! நீ சொல்லுடா, பத்திரிகைனா, நீ எப்புடி பாக்கறே? நீ என்னென்ன பத்திரிகைய பாத்துருக்கே, படிச்சிருக்கே, சொல்லு பாப்போம்.”

பிரேம்குமார் தன் அண்ணனையே ஓரிரு நிமிடங்களுக்குப் பார்த்துவிட்டு மெல்ல சிரித்தான். வீட்டில் எல்லாருக்குமே தெரியும். பிரேமையடுத்து இருக்கும் இரண்டு தம்பிகளையும் சேர்த்து முன்று பேருக்குமாய் அவர்களுக்கென்று சிறுவர் மற்றும் இரண்டுங்கெட்டான் வயதுக்கான பத்திரிகைகள் என்று எதையும் வீட்டில் பார்த்ததில்லை, படித்ததில்லை. ஒருவேளை வாசக சாலை, நூல் நிலையங்களில் வரவழைக்கக்கூடும். அப்படி கூட எந்த வாசகசாலையும் இந்த சென்னகிருஷ்ணபுரம், ராஜாஜி சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலையென்ற அருகருகே அறிந்தமட்டிலுமான பகுதியில் பார்த்ததேயில்லை, கேள்விப்பட்டதுமில்லை. ஆனால் வீட்டில்தான் படிப்பதற்தென அவனப்பா இந்து ஆங்கில நாளிதழையும் ஆனந்த விகடனையும், அக்காவும் தேவனும் தாங்கள் படிப்பதற்கென குமுதத்தையும் பேப்பர்காரனை போடச்சொல்யிருக்கிறார்கள். பிரேம் குமுதம், ஆனந்தவிகடனை அவை காலையில் வந்து விழுந்தவுடனே முதல் நபராகவும் முதல் வாசகனாயும் எடுத்துப் பிரித்து முதல் ஓட்டமாய் நகைச்சுவைத் துணுக்குகளையும் கதைகளையும் படித்துவிடுவான், தொடர்கதையையும் படிப்பவனே என்றாலும் அதைப் பிறகு மெதுவாகப் பார்த்துக் கொள்ளுவான். குமுதத்தின் சினிமா சங்கதிகள் அவனது வீட்டில் எல்லாருக்குமே வெல்லம் என்பதோடு முக்கியமான பகுதியாகும். எனவே தன் எண்ணத்தை வெளியிட்டான் பிரேம்.

“குமுதம் மாதிரியிருக்கணும்.” என்றான்.

கிச்சிப்பாளையத்தில் பாரத் திரையரங்கம் அருகில் முனிசிபல் பொது வாசக சாலையிருக்கிறது. உட்கார இடம் கிடைக்காது. தமிழ், ஆங்கில செய்தித்தாள்களோடு வாராந்தரிகளும் மாதாந்தரிகளும் இருக்கும். ஆனால் படிக்கவே கிடைக்காது. கொஞ்ச நாட்களாக சின்னப்பையன்களை வாசகசாலையில் அதன் காவலர் அனுமதிப்பதில்லை. காரணம் சமீபகாலமாய் வார, மாதப் பத்திரிகைகள் காணமற் போகின்றன என்றும், சிறுவர்கள் பேரில்தான் சந்தேகம் என்றும் அறியவந்தது. எப்படியும் என்னொருவனைப் பொறுத்தளவு பல்வேறு பத்திரிகைகளை வாசித்தறியும் வாய்ப்புகள் அதிகம் பெற்றவன் என்ற விதத்தில் நான் என் அபிப்பிராயத்தைச் சொன்னேன்.

“கண்ணன் பத்திரிகை போல ஆரம்பிச்சி அப்புறம் ஆனந்தவிகடன் போல மாத்திக்கலாமா?” என்றேன்.

“பாக்கலாம் செய்யிங்க” என்றார் தேவன்.

“வானவில்னு பேர் வைக்கலாம்” என்றான் பிரேம். நன்றாயில்லை என்றான் ராம்சாமி.

“சுடர்” என்றேன் நான். அதை எல்லோரும். ஏற்றுக்கொண்டு சுடர் என்ற கையெழுத்துப் பத்திரிக்கையைத் தயாரிக்கும் விதம் குறித்து பிரேம், ராமசாமி, ஹேட்டமணி, மாங்கா கிருஷ்ணன், ஜெயராமன் ஆகியோர் அடங்கிய சிறியகுழு மூன்று நாட்களாய் மண்டையைக் குடைந்து கொண்டது.

“என்னடா ஒரே குழப்பமா தெரியறீங்க, என்னாச்சு?”, என்று கேட்டார் பிரேமின் அண்ணன் தேவன்.

“ஒரே வேலைக்கு நாந்தான், நீதான்னு எல்லாருமா கேக்கறாங்க தேவண்ணே!”

“நா சொல்ற மாதிரி செய்றீங்களா?”

“சொல்லுங்கண்ணே!”

“ஹேட்டமணிய எடிட்டரா போட்டுக்கங்க. மத்தவங்க எல்லாரும் கதை, கட்டுரை, ஜோக்கெல்லாம் எழுதுங்க. படம் போடறது யாரு?” என்றார் தேவன்.

இப்போது மாணவர்களுக்கு தெம்பும் உற்சாகமும் கிளம்பிவிட்டது. ஆனால் ஆளாளுக்கு பத்திரிகையின் பக்கங்களை இட்டு நிரப்புவதில் போட்டி போட்டார்கள்.

“நாங்கதை எழுதறேன்”.

“நானும் கதைதான் எழுதுவேன்.”

“நா பேய், பிசாசு மாயாஜாலக் கதை எழுதுவேன்.”

“நா கத்திச் சண்டைக் கதை எழுதலாம்னு இருக்கேன்?”

“துப்பறியும் கதை எழுதலாம்தானே?”

தேவன் எல்லோரையும் பேசாமலிருக்கச் சொல்லிவிட்டுதான் பேசவாரம்பித்தார். அண்ணனின் பெருமைச் சூட்டில் பிரேமும் தன் காலரைத் தூக்கிவிட்டு குளிர்காய்ந்தான்.

“நீங்க யாருமே இதுவரை பாத்திருக்கிற சினிமா கதையைக்கூட ஒழுங்கா சொல்லத் தெரியாதவங்க. கதை எழுதினா எப்பிடியிருக்கும்?” என்றான் ஹேட்டன்.

“எழுதறோம், படிச்சிட்டு சொல்லு.”

“நா பாட்டு எழுதறேன்.”

“பாட்டுனு சொல்லாதே, கவிதைனு சொல்லணும்” என்றான் ஹேட்டமணி.

“அப்படின்னா, செய்யுளா?” என்று கேட்டான் பாட்டு எழுதுவதாகச் சொன்னவன்.

“பொயட்ரி, போயம்பா! என்றான் பிரேம். வயதில் பெரியவன் என்பதாலும், பத்தாம் வகுப்பில் படிப்பவன் என்பதாலும், கையெழுத்துப் பத்திரிகையின் ஆசிரியர் என்பதாலும் ஹேட்டமணி சொல்லுவது எதையும் உடனே மறுப்பதென்பதோ, எதிர்ப்பதோ முடியாதவர்களாய் மற்றவர்கள் இருந்தனர்.

“இவந்தான் படமெல்லாம் போடுவான். இவனுக்கு டிராயிங்கெல்லாம் நல்லா வருது” என்று என்னைக் காட்டினான் ஜெயராமன்.

கையெழுத்துப் பத்திரிகை சூடுபிடித்தது. ஜெயராமன் உடனே ஆண்டி, மடம் கட்டின வழியில் சொன்னான்.

“பத்திரிகைனா, அதுக்கு தீபாவளி மலர் ஒண்ணு தயாரிக்கணும்.”

“பொங்கல் மலர் வச்சிக்கலாம்” என்றான் மாங்கா கிருஷ்ணன்.

“கையெயெழுத்துப் பத்திரிகையே தயாராகல்லே, அதுக்குள்ள தீபாவளிமலர், பொங்கல் மலர்னு போயிட்டீங்க…” என்றான் ஹேட்டன்.

“அதிருக்கட்டும், கிரிக்கெட் கிளப்புக்கு வருவோம். பேட், பந்து, ஸ்டம்பெல்லாம், வாங்கியாகணும், ஆளுக்கு எவ்வளோ போடலாம்?” என்று கேட்டான் ராமசாமி.

“அஞ்சிரூபா” என்றான் பிரேம்.

“எங்க வீட்ல அவ்வளவு தரமாட்டாங்க. மூணு ரூபா வச்சிக்கலாம்.” என்றான் ராமசாமி.

எனக்கு பகீரென்றது. “பணம் போடணுமாப்பா?” என்று மிகவும் தயக்கத்தோடு கேட்டேன்.

பின்னே, மட்டை பந்து ஸ்டம்பெல்லாம் வாங்க வேணாமா?” என்றான் ஹேட்டமணி.

“நான் மெதுவாக நழுவி பின்னால் போய் நின்று கொண்டேன். ஜெயராமன் அதைக் கவனித்து விட்டான். அவன் பிரேமுக்கு சைகை காட்டினான்.

“என்னப்பா, என்னாச்சி, எதுக்கு ஒதுங்கறே?” என்று என்னைக் கேட்டான் பிரேம்.

“நா கிரிக்கெட்டுக்கெல்லாம் வர்லேப்பா,” என்றேன்.

“என்னாச்சி?”

“ஒன்னுமாகல்லே, வேணாம்னுதான்.”

“இல்லே, எதோ இருக்கு. சொல்லுப்பா!”

“வேணாம்பா, நா வர்ல”

“அவன் வர்லேனா, நானும் போறேன், நானும் வர்லே ” என்றான் ஜெயராமன்: பிரேம் என்னை மெதுவாக அழைத்துக்கொண்டு தனியே போனபின் தன்னிடம் கூறுமாறு குசுகுசுவென கேட்டான். நான் என் குடும்ப நிலவரத்தை எடுத்துச் சொல்லி இதற்கெல்லாம் பணம் தரும் நிலையில் இல்லையென்பதைக் கூறினேன். பிரேம் இதை ஹேட்டமணியிடம் காதோடு வாய் வைத்துச் சொன்னான். ஹேட்டன் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு, “நான் போட்டுக்கறேன். அவனுக்கு நானே போட்டுக்கறேன்” என்றான். கேள்வியுற்ற நான் மணியிடம் வேண்டாமென்று மறுத்தபோது, “மூடிட்டிரு, இல்லேனா டீமையே கலைச்சிடணும்” என்றான் கோபமாக. நல்ல நட்பையும் நல்ல நண்பர்களையும் இழந்து விட மனமொப்பாததால் சரியென்று உடன்பட்டேன். ஹேட்டமணி எனக்கான கிரிகெட் குழு உறுப்பினர் காசை, தானே ஏற்றுக்கொண்டு என்னை குழுவில் சேர்த்தான்.

மத்தியானத்துக்கு மேல் சென்னகிருஷ்ணபுரத்துக்குப் போய் விட்டால் இரவு எட்டு மணிக்குத்தான் கிச்சிப்பாளையத்துக்கு திரும்புவதென்றானேன். மாலை நான்கு மணிக்கெல்லாம் பிரேம் பயிற்சியை விட்டு விட்டு வீட்டுக்குப் போய் விட்டு அரை மணிநேரம் கழித்து திரும்புவான். நான் கேட்காமல் அவனே சொல்லிக்கொள்ளுவான்,

“டிபன், காபி முடிச்சிட்டு வந்தேன்.”

“ஒரு நாள் போனதும் விரைவிலேயே திரும்பியவன் முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு, வெறும் காபி குடிச்சிட்டு வந்திட்டேன், ரவை உப்புமா பண்ணியிருந்தாங்க. எனக்கு உப்புமாவக் கண்டா புடிக்காதுப்பா” என்றான். நான் சிரித்துவைத்தேன்.

வகுப்பறை கதைகள் 32 (Vagupparai Kathaikal):- கையெழுத்துப் பத்திரிகை - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | www.bookday.in | பள்ளி மாணவர்கள் கதை

அன்றைவரைக்கும் கூட எங்கள் வீட்டில் எதாவது ஒரு வேளைச் சாப்பாட்டை ரவை உப்புமாவைக் கொண்டே முடித்துக்கொள்ளுகிறோம் என்பதை என்னோடு ரகசியமாய் பொத்தி வைத்தேன். ஒரு நாள் ராமசாமி என்னை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். பிரேமின் வீட்டிலிருந்து இருநூறடி தூரத்திலிருந்தது அவன் வீடு. பாட்டு வாத்தியார் டியூஷன் போலிருந்தது. ஒரு அறைக்குள்ளிருந்து கர்னாடக இசைப் பயிற்சி நடப்பது கேட்டது. அவனை அவன் அம்மா, “ராமு” என்றழைத்தார், நானும் அவ்விதமே அழைத்தேன். அவனம்மா சிறு தட்டில் பஜ்ஜியும் சூடான காபியும் கொண்டு வந்து எனக்கு கொடுத்து எடுத்துக்கொள்ளச் சொன்னார். அந்தக்கணம் எனக்கு புதியது. டிபனும் காபியும் அன்போடு தரும் தருணம். பிரேமின் வீடு போல பளிச்சென்று அசத்தாவிடினும் ஒரு தாராள மனம் வீடு முழுக்க தெரிந்தது.

ஒருநாள் அப்பா விசாரித்தார். விவரமாய் கூறினேன். உள்ளூர் கிரிக்கெட் கிளப் ஒன்றில் கொஞ்சம் ஆடி பழையதானவற்றை மிகக் குறைந்த விலைக்கு கிடைக்கும் என்று கூறி ஹேட்ட மணியையும் ராமசாமியையும் அழைத்துச் சென்று வாங்கித் தந்தான் பாலன். இந்த சமயம் ஒரு சிக்கலும் ஏற்பட்டது. ஆட்ட மைதானம் பற்றியது. பள்ளிக்கூட மைதானத்தில் விடுமுறை நாட்களில் கிரிக்கெட் பயிற்சிக்காக விளையாட அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் சென்னகிருஷ்ணபுரத்தின் வயல்வெளியையே பயன்படுத்திக்கொள்ளலாமென்று யோசிக்கப்பட்டது, வயல்வெளி என்பது பயிர் வைத்து அறுவடை முடிந்து ஒரு சில காரணங்களால் நீண்டகாலமாய் தரிசாகக் கிடந்து மக்கள் நடமாட்ட அதிகரிப்பால் புல்வெளியும் மைதானமுமாய் நின்றிருக்கும் ஒன்று. அதைச் சுற்றி அங்கங்கே பெரிய பெரிய மாடி வீடுகள். கிரிக்கெட் விளையாடுவதற்கு அந்த வீடுகளிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பு, ஆடும் பந்தால் வந்தது.

ஜூனியர்ஸ் கிரிக்கெட் குழுவின் தலைவன் ஹேட்டன் மணியுடன் பிரேம், ராமசாமி ஆகியோர் சென்னகிருஷ்ணபுரத்து வீடுகளுக்குச் சென்று ஒரு நோட்டுப் புத்தகத்தில் வீட்டுக்காரர் பெயர், வீட்டு கதவிலக்கம் எழுதி நிதியுதவி கேட்டிருக்கின்றனர், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாயென்று அளித்து விட்டு தங்கள் பெயர் விவரம் தவறாது குறிக்கப்பட்டுள்ளதாவென்று பார்க்கின்றனர்.

பிறகே நம்பிக்கையோடு புன்சிரிப்பொன்றை காட்டுகின்றனர். அத்தோடு அவர்கள் கேட்ட இரு முக்கிய கேள்விகளால்தான் விளையாடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

“எங்கடா வெளையாடப் போறீங்க?”

“தோ, அந்த வயல்ல…”

“அது மைதானமேயில்லையே…”

“அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு ஆடலாம்னு,”

“என்ன பால்?”

“மாமூல் கிரிக்கெட் ரெட்கலர் பால்தான்”

“இங்கே ஆடாதீங்க, வெளியில் எங்காச்சி போய் ஆடறதுதானேடா!”

“ரோட்ல ஆட முடியாதே. ஸ்கூல் கிரவுண்ட ஆடறதுக்கு சாமியார் ஒத்துக்கலே, மாமா!”

“சுத்தி வீடுங்களாச்சே. அந்த பால் வச்சி ஆடக் கூடாது. எல்லாம் கண்ணாடி ஜன்னல். புரிஞ்சதா? அத வச்சி ஆடாதீங்க.”

ஒவ்வொரு வீட்டிலிருந்தும் கிரிக்கெட் ஆடும் இடத்துக்கும் பிறகு கிரிகெட் பந்துக்கும் எதிர்ப்பு கிளம்பி விளையாடவே கூடாதென கூறி நிதியுதவி தரவும் மறுத்தனர். தேவன் அதற்கொரு மாற்று யோசனை தந்தார்.

“கவர் பால் வச்சி ஆடுங்கப்பா! கிரிக்கெட் ஹார்டு பால் வேணாம்.. பழைய டென்னிஸ் பந்துங்கள் எங்க ஆபீஸ் கிளப்லயிருந்து வாங்கித் தர்ரேன். அதை வச்சியாடுங்க, பட்டாகூட கண்ணாடி ஒடையாது. கேட்டா டென்னிஸ் கவர் பால்னு சொல்லணும், என்றார் தேவன். அந்த யுக்தி பலனளித்தது. தேவன் தமக்குத் தெரிந்த கிளப்பிலிருந்து பழைய டென்னிஸ் பந்துகள் ஐந்தாறை இலவசமாகவே வாங்கிக் கொடுத்தார். ஜூனியர்ஸ் கிரிக்கெட் குழு உயிர் பிழைத்து இரண்டொரு நாட்களில் விளையாட்டுப் பயிற்சியை துவக்கத் தயாரானது.

“ஏம்பா, கையெழுத்துப் பத்திரிகையெல்லாம் எவ்வளவு தூரத்திலேருக்கு?” என்று கேட்டார் தேவன். கோடை விடுமுறை முடியுந்தருவாயில் இருந்தது. பத்திரிகை இரண்டொரு நாளில் முடிந்து விடும் என்றான் ஹேட்டமணி. கோடு போடாத எண்பது பக்க நோட்டுப் புத்தகம் ஒன்றை எடுத்து தேவனிடம் நீட்டினான் மணி. துணுக்குகள், சின்னஞ்சிறு சினிமா துக்கடாக்கள், ஓரிரு பக்க கதைகள், கேலிச் சித்திரங்கள், பொங்கல் விழா வாழ்த்து வகையான வண்ணச் சித்திரங்கள், பள்ளிக்கூட வகுப்பறைக்காட்சிகள், விளையாட்டு மைதான நிகழ்வுகள் என்று அறுபது பக்கங்களை நிரப்பியிருந்தது சுடர் எனும் கையெழுத்துப் பத்திரிகை. நிறையவே கதைகள் நிறைய பேரால் எழுதப்பட்டிருந்தன. ஜெயராமன் மூன்று கதைகளை எழுதியிருந்தான். என் பங்கிற்கு இரு கதைகளும் சில வண்ணப்படங்களுமிருந்தன. எல்லோருமே எதெதோ புனைபெயர்களில் எழுதியிருந்தார்கள், தேவன் புனைபெயர்களின் நிஜப்பெயர்களைக் கேட்டு கேட்டு அறிந்தபடி சிரித்துக் கொண்டேயிருந்தார், கடைசியாகக் கூறினார் தேவன்.

“பசங்களா, நீங்கெல்லாம் தவறாம நா சொல்ற ஒரு வேலைய செய்யணும். அப்பத்தான் ஒங்க அடுத்த சுடர் கையெழுத்துப் பத்திரிகை இன்னும் நல்ல விதமா இருக்கும். இதுவும் பரவாயில்லே. நல்ல முயற்சிதான். இன்னும் சிறப்பா அமைய நீங்க எல்லாரும் ஒரு வேலை செஞ்சாகணும்… தவறாம செய்யணும்.”

“என்னது தேவண்ணே, சொல்லுங்க,” என்று எல்வோரும் ஆர்வத்தோடு கேட்கவும் அவர் சற்று தாமதித்துவிட்டு கேட்டார்,

“எத்தனை பேர் ஜில்லா பொது லைப்ரரிய பார்த்திருக்கீங்க?” “லைப்ரரியா? ஐயோ இல்லையே”

“நம்ம முனிசபல் காலேஜ் தெரியும்தானே?”

“ஆமாண்ணே, தெரியுமே.”

“அதுக்கு நேரா ராஜா கவுண்டர் மாந்தோப்புக்கு போற பாதை தெரியும் தானே?”

“ஆமாமா, தோப்பு வழியா வந்து, ஓடையத்தாண்டினா நம்ப சென்னகிருஷ்ணபுரம்.”

“வெரிகுட், அந்தப் பாதையில கொஞ்சதூரம் போனதும் ஜில்லா லைப்ரரியிருக்கு. நம்மூர் பெரிய பொது நூல் நிலையம். அங்கே எப்பவாவது போயிருக்கீங்களா யாராச்சும்?”

இதுவரை தெரியாத இடமாயிருக்கும் கேள்விப்பட்டிராத இடமான அங்கு இதுவரை யாருமே போனதில்லை என்ற உண்மையைக் கூறின போது தேவன் மிகவும் வருத்தத்தோடு எல்லோருக்கும் கட்டளையிட்டார்.

“அங்கே போகணும். எல்லாரும் அங்கே போய் பாருங்க. பெரிய லைப்ரரி அது.” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஜெயராமன் குறுக்கிட்டு பேசினான். ஸ்கூல் லைப்ரரியும் ஒண்ணிருக்கு. தமிழ், இங்கிலீஷ் புஸ்தகமெல்லாமுண்டு, வாரத்தில ஒரு பீரியட் லைப்ரரி பீரியட்னு இருக்கு.”

“அது வேறேப்பா. இது பெரிய பப்ளிக் லைப்ரரி. இதில சில்ட்ரன் செக்ஷஷனிருக்கு, சின்னப் பசங்க படிக்கிற மாதிரி தமிழ்லயும் இங்கிலீஷ்லயும் நிறைய புஸ்தகங்களும் பத்திரிகைகளும் இருக்கு. ரெண்டு ரூபாயோ என்னவோ கட்டி மெம்பரானா, புஸ்தம் வீட்டுக்கே கொண்டு வந்து பதினஞ்சு நாள் வெச்சிருத்து படிச்சிட்டு திருப்பித்தந்து வேறே, புத்தகம் கொண்டு வரலாம். அங்கேயே உக்காந்து நாளெல்லாம் படிக்கலாம். நுழையும்போதே வருகைப் புஸ்தகத்தில கையெழுத்து போட்டிட்டு போய் படிக்கணும். போங்க, நிறைய படிங்க. அதுக்கப்புறம் ஒங்க கையெழுத்துப் பத்திரிகை சுடர் எப்படி வருதுனு பாக்கலாம்.” என்றார் தேவன்.

எல்லோகும் மகிழ்ச்சியோடு அவரது யோசனையை ஏற்றுக்கொண்டு அடுத்த நாளே மாவட்ட நூலகத்திற்கு புறப்படப் போவதாய் கூறியபோது தேவன் இன்னொன்றையும் கூறினார்.

“நாளைக்கு வெள்ளிக்கிழமை. லைப்ரரிக்கு வார விடுமுறை நாள். மூடியிருக்கும் . நாள கழிச்சி மறுநாள் போங்க” என்றார்.

***

எழுதியவர்:-

கி. விட்டால் ராவ் - தமிழ் விக்கிப்பீடியா

✍🏻 விட்டல்ராவ்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *