வகுப்பறை கதைகள் 33 (Vagupparai Kathaikal):- கரஞ்சி கோப்பையும் நாடகமும் - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | www.bookday.in | பள்ளி மாணவர்கள் கதை

வகுப்பறைக் கதைகள் 33:- கரஞ்சி கோப்பையும் நாடகமும் – விட்டல்ராவ்

கரஞ்சி கோப்பையும் நாடகமும்

வகுப்பறைக் கதைகள் – 33

– விட்டல்ராவ்

நான்காம் படிவம் எனும் ஒன்பதாம் வகுப்புக்கு புது தமிழய்யா  ஆறுமுகனார் என்று ஒருவர் வந்தார். வேட்டி சட்டை அங்கவஸ்திரமென்று வழக்கமான தமிழாசிரியர் போல இல்லாமல் முழுக்கைச் சட்டையை பாண்டுக்குள் விட்டு ஒயிலாக தோன்றினார்,

“இவருக்கு சீக்கிரமே தலை முன்பக்கம் மட்காட் ஆயிடும் பாரேன்…” என்றான் சித்தரஞ்சன், அப்போது தமிழய்யா கூறினார்,

“ஒங்களுக்குள்ளேயே பேசிக்கிறத வகுப்பறையில் கொறைச்சிக்கணும், எதாயிருந்தாலும் எங்கிட்டே கேட்கணும். எதாயிருந்தாYம் தயங்காம கேட்கலாம்,”

விருட்டென்று எழுந்து நின்றான் சாமுவேல் ஹாரிஸ் சித்தரஞ்சன் தாஸ்.

“நல்லது, கேளு தம்பி” என்றார் சிரித்தபடி அவர்.

“சார்னு கூப்புடலாங்களா?”

“கூப்பிடலாமேப்பா!”

“சார், ஒங்களுக்கு கல்யாணமாயிடுச்சா?”

உடனே வகுப்பறையின் ஒரு பகுதியிலிருந்து பலத்த சிரிப்பொலி எழுந்தது.

“ஏன், எதுக்கு சிரிப்பு? எதுக்கு சிரிக்கிறீங்க? சிரிக்க வேண்டிய அவசியமேயில்ல தம்பிகளா! அந்த்த் தம்பி கேட்டது சாதாரணக் கேள்விதான், எனக்கு திருமண ஏற்பாடு சீக்கிரம் நடக்க இருக்குது.” என்றார் ஆறுமுகனார். மாங்கா கிருஷ்ணனுக்கும் தேவேந்திரனுக்கும் தமிழில் மிக்க ஆர்வமிருந்தது. படிப்புக்கும், தேர்வுகளில் அதிக மதிப்பெண் வாங்குவதற்கும் இந்த ஆர்வம் உதவவேயில்லை. மாங்கா கிருஷ்ணன் தமிழில் இரண்டாவதாக வருவான். தேவேந்திரன் பாஸ் மார்க் வாங்கியே வந்திருப்பவன் என்றாலும் மொழிவெறி என்ற சொற்களை அடைமொழியாகக் கொண்டிருந்த முதல் மாணவன் என்று சாமியாரால் எச்சரிக்கப்பட்டவன் தேவேந்திரன்தான்: அவனோடு பழகுவதற்கே தயக்கமாயிருக்கும். மாங்கா கிருஷ்ணன் நல்ல மாதிரி. இருவருமே ஹாக்கியில் கெட்டிக்காரர்கள். மாங்கா கிருஷ்ணன் சென்ன கிருஷ்ணபுரத்தின் கோடியில் ராஜா கவுண்டர் மாந்தோப்பின் மாமரங்கள் ஓடையை ஒட்டியுள்ள பகுதியில் வசிப்பவன். பிரேமின் வீடு கிருஷ்ணனின் வீட்டுக்கு பக்கத்திலிருந்தது. மாங்காய்களை கல் எறிந்து அடித்து வீழ்த்துவதில் கில்லாடி, இவனது கல்லடிக்கு தப்பாது மாங்காய்கள் சிதறும். அதனாலேயே மாங்கா என்று கிருஷ்ணனுக்கு பட்டம்.

மாணவர்களை ஓடச் சொல்லிவிட்டு கூடவே ஓடிவருவார் ஜோசப் சார். கால்பந்து, கூடைப்பந்து, பேஸ் பால் பயிற்சிகளின் போது பிள்ளைகளோடு பிள்ளையாக தாமும் கூடவே ஓடிவருவார். இரு அணிகளாய் பிள்ளைகள் போட்டியில் ஆடுகையில், ஒன்று மாற்றி ஒன்றாக இரு கஅணிகளிலும் ஜோசப் சார் விளையாடுவார். அந்த சமயம் இரு அணிகளில் ஆடுபவர்களின் ஆட்டத்தில் யார் தவறு செய்தாலும், “அடெ, காட்டுக் கழுதை, இவ்விடெ வாட, எத்தினி அடி கொடுக்கும்? ஹ கழுதை, போட…” என்று அடிப்பது போல பயமுறுத்தி விட்டு, தவறை மட்டும் திருத்தி சரியாக ஆடவைத்து அனுப்புவார். சரியாக ஆடும் வரை விடமாட்டார். சரியாக கற்றுக் ண்டு ஆடும் வரை யாராயிருந்தாலும் அவருக்கு காட்டுக் கழுதைதான். இதனால் தானோ என்னவோ சாமியார் கலந்து கொண்டு விளையாடும் ஹாக்கி மற்றும் கூடைப்பந்தாட்டங்களின்போது ரெஃபரியாக இருக்கமாட்டார் ஜோசப் சார்,

காலாண்டுத் தேர்வு நெருங்கும் நேரம். அந்தச் செய்தி வகுப்பறைகளை, பள்ளிக்கூடத்தையே, சேலம் நகரத்தையே கலக்கு கலக்கி வியப்பிலாழ்த்தியது. எப்போது எப்போது என்று எல்லோரையும் எதிர்பார்ப்பில் வைத்தது.

“நம்ம ஊருக்கா வருது?”

“நம்ம ஊர்லயா நடத்தப் போறாங்க?”

“நம்ம ஸ்கூல் கிரவுண்ட்லயேதான் நடக்கப் போவுது”

“சரியான நியூஸாப்பா?”

“யாரு சொன்னது, பிரேமா இல்ல பாலனா?”

“சொன்னா வாய பொத்திக்கிவியா?”

“ம், சொல்லு”

“கிட்டு… நம்ம கிட்டு!”

“ஆ, கிட்டுவா! கிட்டுவே சொல்லியாச்சா, அப்ப ஷ்யூரா நம்ம ஸ்கூல்லதான். நம்பறேம்பா: கிட்டு சொன்னாக்கா ஹன்ரட் பர்செண்ட் சரியான நியூஸாயிருக்கும்.”

அந்தளவுக்கு கிட்டு எனும் அந்த ஐந்தாம் படிவ-பத்தாம் வகுப்பு கிரிகெட் மாவீரனின் வாய்மையும் ஆட்டத்திறனும் தோற்ற வசீகரமும் சிறுமலர் உயர்நிலா பள்ளியின் பதினோறு வகுப்புகளையும் ஈர்த்து வைத்திருந்தன. அந்தப் பள்ளி கிரிக்கெட் விளையாட்டில் நிகரற்று விளங்கியதற்கு அச்சாணிகள் மூவர். ஒருவர் டிரில் மாஸ்டர் ஜோசப் சார். அடுத்தவர் அதிவேகப் பந்து வீச்சாளன் சேகர். மூன்றாவது நிகரற்ற பாட்ஸ்மன் கிட்டு. சேகர் சகஜமாய் பழகக்கூடியவரல்லர். கிட்டு ஒண்ணாங்கிளாஸ் பையன் முதல் பள்ளியிறுதி வகுப்பு மாணவன் வரை எல்லாருக்கும் “ஹாய் சொல்லி பாய் சொல்லும்” தகைமையர். எனவே எல்லோருக்குமான ஹீரோவாக திகழ முடிந்தது. சிறுவர்கள் பழைய டென்னிஸ் பந்தை வைத்து கிரிப்கெட் தட்டிக்கொண்டிருப்பதைக் கண்டால்கூட, தானும் அவர்களோடு கலந்து மட்டை பிடித்து, அந்தப் பிஞ்சுக் கைகள் வீசும் பந்தில் அவுட் ஆகி அவர்களை மகிழ்விக்கும் நபர் கிட்டு அந்தப் கிட்டு ஒன்றைச் சொன்னால் அது நம்பத் தகுந்ததாகவேயிருக்கும்.

அப்படி என்னத்தை அவன் சொல்லிவிட்டான், அந்தளவுக்கு எது அன்றெல்லாம் அந்தப் பள்ளியின் அனைத்து வகுப்பறைகளிலும், சேலம் நகரின் மற்ற எல்லா பள்ளிக்கூடங்களிலுள்ள வகுப்பிறைகளிலும், சேலத்தின் ஏகோபித்த திகைப்பாக மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் என்ன நேரப்போவதாய் அந்தச் செய்தி?

சேலத்துக்கு ரஞ்சிக் கோப்பை கிரிகெட் டெஸ்ட் மாட்சு வருகிறது! சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே நடைபெற்று வந்த முக்கியமான கிரிக்கெட் போட்டியான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி முதன்முதலாக ஒரு சிறு நகரமான சேலத்துக்கு வருகிறது. அதுவும் சிறுமலர் உயர்நிலைப் பள்ளியின் மைதானத்தில் இடம் பெறவிருக்கிறது. நகரில் வேறெங்கும் இவ்வளவு பரந்த பெரிய விளையாட்டு மைதானம் இல்லாததால் இந்தப் பள்ளிக்கூட மைதானம் தேர்வாகியிருக்கிறது என்று பேசிக்கொண்டார்கள். மற்றொரு விசேஷம் நான்கு நாள் டெஸ்ட் மாட்சையும் எவ்வித நுழைவுக் கட்டணமுமின்றி இலவச அனுமதியில் பார்க்கலாமென்ற அறிவிப்பு. அக்கம்பக்கத்து திருச்சி, கோவை, ஈரோடு நகரங்களிலிருந்தும் ரசிகர்கள் படையெடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

மட்றாஸ் கிரிக்கெட் குழுவுக்கும் ஹைதராபாத் குழுவுக்குமிடையே ரஞ்சி கோப்பை டெஸ்ட் மாட்சு: நான்கு நாள் ஆட்டம். ஹைதராபாத் அணிக்கு புகழ்பெற்ற குலாம் மொஹம்மட் கேப்டன். மட்றாஸ் அணிக்கு புகழ் பெற்ற சி.டி. கோபிநாத் கேப்டன். இருவருமே ஆட்டத்திலிருந்து கிட்டதட்ட ஓய்வு பெறக்கூடிய நிலையிலும் வயதிலுமிருப்பவர்கள் என்று தேவன் சென்னகிருஷ்ணபுரம் ஜூனியர்ஸ் குழுவுக்கு சொல்லிக் கொண்டிருந்தார். புகழ்பெற்ற விக்கெட் கீப்பர் சித்ரகுப்தும் ஆல் ரௌண்டர் ஜெயசிம்மாவும் ஹைதராபாத் அணியிலிருந்த நட்சத்திர ஆட்டக்காரர்கள். மட்றாஸில் கிர்பால் சிங் ஆடக் கூடுமென எதிர்பார்க்கப்பட்டது. காலையில் பாலன் ஒரு நற்செய்தியோடு வந்தான்.

“பிளேயர்ஸ்கிட்டே ஆட்டோகிராஃப் வாங்க விரும்பறவக லஞ்சு டைம்லயும் சாயங்காலமும் கிட்டுகிட்டே பேர் குடுக்கலாம்,” என்றான் பாலன்.

“மட்றாஸ் பிளேயர்ஸா, ஹைதராபாத் ஆட்டக்காரங்களா?”

“ரெண்டு டீம் ஆட்டக்காரங்களோட ஆட்டோகிராஃபும்தான்”

முதலில் விளங்கவில்லையாதலால் அப்படியென்றால் என்னவென்று கேட்டேன்.

“கையெழுத்த வாங்கி வச்சிக்கிறது. அது பெரிய பெருமைப்பா?” என்றான் பிரேம்.

“வாங்கிவச்சி என்னா செய்யறது?”

“ம்? அது குட்டி போடும், வளர்க்கறது” என்று சொல்லவும் எல்லாரும் சிரிக்க, பிரேம் தொடர்ந்தான். அதற்கென்றே தயாரிக்கப்பட்டு அழகான வடிவில் சிறு புத்தகங்கள் கடைகளில் விற்கப்படுவதாயும் அதன் விலை இவ்வளவு என்றும் கூறினான்.

அன்றிரவு அப்பாவிடம் சொல்லி ஆட்டோகிராஃப் புத்தகம் வாங்கவேண்டுமென்றேன். அப்பா ரஞ்சி கோப்பை கிரிக்கெட் மாட்சின் விவரம் கேட்டறிந்த பின் சிறிது கடுகடுப்போடு, “அதுக்கெல்லாம் காசில்லே. எதாச்சி பழைய நோட்புக்லே ஆட்டோகிராஃப் வாங்கிக்கோ. இதெல்லாம் வேஸ்ட். தொப்புளுக்கு மேலே கஞ்சியிருக்கறவங்க பண்ற வேலை” என்று சொல்லிவிட்டார். அம்மா எனக்காக பரிந்து பேசி வாங்கிக் கட்டிக்கொண்டாள்.

மறு நாள் பாலனிடம் இப்படியென்று சொன்னதும் ”கவலைப்படாதேப்பா, எங்க வீட்ல ரெண்டு மூணு கெடக்குது. ஒண்ணு கொணாந்து தர்ரேன், பேரெழுதி எங்கிட்டயே குடுத்துடு. கிட்டுகிட்டே குடுக்கறேன்” என்றான். உணவு இடைவேளையில் செய்தும் விட்டான்.

ஊர் முழுக்க சுவர்களில் ரஞ்சிகோப்பை கிரிக்கெட் போட்டி விவர சுவரொட்டிகள் தோன்றியிருந்தன.

அப்பா கணக்கு எழுதிக்கொண்டிருந்த லாரி புக்கிங் கம்பெனி போலீசில் மாட்டிக்கொண்டு விட்டது. தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தும் தொழிலிலும். ஈடுபட்டிருந்ததாய் புகார் வந்ததன் பேரில் கோடவுனுக்கு சீல் வைத்து விட்டதாயும் அலுவலகமும் மூடப்பட்டு விட்டதாய் வேலை போய்விட்ட கதியில் அப்பாவும் வேலையில்லாமல் வீட்டிலிருந்தார். ராஜு நாயக்கர் இருமுறை வந்து விட்டுப் போனார். அப்பாவை எங்கோ அழைத்துப் போய்விட்டு வந்தவர் ஆறுதலாகப் பேசினார்.  ராஜு நாயக்கர் வருவாய்த்துறை பணியுயர்வுக்கான ரெவின்யூ தேர்வுகளை எழுதித் தேறி ரெவின்யூ இன்ஸ்பெக்டராக உயர்ந்திருந்தார். அதே சமயம் அப்பாவும் அதிகம் குன்றிப் போனவராகக் காணப்படவில்லை. எப்படியோ வண்டி ஓடிக்கொண்டிருந்தது.

வசந்தாக்கா இந்தித் தேர்வுகள் மத்யமா, ராஷ்டிர பாஷாவரை எழுதி பாஸ் பண்ணியிருந்தாள். ராஜூ நாய்க்கரின் திரைமறைவு உதவியோடு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்ததன்பேரில் தற்காலிக இந்தி கற்பிக்கும் ஆசிரியையாய் திருச்செங்கோட்டையடுத்த மல்லசமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வேலை கிடைத்துவிட்டது. அக்காவோடு, அப்பாவும் சென்று வீடு பிடித்து குடியமர்த்தி ஓரிரு நாட்களிருந்து விட்டு திரும்பி வந்தார், அவர் வந்து சேர்ந்த மறுநாள் ரஞ்சி கோப்பை விளையாட்டுப் போட்டி ஆரம்பமானது.

காலாண்டுத் தேர்வு முடிந்து பள்ளிக்கூடம் விடுமுறையிலிருந்தது. அனேகமாய் ஊரிலுள்ள மற்ற மூன்று பள்ளிகளும் முன்னே பின்னே என்று தம் காலாண்டுத் தேர்வுகளை முடித்து விடுமுறை விட்டு ரஞ்சி கோப்பை ஆட்டத்தைக் காண சௌகரியமாக்கியிருந்தன.

மைதானத்தைச் சுற்றி கூட்டம் குழுமியபடியே இருந்தது. பிரேம்குமாரின் அண்ணன் தேவன், அவனப்பா இருவரும் வந்திருந்தனர். தூங்குமூஞ்சி மரத்து மேடையில் அமர்ந்து ஆட்டத்தை கவனிக்கும் வகையில் அவர்கள் அமர இடம் ஒதுக்கியிருந்தோம். பெங்களுர் நெடுஞ்சாலை ஓரமாய் நிறைய பேர் நின்றவாறும் தம் சைக்கிள்களை நிறுத்திப் பிடித்தபடியும் பள்ளி மைதானத்தை கவனிக்கத் தயாராயினர். வறுத்த வேர்க்கடலை, பட்டாணியை தேவன் பை நிறைய வாங்கி வந்திருந்தார்.

பத்திரிகை நிருபர்கள், அகில இந்திய வானொலிக்காரர்கள், புகைப்பட நிபுணர்கள், பிற பிரமுகர்கள் அமர்வதற்கென போடப்பட்டிருந்த இருக்கைகளில் வேறு யாரும் அமர்ந்து விடாமலிருக்கும்படி கவனிக்க ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். பிரமுகர்களுடன் ரெவரண்ட் ஃபாதர் புஷ்ப நாதரும், பாதர் அருள் ரொஸா ரியோவும், சற்று தள்ளி ஜோசப் சாரும் முன்னதாகவே வந்து அமர்ந்துவிட்டனர். தூங்கு மூஞ்சி மரத்தடி நிழற்பரப்பும், மேடையும் நிரம்பி வழியத் தொடங்கிவிட்டபோது தூரத்தில் வரும் உருவைக் கண்டு எதிர்பாராத மகிழ்ச்சியும் அதிர்ச்சியுமாயிருந்தேன். அப்பா வந்து கொண்டிருந்தார். தான் கிரிக்கெட் போட்டி பார்க்க வருவதாய் அப்பா சொல்லவேயில்லை.

“எங்கப்பா வர்றாரு” என்று கத்திவிட்டேன்.”

“எங்கே, யாரு, என்றார் தேவன். சுட்டிக்காட்டினேன். அவரும் நெருங்கிவிட்டார். தேவன் உடனே எழுந்து அவரது அப்பாவுக்கு அருகில் என் அப்பா உட்கார இடமளித்துவிட்டு எங்களைத் தள்ளி உட்காரச் சொல்லி, தான் அமர்ந்தார், இப்போது இரு அப்பாக்களும் பேசிக்கொள்ளத் தொடங்கிவிட்டனர், அப்பாவை தம் வீட்டுக்கு வருமாறு பிரேமின் அப்பா அழைத்தார்,

ஆட்டம் மலைப்பின் நகர்வு வேகத்தில் போனது,

“டெஸ்ட் மாட்ச் அப்பிடித்தான். நாலு நாள் ஆடணுமே,” என்றார் தேவன். நான்கு நாட்களும் அப்பா வருவார்.

“மாட்ச் ட்ரால முடியும்” என்றான் பிரேம்.

“ரொம்ப தெரிஞ்சமாதிரி அல்டிகாதே. நாம்ப விண் பண்ணிடுவோம்,” என்றான் பாலன்.

“குலாம் மொஹம்மட் கூகுள் போடறாரு. கஷ்டந்தான் மெட்றாசுக்கு.” என்றார் தேவன்.

“ஜெயசிம்மா மாதிரி பாட்ஸ்மேன் நம்ம டீம்ல யார் இருக்காங்க?” என்றான் பிரேம்.

“கோபிநாத்தும் கிரிபால் சிங்குமில்லையா?” என்றான் பாலன். எல்லாருக்குமே ஜெயசிம்மாவை வைத்தே வைஹதராபாத் அணிக்கு வெற்றி கிடைக்கும் என பேசிக்கொண்டனர். கிட்டு வேக வேகமாய் வந்தவன், “இந்தாப்பா, நாலாவது நாள் ரெண்டு டீம் பிளேயேர்ஸும் டிரெஸ்ஸிங் ரூம்ல ஆட்டோகிராஃப் போடறதா சொல்லிட்டாங்க,” என்றான். தன்னோடு கூடவே வரிசையில் எல்லோரையும் வரச்சொன்னான். பாலன் எனக்கொரு அழகான சிறிய ஆட்டோகிராஃப் புத்தகத்தை கொடுத்தான். நான்காவது நாளன்று எல்லா எதிர்பார்ப்புகளும் பொய்த்துப் போயின. மட்றாஸ் அணி குறைந்த ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டது. அடுத்து பம்பாய் அணியோடு மோதிக் கொள்ளத் தயாரானது. புனித இஞ்ஞாசிரியர் கூடம் தான் இரு அணிகளுக்கான டிரெஸ்ஸிங் அறைகளாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாருக்கெல்லாம் ஆட்டோகிராஃப் தேவையென்று பெயர் தந்திருக்கிறார்களோ அவர்களை வரிசையில் வைத்து செயிண்ட் இக்னேஷியஸ் ஹாலுக்கு கிட்டு நடத்திச் சென்றான். அடுத்தடுத்து மகாஜன ஸ்கூல், லண்டன் மிஷன் ஸ்கூல், முனிசிபல் ஸ்கூல் மாணவர்களும் வரிசையில் நின்றிருந்தார்கள்.

அப்பா எங்கே என்று என்னையே நான் உரக்க கேட்டுக் கொண்டபோது, அவர் ஆட்டம் முடிந்தவுடனே போய் விட்டதாக தேவன் சொன்னார்.

அரையாண்டுத் தேர்வு முடிந்தது. அடுத்த நாள் வகுப்பறையில் ஒரே கசாமுசா. இந்தாண்டு தமிழ் நாடகத்தை நடத்தும் பொறுப்பை ஆறுமுகனார் ஏற்றிருந்தார். அதே சமயம் அவருக்கு திருமணம் ஏற்பாடாகிவிட்டிருந்தபடியால் அவரது கூடுதல் கவனம் அதிலேயே இருந்தது. ஆறுமுகனார் சக ஆசிரியர்களுக்கெல்லாம் தனித்தனியாக திருமண அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு மற்றவர்களின் பார்வைக்காக ஓர் அழைப்பிதழை நோட்டீசு போர்டில் குத்தி வைத்திருந்தார். அவர் தமிழ் வகுப்பு எடுக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று பிரிவுகளிலிருந்தும் தோட்டீசு போர்டிலுள்ள அழைப்பிதழைப் படித்துப் பார்த்துக்கொண்டனர். மாணவர்களின் பார்வை எல்லாவற்றையும் விட்டு வீட்டு மணமகள் பெயரை மட்டும் ஒருமுறைக்குப் பலமுறை பார்த்துக்கொண்டது. பிறகு வகுப்பறையில் குசுகுசுவென்ற குரலில் அந்தப் பெயரை பெஞ்சு விட்டு பெஞ்சு தாவச் செய்தனர். நோட்டீசு போர்டை கவனிக்காத மாணவர்களின் காதில் அந்தப் பெயர் பிரம்மோபதேசம் செய்யப்பட்டவுடன் இடைவேளையில் அவர்களும் ஒரு முறை பார்த்துப் படித்து வைத்துக்கொள்ள விரைந்தனர்.

மூன்றாவது பீரியட் தமிழ். ஆறுமுகனார் அன்று பாண்ட் சட்டை அணியாது வேட்டி சட்டை அங்கவஸ்திரத்தில் வந்திருந்தார். வகுப்பறைக்குள் நுழையுமுன் அடுத்த வகுப்பு வரலாற்று ஆசிரியர் இவரை நிறுத்தி திருமண விஷயமாக விசாரித்துக்கொண்டிருந்தார்.

“வணக்கம் ஐயா? என்று எல்லோரும் எழுந்து நின்று வணங்கினதும் அவரும் சிரித்தபடியே வணங்கி அமர்ந்தார். “தம்பிங்களா, நீங்கள்லாம் ஓருநாள் ஆர்வமா கேட்டீங்களே என்னோட திருமணம் பத்தி, அது அடுத்த வாரம் திருச்சியில நிச்சயமாயிருக்கு. நோட்டீசு போர்டில வச்சிருக்கேன், பாத்திங்களா? என்று கேட்டார்.

சிந்தரஞ்சன் சொல்லி வைத்திருந்தபடி மாணவர்கள் ஒரே குரலில், “சுந்தரராதா… சுந்தரராதா…” என்று சொன்னார்கள்.

இதை ஆறுமுகனார் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் முகம் சற்று கறுத்துத் தோன்ற தம் வாயில் விரலை வைத்து. “உஸ்ஸ்ஸ்” என்று செய்து அவ்வாறெல்லாம் பெயர் சொல்லி அழைக்கக்கூடாதென்றும், அது ஒருவருக்கு மட்டுமேயான அந்தரங்க உரிமைமென்றும் கூறிவைத்ததோடு மேற்கொண்டு எதையும் பேசாது ஜன்னலையே இமைக்காது பார்த்தபடி கொஞ்ச நேரத்துக்கு இருந்து விட்டு திரும்பி மாணவர்களைப் பார்த்தார். சாமுவேல் ஹாரிஸ் சித்தரஞ்சன் தாஸ் எழுந்து நின்று கைகட்டி தலை குனிந்து சொன்னான். வி ஆர் வெரி சாரி சார். வெரி வெரி சாரி சார், மன்னிச்சிடுங்கய்யா!” என்று.

ஆறுமுகனார் எழுந்து அவனிடம் வந்து தட்டிக் கொடுத்து அணைத்துக்கொண்டார், பிறகு பேசினார். தமிழ் நாடகத்தை அவ்வாண்டு நடத்திக் கொடுக்கும் பொறுப்பை தன்னிடம் விட்டிருப்பதை தெரிவித்துவிட்டு “இந்த வகுப்புல யாருக்கு தமிழ்ல நல்லா பேசவரும்?” என்று கேட்டார். எல்லோரும் என்னைக் காட்டிச் சொன்னார்கள். “இவன் நல்லா பேசுவானய்யா! போன வருஷம் பேச்சுப் போட்டியிலயும் பாட்டுப் போட்டியிலயும் முதல் பரிசு வாங்கியிருக்கான்.”

“மிக்க நல்லது. மகிழ்ச்சி. சரி, உன் பெயரை போட்டுக்கறேன்” என்றார் என்னைப் பார்த்து.

“கடமை” என்ற தமிழ் நாடகத்தின் கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு பொறுப்புகளை தமிழய்யா ஆறுமுகனார் ஏற்றிருந்தார். மறுவாரத்திலிருந்து அவரவர்க்கான வசனங்களை எழுதிக்கொள்ளச் சொன்னார். நூருதீன், நான் இருவரும் தவிர பிற வகுப்புகளிலிருந்து சிலரும் தேர்ந்தெடுக்கப்பட்டு மாலை பள்ளிக்கூடம் விட்டதும் செயிண்ட் இக்னேஷியஸ் ஹாலில் ஒருமணிநேரம் ஒத்திகையில் நிலையில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆறுமுகனார் சொல்லிவைத்தார். வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் சொன்னேன்.

“அம்மா, நா ஸ்கூல் டிராமாலே நடிக்கிறேன். எனக்கு பெரிய ரோல்.”

அப்பா உள்ளே படுத்திருந்தவர் ஒருமுறை கனைத்துக்கொண்டார்.

மறுநாள் மகிமை ஒரு சுற்றறிக்கையோடு வகுப்பறைக்குள் நுழைந்தார். வகுப்பாசிரியர் சந்திரசேகரன் அறிக்கையைப்படித்துவிட்டு, இந்த வருடம் பாட்டுப் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிக்கு பேர் குடுக்கலாம். பாட்டுப்போட்டிக்கு மரிய சூசைகிட்டே குடுங்க. பேச்சுப்போட்டிக்கும் கட்டுரைக்கும் சித்தனார்கிட்டே பேர் குடுக்கணும்,” என்றார்.

அது உயர் வகுப்புகளுக்கான போட்டி. அடுத்த மாதமே எல்லா போட்டிகளும் நடந்து முடிந்தன. பாட்டுப்போட்டியிலும் கட்டுரைப் போட்டியிலும் எனக்கு முதற் பரிசு கிடைந்து விட்டது. பேச்சுப்போட்டியில் சி-பிரிவில் ஒரு மாணவன் முதற்பரிசு பெற்றுவிட்டான். பரிசுகள் அளிக்கப்படுவதும் அதைத் தொடர்ந்து நாடகங்கள் நடைபெறுவதும் வழக்கம். முதல் நாள் ஆங்கில நாடகம். பத்து – பதினோறாம் வகுப்பு மாணவர்களையே ஆங்கில நாடகத்துக்கு எடுப்பார்கள். ஆங்கில நாடகம் நடந்த மறுநாள் தமிழ் நாடகம் நடக்கும். பரிசளிப்புகளும் நாடகங்களும் பிற எல்லா நிகழ்வுகளும் புனித இஞ்ஞாசிரியர் கூடத்தில்தான் இடம் பெறும்.

கடமை – மேடையேறியது. எல்லா நாடகங்களுக்கும் ஒப்பனை காரியத்தை இப்பள்ளியின் ஓவிய ஆசிரியர் திருஞானம்தான் செய்வார், திருஞானத்துக்கு அடர்த்தியான பரந்த பரட்டையான தலை. இம்மாதிரி சமயங்களில் பெரிய குட்டைத் துணியை மடிந்து முடியை அழுத்தி அடக்கி தலையைச் சுற்றி கட்டிக்கொள்ளுவார். ஒப்பனைக் கலையில் திருஞானம் சமர்த்தர், ஒப்பனை முடிந்தது, மணியடிக்கவும் மகிமையும், அருளப்பன் சாரும் திரையை இழுத்து விலக்க… கடமை நாடகம் தொடங்கியது.

நாடகத்தில் நான் ஒருவர் தயவில் படித்து பட்டம் பெற்று சட்டம் படிந்து வழக்கறிஞனாகி நீதிபதியுமாகிறேன். என் ஊதாரித் தந்தையோ தீய வழிகளில் போகிறவர். என் நாடகத் தந்தை திருட்டுக் குற்றத்தில் கைதாகி கூண்டில் நிற்கிறார், தந்தைப் பாசத்தை ஒதுக்கிவிட்டு திருட்டுக் குற்றதுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை தீர்ப்பளிக்க, தந்தை சிறை செல்லுவதாய் முடிகிறது நாடகம். இந்த இடத்தில் என் பார்வை தரையில் அமர்ந்துள்ள பார்வையாளர்களை நோக்கிச் சென்றது. திடுக்கிட்டேன். தரையில் உட்கார்ந்திருந்த மாணவர்கள் மத்தியில் மாணவர்களோடு மாணவராக முதல் வரிசையில் அப்பா உட்கார்ந்திருந்தார். ஒரு கணம் கலங்கிவிட்டேன், நாடகத்தில் அப்பாவுக்கு சிறைத்தண்டனை வழங்க தீர்ப்பளித்தது கூட்டத்தில் அப்பாவைக் கண்டதும் மனதைப் போட்டு குடைந்தது. அவரோ சிரித்தபடி என்னையே பார்க்கிறார். எல்லோரும் கைதட்டி ஓய்ந்த பின்னும்கூட அப்பா நிறுத்தாமல் கையைத் தட்டிக்கொண்டேயிருந்தார். தந்தையாக நடித்த நூருதீன் சிறந்த நடிப்புக்காக பரிசளிக்கப்பட்டார்.

மீண்டும் ஒப்பனையறைக்குப் போய் நின்றோம். ஞானம் சார் எங்கள் ஒப்பனையை தேங்காயெண்ணையைத் தடவித் தேய்த்து அகற்றினார். வீட்டையடைந்தபோது அப்பா எனக்கு முன்பாகவே புறப்பட்டு வந்துவிட்டிருந்தவர் அம்மாவிடம் என்னைக் காட்டி கூறினார்,

“உம் மகன் அவங்கப்பனுக்கே ஜெயில் தண்டனை குடுத்து ஜட்ஜ்மெண்ட் சொல்லிட்டான்” என்றார்.

***

எழுதியவர்:-

கி. விட்டால் ராவ் - தமிழ் விக்கிப்பீடியா

✍🏻 விட்டல்ராவ்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *