தாடி பொறுப்பேற்கிறார்
வகுப்பறைக் கதைகள் – 34
– விட்டல்ராவ்
அந்தக் கட்டிடமிருக்கும் இடம் ஏறக்குறைய சேலம் முள்ளுவாடி ரெயில்வே கேட் அருகில் அமைந்திருந்தது. ஊர் அறிந்த பெயர் அந்த உயர்ரக தங்கும் விகுதி – உணவு விடுதியின் [போர்டிங் அண்டு லாட்ஜிங்] பெயர் – இந்து மாடர்ன் கேஃப். அதைத் தாங்கிய பெயர்ப் பலகை மிகவும் எளிமையும் சிறியதுமானது. இரவில் ஒளிரும் வண்ண நியான் விளக்கு அலங்காரம் எதுவுமற்ற பெரிய உணவு விடுதி அது. ஊரில் இரண்டு பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களின் ஸ்டூடியோக்கள், மாடர்ன் தியேட்டர்ஸ் மற்றும் எம் ஏ வி பிக்சர்ஸாரின் ரத்னா ஸ்டூடியோ. இவற்றின் தயாரிப்புகளில் நடிக்க அவ்வப்போது வெளியிலிருந்து வருகை தரும் ஆண் பெண் கலைஞர்கள் இந்து மாடர்ன் கேஃப் தங்குமறைகளில் தங்கியிருந்து போவது அதிகம். பாமர சினிமா ரசிகர்கள் அவ்வழியாய்ப் போகும்போது வரும்போது இந்த விடுதியின் மாடியறைகளை அண்ணாந்து பார்த்துக்கொண்டே ஆர்வுத்தோடு அன்ன நடை போடுவது அன்றாடக் காட்சி. இவ்வோட்டலின் சிற்றுண்டி சாப்பாடு போக்குவரத்து அதிஉயர்ந்த மதிப்பெண்கள் பெற்றது என்றாலும் சாமானியர்கள் அடியெடுத்து வைக்க தாராளமாய்த் தயங்குவார்கள். அதன் உரிமையாளரின் நீண்ட பெயரை விஷயமறிந்தவர்கள் மறந்துபோய் நீண்ட நாளாகிறது. அவரை அவர்கள் சுருக்கமாக நக்கல் கலந்த பிரியத்தோடு குறிப்பிடுவதெல்லாம் “தாடி” என்ற பெயரால் மட்டுமே. அவரது நீண்ட பெயரை அவரது நீண்டு வளர்ந்த தாடி மறைத்து வைத்து தன்னையே பெயராக முன் நிறுத்தியிருந்தது. தாடி ஒரு கோடீசுவரர்.
காலை பதினோறு மணியிருக்கும். அந்த சாமானிய மனிதன் அந்தப் பெரிய ஓட்டலுக்குள் நுழைந்து சிறிது தூரம் போயிருப்பார். வாசல் கூர்கா கத்திக்கொண்டே வந்து தடுத்து நிறுத்தினார். அதே சமயம் ஒரு காரும் நிதானமாய் உள்ளே நுழைந்தது. அதிலிருந்து இறங்கிய மனிதர் ஒரு சாமானியன் நடந்துபோவதைக் கவனித்துவிட்டு, நிற்கும்படி சொன்னவர் முகத்தைப் பார்த்துவிட்டு, “அட, நீ அவனில்லே?,” என்றவர், “என்னைத் தெரியுதா?,” என்றார்.
“நா அவந்தான். உன்னையும் தெரியுது, நீ அந்த தாந்தோணிதானே, கல்லுவோட அண்ணன், நாமாளுவோட பசங்கதானே?.” என்றார் இந்த மனிதர் – அப்பா.
“அவ்வளவும் சரி, அவ்வளவும் சரி, வா” என்று கூறிய அந்த தாந்தோணி அப்பாவின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று குளிர் வசதி செய்யப்பட்டிருக்கும் பெரிய அறையொன்றைக் காட்டி, “இந்த ரூம்ல இருப்பார், பொத்தான அமுத்தினா, கதவத் திறப்பார்” என்று கூறியவர் ஒரு கணம் தாண்டினதும், “பாத்து ரொம்ப நாளாச்சு இல்லையோ, சட்டுனு அடையாளம் தெரியல்லே, சர்வீஸ்ல இருக்கயா, ரிடையர்டு ஆயிட்டயா? என்று கேட்டார்.
“ரிடையர்டாயிட்டேன்…,” என்றார் அப்பா.
“பசங்க…”
“மூணு பேர் படிக்கறாங்க…”
“என்னப்பா, ரிடையர் ஆகும்போது மூணுல ஒண்ணாச்சும் படிச்சு முடிச்சு வேலைக்கு தயாராயிருக்க வேணாமா?”
“சொல்றது சுலபம்தான்.”
“அது சரி, என்ன படிக்கறாங்க, எங்கே?”
“ஒருத்தன் விட்டில் ஃப்ளவர் ஹைஸ்கூல்…”
“இரு, அவன் எந்த கிளாஸ்?”
“ஃபிஃப்த் ஃபாரம்…”
“நம்ம சுப்பாராவ்தான் பத்தாங்கிளாசுக்கு கிளாஸ் டீச்சர், அந்த ஸ்கூல்லே…”
“எந்த சுப்பாராவ்?”
“சேந்தமங்கலம் வகையறா, சாளி மாப்பிள்ளை – சாவித்திரியாய், சாளினுதானே கூப்புடுவோம், அவளோட மாப்பிள்ளைதான் நா சொல்ற சுப்பாராவ், புரியில்லே?”
“இல்லே! சாளி கீளியெல்லாம் தெரியில்ல, தாந்தோணி”
“சரி, விடு, உள்ளே போய்ப் பாரு” என்று கூறி விட்டு தாந்தோணி என்ற அந்த தூர உறவுக்காரன் அகன்றான். அப்பா பொத்தானை அழுத்தவும் கதவு திறந்தது. இவரைப் பார்த்ததும் அந்த மனிதரின் முகம் போன போக்கு சரியில்லை என்பது மிக எளிதாக விளங்கியதற்கு ஒரு காரணம், முகஞ்சுளிப்பின் போது ஏற்படும் முகத்தின் அஷ்ட கோண நெளிவு சுளிவுகளை மூடி மறைக்கும் நீண்டு அடர்ந்த அவரது தாடி இப்போது இல்லை. எடுத்து விட்டிருந்தார். எப்போதிருந்து தாடியில்லாமல் இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனாலும் அவர் தாடியென்றே -தாடியில்லாத கோலத்திலும்கூட – அழைக்கப்படுவது நிலைத்து விடும். அவர் மனதை சுதாரித்துக்கொன்டு தாம் ஆடிக்கொண்டிருந்த இஸ்பெட் ஆட்டத்தை நிறுத்திவிட்டு வெளியில் வந்தார். மீண்டும் தன்னிடம் பணம் கேட்கத்தான் அப்பா வந்திருப்பார் என்றும் அதற்கான எச்சரிக்கையாக ஒரு வித கடுகடுப்பை முகத்தில் வரவழைத்துக்கொண்டவராய் தாடி விசாரித்தார்.
“பையனுக்கு ஃபீஸ் கட்டணும், புக்ஸ் வாங்கணும். பெரியவனுக்கும் பொண்ணுக்கும் நிதானமாகூட வாங்கிக்கலாம், கவர்ன்மெண்ட் ஸ்கூல்தான், சின்னவனுக்குத்தான் இப்பவே வாங்கணும்னு சொல்லியனுப்பிச்சிட்டாங்க, பிரைவேட் ஸ்கூல்,” என்றார் அப்பா.
தாடி ஒருகணம் இவரையே பார்த்தபடி யோசித்தார்.
“நானும் இல்லேனா, என்ன பண்ணுவே?” என்றார்.
“நீ இருக்கும்போது நா எதுக்கு அந்த மாதிரியெல்லாம் யோசிக்கணும்” என்றார் அப்பா.
“சின்னவன் எந்த ஸ்கூல்?”
“லிட்டில் ஃப்ளவர் ஹைஸ்கூல்”
“அவம்பேரென்னா, எந்த க்ளாஸ்?”
அப்பா சொன்னார்.
“சரி நாம் பாத்துக்கறேன். தோ பாரு, சின்னவனோட ஸ்கூல் செலவு சமாச்சாரம் பூராத்தையும் இனிமே நானே பாத்துக்கறேன். அவனோட ப்ராக்ரஸ் ரிப்போர்ட் கார்டு எங்கிட்டே வந்துடணும். நீ போ” என்றார் கண்டிப்பு கலந்த தொனியில்.
அப்பா சற்று தயங்கிவிட்டு, “நாளைக்கேனு…,” என்று இழுத்தபோது, தாடி அதட்டலாகக் கூறினார், “நீ போ. எல்லாம் நாம் பார்த்துக்கறேன்.”
காலையில் வகுப்பறைக்குள் நுழைந்தேன். ஐந்தாம் ஃபாரம் எனும் பத்தாம் வகுப்பு மாடிப்பகுதியிலிருந்தது. முழு ஆண்டு விடுமுறை கழிந்து ஒன்பதாவது தேறியவர்கள் இங்கு வந்து தத்தம் பார்வையில் கரும்பலகையும் ஆசிரியரின் நாற்காலியும் சரியான கோணத்தில் தெரியும் விதமாய் பார்த்து பார்த்து பெஞ்சுகளில் இடம் பிடித்து உட்கார்ந்தனர். உட்கார்ந்த கையோடு தங்களுக்கு நெருக்கமானவர்களை கூவிக் கூவியழைத்து தம் பக்கத்தில் அமர்த்திக் கொள்ளுவதில், காரியமாயிருந்தனர். மாங்கா கிருஷ்ணனும் பூஞ்சோலையும் தேர்ச்சி பெறாததால் இந்தப் பள்ளியில் “இரண்டாம் வருஷ” கழுதைகள் என பேச்சு வாங்குவதிலிருந்து விடுபட, டி.சி. வாங்கிக் கொண்டு முனிசிபல் ஹைஸ்கூலில் போய்ச் சேர்ந்து விட்டார்கள். மாங்கா கிருஷ்ணன் எனும் சிறந்த விளையாட்டு வீரன் இங்கிருந்து அங்கு போனதால் சிறுமலர் உயர்நிலைப்பள்ளியின் நஷ்டம் என்பது முனிசிபல் உயர் நிலைப்பள்ளிக்கான இலாபம் என்று பிள்ளைகள் பேசிக் கொண்டனர். கிருஷ்ணனில்லாத ஹாக்கி குழு சோபையிழந்திருந்தது.
வெள்ளைக் கால்சட்டையும் பிஸ்கட் நிற அரைக்கை புஷ்கோட்டும் நடு வகிடு எடுத்து வாரிய தலையுடன் ஆறடிக்கு உயரமும் பருமனுமாய் ஏலக்காய் கிராம்பு மெல்லும் வாயசைவோடு வகுப்புக்குள் நுழையும்போதே எல்லா மாணவர்களையும் இமைக்காமல் நோட்டம் விட்டபடியே மரமேடையதிர நாற்காலியிலமர்ந்தார் அந்த பிஏஎல்டி சுப்பாராவ். அவர்தான் வகுப்பாசிரியர் என்று பேசிக்கொண்டனர். பத்தாம் வகுப்புக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களே மறுவருடம் பதினோறாம் வகுப்புக்கும் தொடர்ந்து பாடம் எடுப்பார்கள் என்றும் பதினோறாம் வகுப்பான எஸ்.எஸ்.எல்.சிக்கு வைக்கப்படும் ஆங்கிலப் பாட நூலையே இவ்வாண்டு பத்தாம் வகுப்புக்கும் வைப்பார்கள் என்று ஒரு தகவல் தந்தான் பிரேம்.
“அது எதுக்கு அப்படி?” என்று கேட்டதற்கு, “ரெண்டு வருஷமும் ஒரே புஸ்தகத்த ஒரே பாடங்கள படிக்கிறதாலே நல்லா புரியும், நல்லா மனசில பதியும். நிறைய மார்க்ஸ் ஸ்கோர் பண்ணலாம்னுதான்” என்றான்.
சென்ற வருடமே பள்ளிக்கு என்.சி.சி. வந்துவிட்டது. பாலன், பிரேம், ராமானுஜன், ராமசாமி, சோமு என்று நிறைய பேர் அதில் சேர்ந்துவிட்டனர், ஏ.சி.சி. போல சீருடை, காலணி குல்லாயெல்லாம் அவரவர்களே வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது என்.சி.சிக்கு இல்லை. என்.சி.சி, இராணுவத்தின் ஓர் அங்கம் மாதிரி, இராணுவ அதிகாரிகளின் வழி நடத்துதலைக்கொண்டு அவர்களால் பயிற்சியும் வகுப்புகளும் எடுக்கப்பட்டு இராணுவத்தின் முக்கிய பயிற்சிகள் அனைத்தும் பயிற்றுவிக்கப்படும் ஓர் அமைப்பு என்பது தெரிய வந்தது,
சுப்பாராவ் என்.சி.சி. பயிற்சி முழுக்கவும் பெற்று முதல் நிலை அதிகாரி – ஃபர்ஸ்ட் ஆபீசர் – எனும் கௌரவ பதவியிலிருந்தவர், இவருக்கு மூத்தவராய் வைத்தியநாத ஐயரும், இளையவராய் ஸ்டானிஸ்லாசும் இருந்தனர். வகுப்பறையில் சுப்பாராவ் ஆங்கிலம் ஒன்றைத்தான் எடுப்பார். மிக அருமையான ஆங்கிலப்பாட போதகர் அவர். உட்கார்ந்த இடத்தில் இருந்தவாறே சுவரில் பதிக்கப்பட்ட பெரிய கரும்பலகையை ஓரளவுக்கு அழிக்கவும் எழுதவும் தோதாக தம் நாற்காலியை கரும்பலகைக்கு அருகாக, கைக்கு எட்டும்படியாயிருக்க போட்டுக்கொண்டிருப்பார். அவரும் சமூகப் பாடம் கற்பிக்கும் ராமசேஷ ஐயரும் ஒரே தெருவில் வசிப்பவர்களாதலால் இருவரும் சேர்ந்து குதிரை வண்டியொன்றை மாதவாடகைக்குப் பேசியமர்த்திக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு வந்துபோகும் ஒரே ஆசிரியர்கள்.
தமிழய்யா சித்தனார் தமிழ்ப்பாடத் தேர்வுகளையே குறி வைத்துத் தயாரிக்கப்பட்டு கவர்ச்சிகரமாய் விற்கப்படும். “துணைவன்கள்” பற்றியும் பரிந்துரைப்பார். மற்ற பிரிவு வகுப்புகளின் தமிழாசிரியர்கள் எல்லாரும் கோனாரய்யாவே துணையென்று, “எல்லாரும் கோனார் நோட்ஸ் வாங்கிடுங்க. அதில நிறைய பத்து வருஷத்து மாதிரி வினாத்தாள்களை சேர்த்திருப்பான். பதிலுமிருக்கும். அதையெல்லாம் எழுதிப் பார்த்தாலே போதும். நாங்களும் எழுதிப்போடுவோம், அதையும் எழுதிக்கணும்,” என்பார்கள். ஆனால் சித்தன் சற்று வித்தியாசமானவர். அவர் மூவர் நோட்ஸ் என்ற துணைவன் ஒன்றையே தம் வகுப்பு மாணவர்களுக்கு சிபாரிசு செய்வார்.
வகுப்பாசிரியர் சுப்பாராவின் பார்வை கொஞ்சம் அதிகமாகவே என்மீது வந்து வந்து போனது, திடீரென கேட்டார், “தாடி ஒனக்கு என்னா ஆகணும்?”
எதிர்பார்க்கவில்லை. மற்ற மாணவர்களும் வியப்போடு என்னையும் அவரையும் மாறி மாறிப் பார்த்தனர்.
“பெரியப்பா ஆகணும் சார்” என்றேன்.
“பெரியப்பான்னா எப்பிடி, அப்பாவுக்கு அண்ணாவா?”
“இல்லே சார். அம்மாவோட அக்கா ஹஸ்பெண்டு”
“ஓ, பெரீம்மா ஹஸ்பெண்ட் – அந்தமாதிரி பெரீப்பா”.
“ஆமா சார்.”
“கவனி, இனிமே அவர்தான் ஒனக்கு ஸ்கூல் எஜுகேஷனுக்கு கார்டியன்.”
“தெரியாதுங்க சார்,”
“ஆமா இனிமே உன்னோட ஸ்கூல் ஃபீஸ், புக்ஸ் எல்லாமே அவர்தான் வாங்கித் தருவார். ஸ்கூல் செலவு எதுவானாலும் அவர் பாத்துப்பார்,
“நா போய் கேக்கணுமா சார்?”
“நோ..நோ… எதுன்னாலும், நா போய் பேசுவேன். எம்மூலமாத்தான் அதெல்லாம், எங்கிட்ட குடுப்பார் தாடி.
பள்ளிக்கூட சம்மந்தமான செலவு பற்றிய பேச்சை வகுப்பறையில் இவ்வளவு நேரமும் நடைபெற்றபோது மாணவர்கள் சுவாரசியத்தோடு கவனித்தனர். நான் அவர்களுக்கு சுவாரசியமான விஷயமாய் போயிருக்கும். நான் பதிலளிக்கையில் என்னையே கவனிப்பதும், ஆசிரியர் கேட்கும் போது அவரையே கவனிப்பதுமாயிருந்தனர். சிலருக்கு சட்டென்று புரிந்துவிட்ட எங்கள் பேச்சு சிலருக்கு புரியாததாயிருந்தது. சுப்பாராவ் எழுந்து போனதும் அடுத்த வகுப்புக்கான ஆசிரியர் வந்து அமர்வதற்கு எடுத்துக் கொண்ட இடைவெளியில் ஜெயராமன் கேட்டான்,
“”யாருப்பா தாடி?”
“எங்க பெரியப்பாதான்.”
நாகராஜன் எழுந்து வந்து எனக்கு நெருக்கமாக நின்று கொண்டு, “எங்க சொர்ணாம்பிகை அக்ரகாரத்திலதான் ஒங்க தாடிப் பெரியப்பாவோட மகனும் குடும்பமும் இருக்கிறாங்க. அவங்களையெல்லாம் தெரியுமா?” என்று கேட்டான். “ஒருவரையும் தெரியாது” என்றேன்.
“உன்னோட பெரியம்மாவையாச்சும் தெரியுமா?”
“இதுவரை பாத்ததேயில்லே.”
“அவங்களுக்கு பைத்தியம் புடிச்சி, ஒரு ரூம்ல போட்டிருக்காங்க. ஒடம்புல துணியே இல்லாம கிடப்பாங்களாம். ராத்திரியில ஓவுனு சத்தம் வருமாம்.” என்று நாகராஜன் சொல்லிமுடிக்கவும், கணித ஆசிரியர் நாராயணன் வகுப்பில் நுழைந்தார். திவ்வியநாதன் சாரின் அண்ணன் ஜெகராஜ் விஞ்ஞானப் பாடம் எடுப்பவர். அவரும் நாராயணனும் என்.சி.சி. ஆசிரியர் பயிற்சித் தேர்வுக்கு போனபோது ஜெகராஜ் மட்டுமே வெற்றிகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தோல்வி எரிச்சல் நாராயணனிடம் மாணவர்கள் மீது பாயும்.
“ம், இங்கே என்ன கான்ஃபரன்ஸ், அவங்கவங்களோட எடத்துக்குப் போய் ஒக்காருங்க,” என்று அவர் அதட்டவும், நாகராஜன் ஓடிப் போய் தன் பெஞ்சில் அமர்ந்தான்,
பள்ளிக்கூட செலவை தாடிப் பெரியப்பா ஏற்றுக்கொண்டது அப்பாவுக்கு ஒரு பாரம் கழிந்தது. அவரது பொறுப்பு கணிசமாகக் குறைந்திருந்தது. அன்று மாலை பள்ளி என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மைதானத்தில் நடந்து கொண்டிருந்தது. இப்போது குதிரை வண்டியொன்று பள்ளி வாசலுக்குள் நுழைந்து வந்தது. அதில் எவர்சில்வர் பாத்திரங்களும் இலைகளால் மூடிய பெரிய கூடையுடனும் இருவர் அமர்ந்திருந்தனர் என்.சி.சி.யில் சேராதவர்கள் அதைப் பாராமுகமாய் போய்க் கொண்டிருந்தனர். அப்போது பாலன் என்.சி.சி. சீருடையில் அவசர அவசரமாக சைக்கிளில் வந்தான். மாலை நேரத்தில் என்.சி.சி. பரேடுகள் இருக்காதென்றும், காலையிலோடு சரியென்றும், இன்று எதோ விசேஷ கொண்டாட்டத்தை முன்னிட்டு நடக்கப் போகும் விசேஷ அணிவகுப்புக்கான ஒத்திகை என்றும் கோபால் சொன்னான்.
“குதிரை வண்டியில என்ன போகுது?” என்று கேட்டதற்கு கோபால் சொன்னான், “என்.சி.சிக்கு டிஃபன் போகுதுப்பா. பரேடன்னிக்கு நல்ல டிஃபன் குடுப்பாங்க. ஹைகிளாஸ் ஓட்டல்ல ஆர்டர் குடுத்து வருது.”
அனேக என்.சி.சி. கேடட்டுகள் மாலையில் அணிவகுப்பு குறித்த முன்னறிவிப்பால் வீட்டிலிருந்து வரும் போதே நாங்கள் சீருடைகளை மடித்துக் காகிதத்தில் கட்டி எடுத்து வந்திருப்பார்கள். பள்ளி முடிந்ததும் வருப்பறையில் வைத்தே சீருடைக்குத் தங்களை மாற்றிக்கொள்ளுவார்கள். ஒருவருக்கொருவர், பட்டன சரியா போடு, மூக்கன் பாத்துட்டாருன்னா அவ்வளவுதான், யூனிஃபாரம் பட்டன் போடல்லேனா, சரியா போடலேன்னா, பட்டன் பிஞ்சிபோயிருந்து தச்சிப் போட்டுக்கிட்டு வர்லேனா மூக்கன் கடுமையா தண்டிப்பாரு. முழு மைதானத்தையும் மூணு வாட்டி சுத்தி ஓடிவரச் சொல்லுவாரு என்றான் ஜெயராமன்.
“இதெல்லாம் எப்பிடி தெரியும், நீ என்.சி.சியில இல்லையே?” என்று கேட்டால், என்.சி.சி. கேடட்டுகள் சொல்லக் கேட்டதாய்க் கூறுவான் ஜெயராமன்.
“மூக்கன் யாரு?,”என்று கேட்டேன்.
“வைத்தியநாத ஐயர், சயன்ஸ் பி.ஏ, பி.டி.”, என்றான். மாலை அணிவகுப்புப் பயிற்சிக்கு சீருடைகளை எடுத்து வருபவர்கள் கனத்த பூட்சுகளை வீட்டிலிருந்தே அணிந்து கொண்டு வகுப்புக்கு வந்து விடுவார்கள். இந்த பூட்சுகள் முற்றிலும் தோலால் தயாரிக்கப்பட்டவை. கடுமையான நடை, ஓட்டம் எதையும் சமாளிக்கக்கூடியவை. இராணுவத் தேவையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை. அவற்றின் அடிப்பகுதி அதிவிசேஷமானது. குதிரை லாட வடிவிலான இரும்பு லாடத்தை குதிகால் பகுதியிலும், ஆரஞ்சு சுளை வடிவ இரும்பை கால் நுனிப் பகுதியிலும் எல்லா பூட்சுகளின் அடிப்பாகங்களிலும் அடித்து வைத்திருப்பார்கள், லாடங்கள் தேய்ந்த பின்னரே பூட்சின் அடிப்பகுதி தோல் தேயும், லாடங்கள் நேய இரண்டு வருடங்கள்கூட பிடிக்கும். அதனால் மரப்படிக்கட்டுகளில் என்.சி.சி. கேடட்டுகள் ஏறும்போது இறங்கும்போது எவ்வளவு நிதானமாய் அடியெடுத்து வைத்தாலும் காது கிழியும். வகுப்பறைகளில் இவர்கள் பூட்சு காலுடனிருக்கையில் அவர்களின் ஒவ்வொரு சிறு அசைவின்போதும் நகர்வின்போதும் பூட்சின் ஆரஞ்சு சுளை ஆணியாலும் குதிரை லாடத்தாலும் தரை கிறீச்சிடும் அல்லது தம் தம்மென சப்திக்கும். எனக்கு என்.சி.சி. பிடித்தது. சேர வேண்டும்.
“பாலா, தொப்பி கோணையாயிருக்கு. சரியா போட்டிட்டு போ,” என கோபால் எச்சரிக்கையில் பாலன் சைக்கிளிலிருந்து ஒருகாலை ஊன்றி நின்றபடி தொப்பியை சரிசெய்து கொண்டு சைக்கிளை நிறுத்திவிட்டு ஓடினான். அவன் வீட்டுக்குப்போய் சீருடை தரித்துக்கொண்டு வந்த அவசரத்திலிருந்தான்.
மறு நாள் காலை முதல் பீரியடே ஆங்கிலம். சுப்பாராவ் “குருட்டுப் பையன்- ப்ளைண்ட் பாய்” என்ற கவிதையை நடந்த எடுத்துக் கொண்டார். அவர் தம் வகுப்பு முடிந்து வெளியேறுகையில் என் பக்கமாய்த் திரும்பி, என்.சி.சியில ஒன்ன சேர்த்திருக்கேன். சாயங்காலம் என்.சி.சி. ரூமுக்குப் போய் ஸ்டானிஸ்லாஸ் இருப்பார், அவர்கிட்டேயிருந்து ரெண்டு செட் யூனிஃபாரம், பூட்ஸ், பெல்ட், கேப்பெல்லாம் வாங்கிக்கோ. பரேட் டைம் டேபுள் இருக்கும், பாத்து எழுதிக்கோ, அதுபடி காலையில் ஆறு மணிக்கு பரேடுக்கு வரணும்,” என்றார் வகுப்பாசிரியரும் என்.சி.சி. அதிகாரியுமான சுப்பாராவ். சென்ற ஆண்டு என். சி.சி.யில் சேர்ந்த மாணவர்கள் மகிழ்ச்சியோடு என்னைப் பார்த்தார்கள்.
சாயங்காலம் பள்ளி விட்டதும் என்.சி.சி. அறைக்குப் போனதும் ஸ்டானிஸ்லாஸ் சார் சீருடையைத் தராமல் டைப் செய்த படிவமொன்றை நீட்டி அதைப் பூர்த்தி செய்து, என் அப்பாவின் சம்மதத்துக்கான இடத்தில் அவருடைய கையெழுத்தை வாங்கி வரும்படி கூறினார்.
“ஒங்கப்பா கையெழுத்து முக்கியம். அல்லே, கார்டியன் இருந்தா அவர் போடலாம். நீ என்.சி.சி.லே சேர்றதுக்கு ஒங்கப்பா அனுமதிங்கிற இடத்தில கையெழுத்து போடணும். அப்புறந்தான் யூனிஃபாரம் குடுப்போம்,” என்றார்.
அப்பா அந்தப் படிவத்தைப் படித்துவிட்டு, “என்.சி.சி.யெல்லாம் ஒனக்கு வேணாம். அப்பறம் நா போனாப்பல இவனும் மிலிடெரியிலே சேர்ந்துடுவான். மிலிடெரி ஆசை வந்துடும். அதெல்லாம் இவனுக்கு லாயக்குப்படாது. நாம் போட மாட்டேன் கையெழுத்து. மாட்டேன்னா மாட்டேன் போடா” என்று கோபமாய்க் கூறி படிவத்தை எறிந்தார்.
மறுநாள் வகுப்பாசிரியர் சுப்பாராவிடம் இப்படியென்று சொன்னபோது அவர் யோசித்துவிட்டு படிவத்தை வாங்கி மடித்து மறுநாள் என் ஜேபியில் போட்டுக்கொண்டு போய்விட்டார். மறுநாள் என்னிடம் அதைக்கொடுத்து என்.சி.சி. அறையில் கொடுத்து யூனிஃபாரம் வகையறாக்களை வாங்கிக்கொள்ளச் சொன்னார். அதைப் பிரித்துப் பார்த்தேன். பெற்றோர் அல்லது கார்டியன் சம்மதத்திற்கான கையொப்பம் என்று இருப்பதில் பெற்றோர் என்பதை அடித்திருந்தது. கார்டியன் என்ற சொல்லுக்கு மேலே தாடி தம் முழுப் பெயரையும் எழுதி தேதியும் குறிப்பிட்டிருந்தார் தாடி எனக்கான இந்த ஒரு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
இல்லாவிட்டால் அப்பாவின் கையைழுத்தை நானே போட்டுவிடவும் தயாராகியிருந்தேன், அப்பாவின் கையெழுத்து ஒன்றும் அவ்வளவு சிக்கலானதில்லை. இரண்டு மூன்று தடவை போட்டுப் பார்த்தவுடன் கை வந்து விட்டது. ஆனால் மனம் ஒப்பவில்லை. இது குற்றம். இது குற்றம் என காலமெல்லாம் நொந்து சாகடிக்கவிடும். அந்தக் குற்றத்திலிருந்தும், அதன் பின் ஏற்படும் குற்ற மனப்பான்மையிலிருந்தும் என்னைக் காப்பாற்றும் பொறுப்பையும் தாடி ஏற்றிருப்பதாகத்தான் நினைத்தேண்
ஸ்டானிஸ்லாஸ் என்.சி.சி. சீருடைகள் இரண்டுசெட், பூட்ஸ், பச்சை இராணுவ நிற பெல்ட், அதை மெருகூட்ட ப்ளாங்கோ, பித்தளை பாட்சு முதலானவற்றை பளபளக்கச் செய்ய பிராஸ்ஸோ டப்பி, குல்லாய், அதில் குத்திவைக்க சிவப்பு நிற பாம்பாம் எனும் சிவப்புநிற கம்பளி நூலாலான குண்டு எல்லாவற்றையும் தந்துவிட்டு வினியோக பதிவேட்டில் எழுதி, கையெழுத்தும் வாங்கிக் கொண்டார். பரேடுகளுக்கான கால அட்டவணையை குறித்துக்கொண்டேன். அம்மாவிடம் மட்டும் ரகசியமாய் சொல்லிக்கொண்டு அதிகாலையின் நான்கரைக்கு எழுத்து பச்சைத் தண்ணீரில் குளித்து என்.சி.சி. சீருடை, பூட்ஸ் இத்யாதிகளை ஒரு பையில் வைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டுப் போனேன். பள்ளிக்குப்போய் அணிந்து கொண்டேன். புது தோல் பூட்ஸ் வலதுகாலைக் கடித்தது. பூட்சுக்குள்ளே கடிக்கும் பகுதியில் விளக்கெண்ணெய் பூசிவைக்கச் சொன்னார்கள். வீட்டிலிருந்து வரும் வழியில் தெரு நாய்கள் அதிகம். சீருடையும் பூட்சுமணிந்து டக்டக்கென்ற ஓசையுடன் நடந்தால் எருமாபாளையம் சாலை முடியும்வரை இரண்டு டஜன் தெரு நாய்களைச் சமாளிப்பது ஆபத்தான செயல். எனவே பையில் வைத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். இராணுவச் சீருடையை வாரம் ஒரு முறையாவது கஞ்சி போட்டு இஸ்திரி போடவேண்டுமே, இஸ்திரி பெட்டிக்கு எங்கே போவது, ஜெயராமன் எளிமையான முறையொன்றை சொல்லித் தந்தான். பித்தளைச் செம்பில் நெருப்புக் கங்குகளைப் போட்டு, செம்பின் வாய்ப் பகுதியை துணியால் பற்றிக்கொண்
ட இஸ்திரி தேய்க்கும்படி கூறினான். செய்து பார்த்ததில் பரவாயில்லை, ஒன்றுமில்லாத்தற்கு எதோ ஒன்று என்று பட்டது. ஒரு இராணுவக் குட்டி சிப்பாயாக எனக்குத் தோன்றியது. புதியதாய்ச் சேர்ந்த கேடட்டுகளுக்கு இராணுவ பச்சைக் காக்கி சீருடையிலிருந்து இராணுவ சுபேதார் ஒருவர் அரிச்சுவடியிலிருந்து ஆரம்பித்தார். சென்ற ஆண்டே சேர்ந்துவிட்ட கொம்பில் ராமனுஜனும் பிரேமும் எதைக் கேட்டாலும் ஏக பிகு செய்தார்கள். பாலன் பரவாயில்லை. காலை ஆறிலிருந்து ஏழுவரை பயிற்சி. பிறகு ஒரு மணி நேரம் பாடம். அதற்கொரு குறிப்புப் புத்தம் வேண்டியிருந்தது. நிறைய பாடம். எழுதிக்கொள்ள வேண்டும். எல்லாம் ஆங்கிலத்தில்தான். எட்டரைக்கெல்லாம் குதிரை வண்டியில் கேடட்டுகளுக்கும் அதிகாரிகளுக்கும் சிற்றுண்டி வந்தது. மூன்று இட்லி, வடை சட்னி, சாம்பார், “எதோ நல்ல ஓட்டலாக இருக்க வேண்டும், நல்ல சுவை. எல்லோருக்கும் வினியோகித்து முடிந்த கையோடு ஓட்டல்காரர்கள் பாத்திரங்களை குழாய் நீரில் கழுவிவைத்துக் கொண்டு குதிரை வண்டியில் போய்விட்டனர்.
“ஒத்தை பரேடுன்னா சிங்கிள் டிபன்தான், சனிக்கிழமையில டபுள் பரேடிருக்கும். பதினோறு மணிவரை டிரில் வாங்குவாங்க. அப்போ டபுள் டிபன் இருக்கும். இட்லி வடையோட பூரிமசாலுமிருக்கும்” என்றான் பாலன்: சிற்றுண்டி என்.சி.சி. மீது கூடுதல் பற்றை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் பிரேம் ஒவ்வொரு முறை என்.சி.சி. பரேடு முடிந்து டிபின் சாப்பிடும்போதும், “நாயுந் திங்காத சோறுனு சொல்லுவாங்க தெரியுமா, அதுமாதிரி இது.” என்பான் திமிரோடு, ஆனால் இலையை ஒட்ட வழித்துத்தான் நக்காத குறையாகச் சாப்பிட்டிருப்பான்.
அப்பாவுக்கு தெரிந்ததும் கன்னாபின்னாவென்று திட்டினார். ஆனால் சீருடையில் அவர் முன்னால் போய் நின்றபோது ஒரு முறை கவனித்து விட்டு, “படவா ராஸ்கல், மிலிடரிகாரன் மகன்டா நீ,” என்று கூறிவிட்டு “யார் கையெழுத்து போட்டது?” என்று கேட்டார்.
“தாடிப் பெரியப்பா,” என்றேன்.
***
எழுதியவர்:-

✍🏻 விட்டல்ராவ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
