அப்பா விடைபெற்றார்
வகுப்பறைக் கதைகள் – 35
– விட்டல்ராவ்
எருமாபாளையம் சாலையில் அங்கங்கே எதிரெதிரே நிறைய சந்துகள். ஒரு வளைவான திருப்பம். திருப்பத்தை ஒட்டி சிறு மைதானத்தில் எவ்வித தண்ணீர் வசதிக்கான இணைப்புமில்லாத மூன்று பொதுக் கழிப்பறைகள். அப்பகுதி பெண்கள் மட்டும் பயன்படுத்தி வந்தாலும் பராமரிப்பு காணாது. உள்ளே கால் வைக்க கூசும். இரவில் இருளின் தயவில் பெண்கள் மைதானத்திலேயே முடித்துக் கொள்ளுவாரக்ள். கிழவிகள் சுருட்டு பிடித்தபடி அமர்ந்திருப்பது இருளில் தீக்கங்கு ஒளிர்வதும் மங்குவதுமாயிருப்பதை வைத்தே அனுமானிக்கலாம். அன்றும் இருளில் ஒளிர்ந்து மங்கும் சுருட்டுக் கங்கை கவனித்தபடியே எங்கள் வீடு இருக்கும் காரை சந்துக்குள் நுழையும்போதே ராஜு நாயக்கர் எதிர்கொண்டு என்னை நிறுத்திப் பேசினார்.
“என்ன இவ்ளோ நேரங்களிச்சிவர்றே. அப்பாக்கு ஒடம்பு சரியில்லே. ராமு வந்து சொன்னான். பெரிய ஆசுபத்தரியில் எடுத்திட்டுப் போயி சேர்த்திட்டு வந்திருக்கோம். அம்மா அங்கே கூட இருக்காங்க. வீட்லயே இரு. எங்கியும் சுத்தப் போயிடாதே”, என்றார்.
“என்னாச்சி”?
“லிவர் மோசமாயிருக்குனு டாக்டர் சொன்னாரு.” என கூறிவிட்டு சைக்கிளில் ஏறிப் புறப்பட்டுப் போய்விட்டார். ராமு பார்த்துவிட்டு திட்டினான். மல்லசமுத்திரத்திலிருக்கும் வசந்தாக்காவுக்கு தந்தி கொடுத்துப் புறப்பட்டு வரும்படி தகவல் அனுப்பியிருப்பதாய்க் கூறினான்.
“இப்போ ஆசுபத்தரிக்குப் போய் பாக்கட்டா?” எனக் கேட்டதற்கு, “இந்த நேரத்துக்கெல்லாம் வுடமாட்டாங்கடா. காலையில, சாயங்காலத்தில மட்டும்தான்”, என்று சொன்னான் ராமு.
மறுநாள் காலை- வசந்தாக்காவும் ராமுவும் மருத்துவமனைக்குப் போனபோது அப்பாவுக்கு வயிற்றுப்போக்கு இரத்தம் கலந்து அதிகமாகிவிட்டதால் பொது வார்டிலிருந்து தொற்றுநோய் வார்டு எனப்படும் ஐசோலேஷன் வார்டுக்கு மாற்றியிருந்தார்கள். அவருக்கு வயிறு உப்பிப் பெருத்துப் போயிருந்தது. மாலையில் போய்பார்த்துவிட்டு, வசந்தாக்காவை வைத்து விட்டு அம்மாவை வீட்டுக்கு அனுப்பி வைத்த கையோடு வெளியில் வருகையில் எதிரில் பெரிய டாக்டர், தமக்கு பின்னால் இளம் டாக்டர்கள் நர்சுகள் சூழ வந்துகொண்டிருந்தார். அவரது முக ஜாடை எங்கோ பார்த்து பரிச்சயமானதாய்ப்பட்டது. அவர் வேகமாக வார்டு ரௌண்ட்சுக்குப் போய்க் கொண்டிருந்தார். அப்பா இருக்கும் வார்டுக்குள் அவர் போவதைப் பார்த்துவிட்டு நானும் பின் தொடர்ந்தேன். அப்பாவைத்தான் அவர் பரிசோதித்துக் கொண்டிருந்தார். கேஸ் ஷீட் காகிதங்களை வாங்கி வேக வேகமாகப் புரட்டிப் புரட்டிப்பார்த்து விட்டு நர்ஸ் ஒருவரிடம் சற்று கடுமையாக என்னவோ ஆங்கிலத்தில் கேட்க, அந்த நர்ஸ் பயந்து எதையோ சொன்னார். எதோ கேட்க, அந்த நர்ஸ் பயந்து எதையொ சொன்னார். எதோ மருந்து சமாச்சாரம் போலிருக்கிறது. அடுத்து வசந்தாக்காவையும் சற்று கடுமையாக எச்சரித்துக் கொண்டிருந்தார்.
‘வெளியிலேந்தெல்லாம் வாங்கி எதையும் சாப்புட குடுக்கக்கூடாதம்மா”, என்று கூறிவிட்டு அரசாங்க டாக்டருக்கே முத்திரை குத்தப்பட்ட கணக்கில் படிக்க விளங்காத வகையில் கிறுக்கிவிட்டுத் திரும்பினார். அவருடைய அந்த முகம்- மறக்காத முகம், கிருஷ்ணகிரி சர்க்கார் ஆசுபத்தரியில் தலைமை மருத்துவராயிருந்த டாக்டர் டபுள்யூ.எஸ்.சுந்தரம்.
“டாக்டர்” என்றழைத்தேன்.
“எஸ்.? நீ யாரப்பா தம்பி?”
“எங்கப்பாதான் சார் இவர்”
“சரி”
“ஒங்க கிட்டே பேசலாமா டாக்டர்?”
“என்ன பேசணுங்கறே, சரி பேசு”
அது நீண்டுசெல்லும் ரெட் ஆக்சைடு பூசப்பட்ட ஆளோடி. அதில் மெதுவாக நடந்தபடியே நான் பேச அவர் தலையாட்டியபடியே போனார். கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அவர் மருத்துவ அதிகாரியாக இருந்தபோது மோசமான நிலையில் நான் சேர்க்கப்பட்டதை நர்ஸ் மெடில்டாவின் பெயரை, உயிர் காக்கும் மருந்தைத் தம் செலவில் வாங்கித் தந்து என் உயிரை அவர் காப்பாற்றியதையெல்லாம் நினைவுபடுத்தி அவரது கால்களைத் தொட முற்பட்டேன். அவர் சட்டென்று விலகிக்கொண்டு ஆசிர்வதித்தார். எதுவும் தம் கையில் கடுகளவே இருப்பதாகக் கூறிவிட்டு தலையையுயர்த்தி மேலே பார்த்தவாறு புன்னகைத்தார். கலங்கினாற் போன்றே எப்போதும் தோற்றமளிக்கும் அவரது கண்களில் அருளொளி தெரிவதாக எனக்குப்பட்டது. பல சமயங்களில் தலைமையாசிரியர் ரெவரண்ட் ஃபாதர் புஷ்பநாதரின் கண்களும்கூட எனக்கு அவ்வாறே தோன்றும்.
உன்னோட அப்பாவுக்கும் அதே விதமாய்த்தான் என்னால் சொல்ல முடியும். நானும் வேறெந்த டாக்டரும் மனுஷங்கதான்.” என்று கூறி கண்ணை மூடி முணுமுணுத்தார். என்னைத்தொட்டு, “நல்லா படி தம்பி” என்று கூறிவிட்டு தம் அறைக்குள் நுழைந்துகொண்டார். அவரது அறைக்கு வெளியே சுவரில் தொங்கின சிறிய தேக்கு மரப் பலகை மீது வெள்ளை வண்ணத்தால் எழுதப்பட்டிருந்த “டாக்டர் டபுள்யூ.எஸ்.சுந்தரம், டிஸ்ட்ரிக்ட் மெடிகல் ஆபீசர்” என்ற எழுத்துக்களை மந்திரம் ஓதிக் கொண்டேன்.
குடியரசு தினத்துக்கு ஒருவாரமிருந்தது. அதை முன்னிட்டு என்.சி.சி கேட்ட்டுகளின் சிறப்பு பரேடு ஒன்றுக்கு ஏற்படாயிருந்தது. அதற்கான ஒத்திகைப் பயிற்சி நாளையிலிருந்து இருக்கும் என்று அறிவித்து விட்டார் என்.சி.சி. முதல் நிலை அதிகாரியும் வகுப்பாசிரியருமான சுப்பாராவ்.
அன்று அப்பாவுக்கு நிலைமை பின்னும் மோசமாகி விட்டிருந்தது. லிவர் சிரோசிஸ் என்றார்கள். இருக்கும் நிலையிலேயே வீட்டுக்குக்கொண்டு போய்விட்டால் குதிரைவண்டி சாதாரண வாடகைக்கே வருவான். ஒரு வேளை இறந்துபோய்விட்டால் குதிரை வண்டி இலேசில் கிடைக்காதென்றும், ஏகமாய் பணம் கேட்பார்கள் என்றும் ஆசுபத்திரி வார்டுபாய் கூறினார். மருத்துவர்களும் வீட்டுக்கே எடுத்துச் சென்றுவிடும்படி வற்புறுத்தி டிஸ்சார்ஜ் செய்துவிட்டனர். இதற்கு ஒரே ஒரு அர்த்தம்தான் விளங்கியது வசந்தாக்காவுக்கு. குதிரை வண்டியில் படுக்கவைத்து அப்பாவை வீட்டுக்கு கொண்டு வந்து படுக்கவைத்தாயிற்று.
காரைச்சந்தில் கைத்தறி தொழிலும் நெசவுத் தொழிலாளர் குடும்பங்களும் வசித்து நெசவுத்தொழிலைப் பார்த்துக் கொண்டன. அவர்கள் ஆண்களும் பெண்களுமாய் வந்துவந்து பார்ப்பதும் தெரிந்த கை வைத்தியத்தையெல்லாம் சொல்லி செய்துபார்க்கும்படி
யோசனை தந்தபடியிருந்தனர். சிலர் மந்திரித்து தாயத்து கட்டிவிட வற்புறுத்தியபோது ராஜு நாயக்கர் கோபத்தோடு நிராகரித்து அனுப்பிவிட்டார். அவர் கையில் எப்போதும் சுருட்டி வைத்திருக்கும் செய்திப் பத்திரிகையை அன்று மாலைதான் முதன்முறையாக வாங்கிப் பிரித்துப் பார்த்தேன். ஜனசக்தி என்று சிகப்பு நிற எழுத்துக்களால் அப்பத்திரிகையின் பெயர் தெரிந்தது. மேம்போக்காகப் புரட்டியதிலேயே மற்ற தினசரிகளிலிருந்து சற்று மாறுபட்டும் சூடாகவும் அதன் போக்கு தெரிந்தது. வறுமைத் தொழில், தொழிலாளர் சுரண்டல் என்ற சொற்கள் விரவிக் கிடந்தன.
“எடுத்திட்டுப் போய் படி…”என்றார் ராஜு நாயக்கர்
“வேணாங்க, பாடம் நிறைய இருக்கு” என்று கூறிவிட்டு அதை அவரிடம் திருப்பிக் கொடுத்தேன். என்றாலும் அதன் சொற்கள் மனதுக்குள் எதிரொலித்தன. எல்லோருக்கும் தகவல் கொடுத்துவிடும்படி ராஜு நாயக்கர் சொன்னதோடு அங்கேயே அமர்ந்திருந்தார்.
வயிறு பானை மாதிரி உப்பி உயர்ந்து தோன்ற வலியால் அப்பா துடித்துக்கொண்டிருந்தார். எனக்கோ அதைக் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் அங்கே இருக்கவே முடியவில்லை.
“இப்பவே மசானத்தில கொண்டுபோய் என்னை வச்சிடுங்க” என்ற வரிகளைத்தான் அவர் சொல்லிக்கொண்யிருந்தார். யாருமே தூங்கவில்லை. காலை நாலரைக்கு எழுந்து குளிக்காமலேயே என்.சி.சி சீருடையணிந்து, மாற்று உடையை பையில் புத்தகங்களோடு திணித்துக்கொண்டு புறப்பட்டுவிட்டேன். சிறப்பு பரேடுக்கு அன்று மூன்றாம் நாள் பயிற்சி. தெரு நாய்கள் கொண்டாட்டத்தோடு குரைத்தபடி கூட வர எண்ணமெல்லாம் அப்பாவைப் பற்றியதாகவே இருக்க வேகமாய் நடந்து கொண்டிருந்தேன். பூட்ஸ் ஒலியோடு சீருடையில் வேகமாய் நடக்கையில் தெருநாய்களின் குரைப்பும் பாய்ச்சலும் அதிகரித்தது. களரம்பட்டி முனைவரை வந்து வழியனுப்பிவிட்டு தம் கருப்பு விதைகள் குலுங்கி ஊசலாட அந்த நாய்கள் தாம் வந்த வழியே திரும்பி சென்றுவிட்டன. அப்பா போய்விட்டால்…. அப்பா போய்விட்டால் என்றே நெஞ்சம் முழுக்க கேள்விகள் சூழ்ந்து பரவ பள்ளி மைதானத்தில் சென்றடைகையில் கேட்ட்டுகள் வந்து நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
‘என்னபா, எதோ போயிட்ட மாதிரி டல்லாயிருக்கே?” என்று சிலர் கேட்டார்கள். பாலனும் பிரேமும்தான் “அப்பா எப்பிடியிருக்காரு?” என்று விசாரித்தார்கள். பதில் சொல்ல குரல் எழவேயில்லை. விசும்பத்தான் முடிந்தது. ராமசாமி என்னை அணைத்துக் கொண்டான். “வ்திருக்கவே கூடாது, ஏன் வந்தே, ஏன் வந்தே?” என்று பாலனும் பிரேமும் கேட்கவும் ஒருவித குற்ற மனப்பான்மை கவிழத் தொடங்கியது. ஆனால் அங்கே இருக்கவே முடியவில்லையே…
மார்ச் பாஸ்ட்டின்போது இடது என்ற உத்தரவுக்கு வலது காலையும் வலது எனும்போது இடதுகாலையும் வைத்து நடந்து ஃபர்ஸ்ட் ஆபீசர் வைத்தியநாத ஐயரின் வசவுகளையும் தண்டனையும் வாங்கிக் கொண்டேன். அப்போதுதான் விஷயமறிந்த சுப்பாராவ் வைத்திய நாதய்யரிடம் காதில் ஓதினார்.பரேடு முடிந்து சிற்றுண்டி சாப்பிட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் வயிறு குமட்டிக்கொண்டு வந்தது. ராமசாமி பிடித்துக்கொள்ள அப்படி உட்கார்ந்தேன். படபடவென்று வாந்தியெடுத்து வைத்தேன். பிரேம் ஓடிவந்து தண்ணீர் கொடுத்தான். ஸ்டானிஸ்லாஸ் விரைந்து வந்து என்னைத் தூக்கி சிமெண்டு பெஞ்சில் படுக்க வைத்தார். மீண்டும் ஒருமுறை வாந்தி வந்தது. ஸ்டானிஸ்லாஸ் என் என்.சி.சி. பெல்டின் பித்தளை கிளிப்பை விடுவித்து இடுப்பு பெல்டை தளர்த்தி வைத்தார். முகத்தைக் கழுவிக்கொண்டு வகுப்பறைக்குள் போய் உட்கார்ந்தேன். முடியவில்லை. பெஞ்சில் படுத்துவிட்டேன். வீட்டுக்குப் போய்விடும்படி பாலனும் ராமசாமியும் சொன்னார்கள். சமாளித்துக் கொள்ளுவதாய் நான் கூறிவிட்டு எழுந்து உட்கார்ந்து கொண்டேன். பிறகு என்.சி.சி. சீருடையைக் கழட்டிவிட்டு கையோடு எடுத்து வந்திருந்த என் சட்டை, கால்சட்டையை மாற்றிக்கொண்டேன். உள்ளே அணியும் பனியன் வியர்வை வாடை வெகுவாக அடித்தது. மாணவர்கள் திபுதிபுவென வந்து உட்கார்ந்தனர். ஜெயராமன் அப்பாவை விசாரித்துக் கொண்டிருப்பதை சித்தரஞ்சன் மௌனமாக கேட்டுக்கொண்டான்.
இறைவணக்கப் பாடல் கத்தோலிக்க மாணவர்களால் கோரஸ்ஸாய்ப் பாடப்பட்டபோது அப்பாவுக்காக வேண்டிக்கொண்டேன்.
“வழிகாட்டிடுவாய் அருள்ஜோதி
வண்ண வான்மதி நின்னொளி போற்றி
விண்ணோர்க்கதிபதியே
மண்ணோர்க் கடைக்கலமே – வழிகாட்டிடு”
நாகின் என்ற பிரபலமான இந்தித் திரைப்படத்தில் வைஜயந்திமாலாவுக்காக லதா மங்கேஷ்கர் குரலில் ஹேமந்தகுமார் முகர்ஜியின் அரிய இசையில் பாடப்பட்ட பாட்டின் ராகத்தில் மரியசூசை சார் இயற்றி இசையமைத்துப் பாட வைத்த பாடல் அது. கண்மூடி நின்றிருந்தேன். சோர்ந்து காணப்பட்டதைக் கண்ணுற்ற முதல் பீரியட் தமிழாசிரியர் சித்தனார், “என்னய்யா ஒரு மாதிரி இருக்கே?” என்றார்.
“என்.சி.சி. பரேடில வாந்தி எடுத்திட்டானய்யா!” என்றான் பாலன்.
“வ வர என்.சி.சி.டிஃபனே சரியில்லே”, என்றான் பிரேம் வழக்கம்பொல.
“அதில்லே பிரேம், இவன் மனசே சரியில்லே” என்றான் ராமசாமி. முதல் பீரியட் முடிந்து இரண்டாவது பீரியட் தொடங்கியது. சமூகப் பாடம். ராமசேஷய்யர் நிதானமாக வந்து மரமேடைமீது ஏறி நாற்காலியில் அமர்ந்து “அம்மா!” என்று தம் உடல் பளுவின் அவஸ்தைக்கு முணுமுணுத்துக்கொண்டார். வகுப்பறையின் வாசலில் யாரோ தயங்கித் தயங்கி ஒளிந்தாற்போல தள்ளி நிற்பது போல் பட்டது.
‘யாரது இப்படி வாப்பா” என்றார் சமூகப் பாட ஆசிரியர் தம் கனமான குரலில்.
என் அண்ணன் ராமு! நான் தயாரானேன்.
“யாரு, என்ன சமாச்சாரம்?” என்று கேட்டார் ஆசிரியர்.
ராமு என் பெயரைச் சொல்லிவிட்டு தேம்பத் தொடங்கினான். ராமசேஷய்யர் பதறி எழுந்து மேடையை விட்டு இறங்கினார்.
“அவங்கப்பா போய்ட்டாரு” என்று முடித்தான் ராமு.
“பதறாம போ, ஜாக்கிரதையா போ” என்று கட்டியணைத்து முதுகைத் தட்டியனுப்பினார் ஆசிரியர்.
“புஸ்தகப்பை, என்.சி.சி. யூனிஃபாரம் எல்லாம் இருக்கட்டும்” என்று சொன்னபோது, “நாம் பாத்துக்கறேன், நாம் பாத்துக்கறேன்” என்று இரண்டு மூன்று வெவ்வேறு குரல்கள் உரக்கக் கேட்டன. ராமவுடன் சாலைக்கு வந்தேன்.
“அவம் புஸ்தகப்பை, என்.சி.சி.டிரஸ்ஸை யாரு கொண்டுபோய் வச்சிக்கிறது?”
பதிலில்லை.
“பின்னே நானு நானுனு கத்தினீங்களே, யாரு அதெல்லாம்?”
அதற்கும் பதிலில்லை.
“அவன் பக்கத்திலயே இருக்கறவன் நீ, நீ கொண்டு போய் வச்சிக்கிறயாப்பா, ஜெயராமா?”
“எங்க வீட்ல ஆச்சாரம் பாக்கறவங்கப்பா. சொன்னா புரியாது ஒங்களுக்கெல்லாம். சாவு வீட்டுத்துணி, பையினு தீட்டு பாப்பாங்க. இதையெல்லாம் உள்ளே அனுமதிக்க மாட்டாங்க.”
“என்ன பிரேம், நீ என்ன?”
அவன் தடுமாறி நெளிந்தான்.
“இவ்வளோ கேக்கறயே, நீ ஏன் எடுத்திட்டுப் போப்படாது, பாலா?”
“எனக்கு தீட்டு கீட்டெல்லாமில்லே. வேறே சிக்கல் இருக்கு. சொன்னா புரியாது.”
“யாரும் வேணாம், நா எடுத்திட்டுப்போய் எங்க வீட்ல வச்சிக்கிறேன்.” என்று உறுதியாக ராமசாமி சொல்லவும்தான் மற்றெல்லாரும் விடுதலையுணர்வு பெற்றவர்களாய்த் தோன்றினர்.
ராமசாமி வீட்டுக்குள் நுழையும்போதே, வாசலில் மல்லிகைப் பந்தலில் நித்தியமல்லி மொக்குகளை பறித்துக்கொண்டிருந்த அவனம்மா பார்த்து விட்டு, “டேய்! யாரோடது அது?” என்று கேட்டாள்.
என் பெயரைச்சொல்லிவிட்டு, “பாவம்மா! அவங்கப்பா செத்துப்போய்ட்டார், காலேலே. அவம் புஸ்தகம், என்சிசி துணியே ஒருத்தனும் கொண்டுபோய் வெச்சிக்க மாட்டேங்கறாங்க. நா கொண்டாந்துட்டேன்” என்றான் ராமசாமி.
“நமக்கெல்லாம் அதெல்லாம் இருக்குதான். பாவம், என்னா செய்யறது. துணியை பாத்மூம்ல பக்கெட்ல நனைச்சிவை. அப்பறமா கொடியில காயப்போட்டுறலாம்” என்றாள் அவனம்மா.
“புஸ்தப்பையையும் நனைக்கணுமா, இல்லே சும்மா தண்ணி தெளிச்சா போருமா?”
“கடங்காரா, புஸ்தகத்துக்கு தீட்டு இல்லே, முன் மூம்ல வச்சிட்டு தலைக்கி தண்ணி கொட்டிக்கோ.” என்ற அவனம்மா, கவனம் தப்பி காய்மொக்குகள் கொஞ்சத்தையும் பறித்துப் போட்டிருந்தாள்.
சென்ட்ரல் பக்கம் திரும்பாது முள்ளுவாடி ரெயில்வே கேட் திசையில் நான் போவது கண்டு துணுக்குற்ற ராமு பிறகு புரிந்து கொண்டவனாய், “ நா சின்னவனாயிருந்தப்போ ஒருவாட்டி மாடர்ன் கேப்குள்ளே போயிருக்கேன்” என்றான்.
“இனிமே நாம என்னடா செய்யறது?” என்ற கேள்வியையே நானும் அவனுமாய் மாறி மாறி கேட்டுக்கொண்டே நடந்தோம். மாடர்ன் கேபுக்குள் நான் நுழையும்போது ராமு தயக்க்தோடு பின்தொடர்ந்தான். அந்த ஓட்டலுக்குள் நுழைவது இதுதான் முதல் தடவை. இதுவரை அவரை நேரில் பார்த்த்தில்லை. அவரைப் பற்றி அறிந்த்தெல்லாம் அப்பா, அம்மா சொல்லக் கேட்டதுதான். என் படிப்புக்கான அவரது உதவிகள் யாவும் வகுப்பாசிரியர் சுப்பாராவ் மூலமாய்த்தான் போய்க்கொண்டிருக்கின்றன. கதவு திறந்த்து.
“நீதானா அது, அவன் யாரு? ஓஹோ! எப்போ, ஜெனரல் ஆசுபத்திரியில எத்தனை நாள் வெச்சிருந்தாங்க. யாரு டாக்டர், ஓ, சுந்தரமா, வரவேண்டிய வங்களுக்கு தந்தி கொடுத்தாச்சா, யார் அட்ரஸும் இல்லையா, அதுவும் நல்லதுதான். வந்தென்ன ஆகப்போறது? அப்போ சிக்கிரமே எடுத்துடுங்கோ. நா வர்றதுக்கில்லேப்பா! இந்தா, இதை வச்சிக்கிட்டு மூணு நாளைக்காற காரியத்தப் பாருங்கோ. நாளைக்கு கார்த்தாலே எல்லாரும் மேட்டூர் காவேரிக்குப் போயிடுங்கோ.அங்கேயே ரூம் பாத்து ரெண்டுநாள் தங்கிட்டு வந்துடுங்கோ. சாஸ்திரம் பாக்க எல்லாம் வேணும்.ஒங்கப்பன் எந்த சாஸ்திரமும் பாக்காமயே போய் சேர்ந்துட்டான். இருக்கறவனுக்குத்தான் சாஸ்திரம் சனாதனமெல்லாம். இல்லாதவனுக்கு எதுவுமில்லே. சொந்தபந்தம் போக்கு வரத்தேயில்லேங்கறப்போ சாஸ்திரம் சனாதன விசாரத்த யார் கேக்கப்போறா? பாக்கப்போனா ஒங்கப்பனுக்கு லைஃப் ரொம்ப சிம்புளா முடிஞ்சிட்டது. காவேரில ஸ்னானம் பண்ணிட்டு கோவிந்தானு சொல்லி வந்துடுங்கோ. வந்தவாட்டி நீ வந்து பாரு. கொஞ்சம் பணம் தர்றேன். என்ன செய்யணும்னு ஒங்கம்மாக்கு தெரிங்சிருக்கும்.“அவர் கூறிக்கொண்டே பீரோவை மீண்டும் திறந்து மேலும் சிறிது பணத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து அனுப்பி வைத்தார்.
சாயங்காலம் சவுண்டிகள் பணத்துக்குப் பறந்தார்கள். அக்கம் பக்கத்து நெசவாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டே பேசினர்.
“பாப்பாரப் பொணம். பாப்பாருங்கதான் தூக்கணும். தூக்குகிராக்கிங்க நாலும் கேக்கற கூலிய பாத்தியா?”
அவர்கள் தூக்கி வருவதற்குக் கேட்ட தொகை மிகவும் அதிகமாயிருந்தது. பேரம் பேச முடியவில்லை. அவர்களுக்கும் தெருவாசி நெசவாளர்களுக்கும் வாக்குவாதம்முற்றியது. தங்களால் வசந்தாக்கா சொன்ன கூலி பணத்துக்கெல்லாம் தூக்கமுடியாதென்று கூறிவிட்டு விடுவிடுவென எழுந்து போயே போய்விட்டனர். வசந்தாக்காவுக்கு என்ன செய்வதென்றே விளங்கவில்லை. நேரமாகிக்கொண்டேயிருந்தது. இந்த சமயம் தெருவாசி நெசவாளர்கள் முன்னால் வந்தார்கள். கிடுகிடுவென பச்சை மூங்கில்களையும் பச்சைத் தென்னங்கீற்றுப் படலையும் கொண்டு பாடையைத் தயாரித்து முடித்தனர். வறுமை வலிமைமிக்கது. அது சாஸ்திரம் முதலானவற்றை ஒதுக்கிவிட்டு யதார்த்தத்திடம் போய்ச் சேருகிறது. காரைச் சந்து நெசவாள அன்பர்கள் முன்வந்து அப்பாவை தூக்கிச் செல்லுவதில் ஆட்சேபணையுண்டுமா என அம்மாவிடமும் வசந்தாக்காவிடமும் கேட்டுக்கொண்டு எவ்வித மறுப்புமில்லையன்றதும் அப்பாவை அவர்கள் தூக்கிக்கொண்டனர். இரவுதான் ஓட்டலிலிருந்து எல்லோருக்கும் எடுப்புச் சாப்பாடு கொண்டு வருவதாய்க் கூறிவிட்டு ராஜு நாயக்கர், “களரம்பட்டி காடுதானே?” என்று கேட்டுவிட்டு சைக்கிளில் ஏறி முன்னால் சென்றார். வெட்டியான் எதாவது கிறுக்குத்தனம் செய்யாமலிருக்க, தான் முன்னால் போவதாய்க் கூறிச் சென்றார். ராமு தீச்சட்டியைத் தூக்கிக்கொண்டான். அப்பாவின் இறுதி யாத்திரை தொடங்கிற்று.
—
எழுதியவர்:-

✍🏻 விட்டல்ராவ்
******************************************************************************
புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு
2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை 49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும் ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும், புத்தக்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayamஇப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

