சோடா, கலர், டீ, பால், காபி
வகுப்பறைக் கதைகள் – 35
– விட்டல்ராவ்
மகிமைநாதன் சுற்றறிக்கையோடு வகுப்பறைக்குள் நுழைந்தாலே மாணவர்களுக்கு இரண்டுவிதமான எதிர்பார்ப்புகள் ஏற்படும். எதிர்பார்க்காத விடுமுறை அல்லது நிகழ்ச்சி அல்லது ஆசிரியர்களோடான தலைமையாசிரியரின் ஆலோசனைச் சந்திப்பாக இருந்துவிடும். சம்பளம் கட்டாத மாணவர்களின் பெயர்களை பட்டியலிட்டு வகுப்பறைக்கு அனுப்புவதென்பதெல்லாம் சிறுமலர் உயர்நிலைப்பள்ளியில் என்றுமே கிடையாது. அவ்வாறு பட்டியல் அனுப்பி அந்த மாணவர்களின் மனதை நோகச் செய்யும் பழக்கமே அங்கு கிடையாது. பள்ளியின் வகுப்பறைகளுக்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி மாணவர்களின் கௌரவம் என்பது சிறுமலர் உயர்நிலைப் பள்ளியின் கௌரவமுமாகும். அனேகமாக எல்லா மாணவர்களும் கடைசித் தேதிக்குள், குறிப்பிட்ட தேதியிலேயே சம்பளம் செலுத்தியிருப்பார்கள். பெற்றோர்களுக்கும் ஞபாகமிருந்தபடியே இருக்கும். அப்படியும் அரிதாக சம்பளம் கட்டத் தவறிய மாணவர்களின் பெயர்கள் ஒரு சிறுதாளில் டைப் செய்து அலுவலக நோட்டீசு போர்டில் குத்திவைக்கப்பட்டிருக்கும். வகுப்பாசிரியரே நாசூக்காக மற்றவர்கள் அறியாதபடிக்கு “நோட்டீஸ் போர்டைப் போய்ப் பாரு” என்று சொல்லி வைப்பார். இந்த சுற்றறிக்கையை மகிமை கொண்டு வந்து கொடுத்தவுடன் வகுப்பாசிரியர் சுப்பாராவ் படித்துப் பார்த்துவிட்டு சிறுபுன்னகையோடு கூறினார்.
“இன்னைக்கு மூணு மணிக்கு ஃபிலிம் ஷோ இருக்கு.” உடனே வகுப்பறையில் இதுவரை நிலவியிருந்த அமைதியும் நிசப்தமும் விருட்டென நாசமாகத் தொடங்கியது. சிலர் அப்போதே புத்தகங்களைத் தம் பையில் போட்டுக் கொள்ளுவதாயிருந்தனர். மதிய உணவு இடைவெளிக்குப் பின் தொடங்கிய வகுப்பு – ஆங்கில உப பாடமான – நான்டீ டேய்ல் என்ற பாடம் – TREASURE ISELAND – புதையில் தீவு. ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன் எழுதிய ஒரு சாகச நாவல். கடற்கொள்ளைக்காரன் ஒருவன், தான் கொள்ளையடித்ததையெல்லாம் பெரும் புதையலாக யாருமறியா தீவு ஒன்றில் புதைத்து வைத்துவிட்டு இறந்து போகிறாள். தீவில் ஒருவன் பைத்தியம்போல் திரிபவன். புதையல் இருக்குமிடம் அறிந்தவன் இவன். தீவின் வரைபடம் வழி ஆகியவை வேறொருவன் வசம். வரைபடத்தைக் கைப்பற்றி தீவையடைந்து, புதையலை அடைய இரு குழுக்கள் முயன்று மோதுகின்றன. ஒரு காலையிழந்து மரக்காலுடன் ஒரு கண்ணையிழந்தவனுமான கடற்கொள்ளைக்காரன் லாங் ஜான் சில்வர் என்பவனைத் தலைவனாய்க் கொண்ட குழு ஒன்று. இவர்களின் கப்பல் ஜாலி ரோகர்ஸ் [JOLLY ROGERS] என்பது. மற்றொரு குழு பிரபுக்கள், டாக்டர் முதலானோருடையது. சிறுவன் ஒருவன் இக்குழுவில் கதாநாயக அந்தஸ்து கொண்டவன். தீவில் துப்பாக்கிச் சண்டை. பைத்தியக்காரன் நல்லவர்கள் பக்கம் சேர, லாங் ஜான் சில்வர் குழு தோல்வியுற்று ஓட, புதையில் நல்லவர்களைச் சேர கதை முடிகிறது.
சுப்பாராவ் சார் கதையின் முன் பாதியை நடத்தி முடித்திருப்பவர் மறுபாதியை எடுத்துக் கொண்டபோதுதான் வகுப்பறை நிசப்தத்தை இழக்கத் தொடங்கியிருந்தது. மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருந்த்து. சார் புத்தகத்தை மூடி வைத்தார். கதையில் கடற்கொள்ளைக்காரர்கள் பாடும் “SIXTEEN MEN ON THE OLDMAN’S CHEST, YO HO HO AND THE BOTTLE OF RUM. SIXTEEN MEN ON THE DEADMAN’S CHEST, YO HO HO AND THE BOTTLE OF RUM” என்ற புகழ்பெற்ற பாடலைப் பாடிக்கொண்டே தன் பத்தகப் பையை மூடினான் சாமுவேல் ஹாரிஸ் சித்தரஞ்சன் தாஸ். அவனது கால்சட்டைப் பாக்கெட்டிலிருந்து அவன் எப்போதும் தன்னுடன் எடுத்துவரும் சிறிய ஹார்மோனிகா- மௌத் ஆர்கன்- நழுவி கீழே விழுந்ததுகூட அவனுக்குத் தெரியவில்லை. அதை எடுத்து அவனிடம் தருவதற்கு முன் அதை ஒரு கணம் கவனித்தேன். “பக் – ஜெர்மனி” எனப் பொறிக்கப்பட்டிருந்தது. சித்ரா அந்த சின்ன ஹார்மோனிகா வாத்தியத்தைக் கொண்டே சின்னச் சின்ன இசைக் கீற்றுகளை வாசித்துக் காட்டுவான். தேவாலயத்திலெல்லாம் முழுமையாக மேனாட்டு இசைக் கோர்வைக்கேற்ப வாசிக்கவென்றே அவனப்பா வாங்கித் தந்த பெரிய மாண்டர் ஹார்மோனிகா ஒன்றும் அவனிடமுண்டு.
“சித்ரா, ஒன்னோட மௌத்தார்கன்,” என்று சொல்லி நீட்டவும் நன்றியோடு வாங்கிக்கொண்டான்.
ஏற்கெனவே வால்ட் டிஸ்னியின் இரண்டு மூன்று கார்டூன் துண்டுத் திரைப்படங்கள் போட்டுக் காட்டப்பட்டிருந்தன. மரியசூசையும் திவ்வியநாதனும் திரைப்பட புராஜெக்டரை இயக்குவார்கள். ஒவ்வொரு வகுப்பறையிலிருந்தும் மாணவர்கள் தம் புத்தகப்பைகளோடு வெளியில் வந்து வரிசையில் நின்று ரயில் வண்டி நகருவது மாதிரி நகர்ந்து புனித இஞ்ஞாசிரியர் கூடத்துக்குள் நுழைந்தனர். அருளப்பன் சாரும் மகிமைநாதனும் மாணவர்களை வகுப்பு வாரியாகவும் உயரம் வாரியாகவும் தக்கபடி அமர்ந்து வசதியாகத் திரையைக் கவனிக்கும் வகையில் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். ரெவரண்ட் ஃபாதர் புஷ்பநாதர், ஃபாதர் அருள் ரொஸாரியோ மற்றும் ஆசிரியர்கள் அமர நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
வைத்தியநாதன் படத்தின் கதைச் சுருக்கத்தை முதலில் சொல்லிவிட்டு, பிறகு படம் ஓட ஓட, ஓடிக்கொண்டிருக்கையிலேயே படத்தைத் தொடர்ந்து காட்சிகள் தோறும் விளக்கி, வசனங்களைத் தமிழாக்கி கூறுவாரென்று அருள் ரொஸாரியோ அறிவித்துவிட்டார். இது கதைத் திரைப்படமாதலாலும் ஈரானியத் திரைப்படமாதலாலும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்றிருந்தது. கார்டூன் படங்கள் காட்டப்படுகையில் எவ்வித விளக்கத்தையும் யாரும் தருவதில்லை. வைத்தியநாதன் மைக்கைப் பிடித்துக்கொண்டு மேடையில் அமர்ந்திருந்தார்.
“இந்த்த் திரைப்படத்தின் பெயர், பிம் என்னும் கழுதை, என்பது. இது ஒரு ஈரான் தேசத்துப் படம். பிரெஞ்சுக்காரர் ஒருவர் டைரக்ட் பண்ணினது” என்று அறிமுகப் பேச்சைக் கூறி முடிக்கையில், சித்தரஞ்சன், “நம்ம ஜோசப் மாஸ்டருக்கு இந்த சினிமாவோட பேரு ரொம்பப் புடிச்சிருக்கும்” என்றான்.
“இது பிம் என்னும் வெறுங் கழுதைதான், காட்டுக் கழுதையில்லே”, என்றான் பிரேம்.
“சும்மா கழுதைனு இருந்தாலே போதும். மாஸ்டருக்கு ரொம்பப் புடிக்கும்” என்றான் ஜெயராமன்.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இந்தத் திரைப்படம் பார்ப்பதில் ஓரளவுக்கு ஆர்வமிருந்தது. அவர்களே படம் ஆரம்பிப்பதற்கு ஆவலோடு அமைதி காத்து அமர்ந்திருந்தனர். அதிலேயே சிலர் படம் தொடங்கும் வரை வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்தனர். ஒன்பது முதல் பதினோறாம் வகுப்பு வரையுள்ள பெரிய மாணவர்களுக்கு பிம் என்னும் கழுதைப் படத்தைப் பார்ப்பதில் ஆர்வமதிகமில்லை. அவர்கள் கூடத்தின் கடைசியில் உட்கார்ந்திருப்பவர்கள். அர்களிலும் பலரகம். ஆங்கிலப் படங்கள் பார்த்திருப்பவர்களும் இந்திப் படங்கள் பாத்திருப்பவர்களும் வெறும் தமிழ்ப் படங்களே பார்த்திருப்பவர்களுமாய். அவரவர்கள் தாங்கள் சமீபத்தில் பார்த்து வைத்த சினிமாக்களைப் பற்றி மற்றவர்களோடு கதை சொல்லி காட்சிகளை சொல்லி சண்டை, பாட்டு, கூத்தையெல்லாம் கூறி நேரத்தைக் கழித்துக் கொண்டும் பிம் என்னும் கழுதைப் படத்தையும் கூடவே அவ்வப்போது பார்த்து வைப்பதுமாயிருந்தார்கள். அவர்கள் மிகத் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஓர் ஏழைச் சிறுவன் அவனது பிம் என்ற அழகிய கழுதைக்குட்டி பற்றிய படம் ஓட ஓட வைத்தியநாதன் சார் தமிழில் ஒவ்வொரு காட்சி சட்டகத்தின் அசைவின்போதும், வசனத்தின்போதும் அற்புதமாக விளக்கிச் சொல்லிக்கொண்டே வந்தார். ஆனால், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களைக் கொண்ட முதல் பத்து வரிசையிலமர்ந்துள்ள மாணவர்களில் கொஞ்சம் பேர், “நல்ல கார்டூனே போட்டிருக்கலாம், இல்லையாப்பா?” என்று சொல்லிக்கொண்டனர். ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தலையைச் சற்று தூக்கி திரையைக் கவனிப்பதும் பிறகு இரவு செய்ய வேண்டிய வீட்டுக் கணக்குகளை தலைகுனிந்து செய்வதும் ஒருவருக்கொருவர் அதைக் காட்டி சரியாயிருக்கிறதாவென கேட்டுக் கொள்ளுவதுமாயிருந்தனர்.
பிள்ளைகள் திரைப்படத்தில் கவனம் செலுத்துகிறார்களா இல்லையா என்பதில் ஆசிரியர்களுக்கு அக்கறை அவசியமில்லை. அவர்கள் படத்தில் ஒன்றிப் போயிருந்தார்கள். ஆர்வம் மேலிட்டு ஆசிரியர்கள் அவ்வப்போது சிறு கையசைப்பு, வாயில் ஒலி, தலையாட்டல் ரசனையையே சித்தரஞ்சன் போன்றோர் கவனிப்பதிலிருந்தார்கள். மறுநாள் வகுப்பறையில் அவர்களை அவர்களின் பீரியடில் பார்க்கையில் மெள்ள நக்கல் செய்துகாட்ட இந்தக் கவனிப்பு இந்த வால்களுக்கு வேண்டியிருந்தது. கடைசி வரிசையில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோறாம் வகப்பு மாணவர்கள் தீவிரமாக வெவ்வேறு வேலைகளில் இறங்கியிருந்தனர். தான் சமீபத்தில் பார்த்து லயித்துப்போன தமிழ் சினிமா ஒன்றின் கதையை காட்சி ரீதியாக இன்னும் அந்தப் படத்தை பார்க்காத அடுத்தவனுக்கு சொல்லிக் கொண்டிருந்தான் ஒருவன். கேட்டுக்கொண்டே இருப்பவன். இடையில், “இப்போ போனா டிக்கெட் கிடைக்குமா, இப்பத்தானே ரிலீசாயிருக்கு?” என்று ஆதங்கத்தோடு கேட்டான். “தரை டிக்கட் கிடைக்காது. பெஞ்சுக்கு ட்ரை பண்ணிப்பாரு” என்றான் பார்த்துவிட்ட பெருமையில் கதை சொல்லுபவன். கதை வளர்ந்து வரும் சுவாரசியத்தில் கதை கேட்டுக்கொண்டு வருபவன் திடீரென்று, “யாரு சிவாஜியா?” என்றான். “இல்லே, ஜெமினி. இதிலே ரெண்டுபேருமே மிலிடெரிக்காரங்களா ஆக்ட் குடுத்திருக்காங்க.” என்றான் கதை சொல்லி. இந்த சமயம்…
“ஓ!” என்று முதல் வரிசையிலுள்ள மாணவர்கள் திரையில், ஓடுவது கண்டு அடைந்த உற்சாகத்தில் கத்தினாரகள். அதைக் கவனிக்காமல் தங்களுக்குள் எதையெதையோ பேசிக்கொண்டேயிருந்தவர்கள் உற்சாக மேலிட்டு ஓவெனக் கத்திய பையன்களைத் தட்டி என்ன, என்னாச்சி, என்ன நடந்து என்று ஆர்வத்தோடு கேட்க, படத்தை மட்டுமே கவனமாய்க் கவனித்து வந்த அந்தப் பையன், இரு, இரு. அப்பறமா சொல்றேன். ஒனக்கு முதல்லேயிருந்து சொல்லணும், இப்ப சொன்னா புரியாது என்பான். இப்போது கேட்டவனும் ஒழுங்காக படத்தை கவனிக்கத் தொடங்கினாலும் இதுவரை சரியாகக் கவனிக்காது வேறெங்கோ கவனமாய் அவ்வாறு ஒத்த எண்ணமுடைய மற்றவருடன் கதைத்துக் கொண்டிருந்து விட்டதால் தொடர்பறுந்த நிலையில் படத்தைப் புரிந்துகொள்ளத் தடுமாறிக் கொண்டிருந்தான்.
பெரிய நடேசன் சோமுவுக்குத்தான் தான் பார்த்துவிட்டு வந்திருக்கும் சினிமா படத்தின் கதையை சொல்லிக்கொண்டிருந்தவன் அதை நிறைவு செய்யும் கட்டத்திற்கு வந்து விட்டிருந்தான். பெரிய நடேசனும் சரி, கதை கேட்கும் சோமுவும் சரி, சரியான டென்ஷனிலிருந்தார்கள்.
“அப்புறம், அப்புறம் என்னாகறது, ஜல்தி சொல்லு” என்றான் சோமு அடக்க முடியாதவனாய். ஆனால் முன் வரிசைப் பிள்ளைகள் ஆனந்தக் கூச்சலிட்டு கைகளைத் தட்டவும் இந்த பின் வரிசை பெரிய பையன்களும் ஒரு கணம் தங்கள் பேச்சை நிறுத்திக் கொண்டு திரையை கவனித்தனர்.
கழுதைக் குட்டி பிம்மை சிறுவனிடமிருந்து அபகரிக்கும் இளவரசன் பிம்மை சித்திரவதை செய்கிறான். அதன் உடல் முழுக்க சுண்ணாம்படித்து நோக விடுகிறான். அதே சமயம் கழுதைக் குட்டியைத் திருடும் கள்வர் கூட்டம் அதைப் படகில் ஏற்றி பக்கத்து தீவிலுள்ள கசாப்புக் கடைக்கு விற்க ஓடுகையில் சிறுவர்களிருவரும் சேர்ந்து அதைக் காப்பாற்ற சிப்பாய்களுடன் பறக்கின்றனர். இறுதிக் காட்சி நெருங்கி விட்டதால் பையன்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருப்புக் கொள்ளவில்லை. கைதட்டலும் கூச்சலுமாய், ஆசிரியர்களின் மகிழ்ச்சிக் குரலக்ள் பையன்களின் இளம் குரல்களோடு கலந்தன. ஆசிரியர்களுக்கும் இருப்புக் கொள்ளவில்லை. எழுந்தே நின்றுவிட்டனர்.
“சரி, நம்ம கதைக்கி வாப்பா” என்றான் ஆர்வத்தோடு சோமு பெரிய நடேசனிடம்,
“எங்கே வுட்டேன்?” என்று கேட்டுக் கொண்டே அடியைப் பிடித்த பாரதப் பட்டனாக தொடர்ந்தான் பெரிய நடேசன்
“ரெண்டு பேரும் ரோஷமா சண்டைப் போடறாங்கப்பா!”
“கத்திச் சண்டையாப்பா?”
“இல்லே. கத்திக்கிட்டே சண்டை. சோஷல் படத்தில கத்திச் சண்டை வருமா? சிவாஜி கத்தி கத்தி வசனம் பேசிக்கிட்டே துப்பாக்கியத் தூக்கி ஜெமனிய குறி பாக்கறாரு.”
“எந்த மாதிரி துப்பாக்கி?”
“நம்ப என்.சி.சி. ரைஃபிள் மாதிரியேப்பா! ஒருவேளை போலீஸ்கார ரைஃபிளாயிருக்கும். வாடகைக்கி வாங்கியிருப்பாங்க. மூணு நிமிஷம் வுடாம வசனம், பேசராருப்பா. என்னா வசனம். என்னா தமிழுங்கறே போ.”
“அந்த மூணு நிமிஷத்தில ஜெமினி சும்மா பாக்கறாரா. டமீல்னு சுடவெண்டியதுதானே.”
“சிவாஜி டயலாக்கை முடிச்சதும் சுட்டுறாரே. ஜெமினி இங்கிலீஷ்ல ரெண்டு வசனம் சொல்லிவிட்டு டமால்னு சுடராறு. ரெண்டு பேரும் மாறி மாறி வசனம் பேசறது, சுட்டுக்கறது. அதுக்குள்ளே அந்த சாவித்திரியும் ராஜமும் ஓடியாந்து கட்டிப் புடிச்சி ஆளுக்கு கொஞ்சம் அளுவாச்சியோட வசனம் பேசி படத்தை முடிக்கிறாங்க” என்றான் பெரிய நடேசன்.
இந்த சம்பவம் புனித இஞ்ஞாசிரியார் கூடத்து திரை வெள்ளையானது. இருளில் மூழ்கிக்கிடந்த கூடம் சட்டென்று விளக்குகள் எரியவும் எல்லோரும் எழுந்து நிற்கையில் மூலையிலிருந்து ஒரு குரல் வந்த்து.
“சோடா கலர்!”
இதையடுத்து உடனே மற்றொரு குரல்,
“சூடா டீ, பால், காபி”
குபீரென ஆறாம் வகுப்பு முதல் பதினோறாம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் பகீரெனச் சிரிக்க, இரு ஃபாதிரிமார்களும் எல்லா ஆசிரியர்களும் அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டேயிருந்தனர். “யாரப்பா அது?” என்று பற்கள் தெரிய சிரிப்போடு கேட்டார். சுப்பாராவ். பழனிவேலனும் திரும்பிப் பார்த்தார்.
ஜெயராமனும் நாகராஜனும் சற்று பயத்தோடு நின்றிருந்தனர். கைத்தட்டல் அவர்களுக்கு பொழிந்தது.
—
எழுதியவர்:-

✍🏻 விட்டல்ராவ்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

