மதுக்கரை முகாம்
வகுப்பறைக் கதைகள் – 37
– விட்டல்ராவ்
“ஸ்கூலுக்கு வரும்போது போகும்போது ஒங்க பெரீப்பா ஹோட்டல் வழியாத்தானே போறே வர்றே?” என்று அன்று கேட்டார் சுப்பாராவ் சார். ஆமாமென்றதும் தம் இறுக்கமான முகத்தில் சிறு புன்னகை இழையோட ஒரு கால்கடுதாசித் தாளையெடுத்து தமிழில் எதையோ எழுதி மடித்துக்கொண்டே கூறினார்.
“ஒங்க பெரீப்பா ஹோட்டலைத்தாண்டி காலேஜ் ரோட்ல நேரு கேஃப் இருக்கு தெரியுமா?” என்றார்.
“சுந்தர் கேஃப்னு பாத்திருக்கேன் சார்” என்றேன்.
“அதேதான், நேரு கேஃப்தான் சுந்தர்கேஃப். சுந்தர்கேஃப்தான் நேருகேஃபும். சரி, அந்த ஹோட்டல் கல்லாவிலேயிருக்கிறவர்கிட்டே இதைக் குடுத்துட்டு, நம்ப ஸ்கூல் பேரையும் எம்பேரையும் சொல்லு. நாளைக்கி ஸ்கூலுக்கு திடீர் ஹாலிடே. சர்குலர் வரும். அதானாலே திடீர் டபுள் பரேடுனு வைத்தியநாத ஐயர் சொல்லிட்டார். சிங்கிள் பரேடுக்குனு நினைச்சி சிங்கிள் டிஃபனுக்குத்தான் சொல்லியிருந்தேன். இப்ப அதை டபுள் டிஃபனா மாத்தி கொண்டு வரச்சொல்லி லெட்டர் குடுத்திருக்கேன். சொல்லி குடுத்துட்டு வா” என்றார் சுப்பாராவ் சார்.
இப்படியொரு சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தபோது பெரிதும் பெருமையாயிருந்தது. இந்த கௌரவ வாய்ப்புகூட மற்றவர்களுக்கு வாய்த்திருக்கவில்லை என்ற பெருமை கொஞ்சம் கர்வத்தையும் கூட சேர்த்துக்கொண்டது. இந்த சந்தர்ப்பத்திற்குப் பிறகு என்.சி.சியில் எனக்கும் ஒரு சிறு அதிகாரம் வழங்கப்பட்டது போன்ற கௌரவ உணர்வு எனக்குள் ஏற்பட்டு பரவியது. எல்லோரும் என்.சி.சி அறிவிப்புப் பலகையைச் சுற்றி நின்றிருந்தார்கள். உயரமானவர்களுக்குப் பின்னால் நிற்கும் குள்ளமானவர்கள் எகிறியெகிறி எம்பியெம்பி பலகையைப் படிக்க முற்பட்டார்கள். அப்படியும் முடியவில்லை என்றானதும் சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும் என்ற கதையாய் பிரேம், “ஆ, இது என்ன பிரமாத நோட்டீஸ், அப்புறமா பாத்தா போச்சி, சும்மா பறக்காறாங்க”, என்று சொல்லிக்கொண்டே நகர்ந்தான். அதைக் கவனித்துவிட்ட கனகு, “ஏய், குள்ளா” என்றான்.
அது என்.சி.சி. வருடாந்திர முகாம் குறித்த அறிக்கை. வருடாந்திர முகாம் என்ன ஏது எப்படி எப்போது எங்கே என்ற விவரங்களை அன்றைய பரேடின் முடிவில் ஸ்டானிஸ்லாஸ் விளக்கிக் கொண்டிருந்தார். கேட்பதற்கு சிலிர்க்க வைத்தது. நாள் நெருங்கி விட்டது. முகாமுக்கான பயண விவரத்தோடு சில கூடுதல் பொருட்களையும் வினியோகித்தனர். அந்த பத்து நாள் முகாம் வாழ்க்கையும் அதன் அற்புத அனுபவமும் கற்பனைக்குள் அடங்க மறுப்பவை. ஒவ்வொருவரும் தம் முன் அனுபவங்களை நினைவு கூர்ந்து சொல்லி புதிய கேடட்டுகளின் ஆர்வத்தை கிளப்பிவிட்ட அதே சமயம் பழைய கேடட்டுகளுக்கும் ஒவ்வொரு முகாமும் புத்தம் புதியதாகவே எதிர்பார்ப்புகளோடு தோன்றியது. முகாம் கோயம்புத்தூருக்கும் பாலக்காட்டுக்கும் இடையிலுள்ள மதுக்கரையில் இடம் பெறுகிறது என்ற தகவலையடுத்து பல தகவல்கள். மதுக்கரையில் பெரிய சிமெண்ட் தொழிற்சாலை இருப்பதை ஏற்கெனவே பாடப்புத்தகத்தில் படித்தறிந்த தகவல். கேள்வித் தாளில் “ஒற்றை சொல்” வினா விடையில் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்வியாதலால், மதுக்கரையின் பெயர் சிமெண்ட் தொழிற்சாலையால் மனதில் பதிவான ஒன்று. அங்கே மலையடிவாரத்தை ஒட்டியமைந்துள்ள பெரிய இந்திய இராணுவ மையத்தில்தான் என்.சி.சி.முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
“சாயங்காலம் எல்லாம் வந்து கிட் பேக் வாங்கிப் போகலாம்” என்றார் ஸ்டானிஸ்லாஸ். பெரிய அளவு இராணுவ கருப்பு நிற கிட் பை அது. ஆளுக்கு ஒரு அலுமினிய தட்டும் பிடி வைத்த – பால், டீ, தண்ணீர் என சகலத்தையும் பருக அலுமினிய மக் ஒன்றையும் வினியோகித்தனர். கேடட்டுகள் தங்கள் உடைமைகள் அனைத்தையும் அந்தக் கருப்பு நிற இராணுவப் பையில் போட்டு எடுத்து வர வேண்டும்.
“முரட்டுத்தனமான கம்பளி பிளாங்கெட் ஒண்ணையும் ஆர்மி ஜமுக்காளம் ஒண்ணையும் மதுக்கரை காம்ப்-ல குடுப்பாங்க…” என்றான் பிரேம்.
“ரோல் கால் முக்கியம். சாயங்காலம் ஆறு மணிக்கு ரோல் காலிருக்கும். வெள்ளை பாண்ட், சட்டை தச்சிக்காதவங்க இப்பவே தச்சி வச்சிக்கங்க. புது கேடட்டங்க. என்.சி.சி. டை வாங்கணும்.என்.சி.சி கலர் தெரியுமா, ப்ளூ, டார்க் ப்ளூ, ரெட் விலை இருபது ரூபா” என்றார் ஸ்டானிஸ்லாஸ். சுப்பாராவ் சாரிடம் இதை சொன்னபோது யோசித்தார், “இதுக்கெல்லாம் ஒங்க பெரியப்பா பணம் குடுப்பாரானு யோசிக்கறேன். சரி, அவர்தானே கார்டியன் கையெழுத்து போட்டிருக்கார்,” என்றார்.
மறுதினமே சுப்பாராவ் என்னை தையற்காரர் ஒருவரிடம் வெள்ளைத் துணிகளோடு அனுப்பி வைத்து அளவெடுத்துத் தைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். டையும் வந்து சேர்ந்தது. டை கட்டும் பயிற்சியை மூத்த கேட்டுகள் கற்றுத் தந்தனர். ஒவ்வொருவரும் ஒரு வெள்ளை அட்டைத் துண்டில் தம் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர் முதலானவற்றை ஆங்கிலத்தில் எழுதி கருப்பு இராணுவ கிட் பையின் மேல் ஒட்டி வைக்க வேண்டும் என்பது ஒரு கட்டளை. இந்தப் பைகள் யாவும் இராணுவ லாரியில் ஏற்றப்பட்டு சேலம் ரெயில்வே சந்திப்பு நிலையத்துக்குப் போய்ச் சேர்ந்தன.
“நாம்ப எல்லாம் பஸ்ல ஏறி ஜங்ஷனுக்குப் போகணுமா?”
“இல்லையில்ல. மிலிடெரி டிரக் வரும். அதில ஏத்திக் கொண்டு போவாங்க” பாலன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இரண்டு இராணுவ லாரிகள் பள்ளிக்கூடத்துக் கேடட்டுக்குள் மெதுவாக நுழைந்து வந்து நின்றன. எல்லா கேடட்டுகளும் ஆசிரிய அதிகாரிகளும் நான்கு அசல் இராணுவ சுபேதார்கள் கூட வர லாரிகளில் ஏறிக்கொண்டு புகைவண்டி நிலையத்தை அடைந்தோம். ரெயில்வே ஸ்டேஷன் நடைமேடை முழுக்க காக்கி சீருடையணிந்த இளம் கேடட்டுகளாலும் அதிகாரிகளாலும் இராணுவ அதிகாரிகளாலும் அடைத்தாற் போலிருந்தது. அடுத்தடுத்து முனிசிபல் உயர்நிலைப்பள்ளி, லண்டன் மிஷன் பள்ளி, மகாஜன பள்ளி, ஏற்காடு மாண்ட்ஃபோர்ட் ஆங்கிலப் பள்ளிகளின் கேடட்டுகளும் தள்ளித்தள்ளி நின்றிருந்தார்கள். கோயமுத்தூர் வரை ரயில் பயணத்துக்காக விசேஷப் பெட்டிகள் சிறப்பு முன்பதிவு செய்யப்பட்டு ஒவ்வொரு பெட்டியிலும் இராணுவ சுபேதார் ஒருவர் கூட வந்தார். எல்லாமே ஒரு வித கச்சிதமான இராணுவ ஒழுங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தபடியிருந்தன. ஆனால் இதே இராணுவ வழியிலான ஒழுக்கம் வகுப்பறைக்குள்ளும், வகுப்பறைக்கு வெளியிலும் மாணவர்களால், என்.சி.சி.யின் வட்டத்துக்குள்ளிருந்து வெளிவந்தவுடன் ஏன் பின்பற்ற முடியவில்லை என்ற ஒரு முள் என்னுள் தைத்துக் கொண்டேயிருக்கும். முகாமுக்கு முன்பாக இரு மாதங்களாய் தேர்ந்தெடுக்கப்பட்ட கேடட்டுகளைக் கொண்ட ப்யூகிள் – பார்டி எனும் இராணுவ இசைக்குழு இராணுவ பேண்ட் மாஸ்டர் ஒருவரால் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. ப்யூகிள் எனும் உலோக குழல் பாண்ட், பைப் கருவி, கழுத்தில் மாட்டித் தொங்கவிட்ட பெரிய உலோகக் பேண்ட் இவற்றை வெவ்வேறு வித நடைப்பயிற்சி சமயங்களுக்கு ஏற்ப வாசிக்கும் கேடட் கலைஞர்களையும் இரு சிறிய, பெரிய ட்ரம் அடிக்கும் கலைஞர்களையும் கடுமையான பயிற்சிகளால் மாலை தோறும் இராணுவ இசைக் கலைஞர்களைக் கொண்டு தயாரித்து வந்தனர். இராணுவ மார்ச் பாஸ்ட் எனும் நடைப்பயிற்சி கொடியேற்றம், கொடியிறக்கம், வீரவணக்கம், இறுதி மரியாதை, தினசரி பயிற்சிகள் முடிவுறும் தருணம் என்று பல்வேறு இராணுவ நடவடிக்கைகளின்போது அவற்றுக்கு ஏற்றாற்போல வெவ்வேறு மிலிடெரி பாண்டு இசைக் கோர்வைகளை இந்த மாணவ அணி, அசல் இராணுவ முறையிலேயே மிக நன்கு பயிற்சியளிக்கப்பட்டு முகாமுக்கு தயார் நிலையிருந்தது.
கோவை ரயில் நிலையத்தில் தயாராக நிறுத்தப்பட்டிருந்த பெரிய இராணுவ லாரிகளில் கிட் பைகள் அடுக்கப்பட்டன. ரயில் நிலையத்தையடுத்து இருந்தது அந்த பெரிய சைவ ஓட்டல் சீதாராம விலாஸ். சுப்பாராவ் சார்தான் அந்த ஓட்டலை சென்ற வருட முகாமின்போதும் கேடட்டுகளின் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்ததாகச் சொன்ன பிரேம், “நம்ம சார் இந்த ஓட்டலை என்.சி.சி. பசங்களுக்கு காண்ட்ராக்ட் எடுத்திருப்பாரு”, என்றான்.
“அங்கே நேரு கேஃப், பரேடப்ப டிஃபனுக்கு இங்கே கேம்ப அப்போ லஞ்சுக்கு இந்த ஓட்டல்… சாருக்கு ஒவ்வொரு ஊர்லயும் ஓட்டலிருக்கும் போல” என்றான் கனகு,
எல்லா கேடட்டுகளையும் ஏற்றி நிரப்பிக் கொண்டு இராணுவ லாரிகள் மதுக்கரை முகாம் பகுதியைச் சென்றடைந்தது. சுற்றிலும் மலைகளும் அடர்ந்த காடுகளுமாயிருந்த இராணுவ மையத்தில் ஆங்காங்கே பெரிய பெரிய மைதானங்கள் இருந்தன. இராணுவத்தினர் வசிக்கும் பில்லெட் என்றழைக்கப்படும் பர்ண சாலைகள் போன்ற கட்டிடங்களைக் கடந்து என்.சி.சி.கேடட்டுகள் பத்து நாட்களுக்கு தற்காலிகமாய் முகாமடித்துத் தங்கியிருந்தது போக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை அடைந்தவுடனே இராணுவ அதிகாரிகள் எங்களுக்கு முதல் கட்டளையாக சொல்லி வைத்தது :- உழைப்பு.
எல்லோருக்கும் மண்வெட்டி வழங்கப்பட்டது. ஆங்காங்கே முளைத்துள்ள முட்செடிகள், பிற புதர்களைக் கெல்லி எறிந்து முடித்தவுடன் அடுத்த கட்டளை, கூடாரங்கள் போடுவது. இது எளிதல்ல. கூடாரமடிப்பது பற்றி ஏற்கெனவே பாடம் எடுத்து குறிப்புகளும் எழுதியிருந்தாலும் நடைமுறையில் கூடாரம் அமைப்பது எளிதல்லவென்று புரிந்தது. இராணுவ சிப்பாய்கள் எங்களை இணைத்துக் கொண்டு இராணுவ பச்சைநிற கூடாரங்களை அமைத்து முடித்தனர். அக்கூடாரங்கள் காற்று, மழை என்ற எந்த இயற்கை உபாதைகளுக்கும்அடிபணியாதவை. ஒவ்வொரு கூடாரத்துக்குள்ளும் பயணப்பை ஒன்றில் பல்வே அறைகள் இருப்பது போல, அதில் தங்குபவர்கள் தம் பற்பசை, பிரஷ், சோப், சீப்பு ஆகியவற்றை தமக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு நேர் மேலே கூடார தார்பாலின் கூரையில் பைகள் போல அமைப்புகளிருந்தன. ஒரு கூடாரத்தில் பத்து கேடட்டுகள் மற்றும் அவர்களின் அணித் தலைவன் என ஒரு மூத்த கேடட் சார்ஜெண்டையும் தங்கிக்கொள்ள வைத்தனர். அடுத்த கட்டளையை இராணுவ சுபேதார் பிறப்பித்துவிட்டார்.
“இப்பெழ்து, பிக்காக்ஸ் எடுத்துக்கோணும். ஞான் படிப்பிச்சிக் கொடுத்த மாதிரி பள்ளம் எடுக்கோணும். ஏது பள்ளம், ஸ்னேக் ட்ரெஞ்சாக்கும். இது பக்கா ஜங்கிள், அறியோ, ராத்ரியிலே பாம்பு வர்ரான், அது வாராம இரிக்கான் எண்டால், ஸ்னேக் ட்ரெஞ்சு எடுக்காணும். அது கழிஞ்ச சேஷம் டீ பிரேக். பின்னே டிரில். பின்னே ரோல் கால், நைட் டின்னர். கமான்…”
ரூட் மார்ச் என்று ஒரு நடைப்பயிற்சி என்.சி.சி. முகாமில் முக்கியமானது. பாதி நடையும் பாதி ஓட்டமும் சேர்ந்த ஒரு நடைப்பயிற்சி. இதை அடுத்த நாள் காலை ஆறுமணிக்கு செய்ய வெண்டுமென அன்றைய ரோல் காலின்போது சொல்லிவிட்டார்கள்.
“நாளை பதினோறு மணியிலேந்து அஞ்சுவரை க்ளாஸ் இருக்கும். நாளை க்ளாஸ்ல ஜட்ஜிங் டிஸ்டன்ஸ் அதாவது தூரத்தை தீர்மானிக்கிறத பத்தி க்ளாஸ்,” என்றார் சுபேதார் பணிக்கர்.
இராணுவ காண்டீன் மிகப்பெரியது. இராணுவத்தினரால் சூழப்பட்டிருந்த அந்த காண்டீனில் என்.சி.சி. கேடட்டுகளும் போய் தேவையானதை காசு வைத்திருப்பவர்கள் வாங்கிக் கொண்டனர். பிரேமும் பாலனும் லவ்-ஓ, வாங்கித் தந்தனர். குடிப்பதற்கு மிக்க சுவையான பாட்டில் பானம் லவ்-ஓ.சட்டென்று பாலன் என்னை இடித்து, “அங்க பாரு” என்றான். ஒரு மூலையில் ஸ்டூல் மீதமர்ந்து இரண்டு இராணுவச் சிப்பாய்கள் புகை பிடித்தபடியே என்.சி.சி. மாணவர்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
‘என்ன?” என்று கேட்டதற்கு,
“சும்மா கவனி, அப்புறமா சொல்றேன்?” என்றான் பாலன். அந்த சிப்பாய்கள் என்.சி.சி மாணவர்களில் புஷ்டியாகவும் சிவப்பாகவும் இருக்கும் பையன்களின் துடைப் பகுதிக்கே தம் கண் பார்வையைக் குறிவைப்பது புரிந்தது.
“ரொம்ப நாளா தனியாயிருக்காங்க. ராமசாமியைக் கேளு. போன வருஷம் சின்ன கலாட்டா நடந்திச்சி. ஸ்டானிஸ்லாஸ் சார்தான் சமாதானம் பண்ணி வச்சார்.” என்றான் பிரேம்.
ரூட் மார்ச் ஓட்டமும் நடையுமாய் தொடங்கியது. சார்ஜெண்ட் நாராயண் எங்கள் செக்ஷனுக்கும் கூடாரத்துக்கும் தலைவனாதலால், காலையில் அலுமினிய கெட்டிலோடு மெஸ்ஸுக்குப்போய் தேநீரும் பிஸ்கட்டும் கொண்டு வந்து டெண்டில் வினியோகிப்பதும் அவனுக்கான கடமையே. ரூட் மார்ச் ஓட்டத்தின்போது காலையில் குடித்தே தேநீர் வயிற்றில் தாளத்தோடு குதித்தது. அனேகமாய் அந்த இராணுவ முகாமையே சுற்றி வளைத்துக் கொண்டாற்போல ஓடும் மண்பாதையில் நூற்றுக்கணக்கான கேடட்டுகள் தங்களுக்கு வழங்கப்பட்ட இராணுவ பச்சை நிற பனியனில், பள்ளியின் என்.சி.சி அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் துணையில் ஓடிவர, ஓடி முடித்துக் களைத்து நின்றனர். பிறகும் ஒரு மணி நேரத்துக்கு கடுமையான உடற்பயிற்சி. அது முடிந்ததும் சிற்றுண்டி, காபி. குளியலையடுத்து மீண்டும் உடற்பயிற்சி. பதினோறு மணி தேநீரையடுத்து ஒரு மணிநேரத்துக்கு பாடம். அன்று தூரத்தை தீர்மானிக்கும் “ஜட்ஜிங் டிஸ்டன்ஸ்” என்ற முக்கியமான இராணுவ வகுப்பைத் தொடங்கினார் சுபேதார் பணிக்கர். மிக மிக அருமையான விஷயம். ஆர்வத்தைத் தூண்டும் ஒன்று. ஓர் இராணுவ ப்ளட்டூன் எதிரி காட்டுப் பகுதியில் பாராசூட் மூலம் இரவில் இறக்கிவிடப்படுகிறது. கண்ணைக்கட்டி காட்டில் விடுவது என்பது சரியான சொல். ப்ளட்டூன் தலைவர் வரைபடத்தையும் திசை காட்டும் காம்பஸ் கருவியையும் வைத்துக்கொண்டு தமது ப்ளட்டூன் வீரர்கள் இருக்கும் பகுதியின் திசையையும் அது தமது இலக்கிற்கு சுமார் இவ்வளவு மைல் தொலைவிலிருக்கலாமென்பதையும் கணக்கிட்டு அந்தத் திசையில் ஆயுதமேந்தி முன்னேறும் பயிற்சியை சுபேதார் அற்புதமாய் விளக்கிக்கொண்டிருந்தார்.
மாலை ஐந்து முதல் ஆறுவரை அருகிலுள்ள காட்டுக்கு நடத்தியே அழைத்துச் சென்று காண்டீன் இருக்குமிடத்தின் திசையையும் தூரத்தையும் கொடுக்கப்பட்ட வரைபடத்தையும் காம்பஸையும் வைத்து கண்டறியச் சொன்னார்கள். சரியாக கண்டுசொன்ன ப்ளட்டூனுக்கு கைதட்டலும், “ஹீர்ரா ஹிப்… ஹிப் ஹுர்ரா” என கூறியும் பாராட்டினர்.
“சாயங்காலம் நம்ம செக்ஷன் கேடட்டுங்களுக்கு ரைஃபிள் ஷுட்டிங் பிராக்டீசிருக்கு” என்று சொன்னான் சார்ஜெண்ட் நாராயண். எல்லோரையும் ஏற்றிக்கொண்டு இராணுவ லாரி மலையடிவாரத்தை அடைந்தது.
“நம்மள்டே ரைபள் பொண்டாட்டி மாதிரியாக்கும். ஓரொரு சோல்ஜரும் ரைபளை பொண்டாட்டியா பாவிக்கணும். மனசிலாயி?” என்றார் சுபேதார் பணிக்கர். பிறகு, “இப்பொழுது க்ராலிங் செய்யணும்” என்றுகூறி புதிய சுபேதார் ஒருவர் எல்லோரையும் ரைஃபிள்களை எடுத்துக்கொள்ளச் சொன்னார்.
“ஈதெல்லாம் .22 ரைஃபிள். அதாவது ரைஃபிள் புல்லட்டோட டையா அளவு பாயிண்ட் டூ டூ”
“எனிமி பக்கத்தில போயிட்டா சுடக்கூடாது. பயனட் சார்ஜ் பண்ணணும். பயனட் கத்திய ரைஃபிளிலே இப்பிடி ஃபிக்ஸ் செய்யணும்.”
துப்பாக்கியை முன்னால் ஏந்திக்கொண்டு கல்லும் முள்ளும் கலந்த முரட்டு பூமியில் படுத்து தவழ்ந்து ஊர்ந்து செல்ல கட்டளை பிறப்பிக்கப்பட்டு அதைச் செய்து முடிக்கையில் முட்டியெங்கும் சிராய்ப்புகளால் இரத்தம் கசிந்தது. அதெல்லாம் சகஜம்தான் என்றார் சுபேதார்.
“லுக் அட் தி டார்கெட்” என்றார். சற்று தூரத்தில் ஒரு சிறு மேட்டின் மீது வட்டங்கள் வரையப்பட்ட இலக்குகள் தள்ளித் தள்ளி நிறுத்தப்பட்டிருந்தன. பெரிய வட்டத்துக்குள் இடம் விட்டு சற்று சிறிய வட்டம். குறைந்து கொண்டே வந்த வட்டங்களின் மைய்ய இலக்கை அடிப்பதே நோக்கம். ‘BULL” என்றழைக்கப்படும் அந்த சிறிய கரிய நிற மைய்ய இலக்கையே இளம் கேடட்டுகளின் கண்கள் நோக்கின.
‘எய்ம்.தி புல்… ஒன் டூ த்ரீ, ஃபயர்” சுபேதார் கத்தினார். ஆங்கில கௌபாய் சினிமாக்களிலும் யுத்தப் படங்களிலும் வெடித்த துப்பாக்கிச் சத்தம்போல இந்த இராணுவ பயிற்சி பாயிண்ட் டூ டூ [.22] ரைஃபிள் சத்தம் எழுப்பவில்லை. எதோ ஓலைப் பட்டாசு வெடிக்கும் ஓசை போல பட்… பட்… என்றது. ஆனால் ஒவ்வொரு முறை குதிரையை தட்டும்போதும் துப்பாக்கியின் பின்புற பட் தோளை பலமாய் உதைத்தது. அந்த உதையை சமன் செய்ய துப்பாக்கியை நன்கு அழுத்தம் தந்தது முன்னுக்கு தள்ளிப் பிடிக்கச் சொன்னார். சுபேதார் சாப். சத்தம் காதைப் பிளக்கவில்லை. எல்லாருக்கும் ஏமாற்றமாய்ப் போய்விட்டது. பலருடைய குறி சரியில்லை. குண்டுகள் இலக்கைத் தொட்டுக்கூட பார்க்காமல் சிதறியிருந்தன. ஓரிரண்டுபேர் மைய்ய புல்லை நெருங்கிய சிறு வட்டத்துக்குள் சுட்டு துளைத்திருந்தனர். இதற்கு கொஞ்சம் மதிப்பெண்கள் கிடைக்கும். நானும் கோலி விளையாட்டில் நிபுணன்தான். தூரத்திலுள்ள கோலியைக்கூட குறி தவறாது அடித்து எகிறியோட செய்திருக்கிறேன். ஆனாலும் இலக்கை சென்றடையாது அடுத்துள்ள சிறு வட்டத்தையே எனது குண்டுகளும் துளைத்திருந்தன. மதிப்பெண் கிடைக்கும். எல்லோரும் முகாமுக்கு திரும்பிவிட்டோம்.
அன்றைய ரோல்காலில் புதிய அறிவிப்புகளை வைத்தியநாத ஐயர் கூறினார். “நம்ம காம்ப் முடியப்போறது. இன்னும் ரெண்டு நாள்தான். நாளைக்கி டின்னருக்குப் பிறகு வழக்கமா செய்யற கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும் கடைசி நாள் இல்லையா, அதனால கமாண்டிங் ஆபீசர் மேஜர் சோனப்பா அவர்கள் ஊட்டி வெலிங்டனிலிருந்து விஜயம் செய்ய இருக்கிறார். அவருக்கு மரியாதை செய்யறதுக்கு ஸ்பெஷல் பரேடு ஒண்ணை எல்லா கேடட்டுகளும் செய்யறோம். நாளைக்கி அந்த பரேடிருக்கும். காலையிலேயே அதுக்கான பிராக்டிஸ் ஆரம்பிச்சிடுவாங்க. அடுத்து அவருக்கு நல்ல என்டெர்டெய்ன்மெண்டை நாம குடுத்தாகணும்.நாளைக்கி ராத்திரி நீங்க தரப்போற கேளிக்கை நிகழ்ச்சி ஸ்பெஷலாயிருக்கணும். இன்னொரு முக்கிய செய்தி, எண்டெர்டெயின்மெண்ட் ஐட்டத்திலே ரோம்ப பிரம்மாதமாயிருக்கிறதுக்கு முதல், இரண்டு பரிசும் மெரிட் சர்டிபிகேட்டும் தரப்போறாங்க. ரைட், ரோல் கால் ஓவர்” என முடித்தார் முதல்நிலை என்.சி.சி. அதிகாரி வைத்தியநாத ஐயர்.
மதிய உணவு வேளைவரை கடுமையான பயிற்சி நடந்தது. இராணுவ நடைக்கேற்ற இசைப் பயிற்சியும் துப்பாக்கி ஏந்திய பத்து பேர்கொண்ட கேடட்டுகளின் நடை ஒத்திகையும் மிக்க கவனத்தோடு பயற்சி எடுக்கப்பட்டது. மேஜர் சோனப்பா குடகுப் பகுதிக்காரர். ஓரிரண்டு தமிழ் மலையாள சொற்பிரயோகங்களை கற்றிருந்தார். அவருக்கான மரியாதை நிமித்தம் நடத்திய நடையில் யதேச்சையாக ஓரிரு கேடட்டுகள் தம் தலையைச் சற்றே தாழ்த்தியிருந்ததை மேஜரின் கண்கள் கண்டுபிடித்து விட்டன. உடனே புலிபோல கத்தினார்.
“அப்… அப்… மேலே தூக்கிப் பார். தலைய தூக்கிப்பார… செஸ்ட் அப்… உம்” என்று உறுமினார். அன்னைக்கு மதிய உணவும் அவரது வருகையை ஒட்டி அதி சிறப்பாக இருக்கும் வகையில் மெனு இருந்தது.
“இன்னைக்கி படாகானா” என்றான் பிரேம்.
“ஆமா படாகானா” என்று திருப்பிச் சொன்னான் பாலனும். பெருஞ்சோறு என பொருள்படும் அந்த இராணுவ படாகனா என்பது இறைச்சி சோறாக்கும். ஆட்டிறைச்சி பிரியாணி, சால்னா, எலும்புக் குழம்பு, அவித்த முட்டை, தயிர் வெங்காயப் பச்சடி, பாயசம், பழம் என்றிருந்தது. சைவ பிரியாணியும் தேவைப்படுவோருக்கு இருந்தது. கேடட்டுகள் சாப்பிடுகையில் மேஜர் சோனப்பா மெதுவாக நடை நடந்து பார்வையிட்டவாறே வந்தவர் அவ்வப்போது யாராவது ஒரு கேடட்டைப் பார்த்து “FULL? FULL?” – வயிறாற சாப்பிடாயா என எல்லோருக்குமாய் கேட்டபடியே நடந்துபோனார்.
அன்றிரவு சிறப்புக் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகைகளை அந்தந்தப் பள்ளிகளின் அதிகாரிகள் நடத்திப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஸ்டானிஸ்லாசும் சுப்பாராவும் எங்களிடம் பேசிக் கொண்டிருந்தனர். சுப்பாராவ் அந்தப் பொறுப்பை ஏற்றிருந்தவர் என்னைப் பார்த்து, “நீ என்ன,பாட்டு பாடப் போறையா?” என்று கேட்டார்.
“இல்லே” என்றதும் எல்லோரும் ஆச்சரியத்தோடும் ஆவலோடும் திரும்பி தாங்கள் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனதால் கேள்விக்குறியோடு என்னை கவனித்தனர்.
“பின்னே என்னபண்ணப்போற, கதாகாலட்சேபம் பண்ணப்போறையா? என்று நக்கலாக கேட்டுவிட்டு சிரித்தார் சுப்பாராவ்.
“அதுமாதிரி ஆனா வேறே ஒண்ணு பண்ணப்போறேங்க சார். மிமிக்ரி, விகட கச்சேரி” என்றேன்.
“மிமிக்ரியா?”
“ஆமாங்க சார்.”
அந்த முழு முகாமிலும் மிமிக்ரி எனும் விகட கச்சேரியை நான் ஒருவன்தான் செய்து காட்டுவதாயிருந்தது. ஏற்காடு ஆங்கிலப் பள்ளியான மாண்ட்ஃபோர்டு ஸ்கூலின் ஆங்கிலோ இந்திய கேடட்டுகள். அசீரிய படைகள் கார்த்தேஜியரை தாக்கியழித்து வெற்றி கொண்ட கவிதையை, “ASSERIANS CAME DOWN LIKE THE WOLF ON THE FOLD” என்று மேனாட்டு இசையமைத்து இசைக்கருவிகள் துணையிருக்க வெளுத்து வாங்கிவிட்டனர். அடுத்து என் பெயரும், மிமிக்ரிகாரன் என்றும் அறிவிக்கப்பட்டபோது கைதட்டல் கிளம்பியது. குரலைக் கணைத்துக் கொண்டு ஓர் எருமைமாடு கத்திக் கொண்டே ஓடுவதை குரலால் செய்து காட்டி விட்டு, தம்பூராவை மீட்டு சுருதி கூட்டுகையில் எழும்பும் ஒளியை குரலில் வரவழைத்து காட்டினேன். எருமை கத்தும் ஒலிக்கும் தம்பூராவில் சுருதி கூட்ட எழும்பும் ஒலிக்குமுள்ள துல்லிய ஒற்றுமையை விளக்கினேன். பலத்த கைதட்டல் வந்தது. மேஜர் சோனப்பா விடாமல் சிரித்தபடியே இருந்தார். இரண்டாவது ஐட்டமாய், பழைய பெட்ஃபோர்டு லாரி பாரமேற்றிக்கொண்டு ஏற்காடு மலைப்பாதையில் டாப் கியரில் முக்கி முனகி ஏறும் ஓசையை செய்து காட்டியதும் மேலும் கைதட்டலும் சீழ்க்கை ஒலியும்.
எனது இறுதியும் முக்கியமுமான ஐட்டம் வந்தது. TWINKLE TWINKLE LITTLE STAR, HOW I WONDER WHAT YOU ARE… எனும் குழந்தைகளுக்கான ஆங்கிலப் பாடலை பல்வேறு தமிழ் சினிமா பாடல் ராகங்களில் பாடிக்காட்டுவதாய் கூறியதும் நிசப்தம் நிலவிற்று.
“எம்.கே.டி.பாகவதர் தம் புகழ் பெற்ற பாடல் பூமியில் மானிட ஜென்மமடைந்தும் ஓர்… என்ற ராகத்தில் டிவிங்கிள் டிவிங்கிளை பாடினதும் கைதட்டல் எழுந்து அடங்கவில்லை. பாகவதரைப் பார்த்தவிட்டு டி.எம்.சவுந்தராஜன் தம் புகழ்பெற்ற பாடலான ஏரிக்கரை மேலே போறவளே பொன்மயிலே, ராகத்திலும், யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி பாடலின் ராகத்திலும் டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டாரைப் பாடுவதாய் பாடிக்காட்டி பாராட்டை ஏகமாய்ப்பெற்றேன். சுப்பாராவ் எனக்கு முதற்பரிசையும் மாண்ட்ஃபோர்டு பையன்களுக்கு இரண்டாம் பரிசையும் அறிவித்தார். மேஜர் சோனப்பா சான்றிதழையும் ஒரு சின்ன வெள்ளிக்கோப்பையையும் தந்துவிட்டு கைகுலுக்கினார்.
மறுநாள் ஊருக்கு மூட்டை கட்ட வேண்டும்.
****
எழுதியவர்:-

✍🏻 விட்டல்ராவ்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
