வகுப்பறை கதைகள் (Vagupparai Kathaikal) 38:- ஆண்டு மலர் - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | பள்ளிப் பருவத்தின் அந்த இனிமையான, பரபரப்பான நாட்கள் | www.bookday.in |

வகுப்பறைக் கதைகள் 38:- ஆண்டு மலர் – விட்டல்ராவ்

ஆண்டு மலர்

வகுப்பறைக் கதைகள் – 37

– விட்டல்ராவ்

வகுப்பறையில் எல்லோரும் தினசரி இதழ் ஒன்றை படிப்பதன் மூலம் மாணவர்கள் தம் பொது வாசிப்பு பழக்கத்தையும், பொது அறிவையும், தேசிய உலக நாட்டு நடப்புகளையும், பிற செய்திகளையும் அறிந்து கொள்ளுவதையும், ஆங்கில அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் யாவரும் வாசிக்க ஆங்கில இந்தியன் எக்ஸ்பிரஸ் தினசரியை சுப்பாராவ் சாரின் அறிவுரையின்படி வகுப்பறைக்கு வந்து சேருமாறு ஏற்பாடு செய்யப்பட்டு மூன்று மாதங்களாகிறது. எல்லோரும் தலைக்கு இரண்டணா அன்பளித்து வாங்கி வாசித்து சேகாரமாகிக் கிடந்தது. பழைய தினசரி தாள்கள் வகுப்பறையில் சுவரில் பதிக்கப்பட்டுள்ள கதவுகளற்ற திறந்தவெளி அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை ஒருவர் அவ்வப்போது எடுத்து தூசு தட்டி சுத்தப்படுத்தி வைத்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. அதில் துள்ளுப்பாச்சை பூச்சிகளும் அவற்றுக்கு ஏற்ற உணவாக வாணாப் பூச்சிகளும் குடிபுகுந்து மூன்று மாதங்களில் தம் இனப்பெருக்கத்தை தீவிரமாயும் விரைவாயும் ஏற்படுத்தி வகுப்பறையெங்கும் தம் ராஜ்யத்தை விஸ்தாரப்படுத்துவதிலிருந்தது.

“பேப்பர் சேந்திருச்சி. எடுத்துட்டுப்போய் பழைய பேப்பர் கடையிலே போட்டுட்டு வாங்க. வர்ற காசை பேப்பர்காரனுக்கு பணம் கட்டும்போது சேத்திக்கலாம்” என்றார். வகுப்பாசிரியர் சுப்பாராவ். அப்போது புதிய சுற்றறிக்கையோடு மகிமைநாதன் நுழைந்தார். அவர் போனவுடன், சார் சொன்ன செய்தி உற்சாக வரவேற்பை எதிர்கொண்டது.

“ஆண்டு மலர் விஷயம். நம்ம சிறுமலர் பள்ளியோட ஆண்டுமலர் வரப்போறது. நீங்க எல்லாம் எழுதித் தாங்க. தகுந்ததாயிருந்தா சரியாயிருந்தா ஆண்டு மலர்ல பப்ளிஷ் பண்ணுவாங்க. ஒங்க கையெழுத்த பிரிண்டில பாக்கலாம். கதை, கட்டுரை, கவிதை எழுதலாம். படம் போடலாம். கார்டூன் வரையலாம். மூணு மாசமா க்ளாஸ் ரூம்ல வாங்கற நியூஸ் பேப்பரை பாக்கறீங்க. சில பேர் வீட்ல வீக்லி  வாங்குவாங்க. தமிழ் பத்திரிகை வாங்குவாங்க. படிச்சிருப்பீங்க. என்னவெல்லாம் எப்படியெல்லாம் எழுதி அச்சாகியிருக்குனு ஒரு சின்ன ஐடியா புரிஞ்சா போதும். தமிழ்லயும் எழுதலாம். இங்கிலீஷ்லயும் எழுதலாம்” என்றார் சுப்பாராவ்.

உடனே பிரேம்குமார் எழுந்து நின்று சொன்னான்.

“சார்! நாங்கெல்லாம் சேர்ந்து போன ஆனுவல்  லீவ்ல ஒரு கையெழுத்துப் பத்திரிகை தயாரிச்சோம் சார். இவந்தான் அதுக்கு முக்கியமானவன்” என்றுகூறி என்னைக் காட்டினான். அதன் விவரத்தை மேற்கொண்டு நானும் ஜெயராமனும் சொல்லக்கேட்டு ஆசிரியரும், மாணவர்களும் வியந்து பாராட்டிவிட்டு அதைப் பார்க்க விரும்பி கொண்டு வந்து காட்டச் சொன்னார்கள். சுடர் கையெழுத்துப் பத்திரிகை ஹேட்டமணியிடமிருந்த்து. பிரேம் வாங்கி வருவதாகச் சொன்னான்.

“சார, சான்ஸ்கிரிட்ல, இந்தியிலே எழுதித் தர்லாமா?” என்று கேட்டான் ராமானுஜன். அவனப்பாதான் பள்ளியில் இந்திப் பண்டிதர்.

“அதெல்லாம் எதுவும் சர்குலர்ல சொல்லல்லே. ஆண்டு மலர் தயாரிப்புக்கு சாமியார் ஒரு எடிடோரியல் போர்டை நியமிச்சிருக்கார். துரை பழனிவேலன், சித்தனார், சண்முகனார், ஃபாதர் அருள் ரொஸாரியோ, வைத்தியநாத ஐயர் எல்லாம் அதில மெம்பர்ஸ். அவங்ககிட்டே போய் கேக்கணும்” என்றார் சார்.

“நீ என்ன, சான்ஸ்கிரிட்ல ஏதாச்சி எழுதியா?” என்று கேட்டான் பிரேம்.

“இல்லே, சும்மா கேட்டேன்” என்றான் ராமானுஜன்

“அவன் சான்ஸ்கிரிட்ல நூத்துக்கு தொண்ணூருப்பா” என்றான் பாலன்.

“அது டப்பா உருவடிச்சி வாங்கினது. இது ஆண்டு மலர். சொந்தமா யோசிச்சி எழுதணும்” என்றான் பிரேம்.

“சான்ஸ்கிரிட்ல இல்லேனா, இந்தியிலே எழுதலாமே” என்றான் பாச்சா.

‘முடிஞ்சா அவன எழுதிப் பாக்கச் சொல்லு. இல்லேன்னா நீ எழுது” என்றான் பிரேம்.

“சும்மா பேச்செதுக்கய்யா, எழுதிக் குடுங்க. நல்லாயிருந்தா போடறாங்க” என்றான் பாலன்.

ஆனால் பிரேமைத் தவிர அவர்களில் யாருமே எதையுமே எழுத முயற்சிக்கவில்லை.

நான் ஆங்கிலத்திலும் தமிழிலும் முதல் மாணவன் என்றிருந்தாலும் ஆண்டு மலருக்கு தமிழிலேயே எதையாவது எழுதித் தரலாமென யோசித்துக் கொண்டிருந்தேன். நினைவுகளில் பல ஆண்டுகள் பின்னோக்கிப் போனதில் மேட்டூரில் அம்பி சிறுவர் இதழில் சிறுகதைப் போட்டிக்கு கதையெழுதி  அனுப்பி ஆறுதல் பரிசு பெற்றது நினைவுக்கு  வந்தது. எல்லாம் குசுகுசுப்பாகவே நடந்து கொண்டிருந்தது. எல்லாருமே மூடிய புத்தகங்களாகவே நடந்து கொண்டார்கள். தான் செய்யப்போவதைப் பற்றி எதையுமே மற்றவர்களோடு  பகிர்நது கொள்ளுபவர்களாய் இல்லை. பாலன் மெதுவாக என்னைத் தட்டிப்பார்த்தான்.

“எங்கிட்டே மட்டும் சொல்லு. நா யார்கிட்டேயும் சொல்லமாட்டேன். யார்கிட்டேயும் சொல்லமாட்டன்னு தெரியுந்தானே. எங்கிட்ட மாத்திரம் சொல்லு?. என்ன எழுதப்போற?” என்று கேட்டான். நான் எந்தப் பதிலையும் இது விஷயமாய் சட்டென்று தர முடியாதவனாயிருக்க, பாலனே சொன்னான் ரகசியமாக.

“கதை எழுதப்பா, ஒனக்கு நல்லா வரும். எவ்வளோ படிக்கிறே, எவ்வளோ கதை சொல்றே, கதையே எழுது”

“சரி” என்றேன். ஆனால் சொன்னதைச் செய்யவில்லை. என்னமோ தெரியவில்லை, கதை சொல்லுவது உகந்த விஷயமாயிருந்தும், கதை எழுத விருப்பமேயின்றி, கையே வரவில்லை. ஆண்டு மலரில் தம்மை அச்சில் பார்த்துவிட வேண்டுமென்ற ஆர்வ முனைப்பில் நிறைய பேர் கதைகளாய் எழுதித் தள்ளிக் கொண்டிருந்தனர்.  ஜெயராமன் மூன்று கதைகளை எழுதி சித்தனாரிடம் கொடுத்துவிட்டு வந்தான். மூன்றில் எது சிறப்பாயுள்ளதோ அதை ஆண்டு மலரில் போட எடுத்துக்கொள்ளப்படும் என்றார்களாம். மூன்று கதைகளையுமே என்னிடம் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொன்னான். ஜெயராமன். தான் ஆங்கிலத்தில் பாடலொன்றையும் கதையொன்றையும் எழுதிவிட்டதாயும் அவற்றை அவனுடைய அண்ணன் மகாதேவன் சரிபார்த்திருப்பதாயும் பிரேம் சொல்லிக் கொண்டான்.

“குடுத்திட்டியா?”

“இன்னுமில்லே.”

“இந்த மாசத்துக்குள்ளே குடுத்திடணும்.”

“குடுத்தா போச்சி.”

“என்ன கதை?”

“சொல்ல மாட்டேன். ஆண்டு மலர் முடிஞ்சி வெளிவந்ததும் எல்லாரும் படிச்சிப்பாருங்க.”

இதனால் தான் நான் கதை எதுவும் எழுதாது சிறுகட்டுரை ஒன்றை எழுதுவதற்கு வாட்டம் பார்த்துக் கொண்டிருந்தேன். அடுத்த வருடம் பள்ளியிறுதி வகுப்பான ஆறாம் படிவம் எனும் பதினோறாம் வகுப்பு. இவ்விரு வருடங்களில் என்னோடு நான்கைந்தாண்டுகளாய் வளர்ந்து பேசி சிரித்து கோபித்து அழும் சமயம் அழுது எனது அழுகையின் போது என்னைத் தேற்றியும் வந்திருக்கும் என் சகமாணவத் தோழர்கள் ஒவ்வொருவனையும் கொஞ்ச கொஞ்ச நேரத்துக்கு ஒதுக்கி மனக் கண்ணில் உற்று நோக்கி என்னைவிட உயரமான, குள்ளமான, மெலிந்த – என்னைவிட பருமனான, என் சாரீரத்தை விட கனமான சாரீரம் – கீழான கீச்சுக்குரல் வளம் கொண்டிருப்பவர்களையெல்லாம் மனத் திரையில் பார்த்த்தேன். என் வாழ்க்கைத் துன்பங்கள், பட்டினி – பசி – உடுத்த துணிப் பஞ்சம் என்று வறுமையின் பரிமாணங்களை சில கோணங்களில் யோசித்தேன். அப்பாவின் மறைவுக்குப்பின் இன்னும் அம்மா ஒரு ஆயத்த ஆடைக் கடையின் வட நாட்டு முதலாளி வீட்டுக்கு சமையல் காரியம் பார்க்கும் அவலம் நினைவுக்கு வந்த்து. வறுமையை சினிமா வழியேயும் பத்திரிகை கதைகள் வழியேயும் மட்டுமே பார்த்தும் படித்தும் புரிந்து வைத்துக் கொண்டுள்ளவர்களை நினைத்துப் பார்த்தேன்.  எத்தனை விதமான முகத்தோற்றங்கள். முகங்கள்… முகங்கள்… முகங்கள்… மனநிவைக் காட்டும் புஷ்டியான முகம். அடி உதையை வாங்கின மனதை எடுத்துச் சொல்லும் கருவளையம் சூழ்ந்த பலகீனமான கண்களை ஏந்திய முகங்கள் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு மனத்தின் கண்ணாடி. முகத்தில் ஆணுக்கான பருவம் மீசையின் வளர்ச்சி மூலம் தன்னை எடுப்பாக கொண்டு வந்து நிறுத்துகிறது. மீசை – தீரத்தை வீரத்தை, அறிவு முதிர்ச்சியை எல்லாம்கூட தீர்மானிக்க விடுகிறது. ஆம், மீசை என்பதையே நான் ஒரு கட்டுரை வடிவில் கொண்டுவர முடிவு செய்தேன். பாரதியார் நினைவுக்கு வந்தார். ஒருமுறை வகுப்பறையில் வைத்து ஒரு புத்தகத்தை தமிழாசிரியர் ஆறுமுகனார் சில அரிதான புகைப்படங்ளைக் காட்டிக்கொண்டு வந்தார். இரண்டு மூன்று படங்களில் நமது பாரதியார் இருந்தார். நெற்றியில் பெரிய ஐயங்கார் நாமம். ஒதுக்கப்படாது தாறுமாறாய் வளர்ந்து காற்றுக்கு பறக்கும் தாடி மீசை. நிச்சயம் நாமறிந்த நம் மனதில் பதிவாகியுள்ள மாமூல் மீசையுடனான பாரதியார் இல்லை. மனைவியுடன் ஒரு நாமக்கார ஐய்யராக பாரதி, கிட்டதட்ட முழங்கால் வரை தெரியும் கால்களோடு. பாரதியின் எந்த மீசையை ஒரு ஸ்டாண்டார்டாக எடுத்துக்கொள்ளுவது என்ற யோசனை. எவனோ சைத்திரிகன் ஒருவன் வரைந்த பாரதியின் முகமும் மீசையும் ஆறுமுகனார் காட்டிய புகைப்படத்து அசல் பாரதியின் முகம் – மீசையிலிருந்து கணிசமாக வேறுபடுவது என் கட்டுரையில் பதிவாகியது. பாரதிதாசனின் மீசையில் சிக்கனம் இருந்தது. ஹிட்லர் ஏன் தன் மீசையை அவ்வளவு காமெடியாக வைத்துக் கொண்டிருந்தார்.

ராஜு நாயக்கரின் வீட்டுக்கு ஒருமுறைதான் போயிருப்பேன். பெரும்பாலோர் வீட்டில் வண்ண வண்ண சாமிப் படங்கள் சுவரில் மாட்டப்பட்டிருப்பதையே பார்த்து அலுத்துப்போன என் கண்களுக்கு ராஜு நாயக்கரின் வீட்டு வரவேற்பறையின் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் மூன்றே மூன்று கருப்பு – வெள்ளைப் படங்கள் – அவற்றிலுள்ள மனித முகங்கள். அவை தரித்துள்ள வெவ்வேறான மீசை ரகங்கள் என்னை முதலில் வியப்பிலாழ்த்தின. பிறகு கேட்டபோது அவர்களைப் பற்றி ராஜுநாயக்கர் விளக்கமளித்தவுடன் ஒரு மதிப்பீடும் மரியாதையும் ஏற்பட்டது. உலகின் ஒரு பெரும் பகுதியை தம் புரட்சிக் கருத்துக்களாலும் செயல்பாட்டாலும் மாற்றிய ஆளுமைகள் என்று கூறியபடியெ, “இவர் மார்க்ஸ், இவர் லெனின், இவர் ஸ்டாலின்” என்றார். நிறைய படிக்கச் சொன்னார். அவர்களைப் பற்றிய நூல்களை நூல் நிலையத்தில் தேடியெடுத்து படிக்கச் சொன்னார். படத்திலுள்ள முகங்களிலுள்ள மீசைகளை இங்கும் யதேச்சையாக ஒருசிலரின் முகங்களில் பார்க்க நேரிடுகையில் புரட்சிக்கு அவர்களின் மீசைகள் ஒரு அடையாளமோவென எடுத்துக்கொள்ள மனம் யத்தனித்தது. இந்த நிலையிலேயே என் கட்டுரைக்கு கொஞ்சம் புகழ் வாய்ந்த மீசைகள் கிடைத்துவிட்டன.

மீசை என்றே தலைப்பும் தந்து கட்டுரையையும் எழுதி முடித்து, ஆறேழு ரக மீசைகளையும் கருப்பு இந்திய மையால் வரைந்து ஓர் உறையிலிட்டு எடுத்துச் சென்று துரைபழனிவேலன் சாரிடம் சமர்ப்பித்தேன்.

சின்ன நடேசன் பார்ப்பதற்கு தெலுங்கு நடிகர் நாகேசுவரராவ்போல இருப்பதாய் ஒருநாள் பிரேம் சொல்லியதிலிருந்து சின்ன நடேசன் தேவதாசிலிருந்து சமீபத்தில் சென்ட்ரல் திரையரங்கில் திரையிடப்பட்ட திருட்டு ராமன், செஞ்சு லட்சுமி வரை விட்டு வைக்காமல் பார்த்துத் தீர்த்துவிட்டதோடு தன் சிகையையும் அரும்பு தட்டிய மீசையையும் நாகேசுவரராவ் பாணியிலேயே வெட்டி சிரைத்து வைத்திருந்தான். சின்ன நடேசனுக்கு சங்க இலக்கியத்திலும் அகிலனின் தொடர்கதைகளிலும் அலாதி பிரேமை. அவன்தான் முத்தொள்ளாயிரத்திலிருந்து ஒரு காட்சியை உருவியெடுத்து விரிவாக்கி ஒரு கட்டுயை எழுதி சித்தனாரிடம் கொடுத்திருந்தான்.

கெடு முடிந்துவிட்டது. ஆண்டு மலருக்கு வந்திருந்த கையெழுத்துப் பிரதிகள் பரிசீலிக்கப்பட்டு முடிந்தன. ஜெயராமனின் ஒரு கதையும், பிரேமின் ஆங்கிலக் கதையும் ஆண்டு மலரில் வெளியிட தேர்வாகியிருந்தன. என் மீசையும் ஏற்கப்பட்டுவிட்டது. சின்ன நடேசனை இரண்டு முறை ஆசிரியர் குழு வரச்சொல்லி முத்தொள்ளாயிரக் கட்டுரையில் திருத்தங்கள் சிலவற்றை செய்யச் சொல்லி எடுத்துக்கொண்டார்கள். சித்தரஞ்சன் தேவாலய இசை பற்றி அரிதானதொரு கட்டுரையை எழுதியிருந்தான். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. பள்ளிக்கூட டிராயிங் மாஸ்டர் திருஞானம் என்னை வரச் செய்து என் மீசைப் படங்களில் சில திருத்தங்களைக் கூறினார். அதையெல்லாம் தானே செய்து அச்சுக்கும் அனுப்பிவிட்டார். ஆண்டு மலரின் முகப்பை அவர் இரு வண்ணங்களில் மனதை ஈர்க்கும்படி தீட்டியிருந்தார்.

முழு ஆண்டுத் தேர்வு நெருங்கும் சமயம் ஆண்டு மலர் வெளிவந்துவிட்டது. அதில் கதை கட்டுரை கவிதைகள் முதலியன பங்களித்திருக்கும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இலவசமாக ஒரு பிரதி வழங்கப்பட்டது. மற்றவர்கள் வேண்டுவோர் இரண்டு ரூபாய் கொடுத்து பெற்றுக்கொள்ளலாமென்றும் அலுவலக அறிவிப்புப் பலகையில் அறிவிப்பு இருந்தது. ஆண்டு மலர் கைக்குக் கிடைக்கையில் முழு ஆண்டுத் தேர்வு நடந்து வந்தபடியால் அவரவர் படைப்புகளைப் பற்றிய பிறரது கருத்துக்களை அறிய சந்தர்ப்பமே வாய்க்காமல் போய்விட்டது.

***

எழுதியவர்:-

கி. விட்டால் ராவ் - தமிழ் விக்கிப்பீடியா

✍🏻 விட்டல்ராவ்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *