குரூப் ஃபோட்டோ
வகுப்பறைக் கதைகள் – 39
– விட்டல்ராவ்
‘‘உன்னத் தேடி நம்ம ராஜு நாயக்கர் வந்துட்டுப் போனார், போய் என்னானு கேட்டுட்டு வா’’ என்றாள் அம்மா. உடனே புறப்பட்டுப் போனேன்.
‘‘வாப்பா, இப்பத்தான் ஒங்க வீட்லேருந்து வர்ரேன்’’ என்று வரவேற்றார் அவர்.
‘‘அம்மா சொன்னாங்க சார்’’, என்றேன். தம் மூத்த மகளை அழைத்து தேநீர் கொண்டுவர சொல்லியனுப்பினார்.
தேநீரைப் பருகினவாறே அவர் பேச நான் கேட்டுக்கொண்டிருந்தேன். வகுப்பாசிரியரின் எச்சரிக்கை நினைவில் ஓடியது.
‘‘கவனம் முழுசும் படிப்பிலதான் இருக்கணும். இது பப்ளிக் எக்ஸாமினேஷன். ஜாக்கிரதை,’’ என்றார் சுப்பாராவ். சட்டென நினைவலைகளைக் கலைத்தார் ராஜு சார்.
‘‘அர்த்தமாச்சாப்பா, நம்ம நாலு பசங்களுக்கும் ஒரு மூணு மாசத்துக்கு டியூஷன் சொல்லித் தரோணும். அப்பறம் வேணாம். இங்கிலீஷ், தமிழ், முடிஞ்சா கணக்கு. ஒண்ணும் கஷ்டப்பட வேணாம். டியூஷன்னு ஒருத்தரு ஒக்காந்து கூடவே படி, எழுதுனு அதட்டினா, பசங்க ஒக்காந்து படிக்கும் என்றார். ஒன்றும் பளுவாய்த் தோன்றவில்லை. மூத்த பெண் எட்டாவது, மற்ற மூன்றும் ஏழு, ஆறு, அஞ்சு என்ற வரிசையில், இரண்டு பெண்கள் இரண்டு பையன்கள். மாதம் இருபது ரூபாய் தருவதாய் அவர் சொல்லவும் மகிழ்ச்சியோடு சரியென்று ஒப்புக் கொண்டேன். அம்மாவிடம் சொன்னபோது சந்தோஷப்பட்டாலும் கூடவே முக்கியமாய் ஒன்றையும் சொல்லிவைத்தாள்’’
‘‘நல்ல காரியந்தான். நம்ம வீட்டுக்கு எவ்வளவோ உபகாரம் ஒத்தாசை பண்ணியிருக்கார். அவரோட பசங்களுக்கு மூணு மாசம் டியூஷன் சொல்லித் தர்ரது நம்ம கடமை. ஆனா ஒன்னால சமாளிக்க முடியுமாப்பா, நீ முக்கியமான க்ளாசுக்கு வந்திருக்கே. ஒன்னோட தலைவிதிய தீர்மானிக்கிற பரீட்சைக்கு நீ கடுமையா படிக்க வேணாமா?’’
‘‘சமாளிக்கலாம்மா, மூணு மாசத்துக்குதானே’’
‘‘சரி, ஒன்னோட செளகரியம். அவர் எது எது சொன்னாலும் நல்லதேதான் சொல்லுவார், செய்வார்’’ என்றாள் அம்மா.
மறுநாள் முதல் மாலை ஐந்து மணிக்கெல்லாம் அவர்கள் வீட்டுக்குப் போய் டியூஷன் எடுத்துவிட்டு வருவதாய் தீர்மானித்துக் கொண்டேன். மாலை பள்ளிக்கூடம் விட்டதும் அங்கிருந்தே நேராக அவர் வீட்டு டியூஷனுக்குப் போய் அமர்ந்து விடுவதாய் இருந்தேன். அவருடைய பையன்களைவிட பெண்கள் படிப்பிலும் பிற விஷயங்களின் மீதான கவனிப்பிலும் மிக்க சூடிகையாயிருந்தார்கள்.
பெரியவள் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் எட்டாவது படிப்பவள். சிந்தனை அதிகமானவள். அடக்கமும் மரியாதையும் அப்பாவின் கருத்துக்களை மனத்தளவிலும் செயல்ரீதியாகவும் கொண்டிருந்தவள். சில சமயம் அவள் படிப்புக்கும் வயதுக்கும் அதிகமோ என்று கூட நினைக்கத் தோன்றுபவை. பையன்களைவிட பெண் பிள்ளைகள் அதிக நெருக்கமும் மரியாதையும் அன்பும் காட்டினார்கள். அதிக நெருக்கமும் மரியாதையும் அன்பும் காட்டினார்கள். பையன்கள் என் புறத் தோற்றத்தைக் குறித்து நக்கல் நையாண்டிகளாயிருப்பார்கள்.
ஒரு மாதத்தை டியூஷனில் ஓட்டி முடித்திருந்த சமயம் ராஜு சார் ஒரு நாள் டியூஷனை முடிக்கும் தருவாயில் வந்தவர் பொட்டலம் ஒன்றைப் பிரித்தார். ஒரு ஷர்ட் இருந்தது. ‘‘போட்டுப்பாரு, சரியாயிருக்கானு பாக்கலாம்’’, என்றார் என்னைப் பார்த்து, நெளிந்தேன். எனக்கென்று வெளி மனிதர் ஒருவர் சட்டை வாங்கித் தருவது முதல் முறை. போட்டிருக்கும் சட்டையைக் கழட்டாமல் அதன் மேலேயே அவர் தந்த புதுச் சட்டையைப் போடுவதைப் பார்த்ததும் அவர்கள் முன்னிலையில் என் பழைய சட்டையைக் கழட்ட கூச்சப்படுவதை சட்டென்று உணர்ந்த பெரிய பெண் மெதுவாக அங்கிருந்து வெளியேறினாள். அதைப் பார்த்து புரிந்துகொண்டவளாய் சின்னவளும் வெளியே போனாள். பையன்களுக்கு குறும்பும் குசும்பும் தேவைப்பட்டது.
அன்று தம் வகுப்பை முடித்துக் கொண்டு சுப்பாராவு சார் கையசைவு மூலம் என்னை தம் அறைக்கு வரச் சொல்லிவிட்டு போனார். மதிய உணவு இடைவேளையின்போது ஆசிரியர்கள் ஓய்வெடுக்கும் அறை வாசலுக்குப் போய் நின்றேன்.
‘‘உள்ளே வா’’, என்றார் வகுப்பாசிரியர். பிறகு
‘‘வீட்ல வேலை ஜாஸ்தியா?’’ என்று கேட்டார்.
‘‘அப்படி ஒண்ணுமில்லே சார்’’
‘‘வெளியில சுத்தறயா?’’
‘‘ஒரு வீட்ல டியூஷன் எடுக்கறேன் சார்.’’
‘‘டியூஷனா, நீயா எடுக்கறே? எந்த க்ளாசுக்கு?’’
‘‘எட்டு, ஏழு, ஆறு, அஞ்சிங்க சார்’’
‘‘டியூஷன் ஃபீஸ் எவ்வளோ?’’
‘‘மாசம் இருவது ரூபாங்க சார்.’’
‘‘ம்… யாரு?’’
‘‘எங்கப்பா கூட ஒர்க் பண்ணாரு, ராஜு நாயக்கர்னு ரெவின்யூ இன்ஸ்பெக்டர், அவரோட பசங்க.’’
‘‘சரிதான். ஒனக்கு க்ளாஸ் டெஸ்ட்ல இங்கிலீஷ்லயும் மார்க் குறைஞ்சிருக்கு. கணக்கிலே ரொம்பவும் கீழே போயிட்டே, ஐஸ்ட் பாஸ்தான். ஆச்சா, மார்க்கப் பார்த்துட்டு ஒங்க பெரீப்பா ரொம்ப கோவப் படறாரு. டியூஷனையெல்லாம் கட் பண்ணிக்கோ. இப்போ நீ எஸ்.எஸ்.எல்.சி.
பப்ளிக் எக்ஸாமுக்கு படிக்கிறே, தெரிஞ்சிதா. ஞாபகம் இருக்கட்டும். ஹார்டு ஒர்க் பண்ணோணும். படிக்கிறதையும், படிச்சதை எழுதிப் பாக்கிறதையும் தவிர வேறே எதையும் கவனத்தில வச்சிக்கப்படாது. அர்த்தமாச்சா,’’ மிகுந்த பொறுப்புடனும் கண்டிப்புடனும் ஒரு தகப்பனைப்போல பேசியனுப்பினார் வகுப்பாசிரியர், சுப்பாராவ் சார். எனக்கும் புரிந்தது. அந்த உணர்வோடு அதை எந்தவிதமாய் ராஜு சாருக்கு சொல்லுவது என்ற தயக்கம் மேலிட்டவனாய் அவர் வீட்டை நெருங்கிவிட்டேன்.
‘‘அப்பா, சார் வந்தாச்சி’’, என்று கத்திக் கொண்டே கடைசி பெண் வெளியில் நின்றிருந்தவள் உள்ளே ஓடினாள். ‘‘வாப்பா’’ என்று கூறி உட்காரச் சொன்னார் ராஜு சார். தேநீர் வந்து நின்றது. அதைக் குடித்து முடித்தானதும் கேட்டார்.
‘‘இப்போ நீ எத்தனை மாசமா நம்ம பசங்களுக்கு டியூஷன் சொல்லித்தர்ரே?’’
‘‘மூணு மாசமாகுது. இந்த மாசத்தோட’’ என்றேன். எப்படி ஆரம்பிப்பது என்று தயங்கிக் கொண்டிருந்ததற்கு ஒரு திசை தென்பட்டாற்போல இருந்தது அவர் பேசியது. அவரே தொடர்ந்தார்.
‘‘எப்பிடி, ஒனக்கு செளகரியமாயிருக்கா?’’
சார் விஷயத்துக்கு வர்ராரு, தயங்கக்கூடாது, வேஷம் போடக்கூடாது என்றது மனவோட்டம்.
‘‘எப்படிங்க சார்?’’
‘‘இல்லேப்பா, ஸ்கூல் விட்டதும் நேரா இங்கே வந்திடறே.. முடிச்சிட்டு ராத்திரி ஒம்பது மணிக்குத் தான் போறே. அப்பறம் ஒம்பாடங்கள படிக்கிறது எப்போ?’’
‘‘ஆமாங்க சார். கஷ்டமாத்தானிருக்கு. ரொம்பவும் சோர்வாயிடறேன். படிக்க ஓடமாட்டேங்குது. தூக்கந் தூக்கமா வருது’’
‘‘அதைத் தான் சொல்கிறேன். நீ எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்கு தயாராகணுமில்லையா. நல்லா படிக்கணும். ஹார்டு ஒர்க் பண்ணியாகணும். அதனாலே நாளையிலேந்து டியூஷன் வேணாம். ஸ்கூல் விட்டதும் நேரா வீட்டுக்குப் போயிடு. நல்லா படி. தெரிஞ்சுதா. இந்தா, இந்த மாச சம்பளமும் போன மாச சம்பளமும் சேத்திக் குடுத்திருக்கேன். இந்த மாசம் பத்து நாள் சொல்லிக் குடுத்திருக்கியே.’’ என்று கூறி பணத்தை நீட்டிவிட்டு தன் மனைவியை அழைத்தார். அந்தம்மாள் வரும்போதே ஒரு பையை எடுத்து வந்தார். அதை வாங்கிப் பிரித்து அதிலிருந்து ஒரு சட்டை மற்றும் கால் சட்டைக்கான இரு துணிகளை எடுத்துக் காட்டி, ‘‘இது எங்க பசங்க சார்பா அன்பளிப்பு. தச்சிப் போட்டுக்க. அப்பப்ப வந்து போயிட்டிரு’’, என்று சொல்லி நீட்டினார். கண்கள் கலங்க, வாங்கிக் கொண்டு இருவரையும் வணங்கினேன். பிள்ளைகளை அழைத்து நன்றாகப் படிக்கும்படி கேட்டுக் கொண்டு புறப்பட்டுச் சென்றேன்.
ஒருவனின் பள்ளிக்கூட வாழ்க்கை முழுமையடையும் தருவாயிக்கு வந்துவிட்டதை- பள்ளி இறுதி வகுப்பை முடிக்கும் தருவாயிக்கு வந்துவிட்டதை குறிப்பால் உணர்த்தும் முக்கிய நிகழ்வு ‘‘குரூப் ஃபோட்டோ’’, எடுத்துக் கொள்ளுவது. பள்ளி வாழ்க்கையின் இறுதி கட்டமாய், பள்ளியிறுதி வகுப்பின் ஒவ்வொரு பிரிவிலும் படிக்கும் மாணவர்களும் அவர்களின் ஆசிரியர்களும் தலைமையாசிரியரும் சேர்ந்து எடுத்துக் கொள்ளும் அந்தப் புகைப்படம் காலத்துக்கும் ஒரு மாணவனின் பழைய நினைவுகளை நினைத்து மன மகிழ்ச்சியை அதிர்வுகளோடு பெறும் ஒரு காலப் பெட்டகம். இந்த குரூப் ஃபோட்டோவில் நின்று எடுத்துக் கொள்ள ஏதோ ஒரு காரணத்தால் தவறிவிடும் ஒருவன் பின்னாளில் அதை வேறொருவரிடம் பார்க்க நேர்கையில், தான் அதில் கலந்துகொண்டு இடம்பெறத் தவறிவிட்டதை நினைத்து வருந்தும் துயரும் சொல்ல முடியாதது. அவ்வளவு முக்கியமானதொரு நிகழ்வு இந்தப் பள்ளிக்கூட குரூப் ஃபோட்டோ எடுத்துக்
கொள்ளுவதென்பது.
பள்ளியிறுதி வகுப்பு முடித்தவர்களில் ஒவ்வொருவரும் கல்லூரிப் படிப்பு என்று எங்கெங்கோ சென்றுவிடக்கூடும். பள்ளியிறுதி வகுப்புப் படிப்புக்கே கிடைத்த வேலையிலோ பயிற்சியிலோ சேர்ந்து விடுபவர்களும் அனேகம். என்னவெல்லாமோ உயர்கல்வி கற்கும் வாய்ப்பும் வசதியும் பெற்றவர்கள் கற்றுத் தேர்ந்து அதி உயர்ந்த பதவிகளில் அமர்ந்து எந்தெந்த நாடுகளிலோ குடியமர்ந்து விடக்கூடும். எத்தனைபேர் தம் பள்ளி நாட்களையும் வகுப்பறை நிகழ்வுகளையும் கூடப் படித்த பிற மாணவத் தோழர்களையும் நினைவு கூர்ந்து மகிழ்ந்து இருக்கிறார்கள். குரூப் ஃபோட்டோவிலுள்ள சக மாணவர்களில் எத்தனையோ பேர் உலகை விட்டே போயிருக்கக்கூடும். அவர்களைப் பற்றிய அரிய நினைவுகளுக்கு ஒரு முக்கிய சாட்சியாகவும் குரூப் ஃபோட்டோ ஒன்றுதான் நிற்கும்.
ஒவ்வொரு வகுப்புப் பிரிவும் ஒவ்வொரு நாளை நிர்ணயித்து தங்கள் வகுப்பின் குரூப் ஃபோட்டோவுக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தன. ஆறாம் படிவமென்னும் பதினோறாம் வகுப்புக்கு ஏ,பி,சி- என மூன்று பிரிவுகளிருந்தன. மூன்றுக்குமான குரூப் ஃபோட்டோ எடுப்பது ஒரே புகைப்படக்காரர்தான். அந்த வகையில் எங்கள் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர், விளையாட்டுப் பயிற்சி மாஸ்டர் ஆகியோரைக் கொண்ட குழுவாய் குரூப் ஃபோட்டோ எடுத்துக் கொள்ள அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எல்லோரும் மிக நன்றாகவும் மிடுக்காகவும் உடையுடுத்தி பளிச்சென வருவதில் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். என்னிடம் புகைப் படத்துக்கு ஏற்ற சிறப்பான கால்சட்டை எதுவுமில்லை. என் தரித்திர நிலையை நினைத்து அழவும் முடியவில்லை, சிரிக்கவும் முடியவில்லை. ஃபோட்டோவுக்கு போகாமலிருந்து விடலாமா என்று கூட நினைத்தபடி இருக்கையில் மோகனாக்காவின் வகுப்புத் தோழி தன் சகோதரனின் மிக நல்ல கால் சட்டையை இரவல் கொடுத்து உதவினாள்.
புனித இஞ்ஞாசிரியர் கூடத்திற்கு முன்னால் பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. முதல் வரிசையாக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. வகுப்பு மாணவர்களில் ஒரு பகுதி இஞ்ஞாசிரியர் கூடத்துக்குள் நின்றிருந்தனர். அவர்களுக்குள் எதேதோ கொடுக்கல் வாங்கல், எல்லாம் புகைப்படம் சம்மந்தமாகத்தான்.
‘‘சோப்பு இருக்காப்பா?’’
‘‘சோப்பெல்லாம் எடுத்தாரல’’
‘‘நா தர்ரேன், இந்தா’’
‘‘லைப்பாயா, வேணாம்.’’
‘‘சும்மா பைப்ல கழுவிட்டு வா.’’
‘‘பவுடர் குடு’’
ஒரு மாணவன் வீட்டிலிருந்து பொட்டலம் கட்டி எடுத்து வந்திருந்த முகப் பவுடரில் எஞ்சியிருந்ததை பிரித்த பொட்டலக் காகிதத்தோடு நீட்டினான். வாங்கிக் கொண்டவன் காகிதத்தோடேயே முகத்தில் அப்பித் தேய்த்துக் கொண்டான்.
‘‘திட்டமா போட்டுக்க.’’ என்றான் ஒருவன்.
‘‘அவனப் பாரு, ஓசீல கிடைச்சா, கம்புல பாயரான். யோவ், கண்ணாடியில பாத்து அழி’’
‘‘கண்ணாடி குடு’’
‘‘எதுவும் எடுத்திட்டு வராதீங்கய்யா. ஓசீலயே திரிச்சிக்குவீங்க.’’
‘‘கோவிச்சிக்காதே..’’
‘‘பின்னே என்ன.’’
‘‘எங்கே சிரி பாக்கலாம்’’
‘‘மேக்கப் பண்ணிகிட்டது போதும். எல்லாம் வெளில வாங்க. ஃபோட்டோகிராபர் வந்துட்டாரு’’ உயரத்துக்கு ஏற்றார்போல பெஞ்சுமீது ஏறி நிற்கவும் தரையில் நிற்கவும் சொன்னார்கள்.
குறும்புத்தனம் தவறுகள் போன்றவற்றுக்காக சிறு வகுப்பு படிக்கையில் ஆசிரியர்கள், ‘‘பெஞ்சுமேலே ஏறு’’ என்று கூறி தண்டனையளித்த சமயம் பெஞ்சு மீது ஏறி நின்றதை நினைவுகூறி, ‘‘அதுக்கப்புரம் ரொம்ப காலம்போய் இப்பத்தான் பெஞ்சுமேலே ஏறி நிக்கிறேன்’’, என்று சித்தரஞ்சன் சொல்லவும் பலரும் சிரித்தனர். ஆனால் அவனது உயரத்தை உத்தேசித்து புகைப்படக்காரர் இறங்கி தரையில் நிற்க வைத்துவிட்டார். வகுப்பறையில் பெஞ்சில் தங்களுக்கு வேண்டியவர்களோடு ஆண்டு முழுக்க உட்கார்ந்திருந்த உறவைப் பிரியமனமின்றி குரூப் ஃபோட்டோவிலும் அதைத் தொடரவிட்டு மகிழ, ‘‘நீ எம் பக்கத்திலேயே நின்னுக்க’’, என்றார்கள் சிலர், ஆனால் ஜோசப் சார், ‘‘காட்டுக் கழுதை, நீ இவ்விடே வரு’’, என்று கூறி உயரத்தை காட்டி நண்பர்களைப் பிரித்து வெவ்வேறு இடங்களில் நிற்க வைத்துவிட்டார். இரு சாமியார்களும் வந்து நடுநாயகமாய் நாற்காலிகளில் அமர்ந்தனர்.
எந்தெந்த ஆசிரியர் எங்கெங்கே உட்காரவேண்டுமென்பதையும் மிக்க பணிவோடு எடுத்துச் சொன்னார் ஜோசப் சார். அதன்படி அவர்கள் யாவரும் அமர்ந்ததும் ஃபாதர் அருள் ரொஸாரியோ,
‘‘மகிமைநாதனை வந்து இந்த வரிசையிலே ஓரமா நிக்கச் சொல்லுங்க,’’ என்று சொல்லியனுப்பினார்.
‘‘எல்லாரும் இங்க பாருங்க. கொஞ்சம் சிரிங்க சார், ரெடி.. அப்படியே இன்னொருவாட்டி, தாங்க் யூ..’’, புகைப்படக்காரர் தன் வேலையை முடித்துக் கொண்டார். மறுவாரம் ‘‘புரூஃப் காபி’’, எனும் மாதிரி நகலொன்று வந்து சேரவும் அதை அலுவலக நோட்டீஸ் போர்டில் எல்லோரது பார்வைக்குமாய் குத்தி வைக்கப்பட்டிருந்தது. அதைப் போய் போய் பார்த்துவிட்டு, பார்த்தவர்களே மறுபடியும் போய் பார்த்துவிட்டு ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டு போயினர்.
கேமராவுக்கு போஸ் கொடுத்த விதத்தில் நிறைவில்லை. சிலருக்கு நேராகப் பார்க்காமல் சற்றே முகத்தைத் திருப்பியிருந்திருக்கலாமே என்று இப்போது பட்டது.
‘‘நீ ரொம்ப குனிஞ்சிட்டே, கொஞ்சம் தலையத் தூக்கியிருக்கணும்.’’
‘‘எம் மூஞ்சி ஃபோட்டோக்கே லாயக்கில்லாதது.’’
‘‘கருப்பாயிருந்தா ஃபோட்டோவுக்கு எடுப்பா இருக்கும்பா. மூக்கு முழியெல்லாம் நல்லா விழும்.
சித்ராவப் பாரு எப்பிடி விழுந்திருக்கான் ஃபோட்டோலே. அதே ராமானுஜத்தப் பாரு, நல்ல சிவப்புதோல்தான். முகத்தில் ஹைலைட்டே காணோம்.’’ என்றான் சோமு. சோமுவுக்கு கொஞ்சம் கேமரா பரிச்சயமுண்டு. பிரெளனிபாக்ஸ் கேமரா வைத்திருப்பவன் அவன். மறுநாள் எல்லோருக்கும் குரூப் ஃபோட்டோ வழங்கப்பட்டது. அதன் விலை ஐந்து ரூபாய், சுப்பாராவ் சார் எனக்கு வினியோகித்துவிட்டு, ‘‘பெரீப்பாகிட்டே வாங்கிக்கிறேன்’’, என்று சொல்லிவிட்டார்.
குரூப் ஃபோட்டோ அளவில் பெரியது. கெட்டியான அட்டையில் ஒட்டப்பட்டிருந்த்து. படத்துக்குக் கீழே அட்டையில் மேல் வரிசையிலிருந்து வரிசைக்கிரகமாக நாற்காலியில் அமர்ந்துள்ள ஆசிரியர்கள் வரை அனைவரின் பெயர்களும் தெளிவாக அச்சிடப்பட்டிருந்தன. கொண்டுபோய் அம்மாவிடம் கொடுத்தேன். அதற்கு கண்ணாடிச் சட்டம் போட்டு வைக்க வேண்டும் என்று கூறி தூசு படாதிருக்க காகிதத்தால் சுற்றி பெட்டிக்குள் வைத்தாள். மோகனாக்கா, ராமு இருவரின் பள்ளியிறுதி புகைப்படங்களும்கூட காகிதம் சுற்றப்பட்டு இன்னும் சட்டம் போடப்படாமல் அதே பெட்டியில் பள்ளிக்கூடம் படித்துக் கொண்டு படுத்திருக்கின்றன- கண்ணாடிச் சட்டத்தை எதிர்பார்த்து.
எழுதியவர்:-

✍🏻 விட்டல்ராவ்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

