சினிமா சுவரொட்டித் திருட்டு
தருமபுரியில் நாங்கள் குடியிருந்த திண்ணை வைத்த வீட்டுக்கு எதிரே ஜோசியரின் வீடு. இடையில் அகன்ற தெரு. நாழியோட்டு வீட்டில் தேள் உபத்திரவமதிகம். இரு முறை என்னைத் தேள் கொட்டினபோது எங்கள் வசமிருந்த பழைய உடைந்துபோன கிராமஃபோன் இசைத் தட்டுத் துண்டை நீர் சேர்த்து உரசி தேள் கொட்டின கடிவாயில் வைத்தபோது தியேட்டரில் ஜீபிடரின் புதிய படமான அபிமன்யூ வெளியாகியிருந்தது. குமரேசன் அபிமன்யூ. ஜீவரத்தினம் வத்சலா. எம்.ஜி.ஆர். அர்ஜூனன். புளிமூட்டை ராமசாமி கடோத்கஜன். இது முழு அபிமன்யூ மாண்ட பின் கிருஷ்ணனின் (நரசிம்ம பாரதி) உதவியோடு அர்ஜீனன் பழிவாங்குவது வரை படம். அதன் பின் வந்த மாயாபஜாரில் அபிமன்யூ சக்ரவியூகத்தில் மரணமுறுவது இல்லை. வத்சலா கல்யாணத்தோடு சுபமுடிவு. அபிமன்யூவைப் பார்க்க நானும் ராமுவும் இரவு சாக்கடையோரமாய் நடந்தபோது என் வலது சுண்டு விரலைத் தேள் கொட்டிவிட்டது. சாதாரணமாக தேள் கொட்டினவுடன், விசமிறக்கிய உணர்வோடு, அடுத்து நமக்கு ஆபத்து என்று அறிந்தோ என்னமோ, தேள் வேகமாக ஓடிச் சென்று ஒளியப் பார்க்கும். ஆனால் சாக்கடையோரமிருந்து கால் விரலைக் கொட்டிய இந்தத் தேள் ஓடிவிடாமல் எருமைபோல நகர வாரம்பித்தது. மிகவும் பெரிய கருப்புத் தேள். எனக்கு வாயில் எச்சில் போல வழிய, நடக்க முடியாது உட்கார்ந்துவிட்டேன். ராமு கல்லெடுத்து அத்தேளை நசுக்கிக் கொன்றுவிட்டு “இது வெறுந் தேளில்லே, நண்டுவாக்களி” என்றான். “செத்துப் போய் விடுவேனா?” என்றேன் பயத்தில் வெட வெடப்போடு. அவன் என்னை உப்பு மூட்டைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்புகையில் “அபிமன்யூ பாக்க முடியில்லே”, என்றேன். அப்பா என்னோடு ஜோசியர் வீட்டுக்குப் போனார். பாதம் வீங்கியிருந்தது. நெறியேறிக் கொண்டிருந்தது. இசைத் தட்டுத் துண்டை எடுத்து வந்தான் ராமு. ஜோசியர் வெங்காயம் கொண்டு வரச் சொல்லிவிட்டு, “இங்கிலீஸ் வெங்காயம் கொண்டு வா என்றார்.” அப்போது சிறிய சாம்பார் வெங்காயம்தான் எல்லாவற்றுக்குமான வெங்காயம் விளைச்சல் அமோகம். படியில் அளந்து படிக் கணக்கில், தான் விற்பார்கள். பெரிய வெங்காயத்தை இங்கிலீஷ் வெங்காயம் என்பார்கள். அரிது, அபூர்வம், அதிக விலை. வீட்டிலிருந்த இரண்டே பெரிய வெங்காயங்களில் ஒன்றை ஜோசியரிடம் கொடுக்க அதை அப்படியே வாயில் அரைத்து மென்று எச்சிலோடு நண்டு வாக்களி கொட்டிய இடத்தில் உமிழ்ந்து பாடம் போட்டுப் பார்த்தார். நெறி இறங்கவில்லை. வலி குறைய வில்லை, வீக்கமும் வடியவில்லை. தூக்கமும் இல்லை. மறுநாள் வந்து பார்த்துவிட்டு, “நண்டு வாக்களிக்கெல்லாம் பாடம் கிடையாது. பாம்பு தேளுக்குத்தான் பாடம் வேலை செய்யும் என்று கூறி நழுவினார் ஜோசியர்.”
மறுவாரம், வீட்டுச் சுவரில் சினிமா சுவரொட்டியொன்று இரவு பத்து மணிக்கு ஓட்டப்பட்டது. என் கவனத்தைக் கவர்ந்த பட்சி ராஜா தயாரிப்பான புதிய படம் “பவளக்கொடி”யின் பெரிய சுவரொட்டி இரவு ஒட்டிவிட்டு போனான் ஒருவன். டி.ஆர். மகாலிங்கத்தின் பற்கள் தெரிய சிரிக்கும் கிருஷ்ணரூபமும், அன்னம் விற்கும் குருவிக்கார படமும், டி.ஆர். ராஜகுமாரியின் மதி வதனமுமாக சுவரொட்டி, நாங்கள் எல்லோருமே பெருமைபட்டோம். ஜோசியர் வீட்டு அழகிய பெண் அவர்கள் வீட்டு ஜன்னலில் தோன்றி போஸ் கொடுக்கும். பவளக்கொடி போஸ்டர் ஓட்டப்பட்ட மறுநாள் காலையில் ஓர் இளைஞன் சைக்கிளில் வந்து ஜோசியரிடம் எங்கள் வீட்டைக் காட்டி என்னமோ கேட்டான். பிறகு போய்விட்டான். வெளியில் வந்து சுவரைப் பார்த்தபோது அங்கே ஓட்டப்பட்டிருந்த பவளக் கொடி சினிமா சுவரொட்டியைக் காணோம். சுத்தமாய் பிய்த்தெடுக்கப்பட்டு அது ஓட்டப்பட்ட பசையின் அடிச்சுவடு மாத்திரம் தென்பட்டது. சாயங்காலம் கவனித்தபோது அந்த இளைஞன் மெதுவாக சைக்கிளில் எங்கள் வீட்டைக் கடக்கையில் எதிர் வீட்டையே பார்த்தபடி போனான். ஜன்னலில் ஜோசியரின் பெண் தோன்றினாள். ஓரிரு நிமிடங்களுக்கு சைக்கிள் நின்று விட்டுப் புறப்படும் இடைவெளியில் சுருட்டின காகிதமொன்றை அந்த வீட்டருகில் போட்டுவிட்டு போனான். வேகமாய் வெளியில் வந்த ஜோசியரின் பெண் ஒருமுறை சுற்றி பார்த்துவிட்டு காகிதச் சுருணையை எடுத்துக் கொண்டு போனாள்.
தருமபுரியிலிருந்த ஒரேயொரு தனியார் ஆரம்பப் பாடசாலை, ராம வித்யாசாலா, பொதுவாக அது விட்டல்ராவ் ஸ்கூல் என்றழைக்கப்படும். ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் மட்டுமுண்டு. என்னை மூன்றாம் வகுப்பில் சேர்த்தார்கள். மாதம் ஆறணா சம்பளம் கட்டணம். அப்பள்ளி நிறுவனரான விட்டல் ராவ் வயதாகி ஓய்வு பெற்று வெளுத்து சுருங்கி வீட்டுத் திண்ணையில் முடங்கியிருப்பார். அவரது மகன் கிருஸ்ணாஜிராவ் முரடர். அவர்தான் பள்ளித் தலைமையாசிரியர். அவர்கள் மராட்டியர்.
இடைவேளையின்போது சக வகுப்பு மாணவன் கரீம், பியாரிஜானை நெருங்கி ஏதோ சொன்னான். அவன் ஆசையோடு, “காட்டு” என்றான். நான் சற்று தள்ளி நின்று கவனிக்க, கரீம் தன் பையிலிருந்து பலவாறு மடிக்கப்பட்ட காகிதமொன்றை எடுத்துப் பிரித்துக் காட்டினான். என் கண்கள் விரிந்தன. அது, பவளக் கொடி சினிமா சுவரொட்டி. எங்கள் வீட்டுச் சுவரில் இரவு ஓட்டியிருந்து காலையில் காணாமற்போன அதே சுவரொட்டி.
“எவ்ளோ?” என்று கேட்டான் பியாரி ஜான்.
“நாலணா. புது போஸ்டர்”, என்றான் கரீம்.
“ரெண்டனா”, என்றான் பியாரி.
“வராது” என்று சொல்லிவிட்டு பிரித்ததை பழையபடி மடிக்கத் தொடங்கினான் கரீம்.
“கடைசியா கேக்கறேன், மூண்ணா”
“ம், சரி எடு” ஒப்புக் கொண்டு பவளக் கொடி சுவரொட்டியை மூன்றணாவுக்கு விற்றான் கரீம். இந்த வகையாக அவன் எங்கெங்கிருந்தோ பிய்த்தெடுத்து வந்த சினிமா சுவரொட்டிகளை பையன்களுக்கு விற்பவன். அப்போதெல்லாம் புத்தகம். நோட்டுப் புத்தகங்களுக்கு இப்போதுபோல குறிப்பிட்ட கண்ணாடி காகிதங்களையோ வேண்டுமென்று இல்லை. செய்தித்தாள்கள், சுவரொட்டிகளையும் பயன்படுத்தலாம். எங்கள் வீட்டில் செய்தித் தாள்களை அட்டைபோட தருவார்கள். சிலருக்கு தங்கள் புத்தகம் நோட்டுப் புத்தகங்களுக்கு சினிமா சுவரொட்டிகளால் அட்டை போடுவதில் லாகிரி அதிகம். ஆனால், பியாரி ஜான் மறு நாளே தான் வாங்கிச் சென்ற போஸ்டரை கரீமிடம் திருப்பித் தந்தான்.
“ஏன்?”என்றான் கரீம்.
“நம்போ வூட்ல, அவங்க சாமிப் படமெல்லாம் வாணாங்கறாங்கோ” என்றான் பியாரி.
“காசில்லே, செலவாயிடுச்சே” என்றான் கரீம்.
“பர்வால்லே, வேறே போஸ்டர் கொணர்ந்து குடு”
மாலை, பவளக் கொடி போஸ்டரை எனக்குக் கொடுத்துவிட்டு, “துட்டு எதுவும் வாணாம். ஓங்கூட்டு செவுத்திலேந்து எடுத்ததுதான். நீ வச்சிக்க”
அப்படியாக, எங்கள் வீட்டுச் சுவரில் ஓட்டின பவளக் கொடி சினிமா போஸ்டரை உரித் தெடுத்து எனக்கே தந்துவிட்டான் கரீம். ராமு அதை கூடத்து சுவரில் ஒட்டி வைத்தான்.
ஒரு வாரம் விட்டு நல்ல தம்பி திரைப்படம் விஸ்ணு தியேட்டரில் வெளியிடப்பட இருந்தது. கரீம் என்னை பவ்யமாக அணுகினான்.
“ஓங்க ஊட்டுத் திண்ணையில ராத்திரி வந்து படுத்துக்கட்டுமா எங்கூட்ல மூட்டப் பூச்சி தொந்தரவு” என் அம்மாவிடம் நான் அனுமதி கேட்டு கரீமை படுத்துக் கொள்ள வரச் சொன்னேன்.
நல்ல தம்பி திரைப்படம் விஷ்ணு தியேட்டரில் திரையிடப்பட்டது. மிகுந்த விளம்பரம் செய்யப்பட்டும் நல்ல தம்பி எடுபடவில்லை. என்னெஸ்கே படம் முழுக்க ஆக்கிரமித்திருந்தாலும் நகைச் சுவையை விட அறிவுரைகளும் உபதேசங்களும் அதிகமிருந்தன.
என்.எஸ்.கிருஸ்ணன் இப்படத்தில் அன்றைக்கு விசித்திரமாய்த் தோன்றிய ஆனால் புழக்கத்துக்கு வராத ஸ்கூட்டர் போன்ற மூன்று சக்கர வாகனமொன்றை ஓட்டிக் கொண்டு தோட்டத்தில், வீட்டுக்குள் எல்லாம் பவனி வருவார். பொது மக்களைக் கவர்ந்த இக்காட்சி, பானுமதியின் சவுக்கு ஏந்திய குதிரைச் சவாரி உடையில் தோன்றும் கவர்ச்சியை விடவும் கூடுதல் கவனம் பெற்றதால் சுவரொட்டியில் கிருஸ்ணன் இந்த வாகனத்தில் பவனி வரும் காட்சி பளிச் சென பெரிதாக போடப்பட்டது.
கரீம் இரவு ஒன்பது மணிக்கு திண்ணையில் படுக்க வந்து விட்டான். கரீமின் அப்பா சொந்தமாய் குதிரை வண்டி ஓட்டிக் கொண்டிருந்தாலும் மகன் நன்றாகப் படிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் நல்ல பள்ளிக் கூடமென்று பெயர் வாங்கிய விட்டல்ராவ் ஸ்கூலில் சேர்த்திருந்தார். ஒரு பெரிய பாயை மூன்றாக வெட்டி தம் மூன்று குழந்தைகளுக்கும் தலைக் கொரு பாகமாய் பாய் துண்டுகளை படுக்க கொடுத்திருந்தார். கரீம் தன் துண்டுப் பாயையும், கருப்பாய் தலை எண்ணெய்ப் பிசுக்கேறிய தலையணையையும் எடுத்து வந்து திண்ணையில் ஓய்ந்தான். நானும் அவனும் பேசிக் கொண்டேயிருக்க, பத்து மணி சுமாருக்கு ஏணி, போஸ்டர் சுருணை, பசை பக்கெட் சகிதம் சைக்கிளில் வந்த ஒருவன், ஏணியை எங்கள் வீட்டுச் சுவரில் சாய்த்து ஏறி பெரிய போஸ்டர் ஒன்றை ஒட்டி விட்டுப் போய் மறைந்தான். கரீம் எழுந்து சந்துக்குள் போய் மழை நீர் குழாயைப் பிடித்து தத்தித் தத்தி ஏறி ஓடுகள் சரியா வண்ணம் எச்சரிக்கையோடு “ ஆராச்சி வர்ரானா பாரு” என்று என்னிடம் கூறிவிட்டு ஒரு தரம் தெருவைப் பார்த்துக் கொண்டான். அப்போதெல்லாம் தெரு விளக்கு என்பது 40 வாட்ஸ் சக்தியில் மங்கலாக விளக்குப் பூச்சிகளால் மொய்த்து எரியும் பல்புகளாலானதுதான். அந்த விளக்கைச் சுற்றியும் விளக்குக் கம்பத்தைச் சுற்றியும் மட்டுமே வெளிச்சமிருக்கும். வாழைப் பழத்தின் தோலை மெதுவாக உரிப்பதுபோல ஓட்டப்பட்ட போஸ்டரை உரித்து இழுத்து எடுத்துவிட்டான் கரீம். அது பெரிய சுவரொட்டி, நாளை முதல் விஸ்ணு தியேட்டரில் வெளியிடப்படும் புதிய படமான நல்ல தம்பியின் சுவரொட்டி. ஆக்கர்- மஞ்சள் நிற பின்னணியில் கருப்பு வெள்ளை உருவங்கள். நடு நாயகமாய் பெரிய அளவில் காண்போரைக் கவரும் விதமாய் அந்த வினோதமான மூன்று சக்கர வாகனத்திலமர்ந்த என்எஸ்கே இப்போது அந்த சுவரொட்டி கரீம் கையில், நல்ல தம்பிக்கு அறிஞர் அண்ணா கதை வசனம் எழுதியவர். அமெரிக்க ஹாலிவுட் திரைப்பட இயக்குனர்களில் Frank Capran குறிப்பிடத்தக்கவர். அவர் இயக்கிய Gary Cooper நடித்த Mr. Deeds Goes to Town 1936ல் வெளிவந்த சிறப்பான படம். இப்படத்தைப் பார்க்க நேரிட்ட அண்ணா, அதன் பாதிப்பில் எழுதிய நல்ல தம்பியை என்னெஸ்கே நிறைய மாற்றியிருந்தார். அறிவுரைகள், உபதேசங்கள் தெருக்கூத்து பாணி கோமாளி- ஏமாளியார் நாடகத்தில் கள் உண்ணாமை பிரச்சாரம், புகழ் பெற்ற கிந்தனார் காலட்சேபம் எல்லாம் சேர்ந்து அண்ணா வின் அசல் திரைக்கதையை மழுங்கடித்தது. அசல் கதையில் டி.ஏ. மதுரம் பாத்திரமே இருக்காதென்றும் அதைப் புகுத்த கதையை என்னெஸ்கே மாற்றியதாகவும் திரைப்படத்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவரும் பத்திரிகைகளில் சினிமா பகுதிகளை எழுதி வந்தவருமான நவீனன் எனக்கு சொன்னார். அண்ணாவின் வருத்தத்தை தணிக்க வேறொரு படத்தை “தம்பிதுரை” என்ற பெயரில் என்னெஸ்கே அவ்வப்போது நவீன விக்கிரமாதித்தன் சந்திரஹரி, கிந்தனார் என்று படம் செய்வது மாதிரி இந்த தம்பிதுரை என்பது எங்கே தன் பெயரை “உல்ட்டா” செய்து காட்டும் படமாய் போய் விடப் போகிறதோவென்று அதை நிராகரித்தார் அண்ணா என்று நவீனன் கூறினார்.
நல்ல தம்பி சுவரொட்டியை அன்றிரவே எனக்குத் தர வேண்டுமென்று நான் அடம் பிடித்தும், கரீம் முடியாதென்று கூறி தான் பியாரி ஜானுக்குத் தந்தாக வேண்டுமென்று போய்விட்டான். இனிமேல் எங்கள் வீட்டுத் திண்ணையில் படுக்க வர வேண்டாமென்று சண்டைபோட்டு துரத்திவிட்டேன்.
மறுநாள் காலையில் சைக்கிள் மணியடிக்க அந்த சந்தானம் வந்து நின்றான். என்னையழைத்து விசாரித்தான். தொடர்ந்து பேச்சு கொடுத்தபடி எதிரே ஜோசியர் வீட்டு ஜன்னலைப் பார்த்தான். பேச்சு என்னோடும் பார்வையும் கவனமும் ஜன்னல் பக்கமுமாய் இப்போது ஜன்னலில் அவிழ்த்த ஈரத் தலையைத் துவட்டினபடி ராஜகுமாரி தோன்றி அகம் முகம் மலர்ந்தது.
“விஷ்ணுதியேட்டர்ல வேலை செய்யறீங்களா” என்று கேட்டேன், நான்.
உடனே உற்சாகமாய் உரக்க சொன்னான் சந்தானம் “எனக்கு அங்க பார்டைம் டிக்கட் பிக்கிங் வேலை. மத்தபடி ஓங்கப்பா மாதிரி கவர்ண்மெண்ட்ல, எலெக்டிரிசிடி ஆபீசில வேலை,” என்றான் ஜோசியர் பெண்ணின் முகம் மலர.
“அப்போ போஸ்டரை திருடினது யார்னு தெரியாதா?” என்று சந்தானம் என்னைக் கேட்டது சும்மா ஒரு பேச்சுக்கே.
அதன் பிறகு கரீம் வருவது நின்று போனது. சுவரில் ஓட்டப்பட்ட போஸ்டர்கள் களவுபோகாது ஒன்றின் மேல் ஒன்றாக ஒட்டப்பட்ட கதியில் சுவர் முழுக்க பல்வேறு சினிமா சுவரொட்டிகள் நிறைந்தது. திடீரென சந்தானத்தின் சைக்கிள் மணியோசை கேட்பது நின்று போனது. ஒரு மாதம் கழித்து ஜோசியர் வீட்டில் எதோ பெரிய ரகளை. கேட்டதற்கு, “நீ சின்ன பையன், உனக்கெதுக்கு அதெல்லாம்” என்று கூறிவிட்டாள் அம்மா. ஆனால் ராமு என்னை அருகிலுள்ள குட்டிச் சுவருக்கு அழைத்துச் சென்று ரகசியம் பேசினான்.
ஜோசியர் பொண்ணில்ல, ஜன்னல்ல வந்து வந்து நிக்குமே, அதைக் காணோமாம். ஓடிப் போயிடுச்சாம்.
அப்படின்னா? என்றேன்.
எவன்கூடவோ ஓடிப் போயிடுச்சாம்.
எவன் கூட ஓடியிருப்பாள் என்பது எனக்கு புரிந்தது. ராமுவுக்கு அதைச் சொல்லவில்லை. அதன் பிறகு நாங்களும் மேட்டூர் அணைக்கு மாற்றலாகி வந்துவிட்டோம். மேட்டூர் இரு முக்கிய பகுதிகளாய் ஒரு மலையால் பிரிக்கப்பட்டிருந்தது. ரயில் நிலையம் மலைக்கு மறுபக்கம் உயரமான பகுதியில் இருந்தது. அப்பகுதியை சேலம் காம்ப் என்றழைப்பார்கள். சேலம் காம்பில் கவர்னர் தங்குமிடம், மேட்டூர் கெமிகல்ஸ் மேட்டூர் துணி மில் (மேட்டூர் லாங்கிளாத் என பேர் பெற்ற வெள்ளைத் துணி ஆகியனவும், நீர்த் தேக்கத்திலிருந்து தண்ணீரை வெளியேற்ற பதினாறு கமான் என பாமர்களால் அழைக்கப்பட்ட ஷட்டர்களும் அதன் மீது பெரிய பாலமுமிருந்தது. ஷட்டர்களில் பெரிய பெரிய தேன் கூடுகள் தொங்கும், சேலத்திலிருந்து ஓமலூர் வழியாக வரும் ரயில், சேலம் காம்போடு நின்றுவிட, பஸ்கள் மலைக்குக் கீழேயுள்ள மேட்டூர் அணைக்குச் செல்ல மலை ஓரிடத்தில் இரண்டாகப் பிளக்கப்பட்டு சாலையுமிருக்கும். இந்த சாலை இரண்டு மூன்று கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டிருக்கும். காவிரியாறு அணைக் கட்டிலிருந்து வெளியேறி ஈரோட்டையடையும் வழியது. இவையெல்லாம் நான் மேட்டூரில் 50களின் தொடக்கத்திலிருந்த சமயம் இருந்த சமயம் இருந்த அமைப்பு நிலவரம். இப்போது நிறையவே மாற்றமடைந்துவிட்டன. காவிரிக்கு குறுக்கே பெரிய பாலமிருக்கும். மலையிலிருந்து இறங்கும் பஸ்கள் பாலத்தைக் கடந்து மேட்டூர் டவுன் ஷிப்பை அடையும். நாங்கள் குடியிருந்த குடியிருப்பு குவார்ட்டர்ஸ் சந்தன எண்ணெய் தொழிற்சாலையை அடுத்து தூக்கனாம்பட்டி சாலையை ஓட்டியிருந்தது. சேலம் காம்பில் ஒரு கூடார சினிமா தியேட்டரும் கீழே டவுன் ஷிப்பில் ஒரு கூடார தியேட்டருமிருந்தன.
இந்த சமயம் ஜெமினியின் மிஸ்மாலினி திரைப்படம் சேலம் காம்ப் டெண்டில் வெளியாகியிருந்தது. மிஸ் மாலினியில் மாலினியாக புஸ்பவல்லியும் சினிமா டைரக்டராக ஜாவர் சீதாராமனும் அவருக்கு உதவியாக ஆர். கணேசும் (ஜெமினி கணேசன்) கொத்தமங்கலம் சுப்பு முக்கிய பாத்திரத்திலும் நடித்திருந்தனர். மிஸ் மாலினி ஆர்.கே. நாராயணனின் மிஸ்டர் சம்பத் நாவலைத் தழுவி எழுதப்பட்டு படமானது. படத்தைத் திறம்பட இயக்கியிருந்தார்
கொத்தமங்கலம் சுப்பு. சுப்புவும் புஷ்பவல்லியும் மிகவும் சிறப்பாக நடித்திருந்தனர்.
படம் பார்க்க காசில்லை. நானும் ராமும் காசில்லாத சமயங்களில் ஓடிக் கொண்டிருக்கும் படத்தின் வசனம், பாடல்களையாவது கேட்கலாமெனகூடார வகை தியேட்டரின் திரையமைந்திருக்கும் குடைக்கு வெளியில் உட்கார்ந்திருப்போம். அந்த வகையாக மிஸ் மாலினியின் “பட்டண வாசம், நான் பாத்துகிட்டேன் பாத்துக்கிட்டேன் பணத்துக்கு நாசம்” என்ற பாடலை மெய்மறந்து கேட்டவாறு டெண்டின் பின்புறம் புல் தரையில் உட்கார்ந்திருந்தபோது, “என்னடா பண்றீங்க?” என்ற குரல் கேட்டு பயந்து பார்த்தபோது தருமபுரி விஷ்ணு டாக்கீசில் பகுதி நேர ஊழியம் பார்த்த சந்தானம் நின்றிருந்தான்.
“சார்?”, என்றான் ராமு.
தன்னை மேட்டூர் ஹெச்.இ.டி.(ஹைட்ரோ எலெக்டிரிசிடி டிபார்ட்மெண்ட்) அலுவலகத்துக்கு மாற்றிவிட்டதாயும், இந்த டெண்டில் பகுதி நேர புக்கிங் கிளார்க் வேலையும் பார்ப்பதாய் சொல்லி விட்டு, “படம் பாக்கறீங்களா?” என்று கேட்டான்.
தலையாட்டினோம்.
“கால்வாசி ஓடியாச்சி. நாளைக்கு வந்து முழுசா பாருங்க” என்றான் சந்தானம்.
“வீடெங்கே?” என்று கேட்டான்.
“எல் டைப் குவார்டர்ஸ்” என்றோம் இருவரும் நான் அவன். இலவச அனுமதிச் சீட்டும் மறு நாளைக்கு மிஸ்மாலினிக்கு கொடுத்தான்.
மறுநாள் காலையில் நான் கடைக்குப் போய்விட்டு வருகையில் ஏ டைப் குடியிருப்பு வழியாக வந்தேன். பனியனோடு நின்றிருந்த சந்தானம் என்னைக் கவனிக்காமல் உள்ளே போய்விட்டான். ஒரு பெண் குனிந்து கோலம் போட்டுக் கொண்டிருந்தவள் நிமிர்ந்தபோது எனக் கேற்பட்ட வியப்பு அவ்வளவு பிரமாதமல்ல. அவள் ஜோசியர் வீட்டு ஜன்னலில் நின்று மறையும் ஜோசியரின் மகள்தான்.
(தொடரும்).
முந்தைய தொடர்களை படிக்க கிளிக் செய்க:
புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் (முன்னுரை) – விட்டல்ராவ்
தொடர் 2: பயாஸ்கோப்காரன் (கபிலர் மலையும் அரிச்சந்திரனும்) – விட்டல்ராவ்
தொடர் 3: பயாஸ்கோப்காரன் (போரும் சினிமாவும்)– விட்டல்ராவ்
தொடர் 4: பயாஸ்கோப்காரன் (மினி பயாஸ் கோப்) – விட்டல்ராவ்
தொடர் 5: பயாஸ்கோப்காரன் (சில தெலுங்குப் படங்கள்) – விட்டல்ராவ்
தொடர் 6: பயாஸ்கோப்காரன் (ரிபப்ளிக் சீரியல் படங்களும், தமிழ் சண்டைப் படங்களும்) – விட்டல்ராவ்
தொடர் 7: பயாஸ்கோப்காரன் (கூடார வகை தியேட்டர்கள்) – விட்டல்ராவ்
தொடர் 8: பயாஸ்கோப்காரன் (கூடார தியேட்டர்கள்) – விட்டல்ராவ்
தொடர் 9: பயாஸ்கோப்காரன் (கந்தர் ஃபிலிம்சும், மாடர்ன் தியேட்டர்ஸும்) – விட்டல்ராவ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.