ஹாலிவுட் ஒரு மகா களவுலகு
இந்த பயாஸ்கோப்காரன் சேலத்துக்கு வந்த பிறகு தான் ஹாலிவுட் தயாரிப்புகளில் பல மகத்தான திரைப் படங்களைப் பார்க்க வாய்ப்பு ஏற்பட்டது. பலர் ஹாலிவுட் திரைப்படங்கள் என்றதுமே மொத்தமாகவே ஏளனமாய் ஒதுக்குவார்கள். அது சரியே அல்ல. சத்யஜித்ரே, மிரினாள் சென் போன்ற இந்திய திரைப்பட மேதைகளே தமது பேட்டிகளில் ஹாலிவுட் படங்களையும், அவற்றின் இயக்குனர்களையும் மிகவும் சிலாகித்துள்ளனர். சேலத்தில் எல்லாவித ஆங்கிலத் திரைப்படங்களையும் திரையிட்டுக் காட்டுவதற்கென பிரத்தியேகமாய் செவ்வாய்ப்பேட்டை மரக்கடை சந்து என மரக்கடைகள் நிறைந்த தெருவில் நியூ இம்பீரியல் என்ற கம்பீரமான தியேட்டர் இடம் பெற்றிருந்தது. இந்த நியூ இம்பீரியல் தியேட்டருக்கு மற்ற நகரங்களின் தியேட்டர்களிலில்லாத ஓரிரண்டு அபூர்வ சிறப்பியல்புகள் உண்டு. மேனாட்டுத் திரைப்படங்களுக்கு இந்தத் தியேட்டர் இட்டு வந்த விசித்திரமான தமிழ்த் தலைப்புகள் இத் தமிழ்த் தலைப்புகளை நான் எழுதிய “மாசு” என்ற குறுநாவலில் சிறிது பயன்படுத்தியுள்ளேன். இங்கு திரையிடப்பட்ட ஹாலிவுட் ஆங்கில திரைப்படங்களுக்கு தரப்பட்ட தமிழ்த் தலைப்புகள் கோவை திருச்சி போன்ற நகரங்களின் தியேட்டர்கள் திரையிட்ட ஆங்கில திரைப்படங்களின் தமிழ்த் தலைப்புகளுக்கும் யோசிக்க வைத்தன.
சேலம் சிறுமலர் உயர் நிலைப் பள்ளியில் என்னை மூன்றாம் படிவத்தில் (எட்டாம் வகுப்பு) சேர்த்த சமயம் நியூ இம்பீரியலில் Eqiptian வெளியாகியிருந்தது. ஓரியண்டலில் அரங்கு நிறைந்த ஆறாவது வாரமாக மாடர்ன் தியேட்டர்சின் வண்ணப் படம் அலிபாபாவும் 40 திருடர்களும் ஓடிக் கொண்டிருக்க, விக்டோரியாவில் மலைக் கள்ளனும், சென்ட்ரலில் 420 இந்திப் படமும் ஓடின. சேலத்துக்கே நிறைய சிறப்பியல்புகளுண்டு. சேலம் என்ற பெயரில் அமெரிக்காவில் ஒரு நகரம் இருப்பது சேலத்துக்கே சிறப்பாகும். நான் படித்த காலத்தில் சேலத்திலிருந்த ஒரே கல்லூரி, “சேலம் முனிசிபல் காலேஜ் எனக்கு தெரிந்து ஒரு முனிசிபாலிடி கல்லூரி ஏற்படுத்தி நடத்தியது சேலம் ஒன்றில் தான் என நினைக்கிறேன். வெகுகாலம் கழித்து அரசினர் கல்லூரியாக மாறியது. நகருக்குள் திருமணி முத்தாற்றாங்கரை யிலிருந்து தாலுகா கச்சேரி, கஜானா வளாகப் பகுதி, கோட்டை மாரியம்மன், பெருமாள் கோயில்கள் உள்ளிட்ட பகுதி யாவும் சேலம் கோட்டை இடம் பெற்றிருந்த பகுதியே. கெட்டி முதலிகள், விஜயநகர நாயக்கர்கள், ஹைதர் திப்பு சுல்தான் வரை பிடித்து வைத்திருந்த கோட்டை.
சர்தாமஸ் மன்ரோ ஏற்காட்டுக்கு வருகை தரும்போது ஓரிரு நாட்கள் தங்கியிருந்ததாய் ஆங்கிலேய கலெக்டர்களின் கெஜட்டியரில் குறிப்பு காணப்படும் கோட்டை. 50-களில் சேலத்துக்கு வந்தபோது, கோட்டையின் கருங்கல் மதிற் சுவரின் சொச்ச மிச்சத்தை திருமணி முத்தாற்றங்கரையில் இன்றும் கோட்டை எனப்படும் பகுதியின் ஓர் அங்கமாய் அன்றிருந்து இன்றில்லாத விக்டோரியா தியேட்டர், பழைய பஸ்நிலையத்தையும் இணைக்கும்படியாக ஆற்றுக்கு குறுக்கே அமைக்கப்பட்டிருந்த குறுகின பாலத்தைப் பார்த்தவாறு கோட்டை மதில் சுவர் இருந்தது. மதிலையடுத்து இன்னொரு நீண்டு உயர்ந்த மதில் அது கோட்டை பெருமாள் கோயிலின் மதில், கோயிலிருக்கும் பகுதியில் குண்டுபோடும் தெரு” என்று பெயர் கொண்ட தெருவில் பீரங்கி ஒன்று வைக்கப்பட்டிருக்கும். கோட்டையிலிருந்த மற்ற பீரங்கிகள் சேலம் கலெக்டர் அலுவலகத்திலும், முனிசிபாலிடி கட்டிடத்திலும் இருக்கின்றன. அந்த காலத்தில் எல்லாருக்கும் கடிகாரம் வைத்துக் கொள்ளும் வசதி இருந்திருக்கவில்லை. பிரஜைகள் இரவு நேரம் உணவு அருந்த ஓய்வெடுக்கவென கிழக்கிந்திய கம்பெனி காலத்திலிருந்து இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னும் இந்த பீரங்கியைக் கொண்டு இரவு எட்டு மணியானதை அறிவிக்க குண்டு போட்டு நேரம் அறியச் செய்தது. “குண்டு போட்டாச்சு, சாப்பிட வாங்க” என்பார்களாம். அதன் காரணமாக பீரங்கியுள்ள அத்தெருவுக்கு அந்தப் பெயர்.
இதையெ்ல்லாவற்றையும் விட ஓர் அரிதான விடுகதையே சேலத்தை வைத்துச் சொல்லப்படுகிறது.
“ஒத்த குல்லா சந்திலே
ரெட்ட குல்லா மூக்கிலே
சேலம் செவப்பு, செவ்வாப்பேட்டெ கருப்பு
ஒடச்சா பருப்பு, தின்னா கசப்பு”
அது என்ன? இது தான் விடுகதை. விடுவியுங்கள் பார்க்கலாம். சரி, நானே சொல்கிறேன் “குலுகஞ்சி” எனும் குன்றிமணிதான் அது. இது ஒரு கொடி வகைத் தாவரத்தில் விளையும் காய்களிலுள்ள விதைகள். காய்ந்த காய்கள் தானே வெடிக்க சிவப்பும் கருப்புமான குன்றி மணி விதைகள் சிதறி, மீண்டும் முளைக்கும். இந்த விதைகளை பிள்ளையார் பண்டிகையின்போது செய்யப்படும் மண் பிள்ளையார் உருவங்களின் கண்களாக செருகி வைப்பார்கள். பாரம்பரியமாய் தங்கத்தை நிறுத்தி எடை போட “ஒரு குந்துமணி எடை” என்பார்கள். ஒரு குன்று மணியின் எடை என்பது நான்கு நெல் மணிகளின் எடைக்குச் சமம். இரண்டு குன்றி மணி எடை ஒரு கிராம் ஆகும்.
நியூ இம்பீரியல் தியேட்டர் அதன் பூர்வாசிரமத்தில் சுந்தரம் டாக்கீஸ் என்றிருந்து கொஞ்ச காலம் விட்டு சரசுவதி டாக்கீஸ் என்றானது. நீண்ட காலம் சரசுவதி டாக்கீசாக இருந்தபோது தமிழ்த் திரைப் படங்களே திரையிடப்பட்டன. நுழைவாயிலில் குரோட்டன்ஸ் செடிகள் மத்தியில் அலுமினியம் பெயிண்டடித்த வீணையோடான சரசுவதி சிலை இருக்கும். சரசுவதியில் நாங்கள் பார்த்த தமிழ்ப் படம், பி.யு. சின்னப்பா தாத்தா, மகன், பேரனாக மூன்று பாத்திரங்களிலும் என்னெஸ்கே மகன் அப்பா இரு வேடங்களிலும் உடன் கண்ணாம்பா, அஞ்சலிதேவி, மதுரம் ஆகியோர் நடித்த “மங்கையர்கரசி” ஜித்தன் பானர்ஜி இயக்கத்திலும் ஜி.ராமநாதன் இசையிலும் உருவான இப்படத்தில் ஒரு காட்சியில் சின்னப்பா பேரன் பாத்திரத்தில் சில தீயவர்களோடு கடுமையாக போடும் சிலம்பாட்டச் சண்டை மிகவும் புகழ் பெற்றது.
ஆனால் அவரது மறைவுக்கு பின் மங்கையர்கரசி படத்தின் எல்லா பிரதிகளிலிருந்தும் திட்டமிட்டே அந்த சிலம்பச் சண்டைக் காட்சி வெட்டி நீக்கப்பட்டது. இதில் ஓர் அரசியல் சூழ்ச்சி சினிமா ரீதியாக இருந்ததாயும் பேசப்பட்டது. பிற்காலத்தில் கிடைத்த மங்கையர்கரசி குறுந்தகடுகளிலும் இந்த சிலம்பாட்டக் காட்சி இல்லை. பல ஆண்டுகள் போய் சரசுவதி தியேட்டர் தன் அமைப்பில் சில மாற்றங்களோடு இம்பீரியல் என்றானது. கடைசியாக நியூ இம்பீரியல் என்றாகி ஆங்கில படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு வந்தாலும் எப்போதேனும் ஓரிரு இந்திப் படங்களும் திரையிடப்பட்டன. சாந்தாராமின் தோ ஆங் கே பாரா ஹாத் மற்றும் நெளரங் ஆகிய இந்தி படங்கள் அவ்வாறு கலந்தவை.
ஹாலிவுட் திரைப்பட நிறுவனங்கள் பல்வேறு வகையான திரைப்படங்களைத் தொடர்ந்து தயாரித்து ஆவணத் தன்மையானவை. அமெரிக்க குடியேற்ற நாடுகளிடையேயான உள்நாட்டுப் போர் படங்கள், அமெரிக்க – கனடிய ஆதிக்குடிகளான செவ்விந்தியரோடான போர்கள், காதல் மற்றும் உணர்ச்சிகரமான கதைப் படங்கள், வரலாற்றுப் பின்னணி மற்றும் விவிலிய சம்பவங்களின் அடிப்படையிலான படங்கள், உலகப் போர் சம்பவபடங்கள், குற்றம், துப்பறியும் கதைகள், திகில் படங்கள், மாய தந்திர மந்திர வகைகள், விஞ்ஞான ரீதியான கதைப் படங்கள் இசை, நடனம், நகைச்சுவைக்கான படங்கள், கிரேக்க, எகிப்திய, ரோமானிய வரலாறு மற்றும் புராண இதிகாசங்களின் படங்கள், குழந்தைகள், சிறு வர்க்கான படங்கள், மேற்கத்திய கெளபாய் படங்கள், அமெரிக்காவில் குடியேற்றங்கள் ஏற்பட்டதற்கான படங்கள்குடும்பக் கதைப் படங்கள், அரசியல் படங்கள், ஆப்ரிக்க- அமெரிக்க கருப்பின சமூகப் பிரச்சினைக்கான படங்கள் என பட்டியல் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு மாபெரும் கனவுலகு இந்த ஹாலிவுட் சினிமா உலகம்.
இந்த நீண்ட பட்டியலில் அமெரிக்க ஆதிப் பழங்குடியினரான செவ்விந்தியருக்கும் பல நாடுகளிலிருந்து வந்து குடியேறிய வந்தேறிகளான வெள்ளையருக்குமான பதினெட்டு- பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்து வந்த போர்கள் பற்றிய குரூரமான சண்டைக் காட்சிகள், உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் சிறப்புமிக்க சில படங்களைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். செவ்விந்திய இனத்தின் பல்வேறுபிரிவுகள் தங்களுக்கான வெவ்வேறு கலாச்சாரம் பண்பாடுகளைக் கொண்டவை. அவர்களின் முகத்தில் யுத்தத்தின்போது வரைந்து கொள்ளும் வண்ணக் குறிகள், தலையில் தறிக்கும் இறகுகள், மரத்தால் செதுக்கி வைக்கும் பல குறியீட்டு உருவங்களாலான ஸ்தம்பங்கள் ஆகியவற்றின் வழியே அந்த இனங்களுக்குள்ளான வேறுபாடுகளை அறிய முடியும்.
செவ்விந்திய பாத்திரங்களையும் வெள்ளை வந்தேறிகளோடான அவர்களின் போர்களையும் கொண்ட ஏராளமான திரைப்படங்களை ஹாலிவுட் தயாரித்திருந்ததில் பெரும்பான்மைப் படங்கள் ஒரு தலைப் பட்சமானவை. அவை வெள்ளையரின் வெற்றிகளுக்குப் பின்னாலுள்ள சூட்சி, அநியாயம், என்பனவற்றை நியாயப்படுத்தியும், பழங்குடியினரின் வீரத்தை கேவலப்படுத்தியும், அவர்களை நியாயமற்ற கொடூர மூர்க்கக் காட்டு மிராண்டிகளாகவுமே சித்தரித்தனர். செவ்விந்தியரின் கால் நடைகளைத் திருடியும் அடிமாட்டு விலைக்கு விலங்குத் தோலை வாங்கியும் அநியாய விலைக்கு துப்பாக்கிகளை விற்றும் அவர்களின் மாடுகள் நிலங்களை அபகரித்தும் இதனால் யுத்தங்களை வலிந்து மேற்கொள்ள வைத்தனர். இவ்வித யுத்த நிகழ்வுகளைக் கொண்ட ஏராளமான திரைப்படங்களை ஹாலிவுட்தயாரித்தாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக சில படங்களையே எடுத்துக் கொள்ள முடிகிறது.
மேற்கத்திய குடியேற்ற காலம், அப்போதைய உள்நாட்டு யுத்தங்களைச் சொல்ல அற்புதமான திரைப்படங்களை எடுத்து இயக்கியவர் John Ford அவரையும் அவரது படங்களையும் பற்றி பேசு முன் வேறு சில சிறந்த படங்களைப் பற்றி பேசிவிடலாம்.
சிறு மலர் உயர்நிலைப் பள்ளியாசிரியர்களில் துரை. பழனிவேலன் எனக்கு முக்கியமானவர் வரலாறு போதித்தவர். சரித்திர பாடங்களை நிகழ்வுகளை நகைச்சுவை தோய்த்து போதித்தவர். ஆனால் அவர் ஆங்கிலத்திலேயே எட்டாம் வகுப்பு மாணவர்களோடும் பேசுபவர். நகருக்குள் திரையிடப்படும் எல்லா ஆங்கில சினிமாவையும் பார்த்துவிடுவதோடு குறிப்பிட்ட சிலதை மாணவர்களுக்குச் சொல்லி, போய்ப் பார்க்கும்படியும் பரிந்துரைப்பவர். பள்ளி ஒழுக்கம், படிப்பு, விளையாட்டு எல்லாவற்றிலும் முதன்மை நிலையிலிருந்த காலத்தில் சினிமா பேச்சு, சினிமாவுக்கு அடிக்கடி போவதை வரவேற்றதில்லை. ஆனால் துரை பழனிவேலன் மாத்திரம் சினிமா பார்ப்பதை அதுவும் ஆங்கில சினிமா பார்ப்பதை ஆதரித்ததோடு பார்க்கும்படி சிபாரிசும் செய்தவர். பிறகு அவர் பரமத்தி வேலூரிலிருந்த கந்தசாமி கண்டர் (…. கல்லூரி ஆசிரியராக பதவியில் போய்ச் சேர்ந்தார். பழனிவேல் அவர்கள் எனக்கு நிறைய ஆங்கில திரைப்படங்களை சிபாரிசு செய்து பார்க்கச் சொன்ன விதத்தில் அரிய பல படங்களைப் பார்க்க முடிந்தது.
செவ்விந்திய இனங்களில் இருக்கும் பல்வேறு பிரிவுகளில் ரோஷமிக்கதும் மூர்க்கமானதும் அப்பாச்சி இனம். அப்பாச்சி இன செவ்விந்திய பழங்குடிகளை வைத்து நாவல்கள் எழுதியவருள் குறிப்பிடத்தக்கவர் பால் வெல்மன் (Paul wellman) இவரது Brancho Apache) என்ற படமாக ராபர்ட் அல்ட்ரீச் Robert Aldriech) என்பவரின் சிறந்த இயக்கத்தில் தயாரிக்கப்பட்டு சேலம் இம்பீரியலில் வெளிவந்தது. துரை பழனிவேலனின் பரிந்துரையோடு அப்பாவிடம் கூறி, படத்தைப் பார்த்தேன். இந்தப் படத்துக்கு இம்பீரியல்காரன் தந்த தமிழ்த் தலைப்பு, ஐய்யோ அப்பாச்சி, அம்மாச்சியப்பாச்சி என்பது அப்பாச்சிதான் இந்த பயாஸ்கோப்காரன் சேலம் வந்ததும் இம்பீரியலில் பார்த்த முதல் ஹாலிவுட் ஆங்கில படம்.
1954-ல் வெளிவந்த இப்படத்தில் அப்பாச்சிகளின் தன் மானத் தலைவனாயிருந்து வெள்ளையருக்கு மிகுந்த நெருக்கடியையும், உயிர்- பொருள் சேதத்தையும் கொடுத்து வந்த ஜெரோனிமோ Geronimo) ஒரு கட்டத்தில் முடியாமல் வெள்ளையரிடம் சரணடைந்து விடுகிறான். இது அப்பாச்சிகளின் வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது. 1886ல் நிகழ்கிறது. இதையடுத்து இதர செவ்விந்திய பிரிவினரும் பின் வாங்கிய நிலையில் மாஸ்ஸேப் எனும் அப்பாச்சி வீர இளைஞன் எதிர்த்து சண்டையிட்டு கைதாகி தப்பித்து மீண்டும் தனி மனிதனாக நின்று தன்னைக் காட்டிக் கொடுத்தவனின் மகளைத் தூக்கிச் சென்று வாழ்க்கை நடத்தி அவளுக்கு பிரசவமாகிற நாளில் வெள்ளையர்களால் சுடப்பட்டு குண்டு பாய்ந்த நிலையில் குழந்தையைப் பார்க்க மாஸ்ஸேய் குடிசைக்குள் போகிறதோடு படம் முடிகிறது. பல்வேறு உணர்ச்சிகரமான கட்டங்களும் மயிர்க்கூச்செறியும் சண்டைக் காட்சிகளும், நல்ல கதையம்சமும் கொண்ட படம் அப்பாச்சி. மாஸ்ஸேயாக பிரிட்டிஷ் நடிகர் பர்ட் லங்காஸ்டர் (Burt Lancastar) திறம்பட நடித்திருக்கிறார்.
சில காட்சிகள் மறக்க முடியாதவை. அப்பாச்சிகளை ஏற்றிக் கொண்டு ரயிலில் முகாமுக்கு செல்லும் சமயம், வெள்ளையதிகாரிகள் முக்கிய கைதியான அப்பாச்சி தலைவர் ஒருவரோடு அருகமர்ந்து புகைப்படமெடுத்துக் கொள்ளும் காட்சி. ஆதியில் மரத்தலான காமிராவை க்ளிக் செய்தவுடன் டப் பென்ற ஓசையோடு புகை வெடித்துக் கிளம்பும். அது தான் புகைப்படமென்று பெயர். டப் பென்ற ஓசையைக் கேட்ட மாத்திரத்தில் அதன் காரணமறியாத அப்பாச்சிகளில் ஓரிருவர் அது எதோ குண்டு வெடிப்பென்று அதிர்ச்சியுற்று விருட்டென எழுந்து நிற்கும் காட்சி. வெள்ளையதிகாரிகள் மூத்த அப்பாச்சி தலைவனோடு அருகமர்ந்து புகைப்படமெடுக்கும்போது கைதியின் கை விலங்கு படத்தில் விழுந்து விடாதிருக்க தன் டவலையெடுத்து விலங்கிடப்பட்ட கை மீது போர்த்தி மறைப்பதை இன்றைய அரசியல் தமாசாவுக்கும் ைவத்துப் பார்க்கலாம். அமெரிக்க அதிபர் டிரம்ப் குஜராத்துக்கு வரும்போது வறுமைக் கோட்டுக்குக் கீழேயுள்ள மக்களின் குடிசைகளை பார்வையில் படா வண்ணம் மூடி மறைக்கும் வகையில் நீண்டு உயர்ந்த மதிற்சுவர் அவசரமாய்க் கட்டப்பட்டது.
உலகின் முதல் சினிமாஸ்கோப் படம் “தி ரோப்” The Robe போர்வை சனி ஞாயிறு காலை காட்சியாக சேலம் நியூ சினிமா தியேட்டரில் காட்டப்பட்டது. சேலத்தில் பெரிய தியேட்டர்கள் எல்லாவற்றிலும் சனி ஞாயிறுகளில் காலைக் காட்சியுண்டு. அது ஆங்கிலப் படங்களாயிருக்கும். உலகின் முதல் சினிமாஸ்கோப் படம் தி ரோப்பிரமிப்பூட்டியது. ரிச்சர்டு பர்ட்டன், ஜீன் சிம்மன்ஸ், விக்டர் மச்சூர் ஆகியோர் நடித்தது. 1953-ல் தயாரிக்கப்பட்ட இப்படத்தை சிறப்பாக இயக்கியவர் ஹென்றிகாட்டர். அசாதாரண உடல் வலிமை பெற்ற ஆணழகனான யூத அடிமை ஒருவனை சந்தையில் அரை நிர்வாணமாக்கி ஏலத்தில் விற்கையில் சீமாட்டிகளின் கையில் அவன் சிக்காத வகையில் ரோமானிய அரச வம்சத்தவன் அடிமைச் சந்தையில் விலைக்கு வாங்கி விலங்குகளை நீக்கி யூத அடிமையை சுதந்திரமனிதனாக்குகிறான். அடிமைத் தளையிலிருந்து தன்னை விடுவித்த ரோமானிய சீமானுக்கு மெய்க்காப்பாளனாகிறான் யூதன். இங்கு கிறித்தவம் வருகிறது. யூதன் அவ்வழியைப் பின்பற்றுகிறான் ரோமானிய எஜமானும் யூதனைப் பின்பற்றி போய்ச் சேர்வது படம். ரோப், ஏசுநாதரின் கடைசி போர்வையைக் குறிக்கிறது. தி ரோப் 1953-ல் ஐந்து அகாதெமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
ரோப்-ன் தொடர்ச்சியாக மற்றொரு பிரம்மாண்டமான சினிமாஸ்கோப் படம் 1954-ல் எடுத்து திரையிடப்பட்டது. DEMETRIOUS AND GLADI ATORS என்ற அப்படம் DELMER DAVES என்பவரால் இயக்கப்பட்டு ரோப்-ல் அடிமையாக நடித்த விக்டர் மச்சூரை கதாநாயகனாய்க் கொண்டது. ரோமானிய தலைவன் மார்செல்ஸ் கலியோ Marcellus Gallio ஏசுகிறிஸ்துவை சிலுவையிலறையும் செயலை பார்வையிட்டமைக்காக குற்றம் சுமத்தப்படுகிறான். அதே சமயம், சிலுவைக்கடியில் நடக்கும் சூதாட்டத்தில் அவன் வென்று பந்தயப் பொருளாய் ஏசுவின் போர்வையை எடுத்துக் கொள்ளும்போது அவனுடைய வாழ்க்கையே மாறுகிறது. இந்தப் படத்தையும் காலைக் காட்சியாக சேலம் நியூ சினிமாவில் பார்க்க நேரிட்டது. விக்டர் மச்சூரோடு சூசன் ஹோவார்டு, ரிச்சர்டு ஈகன் ஏனர்ஸ்ட் போர்க்வின் ஆகியோர் நடித்தனர். ஏசுநாதரின் சிலுவையேற்ற தண்டனை ரோமானிய அரசன் காலிகூலா ஆட்சியில் GALIGULA நிகழ்கிறது. இந்தப் படத்தில் கர்த்தரின் கடைசி போர்வையை எடுத்துக் கொள்ள வேட்கையோடிருக்கும் அரசன் காலி கூலாவின் நீதிமன்றம், அதையடைய உயிருக்கு ஆபத்தான போட்டிகளை தீர்மானிக்கிறது. மாவீரன் மெஸ்ஸாலினா காலி கூலாவின் கிளாடியேட்டர் வீரர்களை மூர்க்கமான சண்டையில் தோற்கடிக்கிறான்.
மற்றொரு போட்டியில் மூன்று புலிகளோடு சண்டையிட்டு அவற்றை வெற்றி கொள்ள வேண்டும். அதிலும் டெமிட்ரியஸ் மெஸ்ஸாலினாவாக கடுமையான சண்டைக் காட்சிகளில் திறம்பட நடித்த விக்டர் மச்சூரின் உடற்கட்டைக் கண்ட ஹாலிவுட்டின் பிரம்மாண்ட படங்களை (1 e சாம்சன் அண்டு டிலைலா, தி பக்கானிர், கிரேட்டஸ்ட் சோ ஆன் இயர்த், டென் காமாண்ட்மெண்ட்ஸ்) தயாரித்து இயக்கிய செசில் பி டெமில்லி (Cesil b Demille) ஏற்கெனவே தமது சாம்சன் அண்டு டிலைலாவில் விக்டர் மச்சூரை சாம்சனாய் நடிக்க வைத்தார். விக்டர் படத்தில் சிங்கம் ஒன்றோடு மோதி சண்டையிட்டுக் கொல்லும் காட்சி மயிற்கூச்செறிய வைக்கும். இதே படத்தில் சாம்சன் ஒரு கழுதையின் தாடை எலும்பைக் கொண்டே மன்னனின் படையையே அடித்து அழிக்கும் காட்சியும் பிரமாதமானது. 1949-ல் எடுக்கப்பட்டு வெளியான சாம்சன் அண்டு டிலைலாவில் வரும் இக்காட்சிகளின் படமாக்கலை இன்றளவு யோசிக்க வியப்பாக விருக்கிறது. குறைந்த தொழில் நுணுக்க வசதியிலேயே இதெல்லாம் நடந்திருக்கிறது. அதற்கு பின் விக்டர் மச்சூர் ஈஜிப்ஷியன், ZARAC ஆகிய படங்களிலும் அசாதாரண சாகச நடிப்பைச் செய்தார்.
நியூ இம்பீரியல் தியேட்டரின் மற்றொரு சிறப்பு சினிமா பார்க்க “சீசன் டிக்கட்” அளித்தது. வேறெங்கும் கேங்லிப்படாத இந்த சினிமா பார்க்க சீசன் டிக்கட் வசதியை இம்பீரியல் தியேட்டர் செய்த விவரங்களை அடுத்து பார்ப்போம்.
– தொடரும்.
…
முந்தைய தொடர்களை படிக்க கிளிக் செய்க:
புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் (முன்னுரை) – விட்டல்ராவ்
தொடர் 2: பயாஸ்கோப்காரன் (கபிலர் மலையும் அரிச்சந்திரனும்) – விட்டல்ராவ்
தொடர் 3: பயாஸ்கோப்காரன் (போரும் சினிமாவும்)– விட்டல்ராவ்
தொடர் 4: பயாஸ்கோப்காரன் (மினி பயாஸ் கோப்) – விட்டல்ராவ்
தொடர் 5: பயாஸ்கோப்காரன் (சில தெலுங்குப் படங்கள்) – விட்டல்ராவ்
தொடர் 6: பயாஸ்கோப்காரன் (ரிபப்ளிக் சீரியல் படங்களும், தமிழ் சண்டைப் படங்களும்) – விட்டல்ராவ்
தொடர் 7: பயாஸ்கோப்காரன் (கூடார வகை தியேட்டர்கள்) – விட்டல்ராவ்
தொடர் 8: பயாஸ்கோப்காரன் (கூடார தியேட்டர்கள்) – விட்டல்ராவ்
தொடர் 9: பயாஸ்கோப்காரன் (கந்தர் ஃபிலிம்சும், மாடர்ன் தியேட்டர்ஸும்) – விட்டல்ராவ்
தொடர் 10: பயாஸ்கோப்காரன் (சினிமா சுவரொட்டித் திருட்டு) – விட்டல்ராவ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.