Bioscope Karan 14th Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies. Adaptation, Dubbed Movies



தழுவல், காப்பி, மொழிமாற்றத் திரைப்படங்கள்

உலகெங்கும் திரைப்படங்கள், பாதிப்பு, தழுவல், மொழி மாற்றம், காப்பி எனும் ஜாபிதாவுக்குள் அசலல்லாத ரீதியில் அடங்குகின்றன. இவை ‘‘காப்பி’’ என்பதைத் தவிர்த்து நியாயமான வழிமுறையில் வருபவை. காப்பியடித்தலை திருட்டு என்றும் கொள்ளலாம். எடுத்துச் சொன்னால் கோபமும் வெறியும் பொத்துக் கொண்டு வரும். வார்த்தை ரீதியான வன்முறையிலும் அடிதடி வரையிலும்கூட போய் விடுவார்கள். அநியாயத்தைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.

Bioscope Karan 14th Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies. Adaptation, Dubbed Moviesபாதிப்பு என்ற நல்ல வழிமுறையில் ஓர் உதாரணம், 1956-ல் தமிழில் எடுக்கப்பட்ட, ‘‘முல்லை வனம்’’ முல்லைவனம், ஹாலிவுட் இயக்குனர் ஜான் ஃபோர்டின் புகழ்பெற்ற STAGE COACH படத்தின் பாதிப்பில் தமிழ் சினிமா சூழலுக்கேற்றபடி கண் மூக்கு வாயெல்லாம் மாற்றி வைத்து செய்யப்பட்ட சுமார் ரக படம். குமாரி ருக்குமணி, ராம், பி.எஸ். வீரப்பா, எஸ்.ஏ. நடராஜன் ஆகியோர் திறம்பட நடித்திருந்த படம். ஒண்ணரை நூற்றாண்டுக்கு முன் திருநெல்வேலி- கன்னியாகுமரி பகுதியில் ‘‘மெயில் வண்டிகள்’’, எனப்படும் இங்கத்திய ஸ்டேஜ்கோச்சுகள் புழக்கத்திலிருந்து வந்ததை மா. அரங்கநாதன் அடிக்கடி குறிப்பிடுவார். அவர் தம் நாவல், ‘‘பறளியாற்று மாந்தர்’’லும் அந்த மெயில் வண்டி வரும் காட்சியைக் கொண்டு வருவார். இந்த மெயில் வண்டிகளில் பயணிகளும் சவாரி செய்வார்கள். இவற்றில் முக்கியமாக தபால் ஏற்றப்பட்டு (MAIL) வண்டி என்றழைக்கப்பட்டது. இவற்றில் ரெயில்வே ஸ்டேசனில் டிக்கட் வசூலில் சேரும் பணம் நிறைந்த இரும்புப் பெட்டகங்களும் சவாரி செய்யும். அவற்றை கஜானாவுக்கு எடுத்துச் செல்லுவார்கள். பாங்குகளின் பணமும் மெயில் வண்டிகளில் எடுத்துச் செல்லப்படும். இத்தகைய சேவை மேற்கத்திய படங்களிலும் இடம் பெறும். அதை வழிப்பறி செய்ய கயவர்கூட்டமும் வரும். தமிழ்நாட்டில் சங்கரலிங்கத் தேவன் போன்ற வழிப்பறி கொள்ளைக்காரர்கள் கூட்டமாக வந்து மெயில் வண்டிகளை வழிப்பறி செய்வது சகஜம். இது போன்ற சம்பவங்கள் ஜான் ஃபோர்டின் படங்களிலும் பிற்காலத்தில் செர்ஜியோ லியோன் (Sergio Leone) படங்களிலும் இடம் பெற்றிருக்கின்றன.

Bioscope Karan 14th Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies. Adaptation, Dubbed Moviesமுல்லை வனம் படத்தின் கதையும் சண்பகராமன் புதூர்- மார்த்தாண்டம் பகுதியில் நடப்பதாகவே அமைந்திருப்பது வசதியாய்ப் போயிற்று. முல்லை வனத்துக்கு முன்னமேயும் மேனாட்டு கதைகள், நாடகங்களைத் தழுவி எடுக்கப்பட்ட தமிழ்ப் படங்கள் உண்டு. சாரங்க பாணி, வி.ஆர். செல்லம், நாகர்கோயில் மகாதேவன் நடித்த புகழ்பெற்ற நகைச்சுவைப் படமான ‘‘என் மனைவி’’ (1942) ஃபிரெஞ்சு நாடகாசிரியர் மோலியரின் நாடகம் ஒன்றைத் தழுவி எடுக்கப்பட்டது. ‘‘FABULOUS SENORITA’’ என்ற ஃபிரெஞ்சு படத்தைத் தழுவி பானுமதி. ‘‘மணமகன் தேவை’’ நகைச்சுவைப் படத்தை எடுத்தார். திரைப்பட ஆக்கத்தில் உலகெங்கும் தழுவல்கள் நடந்தபடியே வருகின்றன. ஜப்பானின் புகழ் பெற்ற அகிரோ குரோசாவா ஷேக்ஸ்பியரின் மற்றும் தாஸ்தாவ்ஸ்கியின் கதைகளைத் தழுவி நிறைய படங்களைப் பண்ணினார். மிக அற்புதமாக பண்ணினார். RAN, THRONE OF BLOOD என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

நமது வீணை எஸ். பாலச்சந்தர் குரோசாவின் திரைக்காவியமான ரஷோமான் படத்தின் கதையைக் கச்சிதமாக தமிழாக்கி அற்புதமான படமாய் ‘‘அந்த நாள்’’-ஐ ஏவிஎம் நிறுவனத்துக்காக இயக்கினார். நேர்மைக்கு உதாரணமாக வீணை பாலச்சந்தர் அந்த நாள் கதையைத் தாம் எவ்வாறு ரஷோமனிலிருந்து கற்க முடிந்தது என்பதை மிக வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். அவருக்கு கிட்டதட்ட நேர்மையான மற்றொரு இயக்குனர் கே.ராம்னாத், விக்டர் ஹியூகோவின் அமர நாவலான ‘‘லே மிஸரப்னே’’யைத் தழுவி, ‘‘ஏழைப் படும்பாடு’’ படத்தை எடுத்தபோது க்ரெடிட் டைட்டில்ஸில் தம் தழுவல் தகவலைத் தவறாது குறிப்பிட்டார். இதுபோல நூற்றுக்கு அதிகமாகவே தமிழில் மட்டும் தழுவல் படங்களிலிருக்கின்றன. இதுபோன்ற நேர்மையை இயக்குனர் மகேந்திரனிடமும் கமலஹாசனிடமும் காணலாம்.

தழுவலுக்கும் காப்பியடித்தலுக்கும் உள்ள சிறு வேறுபாடு, ஒருவன் தவறி கீழே போட்ட பணப்பையை இன்னொருவன் எடுத்துக் கொள்ளுவதற்கும், பிக்பாக்கெட் அடிப்பதற்குமுள்ள வேறுபாடு மாதிரி.. ராம்னாத்தான் இயக்கிய கன்னியின் காதலி, மர்மயோகி, விடுதலை ஆகிய திரைப்படங்களின் கதைகள், எந்தெந்த மூலக் கதைகளின் தழுவல் என்பதை வெளிப்படையாகவே குறிப்பிட்டவர். இங்கு காப்பியடிப்பதும் அப்பட்டமாய்த் திருடுவதும் கதைகளை மட்டுமல்ல, காட்சிகள் ஒளிப்பதிவு, நடிப்பு எல்லாமே அவ்வப்போது எங்கெங்கு தேவையோ அவ்வப்போதெல்லாம் அங்கெல்லாம் தயக்கமில்லாமல் மனசாட்சியில்லாமல் செய்யப்பட்டு வருகிறது. யாரெல்லாம் அத்தகைய காரியங்களில் ஈடுபட்டிருப்பார்கள் என்பதை சொல்லாமலே உங்களுக்குத் தெரியக்கூடும்.

Bioscope Karan 14th Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies. Adaptation, Dubbed Movies
Vaddante Dabbu (பணம் படுத்தும் பாடு) – Wikipedia

நான் என் பெற்றோர்களோடு 1955-ல் வெளிவந்த ஒரு தமிழ்ப் படத்தைப் பார்த்தேன். ‘‘பணம் படுத்தும் பாடு’’ என்ற அந்தப் படம் தெலுங்கிலிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட படம். தமிழ்ப் படத்தில் ஓரிரு முக்கிய கதா பாத்திரங்களின் நடிகர்களாய் அசல் தமிழ் நடிகர்களைக் கொண்டு நடிக்கப்பட்டது. என்.டி.ராமராவ், சவுகார் ஜானகி, செருகளத்தூர் சாமா, தங்கவேலு, ஜமுனா ஆகியோர் நடித்த முழுக்கவும் நல்ல நகைச்சுவைப்படம். டிராயிங் மாஸ்டர் அளவுக்கு சித்திரம் வரையத் தெரிந்த ஒருவன் (என்.டி.ஆர்) ஓவியன் என்று படத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறான். இவன் படங்கள் போணியாகாமல் வறுமையில் வாடுகிறான்.இவனது படங்களைக் கொண்டுபோய் விற்க முயலும் ஆப்த நண்பன் ஒருவன் இவனைப் போலவே வேலையின்றி இவனோடு வசிப்பவன். ஓவியன் ஆற்றங்கலையில் உட்கார்ந்து படம் வரைந்து கொண்டிருக்கையில் பாட்டு பாடினபடி செக்காவின் நாய்க்கார சீமாட்டிபோல அழகிய இளம் பெண்ணொருத்தி அங்கே தன் நாயோடு ஓடிப் பிடித்து ஆடுகிறாள். ஓவியன் அவளையும் அவளது நாயையும் வரைகிறான். அவள் அதைப் பார்க்கிறாள். இருவரும் காதலில் சிக்கினார்கள். அவளுடைய தந்தை ஒரு கோடீசுவரன் இரண்டு டஜந் நாய்களோடிருக்கும் பணத்திமிர்காரன். இந்த ஓவியனைத்தான் கல்யாணம் செய்து கொள்ளுவேன் என்று அந்தப் பெண் (செளகார் ஜானகி) பணக்கார தந்தையிடம் கூறி காதலனை அறிமுகப்படுத்துகிறாள். தந்தை தெனாவாட்டாக செருகளத்தூர் சாமா ஓவியனைக் கேட்கிறான்.

‘‘ஓவியன்னு சொன்னா, நாய்ப் படம் போடுவியா? எனக்கு நாய்ப் படம்தான் வேணும்’’
மாத வருமானம் என்று எதுவுமில்லாத ஓவியனிடம் கூறுகிறான்.

‘‘சம்பாதிக்கத்தான் தெரியில்லே. சரி, செலவழிக்கவாவது தெரியுமா? இந்தா, ஒரு லட்சம் ரூபாய். எல்லாம் நூறு ரூபா நோட்டு. நூறு ரூபா நோட்டு பாத்திரிக்கியா? இந்த ஒரு லட்சத்தையும் ஒரு மாசத்துக்குள்ளே செலவு செஞ்சிட்டைன்னா, எம்பொண்ண உனக்கு கட்டி வைக்கிறேன்.’’ என்று கூறி ஒரு லட்சம் ரூபாயை ஓவியன் ராமராவிடம் கொடுக்கிறான். ஆனால் நண்பன் (தங்கவேலு) அதைச் சுலபமாக செலவழித்துவிடலாமென சொல்லுகிறான்.

குதிரைப் பந்தயத்தில் பெரும் தொகையை வைத்து ஆடினால், ஒன்றுக்கு பல மடங்கு பணம் கிடைத்து விடுகிறது. ஏராளமான திட்டத்தில் வீடு கட்டி செலவழிக்க கடைக்கால் தோண்டுகையில் தங்க நாணயங்கள் நிறைந்த பெரிய தவலை கிடைக்கிறது. பணத்தை எண்ணுவதற்கென நியமிக்கப்பட்ட நால்வர் இவர்கள் இருவரையும் அடித்துக் கட்டிப் போட்டுவிட்டு எல்லா பணத்தையும் எடுத்துக் கொண்டு ஓடிவிடுகிறார்கள். பணம் ஒழிந்தது என்று இருந்தால், ஓடியவர்கள் பிடிபடுகிறார்கள். போன பணம் திரும்ப வருவதோடு, வெகு காலமாய்த் தேடப்பட்டு வந்த அகில இந்திய கொள்ளையரைக் காட்டிக் கொடுத்தமைக்கான பரிசுத் தொகையும் சேர்கிறது.

எ்ப்படி செலவழித்தாலும் அதைப் போன்ற பத்து மடங்கு அதிகமாய் பணம் வந்து சேருகிறதே ஒழிய செலவழிக்கவே முடியாது கெடு வைத்த ஒரு மாத காலமும் முடிகிறது. ஓவியன் மனமுடைந்து காதலியின் தந்தை கொடுத்த ஒரு லட்சம் ரூபாயையும் அது ஈட்டித் தந்த பல லட்சத்தையும் சேர்த்து கொண்டுபோய் அவர்கள் வீட்டில் போட்டுவிட்டு வெளியேறுகையில் பணக்காரன் தன் மகனை ஓவியனுக்கே மணமுடித்து வைக்கிறான்.

Bioscope Karan 14th Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies. Adaptation, Dubbed Moviesஇப்படத்தை பார்த்து வைத்த சிறிது காலம் போய் சேலம் இம்பீரியலில், ‘‘THE MILLION POUND NOTE’’ என்ற ஆங்கிலப் படத்தைப் பார்த்தேன். இது 1954 வெளியீடு. இரு பணக்கார நண்பர்கள் தங்களுக்குள் ஒரு பந்தயம் கட்டுகிறார்கள். ஒரு மில்லியன் பவுண்டு பணத்தை காசில்லாத ஒருவனுக்குக் கொடுத்து, அவனால் அதை வைத்துக் கொண்டு செலவே செய்ய முடியாமலிருந்தால் எப்படியிருக்கும் என்றும் அது சாத்தியமா, சாத்தியப்படாதா என்பது பந்தயம். அதன்படி ஏழை கப்பல் தொழிலாளி ஒருவனைப் பிடித்து ஒரு மில்லியன் பவுண்டு நோட்டைத் தந்து ஒரு மாதத்துக்குள் செலவு செய்து காட்டும்படி சொல்லுகிறார்கள். அவனும் மகிழ்ச்சியோடு பணத்தைப் பெற்றுக் கொண்டு போகிறவன் செலவு செய்யச் செய்ய அது மேன்மேலும் பெருகுகிறதே தவிர செலவாகிறதில்லை.

இப்படத்தின் கதை புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெய்ன் (MARK TWIN) எழுதிய சிறுகதையொன்றைத் தழுவியது. படத்தை ரொனால்டு நீயெம் RONALD NEAME என்பவர் இயக்கியிருக்கிறார். ஏழை கப்பல் தொழிலாளியாக கிரிகரி பெக்கும் (GREGORY PECK) நண்பர்களாய், டொனால் ஸ்க்வைரும் (DONALD SQUIRE) வில்ஃபிரட் ஹைட் வைட்டும் நடித்திருக்கிறார்கள். இப்படம் வெளிவந்த சூட்டிலேயே நம்மவர்கள் தமிழ் – தெலுங்கு இரு மொழியிலும் காப்பியடித்துத் தயாரித்துவிட்டனர். க்ரெடிட் பட்டியலில், ‘‘இவரது கதையைத் தழுவியது என்றோ, இந்தப் படத்தின் கதையைத் தழுவியதென்றோ அறிவிக்கும் குறைந்த பட்ச நாணயம் – நேர்மைகூட நமது வெகுஜன சினிமாக்காரர்களுக்கு அன்று முதல் இன்று வரை ஓரிருவரைத் தவிர இல்லை. இதே கதையை வைத்து ரஜினிகாந்தும் ஒரு படம் பண்ணியிருப்பதாய் அறியப்படுகிறது.

ஒரே சமயத்தில் ஒன்றுக்கொன்று ஒரே மாதிரியிருக்கும் கதைகளிலமைந்த திரைப்படங்கள் தமிழில் எடுக்கப்பட்டு நீதிமன்றத்துக்கு போயிருக்கின்றன. உதாரணம்: அம்மையப்பன், சுகம் எங்கே.

அது போல ஹாலிவுட்டிலும் இரு ஆங்கிலப் படங்கள் காலத்தால் சற்று முன்னும் பின்னுமாயும், கதையமைப்பில் கொஞ்சம் மாற்றத்தோடும் எடுக்கப்பட்டன. ஆனால், அவைகளுக்கிடையே எவ்வித பிரச்சினையும் எழவில்லை. அவைகள்: 3: 10 TOYUMA, THE LAST TRAIN FROM THE GUNHILL.

3:10 To Yuma படத்தில் ஒரு கொலைக் குற்றவாளியைத் தன் உயிரைப் பணயமாக்கி குடிகார விடுதியிலிருந்து கைது செய்து யூமா எனுமிடத்திலுள்ள சிறைச் சாலைக்கு ரயிலிலேற்றி கொண்டுபோகும் அமெரிக்க மார்சல் (போலீஸ் அதிகாரி) ஒருவனின் கதை திகிலும் சாகசமும் மிக்கதாய் சொல்லப்படுகிறது. மார்சலின் முயற்சியை முறியடித்து கைதியைத் தப்புவிக்க அவனுடைய ஒன்பது கூட்டாளிகள் ஆரம்பத்திலிருந்தே மார்சலைப் பின் தொடர்கிறார்கள். கொலையாளியின் விலங்கிடப்பட்ட சங்கிலியை ஒரு கையிலும், அவன் கழுத்தைத் தொட்டபடியுள்ள துப்பாக்கியை மறு கையிலும் பிடித்தவாறு மார்சல் கூரையில்லாத மொட்டைக் குதிரை வண்டியிலேற்றி நின்றவாறே குதிரைக் கடிவாளத்தையும் பிடித்தபடி ரெயில்வே ஸ்டேசனுக்கு மெதுவாகப் போவதுதான் படம். ஸ்டேஷனை நெருங்க நெருங்க பாதுகாப்பு குறைந்து குற்றவாளியின் சகாக்களால் எந்த கணமும் தாக்கப்பட நேரிடும் என்ற எச்சரிக்கை மார்ஷலுக்குக் கூடிக் கொண்டே போகும். மார்ஷலின் மனைவியும் மிகுந்த தவிப்போடு வேறொரு வழியில் வருவாள். ரயிலும் வந்துவிடுகிறது. ரயிலைப் பிடித்து குற்றவாளியோடு கிளம்பாவிட்டாலும் பேராபத்து. மார்ஷல் ரயில் எஞ்சின் விடும் பெருத்த புகைப் பீச்சலைப் பாதுகாப்பு கவசமாய் எடுத்துக் கொண்டு அந்தப் புகையில் தன்னையும் குற்றவாளியையும் ஒளித்தபடி பெட்டியில் ஏறிவிடுகிறான். கூட்டாளிகள் ஸ்டேஷனை நெருங்கும் முன் ரயில் கிளம்பி வேகமெடுக்கிறது. மார்சலின் மனைவி, ஊர் எல்லையிலுள்ள சிறு நீரோடையையடுத்த பாலத் தடியில் நின்றிருப்பதாய் கூறியிருந்தபடி நிற்கிறாள். மார்சல், வண்டி பாலத்தைக் கடக்கையில் கையசைத்து மனைவியிடம் விடை பெறுகிறான். இறுக்கம் தளர்ந்து கண்ணீருடன் கையசைப்பாள் மனைவி. மார்சலாக க்ளென்ஃபோர்டு நன்றாக நடித்திருப்பார். (GLEN FORD).

Bioscope Karan 14th Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies. Adaptation, Dubbed Movies‘‘கன்ஹில்லிருந்து கடைசி ரயில் (THE LAST TRAIN FROM GUNHILL) யூமாவிலிருந்த அழகியல் சங்கதிகள் குறைவான படம். ஆனால், விருவிருப்புக்கு பஞ்சமில்லை. 1959-ல் வெளியான இவ்வண்ணப்படத்தை இயக்கியவர் ஜான் ஸ்டர்ஜெஸ் (JHON STURGES). விரு விருப்பாய் படங்களை இயக்கினவர்களில் ஒருவர் இப்படத்தின் சிறப்பான ஒளிப்பதிவை LANG என்பவர் செய்திருந்தார். பெரிய நடிகர்கள் ஆந்தனிக்வின்னும் ANTHONY QUINN கிர்க் டக்ளசும் KIRG DOUGLAS நடித்திருந்தனர். கரோலின் ஜோன்ஸ் ஷல் மக் மார்கனின் (கிர்க் டக்டள் மனைவியாக சிறிது நேரமே வந்தாலும் நன்கு செய்திருக்கிறார். மார்சல் மக்மார்கனின் மனைவி பையனோடு காட்டு வழியில் வந்து கொண்டிருக்கையில் குடிபோதையில் இரு இளைஞர்கள் வழிமறித்து மார்ஷலின் இளம் மனைவியை தாக்குகிறார்கள். மார்ஷலின் பையன் குடிகார இளைஞனின் குதிரையிலேறி ஓடிவிடுகிறான். ஓர் இளைஞன் காவல் இருக்க மற்றொருவன் மார்சலின் மனைவியை புதரில் தள்ளி கற்பழித்துக் கொன்றுவிட்டு ஓடிவிடுகிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டு கெளபாய் கதை. யூமாவும் அதே காலத்து கெளபாய் கதை. யூமாவும் அதே காலத்து கெளபாய் கதைதான். பையன் மட்டும் அழுதபடி அந்நிய குதிரையில் வருவதைக் கண்ட மார்ஷல் மக்மார்கன் பதறுகிறான்.

மகன் வழிகாட்ட ஸ்தலத்துக்கு விரையும் மக் மார்கன் சீரழிக்கப்பட்ட நிலையில் மனைவியின் சடலத்தைப் பார்த்து கதறுகிறான். கயவனின் குதிரை மேலுள்ள சேணத்தில் ஜிஎச் என்று பொறிக்கப்பட்டுள்ளது. என்றால், கன்ஹில் என்றாகிறது. அது அடுத்த ஊரின் பெயர். கதை நடந்த காலத்தி்ல் இன்று வாகனங்களுக்கு நம்பர் ப்ளேட் வைத்து பதிவு எண் தருவதுபோல காவல்துறை குதிரைகள் மற்றும் கோச்சு வண்டிகளுக்கு அவை எந்த ஊரைச் சேர்ந்தவை, யாருக்குச் சொந்தமானவையென்ற விவரங்களை வைத்திருக்கும். சேணத்தில் இந்த விவரமுமிருக்கும். மேலும் மனைவியைக் கெடுத்த இளைஞனிந் துப்பாக்கியும் அவன் குதிரையிலேயே இருந்ததால் அவன் யார் என்பதையும் அவன் ஊரையும் கண்டு பிடிக்கும் மார்சல் மக் மார்கன் அவனைக் கைது செய்ய ரயிலில் கன்ஹில்லுக்குப் போகிறான்.

மார்ஷலின் மனைவியைக் கெடுத்த தன் மகன் …. புரிந்ததை அறியும் அவன் தந்தை மிகவும் வருந்துகிறான். அவனும் மார்ஷலும் இளம் வயதில் நெருங்கிய சினேகிதர்கள். மார்ஷல் கன்ஹில்லுக்கு வந்து விடுதியில் தங்கியிருப்பதையறிந்த கொலையாளியின் தந்தை (ஆந்தனி க்வின்) நண்பனை சந்தித்து அவன் மனைவியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துவிட்டு, அதற்கு தன் மகன் சார்பில் மன்னிப்பும் வேண்டுகிறான். தன் ஒரே மகனைத் தன்னிடமிருந்து பிரித்தெடுத்துச் சென்று தூக்கில் போட்டு விடவேண்டாமென மன்றாடுகிறான். ஆனால் மார்ஷல் சட்டம் நீதி கருணை என்பதற்கு மேலே கெடுத்து கொல்லப்பட்டவள் தன் மனைவி என்பதை அழுத்தத் திருத்தமாய் சொல்லிவிடுகிறான். ‘‘அப்படியானால் நாமிருவரும் எதிரிகள். நீ என் மகனோடு கன்ஹில்லை விட்டு போக முடியாதென்று கூறி போய்விடுகிறான் பையனின் தந்தை. அந்த ஊரிலுள்ள ஒரே விடுதியும் மது வருந்தும் இடமுமான அங்கு வரும் குற்றவாளிப் பையனை துப்பாக்கி முனையில் கைது செய்து விலங்கிட்டு வண்டியிலேற்றி துப்பாக்கி முனையிலேயே ரயில்வே ஸ்டேஷனுக்கு பலத்த எதிர்ப்புகளையும் மீறி போகிறான் மார்ஷல். ரெயில்வே ஸ்டேஷனை நெருங்கும் வேளை- ரயிலும் ஏற்கெனவே வந்து நிற்கிறது. குற்றவாளியின் சினேகிதன் ஒருவன் திடீரென தோன்றி அந்தப் பையனைச் சுட்டு கொன்று விடுகிறான். எப்படியோ தனக்கு வேலை மிச்சம், ஆனால் மனைவியைக் கெடுத்துக் கொன்றவன் தீர்ந்தான் என்று நிம்மதியோடு புறப்படத் தயாராயிருக்கும் ரெயிலின் பெட்டியில் ஏறப்போகிறான் மக்மார்கன். அப்போது பையனின் தந்தையும் மார்ஷலின் நண்பணுமானவன் துப்பாக்கியோடு தோன்றி, தன் ஒரே மகனின் சாவுக்கு அடுத்து மார்ஷல் கன்ஹில்லை விட்டுப் போகக்கூடாதென்று கத்துகிறான்.

ரயில் புறப்படுகிறது. அதுதான் கடைசி ரெயில். அதைத் தவறவிட்டால் நாளை வரை விடுதியில் தங்க வேண்டும். அது உயிருக்கு உத்தரவாதமில்லை. வழி ஒன்றே ஒன்றுதான். ரெயிலும் வேகமெடுக்கிறது. மார்ஷல் துப்பாக்கியை உயர்த்துகிறான். இருவருமே ஏக காலத்தில் சுடுகிறார்கள். செத்து விழுவது ஒருவன்தான். மார்ஷல் மக்மார்கன் கடைசி ரயிலின் கடைசிப் பெட்டியில் தாவி ஏறிக்கொள்ளுகிறான். வண்டி கன்ஹில் கிராம எல்லையைக் கடக்கிறது. கிர்க் டக்ளஸ் மக்மார்கனாகவும், அவரது நண்பனும் குற்றவாளிப் பையனின் தந்தையுமாய் ஆந்தனிக்வின்னும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

Bioscope Karan 14th Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies. Adaptation, Dubbed Movies

திரைப்படத் தொழில் – வர்த்தக ரீதியாக நம் நாட்டில் இந்திக்கு அடுத்ததாயும் – இந்திக்கு சரிசமமாயும் இருப்பது தமிழ்தான், எனவே ராஜ்கபூர், மெஹபூப்கான், ஆஸிஃப், போன்றோர் தம் படங்களை இந்தியிலிருந்து தமிழில் மட்டுமே மொழி மாற்றம் செய்தார்கள். அந்தவிதமாக “ஆஹ்” – அவன் என்றும், “ஆன்” – கௌரவம் என்றும் மொகலே ஆஸாம் – அக்பர் என்றும், உரோன் கடோலா வானரதமாகவும், நயாதௌர் – பாட்டாளியின் சபதமென்றும் தமிழில் மட்டுமே மொழி மாற்றம் செய்யப்பட்ட இந்திப் படங்கள். நிறைய இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தமிழ்ப் படங்களுமுண்டு. கணவனே கண்கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம், மிஸ்ஸியம்மா, சந்திரலேகா, கட்டபொம்மன் என்று பட்டியல் நீளும். பாடல்களையும் சேர்த்தே மொழி மாற்றம் செய்யும்போது சாஸ்திரிய மரபிலான இசையில் ஒரு மொழிப் படத்தில் இடம்பெற்ற பாடலை இன்னொரு மொழியில் மாற்றுவதில் சில சமயம் கஷ்டம் வந்துவிடுகிறது. மொகலே ஆஸாம் அப்படியான விஷயம். படத்தில் சலீமும் அனார்கலியும் ரம்மியமான பௌர்ணமி இரவில் அரண்மனை நீருற்றருகில் காதலில் கட்டுண்டிருக்கும் காட்சி. எவ்வித உரையாடலுமில்லாத அக்காட்சியை காமிரா மிக அற்புதமாகச் சுழன்றுச் சுழன்று காட்சிபடுத்தியிருக்கும்.

பின்னணியில்தான் சென் மியானின் அதி உன்னத சிங்கார ரசனை தோய்ந்த ஒரு தும்ரி ராகத்தில் உள்ள தாத் படே குலாம் அலிகானின் பிரமாத குரலில் பாடப்படும், “ஜோகன பன்கே…”, எனும் பாடல் வந்தவாறு இருக்கும். தம்பூரின் சுருதியொலி தவிர வேறெந்த இசைக் கருவியும் பயன்படுத்தாத – பயன்படுத்த முடியாத ராக ஆலாபனை போன்ற அந்தப் பாடல் பின்னணியில், பாய்ந்து உயரே பீய்ச்சியடிக்கும் நீரூற்று ரம்மியம். முழு நிலவின் குளிர்ச்சி. நள்ளிரவு சூன்யம். அங்கு சலீமின் மடியில் கண்மூடி கிடக்கும் அனார்கலியின் நெற்றி, மூக்கு, கண் ஓரம், உதடுகள், தாடை, காதுமடல், கழுத்தோரமெங்கும் எதோ பறவையின் மென்மையான இறகால் வருடிக்கொண்டேயிருக்கும் சலீம் – திலிப்குமார் – மதுபாலா நடிப்பில். முதலில் சினிமாவுக்கு பாட முடியாதென்று மறுத்த கான்சாஹிப்பை, இசையமைப்பாளர் காலைப் பிடித்து கெஞ்சாத அளவுக்கு வேண்டி சம்மதித்து உயரியதோர் தும்ரியை படத்தில் அமைத்தார் நௌஷத் அலி. இந்தப் பாடலை எவ்விதத்திலும் தமிழ்ப்படுத்தவும் இயலாதது மட்டுமல்ல, அதற்கொத்து இசையறிந்த குரலும் தமிழில் கிடைக்காது என்ற நிலையில் அந்த ரம்மிய சூழலில் காதலை சொல்லும் விதமாக எம்.எல்.வசந்தகுமாரியின் குரலில் ஒரு பாடலைப் பாட விட்டார்கள், தமிழில் மொழி மாற்றம் செய்த அக்பரில். இதற்கெல்லாம் பல வருடங்கள் முன்னால் “இராமராஜ்யம்” தமிழில் சிறப்பாக மொழி மாற்றம் செய்யப்பட்டபோது எல்லா இந்திப் பாடல்களும் நல்ல விதமாயே தமிழ்படுத்தப்பட்டன.

அதற்கு பின் ஆங்கில வண்ணப்படமொன்று தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. பசிபிக் பெருங்கடலில் ஒரு தீவையும் அங்கே கப்பல் சிதைவால் ஒதுங்கிய ஆண் பெண்களின் கதை, 1949-ல் பிரிட்டிஷ் தயாரிப்பில் ஃபிராங்க் லாவ்ண்டர் [FRANK LAUNDER] எனும் ஜெர்மன் இயக்குனரால் இயக்கப்பட்ட “THE BLUE LAGOON,” ஜின் சிம்மன்ஸ் [JEAN SIMMONS] [DONAL HOUSTON] டொனால் ஹௌஸ்டன், பீட்டர் ஜோனீஸ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்தது. என்ன நோக்கத்திலோ இப்படத்தை தமிழில் மொழிமாற்றி, “நீலக் கடல்” என்ற பெயரில் தமிழ் நாடெங்கும் 1952-ல் வெளியிட்டனர். ஹாலிவுட் நடிகர்களின் உதட்டசைவும் பின்னால் குரல் கொடுத்தவர்களின் வசனமும் கொஞ்சமும் சரி போகவில்லை. உதட்டசைவும், முக பாவமும், முடிந்த பிறகும் வசனம் தொடர்ந்தபடியிருந்த நீலக்கடலில். விரைவில் இப்படம் வாபஸ் பெறப்பட்டது.

Bioscope Karan 14th Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies. Adaptation, Dubbed Movies

மொழிமாற்றத்தின்போது திரைப்படத் துறையில் கலை நுணக்க ரீதியாகக் கடைபிடிக்கப்படும் திருட்டுத்தனமும் தெரிய வருகிறது. வீர பாண்டிய கட்டபொம்மன் இந்தியில், “வீர் அமர்” என்று மொழி மாற்றம் செய்யப்பட்டது. வீர் அமரிலிருந்து சில காட்சி சட்டகங்களை [அதாவது அசல் கட்டபொம்மன் படத்திலிருந்து] இந்திப் படத்தயாரிப்பாளர் ஒருவர் தமது அசல் இந்திப் படமான, “அங்குலிமால்” எனும் வண்ணப்படத்தின் இடையில் வெட்டியெடுத்து செருகிவிட்டார். அங்குலிமாலனை [பரத் பூஷன்] பிடிக்க அவன் பதுங்கியுள்ள காட்டுக்கு அரசர் படையொன்றை அனுப்புகிறார். இக்காட்சிக்காகத்தான் இந்தியில் மொழிமாற்றம் செய்த வீரர் அமர்-கட்டபொம்மனிலிருந்து ஒரு சிறு பகுதி வெட்டி ஒட்டப்பட்டது. ஜாக்சன் துரையைச் சந்திக்க இராமலிங்க விலாசத்துக்கு கட்டபொம்மனும் அவனது பரிவாரமும் பாடலுடன் செல்லும் காட்சியை [நல்லவேளை இந்தத் தமிழ்ப் பாடல் இந்தி வீர் அமரில் இடம் பெற்றிருக்கவில்லை] வெட்டி, அங்குலு மாலனைப் பிடிக்கச் செல்லும் அரசபடையாக உபயோகித்திருந்தனர்.

மொழி மாற்றம் தொடர்பாக சர்வதேச அளவில் நடந்த ஒரு விசித்திரத்தையும் பார்க்கலாம். ஆங்கிலத்தில் பேசும் பிற ஐரோப்பிய மொழிப்படங்கள் அமெரிக்காவில் போலியானவையாகக் கருதப்பட்டன. மிகச் சிறந்த படத்துக்கும் அங்கு இதே மரியாதைதான். MARCEL PROUSI-ன் புகழ் பெற்ற நாவலான, “SWANN IN LOVE” 1984-ல் ஆ்ங்கிலத்தில் படமாக்கப்பட்டது. படத்தை இயக்கியவர் VOLKER SCHLONDROFF எனும் ஜெர்மன் இயக்குனர். மகாபாரதத்தை நவீன வடிவில் தயாரித்து இயக்கிய PETER BROOK-ம் JEAN CLAUDE CARRIERE என்பவரும் இணைந்து தயாரித்தனர். கதாநாயகன் SWANN – ஆக ஆங்கில நடிகர் \ JEREMY IRONS என்பவரும் இத்தாலிய நடிகை ORNELL A MUTTI என்பவர் கதாநாயகி ODETTE. ஆகவும் சிறப்பாய் செய்திருக்கின்றனர். பாலே நடன வடிவுக்கு இணையாக அமைந்திருந்த இந்த அற்புத படத்தை தம் காமிரா கலை நேர்த்தியில் காட்சிபடுத்தியவர் ஸ்வீடிஷ் ஒளிப்பதிவாளரும் இங்மர் பெர்க்மனின் ஒளிப்பதிவாளருமான SVENN NYKVIST படத்தின் ஒவ்வொரு காட்சி சட்டகமும் பதினேழாம் நூற்றாண்டு ஃபிரெஞ்சு ஓவியங்கள் எனும் படிக்குத் தோன்றக் கூடியதாய் ஒளிப்பதிவாக்கியிருக்கிறார் ஸ்வென் நிக்விஸ்ட். இவர் ஸ்வீடிஷ் இயக்குனர் இஸ்மர் பெர்க்மனின் மகத்தான திரைப்படங்கள் எல்லாவற்றுக்கும் ஒளிப்பதிவு செய்த உலகின் தலை சிறந்த திரைப்பட காமிரா கலைஞர்களில் ஒருவர். நாவலின் சூழலை நன்கு உள்வாங்கிக்கொண்டவர்களாய் நடிகர்கள் தம் பாத்திரங்களில் ஒன்றிப் போயிருந்தனர். படத்தின் அற்புத இசையமைப்பு. இந்த ஆஸ்திரிய இசையமைப்பாளரின் இசைக்கோர்வையின் பிரதிபலிப்பை, இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கோர்வையாளர் LOUIS BANKS-யிடமும் காணலாம்.

Bioscope Karan 14th Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies. Adaptation, Dubbed Moviesஇந்த அசல் ஆங்கிலப் படத்தை ஃபிரெஞ்சில் மொழி மாற்றம் செய்து [அமெரிக்காவுக்காக] ஆங்கிலத்தில் சப்டைட்டில்சுகளோடு வந்த பிரதியை நம் தூர்தர்ஷன் ஒளிபரப்பியது. அசலில் ஆங்கிலம் பேசிய ஸ்வான், அமெரிக்காவுக்காக ஃபிரெஞ்சில் மொழி மாற்றத்துக்குள்ளானது. SWANN – ஆக நடிக்கும் ஜெரெமி ஐரன்ஸின் ஃபிரெஞ்சு உச்சரிப்பு ஆங்கிலேயர் உச்சரிப்பது போல்அழுத்தத்தோடு இருக்கும். அசல் ஃபிரெஞ்சுக்காரர் மிக மிருதுவாய் பேசுவர். ஆனால் இந்த நடிகரின் குரல் கம்பீரத்துக்கு ஏற்கெனவே அடிமையாகியிருக்கும் அமெரிக்கர்கள் ஆர்வத்தோடு அக்குரலைக் கவனித்தனரே அன்றி அவரது ஃபிரெஞ்சு உச்சரிப்பைப் பொருட்படுத்தவில்லை.

அதே சமயம், ஃபிரான்சில் இப்படத்தை திரையிடுவதற்காக மீண்டும் ஒருமுறை ஃபிரெஞ்சு ரசிகர்களைத் திருப்திபடுத்துவதற்காக, உண்மையான ஃபிரெஞ்சு கலைஞர்களைக் கொண்டு மொழிமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. எனவே இப்போது இரண்டு ஃபிரெஞ்சு பதிப்புகளில் ஸ்வான் இன் லவ், படம் கிடைக்கவும் ஆதியில் அசல் ஆங்கிலம் பேசிய முதல் பதிப்பு கேட்பாரற்றுப் போனது. இந்தியா போன்ற நாடுகளில் தொலைக்காட்சி ஒளிப்பரப்புக்காய், முதலில் அமெரிக்கருக்கு மொழி மாற்றம் செய்த ஃபிரெஞ்சு பதிப்பையே ஆங்கில சப் டைட்டில்களோடு அனுப்பி வைத்தனர். மொழி மாற்றம் மற்றும் உப-தலைப்புகள் விஷயமாய் ஏராளமாய் பேசலாம். இப்போதைக்கு இது போதும்.

– தொடரும்.

முந்தைய தொடர்களை படிக்க கிளிக் செய்க: 



புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் (முன்னுரை) – விட்டல்ராவ்

தொடர் 2: பயாஸ்கோப்காரன் (கபிலர் மலையும் அரிச்சந்திரனும்) – விட்டல்ராவ்

தொடர் 3: பயாஸ்கோப்காரன் (போரும் சினிமாவும்)– விட்டல்ராவ்

தொடர் 4: பயாஸ்கோப்காரன் (மினி பயாஸ் கோப்) – விட்டல்ராவ்

தொடர் 5: பயாஸ்கோப்காரன் (சில தெலுங்குப் படங்கள்) – விட்டல்ராவ்



தொடர் 6: பயாஸ்கோப்காரன் (ரிபப்ளிக் சீரியல் படங்களும், தமிழ் சண்டைப் படங்களும்) – விட்டல்ராவ்

தொடர் 7: பயாஸ்கோப்காரன் (கூடார வகை தியேட்டர்கள்) – விட்டல்ராவ்

தொடர் 8: பயாஸ்கோப்காரன் (கூடார தியேட்டர்கள்) – விட்டல்ராவ்

தொடர் 9: பயாஸ்கோப்காரன் (கந்தர் ஃபிலிம்சும், மாடர்ன் தியேட்டர்ஸும்) – விட்டல்ராவ்

தொடர் 10: பயாஸ்கோப்காரன் (சினிமா சுவரொட்டித் திருட்டு) – விட்டல்ராவ்



தொடர் 11: பயாஸ்கோப்காரன் (ஹாலிவுட் ஒரு மகா களவுலகு) – விட்டல்ராவ்

தொடர் 12: பயாஸ்கோப்காரன் (சினிமா பார்க்க சீசன் டிக்கட்) – விட்டல்ராவ்

தொடர் 13: பயாஸ்கோப்காரன் (ஆங்கிலப் படங்களுக்கு தமிழ் தலைப்புகள்) – விட்டல்ராவ்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *