தொடர் 2: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 2: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



கபிலர் மலையும் அரிச்சந்திரனும்

சினிமா திரையிடப்பட்டிருப்பதை சேலம் பகுதியில் அப்போது, படம் ஆடுது என்பார்கள். தைப்பூசம் வந்துவிட்டது. சேலத்தைச் சுற்றி அனாதி காலந்தொட்டு மகாபாரத இராமாயண நிகழ்வுகள் நடந்ததாக சாமி சத்தியமாக ஊரார் சொல்லி நம்ப வைப்பார்கள். பரமத்தியையடுத்து பாண்ட மங்கலம் பாண்டவ மங்கலம் இருக்கிறது. அவ்வூர் திரெளபதியம்மன் கோயில் விழா, தேரோட்டம் பிரசித்தியானது. ஒரு சமயம் தேர் எரிந்தும் போனது. அதையடுத்து இரு புகழ்பெற்ற மலைகள், கபிலர் மலை, ஐவர் சுனை என்பவை. ஜவர் சுனை சிறு குன்றின் மீது இருந்தது பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞாதவாதத்தின்போது அங்கு திரிந்தலைந்ததாக நம்பிக்கை. ஐந்து பேர் படுக்க வல்ல ஐந்து படுக்கைகள் போன்று பள்ளங்கள் காணப்படுகின்றன. சற்றுத் தள்ளி ஒரு நீரூற்று சுனை ஐவர் சுனை. சுனை நீர் குளிர்ந்து சுவையாயிருக்கிறது. சுனைக்கு நிழல் தந்தவாறு ஒரு மரம். அதில் காராமணி காய் மாதிரி நீண்ட காய்கள் தொங்கும். காயையோ, இலையையோ பிய்த்தால் பால் சொட்டும். பால் நாக்கில் பட்டால் கசப்பு மூளையைத் தாக்கி தலைசுற்றும். பால் சுனை நீரில் சொட்டினபடியே இருக்க, நீர் இனிக்கிறது. காய், பாலை நஞ்சு என்கிறார்கள். இங்குதான் மகாபாரதம் பிறக்கிறது.

வனவாசத்தின்போது பாண்டவர்களை அழிக்க துரியோதனனின் வேண்டுதலின்பேரில் முனிவர் ஒருவர் பூதமொன்றை ஏவுகிறார். பூதத்தை ஏமாற்றி பாண்டவர்களைக் காக்க கண்ணன் ஒரு சுனையை உண்டாக்கி அவர்களை தாகத்துக்கு தண்ணீர் குடிக்கச் செய்கிறான். அது நச்சுப் பொய் கையாகிறது. கண்ணன் யக்சனாய் குரல் தந்து தன் கேள்விகளுக்கு சரியான பதில் கூறினால் மட்டுமே நல்ல குடிநீர் கிடைக்கும் என்கிறான். பாண்டவர்களில் தருமனைத் தவிர மற்றவர்கள் சரியான பதில் கூறினால் மட்டுமே நல்ல குடிநீர் கிடைக்கும் என்கிறான். பாண்டவர்களில் தருமனைத் தவிர மற்றவர்கள் சரியான பதிலளிக்காமல் நச்சு நீரைப் பருகி வரிசையாகப் பிணமாகிப் படுக்கிறார்கள். பூதம் வந்து பாண்டவர்களை முகர்ந்து பார்த்து பிணமென்று அறிந்து, பிணத்தை தின்னும் வழக்கமில்லாத பூதம் கோபமுற்றுத் தன்னை ஏமாற்றிய முனிவரை விழுங்கி ஏப்பம் விடுகிறது என்பது பாரதம். அந்த நச்சுப் பொய்கை ஐவர் சுனைதான் என்பது ஊரார் நம்பிக்கை. ஐந்து பேர் படுத்த இடமென கூறப்படும் ஐந்து பள்ளங்கள் வரிசையாக சுனைக் கருகில் பாறையில் இருக்கின்றன.

அருகிலுள்ள கபிலர் மலையில் முருகன் கோயிலில் தைப்பூச விழா சிறப்பானது. திருவிழாவை முன்னிட்டு பாண்ட மங்கலத்தில் டெண்ட்டில் புதிய படமான அரிச்சந்திரா ஆடுகிறது. சேலத்துப் பக்கமெல்லாம் படம் ஓடுகிறதென்பதை, படம் ஆடுகிறது என்பார்கள். சின்னப்பா-கண்ணாம்பா ஜோடி அரிச்சந்திரன்- சந்திரமதி. என்றைக்கு கண்ணகியில் இருவரும் ஜோடி சேர்ந்து கதறினார்களோ, அரிச்சந்திரா, மகாமாயா, துளசிஜலந்தர், மங்கையர்க்கரசி, சுதர்சன் என்று ஜோடி சேர்ந்து நடித்த படங்களில் தாம் கதறியதோடு நம்மையும் கதறவிட்டிருக்கிறார்கள். சின்னப்பாவென்றால் நவரசமும், கத்திச் சண்டை, கம்படிச் சண்டை, கையடிச் சண்டை, வாய்ச்சண்டையெல்லாமிருக்கும். ஆனால், அரிச்சந்திரனுக்கும் சந்திரமதிக்கும் ஏற்பட்ட சோதனைகள் ரசிகர்களுக்குமான சோதனையாய், வேதனையாய் சில சமயம் ரோதனையாயும் இருந்தது. அது தான் என்றைக்குமுள்ள இங்கத்தய சினிமா, விதி விலக்குண்டு.

கபிலர் மங்கலம் டூரிங்கு டெண்ட் தியேட்டரில் கூட்டமதிகம். சந்திரமதியோடு சேர்ந்து ஒற்றை மாட்டு வண்டி கை கொடுத்தது. சூரசம்ஹாரம் கண்டுவிட்டு ஐவர் சுனை வண்டியெடுக்கச் சொன்னோம்.

பாண்டமங்கலம் டூரிங்கு டெண்ட் தியேட்டரில் கூட்டமதிகம். சந்திரமதியோடு சேர்ந்து ஒருவர் ஒப்பாரி வகைப் பாடலை மனனம் செய்திருந்த பெண்கள் கதறிக் கண்ணீர் விட பெருமளவில் சேர்ந்திருந்தனர். அரிச்சந்திரனின் சத்திஸத்தனத்தைப் பகுத்தறிவு ஏற்காது. பொய் பேச முடியாது என்பதற்காக ராஜ்யத்தை, மனைவியையும் இழந்த பெருங்குணம், எது வந்தாலும் பொய் சொல்லாதே, உண்மையே பேசு என்று சிறுவர்களுக்கு அறிவுரைகூள கதையாக இருந்தாலும் அரிச்சந்திரனை பகுத்தறிவு ஏற்க மறுக்கிறது.

முதல் வகுப்புக்கே தள்ளுமுள்ளு அப்பாவுக்கு அந்த மானேஜரையும் தெரியுமாதலால் டிக்கட் கிடைத்தது. முதல் வேலையாக அக்கா பாட்டுப் புத்தகம் ஒன்றை வாங்கிக் கொண்டாள். கம்பெனி பாட்டுப் புத்தகம் வழு வழுப்பான வண்ண அட்டை கொண்ட கம்பெனி பாட்டுப் புத்தகத்தின் உள்ளே தெளிவான அச்சு. கூடவே படத்திலுள்ள முக்கிய நாயக நாயகி, இதர பாத்திரங்களின் கூர்மையான புகைப் படங்கள். ஒவ்வொரு பாட்டுக்கும் இன்ன ராகம், இன்ன தாளம் என்று அன்றைய பாட்டுப் புத்தகங்களில் காணப்படும். அத்தோடு அங்கு அடுத்து திரையிடப்பட இருக்கும் “மந்தாரவாதி” படத்துக்கான “ஹெரால்டு” ஒன்றையும் மானேஜர் அப்பாவிடம் கொடுத்தார். சினிமா ஹெரால்டு என்பது (செய்தியறிவிப்பு) நான்கு பக்க வார்னிஷ் தாளில் இரு வண்ணங்களில் குறிப்பிட்ட திரைப்படத்தின் முக்கிய (கவரக்கூடிய) காட்சிகள், நட்சத்திரங்கள் ஆகிய படங்கள், அதன் கதைச் சுருக்கம், இயக்குனர், வசனகர்த்தா, பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் ஆகிய விவரங்களெல்லாம் கொண்டிருக்கும் விளம்பர செய்திமடல்.  ஹெரால்டை சினிமா நோட்டீசு போல் எல்லாருக்கும் எடுத்து வினியோகித்து விட மாட்டார்கள். முக்கியமான வேண்டியவர்களுக்கு மட்டுமே ஹெரால்டை தருவார்கள். அக்காவிடம் சதிசுகன்யா, டேஞ்சர் சிக்னல், டூஃபான்குவீன் (தமிழ் சண்டைப் படங்கள்) மின்னல் கொடி, தாரா சசாங்கம், மாயா மாயவன், அதிர்ஸ்டம், சாந்த சக்குபாய் முதலாய் அறுபதுக்கும் மேலான சினிமா ஹெரால்டுகள் சேமிப்பிலிருந்தன.

Image result for அரிச்சந்திரா

அரிச்சந்திராவை கண்ணாம்பாவின் கணவர் நாகபூஷணம் தயாரித்து இயக்கியிருந்தார். இது ஒரு ஜெமினி வெளியீடு. சின்னப்பாவைவிட சற்றே உயரமானவராயிருந்த கண்ணாம்பா அவரோடு இணைந்து நடிப்பதை பெரிதும் விரும்பியவர். சின்னப்பா அரிச்சந்திரனும் கண்ணாம்பா சந்திரமதியும் லோகிதாசனோடு கோயிலில் பாடும், “காசிநாதா கங்காதரா, கருணை செய்திடுவாய்” என்ற மென்மையும் உருக்கமான பாட்டை என் அண்ணன் ராமு கடைக்குப் போக என்னை அழைக்கவும், பள்ளிக்கூடம் போகவும், காசிநாதா கங்காதரா, கடைக்குப் போலாண்டா, ஸ்கூலுக்குப் போலாண்டா, என்றும் பாடுவான்.

பொதுவாக நகைச்சுவைப் பாத்திரத்தில் வந்து பொருள் பொதிந்த, பகுத்தறிவு மிக்க நகைச்சுவை வைத்துக் கொண்டிருந்த என்னெஸ்கே மதுரம் தம்பதிகள் அரிச்சந்திராவில் ரசிகர்களின் கோபத்துக்கும் எரிச்சலுக்கும் அளாகும் வகையில், “கால கண்டன்”, என்ற பாத்திரத்தில் வந்து சந்திரமதிக்கும் லோகிதாசனுக்கும் தாங்க ஒண்ணா துன்பத்தைத் தருவார்கள். என்னெஸ்கேக்கு அரிச்சந்திரன் கதையில் எள்ளலும் குத்தலும் இருந்திருக்கிறது. ஒரு பகுத்தறிவு ஜீவியான அவர் அரிச்சந்திரன் கதையை மாற்றிப் போட்டு நந்தனார் சரிதத்தை நல்ல தம்பதியில் கிந்தனார் காலட்சேபம் செய்ததுபோல வேறொரு படத்தில், “சந்திர ஹரி”, என்ற தனி நகைச்சுவைத் துண்டு படத்தை நடித்து சேர்த்திருந்தார். அது அரிச்சந்திரனை தலைகீழாக்கிச் சித்தரிக்கும் நகைச்சுவைப் படம் என்றாலும் பலர் தாக்குண்டாற்போல வெகுண்டெழுந்து எதிர்ப்பும் தெரிவித்தனர். அரிச்சந்திரா பேசாமலேயே படமாகி இந்திய சினிமாவின் வரலாற்றைத் தொடங்கி வைத்தவன். இந்தியாவின் முதல் திரைப்படமாய் (மெளனப் படம்) தாதா சாகேப் பால்கே அரிச்சந்திரா என்ற படத்தைத் தான் எடுத்து இந்திய சினிமாவின் வரலாற்றைத் தொடங்கி வைத்தார். அதற்குப் பின் அரிச்சந்திரன் கன்னடத்தில் (சுப்பய்யா நாயுடு), தெலுங்கில் (எஸ்.வி. ரங்க ராவ்), மீண்டும் தமிழில் (சிவாஜிகணேசன் என்று பல மொழிகளில் பேசிப் புலம்பி அவதியும் அல்லலுமற்று பாடி ஓய்ந்தான்.

மின்சார வசதியற்ற, தெருவில் லாந்தர் விளக்கேற்றப் பட்ட மங்கல் ஒளியில் ஆழ்ந்து கிடந்த யுத்த கால பரமத்தி பாமர மக்களை வியப்பிலாழ்த்த கொஞ்சமே கொஞ்சம் மனமகிழ்விக்க மாபெரும் தமாஷாவாக அவனது வருகையும் பேச்சும் பாட்டும் அமைந்தது. அப்போது நான் குளியலறையிலிருந்தேன். சர்க்கார் குடியிருப்புமனையில் அமைதி விரவியிருந்த காலை நேரத்தில் கணீரென்று அவன் குரல்.

“அம்மா, என்னம்மா விக்கிறான்? என்னமோ விக்கிறாம்மா?” என்று குரல் கொடுத்தேன். அம்மா வெளியில் எட்டிப் பார்த்துவிட்டு வந்து சொன்னாள், “ பார்- பார் கண்ணாடி வர்ரான்” என்று.

அவன் வீட்டிற்கு சமீபமாய் வந்திருக்க வேண்டும். அவனது கூவல் அழைப்பு அருகிலிருந்து வருவதாயிருந்தது.

“பார் பார் கண்ணாடி, பார் பார் பட்டணம் பார். அரையனாலே அல்லாத்தையும் பார்” சிறுவர் சிறுமியரோடு வயது வந்தோர், முதியோர்களும் அவனையும் அவனது தமாஷா சாதனத்தையும் சூழ்ந்து கொண்டனர். நான் அம்மாவிடம் அரையணா கேட்டு வாங்கிக் கொண்டு தெருவுக்கு ஓடினேன்.

“எங்கடா ஓடறே? என்று கேட்ட ராமுவுக்கு பார் பார் கண்ணாடிக்கு என்று வேகமாய் பதிலளித்துவிட்டு ஓடுகையில் அவன் சொன்னான்,”

“அதுதான் பயாஸ்கோப்”

பாரு, பாரு கண்ணாடி, பட்டணம் பாரு கண்ணாடி, என்று பயாஸ்கோப்காரன் கூட்டம் சேர்ப்பதற்காக கூவிக் கொண்டே, கையில் வைத்திருந்த சலங்கைக் கொத்து ஒன்றால் தன் பயாஸ்கோப் பெட்டியைத் தட்டித் தட்டி ஒரு வித தாள நயத்தை தன் கூவலுக்கு பக்க வாத்திய இசையாக்கினான். பயாஸ்கோப் பெட்டியை அன்றுதான் அருகிலிருந்து பார்த்தேன். சுருக்கமாகச் சொன்னால் என் ஐந்து வயது நினைவில் தெரிவது மரத்தாலான நான்கு உயரமான கால்கள் மீது இணைக்கப்பட்ட பகுதி மரப் பலகைகளாலும், தகரத்தாலுமான ஒருபெட்டி. அதற்குள் வரிசையாக கருப்பு வெள்ளை மற்றும் வண்ணத்திலான பல்வேறு புகைப்படங்களையும் சித்திரங்களையும் வைத்திருப்பான். அப்படங்களின் சட்டத்தை சிறு கிராங்க்கோடு இணைத்திருப்பான். கிராங்கை மேலும் கீழுமாய் தள்ளினால் படங்களும் சட்டத்தோடு நகர்ந்து கடந்து முதலிலுள்ள படம் பழைய இடத்தையே அடையும். படங்கள் ஒவ்வொன்றாய் நகருகையில், பெட்டியின் மேற்பக்கம் பொருத்தப்பட்ட நான்கு லென்சுகள் வழியே கண்களை வைத்து இருவர் பார்க்கலாம். லென்சுகள் அந்தப் படங்களை ஒரு குமுதம் அளவுக்கு பெரிதாக்கிக் காட்டக்கூடியவை. அரையாணா கட்டணக் காசை முன்னதாக எல்லாரிடமும் வாங்கிக் கொண்டு எங்களை வரிசையில் நிற்கச் சொன்னான் பயாஸ்கோப்காரன். படங்களை நகர்த்தியவாறே, பார்வையாளனின் கண்களுக்கு ஒவ்வொரு படம் வந்து நிற்கும்போதும் மனப்பாடம் செய்து வைத்திருக்கும் விளக்க உரையை இயந்திர போக்கில் சொல்லிக் கொண்டே போவான். என்முறை வந்து கண்களை லென்சுடன் வைத்தேன்.



“பாரு பாரு மரீனா பீச்சு பாரு, ஐகோர்டு பாரு அது மேல லைட்டவுசு பார். செத்த காலேஜூ பாரு, உயிரு காலேஜூம் பாரு, குயின் மேரி பொண்ணுங்கு காலேஜ் பாகு, ஜார்ஜூ சிலைய பாரு, மன்ரோ குதுரைய பாரு, பாரு பாரு பட்ணம் பாரு, அரையாணாலே எல்லாம் பாரு, ஷோக்கான லேடி பாரு, ஜாலியான மைனர் பாரு, இவ்வளவையும் காட்டிப் பாட்டுபோல ராகத்தோடு விளக்கிப் பேசின பயாஸ்கோப்காரன், கடைசி படமாய் வந்து நிற்கும் ஒன்றுக்கு மட்டும் எவ்வித விளக்கமோ, பேச்சோ, பாட்டோ எதுவுமின்றி சிறுவர்களின் புட்டத்தைக் கிள்ளுவான்” வயது வந்த ஆண்களின் தோளை இடிப்பான். சிறுமிகளையும் வயது வந்த பெண்களையும் தொட்டுச் சீண்டாமல், “ம்.. ம்.. அவ்ளோதான் அரையணாக்கு”, என்று அடுத்து இருவருக்கும் ஒதுங்கச் சொல்லுவான் ஒரே சமயத்தில் இருவர் நின்று பார்க்கும் பயாஸ்கோப்பில் காட்டப்பட்ட கடைசி படம் எதுவாயிருக்கும்? எவ்வித விளக்கமும், பேச்சும் பாட்டுமில்லாது எவ்வித விளக்கமும் அவசியமிருக்காத அந்த கடைசி காட்சி எது?

“சொல்லி ஒன்றும் தெரிவதில்லை மன்மதக் கலையே” என்பதை விளக்கும் ஒரு படம் தான் அந்தக் கடைசிப் படம். அதற்காகவே மறுமுறையும் அரையணா தந்து பயாஸ்கோப் பார்க்க ஆண்கள் தயாரானால், பெண்கள் முகஞ்சுளித்து வாயைக் கோணித்து ஒருத்தியை ஒருத்தி அர்த்தத்தோடு நகைப்புக் காட்டி கை கோர்த்து நகருவார்கள். பலமுறை கண்டுகளித்த ஒவ்வொரு பயாஸ்கோப்பும் ஒரேவிதமான படக் காட்சிகளைக் கொண்டிருக்காமல், பெட்டிக்குப் பெட்டி வெவ்வேறு விதமான படங்களைக் கொண்டிருந்தன. இந்த பயாஸ்கோப்பின் வளர்ச்சியிலும் விரிவிலும் உருவான சற்று விலையுயர்ந்த காட்சி சாதனம் “வியூமாஸ்டர்” இது மூன்று டைமன்ஷனில் காட்டும்.

தொடரும் 



தொடர் 1: 

புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



Show 2 Comments

2 Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *