தொடர் 3: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

போரும் சினிமாவும்

இரண்டாம் உலகப் போர் தன் உச்சத்தை நெருங்கியிருந்தது. பெட்ரோல் அரிதானது. எல்லாமே பட்டாளத்துக்கும் அதன் வாகனங்களுக்கும் போய்க் கொண்டிருந்தது.

சிவில் வாழ்க்கைக்கு பெட்ரோல் நிறுத்தப்பட்டு, கார், பஸ், லாரிகளின் எஞ்சினை இயக்க மரக்கரி எரிபொருளாக்கப்பட்டது. சகலமும் ரேசன், பிரிட்டிஷ் சர்க்கார் தன் காலனிய நாடுகளிலுள்ள சினிமா திரையரங்குகளில் யுத்த செய்திப் படங்களைக் கட்டாயம் திரையிட வேண்டும் என உத்தரவு பிறபித்ததோடு இடைவிடாது யுத்தச் செய்திப் படங்களை வினியோகித்தும் வந்தது.

WAR FILMS என பொதுவாக அழைக்கப்பட்ட இந்த யுகத்தச் செய்திப் படங்கள் போட்டு ஓட்டிக் காட்டிய பிறகே பிரதான திரைப்படம் தொடங்கும். இந்த யுத்தப் படங்கள் பிரிட்டிஷ் ராணுவ திரைப்படப் பிரிவினரால் பல்வேறு போர் அரங்குகளில் உயிரைப் பணயம் வைத்து எடுக்கப்பட்டவை. இவற்றில் கொஞ்சம் மிகையுமிருக்கும். திரித் துக்காட்டலும் இருக்கும். எல்லாமே  பிரிட்டிஷ் ராணுவத்தின் பின் வாங்கல், சேதம், அழிவு, தோல்வி என்பதாகவே இருக்கும்படியாக தோன்றும் வகையிலும் எடுக்கப்பட்டு திரையிட்டுக் காட்டப்பட்டவை. ஆனால் மிகவும் ஆவலையும் உற்சாகத்தையும் தூண்டுபவையாக விளங்கினதோடு, நிரம்பவே ஆக்சன்கள் கொண்டிருக்கும் மக்கள் யுத்தச் செய்திப் படங்களைத் தவற விடாமல் பார்ப்பதற்காகவே முன்னதாக ஓடி வந்து உட்காரவார்கள். யுத்தச் செய்திப் படங்களைக் காட்டுவதின் மூலம், யுத்தத்தில் அழிந்து செலவாகும் பல்வேறு அத்தியாவசிய பண்டங்கள் யுத்தத்துக்கே முக்கியமாய் அவசியமாய் வேண்டப்படுபவை என்பதை மக்கள் அறிவதன் மூலம்  அதன் விளைவாக மக்கள் அறிவதன் மூலம் அதன் விளைவாக மக்கள் மீது அரசு திணிக்கும் பல்வேறு அதிகளவு வரிச்சுமை, உணவு பற்றாக்குறை, அதன் பங்கீடு, பிற அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, கருப்புச் சந்தை என்ற பல்வேறு சுமைகளை மக்கள் பொறுத்துக் கொள்ளுவார்கள் என்ற நோக்கோடும் காட்டப்பட்டன.

அன்றைக்கு கச்சாப் படச் சுருள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் சினிமா எடுப்பட்டன. பெரும் பகுதி கச்சாப் படச் சுருள்கள் போர் அரங்குகளில் எடுக்கப்படும் யுத்தச் செய்திப் படத் தயாரிப்புக்கே தேவைப்பட்டதால் காலனியை தேசத்து  பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்குக் கச்சாப் படச் சுருள் வினியோகம் ஒரு சில நிபந்தனைகளோடு ரேசன் ஆக்கப்பட்டது. படச் சுருளுக்கு கட்டுப்பாடு வந்தது. நிபந்தனைகள் தயாரிப்பாளர்களுக்கு கடும் சோதனையாக இருந்தது. பல சிறிய தயாரிப்பு நிறுவனங்கள் மறைந்தன. பன்னிரெண்டாயிரம் அடிக்கு மேல் திரைப்படங்கள் எடுக்கப்படக்கூடாது. அப்படியென்றால்தான் கச்சா ஃபிலிம் பெற முடியும். அம்மாதிரியாக பதினோறு பன்னிரெண்டாயிரம் அடி நீளப் படங்களாய் எடுக்கப்பட்டவையில் குறிப்பிடத்தக்கது ஏவிஎம் நிறுவனத்தின் புகழ் பெற்ற படமான வள்ளி. இந்த அரசு நிபந்தனைக்கு, முன் தமிழில் இருபத்து மூன்றாயிரம் அடி நீளத்தில் எடுக்கப்பட்டு மூன்றரை முதல் நான்கு மணி நேரத்துக்கு ஓடக்கூடிய படங்கள் நிறைய உண்டு. உ.ம், ஜகதல பிரதாபன், ஆர்யமாலா, மாயா மச்சேந்திரா முதலானவை) யுத்தம் முடிந்து கச்சா சுருள் இலகுவாகக் கிடைக்கத் தொடங்கினதும் மூன்றரை மணி நேரம் ஓடக் கூடியதாய் இருபத்து மூணாயிரமடி நீளத்தில் எடுக்கப்பட்ட படங்களில் முக்கியமானது. ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி, மேற் குறிப்பிட்ட நீளம் அதிகமான, அதிக நேரம் ஓடக்கூடிய படங்கள், ஜனங்கள் இரவு கண்விழித்து நோன்பிருக்கும் ஆன்மீக ரீதியான வைகுண்ட ஏகாதசி மற்றும் சிவராத்திரியின்போது தமிழக திரையரங்குகளில் இரவு காட்சியில் போட்டுக் காட்டப்படுவது ஒரு  வழக்கமாயிருந்தது. யுத்தத்திலீடு பட்டிருந்த உலகின் எல்லா நாடுகளுமே தத்தம் வழியில் யுத்தச் செய்திப் படங்களைத் தயாரித்தன. ரஷ்யா ஏராளமாய் யுத்தச் செய்திப் படங்களைத் தயாரித்த நாடுகளில் ஒன்று.

JAGATHALA PRATAPAN || ஜெகதலப் பிரதாபன் || 1944 || old Movie Collections || P.U.Chinnappa || Rare ||

யுத்தச் செய்திப் படங்கள் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அரசுகளின் சார்பாக சில தனியார் திரைப் பட நிறுவனங்களாலும் போர் அரங்குகளிலேயே நேரிடையாக காமிரா கலைஞர்களால் உயிரைப் பணயம் வைத்து படமாக்கப்பட்டவை. யுத்த அரங்கு நிலவர செய்திப் படங்களை எடுக்கவும் பிறரையும் எடுக்க வைக்கவும் ஊக்கப்படுத்தவும் 1940ல் பிரிட்டீஒ அரசு FILM ADVISORY BOARD ஏற்படுத்திற்று. அந்த சமயம் பம்பாயில் சண்டைப் படங்களையும் செய்திச் சுருள் படங்களையும் எடுப்பதிலீடுபட்டிருந்த ஜே.பி. எச்.  வாடியா அதன் சேர்மன் பதவியை ஏற்றுக் கொண்டார். ஆங்கில அரசு புகழ் பெற்ற ஹாலிவுட் திரைப்பட நிறுவனமான “இருபதாம் நூற்றாண்டு நரி பட நிறுவனத்துடன் (20th CENTURY FOX) ஒப்பந்தம் செய்து யுத்தப் படங்கள் மற்றும் செய்திப் படங்களை 1940ல் பிரிட்டிஷ் மூவிடோன் நியூஸ் என்ற பெயரில் தயாரித்து திரையிட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் யுத்தச் செய்தித் தயாரிப்புகள் அதி சிறப்பாயிருக்கும் என் அண்ணனும் நானும்  இந்த வார படங்களுக்காகவே சில மோசமான தமிழ் படங்களையும் பொறுத்துக் கொண்டு நாமக்கல் ராமஜெயம் தியேட்டரில் ஓடிச் சென்று பார்ப்போம். எனக்கும் அண்ணனுக்கும் நிறைய விளங்காது. ஆனாலும் கவச மோட்டார்கள் தம் பல் சக்கர அசைவில் யானைத் துதிக்கைபோன்ற தன் பீரங்கியால் சுழற்றிச் சுழற்றிச் சுடுவதை, வீரர்கள் ஓடிச் சென்று பதுங்கு குழிகளில் குதித்து பதுங்கி படுத்து இயந்திர துப்பாக்கியால் சுடுவதை, விமானங்கள் உயரவும் தாழவும் பறந்து குண்டு பொழிவதை அவற்றைத் தரையிலிருந்து வீரர்கள் சுட்டு வீழ்த்துவதை, கப்பல்கள் மூழ்குவதையெல்லாம் பார்க்க மயிர்க் கூச்சலித்து கைதட்டி குதிப்போம்.

அப்போதைய இந்திய விடுதலைப் போராட்டச் சூழலை மனதில் கொண்ட காலனிய அரசு முக்கிய இந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்து இந்தியச் சூழலையும் தேவைகளையும் மனதில் கொண்டு “இந்திய மூவிடோன் நியூஸ்” என பெயர் மாற்றி யுத்தச் செய்தி மற்றும் பொதுவான செய்திப் படங்களை எடுத்துத் திரையிட்டது. இதுவே முற்றிலும் அரசால் வசப்படுத்தி, 1943ல் இந்தியன் நியூஸ் பரேடு” என பெயர் மாற்றம் கொண்டது.

படங்களின் நீளம் இத்தனை அடிதானிருக்க வேண்டுமென்ற முக்கிய நிபந்தனையை அடுத்து மற்றொரு முக்கிய நிபந்தனையைப் பாய்ச்சியது யுத்த கால பிரிட்டிஷ் அரசு. இரண்டாம். இரண்டாம் உலகப் போர் பின்னணியில் அமைந்த கதையை வைத்து ஒவ்வொரு தயாரிப்பாளரும் மூன்று படங்களுக்கு ஒரு படம் வீதம் தயாரிக்க வேண்டும். அத்தோடு அவ்வாறு தயாரிக்கும் திரைப்படம் பிரிட்டிஷ் ராணுவத்தைச் சாகச ரீதியாய், போரிடும் திறன் ரீதியாய் பிரிட்டிஷ் அரசின் போர்க்கால ராஜதந்திரத்தை மெச்சிப் பாராட்டும் வகையில் அந்தப் படம் அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான் கண்ட்ரோல் விலையில் கச்சாப் படச்சுருள் கிடைக்கும் இந்த முக்கிய நிபந்தனைகள் ஒத்துவராத சிறு படத் தயாரிப்பாளர்கள் திரைப்படத் தயாரிப்பை நிறுத்திக் கொண்டனர். அதிலேயே சிலர் கருப்புச் சந்தையில் தம்மிடமுள்ள கருப்புப் பணத்தைக் கொண்டு கள்ளத் தனமாக அதிக விலை கொடுத்து கச்சா ஃபிலிம் வாங்கினர். இந்த போர்க்கால சூழலில் சினிமா நடிகர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணமும் கருப்பிலும் வெளுப்பிலுமாய் அதிகரித்தது.

Dr Kotnis Ki Amar Kahani review: Earnest, timeless tale of selfless doctor heeding the call for help
டாக்டர் கோட்னீஸ் கி அமர் கஹானி

வாடியா, பிரபாத், ஜெமினி, மாடர்ன் தியேட்டர்ஸ் ஆகிய பெரிய திரைப்பட ஸ்தாபனங்கள் அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தலா ஒரு யுத்தப் பன்னணியிலமைந்த திரைப்படத்தைத் தயாரித்தன. இதில் முன்னோடியாயிருந்தவர் பம்பாய் பிரபாத் நிறுவனத்தின் உரிமையாளர் டைரக்டர் நடிகரான வி. சாந்தாராம், அந்த விதமாய் 2-ம் உலகப் போரின் பின்னணியில் சாந்தாராம் எடுத்த இந்திப் படம், “டாக்டர் கோட்னீஸ் கி அமர் கஹானி” இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவத்தோடு சேர்ந்து போரில் கலந்து கொள்ளுவதென்பது இந்தியர்களின் உரிமை என்று கூறி ஒத்துழைக்க எதிர்ப்பு காட்டியது. ஸ்டுடியோ இல்லாத சிறிய சினிமா நிறுவனங்கள் காங்கிரஸ் வழியை ஆதரித்தன. அதே சமயம் ஸ்டூடியோக்களை சொந்தமாய் வைத்திருந்த பெரும் திரைப்பட நிறுவனங்கள் பிரிட்டிஷ் அரசின் யுத்தக் கொள்கையை தங்களுக்குக் கச்சா ஃபிலிம் ரேசன் கிடைக்க வேண்டி ஆதரித்தன. அதனடிப்படையில் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் போர் பின்னணியில் திரைப்படங்கள் எழுந்தன. போர் ஆரம்பத்தில் சோவியத் யூனியன் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய யுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற நிலைப்பாட்டை ஆதரித்த காங்கிரசும் காலனிய போரில் போரிடுவதற்கு ஒத்துழைப்பு மறுத்தது. ஆனால் ஹிட்லரின் ஜெர்மானிய படைகள் ரஷ்யாவை முற்றுகையிட்டு தாக்கவும் கொள்கையில் மாற்றமும் பிரிவும் ஏற்பட்டது. நேதாஜி ஜப்பானுடன் சேர்ந்து பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்க்க முனைந்தார். மற்றவர்கள் பிரிட்டனுடனும் ரஷ்யாவுடனும் சேர்ந்து பொது எதிரிகளான அச்சு நாடுகளோடு [ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்] போரிட முடிவு செய்தன. இந்த தீர்மான மாற்றத்தின் முடிவாக டாக்டர் கோட்னிஸின் பயணம் எனும் சினிமா சுவையான வரலாறு படைத்தது.

ஜப்பானால் தாக்கப்பட்டு வந்த சீனா மீது இரக்கம் மேலிட்டு இந்தியத் தேசிய காங்கிரஸ் ஒரு மருத்துவ உதவிக் குழுவை ஜவகர்லால் நேருவின் உதவியோடு அனுப்பி வைத்தது. அதில் சென்ற ஏழு மருத்துவர்கள் சீனப் படையுடன் சேர்ந்து கொண்டு சேவை செய்தனர். அதில் ஒருவர் டாக்டர் துவாரகநாத் சாந்தாராம் கோட்னிஸ். இவர் தன்னோடு பணி செய்த சீன நர்ஸ் குவோ குவிங்லன் [GUO QINGLAN] என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். மறு வருடமே டாக்டர் கோட்னிஸ் மரணமுற்றார். இந்த நிகழ்வை வைத்து இடதுசாரி பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ரூவாஜா அகமது அப்பாஸ் [கே.ஏ. அப்பாஸ்] “AND ONE DID NOT COME BACK’’ என்ற சிறு நூலை எழுதி வெளியிட்டார். அப்பாஸின் யோசனைப்படி சாந்தாராம் அதைப் படமெடுத்தார். கதை வசனம் – அப்பாஸ். அக்கதை ஜப்பானுக்கு எதிரானதாயிருக்கவே டாக்டர் கோட்னிஸை யுத்த பின்னணிப் படமென பிரிட்டிஷ் அரசாங்கம் அனுமதித்து படச்சுருள் வழங்கிற்று. நேரு ஸ்பான்ஸர் செய்த படம் என்பதால் இந்திய தேசிய காங்கிரசும் கை தட்டி வரவேற்றது. திரைப்படத்தில் முக்கிய பாத்திரங்களாய் வார்க்கப்பட்டிருந்த சீன செம்படை என்பது பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் சீனாவை உருவாக்கிய தோழர் மாவோ மாசே துங்கின் புகழ்பெற்ற எட்டாவது வழித்தட கம்யூனிஸ்ட் கட்சியும் திரைப்படத்தைப் பாராட்டிற்று. அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்குமாய், ‘‘JOURNEY OF DR.KOTNIS’’, என்று ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்தும், இந்தியாவுக்கென “டாக்டர் கோட்னிஸ் கி அமர் கஹானி” என்றும் தயாரித்து இயக்கி டாக்டர் கோட்னீசாக தாமே நடித்து தன் காதல் மனைவியாக தன் நடிகை மனைவி ஜெயசிரீயை நடிக்கச் செய்து எடுத்து வெளியிட்டார் சாந்தாராம். மிகுந்த வெற்றியைத் தந்த இப்படத்தைப் பல ஆண்டுகள் கழித்து தூர்தர்ஷன் 90-களில் ஒளிபரப்பிற்று. 2-ம் உலகப்போர் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்களில் சிறந்ததும் முக்கியமானதுமாய் நான் கருதும் இரு படங்களில் ஒன்று டாக்டர் கோட்னிஸ் என்பதால் மேலும் ஒரு முக்கிய தகவலையும் அதன் தொடர்பாகச் சொல்ல விரும்புகிறேன்.

டாக்டர் கோட்னிஸ் சீனாவில் சீன செம்படையினருக்கு மருத்தவ உதவி செய்து வந்த சமயம் 1939-ல் தன் உதவியாளராயிருந்த சீன பெண் நர்ஸ் குவோ குவிங்லன் [GUO QINGLAN] என்பவரை மணந்து ஒரு மகனை பெற்றெடுத்து விட்டு மறு வருடமே காலமானார். அவர்கள் மகன் இன்ஹுவா [YIN HUA] தன் 25-வது வயதில் காலமானார். இன்ஹுவா எனும் பெயரிலுள்ள இரு வார்த்தைகளின் உருவும் [CALIGRAPHIC CHARACTER] உச்சரிப்பும் இந்தியா, சீனா என்பதாகும். டாக்டர் கோட்னிஸின் மனைவி தம் கணவரின் மறைவுக்குப் பின் ஆறு முறை இந்தியாவுக்கு வந்து மகாராஷ்டிரத்திலிருந்து விட்டு போயிருக்கிறார். குவோ குவிங்லன் சீனாவிலுள்ள டாலியன் நகரில் 2012-ல் தமது 96-வது வயதில் காலமானார். கோட்னீசன் சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் சீன அரசு அவருக்கு சிலையெழுப்பி நினைவு கொள்ளுகிறது.

கண்ணம்மா என் காதலி- திரைப்படக் காட்சி

உலகப்போர் பின்னணியில் தமிழில் எடுக்கப்பட்ட தமிழில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் ஜெர்மனியின் “கண்ணம்மா என் காதலி” மாடர்ன் தியேட்டர்ஸின், “பர்மா ராணி,” மற்றும் “சித்ரா”, கே.சுப்ரமணியம் தயாரித்த “மான சம்ரக்சணம்”, ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவை நான்கும் நான் நாமக்கல் தியேட்டரிலும், பிறகு திருச்செங்கோட்டு கூடாரவகை [TENT] கொட்டகையிலும் பார்த்தவை. மான சமரக்கணம் எனும் படத்தின் பெயரை சரியாக உச்சரிக்க நான் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறேன். கண்ணம்மா என் காதலியின் கதை முழுக்க ரங்கூனில் ஜப்பானியரின் குண்டு வீச்சின்போது நடப்பதாக எழுதப்பட்ட ஒன்று. இப்படம் 1945ல் ஜெமினி தயாரிப்பில் கொத்தமங்கலம் சுப்புவால் இயக்கப்பட்டு வெளிவந்தது. முக்கி பாத்திரங்களில் எம்.கே.ராதா, சுந்தரிபாய், எல்.நாராயணராவ், பொட்டை கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். கண்ணம்மா என் காதலி, ஃபிரெஞ்சு நாடகாசிரியர் மோலியரின் கதையொன்றைத் தழுவி நன்கு எடுக்கப்பட்ட படம் காமிராமேன் எம்.நடராஜன், குண்டு வீச்சு காட்சிகளை மேனாட்டுப் படங்களிலிருந்து வெட்டி கச்சிதமாக சேர்த்து தத்ரூபமாக்கியிருந்தார். குண்டுவீச்சை எதிர்பார்த்து ஜனங்களை பதுங்கு குழியில் பதுங்க, மேஜைக்கடியில் ஒளிய எச்சரிக்கும் அபாயச் சங்கு ஊதுவது படத்தில் வரும் சுவையும் திகிலுமான காட்சி, இதை A.R.P சங்கு [AIR RAID PRECAUTION] என்பார்கள். இந்த அபாயச் சங்கு அந்நாளில் முக்கிய நகரங்களின் மையத்தில் கட்டப்பட்ட நிலையங்களில் பொருத்தப்பட்டு குண்டுவீச்சை மக்களுக்கு எச்சரிக்க ஊதி அறிவிக்கப்பட்டது. கண்ணம்மா என் காதலி சேலத்தில் நியூ சினிமா, தியேட்டரில் ஓடினபோது, எதிரிலுள்ள மைதானம் விக்டோரியா மைதானம். [இன்றைய என்.எஸ்.சி.போஸ் மைதானம்] அங்கிருந்த பழங்கட்டிடமொன்றில் A.R.P. சங்கு ஒலிக்கும் ஏற்பாடு இருந்தது. ஜப்பானிய விமானத் தாக்குதலை எதிர்பார்த்த பிரிட்டிஷ் அரசு இம்மாதிரி எச்சரிக்கை ஏற்பாட்டோடு அங்கங்கே பதுங்கு குழிகளையும் வெட்டி வைத்து, குண்டு வீச்சின்போது சினிமாவில் படம் ஓடுகையில், குண்டு வீச்சு காட்சியின்போது அபாயச் சங்கொலிக்கும் கட்டம் வரும் நேரம் பார்த்துச் சரியாக விக்டோரியா மைதானத்து A.R.P. கட்டிடத்திலும் சங்கூதும் ஒத்திகை நடந்து முடிந்தது.

தமிழில் யுத்தப் படமான சம்ரக்சணம் கே.சுப்ரமணியத்தின் இயக்கத்தில் உருவான 1945-ம் வருடத்து படம். 1941-ன் ரங்கூனிலிருந்த தமிழகக் குடும்பமொன்று ஜப்பானிய குண்டுவீச்சுக்கு உயிர் தப்பி கப்பலேறி தூத்துக்குடியைச் சேருகிறது. ரங்கூனிலிருந்து அவ்வப்போது தாம் தூத்துக்குடி உறவினருக்கு அனுப்பி வந்த பணத்தை அவர்கள் மோசம் செய்கிறார்கள். மான சம்ரக்ஷனம் என்ற சங்கத்தை நிறுவி அதன் மூலம் பிரிட்டிஷ் அரசின் தேச பக்தர்களைக் கூட்டி எதிரி கப்பல்களின் வருகையை கதாநாயகி முறியடிப்பதாய் படம் முடிகிறது. கதாநாயகி பத்மினியாக இயக்குனரின் மனைவி எஸ்டி.சுப்புலட்சுமி சற்று திணறியே நடிக்கிறார். ஜெமினி நட்சத்திரமான ஜி.பட்டு ஐயர் அவளுடைய சகோதரனாக சிறப்பாகச் செய்திருக்கிறார். வி.என். ஜானகி அவரது பட்டதாரி மனைவி. காளி என். ரத்தினம் – ராஜகாந்தம் இணை கூடுதல் லயம் சேர்த்தாலும், இந்த இறுக்கமான படத்துக்கு கே.சுப்பிரமணியத்தின் இயக்கம் அதிகம்தான்.

பர்மா ராணி

பர்மா ராணி சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பாய் 1945-ல் டி.ஆர். சுந்தரத்தின் மிகச் சிறந்த டைரக்ஷனில் வெளிவந்த சிறந்த 2-ம் உலகப்பொர் பின்னணி திரைப்படம். இப்படத்தில் வரும் ஜப்பானிய தளபதியாக டி.ஆர்.சுந்தரமே மிகச் சிறப்பாக நடித்தார். பர்மிய பெண்கள் குடை, விசிறியோடு நடனமாடும் காட்சியொன்றில் என் மூத்த சகோதரி சாந்தா [பின் நாட்களில் சாந்தம்மா] கலந்து கொண்டு பர்மா உடையில் கொண்டை – விசிறி சகிதம் நடனமாடுகிறாள். இதுவும் ரங்கூன் ஜப்பானால் ஆக்கிரமிக்கப்பட்ட சூழலின் கதை. பிரிட்டிஷ் வேவு விமானம் ஜப்பானியரால் சுட்டு வீழ்த்தப்பட்டு அதிலிருந்த பிரிட்டிஷ் இந்திய ஒற்றன் ரஞ்சித் சிங் [டி.எஸ்.பாலய்யா] சிறைபடுகிறான். என்ன செய்தும் ரகசியத்தை வெளியிடாத அவனைக் காப்பாற்றி இந்தியாவுக்கு கொண்டு வந்து விட ஒரு பிரிட்டிஷ்-இந்திய தற்கொலைப்படை [ஹொன்னப்ப பாகவதர், சகஸ்ரநாமம் ஆகிய நால்வர்] வருகிறது. அதுவும் சட்டு வீழத்தப்பட்ட, அவர்கள் பாராசூட் மூலம் தப்பித்து ரங்கூனிலுள்ள புத்த விஹாரத்தில் பதுங்குகின்றனர். தமிழரான புத்த பிஷுவும் பிரிட்டிஷ் உளவாளியே. உயிரைப் பணயம் வைத்து சிறைக்குள் நுழைந்து ரஞ்சித் சிங்கை சந்தித்து ரகசியத்தை அறியும் தற்கொலைப் படை தப்பி மதறாஸ் போகிறது. புத்த பிட்சுவும் ரஞ்சித் சிங்கும் ஜப்பானியரால் கொல்லப்படுகின்றனர். தப்பி மோட்டார் விசைப் படகிலேறி ஓடும்காட்சி அங்கிலப் படத்துக்கு நிகராக படமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒப்பனையும் அபாரம். குறிப்பாக டி.ஆர்.சுந்தரம், ஏழுமலை, காளி என்.ரத்தினம் ஆகியோரின் ஒப்பனை, நடிப்பு அருமை. என் எஸ் கே மதுரம் ஜோடி தேவையற்ற சேர்க்கை. இந்தப்பம் டாக்டர் கோட்னிஸுக்கு அடுத்து உலகப் போர் பின்னணியில் வந்த சிறந்தபடம்.

மாடர்ன் தியேட்டர்ஸின் மற்றொரு யுத்த பின்னணியிலமைந்த படம் சித்ரா, 1946-ல் வெளிவந்தது. சி.ஐ.டி. துப்பறியும் குபுணனாக வரும் டி.எஸ்.பாலையா தம் சொந்தக் குரலில் மூன்று பாடல்களைப் பாடுகிறார். இப்படம் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் வால் பகுதியின் சொச்ச மிச்ச நிகழ்வுகளின் தம்பக் கலவைக் கதை. நானும் என் அண்ணனும் திருச்செங்கோட்டில் கூடார அரங்கில் பார்த்தோம். பேர் பாதி சினிமாவில் தூங்கிப்போன என்னை அண்ணன் அடித்து எழுப்பி படத்தின் முடிவைப் பார்க்கச் செய்ததோடு, தூங்கினபோது ஓடிய கதைப் பகுதியையும் சொல்லி வைத்தான்.

உலக யுத்தம் இறக்குமதியையும் பாதித்தது சோப், பிஸ்கெட்டுகள், ஓவல்டின் முதலானவை வருவது தாமதமாகி, விலை ஏற்றி வைக்கப்பட்டு விற்கப்பட்டன. COW AND GATE குழந்தைகளின் பால் கிடைப்பது அறிதானது. ஜப்பானிலிருந்து வரவழைக்கப்பட்ட விளையாட்டு சாமான்கள் வரத்து தடை செய்யப்பட்டது. சாமான்கள் வரத்து தடை செய்யப்பட்டது. ஜப்பானிய பொருட்கள் ஒளித்து வைக்கப்பட்டன. சிலவற்றை அடிமாட்டு விலைக்கு வாங்க முடிந்தது. இந்த சமயம்தான் திருச்செங்கோட்டுக்கு இடம்பெயர்ந்த எங்கள் குடும்பத்தில் நானும் என் அண்ணனும் “பயாஸ்கோப்காரர்கள்” என்ற பட்டப் பெயரைப் பெற்றோம். அதை பின் வரும் பகுதிகளில் பார்க்கலாம்.

*****

தொடரும் தொடர் 1: 

புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்தொடர் 2: 

தொடர் 2: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்