மினி பயாஸ் கோப்
சேலத்தில், சேலம் பாங்க் என்ற வங்கி மணிக் கூண்டோடு முதல் அக்கிரகார சாலைக்கும் இரண்டாவது அக்கிரகார சாலைக்கும் நடுவே திருமணி முத்தாறுக்கும் மாரியம்மன் கோயிலுக்கும் சமீபமாக இருந்து வந்து பின்னாளில் இந்தியன் வங்கியோடு இணைந்தது. இந்த வங்கிக்கு எதிரே ஜாஃப்பர்கானின் பெரிய விளையாட்டு சாமான் கடை இருந்தது. இங்கிலாந்து, ஜப்பான் நாடுகளிலிருந்து வந்த விளையாட்டுப் பொருட்களும் விற்கப்பட்ட கடை. உலக யுத்தம், ஜப்பானிய சரக்குகளை இறக்குமதி செய்வதை பிரிட்டிஸ் அரசு தடை செய்திருந்ததோடு அதன் உபயோகத்தையும் தடை செய்திருந்தது. உலக யுத்தம் முடிவுக்கு வரும் வேளை. ஜப்பான் சாமான்களின் கையிருப்பை குறைந்த விலையில் பொத்தி பொத்தி விற்றார்கள். பக்த கெளரி (1941) எனும் படத்தில் கெளரியாய் நடித்த ஜீவரத்தினம் “தெருவில் வராண்டி, வேலன் தேரில் வராண்டி” என்று தம் கீச்சுக் குரலில் பாடிய பாடல், கிட்டத்தட்ட ஓர் இருபது வருடங்களுக்கு மறக்க முடியாத தொடர்ந்தும் பள்ளி மாணவிகளால் கும்மியடித்துப் பாடிய பாடலாகும். அதே சமயம் ஜப்பானியரின் யுத்த கொடுமையைச் சொல்லும்படியாக இப்பாடலின் ராகத்திலேயே தமிழகமெங்கும், “கொடுமைக் காரண்டி, ஜப்பான் பிளேனில் வராண்டி”, என்றெல்லாம் சிறுவர் சிறுமியர் பாடினர்.
தீபாவளிக்குத் துணியெடுத்து தைப்பதற்கு அப்பா என்னையும், அண்ணனையும் சேலத்துக்கு அழைத்துப் போயிருந்தார். ஜாஃப்பரின் பொம்மைக் கடையை ஒட்டி தையல்காரர் சுலைமானின் கடை. நீண்ட காலமாக அங்குதான் அப்பா தைக்கக் கொடுப்பார். ஒரு நாள் தங்கல் என்பது ஆண்கள் மட்டுமென்றால் சுலைமானின் கடையே போதுமானது. பெண்களுமிருந்தால் சேலம் செவ்வாய்ப் பேட்டையிலிருந்த இராஜேந்திரா சத்திரத்தில் தங்குவது எங்களுக்கு வழக்கம். கடை சாவியை சுலைமான் நீட்டிவிட்டு, இரவில் அவசரத்துக்கு கடையிலுள்ள சிறு தொட்டியையே உபயோகித்துவிட்டு தவறாமல் தண்ணீர் ஊற்றிவிடச் சொல்லிவிட்டுப் போனார்.
பொம்மைக் கடைக்குப் போய் நின்றோம். “வேணுமா பாருங்க”, என்று சொல்லிவிட்டு ஒரு சாதனத்தை பொத்தி பொத்தி அப்பாவிடம் நீட்டினார். அப்பா திருப்பித் திருப்பிப் பார்த்தார் அதை “இதெல்லாம் விக்கிக் கூடாதினு ஆர்டர். ஜப்பான் மேக்.”
ஒரு சிகிரெட்டு பெட்டியின் வடிவத்திலும் நீள, அகல கொள்ளளவில் அதற்குச் சற்றே பெரியதுமாயிருந்தது அந்த திடமான தகரப் பெட்டி போன்ற சாதனம். ஒழுங்காக மஞ்சள், பச்சை, சிவப்பு மற்றும் நீல வண்ணங்களில் ஏழெட்டு பெட்டிகளை எடுத்து வைத்தார். ஜாஃப்பர் ஒவ்வொன்றிலும் “Made in Japan” என்று பொறிக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு முனையில் அன்றைய ஒற்றைத் தம்படி நாணய அளவில் வட்ட வடிவ கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது. மறு முனையில் சட்டம் போன்ற அமைப்புக்குள் ஏதோ சினிமா ஃபிலிம் ஒன்று செருகி வைக்கப்பட்டிருந்தது. அந்த சிறு வட்டக் கண்ணாடி உண்மையில் ஒரு நல்ல லென்ஸ். அதில் கண்ணை வைத்துப் பார்த்தால், எதிரே பெரியதாகத் தெரிந்தது. செருகப்பட்டிருந்த ஃபிலிம் பெரியதாகத் தெரிந்தது.
“இது பயாஸ்கோப்” என்றார் ஜாஃப்பர். அதன் விலை நாலணா. அப்பா ஆசையோடு மூன்று பயாஸ்கோப்புகள் வாங்கிக் கொண்டார். ஒன்று எனக்கு. இரண்டு அண்ணன் ராமுவுக்கு படச் சுருளிலிருந்து தனித்தனியாக கத்தரித்து, பத்துப் பத்தாக வைத்து கட்டி சினிமா பிச்சர் என அந்த காலத்தில் கடைகளில் விற்பார்கள். பிக்சர் கட்டுகளை சிறுவர்கள் வாங்கி பார்த்து மகிழ்வார்கள். சிறுமிகள் பிக்சர்களை வாங்கி பார்க்க மாட்டார்கள். வெவ்வேறு படங்களின் சுருளிலிருந்து வெட்டப்பட்ட ஃபிலிம்களை ஒவ்வொரு கட்டும் கொண்டிருக்கும், சில சமயம் ஒரு கட்டில் ஒரே ஃபிலிம் இரண்டு கூட இருக்கும். அந்த வகையாக அண்ணா ராமு நிறைய சினிமா செல்லுலாய்டு பிக்சர் கட்டுகளை வாங்கி வைத்திருந்தான். ஊர் திரும்பியதும் அந்த பிக்சர்களையெல்லாம் ஒவ்வொன்றாக பயாஸ்கோப்பில் செருகி லென்ஸ் வழியாகப் பார்த்து முடித்தோம். அக்கா சாந்தாவும் எங்களோடு சேர்ந்துகொண்டு, எந்தெந்த பிக்சர் என்னென்ன சினிமாவைச் சேர்ந்தது என்பதையும் அதிலிருக்கும் நடிகர், நடிகையர் யாரார் என்பதையும் எந்த காட்சிக்கு சம்மந்தப்பட்டது என்பதையும் விளக்கினாள். ராமு சட்டென, “நீ ஒண்ணும் சொல்ல வேணாம்” எல்லாம் எனக்கும் தெரியும் என்றான்.
எனக்கொரு யோசனை, காம்பவுண்டு வெள்ளைச் சுவர் நாமகிரி டூரிங்கு டாக்கீசின் வெள்ளித் திரையாக கற்பனையில் மாறிற்று. என் பயாஸ்கோப்பை ஸ்டூல் மீது வைத்து எதிரிலுள்ள வெள்ளைச் சுவரை அதன் லென்சு பார்க்குமாறு கோணப்படுத்தி முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை வெயிலில் வைத்து சூரிய ஒளியை பயாஸ்கோப்பின் ஃபிலிம் செருகப்பட்ட பகுதியின் மீது பாய்ச்சினேன். ஃபிலிமிலுள்ள பிம்பம் வெளியில் ஒளியால் லென்ஸை ஊடுறுவிச் சுவரில் “புதிய புத்தகம் பேசுது” இதழ் அளவுக்கு பெரிதாக விழுந்தது. நான் என் வீட்டாரை கூவியழைத்து காட்டினேன். எல்லோரும் ஓடிவந்து பார்த்தார்கள். ஜப்பானிய மினி பயாஸ்கோப்பை வைத்து சுவரில் படம் காட்டிவிட்டேன். அசையாத சினிமா படம். ஏதோ ஒரு தமிழ் சினிமாவின் படச் சுருளிலிருந்து வெட்டப்பட்ட துண்டு ஃபிலிம் இப்போது தன் அளவில் லென்ஸால் பல மடங்கு பெரிதாக்கப்பட்டு சுவரில் விழுந்திருந்தது. ஆனால் வெயில் மேகக் கூட்டத்தால் மங்கத் தொடங்கவும் சுவரில் தெரியும் சினிமா காட்சியும் மங்கிக் கொண்டுபோனது. அதற்கும் மாற்று வழி தோன்றியது. அப்பாவின் ஐந்து செல் டார்ச் விளக்கைக் கொண்டு வந்து, பயாஸ்கோப்பை இருண்ட அறை ஒன்றில் வைத்து டார்ச் அடித்தேன். வெயிலைக் கொண்டு படம் காட்டியதைவிட வெளிச்சம் ஒரு படி கூடுதலாகவே இருந்தது. சாந்தா ஓடிவந்து பார்த்தார். என்னை எல்லோரும் கட்டியணைத்துக் கொண்டு “இவன் நம்ம வீட்டு பயாஸ்கோப்காரன்”, என்று கத்தினார்கள்.
கைவசமிருந்த எல்லா பிக்சர்களையும் பயாஸ்கோப்பில் செருகி டார்ச் விளக்கொளியைப் பாய்ச்சி சுவரில் காட்டிப் பார்த்து முடித்தோம். பிறகு, இருக்கும் ஃபிலிம்களை சினிமா வாரியாகப் பிரித்து கூறு கட்டினோம். எந்த கூறிலும் சேராத இந்தி, தெலுங்கு, ஆங்கில சினிமாத்துண்டு ஃபிலிம்களுமிருந்தன. அவற்றை ஓரங்கட்டி வைத்தோம். இராமஜெயத்தில் ஜெமினி தயாரிப்பான “தாசி அபரஞ்சி” திரையிடப்பட்டிருந்தது. கூடு விட்டு கூடு பாயும் விக்கிரமாதித்தனின் நாடாறுமாத காடாறுமாத கதை எம்.கே. ராதா விக்கிரமாதித்தன், மந்திரியாக கொத்தமங்கலம் சீனு. தாசி அபராஞ்சியாக புஷ்பவல்லி, எல். நாராயணராவ் கோயில் குருக்களாகவும், சுந்தரிபாய் அபரஞ்சியின் வேலைக் காரியாகவும் நடித்திருந்தார்கள். ஆச்சார்யா இயக்கிய படம். கொத்தமங்கலம் சீனு எனும் வி.எஸ். சீனிவாசன் 30கள், 40களின் தமிழ் சினிமா நடிகர். ஒரு சராசரி நடிகனுக்கான முகவெட்டைக் காட்டிலும் ஒருவித சர்க்கார் உத்தியோகஸ்த முகக்களை கொண்டவர். முப்பதுகளில் இவர் கதாநாயகனாய் நடித்த ஒரிஜினல் சாரங்கதரா படத்தில் வி.எஸ். சீனிவாசன் என்றே பெயர் பட்டியலில் இருக்கும் இவரோடு இணைந்து நடித்த “ட்ரிய்யோ” சாரதாம்பாள் என்பவரும், “கோல்டன்” சாரதாம்பாள் என்பவரும் வெவ்வேறு சாரதாம்பாக்கள். அந்த வேற்றுமையை இனம் காண இவ்வாறு அடைமொழிப் பட்டங்களோடு குறிப்பிடப்பட்டார்கள். முந்தைய படமொன்றில் ஒரு சாரதாம்பாள் பாடிய புகழ் பெற்ற மாடு மேய்க்கும் பாடலில், ட்ரிய்யோ, ட்ரிய்யோ டேயன்னா என்ற வரிகள் பிரபலமடையவே தொடர்ந்து அவர் நடித்த படங்களில் இதற்குள் மற்றொரு சாரதாம்பாளும் புகழுக்கு வந்துவிடவே வேறுபடுத்திக் காட்ட ட்ரிய்யோ சாரதாம்பாள் கோல்டன் என்ற நாடக சபாவில் புகழ் பெற்றவர். எனவே கோல்டன் சாரதாம்பாள் என்பார்கள் ஒரிஜினல் சாரங்கதராவையடுத்து, நவீன சாரங்கதரா என்று எம்.கே.தியாகராஜ பாகவதரின் நடிப்பில் ஒன்றும் , 50களில் சிவாஜி கணேசனின் நடிப்பில் ஒரு சாரங்கதராவும் வெளிவந்திருக்கின்றன. சீனு, சாந்த சக்குபாய், தாசி அபரஞ்சி, கச்ச தேவயானி, சோக்காமேளர், பாதுக பட்டாபிசேகம், சூரிய புத்திரி, மணிமேகலை ஏகம்பரவாணன் ஆகிய முக்கிய படங்களில் பிரதான பாத்திரங்களை ஏற்று பாடி நடித்தவர்.
இந்த பயாஸ்கோப்காரனுக்கும் சினிமாவுக்குமுள்ள சொந்த பந்தம் இன்னொரு விதத்திலும் தற்செயலாக முக்கியமானது. பிரிக்கப்படாத அன்றைய சேலம் மாவட்டத்து ஓசூரில் மின்சார வசதி இல்லை. ஆனால் டைனமோ எஞ்சின் உதவியுடன் சினிமா ஓட்டும் வசதியோடு ஒரு கூடாத வகை சினிமா தியேட்டர் இருந்தது. வீட்டில், அம்மாவுக்கு நிறைமாதம் டெண்டில் சாந்த சக்குபாய் படம் வந்திருந்தது. அம்மா படத்தை பார்த்தாக வேண்டுமென்றாள். நிறைமாத கர்ப்பிணியின் நியாயமான எந்த ஆசையையும் கெடுக்க விரும்பாத அப்பாவும், மாலை ஆறு மணியாட்டத்துக்கு குடும்பத்தோடு அழைத்துப் போனார். படம் முடிய இன்னும் அரைமணி நேரம் இருந்தது. அம்மாவுக்கு பிரசவ வலிகண்டுவிட்டது. வயிற்றுக்குள்ளிருந்தது இந்த பயாஸ்கோப்காரன் உடனே குதிரை வண்டியில் வைத்து அம்மாவை வீட்டுக்கு அழைத்துச் சென்று, மருத்துவச்சி வந்து சுகப்பிரசவமானது.
கணம் தப்பியிருந்தால் டெண்ட் கொட்டகையிலேயே சாந்த சக்குபாய் பட்ட அவஸ்தையைவிட ஜனன மரண அவஸ்தையோடே அம்மா என்னைப் பெற்றெடுத்திருப்பாள். பின்னாளில் 1949-ல் தான் சாந்த சக்குபாயைப் பார்த்து வைக்க முடிந்தது. இம்மாதிரி 39, 41, 42, 43களில் வெளியான பல தமிழ் சினிமாக்களை நான் 4க்கு பின்னரே பார்க்க முடிந்தது. சாந்த சக்குபாய் படத்தை சுந்தர்லால் நட்கர்னி இயக்கியிருந்தார். பண்டரிநாதன் பால் பக்தி மேலிட்ட சக்குபாய் பண்டரிபுரம் போக பட்ட பாடு அவள் மரணமுற்ற பின், பண்டரிநாதனே வந்திருப்பதுபோலவெல்லாம் போகும் கதை. பெண்கள் படம் பார்க்கையில் அழுது புலம்புவார்கள். சாரங்கபாணியோடு கன்னட நடிகை அசுவத்தம்மா ஜோடி. கொத்தமங்கலம் சீனுவும், சுப்புவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். என்றாலும் படத்தில் சக்குபாயின் கொடுமைக்கார மாமியாராக வரும் பன்னிபாய் என்னும் சீனியர் சிட்டிசன் நடிகைதான் நடிப்பில் முதல் மார்க் பெறுபவர். பன்னி பாய் மராத்தி- கன்னடம்- தமிழில் கதா காலட்சேபமும் ஹரிகதை நிகழ்த்தும் நிகரற்ற புகழ்பெற்ற கலைஞர். அந்த காலத்தில் ஹரிகதை பிரசங்கத்துக்கு பெயரும் புகழும் பெற்ற இரு கலைஞர்கள் கீதபாடு காய்னபாடு சரஸ்வதிபாயும், பன்னிபாயும் ஆவார்கள். பன்னிபாய் சக்குபாயிக்கு கொடுமை மிக்க மாமியார் பாத்திரத்தில் அதி சிறப்பாக செய்திருக்கிறார்.
எங்களைப்போல துண்டு சினிமா ஃபிலிம்களை கடையில் வாங்கி சேகரிக்கும் ஓரிரண்டு பையன்களோடு ஏற்பட்ட சினேகம், சினிமா பிக்சர் சேகரிப்போர் குழுவாக மாறியது. ஒருவரிடம் ஒரு படத்தின் ஃபிலிம்கள் ஒன்றுக்கு மேல் இருப்பின் அடுத்தவனுக்கு அது தேவைப்பட்டால் கொடுத்து வேறொன்றை பண்டமாற்றிக் கொள்ளும் சங்கமாயிருந்தது. சினேகிதர்களும் பெருகினர். சினிமா பேச்சும், சினிமா அறிவும் விரிவடைந்து வந்தது. குறிப்பிட்ட ஒரு தமிழ் சினிமாவின் துண்டு ஃபிலிம்களை, அந்தப் படத்தைப் பார்த்திருக்கும் அறிவியல் வரிசைப்படுத்தி கட்டுக் கட்டி அதன் பெயர் எழுதிய சீட்டோடு வைத்தோம். ஓர் இருபத்தைந்து படங்களின் கட்டுகள் தயார்.
இந்த சமயம் நான் தொழில்முறை பயாஸ்கோப்காரனாக அவதாரமெடுத்தேன். காலியாயிருந்த எங்கள் வீட்டு அறையொன்றை நானும் ராமும் சினிமா தியேட்டராக பாவித்தோம். டார்ச் ஒளியைக் கொண்டு எங்கள் மினி பயாஸ்கோப்பால், பழைய வேட்டியைத் திரையாகக் கட்டி ஒரு கட்டிலுள்ள இருபது பிக்சர்களையும் ஒவ்வொன்றாகக் காட்டினோம். பெரிதாகவே திரையில் விழுந்தது. அந்தப் படத்தின் ஓரிரண்டு பாடல்களை நான் உரக்கக் கத்திப் பாடுவேன். காட்சிகளை அண்ணாராமு விளக்குவான். அக்கா சாந்தா, ஒரு தாளில் அந்தப் படத்தின் பெயரையும், நடிகர், நடிகையர் பெயர்களையும் எழுதி வீட்டு முன்னால் ஒட்டி வைப்பாள். படம் பார்க்க வந்து அறையில் உட்காரும் பையன்கள் தலைக்கு காலண (அன்றைய கணக்கில் மூன்று தம்படி காசுகள்) கட்டணம் தர வேண்டும். ஐந்தாறு பையன்கள் வந்துவிட்டார்கள். முதலில் நான் பாடி காட்டிய படம் ஜெமினி தயாரிப்பான தாசி அபரஞ்சி படத்தின் துண்டு ஃபிலிம்களின் அசையா சினிமா. புஸ்பவல்லி (அபரஞ்சி) எம்.கே.ராதா (விக்கிரமாதித்தன்) கொத்தமங்கலம் சீனு (மந்திரி) எல். நாராயணராவ் (கோயில் குருக்கள்) சுந்தரிபாய் (அபரஞ்சியின் வேலைக்காரி).
தாசியின் ரேட் ஆயிரம் பொன். விக்ரமாதித்தன் தன் காடாறு மாத வாழ்க்கையின்போது இறந்து கிடக்கும் பச்சைக் கிளியின் உடலுக்குள் (கூடு) தன் உடலைவிட்டு நீங்கி பாய்கிறான். (கூடு விட்டு கூடு பாய்தல்) கிளி உஜ்ஜயினியின் பஜாரிலுள்ள செட்டியாரிடம் சென்றடைகிறது. அபரஞ்சி கடைத் தெருவில் ஷாப்பிங்கு செய்கையில் இருவர் அவளை வைத்து மெதுவாக பேசுகிறார்கள். ஒருவன் சொல்லுகிறான்.
நேத்து ராத்திரி கனவிலே அபரஞ்சியோடே சுகம் அனுபவிக்கிற மாதிரி கனவு கண்டேன். இதை காதில் வாங்கிக் கொண்டுவிட்ட அபரஞ்சி, ஓஹோ, கனவில் என்னோடு சுகம் அனுபவித்தாயா, எடு ஆயிரம் பொன், என்று கத்துகிறாள். வழக்கை செட்டியாரின் பேசும் கிளியைக் கொண்டு விசாரித்து தீர்ப்பு வழங்க இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டு கிளியின் உடலிலுள்ள விக்கிரமாதித்தன் தன் தீர்ப்பை, “ஆயிரம் பொற் காசுகளைக் கொண்ட பையைக் கொண்டு வா” என கூறி, பை வரவும், கனவில் அனுபவித்த சுகத்துக்கு பையிலுள்ள ஆயிரம் பொற்காசுகளின் ஓசையே வெகுமதி, என கிளி தீர்ப்பளிப்பதை சபை ஏற்கிறது.
அவமானப்பட்டவளாய் தாசி அபரஞ்சி கிளியைப் பழி வாங்க செட்டியாரிடம் பணம் கொடுத்து கிளியை வாங்கிக் கொண்டு வீட்டையடைகிறாள். சமையற்காரியிடம் அதை குழம்பு வைக்கச் சொல்லிப் போகிறாள். கிளி ஏமாற்றிவிட்டுப் பறந்து போகிறது. சமையற்காரி பயந்து பஜார் முழுக்க தேடியும் கிளி கிடைக்காததால் பச்சைப் புறாவை வாங்கி வந்து சமைத்துப் போடுகிறாள். பிறகு விவரமறிந்த அபரஞ்சி மேலும் அவமானமுறுகிறாள். ஜெமினி தயாரிப்பான இப்படத்தின் கதைக்கு திருப்பு முனையான கிளி கூறும் தீர்ப்பு சம்பவம் பரமார்த்த குருவும் சீடர்களும் கதையிலிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
கோயில் குருக்களுக்கு அபரஞ்சி பேரில் பிரேமை, ஆனால் 1000 பொற்காசு தர முடியாத அவர் வசிய மருந்து செய்து கோயில் பிரசாதமான சர்க்கரைப் பொங்கலில் கலந்து தாசியின் வேலைக்காரியிடம் கொடுத்தனுப்புகிறார். வழியில் அதன் மணத்தால் இழுக்கப்பட்ட வேலைக்காரி சர்க்கரைப் பொங்கலைச் சாப்பிட்டுவிட்டு மீதியை அதன் இலையோடு தன் செல்ல ஆட்டுக்குவைக்கிறாள். வசிய மருந்து வேலை செய்கிறது. வேலைக்காரிக்கு கோயில் குருக்கள் மீது ஆசையும் மூடும் வரவே அவள் குருக்களைத் தேடிப் போனபடியே பாடுகிறாள்.
“கோயில் குருக்களோடு நானே
கொண்டாட்டமாயிருக்கப் போறேனே”
இந்த பாட்டின் அசல்ராகம், அறுபதுகளில் நரசு வெளியீடாக வந்த வள்ளியில் நாரதராய் நடித்த டி.ஆர். மகாலிங்கம் முருகனை (சிவாஜி) சந்திக்கச் செல்லும் காட்சியில் பாடும் நீண்ட பாடலின் இசையில் ஒரு அங்கமாய் சேர்க்கப்பட்டுள்ளது.
வேலைக்காரியைத் தொடர்ந்து அவளது ஆடும் வசியமடைந்து குருக்களை வந்தடையும்.
தாசி கடைசியில் புத்தரால் மனம் மாறி புத்த பிக்குணியாக மாறி, “கூண்டோடு கைலாசம், என பாடி, பிச்சையெடுத்து போவதாய் படம் முடிகிறது. தாசி அபரஞ்சி ஜெமினியின் தயாரிப்புகளில் முக்கியமான திரைப்படம். ஆச்சார்யாவின் இயக்கத்தில் உருவான படம்.
*****
தொடரும்
தொடர் 1:
தொடர் 2:
தொடர் 3:
Pingback: தொடர் 10: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ் - Book Day