சில தெலுங்குப் படங்கள்
தமிழில் பெரும்பாலும் ராஜா ராணி கதைகள் மற்றும் புராண இதிகாசப் பக்தி கதைகளையே சினிமா வாக்கிக் கொண்டிருந்த 30-கள், 40-களில் இந்தி சினிமா பெரும்பாலும் சமூகக் கதைகளையே சினிமாவாக்கிக் கொண்டிருந்தது. அத்தோடு, தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் சகல விதத்திலும் நாடக பாணியையே பின் பற்றியது என்பதோடு இந்தி சினிமா ஹாலிவுட் பாணியை பல விதத்திலும் பின்பற்றியது எனலாம். ஒரு திரைப்படம் தென்னிந்திய சினிமாவை பெரிதும் பாதித்தது. அந்த இந்திப் படம் அச்சுத் கன்யா 1936ல் வெளியான இப்படத்தின் கதை ஜாதிய கொடுமைக்கு எதிரானதாய் புரட்சிகரமாயிருந்தது. பிராமண வகுப்பைச் சேர்ந்த இளைஞன் ஹரிஜன பெண்ணைக் காதலிக்கும் கதை. பயங்கர எதிர் விளைவுகளைக் கொள்ளும் கலப்பு ஜாதி காதல். இன்றளவு இந்தியாவில் ஜாதிக் கொடுமை ஒழிய வில்லை என்பது அவ்வப்போது உயர் ஜாதி- கீழ் ஜாதியென்ற கொடுமையான கோட்பாட்டில், காதல் திருமணம் புரிந்த இளம் ஜோடிகள் வன் கொடுமைக்காளான செய்தி வந்தவண்ணமிருக்கின்றன. உயர் ஜாதி இளைஞனாக அசோக் குமாரும் ஹரிஜன பெண்ணாக தேவிகா ராணியும் நடித்த புகழ் பெற்ற அச்சுத் கன்யாவை நான் பார்த்ததில்லை. இந்தப் படமும் கூட தமிழ் சினிமாவில் எவ்வித அலையையும் எழுப்பவில்லை. பயந்து பயந்து தயங்கியே கதையில் பக்தியைப் புகுத்தி கிருஸ்ண பரமாத் மா பேரில் பாரத்தைப் போட்டு தயாரித்த படமான சதி முரளி ஓரளவுக்கு மேல் ஜாதி கீழ் ஜாதி பிரச்சினையை மையமாய்க் கொண்டது. எம்.கே.ராதா. எம்.ஆர். சந்தானலட்சுமி, மாஸ்டர் டி.ஆர். மகாலிங்கம் ஆகியோர் நடித்தது.
ஆனால் அச்சுத் கன்யா அன்னாளில் தெலுங்கு சினிமாவை ஓரளவுக்கு பாதித்திருக்கிறது எனலாம். இதன் காரணமாய் தெலுங்கில் இரு நல்ல சமூக விழிப்புக்கான படங்கள் எடுக்கப்பட்டு பெரிதும் பேசப்பட்டன. ஒன்று, ரைது பிட்ட (Rythu Bidda) மற்றொன்று, மால பில்ல குடியானவப் பெண், எனும் ரைது பிட்ட அன்றளவில் பெரிதும் பேசப்பட்ட சிறந்த தெலுங்குப் படம். 1939ல் எடுக்கப்பட்ட ரைது பிட்ட சேலம், நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டது 1946ல் தான், விவசாயிகளுக்கும் ஜமீந்தாருக்குமான வர்க்கப்போராட்டத்தோடு ஜாதியம், காதல் என்பதை சேர்த்து சிறப்பாக இயக்கியிருந்தார் கூடவல்லி ராமாமிருதம், ரைது பிட்டவாக சூர்ய குமாரி நன்கு நடித்திருந்தார். இவர் தமிழிலும் சில படங்களில் நடித்திருப்பவர். பிறகு இலண்டனில் குடியேறி லண்டன் பிபிசி வானொலியில் பணியாற்றியவர். நாமக்கல் பகுதியில் ரெட்டியார் வகுப்பு பிரஜைகள் கணிசமாயிருந்த காரணத்தினால் அவர்களாலும் அவர்களோடு இரண்டறக் கலந்து பழகிப் புழங்கி வந்த இதர வகுப்பாடும் தெலுங்கறிவு பெற்றிருந்ததால் தெலுங்குப் படங்களின் வருகை நாமக்கல்லுக்கு சகஜமாயிருந்தது. கோமதி (வைஸ்யர்) செட்டியார் ஒருவர் ஆறாறு மாதத்துக்கு தற்காலிக லைசென்ஸ் பெற்று ஒவ்வொரு முறை லைசென்ஸ் வாங்கும்போதும் தம் டூரிங்கு டெண்ட்டின் பெயரை மாற்றி வைத்தபடியே சினிமா காட்டி வருவார். அவரது துணி கூடார தியேட்டரில் தெலுங்குத் திரைப்படங்கள் அவ்வப்போது போடப்படும்.

பிறகு திரையிடப்பட்ட ஜெமினியின் தயாரிப்பான பால நாகம்மா சரியானதொரு அம்புலிமாமா வகையான கதை. அம்புலிமாமா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், இந்தி மொழிகளில் வெளிவந்து கொண்டிருந்த சிறுவர்- சிறுமியர் முதல் வாலிபர் வயோதிகர் வரை விரும்பிப் படித்த பத்திரிகை அதில், வெளியான சிறு கதைகளும் தொடர்கதைகளும் ராஜா ராணி மாயாஜால மந்திரவாதிக் கதைகளே. அதற்கு எவ்வாறு எல்லா வயதிலும் வாசகர்கள் இருந்தார்களோ அந்த மாதிரியே பால நாகம்மா படத்துக்கும் ரசிகர்களிருந்தனர். அம்புலி மாமாவுக்கு போட்டியாக வந்த பாலமித்ரா என்ற பத்திரிகையும் சகல விதத்திலும் அம்புலிமாமாவுக்கு சக்களத்தியாகவே விளங்கிற்று. பல வருடங்களுக்குப் பின் அம்புலிமாமா பாலநாகம்மா கதையை தொடராக வெளியிட்டபோது, அப்பத்திரிகையின் ஆஸ்தான சைத்திரிகராயிருந்தா சித்ரா என்பவர் தொடர் கதைக்கு பாலநாகம்மா திரைப்படத்தில் வரும் அரண்மனை, ஜோடனை, பாத்திரங்கள் முகச் சாயல், உடை வகைகளாகவே பார்த்துப் பார்த்து வரைந்து வந்தார். அதன் பிறகு விஜயா படத் தயாரிப்புகளான பாதாள பைரவி, சந்திரஹாரம், குணசுந்தரி ஆகியப் படங்களின் பாத்திரங்களின் உடை தினுசுகள், முடியமைப்பு என சகலமும் அம்புலிமாமாவில் கதைகளுக்கு சித்ரா வரைந்த சித்திரங்களில் இருப்பதுபோலவே இருக்கும். அவ்வாண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் பாலநாகம்மா படத்தின் ஸ்டில்கள் வெளியிடப்பட்டிருந்தன. மந்திரவாதி, ராணியின் மரணம், அவளது பையன் மந்திரவாதியின் உயிர் நிலையைக் கண்டெடுத்து அவனை அழிக்க அண்ட ரண்ட பட்சியிலேறி ஏழு கடல்கள், மலைகளைத் தாண்டி குகையைக் கண்டுபிடித்து ஆயிரம் வண்டுகளுக்குள் மந்திரவாதியின் உயிர் இருக்கும் ஒரு வண்டைப் பிடித்து நசுக்க மந்திரவாதி சாகிறான். பாலநாகம்மாவை பி.என். ரெட்டியும் சி. புல்லய்யாவும் இணைந்து இயக்கியிருந்தார்கள். புகழ் பெற்ற தெலுங்கு சினிமா டைரக்டர் லங்கா சத்தியம் சலவைத் தொழிலாளி பாத்திரத்தில் ஒரேயொரு காட்சியில் தோன்றுவார். முக்கியபாத்திரங்களில் புஸ்ப வல்லியும் காஞ்சனமாலாவும் நடித்தார்கள்.
பாலநாகம்மா படத்தின் ஆரம்பத்தில் ஆந்திர நாடோடிப் பெண்கள் இருவர் நாகப்பாம்பு உருவில் செதுக்கப்பட்ட முகத்தைக் கொண்ட துந்தனா தந்தி வாத்தியத்தைச் சுரண்டி வாசித்தபடியே ஒரு வித பழங்குடியினரின் இசை ராகத்தில் பாலநாகம்மா கதையைப் பாடி வருவார்கள். இதைத் தொடர்ந்து படம் ஆரம்பமாகும். சென்னையில் Elephant Gate எனப்படும் யானை கவுனியருகில் வால் டாக்ஸ் சாலையின் பழைய ரீகல் (பத்மநாபா) சினிமா தியேட்டர் எதிரிலுள்ள ஆந்திரா செல்லும் பஸ்கள் வந்து போகும் பஸ் நிலையம் ஒன்றிருந்தது. அங்கே நிரந்தரமாய் தினமும் காலை முதல் இரவு வரை இந்த ஆந்திர நாடோடிகளின் நாக வாத்திய, இசையோடு பாடும் நாடோடிக் கதைப் பாடல்களை கேட்க முடிந்த காலம் அது. இவர்கள் தங்க சாலை பஸ்நிலையத்திலும் மண்ணடி செங்காங்கடை மார்கெட் பகுதியிலும் தென்படுவார்கள். இந்தப் பாடகர்களின் கதைப் பாடல்களை நான் பலமுறை கேட்டு அனுபவித்திருக்கிறேன். இப்பொழுது நான் குறிப்பிட்டிருக்கும் இவை எதுவுமே நிகழ்வில் இல்லை.

நாமக்கல்லில் வெளிவந்த இன்னொரு குறிப்பிடத் தக்க தெலுங்கு சமூகப் படம் இல்லாளு, இல்லாளு (வீட்டுக்காரி) கீழ் மத்திய தர குடும்பத்து வாழ்க்கை நிலையை, அதிலும் பெண் மக்களின் அவலத்தை, ஆண்மேலாதிக்கத்தை பகுதி சோகமாயும் பகுதி நகைச் சுவையோடும் சொல்லும் படம். அந்த சமயம் தெலுங்கில் புகழ் பெற்றிருந்த நட்சத்திரங்களுள் வேமூரி கெக்கய்யா, கும்மிடி, சாந்தகுமாரி, காஞ்சன மாலா, புஸ்பவல்லி பசுபு லேட்டி கண்ணாம்பா ஆகியோரும், ஓய்.வி.ராவ், சித்தூர் நாகய்யா, பிரசாத் ஆகியோரும் முக்கியமானவர்கள். நாகய்யா இசை ஞானம் பெற்றிருந்ததோடு இதமான குரல் வளமுடையவர். தியாகய்யா, பக்தபோதனா, பின்னாளில் சக்கரதாரி போன்ற படங்களில் முக்கிய பாத்திரத்தை ஏற்று கீர்த்தனைகளையும் மெல்லிசைப் பாடஹ்களையும் மோகனராகத்துக்கே இழைழு தோய்ந்த தம் நயமான குரலில் பாடி நடித்தவர் நாகய்யா. அதே சமயம் சேலம் விக்டோரியா தியேட்டரில் திரையிடப்பட்ட ஒரிரு இந்திப் படங்களும் முக்கியமானவை. சேலத்தில் ஓரியண்டல் திரையரங்கையடுத்து பழைய அரங்கம் சென்ட்ரல் விக்டோரியா. இதன் உரிமையாளர் சென்னையில் குளோப் தியேட்டரை (பின்னால் அலங்கார் என பெயர் மாறியது) கட்டியவர். சேலத்தில் சென்ட்ரல் தியேட்டரும் இவருடையது. ஆரம்பத்தில் கூடார வகை டெண்ட் தியேட்டராய் தொடங்கி, பிறகு தகரமும் கட்டிடமுமாய் பழைய பஸ் நிலையப் பகுதியில் திருமணி முத்தாற்றங்கரையிலமைந்திருந்தது சென்ட்ரல் விக்டோரியா தியேட்டர். இப்போது அந்த தியேட்டர்கள் ஒன்று கூட இல்லை.
நாற்பதுகளில் தெலுங்கு சினிமாவில் சில நல்ல திரைப்படங்கள் உருவாக இந்தி சினிமாவில் எடுக்கப்பட்ட சில புரட்சிகர படங்கள் பாதிப்பை ஏற்படுத்தின என்பதைச் சொல்லும் அதே வேகத்தில் அது தமிழ் சினிமாவில் பாதிப்பு எதையும் உண்டாக்கவில்லை எனபதையும் கூறியாக வேண்டும், அவ்வப்போது இந்தி சினிமாவில் சைகல், பங்க்ரஜ் மல்லிக் ஆகியோர் பாடிய அரிய பாடல்களின் மெட்டை தமிழ் சினிமா பாட்டுக்கு போட்டுக் கொண்டதோடு சரி.
கல்கத்தா நியூ தியேட்டர் அளித்த கலைஞர்களில் பி.சி.பரூவா மற்றும் நிதின் போஸ் என்பவர்கள் முக்கியமானவர்கள். பி.சி.பரூவா சரத் சந்திரரின் தேவதாசை முதன் முதலாக வங்க மொழியில் எடுத்தபோது தாமே தேவதாசாக நடித்து இயக்கினார். பிறகு தலை சிறந்த பாடகரும் நடிகருமான கே.எல்.சைகல் தேவதாசாகவும், ஜமுனா என்பவர் பார்வதியாகவும் நடிக்க, இந்தியில் தேவதாசை இயக்கி வெளியிட்டதோடு, பரூவா அஸ்ஸாமிய மொழியிலும் தேவதாசை தயாரித்து இயக்கி வெளியிட்டார். தேவதாஸ் ஏழை-பணக்காரன், பொருந்தா விவாகம், குடியின்கேடு என்பனவற்றை எதிர்த்துப் பேசிய நாவல் – திரைப்படம். தேவதாஸ் இந்திப் பதிப்பை விக்டோரியாவில் நாங்கள் பார்த்தோம், என் வயது, மொழியறிவு இல்லாமை என்பதால் சரியாக அப்போது விளங்கவில்லை. சைகல் நடித்த இந்தி தேவதாஸ் 60-ன் தொடக்கத்தில் சென்னை வெலிங்டன் தியேட்டரில் சனி ஞாயிறுகளில் காலைக் காட்சியாகப் போட்டார்கள். காலைக் காட்சிகளாக வெலிங்டனில் சைகல் நடித்த தான்சென், தேவதாஸ் ஸ்டிரீட் சிங்கர் ஆகிய படங்களைப் பார்த்தேன்.
1936-ல் தேவதாஸ் படத்தின் இந்திப் பதிப்புக்கு காமிராவில் ஒளிப்பதிவு செய்த காமிராமேன் பிமல்ராய் பின்னாளில் டைரக்டராக மாறியதும் 20 ஆண்டுகள் கழித்து 1956-ல் திலிப்குமார், சுசித்ரா சென், வைஜயந்தி மாலா ஆகியோர் நடித்த தேவதாஸை தயாரித்து இயக்கினார். அதே சமயம் சிறந்த நடன ஆசிரியரான வேதாந்தம் ராகவய்யாவின் இயக்கத்தில் 1953-ல் ஏ.நாகேசுவரராவ், சாவித்ரி, நம்பியார், லலிதா ஆகியோர் சிறப்பாக நடிக்க, சி.ஆர்.சுப்பராமன், விஸ்வநாதன் ராமமூர்த்திகளின் உயர்ந்த இசையில் கண்டசாலாவின் மனமுருக்கும் குரலில் அமைந்த பாடல்களோடான தேவதாஸ் தெலுங்கு-தமிழ் இரு மொழிகளிலும் வெளிவந்தது. என்னைப் பொறுத்தளவு இந்த தேவதாஸ் மற்ற எல்லா தேவதாஸ்களையும் மிஞ்சும்படியிருந்தது என்பேன்.
பரூவாவின் தேவதாஸில் ஒரு முக்கிய பாட்டை சைகல் விட்டு விட்டு நிறுத்தி நிறுத்தி இடையிடையே சிறு சிறு வசனத்தோடு பாடியிருப்பார். இதே பாட்டை இசைத் தட்டில் பதிவு செய்கையில் வசனங்களை நீக்கிவிட்டு பாட்டு ஒன்றை மட்டும் பதிவு செய்திருக்கிறார்கள். சரத் சந்திரரின் தேவதாஸ் அசல் நாவலை சிறிதும் மாற்றாது எடுத்தவர் பி.சி.பரூவா. நாமக்கல்லில் இராமஜெயம் கல் கட்டிட தியேட்டரோடு கூடார வகை டெண்ட் கொட்டகைகளைப் பற்றி மிக விரிவாக பின்வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.
இந்த சமயம், பி.என்.ரெட்டியின் சிறந்த இயக்கத்தில் வந்த தெலுங்குப் படம் சொர்க சீமா. சேலம் நியூ சினிமா தியேட்டரில் திரையிடப்பட்டது. படத்தின் இசைப் பொறுப்பை ஏற்ற வி.நாகய்யா கதாநாயகன் பாத்திரத்திலும், கன்னட நடிகை ஜெயம்மா கதா நாயகியாகவும் நடித்திருக்க, மற்றொரு முக்கிய பாத்திரத்தில் பானுமதி நடித்தார். பானுமதியை திரையுலகுக்கு அறிமுகம் செய்த படம் சொர்க சீமா. முதல் படத்திலேயே தமது நடிப்புத் திறமையையும் குரலினிமையையும் காட்டினார் பானுமதி. ஒரு பெரிய பத்திரிகையாளன், அவன் அன்பு மனைவி, சின்ன குழந்தையைக் கொண்ட மகிழ்ச்சியான குடும்பத்தில் அழகியும் துடுக்குமான ஏழை இளம் வேலைக்காரி, வேலைக்காரி சினிமாவில் சேர, எஜமானன் உதவி செய்கிறான். பத்திரிகையாளன் ஒரு சினிமா இசையமைப்பாளனுமாவான். வேலைக்காரி தன் கவர்ச்சியாலும் நடிப்புத் திறமையாலும் துரிதமாய் வளர்ந்து விரைவில் பெரிய சினிமா நட்சத்திரமாகிறான். அவளில் மயங்கி பத்திரிகையாளர் – இசையமைப்பாளர் குடும்பத்தை மறந்து அவளிடம் கிடக்கிறார். அவன் உயர்ந்த பின் இளம் டைரக்டரிடம் போய்விடவே, அவளால் பணம், குடும்பம் எல்லாம் இழந்த இசையமைப்பாளன் வேலை போய், மானம் போய், எங்கோ ஓடிவிடுகிறார்.
மனைவி வேறொரு ஊரில் தையல் மிஷினில் துணி தைத்துக் கொடுத்து பையனைப் படிக்க வைக்கிறாள். ஒரு நாள் தாடியும், மீசையுமாய் ஒரு கிழவன் கொட்டாங்கச்சி வயலின் விற்றுக் கொண்டு வருகிறான். சிறுவர், சிறுமியர் காசு கொடுத்து வாங்குகின்றனர். தையற்காரம்மாளின் பையனையே உற்று பார்த்த கிழவன் அது மகனே என்பதை விளங்கிக் கொண்டவனாய் கொட்டாங்கச்சி ஃபிடிலை காசு வாங்காமலே தந்துவிட்டு பையனைப் பின் தொடர்ந்து வந்து குடிசை வீட்டில் தையல் மிஷனில் தைத்துக் கொண்டிருப்பது தன் மனைவியே என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுகிறான். குடும்பம் ஒன்று சேருகிறது அனுக்கு மீண்டும் இழந்த வேலைகள் திரும்பக் கிடைத்து வாழ்க்கை மலர்கிறது. நாகைய்யா, பானுமதி, ஜெயம்மா மூவரின் நடிப்பும் பி.என்.ரெட்டியின் திறமையான டைரக்ஷனும் சிறப்பானவை என்றால் படத்தின் முதன்மையான சிறப்பு அம்சம் அதன் அற்புதமான கருப்பு வெள்ளை காமிரா ஒளிப்பதிவு. காமிரா கலைஞர் ஆங்கிலோந்தியரான மார்க்ஸ் பார்ட்லே மிக அற்புதமாக சொர்க சீமாவுக்கு ஒளிப்பதிவாற்றியிருக்கிறார். படத்தின் இசையமைப்பை ஏற்று ஒரு சில நல்ல பாடல்களை தருபவர் வி. நாகய்யா, நாகய்யாவின் மெல்லிசையில், வெள்ளைப் புறாவை வைத்துக் கொண்டு வெள்ளையுடையில், இருண்ட பின்னணியில் பானுமதி பாடும், ஓ..ஓஹ்ஹஹ்ஹோ! பாவுரமா’ எனும் பாடல் மிக அருமையானது. இசையமைப்பும் பானுமதியின் குரல் வளமும், அதைக் காட்சிப்படுத்தியிருக்கும் மார்கன் பார்ட்லேயின் காமிராவும் சிறப்பானது! பாவுரமா என்றால் தெலுங்கில் புறா என்பதாகும். சொர்க சீமா பானுமதிக்கும், நாகய்யாவின் இசைத் திறமைக்கும் மார்கன் பார்ட்லேயின் காமிராவுக்கும், பி.என்.ரெட்டியின் இயக்கத்துக்கும் பேர் சொன்ன படம்.
*****
தொடரும்
தொடர் 1:
தொடர் 2:
தொடர் 3:
தொடர் 4: