தொடர் 6: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 6: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்ரிபப்ளிக் சீரியல் படங்களும், தமிழ் சண்டைப் படங்களும்

இன்றைய தொலைக்காட்சித் தொடர்களும், யூடியூப்பில் வெளியாகும் திரைப்படங்களும், பழையது, புதியது என சகல மொழிகளிலும் கிடைக்கும் திரைப்படங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பாகங்களாய் பிரிக்கப்பட்டு பாகம் ஒன்று, இரண்டு என்று ஓடுகின்றன. தொலைக்காட்சி சானல்களும் தொடர் சித்திரங்களை ஏராளமாய் காண்பிக்கின்றன. இந்த விதமான காரியம் பல ஆண்டுகளுக்கு முன் 1938, 39, 40, 41, 42களில் அமெரிக்கத் திரைப்பட நிறுவனமான REPUBLIC SERIAL பல ஆங்கில படங்களை கருப்பு வெள்ளையில் தயாரித்து திரையிட்டது. ஒரே ஒரு படம் “ROAD TO DENVER”, எனும் அவர்கள் வண்ணத்தில் தயாரித்த படத்தை 1960இல் சேலம் பாலஸ் தியேட்டரில் காலைக் காட்சியாகப் பார்த்திருக்கிறேன். டெக்னிகலரில் அபூர்வமாக ரிபப்ளிக் சீரியல் நிறுவனம் தயாரித்த இந்த ஸ்டண்ட் படம் அவர்களின் வழக்கமான சீரியல் வகையல்ல. ஒரு கதை – ஒரு படத்தோடு முடிக்கப்பட்டது ரோடு டு டென்வர்.

சிற்றூர்களிலும், தாலுகா தலைநகரங்களிலும் அப்பொழுதெல்லாம் சீரியஸ்ஸான, ஆங்கில திரைப்படங்கள் வராது, காட்டப்படமாட்டாது. பயாஸ்கோப்காரன் சேலம் நகருக்கு 50களின் இடையில் வந்து குடியேறும் வரை ஹாலிவுட் வண்ணத் தயாரிப்புகள் எதையும் பார்த்ததில்லை.அறுபதுகளில் சீரியஸ்ஸான ஹாலிவுட் திரைப்படங்கள் சிற்றூர்களிலும் சிறு நகரங்களிலும் திரையிடப்பட்டன.அதுவரை கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட ரிபப்ளிக் சீரியல் படங்கள், லாரல் ஹார்டி, சார்லிசாப்ளின் படங்கள் திரையிடப்பட்டன.

Crum on Showbiz: Among best of best Republic serials...

இந்த ரிபப்ளிக் சீரியல் படங்கள் என்பது, சாகசமயமானதொரு பெரிய கதையை – அதே சமயம் கதையே உருப்படியாக இல்லாத ஒன்று எடுத்துக்கொண்டு பத்துப் பன்னிரெண்டு அத்தியாயங்களைாய்ப் பிரித்து வைத்து ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு திரைப்படமாக்குவார்கள். ஒவ்வொரு பாகமும் ஒண்ணரை முதல் இரண்டு மணி நேரத்துக்கு ஓடக்கூடியதாயிருக்கும். ஒரே நடிகர்-நடிகை-வில்லன் நடிகர்களே தொடர்ந்து பத்துப் பன்னிரெண்டு பாகங்களிலும் நடித்திருப்பார்கள். இடையில் அவர்களில் யாராவது இறந்துவிட்டால் இன்னொருவரை போட்டு தொடருவார்கள், ரிபப்ளிக் சீரியல் படங்களுக்கு தமிழில் தரப்பட்ட தலைப்புகளை அடைப்புகளில் தருகிறேன். அவ்விதம் நான் பார்க்க நேரிட்ட ரிபப்ளிக் சீரியல் ஆங்கிலப் படங்கள்: FLASH GARDEN [ஃப்ளாஷ் கார்டனின் ஜாலங்கள்;] பன்னிரெண்டு அத்தியாங்களாய் எடுக்கப்பட்ட இப்படத்தின் முதல் மூன்று பாகங்ளைத் தொடர்ந்தும் பிறகு 10-வது பாகத்தையும் பார்த்தேன். DRUMS OF DR.FUN MANCHU [சீன பைத்தியக்கார மந்திரவாதியின் கொடுமைகள், 10 அத்தியாயங்களிலான படத்தில் பார்த்திருப்பது 3-ம், 7-ம் பாகம்] CAPTAIN MARWEL [ராட்சச வீரன், 12 பாக்கள், அத்தனையும் பார்த்திருக்கிறேன்]

SPY SMASHER [1. உதை மாஸ்டர். (2) வந்தேன் உதை உலக ஜோதி [இரு தலைப்புகள்] 13 அத்தியாயங்களிலான 13 படங்களில் 12-ஐ பார்த்திருக்கிறேன்.] காப்டன் மார்வலும், ஸ்பை ஸ்மாஷரும் ரிபப்ளிக் சீரியல் படங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற வசூல்மிக்க படங்கள். TARZAN- (கணக்கற்ற படங்கள் 6 பார்த்திருக்கிறேன்.) RADARMEN FROM MARS (விண்ணுலக விஞ்ஞான தேவதைகள் 10 அத். -2 பார்த்திருக்கிறேன்.

இந்த ரிபப்ளிக் சீரியல் படங்கள் ஒவ்வொன்றும் அத்தியாய மத்தியாயமாய் எடுக்கப்பட்டாலும் அத்தியாய வரிசையில்தான் பார்க்க வேண்டுமென்பதில்லை. முதல் அத்தியாயத்தை நடுவிலும், 7-ம் அத்தியாயத்தை 3-லும், கடைசி அத்தியாயத்தை முதலிலுமாகக் கூட பார்க்கலாம். குழப்பமோ, புரியவில்லையென்ற கஷ்டமோ தொடர்ச்சி போய்விட்டதென்ற கவலையே வராது. ஏனென்றால் ரிபப்ளிக் சீரியல்களில் சீரானதொரு கதை கூறல் விஷயமே இருக்காது. ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் உரையாடல் எதுவும் சரியாக நமக்குப் புரியாமலிருக்கும் நிலையில் அடித்துக் கொண்டேயிருப்பார்கள். ஒரு விசில் அடித்துக் கொண்டேயிருப்பார்கள். ஒரு விசில் ஒலியோடு மிக உயரமான கட்டிடங்களின் உச்சிக்கு வெற்றுடலோடு தாவுவார்கள். கார்கள், ரயில்கள் ஓட்டப்பந்தயம் போடும். கவிழும், எழும், குப்புற விழுந்து புரண்டு தீப்பற்றிக் கொள்ளும். ஒரு நிமிட பேச்சையடுத்து பத்து நிமிடங்களுக்கு சண்டையிருக்கும். படம் முழுக்கவே இந்த Tempo தொடரும். அடியென்றால் அப்படியொரு அடி. அதன் காரணமாய் ஆங்கில சினிமா என்றாலே, அடி தடி, குத்து, கட்டிப் புரளல், தாவிக் குதித்து ஓடல், கார், ரயில் மோட்டார் சைக்கிள் வாகனாதிகளின் துரத்தல் இடித்தல், மோதல் கவிழ்தல் என்று, கணக்கற்ற துப்பாக்கிச் சண்டைகள், சாவுகள் என்பதாலேயே பாமர ரசிகர்களால் பார்த்துப் பார்த்து பழகிப் போன உணர்வில், இங்கிலீஷ் படமா, சண்டைப் படம் என்று ஓடிச் சென்று பார்க்கப்பட்டவை. பத்தாண்டு ஆண்டுகளுக்கு முன்புகூட திருநெல்வேலிக்கார ஆட்டோ ஓட்டுனர் நண்பர் ஒருவருக்கு, ஜெயராஜ், டென்கமாண்ட் மெண்ட்ஸ் படம் போடறேன், பாக்கறீங்களா, இங்கிலீஷ் படம் என்று கேட்டபோது நண்பர், சண்டை படம்தானே, போடுங்க, என்றார் உற்சாகத் தோடு டி.வி.க்கு மிக அருகில் வந்து உட்கார்ந்தார்.
ரிபப்ளிக் சீரியல் தயாரிப்புகளாய் இந்தியாவில் இறங்கி நம்மை மகிழ்வித்த ஆங்கில சண்டைப் படங்கள் இந்திய தயாரிப்பாளர்களையும் விட்டு வைக்கவில்லை. அவற்றின் பாதிப்பு வெகுவாகவே நம் தயாரிப்பாளர்களைத் தாக்கிற்று. அதில் முதன்மை வகித்தவர் பம்பாய் வாடியா சகோதரர்கள். ஜான் காவாஸ் என்ற கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட நடிகரும் அவரையும் மிஞ்சும்படியாக சண்டை சாகசம் புரிந்து நடித்த பயமற்ற நடியா என்றறியப் பட்ட (Fearless Nadia) நடியாவும் (பலர் நாடியா என்றும் உச்சரிப் பார்கள்) வாடியா தயாரிப்புகளான சண்டைப் படங்களின் நாயக நாயகிகள்.

Hunterwali - Wikipedia

அச்சமற்ற நடியா சர்க்கஸில் குதிரைச் சவாரி செய்து வித்தைகள் புரிந்தவர். 1933-ல் ஜாம் ஜெட் வாடியாவும் அவரது மூவிடோன் என்ற திரைப்பட நிறுவனத்தை தொடங்கி 1970கள் வரை சகல விதமான திரைப்படங்களை இந்தியில் தயாரித்தவர்கள். ஹோமி வாடியா தந்திர காட்சிகள் உருவாக்குவதில் வல்லவர். பின்னாளில் அவர்கள் தயாரித்த பல படங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டு வெற்றிகரமாய் ஓடியவை. அவர்களின் தயாரிப்பான ஹண்டர் வாலி Hunter wali) அவர்களின் திரைப்படமாக்கும் முறையையே மாற்றியமைக்கும் வண்ணம் வரவேற்கப்பட்டு வெற்றியடைந்தது. ஹண்டர் வாலியில் ஜான் காவாஸும் John Cawas) நடியாவும் சண்டையிட்டு சாகச வேலைகள் புரிந்து குதிரைச் சவாரி, மோட்டார் சைக்கிள் சவாரி செய்து அசத்தினார்கள். இந்து-முஸ்லீம் நல்லுறவை வலியுறுத்துமாறும் தீண்டாமையை எதிர்ப்பதாயும் தேச விடுதலையுணர்வை தூண்டும் விதமாயிருந்தது ஹண்டர்வாலி. 1935 முதல் 1940 வரையிலான வாடியா மூவிடோன் தயாரிப்புகள் ஸ்டண்ட் படங்களாயிருந்தன. அதே சமயம் ரிபப்ளிக் சீரியல் படங்களின் பாதிப்பால் இந்திய ஸ்டண்ட் படங்கள் உருவாகின என்றாலும் அவை சீரியல் வகைகள் அல்ல. ரிபப்ளிக் சீரியல் படங்கள்போல வெட்டி சண்டைப் படங்களுமல்ல.

வாடியாவின் சண்டைப் படங்கள் நடியாவை மனதில் கொண்டே அவருக்கிருந்த வர நடியா, அந்தப் படங்களில் அநீதியை எதிர்த்தும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காய் அதிகாரத்தை எதிர்த்தும் சண்டையிடுவாள். ஹண்டர் வாலியை அடுத்து அவரது மகத்தான ஸ்டண்ட் படம், டயமண்ட் குவீன் (Diamond queen) இது 1940ல் வெளிவந்து, நான் 1946ல் பார்க்க முடிந்தது. இதிலும் அவரோடு இணைந்து சண்டை செய்து நடித்தவர் ஜான் காவாஸ். டயமண்ட் நகரம் அதாவது வைரம் வெட்டியெடுக்கப்படும் சுரங்க நகரத்தை சில தீயவர்கள் கொலை கொள்ளையில் அனுபவம் மிக்க அயோக்கியர்கள் சட்டம் ஒழுங்கை குலைத்து கொள்ளையடித்து சுரங்கத்தை சூறையாட முனைகின்றனர். அப்போது மக்கள் பொது நலனில் அக்கறையும் பொறுப்புமிக்க வீரப் பெண்மணியான நடியா முகமூடியணிந்து குதிரையேறி எதிரிகளை சண்டையிட்டு அழித்து டயமண்ட் நகருக்கு நிரந்தரமான நிம்மதி, அமைதி, பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கை சீராக்கல் என ஏற்படுத்தி வைர ராணி Diamond queen என்று அழைக்கப்படுகிறாள். அச்சமயம் நாடு தழுவிய சுதந்திர போராட்டம் அந்நியராட்சியை எதிர்த்து நடந்து வந்த சூழலில் இப்படமும் பெரிய விசயமாயிற்று. நடியா வாடியா தயாரித்த Frontier Mail (1936), Hurricane Hansa (1937), Diamond queen (1940), Jungle Pricess (1942), Baghdad Ka Jadoo (1959) மற்றும் Khillari (1967) ஆகிய புகழ் பெற்ற இந்தி சண்டைப் படங்களில் நடித்தவர். கடைசி இரண்டு படங்களை மட்டும் நான் பார்த்ததில்லை. நடியாவின் வாழ்க்கை வரலாற்றை Fearless The Hunter wali Story என்ற ஆவணப் படமும் பிரசித்தமானது. நடியா தம் 70-வது வயதில் 1996ல் காலமானார்.

Khilari (1968) - IMDb

வாடியாவின் இந்தி சண்டைப் படங்களின் பாதிப்பில் அதே பாணியில் அதே காலக் கட்டத்தில் தமிழில் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால் இந்த காரியம் பம்பாயைச் சேர்ந்த இரு நகை வைர வியாபாரிகளால் நடந்தது. ரம்னிக்லால், மோகன்லால் என்ற பம்பாயைச் சேர்ந்த சகோதரர்கள் நகை வியாபாரிகள். இவர்கள் மோகன் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமொன்றைத் தொடங்கி 1936ல் தமிழின் முதல் ஸ்டண்ட் திரைப் படத்தை தயாரித்தனர். அந்த தமிழ் சண்டைப் படத்தில் பெயர் டேஞ்சர் சிக்னல் Danger Signal) ரிபப்ளிக் சீரியல் பட வேகத்திலும், வாடியாவின் இந்தி சண்டைப் படங்களின் பாணியிலும் அமைந்திருந்த டேஞ்சர் சிக்னல் தமிழ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் அளித்தது. இதில் ஆக்சன் ஹீரோவாக நடித்த P.S. சீனிவாச ராவ் ஏற்கெனவே 1934ல் சவுண்டு சிடி என்ற நிறுவனத்தால் சீனிவாச கல்யாணம் என்ற புராண படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்தவர். மராட்டியரான சீனிவாசராவ் ஐரோப்பிய முக ஜாடையுடையவர். தமிழ், தெலுங்கு மராத்தி, இந்தி, ஆங்கில மொழிகள் தெரிந்த சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பி.ஏ. பட்டதாரி. பிரிட்டிஸ் ராணுவம் தன் ராணுவத்தினரை மகிழ்விக்கவென்று தென்னிந்திய மொழிகளில் குறும்படங்களை எடுக்க வைக்க சீனிவாசராவை நியமித்து காப்டன் பதவியுமளித்தது. சீனிவாசராவ் மராத்தி, இந்தியில் நடித்ததோடு படம் தயாரித்தும் இயக்கியுமிருப்பவர். ரம்னிக்லால் மோகன்லால்களின் தயாரிப்பில் சீனிவாசராவ் நடித்த மின்னல் கொடி தமிழின் ஸ்டண்டு படங்களில் மிகவும் புகழ்பெற்ற வெற்றிகரமான படம். 1937ல் வெளிவந்த மின்னல் கொடியை நான் திருச் செங்கோட்டில் 1946ல்தான் பார்த்தேன். அதில் ராவுடன் ஜோடியாக நடித்து ஸ்டண்ட் செய்தவர் தமிழின் அந்நாளைய புகழ் பெற்ற நடிகை கே.டி. ருக்குமணி.

மின்னல் கொடி என்ற பெயரில் முகமூடியணிந்து அயோக்கியர்களை அழித்து, பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவியும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாயுமிருந்த ஒருவன் போலீசுக்கு சவாலாக இருந்தான். இளம் போலீசு அதிகாரி குமார் அவனைப் பிடிப்பதில் தீவிரமாயிருந்தார். குமாரின் காதலியான மோகினி புரட்சிக்காரன் மின்னல் கொடியை அவன் சாகுந்தருவாயில் சந்திக்கிறாள். தன் கடமைகளை தொடர்ந்து செய்யும்படி மோகினியைக் கேட்டுக் கொண்டு மின்னல் கொடி இறந்து போகிறான் மோகினி அவனது முகமூடி உடைகள், துப்பாக்கி, கத்தி, குதிரை ஆகியவற்றோடு மின்னல் கொடியாக மாறுகிறாள். இந்த விவரம் எதுவும் தெரியாத போலீஸ் அதிகாரி குமார் ஒரு சமயம் அவனோடு கத்திச் சண்டையிட்டு முகமூடியைக் கிழித்துவிட, மின்னல்கொடி என்பது ஒரு பெண் என்பதையும், அது தன் காதலி மோகினியே என்பதையறிந்து அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் பெற்றாலும் மின்னல் கொடி மீதுள்ள குற்றங்களை எண்ணி கவலையுறுகிறான். பிறகு மக்கள் விரோதியாக உலவிய வில்லனையும் அவன் அடியாட்களையும் இருவரும் சேர்ந்து பிடித்து போலீசில் ஒப்படைத்து நிஜ மின்னல் கொடி இறந்ததை நிரூபித்து, இருவரும் கணவன் மனைவியாகின்றனர்.

ஆர்.பி. லட்சுமி தேவி என்ற நடிகையும் இந்த சண்டைப் படங்களில் புகழ்பெற்றவர். இவரும் சீனிவாச ராவோடு இணைந்து நடித்த டேஞ்சர் சிக்னல் என்ற தமிழ் சண்டைப் படமும் வெற்றிகரமானது. டூஃபான் குவீன் என்ற தமினழ் சண்டைப் படத்தில் ஆர்.பி. லட்சமிதேவியோடு ராஜகோபாலன் என்பவரை நடிக்க வைத்து படமாக்கினர் மோகன் நிறுவனத்தார். இந்திய சினிமா முழுவதுமே ஒரு நாயகன், ஒரு நாயகி, ஒரு வில்லன், இவர்களுக்கு தோழன், தோழியர் என்பது ஒரு வரைபடம். அந்த வகையில் இந்த ஸ்டண்ட் படங்களில் தோழனாயும் காமெடியனாயும் நடித்து வந்த எஸ்.எஸ். கொக்கோ அகாலமரணமடைந்தார். ெகாக்கோ பி.யு. சின்னப்பாவுடனும் உத்தமபுத்திரன், மனோன்மணி ஆகிய படங்களில் நடித்தார். இவர்களோடு சந்துரு என்ற குதிரையும், டைகர் என்ற நாயும் நடிப்பதுண்டு.

சீனிவாச ராவும் கே.டி. ருக்குமணியும் சேர்ந்து பம்பாயில் தயாரிக்கப்பட்ட தமிழ் ஸ்டண்ட் படங்களான மின்னல் கொடி (1937), பக்கா ரெளடி (1937) பாக்ய லீலா (193)
வீர ரமணி (1939) ஐய பாரதி (1940) ஆகிய படங்களில் நடித்திருக்கின்றனர். தமது 3-வது வயதில் சென்னையில் காலமான சீனிவாச ராவ் தம் இறுதி காலத்தில் பஜனை பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார். கே.டி. ருக்குமணி தம் 65-வது வயதில் 1986ல் சென்னையில் காலமானார்.

*****

தொடரும் தொடர் 1: 

புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்தொடர் 2: 

தொடர் 2: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்தொடர் 3: 

தொடர் 3: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
தொடர் 4: 

தொடர் 4: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்தொடர் 5: 

தொடர் 5: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்


Show 1 Comment

1 Comment

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *