தொடர் 7: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 7: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



கூடார வகை தியேட்டர்கள்

திருச்செங்கோட்டுக்கு நாங்கள் வந்த சமயம் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. ஆனால் அதன் விளைவுகள் காலனிய ஆட்சியினரால் அதன் இயல்பைவிட பெரிதாக்கப்பட்டு பொது மக்கள் பேரில் சுமைகள் போடப்பட்டிருந்தன. ஊர்திகள் யாவும் பெட்ரோல் இல்லாமல் மரக்கரியால் தண்ணீர் கொதித்து உண்டாகும். நீராவிச் சக்தியைக் கொண்டே இயங்கி வந்தன. பிரதி வாரம் திங்களன்று நானும், என் அக்கா மோகனாவும் மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசையில் பாட்டில்களோடு நிற்போம். மண்ணெண்ணெய் பெறுவதற்காக சிறு மஞ்சள் நிற அட்டையை வழங்கியிருந்தார்கள். எங்கள் குடும்பத்துக்கு வாரம் இரண்டு பாட்டில் எண்ணெய் கிடைக்கும். இது விளக்குக்கு சரியாகிவிடுமாதலால், சமையலுக்கெல்லாம் விறகுதான். ரேசனில் புளியங்கொட்டையை இலவசமாக வினியோகிப்பார்கள். வாங்குவதும் நிராகரிப்பதும் அவரவர் இஷ்டம். நாங்கள் அதை வாங்கி வந்து வறுத்து, அம்மியில் தேய்த்து தோலை நீக்கி, வெள்ளைப் பருப்பை நாள் முழுக்க நீரில் ஊற வைத்து பிறகு நன்கு கொதிக்க வேகவைத்து மெல்லுவதற்கு தோதாக ஆனதும் தாளித்து சுண்டல் செய்து சாப்பிடுவோம். தவறாமல் வயிறு வலிக்கும்.. அரிசி அரிது. கோதுமையை அன்று பரவலாக பாமர மக்கள் உபயோகிக்க தயங்கினர். இந்த சமயம் அப்பா ரேஷன் அதிகாரியாக (FIRCA SUPPLY OFFICER) பதவி உயர்ந்ததால், பொது வினியோகத்தில் போகாது தங்கிவிட்ட கோதுமை அரை மூட்டைக்கு வீட்டிலிருந்தது. அதை, அப்பா காம்ப் போய் வர அமர்த்தியிருந்த குதிரை வண்டிக்காரருக்குக் கொடுத்தார். வண்டிக்கார சாயபு அதை வேக வைத்து தன் குதிரைக்குக் கொள்ளுக்குப் பதிலாக வைப்பார். வண்டிக்குதிரைக்கு வழக்கமான கொள்ளைவிட கோதுமை ருசி மிக்கதாயிருந்திருக்க வேண்டும். விரும்பிச் சாப்பிட்டது. ஆனால் கொள்ளு, கோதுமையைக் காட்டிலும் சத்து அதிகமென்றும், குதிரைக்கு கோதுமையால் போதிய சக்தி கிடைக்காமல் அதன் இழுக்கும் திறன் பாதிக்கப்பட்டிருப்பதாக வண்டிக்காரர் கூறினார்.

இது அப்படியிருக்க, ரேசன் கோதுமை சூடு- மலச்சிக்கல் ஏற்படும் என்றெல்லாம் வதந்தி பரவி, மக்கள் கோதுமையின் பயன்பாட்டை எச்சரிக்கையோடும் ஒவ்வாமையோடும் எதிர்கொண்டதை பிரிட்டிஷ் உணவு இலாகா புரிந்துகொண்டு கோதுமை சிறந்த உணவு என்பதை பாமர மக்களுக்கு பல வழிகளிலும் அறிவுறுத்த மேற்கொண்ட முயற்சிகளில் சினிமாவும் ஒன்று. அதன்படி சில திரைப்படங்களில் பொருத்தமான இடங்களில் படத்தின் முக்கிய பாத்திரங்கள் கோதுமையின் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக சம்பவங்களும் வசனமும் இடம்பெற்றன. அந்த விதமாக நான் டெண்ட் கொட்டகையில் பார்த்த ஒரு ஸ்டண்ட் படம்தான் ‘‘ஜெயபாரதி’’ ரம்ணிக்லால் மோகன்லால் தயாரிப்பு (1940). கதா நாயகன் (சீனிவாச ராவ்) ஒரு சிற்றரசனின் மகன்- இளவரசன். அவன் தந்தையான அரசன் மகா கொடுங்கோலன். அவனை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்கிறார்கள். அதை தலைமையேற்று நடத்துபவள் ஒரு சாகச பெண் (கே.டி. ருக்குமணி) அவள் மீது காதல் கொண்ட இளவரசன் தந்தையின் அநியாயத்தைப் புரிந்து கொண்டு முகமூடி மாறுவேடம் தரித்து கிளர்ச்சிக்கு ஆதரவாக சேர்ந்து சண்டை செய்கிறான். தன் மகன் என்பதறியாத அரசன் முகமூடியை பிடித்துவிட முயற்சிக்கவும். இளவரசன் சேரியில் பதுங்கி ஏழை மக்களோடு குடிசையில் ஒளிந்து வாழ்கிறான். அப்போது அவனுக்கு கோதுமை ரொட்டி சுட்டு போடுகிறார்கள். அதை ருசித்து சாப்பிட்ட இளவரசன் பேசும் வசனம் இது. ‘‘கோதுமை ரொட்டி சாப்பிட்டேன், நன்றாகத் தானிருந்தது. கோதுமையில் ருசியும் சத்தும் அதிகமிருக்கிறது. எல்லோரும் கோதுமை சாப்பிட்டால் போராட வலு அதிகம் கிடைக்கும்.’’



ஜெயபாரதி ஆங்கில ஆட்சியை எதிர்க்கும் வகையிலான கதையைக் கொண்டது என்ற குற்றச்சாட்டோடு சிறிது காலம் திரையிட தடை விதிக்கப்பட்டிருந்து பிறகு திரையிடப்பட்டதாக பேசப்பட்டது. ரம்ணிக்லால் மோகன்லால் ஸ்டண்ட் படங்கள் குறித்து ஒரு முறை அசோகமித்திரனோடு பேசிக் கொண்டிருந்தபோது அவர் மின்னல் கொடியைப் பற்றி சிலாகித்தார். ஜெயபாரதி குறித்து கேட்டபோது மெளனமாயிருந்துவிட்டு தான் அதைப் பார்த்ததில்லை என்றார்.
திடீரென்று ஊர் பரபரத்தது. ராஜாஜி தொடங்கிய காந்தியாசிரமத்தைத் திறந்து வைத்துப் பேச காந்தியடிகள் வர விருப்பதால் அந்த பரபரப்பு என்றார் அப்பா. அன்றைய மகாஜன சபா மேடையில் காந்திஜி பேச இருப்பதால் பெருத்த பரபரப்பு. எனக்கு இதெல்லாம் கனவு மாதிரி நினைவிலிருக்கிறது. நல்ல கூட்டம். அப்பா என்னைத் தூக்கி தோளில் உட்கார வைத்து காந்தியைக் காட்டினார். நாங்கள் வெகு தூரத்தில் நின்றிருந்தபடியால் மேடையில் வெள்ளைச் சட்டை- குல்லாய் மனிதர்களாய்த் தெரித்தனர். காந்திஜி ராட்டையில் நூல் நூற்றபடியிருந்தார். பெண்கள் என்னவோ பாடிக் கொண்டே சேர்ந்து நூல் நூற்றார்கள். பிறகு எல்லாரும் கை தட்டும்போது அப்பா என்னையும் தட்டச் சொன்னார். காந்திஜி பேசியது ஹஷ்.. புஷ்ஷென்றுதான் எனக்கு கேட்டது.

திருச்செங்கோட்டிலிருக்கையில்தான் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது. தேர்தல் அமர்களப்பட்டபோது, தேர்தல் சின்னங்கள் இல்லை. பதிலாக வண்ணங்கள் தரப்பட்டன. காங்கிரசுக்கு மஞ்சள். கம்யூனிஸ்டுக்கு சிவப்பு. முஸ்லீம் லீகிற்கு பச்சை.

‘‘மஞ்சள் பெட்டிக்கு ஓட் போடுங்கள். சுதந்திரம் வாங்கித் தந்த மகாத்மா காந்தியின் மஞ்சள் பெட்டிக்கே உங்கள் ஓட்.’’

‘‘தொழிலாளர், விவசாயிகள், ஏழை, எளியவர்களுக்கான சிவப்புப் பெட்டிக்கே உங்கள் ஓட்’’ இப்படியாக தேர்தல் முழக்கம். நாங்கள் குடியிருந்த தெருவிலிருந்து அப்பா பணிபுரிந்த தாலுகா கச்சேரிக்குப் போகும் வழியில்தான் பாவடித்தெரு இருந்தது. பாவடித் தெருக்களின் வீடுகளிலிருந்து கைத்தறிகளின் ஓசை ‘‘ஜடக் புடக்’’ கென்று இசையொலியாய்க் கேட்டுக் கொண்டேயிருக்கும். பாவடித் தெருக்களில் எங்கு பார்த்தாலும் ஆங்கில எழுத்து ‘‘எக்ஸ்’’ வடிவில் மரக்கட்டைகள் நிறுத்தப்பட்டிருக்கும். கணிசமான தூரம் விட்டு இன்னொரு நிற்கும். நூலுக்கு கஞ்சியை பெரிய நார் பிரஷ்ஷ தோய்த்து இருவர் வைத்து வேகமாய்த் தேய்த்திழுத்துச் செல்லும் பாவு ஓட்டும் காரியம் முடிந்தால், நூல் பாவுக்கடியில் தரையில் சிந்தும் கஞ்சி கிரிக்கெட் பிட்ச் மாதிரியான தோற்றத்தில் மொட மொடத்து கிடக்கும். இந்த பாவடியை வைத்து ஒரு நகைச்சுவை தமிழ் சினிமா உண்டு.

என்னெஸ்கே இரு கதைகள் கொண்ட ஒரு படத்தையும் (நவீன விக்கிரமாதித்தன்-புத்திமானே பலவான்) மூன்று கதைகளைக் கொண்ட ஒரு படத்தையும் (செள செளவு) என்றால் மிக்சர் என்று பொருள் தயாரித்தார். செள செள படத்தில் பிளாக் மார்கெட், கலிகால மைனர், மற்றும் விடா கண்டன் கொடாகண்டன் என்று மூன்று தனித்தனி படங்களிருக்கும். விடா கண்டன், டி.ஆர். ராமச்சந்திரன், கொடா கண்டன், காளி. என். ரத்தினம், ராஜகாந்தம் ரத்தினத்தின் மனைவி. பிளாக் மார்க்கெட், என்.எஸ்.கே. புளிமூட்டை ராமசாமி, ஆழ்வார் குப்புசாமி குழு. கலிகால மைனரில் டி.எஸ். ‘துரைராஜ், ராஜகாந்தம்- காளி.என்.ரத்தினம் மூவரும் நடித்திருந்தனர். மூன்றுமே சிறந்த நகைச்சுவைப் படங்கள் என்றாலும், ‘‘மைனர்’’ ஒருபடி அதிகம் சிறப்பு வாய்ந்தது இதில்தான் கைத்தறி நெசவின் பாவடி வருகிறது.

துரைராஜ் வாலிப ரெவின்யூ இன்ஸ்பெக்டர். அவருக்கு பியூன் காளி என். ரத்தினம். துரைராஜ் பெண் பார்க்க பக்கத்து கிராமத்துக்கு ரத்தினத்தோடு போகிறதுதான் கதை. சைக்கிள் ஓட்ட வராது. கற்றுக் கொள்ள புதியதாக வாங்கின சைக்கிளில் ஆர்.ஐ.அமர, பியூன் பின்னாலிருந்து பெண் வீடு வரைத் தள்ளிச் செல்ல வேண்டும். சாலையோரம் உட்கார்ந்து சுண்டல் விற்ற கிழவியின் கூடையை சைக்கிள் இடித்துத் தள்ள சுண்டல் எல்லாம் மண்ணில் சிதறுகிறது. நாசமாப் போ ஓம் பொண்டாட்டி புள்ளக் குட்டியெல்லாம் வாரிகிட்டுப் போவ என சாபமிட்டு திட்டுகிறாள்.



அடுத்து ஒரு ஆட்டு மந்தை குறுக்கிட சைக்கிள் அலை பாய்கிறது. கடைசியாகத்தான் நமது பாவடித் தெரு. தெருவெங்கும் குறுக்கும் நெடுக்குமாக பாவு ஏற்றி கஞ்சி ஓட்டிக் கொண்டிருக்க மைனர் துரைராஜ் சைக்கிளை கோணல் மாணலாய் பாலன்ஸ் இல்லாமல் ஓட்டி பின்னாலிருந்து காளி என். ரத்தினமும் காட்டுத் தனமாய் தள்ளிவிட பாவு மேலே போய் பலமாய் மோதவும், பாவின் நூல்களைக் கிழித்து தொங்கவிடச் செய்கிறார் ஆர்.ஐ. சைக்கிளைப் போட்டுவிட்டு ஆளுக்கொரு பக்கமாய் ஓடிவிடுகின்றனர். ரத்தினம் இன்னொரு திசையில் ஓடிவிடுகிறார். பெண்ணின் ஊர் பெயர் ‘‘கன்னிவாடி’’ துரைராஜ் அங்கு போய் பெண் வீட்டையடைகிறார்.

காபி பலகாரம் முடிகிறது.

‘‘மாப்பிள்ளை எப்படி வந்தீங்க?’’ பெண்ணின் தகப்பனார் விசாரிக்கிறார்.

‘‘கார்ல’’, என்கிறார் துரைராஜ்.

‘‘கார் எங்கே?’’

‘‘வழியில் மக்கார் பண்ணிச்சு, பட்டறைல வுட்டிருக்கேன்.’’

அதே சமயம் பியூன் காளி என். ரத்தினம் ஊருக்குள் நுழைந்து அவ்வூர் ஏரியின் மதகின் மீது குத்துக் காலிட்டு அமர்ந்தபடி ஊரின் திசைக் காட்டியிலுள்ள அறிவிப்பைப் படித்துவிட்டு, ‘‘கன்னிவாடி ஊரு பேரப் பாரு, கன்னிவாடியாம், கன்னிவாடி. கன்னி… வாடி, கன்னீ ஈ… வாடி’’ என்று உரக்க சொல்லிச் சொல்லிப் பார்க்கும் சமயம், ராஜகாந்தம் ஏரியில் தண்ணீர் மொண்டு செல்ல குடத்துடன் வருகிறார். கன்னிவாடி என்பதை. கன்னி, வாடி என தன்னைத்தான் அழைப்பதாக எடுத்துக் கொள்ளும் ராஜகாந்தம், யோவ், என்ன கொழுப்பா, கன்னி, வாடினு கூப்புடறே. என்று கத்தியபடியே குட நீரை அவரது தலையில் அபிஷேகம் பண்ணி குடத்தால் நன்கு மொத்த, அடி வாங்கிக் கொண்டே ரத்தினம் பெண் வீட்டுக்குள் நுழைகிறார். துரைராஜைப் பார்த்து, ‘‘தம்பி, தம்பி, நீ சைக்கிள் ஓட்டத் தெரியாம ஒக்காந்து பெடல்போட, நா பின்னாலேருந்து தள்ளினனா, நீ சைக்கிள பாவடித் தெரு பாவு மேல மோதி நூலெல்லாம் அறுந்து நாசமாயி, சைக்கிள வுட்டிட்டு நீயும் நானும் ஓடிப் போனமா, நா ஏரிக்கரையில இந்த பொம்பளகிட்ட சண்டை வாங்கிட்டு இங்க வர்ரேன். பாவடிக் காரங்க சைக்கிளோட இங்கே வந்தே வந்திட்டாங்க.’’என்று ஒரே மூச்சில் சொல்லி முடிக்கவும், குடத்தோடு பெண்ணும், சைக்கிளோடு நெசவாளர்களும் வீட்டுக்குள் நுழைவார்கள்.

மேற்சொன்ன பாவழக் காட்சி தங்கள் ஊரில்தான் படமாக்கப்பட்டிருக்கும் என சேலம், ஈரோடு, கோவைப்பகுதி நெசவாளர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு பேசுவார்கள். உண்மையில் அக்காட்சி சென்னையையடுத்த பூந்தமல்லிப் பகுதியில் எடுக்கப்பட்டதாக செய்தி வெளிவந்தது. திருச்செங்கோட்டு பாவடித் தெருவைக் கடந்து அம்மன் குளத்தையடைவோம். அன்றைக்கு நாடெங்கும் பொதுச் சுகாதாரம் முற்றிலுமாய் அலட்சியப்படுத்தப்பட்டு வந்தது. தேச விடுதலைக்குப் பின் நீண்ட காலமாகவும் கக்கூஸ் வசதியென்பது அறவே கவனிக்கப்படவில்லை. மக்கள் இடிபாடுகளின் மறைவிலும் புதர் மறைவிலும் மைதானங்களிலும் காலைக் கடன்களை முடித்துவிட்டு அம்மன் குளத்து நீரிலேயே சுத்தம் செய்து கொள்ளுவார்கள். இதனால் ஊரில் பன்றி வளர்ப்போரும், திரித்தலையும் பன்றிகளும் அதிகம். அம்மங்குளம் அசுத்தமாக்கப்பட்டு நரம்புச் செலந்தி (நரப்புச் செலந்தி) போன்ற கொடும் சரும நோய் பரவிற்று. அம்மங்குளத்தை அடுத்து இருந்த மைதானத்தை கூடார வகை திரையரங்குகள் வந்து ஆக்கிரமிக்கவும், திறந்த வெளி கழிப்பகமாயிருந்த நிலை மாறி அம்மங்குளமும் மேற்கொண்டு அசுத்தமாக்கப்படுவது குறைந்து வந்தது. அவ்வாறு அமைந்த டூரிங் டெண்ட் டாக்கீஸ். மற்றொரு பகுதியில் கோல்டன்டூரிங் டாக்கிஸ் வந்தது. அனேகமாக நான் அம்பாள் டாக்கீசுக்கு அக்கா மோகனாவுடனும், கோல்டனுக்கு ராமுவுடனும் சினிமா பார்க்கப் போவேன். அப்பா எல்லாருக்கும் ஒரு ரூபாய் தருவார், சினிமா செலவுக்கென்று. மோகனா அக்கா கில்லாடியானவள். சினிமாவுக்குப் போகையில் பெரிய அக்கா சாந்தாவின் பாவாடையை கட்டிக் கொள்ளுவாள். அவளை அந்த பெரிய பாவாடை சினிமா கூடாரத்தின் ஒரு பகுதிக்குள் புகுந்தாற்போல தோன்றச் செய்யும். சினிமா கொட்டகையை நெருங்கினதும், என்னை அந்தப் பாவாடைக்குள் ஒளிந்து கொள்ள வைப்பாள். தரை டிக்கட் ஒன்றுக்கு கட்டணம் ஒண்ணரையணா. ஒரேயொரு டிக்கட் வாங்கிக் கொண்டு, மெதுவாக வாத்து நடப்பது மாதிரி நடந்து கேட்கீப்பரிடம் ஒரு டிக்கட்டை நீட்டுவாள். முதல் தடவை கூட்டம் அதிகமாயிருந்த சமயம் கேட்கீப்பர் கவனிக்கவில்லை. என்னை ஒளித்து வைத்த பெரிய அக்காவின் பாவாடையை லாவகமாய் பிடித்து ஒதுக்கினபடி வாத்து நடை போட்டு உள்ளே போனதும் என்னை விடுவித்தாள். அப்போதைக்கு வெளியாயிருந்த டி.ஆர். மகாலிங்கம், மங்களம், கே.கே.பெருமாள் ஆகியோர் நடித்த, ‘‘மாயா ஜோதி’’ (1942) படத்தை இருமுறை இவ்விதமாய் ஒரே டிக்கட்டில் நானும் மோகனாவும் பார்த்தோம்.



மாயா ஜோதி என்பது 100 இரவுக் கதையான அலாவுதீனும் அற்புத விளக்கும்தான். அந்நாளில் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் வசனம் பிராமணத் தமிழில் எழுதப்பட்டு பேசப்பட்டிருக்கும். ஒரு படத்தில் முஸ்லீம் பாத்திரம்கூட அவா, இவா பார்த்தேளா, என்று பேசியிருப்பது நினைவுக்கு வருகிறது. காரணம், கதை வசனம் எழுதியவர்களில் கணிசமானவர்கள் பிராமணர்கள். அவர்களுக்கு பேசுவதும் எழுதுவதும் அவர்களின் நடையில்தான் இருக்கும். சந்திர லேகாவில்கூட ராஜகுமாரி அவ்வாறாக பேசுவார்.. சகுந்தலையில் துஷ்யந்த் மகாராஜன் (ஜி.என்.பாலசுப்ரமணியம்) படம் முழுக்க பிராமணத் தமிழ் பேச்சைத்தான் பேசியிருக்கிறார். வசதியாக ‘‘அலாவுதீன்’’ எனும் அரபுப் பெயர் அமலாதித்தன் என்றாகியது மாயா ஜோதியில்! அக்கிரகார வாழ்க்கையில் போகும் படத்தில் அவனுடைய விதவைத் தாயாரை மொட்டையடித்து வெள்ளை மடிசார் புடவையால் தலைக்கு முக்காடிட்ட பிராமண பெண்மணியாய் காட்டப்படுகிறது. விளக்கைத் தேய்த்தால் கிளம்பும் பூதம் கூட பிராமணத் தமிழில் பேசிய விந்தையான படம் மாயாஜோதி. மூன்றாவது தடவையாக ஒரே டிக்கட்டில் பாவாடைக்குள் ஒளிந்து மாயா ஜோதியைப் பார்க்க முற்பட்டபோது மாட்டிக் கொண்டோம். கேட் கீப்பர் தமாஷாகவே கேட்டார்.

‘‘பாப்பா, ஒனக்கென்ன நாலுகாலு?’’

‘‘இல்லையே,’’ என்றாள் மோகனா.

‘‘தோ தெரியிதே, சின்னதா ரெண்டு காலுங்க ஒங்காலுக்குப் பின்னால?’’ என்று கேட்டுவிட்டு ‘‘டேய், தம்பி, வாடா வெளியில,’’ என்றார் கேட்கீப்பர். பாவாடைக்கு வெளியில் தெரிந்த நான்கு கால்களும் இரண்டிரண்டாகப் பிரிந்தன.

‘‘இவனுக்கு டிக்கட் எடுக்கணும்’’

‘‘இவன் படம் பார்க்கமாட்டான். தூங்கிடுவான். படம் பாக்கறதுக்குதானே டிக்கட் வாங்கறது?’’

‘‘படம் பாக்காம தூங்கறவன எதுக்கு கூட்டியாந்தே? வூட்லயே வுட்டிட்டு வர்ரதுதானே?’’

‘‘வீட்லயிருந்தா தூங்கமாட்டானே, ரெண்டு டிக்கட்டுக்கு காசில்லே..? ’’

‘‘அப்பிடி சொல்லு. சரி, சரி, போங்க உள்ளே அதற்குப் பிறகு கேட் கீப்பர்சிரித்துக் கொண்டே இருவரையும் ஒரே டிக்கட்டில் படம் பார்க்க அனுமதித்த விதத்தில் மகாலிங்கம் நடித்த ஏவிஎம் வள்ளியை பன்னிரெண்டு தடவையும் ஆர்ய மாலாவை நாலு தடவையும் பார்த்தோம். பிறகு ஒரே டிக்கட்டில் சினிமா பார்க்கும் பழக்கமும் குறைந்து வந்து முற்றிலும் நின்றே போனது.

*****

தொடரும் 

 

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.201 – 05.05.2021 வரை மட்டும்)



தொடர் 1: 

புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



தொடர் 2: 

தொடர் 2: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



தொடர் 3: 

தொடர் 3: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்




தொடர் 4: 

தொடர் 4: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



தொடர் 5: 

தொடர் 5: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



தொடர் 6: 

தொடர் 6: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்


Show 1 Comment

1 Comment

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *