தொடர் 8: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்கூடார தியேட்டர்கள்

இன்றைக்கும் சர்க்கஸ் காட்சிகள் பெரிய கான்வாஸ் துணி கூடாரங்களில் தான் Tent) நடைபெறுகின்றன. அன்றைக்கு கான்வாஸ் துணி கூடாரங்களில்தான் சினிமா காட்டப்பட்டது. சர்க்கஸ் கூடாரம் மிகவும் பெரியது. அதுவும் 3 ரிங் சர்க்கஸ் என்றால் கூடாரமும் பிரம்மாண்டமாயிருக்கும் 3 ரிங் சர்க்கஸ்களில் பிரம்மாண்டமானது கிராண்ட் பரசுராம் சர்க்கஸ் மேலும் சர்க்கஸ் கூடாரங்கள் இடைவெளியில்லாமல் கவிழ்க்கப் பட்டாற்போன்று ஒரே கூடாரமாய் ஏற்றி விரித்து இறுகக் கட்டப்பட்டு காட்சியின் திரணம்கூட வெளியில் தெரியாத வண்ணம் இருக்கும். பெரு மழையின்போதும் உள்ளே தண்ணீர் ஒழுகாது. ஆனால் சினிமா கூடாரங்கள் இதற்கெல்லாம் நேர் மாறானவை. சிறியவை. நான்கு பகுதிகளாலான சினிமா கூடாரங்களின் துணியும் சர்க்கஸ் போலவே உறுதியான தடித்த கான்வாஸ் வகையானது. புயலுக்கும் மழைக்கும் தாக்கு பிடித்ததாக வேண்டுமே.

உயரமான இரும்புக் கம்பங்கள் நாலைந்தை பூமியில் ஆழப் புதைத்து அவற்றின் உச்சி முனைகளோடு உறுதி மிக்க மிக தடிமனான தாம்புக் கயிற்றைக் கட்டி அதன் இரு முனைகளை பூமியில் கடப் பாறையில் கட்டி புதைப்பார்கள். இந்தத் தாம்புக் கயிறுதான் டெண்டின்முழு கான்வாஸ் கூடாரத்தையும் தாங்கிக் கொள்ளும் முதுகெலும்பு போன்றது. கூடாரத்தின் இரு முனைகளாய் விரிந்து கவிழ்ந்த முக்கோண அமைப்புப் பகுதிகளை குடைகள் என்றழைப்பார்கள். குடை விரித்தாற்போல இருப்பதோடு, சாதாரண குடையில் கருப்புத் துணியானது பல சின்ன நீண்ட முக்கோணப் பகுதிகளாய் வெட்டி தைக்கப்பட்டதாயும், இடையிடையே குடைக் கம்பிகளைப் பொருத்தி விரிக்கவும் மடக்கவும் செய்வதுபோல சினிமா கூடாரத்தின் இரு பக்க குடைகளும் பல பகுதிகளாய் இணைக்கப்பட்டு இடையில் குடைக் கம்பிகளுக்குப் பதில் கயிறுகளால் கோர்த்து குடையாக்கப்பட்டு விரித்து மடக்கவல்லது. கைக் குடையை மடக்கி அதன் நடுக் கம்போடு சுற்றிக் கட்டுவது மாதிரியே சினிமா கூடாரக் குடையையும் மடக்கி அதைத் தாங்கி நிற்கும் உயரமான இரும்புக் கம்பத்தோடு அனைத்துப் பிணைத்துச் சேர்த்துச் சுற்றி கட்டி வைப்பார்கள். இரு குடைகளையடுத்து கூடாரத்தின் பிரதான மையப் பகுதிக்கான கான்வாய் துணிகள் படிந்து தாழ இறங்கி தரையில் அடிக்கப்பட்டிருக்கும். இவற்றையும் மடித்துச் சுருட்டிக் கட்டலாம். ஒரு பக்க குடை தரை வரை கீழிறங்கியிருக்குமாறு பெரியது. அதுதான் டெண்ட் தியேட்டரின் வெள்ளித் திரை அமைந்துள்ள பகுதி. டெண்டின் வெள்ளித்திரை சாதாரண வெள்ளைத் துணியாலானது. அதையும், பள்ளிக் கூடத்தில் பெரிய தேசப்படத்தைசு சுருட்டுவதுபோல சுருட்டிக் கட்டி வைப்பார்கள். சலவைக்குப் போட்டு வெளுக்கு வைத்து கொண்டுவருவார்கள். அப்போதெல்லாம் கூடார சினிமா கொட்டகைகளில் வெளியில் எதேச்சையாக அறிவிப்பு ஒன்று ஜனங்களுக்கு வைக்கப்பட்டிருக்கும். அதைப் படித்துவிட்டு பொதுஜனம் சோர்வடையும்.

End of the road in sight for India's 'touring talkies' - eb247 - The Business of Life - Entertainment - Emirates24|7

‘‘எமது வெள்ளித் திரை சலவைக்குப் போயிருப்பதால் ஒரு வாரத்துக்கு காட்சிகள் கிடையாது. அசெளகரியத்துக்கு மன்னிக்கவும்.’’ சில கொட்டகைகள் ஒரு கூடுதல் திரை வைத்திருப்பார்கள். அங்கு அசெளகரியம் நேராது. மற்றொரு புற குடை தரையிலிருந்து கணிசமான உயரத்துக்கு உயர்த்திக் கட்டப்பட்ட பகுதி. இப்பகுதியில்தான் சினிமா புரெஜக்டர் வைக்கப்பட்டுள்ள ஆப்பரேட்டரின் காபின் நிற்கும். காபின் என்பது துத்தநாகத் தகடு அல்லது உறுதியான தகரத் தகடுகளால் கட்டப்பட்ட அறை. காபின் தரையிலிருந்து சற்று உயரத்திலிருக்குமாறு உறுதியான இரும்புக் கால்கள் மேலு வைக்கப்பட்டிருக்கும். காபினுக்குள் நுழைய சில மரப்படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கும். புரொஜக்டர், படச் சுருள்கள் அடங்கிய பெட்டி, மற்றும் ஆப்பரேட்டருக்கான உபகரணங்கள் இருக்கும். புரொஜக்டரிலிருந்து கார்பன் ஒளியால் சீறிப் பீய்ச்சியடிக்கும் சினிமா ஒளிக்கற்றை வெள்ளித் திரையில் விழும் வகையில் காபினில் சதுரமான பல கணியும், அதையடுத்து ஆப்பரேட்டருக்கான பர்சனல் வெண்டிலேட்டரும் இருக்கும். திரையில் படம் ஒழுங்காக விழுகிறதாவென சரி பார்த்துக் கொள்ள ஆப்பரேட்டர் பார்க்கும் ஜன்னல் அது. சில சமயம் ஆப்பரேட்டரின் கவனக் குறைவால் படம் தலைகீழாக விழுந்துவிடும். உடனே தரை டிக்கட்டிலிருக்கும் மக்கள், டேய் முட்டாப் பயலே, தூங்கிறியா, ஒழுங்கா காட்டுடா, என்று ஆக்கிரோசத்தோடு கூச்சலிடுவார்கள். உடனே ஆப்பரேட்டரின் தலை அவருக்கான ஜன்னலில் தோன்றி மறைவதோடு படம் ஒழுங்காக்கிக் காட்டப்படும்.

கூடார வகை தியேட்டர்களில் ஒற்றை புரொஜக்டர்தான் இருக்குமாதலால் இடைவேளை வரை தொடர்ந்து படம் காண்பிக்க முடியாது. ஒவ்வொரு ரீல் ஓடி முடிந்ததும் நிறுத்திவிட்டு அரங்கில் விளக்குகளைப் போட்டுவிட்டு, ரீலை எடுத்துவிட்டு அடுத்த சுருளை மாட்டி சரி பார்த்து ஒட்ட வேண்டும். காபினை ஒட்டியே முதல் வகுப்புக்கான பிரம்பு நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். இரண்டாம் வகுப்பு என்பது முதுகை சாய்த்துக் கொள்ள வசதி கொண்ட BACK BENCH எனும் பெஞ்சுகளும், இதையடுத்து சாய்மான வசதியற்ற மொட்டை பெஞ்சுகளும், கடைசியாக தரை ஜனங்கள் அமரும் தரை டிக்கெட் பகுதியான மணல் பரப்பிய வெளியுமிருக்கும். முதல் வகுப்பைத் தவிர மற்றவை கான்வாஸ் படுதாச் சுவரால் பிரிக்கப்பட்ட இரு பகுதிகளாகயிருக்கும். ஒன்று ஆண்களுக்கானது. இன்னொன்று பெண்களுக்கானது. ஒரு ரீல் முடிந்ததும், விளக்குகள் எரியும்போது, இரண்டு விசயங்கள் டெண்டுகளில் நிகழும். படம் நின்று விளக்கைப் போட்ட வுடனே சடக்கென ஆண்கள் பகுதியிலிருந்து மூவர் எழுந்து, ‘‘சோடாக் கலர், என்றும்சூடான டீ பால், காபி, என்றும், பாட்டுப் புஸ்தகம் என்று வியாபாரத்தை தொடங்கி விளக்கணைந்து படம் ஓடவும் நிறுத்திக் கொள்ளுவார்கள். எல்லா டெண்டுகளிலும் பொதுவானது ஒன்று.

விளக்கைப் போட்டதுமே தரையிலுள்ள ஆண்களும் மொட்டை பெஞ்சு பெஞ்சு பகுதியிலுள்ள ஆண்களும் தம் வேட்டியை மிகவும் உயர்த்திக் கட்டிக் கொண்டு எழுந்து நின்று பீடிப் புகை நடுவே பெண்கள் பகுதியையே விளக்கணையும் வரை பார்த்தபடியிருப்பார்கள். தரை டிக்கட் பகுதிதான் பெரியது. இவ்வளவு பேர்தான் என்று எண்ணிக்கையில்லாதது. வெறும் மணல் வெளி, சினிமாவின் மொத்த வசூலைத் தீர்மானிப்பதும் இந்த பாமர மக்கள் கூட்டம் நிறைந்த தரை டிக்கட் பகுதிதான். படத்தின் காட்சிகளின்போது, வசனம், பாடல்களுக்கும் உடனுக்குடனான எதிர்வினையாற்றுவதும் மந்தைக் கலாசசாரம் என பூர்ஷ்வாக்களால் விமர்சிக்கப்படுகிற இந்த தரை டிக்கட் பெருமக்கள்தான், பீடி சிகிரெட் புகையென்பது பெஞ்சு, தரை டிக்கட் பகுதிகளில் சாதாரணமாய் காட்சி தொடங்கி முடியும்வரை இருந்து கொண்டேயிருக்கும்.கூடாரத்தில் இடைவெளிகளும் திறந்த வெளியிடமும் தாராளமாயிருக்குமாதலால், காற்றுப் போக்குவரத்து எக்கச்சக்கம். மின் விசிறி எதுவுமிருக்காது. புழுக்கமேயிருக்காது. மழை பெய்தால் தான் ஆபத்து. பெரும்பாலும் காட்சிகள் ரத்தாகி டிக்கட்டுகளின் பின்னால் மானேஜர் இனிஷியல் போட்டு அடுத்த நாள் காட்சிக்கு இலவசமாய் அனுமதி வழங்கப்படும். சிலர் தரையில் மணலை ஒரு தலையணையளவுக்கு குவித்து வைத்து தலையை செளகரியமாய் வைத்து கால் மேல் கால் போட்டு படுத்தவாறும் புகைத்தவாறும் ‘‘ராயலாக’’ சினிமா பார்ப்பதுண்டு. டெண்டைச் சுற்றி சுற்றுச் சுவராக ஐந்தடி உயரமுள்ள கான்வாஸ் துணியை நுழைய வெளியேற இடைவெளிவிட்டு கட்டியிருப்பார்கள்.

ஆறாறு மாதமென்று டூரிங்கு டாக்கீசுக்கு லைசென்ஸ் வழங்குவார்கள். வருவாய்த் துறையில் இந்த லைசென்ஸ் வழங்கப்பட்டு வருகையில் என் அப்பாவும் அந்தப் பிரிவை கவனித்து வந்த சமயம் நிறைய டெண்டு கொட்டகை மானேஜர்கள் அப்பாவுக்கு வேண்டியவர்களாதலால் இடைப்பாடி, ஓமலூர் பகுதிகளில் நாங்கள் இலவசமாய் நிறைய சினிமா பார்க்க முடிந்தது.

ஒரு நாள் ராமு ஒரு செய்தி சொன்னான், காபினுக் கடியில் துண்டு பிக்சர்கள் கிடைக்கிறதென்று, படம் ஓடிக் கொண்டிருக்கையில் அவ்வப்போது ஏதாவது ஓரிடத்தில் ஃபிலிம் தன் perforation சிக்கிக் கிழிந்து சேதமடையக்கூடும். ஆப்பரேட்டர் உடனே படத்தை நிறுத்திவிட்டு சேதமான பகுதியை வெட்டி அகற்றி, மீண்டும் ஒட்டி ஒட்டுவார். வெட்டப்பட்ட துண்டு பிக்சர்கள் கேபினில் சிதறிக் கிடக்கும்.

பிறகு அவர் பெருக்கி காபினுக்கடியில் தள்ளிவிடுவார். சற்று நீளமாய் வெட்டினதையெல்லாம் சேர்த்து வைத்து கடைகளுக்கு விற்றுவிடுவார். ஒரிரு நாட்களாய் நாங்கள் காபினுக்கடியில் ஃபிலிம்களைப் பொருக்கி பொருக்கி ஊதியூதி தூசு அகற்றி ஜேபியில் திணித்துக் கொண்டு போகையில் ஒரு நாள் ஆப்பரேட்டர் கவனித்துவிட்டு கேட்டார்.

என்னடா அங்க பண்றீங்க

பிக்சர் பொருக்கறோம்

எதுக்கு

சும்மா பயாஸ்கோப்ல வச்சி பாக்க

சரி, மேலே வாங்க, நான் கொஞ்சம் தர்ரேன்

கொஞ்சம் தயங்கிவிட்டு மரப்படிகளிலேறி ஆப்பரேட்டர் காபினுக்குள் நுழைந்தோம்.

அவர் பெயர் அல்லா பிச்சை. ஒரு பக்கெட் நிறைய துண்டு பிக்சர்களிருந்தன. அது கோல்டன் ரூடிங்கு டாக்கீஸ். ஆப்பரேட்டர் அல்லாபிச்சையின் நட்பு ஏற்பட்டதிலிருந்து நிறைய வெட்டியெறிந்த ஃபிலிம்கள் கிடைத்தன. சிறுவர்களோடு ஒன்றிரண்டு பெரியவர்களும் எங்கள் வீட்டுக்கு வந்து தலைக்கு காலணா (மூன்று பைசா) கொடுத்துவிட்டு என் பயாஸ்கோப்பில் காட்டின அசையா சினிமா காட்சிகளைப் பார்த்துவிட்டுப் போயினர். ராமு சினிமா காட்ட, நான் பாட வேண்டியிருந்த சமயம் தியாகராஜ பாகவதரின் படத்தின்போது தவறிப் போய் ஹொன்னப்ப பாகவதர் பாடிய ஒரு பாட்டைப் பாடவும், ஒரு பெரியவர் தவறை சட்டென்று கண்டு பிடித்து விடவே ராமு பாடுவதாயும் நான் பயாஸ்கோப்பை கவனிப்பதாயும் மாற்றிக் கொண்டோம். ராமுவுக்கு அல்லாபிச்சை ஒரு வேலை கற்றுக் கொடுத்தார்.

கொன்னப்ப பாகவதர் - தமிழ் விக்கிப்பீடியா
ஹொன்னப்ப பாகவதர்

ஒரு பாகம் முடிந்த பின் படச் சுருளைக் கழட்டி ரீவைண்டிங்கு செய்யும் வேலை ராமு அதில் சமர்த்தன். என்பதோடு கர்வமும் கொண்டான். தான் ஒரு அரை ஆப்பரேட்டர் என்ற எண்ணம் அவனுக்கு. அல்லா பிச்சை எனக்கும் ஒரு டூட்டி. அவ்வப்போது கடைக்குப் போய் ஆப்பரேட்டருக்கு கரீம் பீடியும் தேநீரும் வாங்கி வரும் டூட்டி எனக்கு. எங்களிருவருக்கும் ஒரு தேநீரில் பாதி பாதி கிடைக்கும். ராத்திரி எட்டு மணி வரை காபினில் இருந்து விட்டு வீட்டுக்கு வந்து விடுவோம். அந்த வகையில் நாங்கள் பார்த்த சினிமா, ‘‘அலிபாபாவும் 40 திருடர்களும்’’ இப்படம் 1941-ல் வெளியாகிதிருச்செங்கோட்டுக்குஇரண்டாவதுசுற்றாக 1947ல் திரையிடப்பட்டது. பகுதி நகைச்சுவைப் படம். என்.எஸ்.கே. அலிபாபா, அவரது சகாவாக புளி மூட்டை ராமசாமி, மார்ஜியானாவாகடி.ஏ.மதுரம் மற்றும் கே.பி.காமாட்சி சுந்தரம் கொள்ளைக் கூட்டத்தலைவன், எஸ்.வி. சகஸ்ரநாமம், அலிபாபாவின் அண்ணன் காசிம்கான், அரேபிய கதை என்பதால் கழுதைகளுண்டு. விறகு வெட்டிக் கொண்டு, அலிபாபாவும் சகாவும்கழுதை மீதேறி அமர்ந்து இருட்டிவிட்டதால் கழுதைகளை முடுக்கும் வகையில் பாடும் ஒரு பாடல் :

‘‘இருட்டுக்கு முன்னே போகணும்
குருட்டுத் தடத்த காட்டுறே
திருட்டுக் கழுத நட நட நட’’
திருடர்கள் குகைக்கதவைத் திறக்க கட்டளையிடும் வாசகங்கள்:
‘‘சைத்தான்கா, மஹ்மல்கா,
தார்வாஜாகோலா!’’
இந்தப் படத்தை இரண்டு மூன்று முறை காபின் பலகணி வழியாகவே அல்லா பிச்சைத் தயவில் பார்த்த நாங்களிருவரும். இரவு வீட்டை அடையும் போது சாத்தப்பட்டுள்ள வீட்டுக்கதவை திறக்க, மேற்சொன்ன குகை மந்திரத்தையே கூறி கதவைத்தட்ட, அம்மாவோ அக்காவோ வந்து கதவைத் திறப்பார்கள். குகையில் பெரியதட்டில் நாலைந்து பப்ளிமாஸ் பழங்களிருக்கும். புளி மூட்டை ராமசாமி பல்லால் கடித்தே பப்ளிமாஸின் தடித்த தோலைக்கிழித்து உரித்து அத்தனைப் பழங்களையும் தின்று தீர்ப்பார்.

அம்பாள் டூரிங்கு டாக்கிஸ் மோகனாவுடன் பார்த்த முக்கியமான சமூகப்படம், ‘‘அதிர்ஷடம்’’ அதிர்ஷ்டம், காதல், படித்துப் பட்டம் பெற்றும் வேலைக்கிடைக்காதது என்பனவற்றைக் கொண்ட நேரான சமூகப் பிரச்சினைகளைச் சொல்லும் எளிய படம். அன்றைக்கு கர்நாடக இசைப் பயிற்சி, குரல் வளம், முகவெட்டு ஆகிய திறனோடு கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று நடிகர்களாகவுமிருந்தவர்களில் புகழ்பெற்றவர்கள் ரஞ்சன், ஜி.என்.பாலசுப்பிரமணியன், வி.வி.சடகோபன். ரஞ்சன் மற்ற எல்லாரையும் விட நிறைய திறமைகளை பயின்று தேறியவர். வி.வி.சடகோபன் ஜெமினியின் முதல் படமான மதனகாமராஜனில் கதாநாயகனாய் அறிமுகமாகி, இரு சமூகப் படங்களில் நடித்தவர். இவர் நடித்த ‘‘நவயுவன்’’ தமிழின் முதல் மேனாட்டுப் படப்பிடிப்பைக் கொண்ட படம். ஒரு சில காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டது. அதிர்ஷ்டம் படத்தில் ஆஸ்டின் ஜலாபி வகை கார் ஒன்றை சடகோபன் ஓட்டி வரும் காட்சி சுவரொட்டியில் இடம் பிடித்துக்கொண்டிருக்கும். ஜலாபியின் முதுகில் அதன் ஸ்டெப்னி சக்கரம் வைக்கப்பட்டிருப்பது, பெண்களின் பின்னந்தலையில் பிச்சாடா சுற்றி கொண்டை யூசிகளைச் செருகினாற் போலிருக்கும். இவற்றின் ஹார்ன் ஒலி பன்றி மிளிருவது போல கேட்கும். சடகோபன் அதிர்ஷ்டம் படத்தில் பாடிய, ‘‘வருவாளோ, மாட்டாளோ, மாலை நேரம் போகுதே’’, என தொடங்கும் பாடல் கர்நாடக இசையின் ஒன்றுக்கு மேற்பட்டராகங்களில் அமைந்திருக்கும். சூர்யகுமாரியின் க்ளோஸ்அப் காட்சிகள் இப்படத்தில் சிறப்பாயிருக்கும். தேச விடுதலையின் அவசியம், அதற்கான போராட்டம், படித்துப்பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலையின்மை எனும் அம்சங்கள் தூக்கலாகக் கொண்ட வெற்றிகரமாய் ஓடிய அதிர்ஷ்டத்தில் கதாநாயகன் வேலைக்கிடைக்காத மனவேதனையில் பூங்காவில் உலவிக் கொண்டிருப்பான். வேலையில்லாததால் காதலும் முடங்கியிருக்கிறது. ஆனாலும் ஏதோ தினமும் பெரிய வேலைக்கு இண்டர்வியூக்கு தயாராவது போல்கோட், பாண்ட், டை, ஷு சகிதமாகத்தான் வருவான். பூங்காவில் கோட்டைக் கழட்டி மடித்து தோளில் போட்டுக் கொண்டு உலாவிய படியே சடகோபன், ‘‘பாழாய்ப்போன இந்த படிப்பு, யாருக்கு வேண்டும்? யாருக்கு வேண்டும் இந்த படிப்பு?’’ என்று விரக்தியில் வசனம் பேசுவார். உடனே நம் தரை டிக்கெட்டு ரசிகர்கள் ஒன்று சேர்ந்து கத்துவார்கள், ‘‘வேண்டாமா, எங்களுக்கு குடுத்துடு, என்ன விலை?’’, இந்த கோரஸ்ஸில் எனது மெல்லிய குரலும் கலந்திருக்கும்.

NAKARAJAN: HONNAPPA BHAGAVATHAR ஹொன்னப்ப பாகவதர் தமிழ் மற்றும் கன்னட மொழி நாடக, திரைப்பட நடிகர்,இறப்பு அக்டோபர் 2, 1992

இந்த சமயத்தில் திரைப்படங்களில் ஏதேனும் ஒரு காட்சியை வண்ணமாக்கிக் காட்டும் முயற்சி நிகழ்ந்தது. கையால் வண்ணமூட்டி காட்டினார்கள். ஹரிதாஸ் படத்தில் பாகவதரும், ராஜகுமாரியும் பாடும் ‘‘மன்மதலீலையை வென்றார் உண்டோ’’ காட்சியில் ஃப்ரேம்களை வண்ணமாக்கி, ‘‘இந்த காட்சி கலரில்’’ என்று குறிப்பிட்ட விளம்பரத்தால் கூட்டம் அதிகரித்தது. அதைப்போலவே ஜெமினியின் மங்கம்மா சபதத்தில் இறுதியில் வயதான ரஞ்சனும் வசுந்தராதேவியும் படகிலமர்ந்து படகு வலித்தபடியே பாடும், ‘‘ஆனந்தம், பரமானந்தம்’’, எனும் காட்சியும் வண்ணமாக்கப்பட்டது. இவை மிக விரைவில் வண்ணம் மங்கி கருப்பு சிவப்புமில்லாது வண்ணமுமில்லாது கோவேறு கழுதையாக நின்று விடும். இந்த விதமாய் கருப்பு வெள்ளை புகைப்படங்களுக்கு வர்ணந்தீட்டி உடன் வசீகரமான எழுத்துக்களால் வர்ணனை செய்து சினிமா தியேட்டர்களில் காட்டப்படும் விளம்பர ஸ்லைடுகள் செய்யும் தொழிலை சேலம் மணிக்கூண்டையொட்டியிருந்த [பழைய ஹென்றி அண்டு உல்சி ரொட்டிக்கடையருகில்] ‘‘நேஷனல் ஸ்லைட்ஸ்’’கம்பெனியில் ஆறு மாதம் பகுதிநேர ஊழியம் பார்த்து வந்திருக்கிறேன். அந்த விதமாய் வண்ணக்காட்சியொன்றுடன் அம்பாளில் வெளிவந்த படம் ‘‘பிரபாவதி’’.

பிரபாவதி, கிருஷ்ணனின் மகனான பிரத்யும்னனுக்கும் அரக்கரசன் வஜ்ரநாபனின் மகள் பிரபாவதிக்குமான காதல், போராட்டம், இறுதியில் கண்ணனின் சக்கராயுதத்தால் வஜ்ரநாபன் மரணமுறுதல், இடையில் சம்மந்தாசம்மந்தமில்லாத காமெடிக் கூத்து எல்லாம் நிறைந்த ஆனால் மிகவும் வெற்றிகரமான படம். 1943-ல் வெளிவந்த பிரபாவதியோடு, ஸ்ரீ முருகன், வால்மீகி, குண்டலகேசி ஆகிய படங்கள் தியாகராஜபாகவதருக்கென திட்டமிடப்பட்டு, அந்நேரம் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் அவரும் என்னெஸ்கேயும் சிறையிலடைக்கப்படவும், அவற்றை இன்னொரு பொருத்தமான பாகவதரைக்கொண்டு முடித்துவிட தேடி பெங்களூருவிலிருந்து டி.ஆர். சுந்தரம் மூலமாய் தமிழுக்கு வந்த கன்னட பாடக நடிகரான ஹொன்னப்பா பாகவதரைப் பிடித்தனர். டிஹான்னப்பா கூடுதல் லட்சணமும் முறைப் படிகர் நாடக இசையும் கற்று கச்சேரி செய்து வந்தவர். இவரை சிறுபாத்திரத்தில் [1939] காட்டின போது இவரது ஆண்மைமிக்கமுகத்தை அவசியில்லாமலே திரை முழுக்க க்ளோசப்பில் காட்டினதோடு 15நிமி இசைக்கச்சேரியும் செய்ய வைத்தார் எல்லிஸ் ஆர். டங்கன், அதன் பின் தமழில் பதினைந்து படங்களில் கதாநாயகனாக ஹொன்னப்பா நடித்தவர் பிரபாவதியில் தாசியாக வரும் டி.ஆர். ராஜகுமாரி கதாநாயகனின் வரவை எதிர்கொள்ள பூமாலையோடு பாடும், ‘‘வருவாரே, மணவாளன்’’, எனும் பாட்டின் ராகம் அன்றைய நாளில் பிரபலமான தெலுங்கு சினிமாப் பாட்டு ‘‘ஒஸ்தாடே, மனபாவா’’, என்றதின் ராகத்தில் அமைந்திருந்தது. இந்தப் பாடல் காட்சி வண்ணமாக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தோடு தன் முகாமை முடித்துக்கொண்டு கோல்டன் டூரிங்கு டாக்கிஸ் சங்ககிரிக்கு போனதும் ஆப்பரேட்டர் அல்லா பிச்சையின் தொடர்பும் எங்களை விட்டுப் போய்விட்டது. துணியாலான கூடாம் தான் டெண்ட். துணி கூடார தியேட்டர்கள் மறைந்து போய், சென்னை ஓலைக்கீற்று வேய்ந்த கொட்டைககள் வந்ததும் ஜனங்கள் அவற்றைய ஜம்டெண்ட் என்ற வார்த்தையாலேயே அழைத்து வந்தனர். இன்றைக்கும் படித்தவர்கள் கூட தம் நினைவிலுள்ள ஓலைக்கீற்று வேய்ந்த தியேட்டரை டெண்ட் என்று தான் குறிப்பிடுகிறார்கள்!

(தொடரும்)தொடர் 1: 

புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்தொடர் 2: 

தொடர் 2: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்தொடர் 3: 

தொடர் 3: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
தொடர் 4: 

தொடர் 4: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்தொடர் 5: 

தொடர் 5: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்தொடர் 6: 

தொடர் 6: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்தொடர் 7: 

தொடர் 7: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்