கந்தர் ஃபிலிம்சும், மாடர்ன் தியேட்டர்ஸும்
யுத்தம் ஓய்ந்த பின்னும்கூட அதன் விளைவாய் ஏற்பட்ட பஞ்சம் ஓயவில்லை. சர்க்கார் யுத்தம் முடிந்த பின்னும் WAR FUND எனும் யுத்த உதவி நிதி வசூலை நிறுத்திவிடவில்லை. வருவாய்த்துறையின் பொறுப்பில் யுத்த நிதி வசூல் சம்பந்தப்பட்டபோது துறையினர் நாடகம், இசைக்கச்சேரிகளை ஏற்பாடு செய்து கட்டண, அன்பளிப்பு வசூலை கலெக்டரிடம் அனுப்புவதாயிருந்தது. திருச்செங்கோட்டில் ஒரு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு நடந்தது.
காளி N. ரத்தினம் குழுவினரின் நாடகம் உறுதிசெய்யப்பட்டது. வருவாயத்துறையில் மூத்த ஊழியரான அப்பா நாடக வசூலை வாங்கி தாசில்தாரிடம் அளிக்க, அதை அவர் கலெக்டரிடம் சேர்க்க டிரெஷரியில் கட்டுவார். குறிப்பிட்ட நாளன்று காளி N.ரத்தினம், C.T.ராஜகாந்தம், ஏழுமலை மற்றும் சிலரைக் கொண்ட நாடகக்குழு ஊருக்கு வந்து முசாபரி பங்களாவில் தங்கியது. வருவாய்த்துறையினர் ஜமாபத்திமுசுவோடு திருச்செங்கோடு, சங்ககிரி, இடைப்பாடி, ஜலகண்டாபுரம், பூலாம்பட்டி, மல்லசமுத்திரம்ஆகியஇடங்களில்சுற்றிசிறப்புஅனுமதிடிக்கெட்டுகளைதலையில்கட்டி, பெரிய இடங்களில் டொனேஷன் பெற்று வந்தனர். காளி N.ரத்தினம் குழுவின் நகைச்சுவையைத் திரையில் கண்டு மயங்கிக்கிடப்போர் கிராமங்களிலிருந்து வண்டிகட்டிக் கொண்டு திருச்செங்கோட்டுக்கு வந்திருந்தார்கள். அவரை ராஜகாந்தம், ஏழுமணியோடு நேரில் பார்ப்பதற்கு கூட்டம் திரண்டிருந்தது. “உத்தமி” என்ற நாடகம் நடக்கவிருந்தது.
உத்தமி என்ற புகழ்பெற்ற திரைப்படம் காளி N.ரத்தினம், ராஜகாந்தம் ஜோடியின் உயரிய நகைச்சுவையோடு ஓடியிருந்தது. உத்தமி நாடகம் பல கோணங்களில் திரைப்படத்திலிருந்து விலகியும் வேறுபட்டுமிருந்ததோடு, அந்நிய ஆட்சியின் கொடுமை, சுரண்டல், சுதேசிகளின் விடுதலைப் போராட்டம், காந்தி, கதர் என்பவை இலை மறைவு காய்மறைவு அம்சங்களாய் கொண்டிருந்தது. உத்தமி திரைப்படத்தில் இவையெதுவுமில்லை. படத்தில் கதையம்சம்
சிறப்பாக இருக்கும்.

ஓர் உத்தம இளம்பெண் அநியாயமாய் அவிசாரிப்பட்டம் பெற்றதால், வீட்டைவிட்டு ஓடிப்போய் ஆதரவு தரும் ஒரு வீட்டில் ஒளிந்து வாழ்கிறாள். அவளை எல்லோரும் தேடுகின்றனர். கணவனுக்கு மட்டும் சந்தேகம் தீர்வதில்லை. ஒரு வக்கீலும் தேடுகிறார். இதனிடையில் வேலை கிடைக்காத ஒருவன் புடலங்காய்த் திருடி போலீசிடம் சிக்கி, தான் வேலையில்லாததால்தான் சின்னஞ்சிறு களவுகளை செய்வதாக போலீசில் சொல்ல, போலீஸ் அதிகாரி அவனைப் போலீசில் சேர்த்துக் கொள்ளுகிறார். [அண்ணனுக்கு போலீசில் சேருவதற்கு எந்த தேர்வுமில்லை!] போலீஸ்காரன் [காளி N. ரத்தினம்] யதேச்சையாக காணாமல் போன உத்தமியைப்
பார்த்து சொல்லிவிட, வக்கீலின் உதவியோடு கோர்ட் மூலம் அவள் அபாண்டமாக பழிசுமத்தப்பட்டவள் என்பதுருசுபடுத்தப்பட்டு கணவன் ஏற்றுக்கொள்ள, புடலங்காய் திருடிமாட்டிக் கொண்டு போலீஸ்கார வேலையில் சேர்ந்தவன். இந்த கேஸைக் கண்டுபிடித்ததால் ஹெட் கான்ஸ்டபுள் [ஏட்டு] பதவி உயர்வு பெறுகிறான். இதில் தான் காளி N. ரத்தினம் பாடிய புகழ் பெற்ற பாடல் “போலீசு வேலைக்கு போயேத்தான் ஆகணும், பொடலங்கா பேரை மறக்கணும்” வருகிறது.
உத்தமி நாடகத்துக்கு நல்ல கூட்டம். நாடகம் எங்கு இடம் பெற்றது என்பது எனக்கு நினைவில்லை. ஸ்பெஷல் நாடகங்கள் அனேகமாய் அதற்கென அமைக்கப்பட்ட கீற்றுக் கொட்டகையில் இடம் பெற்றிருக்கலாம். சர்வதேச அளவில் சமகால நவீன தியேட்டர்கள் நிகழ்த்தும் நாடகங்களின்போது முக்கிய நாடகப் பாத்திரங்கள் கிரீன் ரூமிலிருந்து ரகசியமாக மேடைக்கு வராமல், பொதுமக்களாகிய ரசிகர்களோடு கலந்து உறவாடி தொடர்பு கொண்டவராக, ஒப்பனையோடோ, ஒப்பனையின்றியோ, பொது நுழைவுவாயில் வழியாகவே அரங்கத்தில் நுழைந்து ரசிகர்களின் இருக்கைகள் ஊடாக நடந்து வணக்கம் செய்தபடியே மேடையை அடைந்து கிரீன் ரூமை அடைவது ஒரு வகை. இதேவகையில் தான் நாற்பதுகளிலேயே அதைக்கையாண்டவர் தமிழின் சிறந்த நகைச்சுவை நடிகரும் நாடக நடிப்புக்கு ஆசானாக இருந்த வருமான காளி N. ரத்தினம் அவர்கள், காலைவிட்டு இறங்கி வரும் ரத்தினம் நேரே ஒப்பனையறைக்குப் போகாமல் அரங்கில் நுழைந்து ரசிகர்களைப் பார்த்து சிரிப்பும், கரங்கூடப்பல்லுமாய், தலையில் கருப்புக் குல்லா, பட்டு ஜிப்பா வேட்டி, ஜவ்வாது பொட்டுடன் தம்பி சாசுகுரலில், “பட்டாபிராமா என்னை விட்டுடாதே, சொன்னேன், பட்டாபிராமா” என்ற தம் வழக்கமான நாடகக் கொட்டகை தொடக்கபாட்டை பாடினபடி மேடையேறி அனைவருக்கும் வணக்கம் செலுத்திவிட்டு கிரீன் ரூமுக்குள் மறைந்தார். இப்பாட்டை அவர் தம்நாடகங்களின் போதெல்லாம், ஒப்பனைக்கு முன்னால்ரசிகர்களின்இடையில்நடந்தவாறேபாடுவதும்பாடிக் கொண்டே மேடையை அடைவதும் ஒரு தனி மரபாகக் கொண்டிருந்தார்.
இந்திய பண்பாடு, கலை- கலாச்சாரம், மேனாட்டார் வருகையால் பறிபோவதை உத்தமி நாடகத்தில் காளி N.ரத்தினம் ஒரு நிகழ்வின் பாடல் வாயிலாக சொல்லுவார், புடலங்காய் போன்றவற்றை ரத்தினம் வயிற்றுப்பிழைப்புக்காக வேலை எதுவுமில்லாததால் களவாடி மாட்டிக்கொள்ளும்போது அவர் அருமையாய் வளர்த்துப் போற்றிவந்தகட்டுக் குடுமியை பண்ணைக்காரன் வெட்டியெறிந்து விடுகிறான். தன் பண்பாட்டு அடையாளம் என வளர்த்த குடுமியை பறிகொடுத்த ரத்தினம் பாடுகிறார்:
“அரைக் கீரை தைலம் விட்டு
அருமையாய் நான் வளர்த்தேன்
முளைக்கீரை பிடுங்கினாற்போல்
மொட்டை செய்தானே
பாவிகையில் பாதி குடுமி
பறிகொடுத்தேனே.
பறி கொடுத்தேனே – நான்
துடி துடித்தேனே.”
இந்தப் பாட்டுக்கும் காட்சிக்கும்கூட சில காலம் அரசாங்க தடைஏற்பட்டு பிறகு நீக்கப்பட்டது. திருச்செங்கோட்டில் இருக்கையில் தான் மூத்த அக்கா சாந்தாவுக்கு முதல் சினிமா சந்தர்ப்பம் வாய்த்தது. அதற்கு வழிவகுத்தவர் அவளது இசை வாத்தியார் கல்யாணம். கல்யாணம், அந்தக்காலத்தில் அதிகம் அறியப்படாத திரைப்பட இசையமைப்பாளர். அப்பாவின் சினேகிதர். அக்காவுக்கு கர்நாடக இசைப்பயிற்சியை அவர்தான் அளித்தார். தேவக்கோட்டையைச் சேர்ந்த செட்டியார் ஒருவர் கந்தர் ஃபிலம்ஸ் என்ற பெயரில் திரைப்பட நிறுவனம் ஒன்றை தொடங்கியிருப்பதாயும், தமது முதல் படத்துக்கு புது முகங்களை எடுக்க இருப்பதையும், தான் அதன் இசைப்பொறுப்பை ஏற்கயிருப்பதாயும் அப்பாவிடம் சொன்னார். சாந்தாவை அழைத்துக் கொண்டுவரச் சொன்னார். எங்கள் குடும்பமே சேலத்துக்குப் புறப்பட்டுப் போய் ராஜேந்திரா சத்திரத்தில் அறையெடுத்துத் தங்கியது. நகரின் விக்டோரியா மைதானத்தில் புகழ் பெற்ற கிராண்ட் பரசுராம் த்ரீ ரிங்கு சர்க்கஸ் முகாமடித்து ஊரையே கலக்கிக் கொண்டிருந்தது. மும்முறை அப்பா எங்களை சர்க்கசுக்கு அழைத்துப் போனார்.
செட்டியாரும் படத்தின் இயக்குனராகயிருந்த லங்கா சத்தியமும் அக்காவைத் தேர்ந்தெடுத்ததோடு அவளுக்கு நகைச்சுவைக் காட்சியில் வி.எம். ஏழுமலையோடு நடிக்க சிறு பாத்திரத்தையும் தனி நடனம் ஒன்றையும் குரூப்டான்ஸ் ஒன்றிலுமாய் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆயிரம் ரூபாய் முன் பணம் கொடுத்தனர். அந்தப்படம் செண்பகவல்லி, விக்கிரமாதித்தன் கதை. டி.எஸ்.பாலய்யா கதாநாயகன் விக்கிரமாதித்தனாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். வெள்ளைக் கோழியிறகு செருகப்பட்ட தலைப்பாகையோடு வருவார். இரண்டு காதலிகள். ஒருவர் அன்றைய நாளில் சராசரிக்குப் புகழ் பெற்ற எம்.எஸ்.விஜயாள். இன்னொருவர் செட்டியாருக்கு செல்லப் பிராணியான ஏ.என்.பெரிய நாயகி. இவர் அன்றைய தமிழ் சினிமாவுக்கு அறியப்படாதவர். ஆனாலும் விளம்பர சுவரொட்டியில் கன்னத்தோடு புறாவை வைத்துக் கொஞ்சினபடி பல்லைக்காட்டும் இவரது பெரிய முகத்தை ஆசை தீர வெளியிட்டிருந்தார் முதலாளி. ருக்குமணி கல்யாணம் முதலாக நிறைய படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் எம்.எஸ்.விஜயாள், மோகினி ருக்குமாங்கதா எனும் படத்தில் ஜி.என். பாலசுப்பிரமணியனோடு நடித்தவர் செண்பகவல்லி மாடர்ன் தியேட்டர்ஸில் படமாக்கப்பட்டது.
சேலம் செர்ரி ரோடில் வின்சென்ட் பானம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு எதிரில் ஒரு தெரு. அதிலிருந்த பழைய பங்களா ஒன்றை வாடகைக்கு எடுத்து செண்பகவல்லி படத்தின் நடிக நடிகைகள் அனைவரும் தங்கிக் கொள்ள இடவசதி செய்து தந்திருந்தனர். ஆலப்பாக்கம் செந்தில் என்ற குள்ளமான சமையல்காரரை டைரக்டர் ஒரே நாளில் நகைச்சுவை நடிகராக்கி விட்டார். ஏழுமலையோடு நகைச்சுவை ஜோடியாக இருவர் நடித்தனர். ஒருவர் என் அக்கா சாந்தா, மற்றொருவர் அம்புஜம்மாள் என்பவர். இவரது வளர்ப்பு மகள் லட்சுமி என்பர் குரூப் டான் சிலிருந்தார். அந்த குரூப் டான்சுக்கு லீட் டான்சராயிருந்தவரும் அக்கா சாந்தாதான். அக்கா அம்பு ஜம்மாள் லட்சுமி மூவரும் ஓர் அறையிலிருந்தனர். செண்பகவல்லி வெளிவருவதற்கு முன் நாங்கள் இடைப்பாடிக்கு வந்துவிட்டோம். இடைப்பாடி டவுனில் செக் குமேட்டருகில் அன்றைய சப்ரிஜிஸ்டார் அலுவலகத்துக்கு எதிரில் குடியிருந்தோம். இடைப்பாடி டவுனையும் நைனாம்பட்டியையும் பிரித்தபடி ஓடும் குரங்காற்றில், ஊரில் அதிகளவு இருந்த பத்தர்கள் பக்தர்கள் என்றும் சொல்லிக் கொள்ளுபவர்கள் மீன் பிடிப்பார்கள். நாங்கள் குளிப்போம். நைனாம்பட்டியில் ஏழை முஸ்லீம்கள் நிறைந்திருப்பார்கள். பெரும்பாலும் குதிரை வண்டிக்காரர்கள், பித்தளைப் பாத்திரங்களுக்கு ஈயம் பூசுபவர்கள், குதிரை மாடுகளுக்கு லாடமடிப்பவர்கள், கத்தி கபடாவுக்கு சாணை பிடிப்பவர்கள், சைக்கிள், வாட்ச் பழுது பார்ப்பவர்கள் எனும் தொழிலாளரும், பெண்கள் பீடி சுற்றிப் பிழைப்பவர்களுமாய் நிறைந்த முஸ்லீம் சேரிகள் அவை. பட்டு ஜவுளி, மளிகை, தங்கம், வெள்ளி ஷராப் கடை வியாபாரிகளாய் வசதி மிக்க முஸ்லீம்கள் இடைப்பாடி டவுனுக்குள் இருப்பார்கள். மசூதியும் டவுனுக்குள்ளிருக்கும். இடைப்பாடியில் இரண்டு டூரிங்கு டெண்ட் சினிமா தியேட்டர்கள் இருந்தன. டவுனுக்குள் தீபம் டூரிங்கு டாக்கீஸ். நைனாம்பட்டியில் சங்கர் டூரிங்கு டாக்கீஸ். சங்கர் டூரிங்கு டாக்கீஸை ‘‘ஹரிகரய்யர் கொட்டகை’’, என்றழைப்பார்கள். அதன் உரிமையாளர்தான் பாலக்காடு ஹரிகரய்யர் அப்பாவுக்கு நன்கு தெரிந்தவர்.
தீபம் டூரிங்கு டாக்கீசன் கூடார கான்வாஸ் துணி நாங்கள் அதுவரை பார்த்திருக்கும் வகையில் வெள்ளையாக இல்லாமல் பழுப்பு நிற கான்வாஸாலானதாயிருந்தது. பிறகு சர்க்கஸ் கூடாரங்களும் பழுப்பு நிற கான்வாசிலேயே அமைக்கப்பட்டன. செண்பகவல்லி தீபம் டாக்கீசில் திரையிடப்பட்டது. அக்கா நடித்திருந்ததால் இலவச அனுமதியி்ல் இரண்டு தடவை பார்த்தோம். மாடர்ன் தியேட்டர்ஸில் தயாரான மாரியம்மன் சுபத்ரா என்ற படங்களிலும் சாந்தா அக்கா நடனமாடி காமெடியில் கலந்து கொண்டாள். இந்த மூன்று படங்களும் வெற்றியடையவில்லை. அதன் பின் ஜீபிடர் நிறுவனத்தின் படங்களில் முக்கிய நாயகியாய் நடித்த ரேவதியுடன் சேர்ந்து அழகி மற்றும் முயற்சி என்ற படங்களில் நடித்து விட்டு சாந்தா அக்கா கர்னாடகாவின் குப்பி வீரண்ணா நாடகக் கம்பெனியில் சேர்ந்துவிட்டார்.
கன்னட நாடக பிரபலம் சுப்பய்ய நாயுடுவின் மகனும் புகழ் பெற்ற கன்னட சினிமா நடிகருமான லோகேஷ்டன், ‘‘எடையூரு சித்தலிங்கேஸ்வரா’’, என்ற படத்திலும், ராஜ்குமாருடன், ‘‘பக்த சிரியாளா,’’ என்ற படத்திலும் நடித்தார் சாந்தம்மா என்றான சாந்தா. அப்பா இடைப்பாடியிலிருந்து ஓமலூருக்கு பணி மாற்றம் பெற்று போக, நாங்கள் இடைப் பாடியிலேயே இருந்த சமயம்தான் மகாத்மாகாந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை பாதகச் செயலை செய்தது ஒரு இஸ்லாமியர் என்ற தவறான அபாண்டச் செய்தியின் அடிப்படையில் இடைப்பாடி பெரும் இனக் கலவரத்திலாழ்ந்தது. பெரும்பான்மையினர் சிறு பான்மை முஸ்லீம்களுக்கு எதிரான மிகக் கொடூரமான கொலை கொள்ளை தீயிடல் சூறையாடல்களில் இரண்டு மூன்று நாட்களாய் ஈடுபட்டார்கள். இந்தக் கொடூர கோர சம்பவத்தின் காட்சிகளை எனது ‘‘நதிமூலம்’’ நாவலில் கொண்டு வந்திருக்கிறேன். கலவரத்துக்கு முன் ஹரிகரய்யரின் சங்கர் டூரிங்கு டாக்கீசில் மீரா திரையிடப்பட்டிருந்தது. நாங்கள் நைனாம்பட்டிக்குச் சென்று மீராவைப் பார்க்கும் சமயம் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. நாங்கள் இரவுக் காட்சிக்கு கிளம்பின சமயம் மழை கடுமையானது. இடைப்பாடி டவுனுக்கும் நைனாம்பட்டிக்கும் இடையில் ஓடும் குரங்காற்றின் மீது அப்போது தாழ்ந்த நிலையில் ஒரு பாலமிருந்தது. மழையின்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தால் பாலம் நீரில் அமிழ்ந்து விடும். நாங்கள் பாலத்தைக் கடக்கையில் வெள்ளம் வந்துவிட்டது. மழை ஒரு பக்கம், வெள்ளம் ஒரு பக்கம்.
பாலத்தின் இரு பக்கமும் இரும்புத் தண்டவாளங்களை நட்டு சங்கிரியால் இணைத்து பாதுகாப்புக்கு அமைத்திருப்பார்கள். அந்தச் சங்கிலியைப் பிடித்துக் கொண்டும் ஒரு வருக்கொருவர் கையைப் பிடித்துக் கொண்டும் ஒருவருக்கொருவர் கையைப் பிடித்துக் கொண்டும் சினிமா ஆசையில், தொப்பமாய் நனைந்து மழைநீர் சொட்டச் சொட்ட, காச் மூச் சென்று கத்திக் கொண்டு மீராவைப் பார்க்க போகிறோம். கடைசி பயமாயிருந்த மின்சார வெட்டும் நிகழவில்லை. ஹரிகரய்யர் ஏதேதோ துணிகளை கொண்டு வந்து தலையைத் துவட்டிக் கொள்ள வைத்து சூடாக தேநீரும் வழங்கினார். இந்திய சினிமாவில் பக்திப் படங்களாய் நான் பெரிதும் ரசித்துப் போற்றுபவை இரண்டு. ஒன்று தண்டபாணி தேசிகர் நடித்த ஜெமினியின் நந்தனார். இன்னொன்று எம்.எஸ். சுப்புலட்சுமி நடித்த மீரா. 1948ல் தீபம் டூரிங்கு டாக்கீஸில் ஒரு படம் பார்த்தோம். ‘‘மதனமாலா’’. கத்திச் சண்டைப் படம் ராம், ரஜினி, எம்.வி. மணி மற்றும் பி.பி.ரங்காச்சாரி நடித்த படம். எம்.வி. மணி வேறு சில பிரபல படங்களிலும் வில்லனாக நடித்தவர். பி.யூ.சின்னப்பா நடித்த புகழ் பெற்ற படமான ஜெகதல பிரதாபனில் சின்னப்பாவுக்கு சேவைக்கார வேலை தந்து டி.எஸ். பாலய்யாவின் திட்டப்படி சேவைக்காரரின் அழகிய மனைவியை அடித்துக் கொண்டு போக முயற்சிக்கும் வில்லத்தனமான அரசனாக நன்கு செய்திருக்கிறார். மதனமாலாவைப் பொறுத்து ஒரு சுவாரசியமான தகவலுண்டு.
தர்மபுரியில் பஸ் ஸ்டாண்டுக்கு வெளியில் அந்த காலத்தில் சீனிவாசா கேப் என்ற ஓட்டல் இருந்தது. மிக நல்ல ஓட்டல். நாங்கள் அவ்வூரிலிருந்த சமயம் சிற்றுண்டி பார்சல் செய்து கொண்டு வருவோம். அதன் உரிமையாளர் சீனிவாச ஐயர் சினிமாவும் எடுக்க பண முதலீடு செய்தவர். அவரது பண முதலீட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் மதனமாலா. இந்த சீனிவாச ஐயர், பிறகு தர்மபுரிக்கும் அருகிலுள்ள மொரப்பூரிக்குமிடையே ஒரு பஸ் போக்குவரத்தை ஏற்படுத்தி நடத்தினார். பிறகு தர்மபுரியை விட்டு நீங்கி மேட்டூர் அணைக்குச் சென்றவர் மேட்டூர் கெமிகல்ஸ் தொழிற்சாலையில் சிற்றுண்டி காண்டீனையும், மேட்டூர் அணைக்கும், மலை மீதுள்ள சேலம் காம்புக்கும் டவுன் பஸ்ஸும் விட்டார். இவர், சேலம் அத்வைத மடம் சாலையிலுள்ள- பாரதி புத்தகாலயத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற பாலம் புத்தக நிலையத்தின் நிர்வாகியான திரு. சகஸ்ர நாமத்தின் சொந்த தாத்தாவானவர். இத்தகவல் திரு சகஸ்ரநாமம் பேச்சு வாக்கில் தந்தது.
பின்னாளில் 50-களில் நடிகர் ராம் மதனமாலாவின் கதையை சற்று மாற்றி வைஜயந்தி மாலா, பி.எஸ்.வீரப்பா நடிக்க, மர்ம வீரன் என்று படம் தயாரித்து நடித்தார்.
(தொடரும்).
முந்தைய தொடர்களை படிக்க கிளிக் செய்க:
புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் (முன்னுரை) – விட்டல்ராவ்
தொடர் 2: பயாஸ்கோப்காரன் (கபிலர் மலையும் அரிச்சந்திரனும்) – விட்டல்ராவ்
தொடர் 3: பயாஸ்கோப்காரன் (போரும் சினிமாவும்)– விட்டல்ராவ்
தொடர் 4: பயாஸ்கோப்காரன் (மினி பயாஸ் கோப்) – விட்டல்ராவ்
தொடர் 5: பயாஸ்கோப்காரன் (சில தெலுங்குப் படங்கள்) – விட்டல்ராவ்
தொடர் 6: பயாஸ்கோப்காரன் (ரிபப்ளிக் சீரியல் படங்களும், தமிழ் சண்டைப் படங்களும்) – விட்டல்ராவ்
தொடர் 7: பயாஸ்கோப்காரன் (கூடார வகை தியேட்டர்கள்) – விட்டல்ராவ்
தொடர் 8: பயாஸ்கோப்காரன் (கூடார தியேட்டர்கள்) – விட்டல்ராவ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.