முன்னுரை
இத்தொடரில் எனது தமிழ் சினிமா, இந்திய சினிமா மற்றும் சர்வதேச சினிமாக்கள் பார்த்த அனுபவங்களை வரலாற்றுப் பின்னணி, ரசனை, விமர்சனத்தோடு எழுதுகிறேன். அன்றைய காலப் பின்னணியில் சினிமா சூழலை, பாமர சினிமா ரசனையை எதிர் வினையை, சினிமாவோடு அவர்கள் ஒன்றிப் போனதையெல்லாம் சொல்ல முயல்கிறேன். இன்றைக்கு எனக்கான சர்வதேச திரைப் படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்த்து ரசித்து ஒன்றிப் போன ஒரு ரசனை மனோபாவம்- மன முதிர்ச்சிக்கான அடிக்கல்லாக இரண்டாம் உலகப் போர் காலம் தொடங்கி பார்த்த சினிமா அனுபவம் எங்ஙனம் படிப்படியாக ஒரு ரசனை வளர்ச்சிக்கு என்னை இட்டுச் சென்றது என்பதை சொல்லிப் போகும் தருணத்தில் அவற்றை வாசகரோடு பகிர்ந்து கொண்டவனாக ஓர் எதிர்பார்ப்போடு எழுதுகிறேன். நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வீணானதில்லை. இதில் நான் பேசப் போகும் திரைப்படங்களும், சூழலும் காலமும் இடமும் என் அனுபவபூர்வமானவை.
1. நான்கு வயதில் பார்த்த கண்ணகி.
மிராசுதார் யக்ஞநாராயணய்யரின் இரட்டை மாட்டுவில் வண்டி ஊருக்குள் வருகிறது எனும்போது பரமத்தியின் விழிப்பில் தீவிரமிக்க ஆர்வம் கூடிய கூர்மை சேர்ந்து.
யார் வீட்டுக்கு வருகிறார் மிராசு?
வண்டி மரவுபாளையம் சாலையைக் குறுக்காகக் கடந்து ரெவின்யூ இலாகா ஊழியர் குடியிருப்புக்குள் நுழைந்து குவார்டர்சின் முதல் வரிசையில் முதல் வீட்டுக்கு முன்னால் நிற்கிறது. போலீஸ் லைன் கணக்கில் ஒரே வரிசையாகக் கட்டப்பட்ட அரசு ஊழியர் குடியிருப்பு மனைகளிலிருந்து மனிதர்கள் வெளியில் வந்து பார்க்கிறார்கள். ‘‘ராயர் வீட்டுக்கு’’, என்றாள் சிரஸ்ததாரின் மனைவி. ராயர் எனப்படும் எங்கள் வீட்டுக்கு முன்னால் வில்வண்டி நிற்கவும் என் மூத்த அக்கா சாந்தா வெளியில் வந்தாள். பளிச் சென்ற முகமும் நிறமும் எடுப்பான உடல் வாகோடு பார்த்தவர்களை சற்று தடுமாற விடும் தோற்றம். இசையும் நாட்டயமும் பயின்றவள். ஒரேயொரு குறை அல்லது நிறை என்னைப் போலவே அவளுக்கும் பூனைக் கண்கள். இதன் காரணமாய் அவள் முதன் முதலாக ஒரு தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கவோ, ஆடவோ தேர்வுக்குப் போனபோது பட முதலாளி காவன்னா லவன்னா இராமநாதன் செட்டியார்,’’இதென்ன இந்தப் பொண்ணுக்கு கருடன் பார்வை’’ என்று கூறி வேண்டாமென நிராகரித்தார்.
யுத்தம் தீவிரமடைந்திருந்த நிலையில், கிளாக்ஸோ பிஸ்கோத்துகள் இங்கிலாந்திலிருந்து வருகிற படியால் எளிதில் கிடைக்கவில்லை. ஆனால் சிறு சிறு ஜெம் பிஸ்கட்டுகள் கிடைத்ததால் ஒரு பவுண்டு வாங்கி வைத்திருந்தது நல்லதாய்ப் போயிற்று. மிராசுதார் தம் வண்டியை விட்டு இறங்காமல் வண்டிக்காரனை மட்டும் அனுப்பினார். ‘‘தொரையவுங்க வந்திருக்காங்க, வர்லாமானு கேட்டு வரச் சொன்னாரு’’ என்றார் வண்டியோட்டி.
தாராளமா… தாராளமா என்றார் அப்பா. வீட்டிலிருந்த ஒரே மர நாற்காலி கொஞ்சம் ஆடக்கூடியது. காகித அட்டைத் துண்டு ஒன்றை ஒரு காலுக்கடியில் செருகி ஆட்டத்தைக் குறைத்திருந்தான் அண்ணா ராமு. பெரிய பெட்ஷீட்டை எட்டாய் மடித்து அதன் மீது போட்டிருந்தாள் சாந்தா. மிராசுதாருக்கு இந்த ஏழை குமாஸ்தாவின் வீட்டுக்குள் நுழைவதென்பதும் அந்த நாற்காலியில் அமர்வதென்பதும் பாடாய்போயிருக்கும். ஜெம் பிஸ்க்கோத்தைத் தொடாமல் தேநீரை மட்டும் திணறிப் போய் குடித்து முடித்தார். பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்,ராயர் சார், சொல்லிக் கொண்டே அப்பாவின் முகத்தைப் பார்க்காமல் அழைப்பிதழை அட்சதையோடு நீட்டிய பிறகு பணிவோடு வேண்டிக் கொண்டார். ‘‘வார் டைம், பிளாக் மார்கெட்லகூட சக்கரை கொஞ்சந்தான் கிடைச்சது. ஒரு மூட்டை கிடைச்சா சமாளிப்பேன். நீங்கதான் பர்மிட் கிளார்குனு சொன்னா. நீங்க கலெக்டருக்கு சிபாரிசு பண்ணியனுப்பினா சாங்ஷனாகும்னா. எம்பொண்ணு கல்யாணம் தித்திக்கணும்னா, ஒங்கா ஒத்தாசை தேவை.’’

‘அவசியம் பண்றேன்’’, என்றார் அப்பா.‘கல்யாணத்துக்கு குடும்பத்தோட வந்து பொண்ண ஆசீர்வதிக்கணும். காவேரிகரைக்கு வந்துட்டா, நம்ம பரிசல் இருக்கு. அந்தண்டைகரையில் நம்ம வண்டி நிக்கும். இந்த வண்டிக்காரனை அனுப்பறேன் என்றார் மிராசுதார். வண்டி புறப்பட்டுப்போனது. அழைப்பிதழைப் பார்த்துவிட்டு அக்கா கத்தினாள்.‘அப்பா, டைரக்டர் ஆர்.எஸ்.மணியோட மகன் தான் மாப்பிள்ளை. சக்கரை சாங்சன் பண்ணுப்பா’’
கல்யாணம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு சிறப்பு அனுமதியுடன் சர்க்கரை பெறுவதற்கு அன்றைய ஆங்கில அரசு வகை செய்திருந்தது. பர்மிட்டுக்கான விண்ணப்பத்தை பெறுவதும் சிபாரிசு செய்து கலெக்டருக்கு அநுப்புவதும் பர்மிட் குமாஸ்தாவின் சாமர்த்தியம்.
‘ரெண்டு மூட்டைக்கு சிபாரிசு பண்ணியிருககேன் போதுமா?’’ என்றார் அப்பா. சினிமா பைத்தியமும், சினிமாவில் நடிக்க, நடனமாடத் துடிக்கும் மூத்த மகள் சாந்தாவின் ரசனையும், ஆசையுமெல்லாம் எங்கள் யாவருக்கும் பொதுவானது. எனவே அவள் பொருட்டு குடும்பத்தோடு பல்வேறு ஊர்களில் நாங்கள் கண்டு களித்த ஏராளமான தமிழ், தெலுங்கு திரைப்படங்களும் அவை தொடர்பான அனுபவங்களும் சுவையானவை. அன்றைக்கு பரமத்தி வேலூரையும் பகலூரையும் இணைக்கும்படியாய் காவேரிக்கு குறுக்கே பாலம் கட்டப்பட்டிருக்கவில்லை. பரிசல்கள் மூலம்தான் ஆற்றைக் கடந்து புல்லூரையடைய வேண்டும். புகலூரில் பாரி நிறுவனத்தின் பெரிய சர்க்கரை ஆலை இருந்ததால் வேலூரை விட முக்கியத்துவம் கொண்டிருந்தது. அன்றைக்கு மின்சார வசதி அமைக்கப்படாத தமிழக ஊர்களில் பரமத்தியும் ஒன்று . பரமத்தியில் சினிமா கொட்டகையில்லை. புகலூரில் துணி கூடார சினிமா டூரிங் டாக்கீஸ் இருந்தது. அதிகாலை ஐந்து மணிக்கு திருச்சி போகும் முதல் பஸ், இராமஜெயம்.
இராமஜெயம் சேலம் வழியே பெங்களூர் வரை போகும் பஸ் சேவையும் செய்தது.இந்த பஸ் கம்பெனியின் தலைமையிடம் நாமக்கல், நாமக்கல்லில் அவர்கள் இராமஜெயம் என்ற பெயரில் ஒரு சினிமா தியேட்டரும் கட்டி படங்களைத்திரையிட்டு வந்தனர். இராமஜெயம் எங்களை வேலூரில் இறக்கிவிட்டது. காவேரிக் கரையை அடையவும், ‘சார் இப்பிடி வாங்க’’ என்று அழைத்து மிராசுதாரின் வண்டிக்காரர் பரிசலில் சுழன்று காவேரியில் நகர்ந்து போனது. தண்ணீரின் விளிம்பு பரிசலுக்கு நெருங்கியே இருந்ததால் எல்லோருமே பயந்தோம். ‘அவ்வளோ ஓரமா போவாதீங்க, பசங்களா, மையத்துக்கு வாங்க. குனிஞ்சி தண்ணிய மொள்ளாதேம்மா’’, என்று கத்திக் கொண்டே பரிசலோட்டி ஒரு வழியாக பரிசலை புகலூரின் கரையைத் தொட வைத்தார். வண்டிக்காரர் முதலில் தண்ணீரில் குதித்து பரிசலோட்டியின் துணையோடு எங்களை ஒவ்வொருவராக இறக்கி கரை சேர்க்க வண்டியிலேறி மிராசின் வீட்டையடைந்தோம் ஊரில் எதுவுமில்லை. மிராசின் இரண்டு மூன்று வீடுகளில் ஒன்றில் கல்யாண ஏற்பாடு. கல்யாண மாப்பிள்ளை மதறாஸ்காரர். அவரது தந்தை அப்போதே புகழுக்கு வந்து கொண்டிருந்த சினிமாப் பட இயக்குனர் ஆர்.எஸ். மணியாவார். திருமண அழைப்பிதழில் அந்த விவரத்தைப் பார்த்துவிட்டுத்தான் சாந்தா கத்தினாள். நாங்கள் சென்றவுடனே வரவேற்ற மிராசுதார் அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நெகிழ்வோடு சொன்னார்.
ஒரு மூட்டை எதிர்பார்த்தேன். ரெண்டு மூட்டையா சாங்சன் பண்ண வச்சுட்டேன். ரொம்ப ரொம்ப தாங்ஸ். அன்றைய மாதம் ஜூபிடரின் புகழ் பெற்ற திரைப்படம் கண்ணகி பெரிய நகரங்களில் திரையிடப்பட்டிருந்தது. மகன் கல்யாணத்தை முன்னிட்டு கண்ணகியை டைரக்ட் செய்திருந்த இயக்குனர் ஆர்.எஸ். மணி தம் ஏற்பாட்டிரல் புகலூரில் இரு நாட்களுக்கு திரையிடச் செய்தார். துணியாலான கூடார தியேட்டரில் (TENT) கண்ணகி திரையிடப்பட்ட அன்று கூட்டம் மாளாது எங்களுக்கு முதல் வகுப்பு இலவச பாஸ் தந்து படம் பார்த்தோம். நல்ல மழை. மழை வந்தால் கூடார வகை திரையரங்கில், கூடார துணியாலான மேற்கூரையின் அகன்ற இடுக்குகளின் வழியே தாராளமாக மழை பெய்யும். ஜனங்கள் அந்த இடுக்குகளின் நேர்கீழே உட்கார்ந்திருந்தால் முழுக்கவே நனைய வேண்டியிருக்குமாதாலால், வேறு இடமாய்ப் பார்த்து ஒதுங்குவார்கள். மேய்ச்சலின்போது மழை பெய்தால் ஆடுகள் மரத்தடியில் ஒன்றையொன்று நெருக்கி நின்று ஒதுங்குவதுபோல உட்காருவார்கள். அனேகமாய் மின்சாரம் துண்டிக்கப்படும். எல்லா டிக்கட்டுகளிலும் இனிஷியல் போட்டு, நாளைக்கு வாருங்கள் என்று கூறியனுப்புவார்கள். மறுநாள் அதைக் காட்டி இலவசமாய் படம் பார்ப்பார்கள்.ஆனால் அன்று அப்படி எதுவும் ஏற்படவில்லை. மழை நின்றுவிட்டது. கண்ணகியைப் பார்த்து முடித்து மறுநாள் பரிசலில் ஏறிகாவேரியைக் கடந்து ஊர் திரும்பினோம்.

அன்று அப்படத்தைப் பார்த்த எனக்கு அதே கண்ணகியைப் புதிய பதிப்பில் ஐம்பதுகளின் சேலத்து பாரத் தியேட்டரில் திரையிடப்பட்ட நூற்றுக் கணக்கான அதரப் பழைய திரைப்படங்களில் ஒன்றாகப் பார்க்க நேரிட்டது. என் நான்கு வயதில் அதைப் பார்த்து நினைவில் தேங்கி நின்ற அதன் காட்சிகளை நினைவுப்படுத்திக் கொள்ளுவதின் மூலம் மனித ஞாபக சக்தித் திறனையும் எண்ணிப் பார்த்தேன். ஒரு கோர உருவில் மனிதன் ஒருவன் மாசாத்து வனிடம் கனியொன்றைத் தந்து அவன் மனைவி அதை உண்டால் அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கும். அவள் கண்ணகி, இளம் வயது கண்ணகியும் கோவலனும் வளர்க்கோட்டு இளம் பிறையில், என்ற அற்புத பாட்டொன்றை அரிய ராகத்தில் பாடுவதும் நினைவில் நின்றவை. அன்றைக் காலக் கட்டத்தில் சினிமா தொடங்கியபோது பக்திப் படங்களே அதிகம் வேண்டப்பட்டன. மூட நம்பிக்கைகளும் அதீத பக்தியுமில்லாது இங்கே சூரியன் உதித்த தாயோ அஸ்தமனமானதாயோ நிகழ்வில்லை. எனவே இளங்கோவடிகளையும் அவர் காலத்திலில்லாத பக்திவிதமான சரக்காய் சிலப்பதிகாரத்தை சற்றே மாற்றி கண்ணகியை எழுதியிருந்தார்.
அதன் திரைக்கதை வசன கர்த்தாவான இளங்கோவன். கலைஞர் கருணாதிக்கு முன் புகழ்பெற்ற வசனகர்த்தா இளங்கோவன், சிவனுக்கும், பார்வதிக்கும் ஏற்பட்ட விவாதத்தில், சிவன் பெரிதா, சக்தி பெரிதாவென்ற வாக்குவாதம் முற்றி, சிவ சாபத்தால் பூமியில் வணிகர் குடும்பத்தில் கண்ணகியாய் பார்வதி பிறவியெடுத்து கோவலன் மனைவியாய் வாழாது, வாழ்வதாய், கோவலன் விதிவசத்தால் மாதவியோடு வாழ்வதாய் இளங்கோவடிகளை மாற்றிச் சொல்லுகிறார் இளங்கோவன். கண்ணகி சினிமாவைப் பொருத்தளவு சிலப்பதிகாரத்தில் புராண பக்தியைக் காலத்தின் கட்டாயமாகப் புகுத்திய திரைக்கதை வசனகர்த்தா இளங்கோவன், கோவன் (பி.யு.சின்னப்பா) நெருங்கும்போது கண்ணகி (கண்ணாம்பா) உடலுறவுக்கு ஒத்துழைக்காது, உடலுறவையே ஓர் ஒவ்வாமையோடு வெறுத்தொதுக்கும் மனநிலை கொண்டவள்போல் காட்டுகிறார். ஃப்ராய்டின் செக்ஸ் ரீதியாக மன இறுக்கமுள்ள (sex rigidity) பெண்ணாக கண்ணகியைக் காட்டி, கோவலன் மாதவியுடன் கூடிப் புணர்வதை நியாயப்படுத்தும் விதமாயும் இளங்கோவனின் சிலப்பதிகாரக் கண்ணகி அமைந்தது. இன்னும், ஈழத் தமிழ் எழுத்தாளர்களில் நவீன சிந்தனையும், எள்ளல் திறனும் கொண்ட அளவெட்டி, சிறீசுக்கந்த ராசாவின், சிறீசுவின் சில சிறுகதைகள், எனும் கதைத் தொகுதியிலுள்ள சிதைப்பதிகாரம் புதிது. என்ற எள்ளல் கதையும் மேற்சொன்னதையே மேலும் பயங்கரமாய் காட்டுகிறது. மீண்டும் நினைவுகள் நாலு வயதுக்கு திரும்புகிறது.
சின்னப்பாவின் தலை கண்ணகியோடு பேசுகையில் நான் பயந்தேன். இதையெல்லாம் ஒரு நாள் என் அம்மாவிடம் கூறுகையில், அவள் ஆச்சரியத்தோடு வேறே என்ன கண்ணகி படத்திலே ஞாபகமிருக்கு கேட்டாள். மதுரையை எரித்தவுடந் திடுக்கிட்டு கண்ணகி நான் யார் என்று கேட்கவும், சற்று மெல்லிய குரலில், சக்தி, சக்தி, நீதான் சக்தி என்று சிவன் (எஸ்.வி.சகஸ்ரநாமம்) சொல்லுவது நினைவுக்கு வருவதாயும், வஞ்சிப் பத்தனின் எம்.ஆர். சுவாமிநாதன் பைத்தியம் பிடித்த பெண் (மதுரம்) அவளை மணக்கும் இஞ்சிப் பத்தன் (என்.எஸ். கிருஷ்ணன்) காமெடியை நினைவுப்படுத்திக் கொண்டு சொல்லவும் அம்மா என்னையே பார்த்தாள். ஒனக்கு அப்போ நாலு வயசு முடியற நேரம், என்றாள் அம்மா. கண்ணகிதான் என் நினைவின் நிற்கும்படியான நான் பார்த்த முதல் திரைப்படம். இதிலிருந்து எனது சினிமா ரசனை யனுபவத்துக்கான பயணம் தொடருகிறது.
ஆரம்பமே அமர்க்களம். மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கும் துவக்கம் .