சோவியத்- ரஷ்ய சினிமா- 5
ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கி (Andrei Tarkovsky)
தனிமனிதனின் புலனுலகை மையப்படுத்திய படைப்புகள் யதார்த்த ரீதியிலான சித்தரிப்புகளாயின, 15-ம் நூற்றாண்டுக்குப் பின் இது மெல்ல வளர்ந்து உரைநடை சிறுகதை நாவல்களில் தத்ரூபமாய் காட்சிப்படுத்திவரும் இப்பாங்கு சினிமாவுக்கும் பொருந்தக் கூடும். கலைப் படைப்புக்கான இத்தகைய போக்கு நவீன காலத்துக்கு முற்பட்ட மரபார்ந்த சித்தரிப்புகளோடு ஒரு தொடர்ச்சியைக் கொண்டது. தனிமனிதத் தன்னுணர்வுக்குத் தக்கவாறு எப்படி படைப்பாளியின் மனம் புற உலகை உள்வாங்குகிறது என்பதைப் பொருத்து கலை வெளிப்பாடு அமைவதை குறிப்பது நவீனத்துவம். உணர்வு நிலைகள்- அகம் சார்ந்து முக்கியத்துவம் பெறும் இந்நிலைப்பாட்டில் புற உலக யதார்த்தம் என்பது இரண்டாம் பட்சம், கற்பனை வெளியென்பது அகத்தின் வெளிப்பாடு, வெறும் புறவெளிச் சித்தரிப்பல்ல என்பது நவீனத்துவமாகிறது. நவீனமும் நவீனத்துவமும் பல சமயங்களில் கலந்து பல்வேறு வெளிப்பாட்டு வடிவங்களை ஏற்படுத்துவதும் உண்டு. SEMI ABSTRACT போன்றவை…
சினிமாவின் ஆச்சார வகைமைக்கு எதிரான வழியில் நுணுக்கமான குறியீட்டுத் தன்மையோடு உருவான திரைப்படங்களை ரஷ்ய நவீனத்துவ திரைப்படக் கலைஞர் ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கி (ANDREI TARKOVSKY) படைத்தார். தார்கோவ்ஸ்கியின் திரைப்படங்கள் சோவியத் சினிமாவின் நிகழ்காலத்தவையா அல்லது கடந்த காலத்தவையா என்ற கேள்வி எழுகையில் மேற்சொன்ன கலைக் கொள்கையின் நவீனத்துவப் போக்கை சுருக்கமாய் காட்டவேண்டியிருந்தது. அதாவது கடந்த காலப் போக்கும் சமகாலப் போக்கும் இணைந்ததாய் – கடந்ததில் வேர் கொண்ட சமகாலப் படைப்புகளாய் அவை அமைந்துள்ளன. உலகின் மிகச் சிறந்த வெகு சில திரைப்பட மேதைகளில் ரஷ்யாவின் ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கி (Andrei Tarkovsky) மிக மிக முக்கிய கலைஞர். IVAN’S CHILDHOOD, ANDREI RUBLEV, MIRROR, SOLAR15, STALKER, NOSTALGHIA, SACRIFICE என்பவை அவரது அற்புத திரைப்படங்கள்.
தார்கோவ்ஸ்கி ஜவ்ராழியே (ZAVRAZHYE) எனும் சோவியத் நகரில் கவிஞர் ஆர்செனி தார்கோவ்ஸ்கியின் மகனாக 1932-ல் பிறந்தார். பள்ளிப் படிப்பின் சமயம் 2-ம் உலக யுத்தம் வெடிக்கவும் தார்கோவ்ஸ்கியும் அவரது சகோதரியும் பாதுகாப்பான இடத்துக்கு இடம் பெயர வேண்டியதாயிற்று. இளம் வயதில் இவ்வாறு லெனின் கிராடிலிருந்து இடம் பெயர்ந்த கசப்பான நினைவை தார்கோவ்ஸ்கி தமது ‘THE MIRROR’ எனும் திரைப்படத்தில் ஓரிடத்தில் கொண்டு வருவார்.
IVAN’S CHILDHOOD, (V.BOGOMOLOV) போகோமோலோவ் என்பவர் எழுதிய ‘IVAN’ என்ற நாவலைத் தழுவி படமாக்கப்பட்டது. தார்கோவ்ஸ்கியின் முதல் முழுநீள கதைத் திரைப்படம், ‘இவானின் குழந்தைப் பருவம்‘ IVANOVO DE TSTVO. IVAN‘S CHILD HOOD) 1962ல் வெளியானது. இரண்டாம் உலகப்போர் பின்னணியிலமைந்த இப்படத்தில் கொடூரமான போர்க் காட்சிகள் எதையுமே தார்கோவ்ஸ்கி காட்டினதில்லை.
ரஷ்யாவின் நகரங்களை ஜெர்மன் ராணுவம் சுற்றி வளைத்து நாசமாக்கிக் கொண்டிருந்த சூழலில் பன்னிரண்டு வயது இவானின் தாய் சுட்டுத் தள்ளப்பட்டு அவர்கள் வீடும் தரைமட்டமாக்கப்பட்ட அழிவில் ஜெர்மன் ராணுவத்தின் மீது இவான் பழி தீர்த்துக் கொள்ளும் துடிப்பில் இருக்கிறான். இவான் பகலிலும் தூங்குவான், தூக்கத்தில் அவன் காணும் கனவு வழியே தொடங்கும் படம் இறுதியில் ஒரு கனவுக் காட்சியோடு முடிவுறுகிறது. இங்கு தாய் சுடப்பட்டு விழுவதும், வீடு குண்டு வீச்சில் அழிவதும் இவானின் முதல் கனவு வழியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பன்னிரண்டு வயது சோவியத் ஒற்றனாக இவான் மிகவும் ஆபத்தான நிலையில் எதிரிகள் பகுதியில் துணிவோடு நடமாடி செய்திகளை உளவு பார்த்துக் கொண்டு வருகிறான்.
ஜெர்மன் ராணுவத்தில் அவ்வப்போது நாச வேலையும் புரிகிறான். சிறுவன் என்பதால் எதிரிகளுக்கு இவனது நடமாட்டத்தின்பேரில் சந்தேகம் வருவதில்லை. சிறுவனுக்கு தேசபக்தி என்பதைவிட வஞ்சம் தீ்ர்த்துக் கொள்ளும் மனோ உறுதியே தெரிகிறது. இவானை இராணுவ அகாதெமியில் சேர்க்கவேண்டும் என பரிந்துரைக்கப்படுவதை இவான் எதிர்க்கிறான். அவனுக்கு ராணுவப் படிப்பில் நாட்டமில்லை. எனவே அவனது விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தாமல் அவன் விருப்பப் படியே உளவு பார்க்கும் ஒற்றனாய் எதிரிகளின் பின்னால் நடமாட விடுகின்றனர். இடையில் ரஷ்ய ராணுவ அதிகாரி கோலின் என்பவனுக்கும் ரஷ்ய ராணுவ மருத்துவ நர்ஸ் மாஷா என்பவளுக்குமான காதல் குறும்பு நிகழ்வுகள் மிக்க யதார்த்தமாய் காட்சிப்படுத்தப்படுகின்றன.
ஒரு பள்ளத்தைத் தாண்டுவதில் கைத்தாங்கலாய் மாஷாவை கோலின் அணைத்து தாண்டுகையில் முத்தமிடும் காட்சி புதிய வகை காதல் சித்தரிப்பு. யுத்தம் முடிந்து ஜெர்மனியை ரஷ்யா வெற்றிகொண்டதை ரஷ்ய ராணுவம் கொண்டாடும் காட்சியும், முக்கிய நாஜி உயர் அதிகாரியும் ஹிட்லரின் வலதுகரமுமான கோயபெல்ஸ் மற்றும் அவரது குடும்பம் தற்கொலை செய்துகொண்டு வரிசையாக கிடத்தப்பட்ட உடல்கள் காட்டப்படுகிறது.
கோயபெல்ஸின் உடல் மாத்திரம் அவரது விருப்பப்படி ராணுவத்தால் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப்பட்டு கருகிக் கிடக்கும் காட்சியும் வருகிறது. ரஷ்ய ராணுவ அதிகாரியொருவர் ஜெர்மன் ராணுவத்தின் ரஷ்ய கைதிகளைக் கொண்ட கோப்புகளைப் புரட்டிப் பார்க்கிறார். அதில் ஒரு கோப்பு இவானுக்கானது. இவானின் புகைப்படத்தோடு அவன் ஒற்றனாயிருந்து கண்டுபிடிக்கப்பட்டு ஜெர்மன் ஜெஸ்டபோவினால் தூக்கிலிடப்பட்ட விவரம் இருக்கிறது.
அடுத்து ஒரு கனவுக் காட்சியோடு படம் முடிகிறது. கனவில் இவானும் அவனது சகோதரி – சிறுமியும் ஆப்பிள்கள் நிறைந்த லாரி ஒன்றில் பழங்களின் மேலமர்ந்து சிரித்து ஆடியபடி போகின்றனர். லாரியிலிருந்து ஏராளமான ஆப்பிள் பழங்கள் விழுந்து சிதறி உருண்டோட… குதிரைகள் வந்து ஆப்பிள்களைக் கடித்துச் சாப்பிடுகின்றன. இக்காட்சி மிக்க கவித்துவத்தன்மையோடு படமாக்கப்பட்டுள்ளது. ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கியை ‘சினிமாவின்‘ கவிஞன் என்று புகழப்படுவதுண்டு. அந்தக் கனவில் இவானும் அவன் சகோதரியும் கடற்கரையில் ஓடுவதோடு படம் நிறைவுறுகிறது.
கோல்யா புர்லயேவ் (KOLYA BURLAEV) எனும் ரஷ்ய சிறுவன் இவானாக நடித்து நம்மை கவர்கிறான். இப்படத்தின் அபாரமான கேமரா கோணங்கள் ஒளிப்பதிவாளர் வாடிம் யூசோவ் (VADIM YUSOV) என்பவரால் அமைக்கப்பட்டுள்ளன.
2 – ம் போர் பின்னணியில் சோவியத் ரஷ்யா மேலும் சில சிறப்பான திரைப்படங்களை தயாரித்திருக்கிறது. மார்க் டோன்ஸ்கோ-ன் (MARK DONSKOL) ‘RAINBOW‘ மிகேய்ல் கலாடோஜோவின் (MIKHAIL KALATOZOV) புகழ்பெற்ற (THE CRANES ARE FLYING) கிரிகோரி சுக்ரேயின் (GRIGORI CHUKHARAI) BALLAD OF A SOLDIER என்பவை அவ்வகையானவை. இவையனைத்தும் சென்னை சோவியத் கலாச்சார மைய திரையரங்கில் திரையிடப்பட்டு நான் பார்த்தவை.
தார்கோவ்ஸ்கி, மனித குணாம்சத்தை யுத்தம் சிதைத்துப் போடுவதாயும் பைத்தியமாக்குவதாயும் இவானை கொண்டுபோகிறார். சோவியத் சினிமாவுக்கென்று மற்ற கிழக்கு ஐரோப்பிய சினிமாவுக்கு இல்லாத ஓர் ஆச்சாரத் தன்மை (ORTHODAXISM) இருக்கும். அதன் காரணமாயும் ரஷ்ய திரைப்படங்களில் அதீத நிதான சலனமும் இருக்கும். அதை உடைத்து ஆச்சார சோவியத் சினிமாவுக்கு எதிரானதொரு விஞ்ஞான ரீதியான தத்துவார்த்த தெறிப்புகளோடு திரைப்படங்களைச் செய்தவர் ‘மக்களைத் தேடும் கலைஞன்‘என்று போற்றப்படும் ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கி (Andrei Tarkovsky). ‘இவான்‘ 1962ல் வெனிஸ் திரைப்பட விழாவில் GRAND – PRIX தங்கச் சிங்கம் பரிசு பெற்றது.
ஆந்த்ரே ருப்ளெவ் (ANDREI RUBLEV) என்ற தலைப்பிலான திரைக்கதையொன்றை 1965ல் ஆன்ட்ரே தார்கோவ்ஸ்கியும் ஆன்ட்ரே மிகல்கோவ் கோஞ்சலோவ்ஸ்கியும் ( MIKHALKOVKONCHALOVSKY) இணைந்து எழுதி இஸ்குஸ்ட்வோ கினோ ( ISKUSSTVO KINO) என்ற பத்திரிகையின் 4-வது – 5வது இதழ்களில் வெளியானது. இன்னதென்று எளிதாக வகைப்படுத்த இயலாத அக்கதை கவித்துவமிக்க நாடகவடிவில் கற்பிக்கப்பட்டிருந்தது. -15ம் நூற்றாண்டின் தொடக்கம்- ரஷ்யா தார்தரர் மற்றும் மங்கோலியரின் பிடியிலிருந்த சமயம் நிகழும் ஒரு கதை.
ஆந்த்ரே ருப்ளெவ் ரஷ்யாவின் மிகச் சிறந்த இறையுருவ (ICONS) ஓவியரும் மடாலய துறவியுமாவார். இவர் 1370ல் பிறந்தவர். கி.பி. 1390களில் மாஸ்கோ நகருக்கு கிரேக்க ஓவியர்களையும் ஸ்லாவிய (SLAV) ஓவியர்களையும் கொண்ட குழுவினர் வருகை புரிந்ததையடுத்து ரஷ்யாவில் பைஸாண்டின் வகை கலை ( BYZANTINE) கலாச்சாரத்தின் மீது பரந்துபட்ட ஆர்வமும் ஈடுபாடும் பெருகிற்று. இன்றைய இஸ்தான்புல் அன்றைய கான்ஸ்டான்டினோபுள். கீழை ரோமானிய பேரரசின் தலைநகராக கான்ஸ்டான்டினோபுள் கி.பி. 330ல் இருந்தபோது அதன் தொடக்ககாலப் பெயர் பைஸாண்டியம் என்பது (BYZANTIUM) மத்திய தரைக்கடலின் கிழக்கிலிருந்த பைஸாண்டியப் பேரரசின் தலைநகராக அன்றிருந்தது. இதைச் சார்ந்த கலை-சிற்பம், ஓவியம் கட்டிடக் கலை வகைமையை பைஸாண்டின் கலை என்பர்.
கிரேக்கக் கலை (HELLENISTIC ART) என்பதன் செயல் விளைவும் பைஸாண்டினோடு சேர்ந்து கொண்டது. கி.பி. 1261- 1453 காலகட்டம் பைஸாண்டின் கலைக்கு பொற்காலமாய் கருதப்படுகிறது. சுவர் ஓவியங்கள் இவ்வகைமையில் கிறிஸ்தவ மதம் சார்ந்த இறையுருவங்களின் சித்தரிப்புகளால் அமைந்தன. மரச்சிற்பங்களும் இறையுருவங்களை இவ்வகைமையில் கொண்டிருந்தன. இன்றைக்கு வேளாங்கண்ணி தேவாலயம் முதலாக இந்தியாவிலுள்ள பழம்பெரும் கிறிஸ்துவ தேவாலயங்களை அழகுற அலங்கரிக்கும் வண்ண ஓவியங்கள் கொண்டஜன்னல் கண்ணாடிகள் (STAINED GLASS WINDOWS) பைஸாண்டின் கலையைச் சார்ந்தவையே. நவீன ரஷ்ய ஓவியர் மார்க் ஷகல் (MARK CHAGAL) பதினைந்து முக்கிய நவீன ஓவியக் கண்ணாடி ஜன்னல்களை செய்திருப்பவர்.
ருப்ளெவ் காலத்தில் ரஷ்யாவுக்கு வந்த கிரேக்க ஓவியர்களில் புகழ்பெற்ற ஒருவர் தியோபான்ஸ் (THEOPHANSE) என்பவர். ருப்ளெவ் கிரேக்க ஓவியரை சந்திக்கும் கட்டமும் உரையாடலும் சிறப்பானது. தியோபான்ஸின் ஓவியந்தீட்டும் முறை ஆந்த்ரே ருப்ளேவை ஓவிய ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ருப்ளேவுடன் நட்புடன் பழகி ஓவியந்தீட்டிய இருவர் டானியல், கிரில் (DANIEL, KIRIL) என்பவர்கள். ருப்ளேவுக்கு உதவியாளராக வண்ணங்களைக் குழைத்து வைப்பது, சாரம் காட்டுவது, பிரஷ்களைக் கழுவிச் சுத்தம் செய்து வைப்பதற்கென்று ஃபோமா (FOMA) என்ற இளைஞனும் ஓவிய மாணவனுமான ஒருவன் உண்டு. ருப்ளெவ் கி.பி.1400ல் மாஸ்கோவுக்கு வருகிறார். 1408ல் மாஸ்கோவுக்கு அருகிலுள்ள விளாடிமிர் (VLADIMIR) எனும் நகரின் டார்மிஷன் (DORMITION) தேவாலயத்தின் சுவர்களில் இறையுருவங்களையும் சுவரோவியங்களையும் (ICONS AND FRESCO) தீட்டிவைக்கும் பணியை மேற்கொண்டார். ருப்ளெவ் கி.பி. 1430ல் மரணமடைந்தார். கி.பி. 1462 -1505 மூன்றாவது இவானின் ஆட்சிக்காலத்தில் முதல் ரஷ்ய ஆட்சியாளர் தன்னை முதன்முதலாக ‘ஜார்‘ (TZAR) என்று அழைத்துக் கொண்டார்.
புனித செர்ஜியஸ் (SAINT SERGIUS) என்பவர் புனித செர்ஜியஸ் மடாலயத்தை (St.SERGIUS MONASTERY) நிர்மாணித்தவர். இவருடைய சீடரே ஆந்த்ரே ருப்ளெவ். இத்திரைப்படம் ருப்ளேவின் வாழ்க்கைச் சரிதத்தைச் சொல்லுவதல்ல, அந்த மாபெரும் ஓவியனை தன் மக்களின் ஓர் அங்கமாயும் தனது புனித ஓவியங்களைத் தனது நம்பிக்கை மேலிட்ட உணர்வுகளுக்கு உருவம் தந்த கலைஞனாகவே திரைப்படம் காட்டிச் செல்லுகிறது. திரைப்படம் கருப்பு, வெள்ளையில் படமாக்கப்பட்டு இறுதிக் காட்சி வண்ணங்களில் படமாக்கப்பட்டிருக்கிறது. வாடிம் யூஸோவின் (VADIM YUZOV) கேமரா கோணங்கள் இப்படத்தின் காட்சி நகர்வுகளை அதியற்புதமாக்கியிருக்கிறது. இறுதிக் காட்சியாக ருப்ளேவின் புனித உருவங்களின் ஓவியங்கள் வண்ணத்தில் பல்வேறு கோணங்களில் காட்டப்படுகையில் அத்தோடு ஒத்திசையும் இசையிழைகளும் அற்புதம். இந்த இசையை ஒட்டினதாய் இதமான காட்சி சூழலை ஓவியங்களின் ஆக்கர் சிவப்பு, நீலம், எமரால்டு பச்சை, வண்ணங்கள் சுருதி கூட்டுகின்றன.
இப்படத்தின் தொடக்கம் உயரமானதொரு மாதா கோயிலின் முன் தோலையும் துணியையும் கொண்டு ஏராளமான கயிறுகளால் பிணைக்கப்பட்ட பிரமாண்ட பலூன் ஒன்று காட்டப்படுகிறது. ஒரு படகில் வேகவேகமாய் வந்த ஒருவன் பலூனில் ஏறி தப்பிச் செல்ல பலூன் பறக்கவிடுகிறது. கோயிலின் உச்சிக்கு பலூன் வழியே நம்மையும் கேமரா கொண்டுபோகிறது. பலூன் வெடித்து ஆற்றங்கரையில் விழுவதையடுத்து குதிரையொன்று இருமுறை புரண்டு எழுகிறது. பிறகு படம் 15-ம் நூற்றாண்டு ருப்ளெவ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளைக் கொண்ட எட்டு பகுதிகளால் விவரிக்கப்படுகிறது.
முதல் பகுதியில் (கி.பி.1400) மடாலயத்திலிருந்து ருப்ளெவ் தானியல், கிரில் என்ற மூன்று துறவிகளும் புனித உருவங்களைத் தீட்ட மாஸ்கோவுக்கு மழையில் செல்லுகையில் ஓரிடத்தில் ஒதுங்கவும், அங்கொரு கோமாளியைப் பார்க்கின்றனர். அவன் சிறைபடுத்தப்பட்டு போகிறான்.
இரண்டாவது நிகழ்வில் (1405) கிரேக்க ஓவியர் தியோபான்ஸை சந்திக்கும் கிரில் அவருடைய அழைப்பை நிராகரித்து மடாலயத்துக்கு வந்து அழைக்குமாறு கூறுகிறார். கிரிலை தனக்கு உதவியாக ஓவியந்தீட்ட அழைக்கும் ருப்ளெவின் வேண்டுகோளை ஏற்க மறுத்துவிடும் கிரில் மடாலயத் தலைவரால் வெளியேற்றப்படுகிறார். வேகமாய் செல்லும் கிரிலைத் தொடர்ந்து ஓடி வந்து தாவி பாசம் காட்டும் நாயை கிரில் தடிகொண்டு தாக்கிக் கொன்றுவிட்டுப் போகும் காட்சி சிலிர்க்க வைக்கிறது.
மூன்றாவது நிகழ்வாக (1406) ஆந்த்ரேயின் உணர்வுகளாய் பனியடர்ந்த காட்டுப் பகுதியில் ருப்ளெவும் அவரது உதவியாள் ஃபோமாவும் செல்லுகையில் தன் கால்களை எறும்புகளால் மொய்க்க அமர்ந்திருக்கும் ஓவியர் தியோபான்ஸை பார்க்கிறோம். ஓர் ஆன்மிக உரையாடல் இருவரிடையே நிகழ்கிறது. ரஷ்ய ஏசுகிறிஸ்து சிலுவையிலறையப்படும் காட்சி கற்பிக்கப்படுகிறது.
நான்காம் பகுதி (1408)யில் ருப்ளெவ், டானியல், ஃபோமா மூவரும் படகில் விளாடிமிர் செல்லும் வழியில் காட்டில் இயற்கை வழிபாட்டாளர்கள்(PAGANS) ஆண்களும், பெண்களுமாய் நிர்வாணமாய் உறவு கொண்டு மகிழ்கின்ற கோலத்தைப் பார்க்கின்றனர். நிர்வாணமாய் வரும் ஒரு பெண்ணின் பின் தன்னை மறந்து தொடரும் ரும்ளெவ் கட்டிவைக்கப்படுகிறார். அந்தப் பெண் அவரை விடுவித்து முத்தமிட்டு அனுப்புகிறாள். தன்னைத் துரத்தும் சிப்பாய்களிடமிருந்து தப்பி ஆற்றில் நீந்திச் செல்லும் அப்பெண்ணை படகில் செல்லும் ருப்ளெவும் மற்ற இருவரும் பார்க்கின்றனர்.
ஐந்தாம் பகுதி (1408) விளாடிமிர் கதீட்ரலில் இடம் பெறுகிறது. ஓவியம் தீட்டும் ருப்ளெவுக்கும் டானியலுக்கு்ம் ‘இறுதித்தீர்ப்பு’ எனும் முக்கிய ஓவியம் தீட்டுவது குறித்தான விவாதம் நிகழ்கிறது. அப்போது ஊமையும் மனநிலை குன்றியவளுமான தோர்ச்கா (THORCHKA) என்ற பெண் அங்கு வருகிறாள். அவளுக்கு அர்ப்பணிப்பாய் அவ்வோவியத்தை தீட்டப்போவதாய் ருப்ளெவ் கூறுகையில், ஆலயப் பணி முடித்து ஊருக்கு கிளம்பும் கொத்தர்களின் கண்கள் குருடாக்கப்படுகின்றன.
ஆறாம் பகுதியில் (1408) கொடிய தார்தார்களின் படையெடுப்பில் விளாடிமிர் தேவாலயம் சூறையாடப்படுகிறது. அங்குள்ளவர்கள் கொலை செய்யப்பட்டு ஊமைப் பெண்ணைக் கற்பழிக்க வந்தவனை ருப்ளெவ் கோடரியால் கொன்றுபோடுகிறார்.
ஏழாம் பகுதி 1412ல் இடம் பெறுகிறது. கொலை செய்துவிட்ட குற்றவுணர்வால் அதற்கு பிராயச்சித்தமாக ருப்ளெவ் மெளன விரதம் பூண்டு ஊமைப் பெண் தோர்ச்காவுடன் மடாலயத்தில் வாழ்கிறார். மீண்டும் வரும் தார்தார் கும்பல் தோர்ச்காவைக் கொண்டுபோய் விடுகிறதையடுத்து மாபெரும் பஞ்சம் ஏற்படுகிறது. மடாலயத்துக்கு திரும்பி வரும் கிரில் தலைவரால் மன்னிக்கப்பட்டு சேர்த்துக் கொள்ளப்படுகிறார். ருப்ளெவ் மீண்டும் ஓவியந் தீட்ட வேண்டுமென கிரில் கெஞ்சுகிறார்.
எட்டாவது இறுதிப் பகுதி 1423-ல் இடம் பெறுவதாய் படத்தில் காட்டப்படுகிறது. பெரிய ஆலயமணி செய்யப்படும் கதை. போரிஸ்கா (BORISHKA) எனும் சிறுவன் மணியை உருவாக்கித் தர… இளவரசர் முன் மதகுருக்கள் ஆசிர்வதிக்கின்றனர். ருப்ளேவ் ஓவியந்தீட்டினபடி போரிஸ்காவுடன் இறுதிவரை வாழ்கிறார். ருப்ளெவின் ஓவியங்கள் வண்ணத்தில் காட்டப்படுவதையடுத்து ஆற்றங்கரையில் மழையில் நின்று கொண்டிருக்கும் நான்கு குதிரைகள் காட்டப்படுவதோடு படம் நிறைவுறுகிறது.
ஆந்த்ரே ருப்ளெவ் திரைப்படம் ரகசியமாய் காதில் குசுகுசுக்காத புதிர். ஆனால் நெஞ்சில் பெரிய மணியோசையால் ஓதப்பட்ட புதிர். புயற்காற்றில் உரத்துக் கூவிய புதிர். பல்வேறு யுத்தங்களின்போதான தீப்பிழம்பால் ஒளியுறச் செய்யப்பட்ட புதிர். இந்தப் படம் கூறும் புதிர் ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் அன்பாலானது. இத்திரைப்படம் மனிதனுக்கும் கடவுளுக்குமான உறவை- மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவை -கலைஞனுக்கும் கலை வடிவத்துக்குமான உறவை- ரஷ்யனுக்கும் அவனது பெளதீக ரீதியும் பூடகரீதியுமான ரஷ்ய பூமிக்குமான உறவையுமெல்லாம் கொண்டிருக்கிறது. தார்கோவ்ஸ்கியின் இம்மகத்தான படமாகிய சுவரோவியம் இருளிலிருந்தும் ஒளியிலிருந்தும் ஓசையிலிருந்தும் மெளனத்திலிருந்தும் மனித முகங்களிலிருந்தும் பாறை – மண் படிமங்கள் நீரோட்டங்களிலிருந்தும் உருவாக்கப்பட்ட காவியமாகும்.
அனடோலி சோலோநிட்சின் (ANATOLI SOLONITSYN) எனும் சோவியத் நடிகர் ருப்ளெவ் பாத்திரத்தில் ஒன்றி நடித்திருக்கிறார். ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கி (Andrei Tarkovsky) தம் படத்தில் நீரோட்டம், வயல்வெளி மலைத் தொடர்களோடு, அடிக்கடி குதிரைகளையும் முக்கிய குறியீடாக காட்சியில் கொண்டு வருவார். குதிரைகள் இந்தப் படத்திலும் ‘இவான்‘ -லும் அற்புதமான கட்டங்களில் வருகின்றன. அவை சுதந்திரத்தின் அடையாளமாய் காண்பிக்கப்படுகின்றன. சோவியத் சோஷலிஷ பெருமையைச் சொல்லாத ஆன்மிகத்தைப் பேசும் திரைப்படமாய் அன்றைய அரசால் திரையிடல் மறுக்கப்பட்டது. இப்படத்திலிருந்து தார்கோவ்ஸ்கிக்கு பிரச்சினைகள் அதிகரித்தன. 1969ல் கான் திரைப்பட விழாக்குழுவின் வற்புறுத்தலினால் அரசின் அனுமதியுடன் கான் விழாவில் திரையிடப்பட்டு பரிசு வழங்கப்பட்ட பின் 1973ல் ரஷ்யாவில் ருப்ளெவ் திரையிடப்பட்டது.
1972ல் தார்கோவ்ஸ்கி செய்த அறிவியல் கதையைக் கொண்ட திரைப்படம் சோலாரிஸ் (SOLARIS-RUSSIAN SOLYARIS) 1968ல் ஸ்டான்லி கூப்பிக் செய்த பிரம்மாண்ட படமான 2001 A SPACE ODYSSEY வுடன் இந்த எளிமையான சோலாரிஸை ஒப்பிட்டு தரம் தாழ்த்தி எழுதிய ஐரோப்பிய விமர்சகர்கள் நிறைய உண்டு. தார்கோவ்ஸ்கியின் படம் டாவ்ஷெங்கோவின் உக்ரேனிய திரைப்படக் கவித்துவ நயமும் மார்க்ஸீய பொருண்மை வாதமும் உள்ளிட்டதாய தொடங்குகிறது. அதன் பிறகு மேலே செல்லும் படத்தின் அகம் சார்ந்த உள்ளார்ந்த விவரிப்புகளை இந்த மேற்கு ஐரோப்பிய விமர்சகர்கள் உள்வாங்கிக் கொண்டதாய் தெரியவில்லை. தார்கோவ்ஸ்கியின் திரைப்படங்கள் ‘காலத்தை காட்சி‘ ரூபமாக்கப்பட்டவை (PHOTOGRAPHED TIME) என்பர் அல்லது காட்சி நிரூபணங்கள் வழியாக திரைப்படக்கலையின் உள்ளார்ந்த தெறிப்புகளை படமாக்கியவர் என்பர். அவரது 54 வருட வாழ்வில் (1932- 1986) பத்து திரைப்படங்கள்கூட செய்தவரில்லை.
புகழ்பெற்ற போலந்து அறிவியல் எழுத்தாளரான ஸ்டானிஸ்லா லெம் (STANISLAW LEW) என்பவரின் நாவலைக்கொண்டு செய்யப்பட்ட திரைப்படம், விண்வெளியில் சுற்றிவரும் சோலாரிஸ் என்ற விண்வெளி ஆய்வு நிலையத்தின் எதிர்காலச் செயல்பாடுகள் மற்றும் விளைவுகளைக் கற்பனையாக சலனிக்கும் ஒன்று. நம் காலத்து ஒழுக்கவியல் ரீதியான பிரச்சனைகள் ஒவ்வொன்றையும் அணுகி அவதானிக்கும் இப்படம், தார்கோவ்ஸ்கியின் ஆந்த்ரே ருப்ளேவ் போலவே மனித வாழ்வின் பொருள் என்னவென்ற முடிவில்லாத கேள்விக்கான தத்துவார்த்த விவாதத்தையும் தொடரவே செய்கிறது. எனவே ஸ்டான்லி கூப்ரிக்கின் 2001 A SPACE ODYSSEY -யுடன் இத்திரைப்படத்தை என்னால் ஒப்பிட முடியவில்லை. ஸ்பேஸ் ஒதிஸ்ஸியில் பயன்படுத்தப்பட்ட அதி சிறப்பான காட்சியற்புத சாத்திரியங்கள் மிக்க பிரமிக்கும்படியான SPECIAL EFFECTS- கிற்குப் பதிலாக ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கி (Andrei Tarkovsky) தம் சோலாரிஸில், விஞ்ஞான மாயவுலகையும் அன்றாட வாழ்வியலையும் ஒன்றோடொன்று கலந்து ஒரு பிரதான கதாபாத்திரத்தின் வழியாக அனுபவமாக்கித் தருகிறார்.
கிரிஸ் கெல்வின் (KRIS KELVIN) விண்வெளி நிலையம் பயணம் தொடர்பு கொண்ட ஒரு மனோதத்துவ வல்லுனர். சோலாரிஸ் விண்வெளி நிலையத்தில் பிரச்சினைமிக்க உளவியல் தன்மையை ஆய்ந்து சொல்ல கெல்வின் அழைக்கப்படுகிறார். அங்கே அவர் எதிர்கொள்ளும் விண்வெளி வீரர் பெர்டன் (BERTON) சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் மற்றெல்லா விண்வெளி நிலைய வல்லுனர்களும் கொல்லப்பட்டதில் பெர்டன் ஒருவரே எஞ்சியிருப்பவர். கிரிஸ் ஸ்பேஸ் ஸ்டேஷனையடையும்போது டாக்டர் ஸ்னாவ்டா (Dr.SNAUTA) A Dr. GIBARYAN என்போரை சந்திக்கிறார். அவர்களின் ஆழ்மன உணர்வுகள் மேலெழுந்து அவற்றிலுள்ள ஆசைகள் உருவங்களைப் பெற்று நடமாடுவதை உணர்கிறார் மனோதத்துவ அறிஞர் கிரிஸ்.
அந்தப் பாதிப்புக்கு அவரும் ஆட்படும்போது ஏழு ஆண்டுகளுக்கு முன் தற்கொலை புரிந்துகொண்டு இறந்துபோன அவரது மனைவி ஹரி ( KHARI) உருபெற்று வந்து வந்து போகிறாள், பேச்செதுவுமில்லை. சட்சட்டென்று அவள் தோன்றி மறையும் காட்சியாடல் அற்புதமான கேமரா கோணங்களால் ஒளிப்பதிவு செய்திருக்கும் சிறந்த ரஷ்ய கேமரா கலைஞர் வாடிம் யூசோஸ் (VADIM YUSOV) பாராட்டுக்குரியவர். சோலாரிஸுக்கு வருகை தருபவர்களின் ஆழ்மன ஆசைகளையும் நினைவுகளை உருபெறச் செய்யும் திறனை கிரிஸ் கண்டுணருகிறார். ஹரி அமைதியாக, மெளனமாக வருவதுபோல கிரிஸ்ஸின் பெற்றோரும் தோன்றுவதை நாம் பார்க்கிறோம்.
அதே சமயம் இறந்துபோன மனைவி ஹரியின் தோற்றமும் நடமாட்டமும் ஏற்படுத்திய அச்சத்தால் கிரிஸ் கெல்வின் ஹரியின் வெவ்வேறு உருவங்களையும் அழிக்கிறான். விண்வெளிக் கலமொன்றில் ஏற்றி ஏவிவிடுகிறான். அப்படியும் அவள் திரும்பி வருகிறாள். அவள் நினைவுகள் அழியாத பட்சத்தில் சோலாரிஸ் அவளை உருவமேற்றி நடமாட விடுகிறது. சோலாரிஸின் உண்மையாற்றல் புரிபடுகிறது. சோலாரிஸின் ‘பிரமையானவை’ என்பவை பொருண்மையளவில் உண்மையானவை; அந்தக் கிரகத்தின் உணர்ச்சித் திறன் மற்றும் உணரும் தன்மைகளோடு நிலையான உறவை ஏற்படுத்திய முதல் மனிதனாக கிரிஸ் கெல்வின் தோன்றினான். இறுதியில் தனது பணியை செய்து முடிக்க இயலாதவனாகி அவன் தன் மனைவி ஹரியோடு இணைந்து அவள் முன்னெடுக்கும் சகலவற்றோடும் இணைகிறான். ஸ்னொவ்தும் (SNAUTH) சர்டோரியஸும் (SARTORIUS) அவனது இறுதி வீழ்ச்சியை அங்கீகரிப்பதோடு, சோலாரிஸின் முடிவால் விளையக்கூடிய கஷ்டங்களையும் ஏற்றுக் கொள்ளுகின்றனர். படத்தின் இறுதித் தோற்றம், கிரிஸ் கெல்வின், சோலாரிஸ் கிரகம் தனக்குத்தானே உருமாறும் தன்மையை அவனது மீட்பு பரிகாரத்துக்கான கற்பனைத் தோற்றத்தில் முடிவுறுகிறது. மிகவும் கடினமான விஞ்ஞானரீதியிலான தத்துவம்… எதிர்மாறான பொருளுக்கு எதிரான விவாதமானது சோலாரிஸ். மிகப் பெரிய கருத்துக்களும் அரிய அனுபவமும் இணைந்த சோலாரிஸ் நிறைய FANTASYகளையும் உள்ளிட்டது.
பானியோனிஸ் (BANIONIS) எனும் ரஷ்ய நடிகர் கிரிஸ் கெல்வினாக எந்நேரமும் சோகமாகவே முகத்தை வைத்துக்கொண்டு நடிக்கிறார்.
ஸ்டான் பிரகேஜ் (STAN BRAKHAGE) எனும் நன்கறியப்பட்ட அமெரிக்க புதிய அலை திரைப்படகர்த்தா ஆந்த்ரே தார்கோவ்ஸ்கியை வானளாவப் புகழ்ந்தவர். அவர் தார்கோவ்ஸ்கியின் திரைப்படக் கலைச் சாதனை குறித்துப் பேசுகையில் மூன்று முக்கிய மட்டங்களுக்கு உயர்த்திக் குறிப்பிடுகிறார்:
1. உலகின் மரபு சார்ந்த குடிகளின் காவிய ரூபக் கதைகளைக் கூறுகிறவர்.
2. ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கி (Andrei Tarkovsky) தன் செயல்பாடுகளை – பணியை முடிந்தளவு தமது சொந்தக் காரியமாகவே கொண்டியங்குபவர்.
3. இவற்றின் வழியாகவே உண்மையை கண்டடைகிறவர். மேலும் தன்னுணர்வற்ற நிலையின் எல்லைகளை பிரகாசிக்கும் வகையில் கனவுலகக் காட்சிகளை செய்கிறவர்- என தார்கோவ்ஸ்கியைக் குறிப்பிடுகிறார் பிரகேஜ். இந்த மூன்று அம்சங்களையும் ஒருங்கே கொண்ட தார்கோவ்ஸ்கியின் ‘THE MIRROR‘ சிறந்த எடுத்துக்காட்டு.
MIRROR (ZERKALO) 1974ல் செய்யப்பட்ட திரைப்படம். மோபிடிக் (MOBYDICK) எனும் நாவலில், கப்பல் தலைவன் அஹாப் (CAPTAIN AHAB) தன் சொந்த வைராக்கியமிக்க வஞ்சகத்தைத் தீர்க்கவே மோபி டிக் எனும் வெள்ளைத் திமிங்கலத்தைத் தேடுகிறான். அதுபோல, அரசியலாக்கப்பட்ட கலையைத் தேடி மாபெரும் வெள்ளைத் திமிங்கிலத்தை தேடி ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கி (Andrei Tarkovsky) இப்படத்தில் போகிறார், என மிர்ரர் குறித்து விமர்சனம் போகிறது.
தார்கோவ்ஸ்கியின் திரைப்படங்கள் முக்கியமாக கதை கூறும் வகையானவையல்ல. மிர்ரர் திரைப்படம் தன் கட்டமைப்பில் நவீன ஓவியக் கலையின் கொசுறு போன்ற கொல்லாஜ் (COLLAGE) எனும் வகையில் அமையப் பெற்றிருக்கிறது. ‘COLLER‘ எனும் ஃபிரெஞ்சு வார்த்தைக்கு ‘ஓட்டு‘ என்று பொருள். அதிலிருந்து உருவான ஆங்கில வார்த்தை COLLAGE- ஓவியம் என்பது ஓவியமும் சிறிது கை வினையும் சேர்ந்தது. நவீன ஓவியர்கள் கொல்லாஜ் கலையை வெகு அபூர்வமாகவே கையாள்வார்கள். முழுவதுமாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ ஓர் ஓவியத்துக்கான கான்வாஸ் அல்லது பலகை- காகிதத் துண்டுகளால்(கத்தரிக்கப்பட்ட செய்தித்தாள்), கத்தரித்த வண்ணத் துணித் துண்டுகளால் தேவையான இடங்களில் இடைவெளிவிட்டு ஒட்டப்பட்டிருக்கும். அவற்றை ஒட்டிய கோணமும் வடிவமைப்பும் ஆனதும் ஓவியம் அவை தெரிந்தும் மறைந்துமிருக்கும்படியாய் வண்ணப் பூச்சுகளைத் தருவான். இக்கலை ஆரம்பகால ‘க்யூபிஸ‘ஓவியர்களால் (CUBISTS) பெரிதும் கையாளப்பட்டது. புகழ்பெற்ற நவீன ஓவியர் ஹென்ரி மத்தீஸ் (HENRI MATISSE) தமது இறுதி ஓவிய காலத்தில் பல வண்ணக் காகித நறுக்குகளைக்கொண்டு ஒட்டிய கொல்லாஜையே முழுக்கவும் படைத்து வந்தவர்.
‘மிர்ரர்‘ திரைப்படம் நனவோடை நடையில் நினைவுகள், கனவுகள், ஆழ்மன உணர்வுகளை காட்சிரூப வடிவில் ஒழுங்கற்ற கிரமத்தில் சேகரித்து ஒட்டிநகரச் செய்த தார்கோவ்ஸ்கியின் தன் வரலாறு எனலாம். கூடவே அவரது பெற்றோரின் வரலாறும் ரஷ்ய- ஐரோப்பிய வரலாற்று நிகழ்வுகளையும் உள்ளிட்டது.
படம் தொடங்குவது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியுடன் ஒரு திக்குவாய் பையனை பெண் ஹிப்னாடிஸ்ட் குணப்படுத்தும் அரிய காட்சி. அவன் அந்தப் பயிற்சியினால் குணமாக்கப்பட்டதற்கு அமெரிக்க மேற்கு ஐரோப்பிய நாட்டு சோவியத் விமர்சகர்களால், ‘அரசின் கட்டுப்பாடுகளை மீறி, படைப்பாளி உண்மையைப் பேசத் தொடங்கியாயிற்று‘ என்று குறிப்பிடப்பட்டது. படத்தின் முக்கிய நிகழ்வுகளை சொல்லி வரும் அலெக்சியின் பருவத் தோற்றமும் நிகழ்வுகளின் ஒழுங்கற்ற வரிசைப்படி முன்னுக்குப் பின்னாக வந்துபோகிறது.
அவனது தாய் தனியாக வேலி மீது அமர்ந்தபடி புல்வெளியைக் காண்கிறாள். ‘’என் மருத்துவக் கருவிகளை எடுத்து வர மறந்துவிட்டேன்‘’ என்று கூறியபடியே மருத்துவர் ஒருவர் வருகிறார். ராணுவப் பயிற்சியில் துப்பாக்கி சுடும்போது செய்த தவறும் அதையடுத்து அதே வேலி மீது அமர்ந்த அலெக்சியின் தாய் பக்கமாகவே மருத்துவரும் வந்து அமர… வேலி முறிந்து இருவரும் ஒருவர் மீது ஒருவர் விழுந்து எழும் காட்சி வந்து போகிறது. ஸ்பெயின் உள்நாட்டுப் போர், ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பு, ரஷ்ய பலூன்விடும் காட்சி, செக் தலைநகரில் ரஷ்ய டாங்கிகள் வலம் வரும் வரலாற்று சொல்லாடல் – காட்சியாடல் வருகின்றன.
சீன கலாச்சாரப் புரட்சியும் வருகிறது. தார்கோவ்ஸ்கியின் தன் வரலாற்றைச் சொல்ல தாயிக்கும் தந்தைக்குமிருந்த கசப்பான மனச் சிக்கலில் பிரிந்துபோன தந்தை- சோகமான தாயின் வளர்ப்பில் பையன். இந்தப் பெற்றோரின் துயரையும் இடையிலான பையனையும் தனக்கான கனவுகளாக படம் நெடுக பளிச்சிடுகிறார் ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கி (Andrei Tarkovsky). அவ்வப்போது பச்சைப்பசேலென்ற புல்வெளி, பயிர்களின் தலையசைவு, மரங்களின் கம்பீரம், சலசலக்கும் ஆற்றோட்டம் என்று மெளனப் பின்னணியில் காட்சியாடல்கள், ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கி (Andrei Tarkovsky) வழக்கமான தம் குதிரைக் குறியீட்டுக்குப் பதிலாக பலத்து பொழியும் மழையைக் காட்டி கொண்டாடியிருக்கிறார்.
1940களில் தன்னை தன் கணவன் விட்டு விட்டுச் சென்றதிலிருந்து மகன் தார்கோவ்ஸ்கியை வளர்த்து ஆளாக்குவதின் துயரங்களை தன் வயதுவந்த உறவுகள் வாயிலாக அவர் கண்ணாடியில் பார்ப்பதுபோல நினைவு கொள்ளுகிறார். ரஷ்ய நடிகை மார்கரிடா டெரெஸ்கோவா (MARGARITA TERESKOVA) கதா புருஷனின் தாயாக நினைவு- கனவுகளிலும், நனவுக் காட்சிகளில் இளம் மனைவியாகவும் வருகிறார்.
ஆண்கள் அதிகமில்லாத இப்படத்தில் ஆண் குரலாக தார்கோவ்ஸ்கியின் தந்தையின் அசல் கவிதை வரிகளைக் கேட்கிறோம். பாஷ் (BACH) பெர்கோல்சி (PERGOLESI) மற்றும் புர்செல் (PURCELL) ஆகிய ஐரோப்பிய சாஸ்திரிய இசை மேதைகளின் நீண்ட சிம்ஃபனியிசையை படத்தின் இறுதியில் பச்சைவெளியில் இழுத்து லயிக்க விட்டுவிடுகிறார். இப்படத்திற்கு கேமரா கலைஞர் ஜியோர்ஜி ரெர்பெர்க் (GEORGI RERBERG) அற்புதமாக வண்ண ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மார்கரிடாவின் அருகாமைக் காட்சிகள் அபாரம்.
…
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.