பயாஸ்கோப்காரன் (Bioscopekaran) - சோவியத் ரஷ்ய சினிமா (Soviet Russian Cinema) - ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கி (Andrei Tarkovsky) - https://bookday.in/

தொடர் 47: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

ஆந்த்ரே தார்கோவ்ஸ்கி
சோவியத் – ரஷ்ய சினிமா -6

எல்லா மாபெரும் திரைப்படக் கலைஞர்களிடமும் அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி, அவர்தம் படங்களுக்கு எங்கிருந்து ஐடியா கிடைக்கிறது என்பது, ஆனால் இதுபோன்றதொரு விவாதத்துக்கு ஏற்ற விஷயமாய் தனக்குக் கிடைக்கும் அகத்தூண்டுதல் குறித்து தார்கோவ்ஸ்கி நினைத்ததேயில்லை. ஒரு திரைப்படத்துக்கான கருத்துருவாக்கம் ஒரு சாதாரண அலுப்பான வழியில் துண்டுதுண்டாகத்தான் தனக்கு ஏற்படுகிறது என்று அவர் ஒரு முறை கூறினார். அதையே திரும்பத் திரும்ப நினைத்துப் பார்ப்பது வெறும் கால விரயம்தான் தவிர அதைப் பற்றின எவ்வித கவித்துவ சிந்தனையுமில்லை என்றார் அவர்.

பயாஸ்கோப்காரன் (Bioscopekaran) - சோவியத் ரஷ்ய சினிமா (Soviet Russian Cinema) - ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கி (Andrei Tarkovsky) - https://bookday.in/

‘ஸ்டாக்கர்’ (STALKER) 1979ல் வெளிவந்த தார்கோவ்ஸ்கியின் திரைப்படம். இதுதான் அவர் சோவியத் ரஷ்யாவில் இயக்கிச் செய்த கடைசித் திரைப்படம். இப்படத்துக்குப் பின் அவர் ரஷ்யாவைவிட்டு வெளியேறிவிட்டார். ஆர்கேடி ஸ்ட்ருகாட்ஸ்கி (ARKADI STRUGATSKY) மற்றும் போரிஸ் ஸ்ட்ருகாட்ஸ்கி (BORIS STRUGATSKY) என்ற இரு சகோதரர்களால் -1971ல் எழுதப்பட்ட (THE ROADSIDE PICNIC) என்ற அறிவியல் நாவலைக்கொண்டு தயாரிக்கப்பட்ட படம் ஸ்டாக்கர். மீண்டும் ஒரு மர்மமான வேற்றுக் கிரக – விண்வெளி தாக்குதல் மனிதத் தன்மையைக் குறித்த அடிப்படை கேள்விகள், நினைவலைகள், உள்ளார்ந்த ஆழ்மன ஆசைகளையெல்லாம் உள்ளிட்ட படமாக்கல் இப்படம்.
வானத்தில் வலம் வரும் பெரிய விண்கல்லொன்று விழுந்து தாக்கினதாலோ அல்லது அயல் விண்வெளி பிறவிகளின் மர்ம வருகையினாலோ பெயரற்ற சிறிய நிலப்பகுதியில் ஒரு தளம் (ZONE) தோன்றி விடுகிறது. இங்கு சாமானிய பெளதீக- பூகோள விதிகள் நின்றுபோனதொரு நிலை… STALKER எனும் திரைப்படத் தலைப்பு, இப்படம் வெளிவந்தது முதலாகவே முடிவில்லாத விவாதங்களுக்கு இடமளித்தது. இதிலெல்லாம் தார்கோவ்ஸ்கி தன்னை இழுத்துப் போட்டுக்கொள்ளுவதை மறுத்தொதுக்கி வந்தவர். தார்கோவ்ஸ்கி 1986-ல் எழுதிய தம் (SCULPTING IN TIME) என்ற நூலில் அவரது கலைக் கொள்கைக்கான மாற்று செயல்பாட்டை கவனிக்க முடிகிறது. நூலின் தலைப்பே அவரது திரைப்பட ஆக்கக் கலையை சொல்லுவதாயுள்ளது. யதார்த்த தோற்றத்தின் பாங்குகளை அருவரூப (ABSTRACTIONS) தோற்றங்களும் கொண்டிருப்பவை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக புகழ்பெற்ற பிரிட்டிஷ் நவீன அருவரூப சிற்பி HENRY MOORE-ன் ‘தாய்- சேய்’ சிற்பங்களைச் சொல்லலாம். தார்கோவ்ஸ்கியின் ஒவ்வொரு திரைப்படமும் ஹென்றி மூரின் யதார்த்தத்தை ஒட்டிய அருவரூப சிற்பத்தின் ஒரு குணாம்சத்தை ஏதோ ஒரு சில கூறுகளில் ஒத்திருப்பதாகவே எனக்குப் படுகிறது.

ஸ்டாக்கரில் ஒரு வசனம் மறக்க முடியாதது:
ஒரு மனிதன் தன் கடந்த கால நிகழ்வுகளை நினைக்க நினைக்க, அவன் அன்பும் பரிவு கொண்டவனாகவும் மாறுகிறான்.

வெளிக் கோளங்களிலிருந்து தொடர்ச்சியாக பூமிக்கு மர்மமான வருகை புரிந்த அயல்கிரக ஜீவிகளின் VISITATIONS எனப்படும் வருகைகளால் பூமியைச் சுற்றி ஆறு தளங்கள் ஏற்பட்டிருப்பதாய் நாவல் வருணிக்கிறது. ஒரு பிக்னிக் கொண்டாட்டத்தின்போது அதில் கலந்து கொண்டவர்களால் கடைசியில் கழித்துப் போட்ட ஆப்பிள் விதைகள், ஐஸ்கிரீம் உறைகள், குளிர் காய்ந்த பின் எரிந்து அணைந்து கிடக்கும் கட்டைகள், காலி பியர் டப்பாக்கள், பாட்டில்கள், யாரோ விட்டுச் சென்ற கைக்குட்டை, மறந்துவிட்ட பேனா கத்தி, செய்தித்தாள் கிழிசல்கள், சிதறிய சில்லரைக் காசுகள், நிறம் மாறி வாடின பூக்கள் என்று விட்டுச் சென்றதுபோல வேற்றுக் கிரக ஜீவிகள் பூமிக்கு வந்துவிட்டுப் போனபோது ஏதேதோ போட்டுவிட்டுச் சென்றதாய் நாவல் விவரிக்கும் பகுதிகள் படத்தில் ஒரு கணம் தோன்றி நமக்குக் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு நகருகிறது. மாமூல் சினிமா ரசிகர்களுக்கு தார்கோவ்ஸ்கி சரிபோகமாட்டார்.

ஸ்டாக்கர் திரைப்படம் மிக மிக நிதானமாக தொடங்கி நகருகையில் ‘ZONE’ என சொல்லப்படும் ‘தளம்’ குறித்து, அது அவ்வாறு தோன்றியது என்பதையெல்லாம் நமக்குச் சொல்லும் விதமாய் எவ்விதத்திலும் தார்கோவ்ஸ்கி காட்ட முயற்சிப்பதில்லை. இந்தக் கட்டத்தில், அந்தத் தளம் எதிலிருந்து தோன்றியது, அதன் நோக்கம் அல்லது அதன் இயல்பு என்பவை எதுவும் தெரிய வருவதில்லை. ஒரேயொரு உண்மை- தளத்துக்குள் சென்றது எதுவும் திரும்பி வருவதில்லை என்ற நம்பிக்கை. எனவே தளம் எனும் மர்ம இடம் இராணுவத்தால் மூடிப் பாதுகாக்கப்பட்டு இராணுவ போலீசால் காக்கப்பட்டு வருகிறது. இராணுவ போலீஸ் சதா ஆயுதமேந்தி தளம் பகுதியில் ரோந்து சுற்றி வருகிறது. அத்து மீறுபவர்கள் உடனே சுடப்படுவார்கள். ஆனால் இவர்களுக்கு டேக்கா கொடுத்துவிட்டு தளத்து்குள் பிரவேசித்து மர்ம அறைக்குள் சென்றால் – உள்ளே சென்றவர்கள் இதுவரை திரும்பி வந்ததில்லை என்ற உண்மையும் இருக்கும். அதே சமயம்-ஒருவனது ஆழ்மன உணர்வுகளில் அமிழ்ந்து கிடக்கும் ஆசைகள், தேடல்கள் யாவும் நிறைவேறும் என்ற திடமான நம்பிக்கை விரவிக் கிடப்பதால் எல்லா ஆபத்து மிக்க பாதுகாப்புக் கட்டுப்பாட்டையும் மீறி தளத்துக்குள் நுழைந்து அறையை அடைவதில் நிறைய பேர் முயற்சித்துள்ளனர். அவர்களை பத்திரமாக, போலீஸ் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவிவிட்டு அழைத்துச் செல்ல விஷயமறிந்த கைடுகள் உண்டு. இந்த வழிகாட்டியைத்தான் ஸ்டாக்கர் (STALKER) என்பர். இந்த வழிகட்டல் சேவைக்கு கட்டணம் உண்டு. அதுதான் ஸ்டாக்கருக்கான ஜீவனம்.

பயாஸ்கோப்காரன் (Bioscopekaran) - சோவியத் ரஷ்ய சினிமா (Soviet Russian Cinema) - ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கி (Andrei Tarkovsky) - https://bookday.in/

புதியனவற்றை எழுத உந்துசக்தி பெறும் முனைப்பில் ஸ்டாக்கரின் வழிகாட்டலோடு ZONE-ல் நுழைந்து அறைக்குள் செல்ல எழுத்தாளன் ஒருவனும், விஞ்ஞானப் பேராசிரியர் ஒருவரும் வருகின்றனர். ஸ்டாக்கரின் உயிருக்கு ஆபத்து நேரிடும், குடும்பத்தின் கதி என்னவாகும் என்று எடுத்துச் சொல்லி அழுது புரண்டு தடுக்க முயற்சிக்கிறாள் ஸ்டாக்கரின் மனைவி. அவர்களது ஒரே மகள் உடல் நலம் குன்றியவள். எழுத்தாளர், பேராசிரியர் இருவரையும் தன் ஜீப்பில் வைத்து தளம் நோக்கி ஸ்டாக்கர் போகையில் இராணுவ போலீஸ் குறுக்கிட்டவாறே இருக்கிறது. ஜீப்பும் போக்குக் காட்டி தப்பியோடுகிறது. ஒரு ரெயில்வே ஸ்டேஷனில் ஜீப்பை விட்டுவிட்டு இருப்புப் பாதையில் நிற்கும் ட்ராலி வண்டியிலேறி அவர்கள் போகையில் இராணுவ போலீஸ் சுடுகிறது. இடைவிடாத துப்பாக்கிச் சூட்டை சமாளித்து ஸ்டாக்கர் பத்திரமாக தளம் அமைந்துள்ள பசுமைப் பகுதியை அடைகிறான். இதுவரை படத்தை தார்கோவ்ஸ்கி செபியா (பழுப்பு) நிறத்தில் ஒட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் செபியா நிறம் போய் பச்சையும் நீலமும் மேவிய குளிர்ந்த நிறத்துக்கு படம் மாறுகிறது.

ஸ்ட்ருகாட்ஸ்கிகளின் அசல் நாவல் ஒரு நாள் நல்ல ‘ஆக்ஷன் ஆக்ஷன்’ படமாக எடுக்கப்படக்கூடுமென்பது நிச்சயம் நினைத்துப் பார்க்க முடியாததல்ல. ஆனால், அந்நாவலைக்கொண்டு தார்கோவ்ஸ்கி செய்துள்ள திரைப்படம் ஸ்டாக்கர் ஆழ்ந்த சிந்தனை மேலிட்ட நாவலின் பிரதிபிம்பம். படம் முழுக்க அந்த மூன்று பயணிகளும் அடிக்கடி ஓய்வில் ஆழ்கின்றனர். கேமரா அமெரிக்கையோடு தூரமாக நிற்கிறது. பேச்சு எதுவுமற்ற நீண்ட நடைப்பயணம் அவர்களுடையது. திரும்பத் திரும்ப மனதைச் சுண்டியிழுக்கும் நேரான ஒற்றை சுருதியான இசைக் கோர்வைப் பின்னணி. பயணிகள் இருவருக்கும் ஸ்டாக்கருக்குமிடையே திடீரென இடம்பெறும் ஒற்றை வார்த்தையிலான உரையாடல்கூட ஒரு விவாதத்துக்கான பொருளைக் கொண்டிருப்பது போன்ற பிரம்மாண்ட வசனம். தளம் (ZONE) சினிமாவின் மகத்தான மூடுமந்திர இடம்-நாம் உடலில் உணரும்படியானதொரு ஈரம் விரவி. பசுமை மேலிட்டு நீர் சூழ்ந்து சகதி படர்ந்த சூழல். அடிக்கடி கண்ணில் படும் கட்டிடப்போர்த் தளவாடம் (டாங்கிகள்) உடைந்து துருவேறிய கார்கள்.

ஆழ்மன ஆசைகளை நிறைவேற்றி வைக்கும் என திடமாக நம்பப்பட்ட ‘அறை’யை நோக்கிய பயணம் ZONE- ஐ வந்தடைந்தது. அங்கிங்கே கிழிபட்டு அழுக்கு படர்ந்த உடையும் மழிக்கப்பட்ட தலையுமான கதாபாத்திரங்களை அலெக்சாண்டர் சால்செனிட்ஷின் (ALEXANDER SOLZHENITSYN) எழுதிய (GULAG ARCHI PELAGO) மற்றும் (ONE DAY IN THE LIFE OF IVAN DENISOVICH) நாவல்களில் வாசகர்கள் சந்தித்திருக்கக் கூடும், அவர்களையே நகர்ந்தும் பேசி அசையும் பிம்பங்களாய் ஸ்டாக்கரில் காண முடிகிறது. நம் கண்ணுக்கு எட்டியவரை ZONE ஒரு சர்வ ஈரவெளியாய் ஈ, காக்கையற்ற எவ்வித ஓசையுமற்றதாய் விரிகிறது. உண்மையைக் கண்டுபிடிப்பது இயலாதது மட்டுமல்ல, உண்மையில்லாமல், ZONE-க்கு வெளியே ஒரு ஜீவிதமிருப்பதும் இயலாத கூறு. எந்தத் திரைப்படத்திலும் கண்டிருக்காத ஒரு வகையான தோற்றங்களை ஆந்த்ரே தார்கோவ்ஸ்கியும் அவரது காமிரா கலைஞர் அலெக்சாண்டர் நியாழின்ஸ்கியும் (ALEXANDER KNYAZHINSKY)யும் உருவாக்கியுள்ளனர்.

பயாஸ்கோப்காரன் (Bioscopekaran) - சோவியத் ரஷ்ய சினிமா (Soviet Russian Cinema) - ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கி (Andrei Tarkovsky) - https://bookday.in/

ZONE தளத்தில் என்னதான் ஒரு மாயம் ஒளிந்திருக்கிறது என்பதை வெளியிட தார்கோவ்ஸ்கிக்கு விருப்பமில்லை என்பது தெரிகிறது. (SCULPTING IN TIME) என்ற தம் நூலில் அவர் தனக்கு கால அளவில் – கால அமைதியில்- காலத்தை வடிவமாக்கிக் காட்டுவதில் கவனமும் விருப்பமும் இருப்பதாக அபிப்பிராயப்படுகிறார். சுமார் மூன்று மணிநேரம் ஓடும் இத்திரைப்படம் தொடங்குகையில் ஸ்டாக்கர் அன்றைய நாள் வேலைக்குத் தயாராகிறான். ஸ்டாக்கராக அலெக்சாண்டர் கஜ்த நோவ்ஸ்கி ALEXSANDAR KAJDANOVSKY என்பவர் அப்பாத்திரத்தில் ஒன்றி நடித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் புரொபஸரும் எழுத்தாளரும் மனம் குன்றி திரும்பிப் போவதாய்க் கூறுவார்கள். அப்போது, தான் வாங்கிய பணத்தில் ஒரு சிறு தொகையைப் பிடித்துக் கொண்டு மீதத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகக் கூறுவான் ஸ்டாக்கர். ஸ்டாக்கரின் உலகம் ஏழ்மையானது. மிகவும் நலிந்துபோனவன் அவன். இந்த அவலத்தைச் சொல்ல தார்கோவ்ஸ்கி படத்தின் முதற்பகுதி முழுக்கவும் செபியா நிறத்திலிருக்க ஒளிப்பதிவாக்கியிருக்கிறார். அவன் மனைவி அந்த ஆபத்தான வேலையில் இறங்க வேண்டாமென அவனை மன்றாடுவதும் மகளின் உடல் ஊனத்தை நினைவூட்டி அழுது புரள்வதும் செபியா நிற ஒளிப்பதிவில் நம் மனத்தை உசுப்பிவிடுகிறது. அவளை அலட்சியப்படுத்திவிட்டு அவன் தன் வாடிக்கையாளர்களை சந்திக்க விரைகிறான்.

ANDREI TARKOVSKY: ELEMENTS OF CINEMA என்ற 2008ம் வருடத்து நூலில் ROBERTBIRD எனும் விமர்சகர் இவ்வாறு கூறுகிறார்:- ZONE என்பது ஒருவன் தனது உள்ளார்ந்த அதி உன்னத ஆசைகளைக் காணச் செல்லும் இடம் – அதுதான் தார்கோவ்ஸ்கியின் வெளி – இந்த வெளியும் (SPACE) அதன் கால அளவும்தான் (TIME) தார்கோவ்ஸ்கி சினிமாவின் சாராம்சம்.

‘(ACTION)’ -என்று கூறி கேமரா இயங்கத் தொடங்கி பிறகு ‘CUT’ என்று கூறும் இரு செயல்பாடுகளும் இடையில் நடக்கும் ஒளிப்பதிவுக்கான கால அவகாசம்தான், தான் குறிப்பிடும் TIME- என்று ஒரு நேர்காணலில் தார்கோவ்ஸ்கி கூறுகிறார்.
ஸ்டாக்கரும் மற்ற இருவரும் தளம்-பகுதிக்கு வந்ததுமே செபியா நிறப் படம் வண்ணங்களுக்கு மாறிக்கொள்ளுகிறது. தாங்கள் போக வேண்டிய மையத்தை இன்னும் வந்தடையவில்லை என்று இருவருக்கும் தெரிகிறது. இந்தத் தளம் பகுதியில் வாழ்க்கையின் இயல்பான நடவடிக்கைகளுக்கான சாத்தியக்கூறுகள் எடுபடாது. ஏராளமான வினோத விளக்கமுடியாத விளைவுகள் ஏற்படலாம். அவர்கள் அந்த அறையைக்கண்டு உட் சென்றால் அவர்களின் அதீத ஆசை அங்கு நிறைவேறப் போகிறது என்றும் அவர்களை அவ்வளவு நேரமாய் துன்பத்துக்குள்ளாக்கிய ஆசை என்றும் ஸ்டாக்கர் கூறுகிறான். தார்கோவ்ஸ்கி சம்மந்தப்பட்டிருப்பது அந்த மர்ம அறை மட்டுமல்ல, அவரது கதாபாத்திரங்கள் அங்கு வருவதுதான் அவரது கவனம் குவியும் விஷயம். அவர்கள் வேண்டுவது உண்மையில் என்ன? உள்ளே என்னதான் பார்த்தார்கள்? இந்த இடத்தில் ஸ்டாக்கர் படம் ஒரு மாதிரியான சிலிர்ப்பை ஏற்படுத்திவிடுகிறது. இந்த இடத்தில் அம்மூவரும் தங்கள் வாழ்க்கை, விதி என்பனவற்றை சாமுவேல் பெக்கெட்டின் (WAITING FOR GODOT) நாடக ரீதியில் விவாதித்து பரிமாறிக் கொள்ளுகின்றனர்.

பல திகிலான தருணங்களும் கதையைக்கொண்டே படத்தில் நம்மை எதிர்கொள்ளுகின்றன. அறையை அடைய ஒரு நீண்ட சுரங்கப்பாதை வழியே நடந்தாக வேண்டும் எனும்போது யார் முதலில் நுழைந்து முன்னேறுவது என்பதில் அவர்களிடையே தயக்கம் ஏற்படுகிறது. ஸ்டாக்கர் தீக்குச்சி இரண்டின் ஒன்றைத் தொடச் சொல்லி குச்சியின் நீள அடிப்படையில் பூவா? தலையா? ரீதியில் எழுத்தாளனை முதலில் நுழையச் செய்து பின்தொடரும் கட்டம் திகிலானது. தார்கோவ்ஸ்கி திகிலிலும் அக்கறை கொண்டவராய்த் தெரியவில்லை. நம்பிக்கை என்பது கதாபாத்திரங்களின் முக்கிய உணர்வு வெளிப்பாடாக அமைகிறது. இறுதிவரை அவர்களால் அதை வைக்க முடியவில்லை. அறையில் கிடைக்கும் வெடிக்காத பழைய வெடிகுண்டையெடுத்து ஆராய்கிறார் புரொஸர். நம்பிக்கையிழந்த அவர் அதை வெடிக்கச் செய்ய முயற்சிப்பது தெரிகிறது. நம்பிக்கை இழந்தவர்களுக்கு தளமும் அறையும் எவ்வித பிரயோசனமும் தராது என்று ஸ்டாக்கர் முணுமுணுக்கிறார். அவர்கள் திரும்பிவிடுகின்றனர்.

படத்தின் இறுதிப் பகுதி ஸ்டாக்கரின் மனைவி மற்றும் பெண்ணைப் பற்றியதாகிறது. மூவரும் விடைபெற்ற பின், சோர்வும் களைப்பும் மேலிட்ட ஸ்டாக்கரை அவன் மனைவி படுத்துக்கொள்ளச் செய்தபின் மனைவியும் பெண்ணும் மெளனமாகின்றனர். பெண் சமையலறையிலுள்ள மேஜைமீது தலையை சாய்த்து வைத்துப் படுத்திருக்க, மேஜை மீது மூன்று கண்ணாடிக் குவளைகள் அதிர்ந்தவாறு மெதுவாக நகர… ஒரு குவளை விழுந்து நொறுங்கும் ஓசை கேட்கிறது. அவள் அதை வெறித்துப் பார்க்க, வேகமாய் ஒரு ரயில் ஓடும் ஒலி கேட்கிறது. இவையெல்லாம் தார்கோவ்ஸ்கியின் படங்களில் வரும் பல பிம்பங்களின் அசைவுக்கான மறைபொருள். எவ்வித விளக்கமும் இல்லை. அவசியமுமில்லை.
ஸ்டாக்கர் அடிக்கடி ZONE-ல் பிரவேசித்ததால்தான் அவனுக்குப் பிறந்த பெண் குழந்தை பிறவி ஊனமாய் பிறந்தாள் என ஒரு சூசக வாசகம் நாவலில் வரும்.

தார்கோவ்ஸ்கி தன் ZONE-ஐ படத்தில் காட்டியிருப்பதுபோல உலகப் போர் முடிந்து பல ஆண்டுகள் கழிந்த ஓரிடத்தை எஸ்தோனியா (ESTONIA) நாட்டு கிராமப்புறம் ஒன்றில் தேர்ந்தெடுத்தார். அது பழைய ஹைட்ரோ மின்சக்தி நிலையமும் நச்சு ரசாயனக் கழிவுகளைக் கொட்டி வைக்கும் தொழிற்சாலையுமுள்ள பகுதியாகும். ஸ்டாக்கரின் ZONE-கிற்கு ஏற்ற இடமாய் அதுவே அவருக்கு அமைந்தது.

பயாஸ்கோப்காரன் (Bioscopekaran) - சோவியத் ரஷ்ய சினிமா (Soviet Russian Cinema) - ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கி (Andrei Tarkovsky) - https://bookday.in/

தார்கோவ்ஸ்கி, அவரது மனைவி மற்றும் படத்தின் முக்கிய நடிகர் அனடோலி சோலோநிட்சின் ஆகிய மூவருமே பின்னர் கான்சர் நோய் பீடித்து இறந்துபோனதைக்கூட, அந்த இரசாயனக் கழிவுகளுடன் அவர்கள் நெருக்கமாக நடமாடினதால்தான் இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

அலெக்சாண்டர் கஜ்தனோவ்ஸ்கி ஸ்டாக்கராகவும் அலிசா பிரெஜ் லிகா அவன் மனைவியாகவும் அனடோலி சோலோ நிட்கின் எழுத்தாளனாகவும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

உண்மையில், எழுத்து, கேமரா, திரைப்பட ஆக்கம் என்று பன்முக கலைச் சிறப்புகள் கொண்ட வித்தகர்கள் பிரிதொரு கலைஞனின் மேதைமையை சாமானியத்தில் ஏற்றுக் கொண்டு எதையும் சட்டென்று சொல்லிவிடுவதில்லை. தார்கோவ்ஸ்கியின் சக கலைஞர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அவருடைய கடினமான தருணங்களில் முன் வந்து உதவியதில்லை. அவரையொத்த கலைஞர்களுக்கு எப்போதுமே அவர்மீது பொறாமையிருந்திருக்கிறது. இதனாலும் வெளியேறுவதில் அவருக்கு யோசனையிருந்ததாக கூறுவதுண்டு. ஒரு சந்தர்ப்பம் வரவே, தார்கோவ்ஸ்கி இத்தாலிக்குச் சென்று ‘NOSTALGIA’ என்ற திரைப்படத்தைச் செய்தார். இதற்கான திரைக்கதை வடிவை நன்கறியப்பட்ட இத்தாலிய திரைப்படக் கதாசிரியர் டோனினோ குவெர்ரா (TONINOGUERRA) என்பவரோடு இணைந்து உருவாக்கிக் கொண்டார். இத்தாலியில்தான் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது.
நாஸ்டால்ஜியா (NOSTALGHIA) ரஷ்யாவிலிருந்து வெளியேறி இத்தாலியை சென்றடைந்த தார்கோவ்ஸ்கி 1983ல் ரஷ்யாவுக்கு வெளியில் செய்த முதல் திரைப்படம். இப்படம் கான் சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று முக்கிய விருதுகளைப் பெற்றது.

பயாஸ்கோப்காரன் (Bioscopekaran) - சோவியத் ரஷ்ய சினிமா (Soviet Russian Cinema) - ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கி (Andrei Tarkovsky) - https://bookday.in/

18 ம் நூற்றாண்டு ரஷ்ய இசையமைப்பாளர் சோலோன்ஸ்கி (SOLONSKY) என்பவர் இத்தாலியில் வாழ்ந்தவர். அவர் இத்தாலியில் வாழ்ந்த காலம் குறித்தும், அப்போது செய்த இசைப் பணிகள் பற்றியும் அறிந்து ஆய்வுப்பூர்வமாக எழுத ரஷ்யக் கவிஞர் ஆந்த்ரே கோர்ச்சகோவ் (ANDREI GORCHAKOV) என்பவர் இத்தாலிக்கு வருகை தந்து துஸ்கானி (TUSCANY) எனும் கிராமத்தை அடைகிறார். அது ஒரு மலைப் பகுதி. அவரோடு காரில் பொன்னிறத் தலைமுடி புரள அழகி யூஜினியா (EUGENIA) என்னும் மொழிபெயர்ப்பாளர் வருகிறாள். இக்காட்சி ஆழ்ந்த கருப்பு வெள்ளையில் ஒளிப்பதிவாகியுள்ளது. காட்சி அற்புத வண்ணத்துக்கு மாறுகையில் ஒரு பிரமாண்ட தேவாலயத்தைக் காண்கிறோம். ஏராளமான உயர்ந்த தூண்கள் கொண்ட தேவாலய முக மண்டபம். ஏராளமான பெண்கள் மெழுகுவர்த்தியை ஏற்றி கையில் ஏந்தி முகமண்டபத்தையடைந்து அவற்றை நிறுத்தி வைக்க ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்தி வைத்துவிட்டு முட்டிக் காலிட்டு அமர்ந்து குழந்தை பாக்கியமற்ற தங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாக மாதாவை வேண்டுகின்றனர்.

வசதியான பெண்கள் 50-100 என்று மெழுகுவர்த்திகளை இணைத்து ஏற்றி ஊர்வலமாய் வந்து மாதாவுக்கு வைக்கின்ற இந்த ஆரம்பக் காட்சி மிகவும் ரம்மியமாக இருக்கிறது. குழந்தைப் பேறு அற்ற பெண்கள் குழந்தை வரம் வேண்டி மாதாவுக்கு மெழுகு விளக்கேற்றி வைத்து முட்டிக்கால் போட்டு அமர்ந்து துதிக்கும் காட்சியின்போது ஓர் அரிய ஓவியம் நமக்கு தரிசனமாகிறது. புகழ்பெற்ற -15ம் நூற்றாண்டு இத்தாலிய இறையுருவ ஓவியர் பியரோ டெல்லா ஃபிரான்சிஸ்கா (PIERO DELLA FRANCISCA)

இத்தேவாலயச் சுவரில் தீட்டியுள்ள, ‘குழந்தை பிரசவத்து தாய்’ (MADON.NA OF CHILD BIRTH) எனும் ஓவியம் அது. இதமான வெம்மை நிறங்கள் மஞ்சளும் சிவப்பும் குளிர்ந்த இளம் பச்சை வண்ணத்தோடான இவ்வோவியம், குழந்தை வரம் வேண்டி விளக்கேற்றி முழங்கால் மண்டியிட்டு பிரார்த்திக்கும் பெண்களுக்கு அருள் பாலிக்கும் விதமான பரிவை கண்களிலும் முகத்திலும் தேங்கித் தோன்றுகிறது. திரைப்படத்தில் மற்றெல்லா காட்சி நகர்வுகளையும் அலுக்க – சலிக்க நீட்டிச் செல்லும் கேமரா, இந்த ஓவியத்தை மட்டும் சில நொடிகளுக்கே காட்டிவிட்டு திருப்பதி தரிசனத்தின்போது ‘ஜெருகண்டி’ சொல்லுவதுபோல அகற்றிவிடுகிறது. அங்கே வரும் எல்லா பெண்களுமே முழங்கால் மண்டியிட்டு அமர்ந்திருப்பதைக்கண்டு எரியும் மெழுகுவர்த்தியோடு வரும் யூஜினியாவும் தனக்குப் பழக்கமேயில்லாத அந்த வகையில் அமர முயன்று, இயலாதவளாக அப்படியே சற்று பரிதாபமாய் நிற்கிறாள். பின்னர் வரும் காட்சியில் இவள், தான் தங்கியுள்ள விடுதியின் ஆளோடியில் இதையே செய்ய முயற்சித்து விழுந்து விடுகிறாள். கவிஞனை விரும்பும் அவள் அவரைத் தன் பக்கம் இழுக்க செய்த முயற்சி எதுவும் காரிய சித்தி பெறுவதில்லை. கோர்சகோவ் ரஷ்யாவிலிருக்கும் தன் மனைவி, மக்களின் நினைவுகளில் கட்டுண்டு விடுகிறார். அவர் அங்கிருந்து புறப்படுகையில் அவர் மனைவி நிறைமாத கர்ப்பிணி.

கவிஞர் துஸ்கானியில் டோமெனிகோ (DOMONICO) என்ற மனிதனை சந்திக்கிறார். ஊரார் அவனை பைத்தியக்காரன் என்று அழைப்பதை நிராகரிக்கிறார். இருவருமே ஒருவருக்குள் இன்னொருவரின் சில சிறப்பு ஒற்றுமைகள் இருப்பதை அங்கீகரிக்கின்றனர். உலகம் முடிவுக்கு வருகிறதென்ற முடிவில் தன் குடும்பத்தை டோமெனிகோ ஏழாண்டுகள் வீட்டில் பூட்டி வைத்திருந்தவன். அவனது கூற்றை ஒரு தீர்க்கதரிசனமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அந்த ஊரிலுள்ள புனித காதரின் குளத்தில் சுடுநீர் ஊற்று இருக்கிறது. ஆண், பெண்கள் அதில் நீராடுவதை புனித காரியமாக கருதுகிறார்கள். இவ்வளவு தூரம் படம் நகர்ந்தும் கவிஞர், ரஷ்ய இசை மேதையின் ஆய்வு ரீதியாக எந்த ஒரு காரிய முயற்சியும் எடுப்பதாக எதையும் நம்மால் பார்க்க முடியவில்லை. வழக்கம்போல மழை, சகதியில் நடைப்பயணம், பாழடைந்த கட்டிடங்கள், நாய் வருவது, படுப்பது, போவது என்ற காட்சிகள் வந்து போகின்றன. அரூப வடிவரீதியான திரைப்படம் என்றானாலும் சற்றேனும் இறுக்கமாக ‘ஆர்கனைஸ்’ செய்திருக்கலாம் என்று படுகிறது – தளர்வும் காலியிடமாயும் கொண்டிருக்கிறது.

யூஜினியா கவிஞரை விட்டுவிட்டுப் போய்விடுகிறாள். ஒரே ஒருமுறை அவள் தான் மொழிபெயர்ப்பாளர் என்பதை நமக்கு நினைவூட்டும் வகையில் கவிஞரைப் பார்த்து, ‘‘நீங்கள் பேசும் இத்தாலிய மொழி இன்னும் சரியில்லை’’ என்று கூறுவாள்.

டோமெனிகோ நடுத்தெருவில் பிரசங்கம் ஒன்றைச் செய்கிறான். உலகின் சீரழிவையும் மனித குலத்தின் ஆன்மாவை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி பொதுவிடத்தில் பேசுகிறான். அந்நகரில் பொதுமக்கள் கூடுமிடத்தில் குதிரை மீதமர்ந்த ரோமானிய மன்னன் அவ்ரேலியஸ்ஸின் (AURALIUS) பெரிய சிற்பம் நிற்கிறது. அதன் மேல் நின்றுகொண்டு பிரசங்கம் செய்கிறான். அப்போது இளைஞன் ஒருவன் ஒரு டின்னில் பெட்ரோலைக் கொண்டு வந்து டோமெனிகோவிடம் தருகிறான். டோமெனிகோ பெட்ரோலைத் தன் மீது ஊற்றிக்கொண்டு தீ பற்றவைத்து எரிந்து இறக்கிறான். அவனது வேண்டுகோள்படி கவிஞர் கோர்சகோவ் ஒரு பாதி மெழுகுவர்த்தியை ஏற்றி கையில் ஏந்தியபடி நீர் வற்றிப்போன புனித காதரின் குளத்தில் நடைப்பயிற்சி செய்கிறார். படம் கருப்புக்கு வெள்ளைக்கு மாறுகிறது. உயர்ந்த ரோமானிய தூண்கள் கொண்ட பழைய கட்டிடமொன்றுக்குள் அவரது ரஷ்ய வீடு, மனைவி, மகன் தெரிகிறார்கள். அவரது நாயும் படுத்திருக்கிறது. அவர் அப்படியே உறைந்தாற்போல் கிடக்கிறார்.

கோர்சகோவாக ஓலெக் ஜான்கோவ்ஸ்கி OLEG JANKOVSKYயும், டோமிஸியானா ஜியோர்தனோ (DOMIAZINA GLORDANO) மொழிபெயர்ப்பாளர் யூஜினியாவாயும் டோமெனிகோவாக எர்லாண்ட் ஜோசப்சனும் (ERLAND JOSEPHSON) அற்புதமாக நடித்துள்ளனர். இப்படத்தின் அற்புத கேமரா கோணங்களை மிகச் சிறப்பாக ஒளிப்பதிவாளர் ஜியுசிப்பே லான்சி (GIUSEPPE LANCI) செய்திருக்கிறார்.

பயாஸ்கோப்காரன் (Bioscopekaran) - சோவியத் ரஷ்ய சினிமா (Soviet Russian Cinema) - ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கி (Andrei Tarkovsky) - https://bookday.in/

‘தியாகம்’ அல்லது தன்னையும் தனதையும் பலியிடல் என்றும் வைத்துக் கொள்ளும்படியாக ஆந்த்ரே தார்கோவ்ஸ்கி ‘SACRIFICE’ (OFFRET) எனும் திரைப்படத்தை 1986ல், தான் இறப்பதற்கு சில நாட்கள் முன்பாக எடுத்து முடித்தார். சரியாகச் சொன்னால் நுரையீரல் புற்றுநோயால் மரணப்படுக்கையிலிருந்தவாறே இந்த தமது கடைசித் திரைப்படத்தைச் செய்து முடித்தார் என்பது நிஜம். படம் ஸ்வீடன் பகுதியில், தென் ஸ்வீடிஷ் கடற்கரையோரம் ஸ்வீடிஷ் கலைஞர்களைக்கொண்டு ஸ்வீடிஷ் மற்றும் ஃபிரெஞ்சு மொழிகளில் எடுக்கப்பட்டது. ஸ்வீடனில் இங்க்மர் பர்க்மன் பாரோ என்ற தீவில் வாழ்ந்தார். இத்தீவுக்கருகிலுள்ள கோட்டோ என்ற தீவில் சாக்ரிஃபைஸ் படத்துக்கென கட்டப்பட்ட வீட்டில் கடற்கரையில் படமாக்கப்பட்டது. வசதிமிக்க ஸ்வீடிஷ் குடும்பமொன்று அங்கு வசிக்கிறது. அது தன் தலைவனின் பிறந்த நாளை அன்று கொண்டாட நினைக்கிறது.

அந்த மனிதர் அலெக்ஸாண்டர் – நடிப்பதிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் நாடக நடிகரும் நாடக விமர்சகருமாவார். அவரது அழகிய மனைவி அடிலெய்ட், வளர்ப்பு மகள் ஜூலியா, சிறுவன் கோஸ் ஸென் (GOSSEN) சிறப்பு விருந்தினன் டாக்டர் விக்டர், வேலைக்காரி மரியா மற்றும் தபால்காரர் ஓட்டோ (OTTO) ஆகியோர் கூடியிருக்கிறார்கள். அலெக்ஸாண்டர் தன் மகன் சிறுவன் கோஸ்ஸெனை அழைத்துக்கொண்டு போய் இலைகள் உதிர்ந்த மரம் ஒன்றை நடுகிறார். அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றும்படி பையனுக்கு வேலை தருகிறார். பையன் அவர்களது வீட்டை அப்படியே அட்டையில் மாதிரியாகச் செய்து வீட்டுக்கு வெளியில் தன் தந்தையின் பிறந்த நாள் பரிசாக வைத்திருக்கிறான்.

தந்தையும் மகனும் மரத்தை நட்டுவிட்டுப் புறப்படுகையில் தபால்காரர் ஓட்டோ (OTTO) சைக்கிளில் வந்து அலெக்ஸாண்டரின் பெயருக்கு வந்துள்ள பிறந்த நாள் வாழ்த்துக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு தானும் வாழ்த்துகிறார். சிறிது நேரம் கழித்து பிறந்த நாள் பரிசென்று அலெக்ஸாண்டருக்கு யாரோ அனுப்பிய மிகப் பெரிய படம் ஒன்றை சைக்கிளில் வைத்துக்கொண்டு வருகிறார் ஓட்டோ. ஓட்டோ தான் பகுதி நேரத் தபால்காரன் என்றும் மற்ற நேரத்தில் வேறு தொழில் பார்ப்பதாயும் கூறுகிறார். இளம் வேலைக்காரி மரியா மீது அவருக்கு பரிவும் ஒட்டுதலுமுண்டு. தார்கோவ்ஸ்கி தம் கடைசி திரைப்படமான SACRIFICEல் பல முக்கியமான நிகழ்வுகளையும் அவை தொடர்பான மன உணர்வுகள் வாயிலாகவே மிக மிக பூடகமாகத்தான் தெரியப்படுத்துகிறார். பல முக்கிய விஷயங்கள் நம் கவனத்தின் கூடுதல் பங்களிப்பை வேண்டுவனவாயிருக்கும்படி அவர் படமாக்கியுள்ளார். ஸ்வீடனின் பழைமையான வரைபடத்தை (MAP) கண்ணாடிச் சட்டமிட்டு பிறந்த நாள் பரிசாக அலெக்ஸாண்டருக்கு ஒருவர் அனுப்பியிருப்பதும்கூட அத்தகைய பூடகச் செயல்களில் ஒன்றாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.
அலெக்ஸாண்டரின் ஆழ்ந்த நடிப்புத் தொழிலும் விமர்சன காரியங்களும் அவரது குடும்பத்தில் சிறு சிறு இடைவெளிகளை ஏற்படுத்தியிருக்கலாமென்பதையும் மிகப் பூடகமாய் தார்கோவ்ஸ்கி நமக்கு உணர்த்துகிறார். வளர்ப்பு மகள் ஜூலியாவின் அதிகமான மெளனமும் ஒதுங்கிப்போனவளாய் தெரிவதும் மர்மமான சாட்சியாக ஊகிக்க வைக்கிறது. அலெக்ஸாண்டரின் அழகிய மனைவி அடிலெய்டு அவரைவிட டாக்டர் விக்டரோடு நெருக்கம் அதிகம் காட்டுகிறாள். டாக்டரோடு அவள் இருக்கும் சமயங்களில் அலெக்ஸாண்டரின் முக பாவனை இறுக்கமாயும் ஒருவித குற்ற உணர்வு தெறிப்பதாயும் சட்டென்று ஒதுங்கி விலகிக் கொள்ளுபவராயும் காட்டப்படுகிறார். கணவன், மனைவிகளிடையே ஒரு நம்பிக்கைத் துரோகம் நிலவியிருப்பதை தார்கோவ்ஸ்கி மிக மிகப் பூடகமாய் உரசி உணர்த்திவிட்டு நாசூக்காக நகர்ந்துகொண்டுவிடுகிறார்.

பயாஸ்கோப்காரன் (Bioscopekaran) - சோவியத் ரஷ்ய சினிமா (Soviet Russian Cinema) - ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கி (Andrei Tarkovsky) - https://bookday.in/

வரைபடத்தைக்கொண்டு வந்து பட்டுவாடா செய்துவிட்டு அத்தோடு அன்றைய டூட்டி முடிந்து போனதாய் ஓட்டோவும் அங்கேயே தங்கி அலெக்ஸாண்டர் அளித்த மதுவைக் குடிக்கிறார். அலெக்ஸாண்டர் நடித்துப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியர் நாடகம் பற்றி அவர் மனைவி புகழ்ந்து பேசுகிறாள் அவரும் அந்த நினைவுகளோடு சிலதைப் பேசுகிறார். பேச்சின் விஷயம் தனக்கானதல்ல என்று மெளனமாய் கவனிக்கிறார் டாக்டர் விக்டர். இடையிடையே பையனைத் தேடுகிறார் அலெக்ஸாண்டர். ஓட்டோ சற்று அதிகமாகவே பேசுகிறார்.

எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் சமயம், – வேலையை முடித்துவிட்டு மரியா தன் வீட்டுக்குப் போன பிறகு- தொலைக்காட்சியில் ஓர் அதி பயங்கர அறிவிப்பு வருகிறது. மூன்றாவது உலகப் போர்- அணு ஆயுதப்போர் தொடங்கிவிட்டது. உலகம் விரைவில் அழியப் போகிறது என்ற எச்சரிக்கை செய்தி அறிவிக்கப்படுகிறது. தொடர்ந்து பிற நாடுகளில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து மக்கள் ஆண், பெண் குழந்தைகள் என பெருங்கூட்டமாய் பயந்து பதறிக் கதறியபடி ஓலமிட்டவாறு தெருவில் தாறுமாறாக ஓடும் காட்சி காட்டப்படுகிறது. மக்கள் பயத்திலும் திகிலிலும் கண் மண் தெரியாது காட்டுத்தனமாய் ஒருவர் மீது ஒருவர் இடித்துத் தள்ளிக்கொண்டும் மோதி நிலைக் குலைந்தும் ஓடும் காட்சி கருப்பு வெள்ளையில் ஒளிப்பதிவாகியிருப்பது- தொலைக்காட்சிப் பெட்டியே கருப்பு வெள்ளைப்பெட்டி என்பதனால் ஒரு கார் நொறுங்கிக் கிடக்கிறது.

அலெக்ஸாண்டர் நிலைகுலைந்து போகிறார். அவரது ஆழ்மனத்தில் அமிழ்ந்து கிடக்கும் மனைவி குறித்த குழப்பத்தோடும் உலகம் மூன்றாவது போரால் அழியப் போகிறதென்ற அறிவிப்பினாலும் மேலும் பதறிப் போகிறார். அறிவிப்பையடுத்து பையனைத் தேடுகிறார். போர் விமானங்கள் பறக்கும் ஓசை காதைத் துளைக்கிறது. இதன் விளைவாக வீடே கிடுகிடுவென அதிர்கிறது. திறந்த அலமாரியில் வைக்கப்பட்டிருக்கும் பெரிய பால் நிரம்பிய பீங்கான் பாத்திரம் அதிர்வுக்கு அசைந்து தவழ்ந்து தரையில் விழுந்து உடைந்து சிதற, பால் முழுக்கவும் கொட்டிச் சிதறுகிறது. எல்லாமே ஆழ்மன பய உணர்வின் வெளிப்பாடுதான். எல்லோரையுமே பயம் பீடிக்கிறது.
ஓட்டோ அவர் மனத்தை திசை திருப்பும் முயற்சியில் அவரை மரியாவைப் போய் சந்திக்குமாறு சொல்லுகிறார்.

மரியாவின் மேன்மையை எடுத்துச் சொல்லி, யாருக்கும் தெரியாமல், வெளியிலுள்ள தன் சைக்கிளை உபயோகித்து மரியாவிடம் போகுமாறும், மாடியிலிருந்து வேறொரு வழியில் இறங்க, தான் ஜன்னல் புறமாய் ஏணியை வைப்பதாயும் ஓட்டோ சொல்லுவதை ஏற்று, மற்றவர்கள் வெளியில் பேசிக் கொண்டிருக்கையில் ஓசைபடாது ஏணி வழியே இறங்கி ஓட்டோவின் சைக்கிளில் ஏறி மரியாவின் வீட்டை அடைகிறார் அலெக்ஸாண்டர். தன் எஜமான் அங்கே வருவதை எதிர்பார்க்காத மரியா அவரை அன்போடும் ஆதரவோடும் வரவேற்றுப் பேசி ஆசுவாசப்படுத்துகிறாள். மரியா தன் பேச்சில் அவரது மனைவியின் துரோகத்தை மிக பூடகமாக வெளிப்படுத்தும் விதமாகக் காட்டுகிறார் தார்கோவ்ஸ்கி. அடிலேய்ட் என்று பெயர் குறிப்பிடாமல், ‘‘அவள் கெட்டவள். அவளது செயல்தான் உங்களை நிலை குலையச் செய்திருக்கிறது’’ என்று சொல்லுகிறாள் மரியா. ‘‘மரியா! என்னை நீ காதலிப்பாயா?’’ என்று கேட்கிறார் அலெக்ஸாண்டர். அதற்கு பதிலளிக்காமல் மரியா அவரை அணைத்துக்கொள்வதுடன் தன் ஆடைகளைக் களைந்துவிட்டு அணைக்கிறாள்.

மனம் சமாதானமடைந்து வீட்டையடையும் அலெக்ஸாண்டர், டாக்டர் விக்டர் ஆஸ்திரேலியாவுக்குப் போவதாய் உறுதியாகக் கூறுவதையும் தன் மனைவி அவரைப் போகவேண்டாமென தடுக்க இயலாது குழப்பமுற்று சஞ்சலத்திலிருப்பதையும் கவனிக்கிறார். மகனைத் தேடுகிறார். பையன் நேற்று நட்ட மரத்துக்கு தண்ணீர் ஊற்றப் போய் விட்டான். மாடிப் பகுதியை அடையும் அலெக்ஸாண்டர் வெகுவிரைவில் வரவிருக்கும் மூன்றாவது உலகப் போரான அணு ஆயுதப் போரால் உலகமே அதன் சர்வ ஜீவராசிகளும் செல்வங்களும் அழியப்போகும் பேராபத்தை எண்ணி மனம் குமுறுகிறார். அதற்கு ஈடாக தன்னையும் தன் சகல உடைமைகளையும் அர்ப்பணித்து தியாகம் செய்வதாயும் போரைத் தவிர்த்து உலகை அழிவிலிருந்து காப்பாற்றும்படி இறைவனிடம் வேண்டிக்கொண்டு வீட்டிற்கு தீ வைக்கிறார். இச்செயலை ஜெர்மன் இலக்கியம் DR.FAUSTUS வுடன் இணைத்தும் பார்க்கலாம்.

பயாஸ்கோப்காரன் தன் ‘பார் பார் கண்ணாடி!’ வழியே ஹங்கேரிய சினிமாவைக் காட்டியதில் ‘MEPHISTO’ என்ற திரைப்படத்தைப்பற்றிய நினைவை வாசகர்கள் கொண்டால், அது டாக்டர் தன் செயலாற்றலுக்கு கூடுதல் சக்தி தர வேண்டி மெஃபிஸ்டோபில் எனும் பிசாசுக்கு தன் ஆத்மாவை தியாகம் செய்தது குறித்து வரும். அதே மாதிரியான ஃபாஸ்டிய வழியில் கடவுளோடு ஒரு பேரமாக (A FAUSTIAN BARGAIN WITH GOD) அலெக்ஸாண்டர் முன் வைத்து மிருகத்தனமான இந்தப் போரின் அழிவு காரியத்திலிருந்து உலகை- உலக உயிர்களைக் காக்கும்படி வேண்டிக்கொண்டு தன் வீட்டையே தியாகம் செய்வதாக வீட்டைத் தீயிட்டுக் கொளுத்துகிறார். எல்லோரும் பதறியோடி வருகிறார்கள். மரியா ஓட்டோவின் சைக்கிளிலேறிப் போய்விடுகிறாள். வீடும் அருகிலிருந்த காரும் முற்றிலும் எரிந்து சாம்பலாகிறது. அலெக்ஸாண்டர் அங்கும் இங்கும் ஓடுகிறார். அப்படியொரு ஆன்மிகம், தியாகம்! டேவிட் லீனின் புகழ் பெற்ற படமான ‘A BRIDGE ON THE RIVER QUAI’-ல் தாங்கள் கட்டாயப்படுத்தி கட்டிய மரப்பாலத்தை எதிரி ரயிலை வீழ்த்த வெடிவைத்து தகர்ப்பார்கள் பிரிட்டிஷ் போர்க் கைதிகள், கைதான பிரிட்டிஷ் படைத் தலைவர் கூறும் கடைசி வசனம் ‘‘MADNESS!’’ என்பது.

அலெக்ஸாண்டரை ஆம்புலன்ஸ் வண்டியிலேற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இவை எதுவுமே அறியாத சிறுவன் GOSSEN தந்தையின் கட்டளைப்படி மரத்திற்கு தண்ணீர் ஊற்றும் பணியிலீடுபட்டிருக்கிறான்.
அலெக்ஸாண்டராக ஸ்வீடிஷ் நடிகர் எர்லாண்டு ஜோசப்சன் (ERLAND JOSEPHSON) பிரமாதமாய் நடிக்கிறார். அடிலேய்டாக சூசன் ஃபிளீட்வுட்டும் (SUSAN FLEETWOOD) ஓட்டோவாக ஆலன் எட்வாலும் (ALLAN EDWALL) மரியாவாக குட்ருன் ஜிஸ்லாடோடிவ்வும் (GUDRUN GISLADOTTIV) விக்டராக ஸ்வென் ஒட்டீயும் (SVEN WOLLTEE) ஜூலியாவாக வேலெரி மேய்ரெஸ்ஸேயும் (VALERIE MAIRESSE) சிறுவன் கோஸ்ஸெனாக டோமி கெஜெல்க்விஸ்டும் (TOMMY KJELLQUIST) மிக நன்றாகச் செய்திருக்கிறார்கள்.

இப்படத்தின் மிகச் சிறந்த அம்சமே அதன் கேமரா கோணங்கள். ஒளியமைப்பை ஸ்வீடனின் பெர்க்மனின் கேமரா கலைஞர் அதி சிறப்பாக செய்திருப்பவர் ஸ்வென் நிக்விஸ்ட் (SVEN NYKVIST). தாஸ்தாவெஸ்கியின் ‘IDIOT’ நாவலைத் தழுவி ஒரு திரைப்படமெடுக்க இருந்த அற்புதமான திரைப்பட மேதை ஆண்ட்ரே தார்கோவ்ஸ்கி நுரையீரல் புற்றுநோயால் 1986 -ல் பாரிஸ் மருத்துவமனையில் காலமானார். SACRIFICE என்ற தலைப்பை எண்ணுகையில் திரைப்படக் கலைக்கு தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட ஓர் அபூர்வக் கலைஞனாகவே நிலைக்கிறார் தார்கோவ்ஸ்கி. மரணப்படுக்கையிலிருந்த அவருக்காக -1986 கான் திரைப்பட விழா பரிசை அவரது மகன் பெற்றுக்கொண்டார். (DIRECTED BY TARKOVSKY)- என்ற அற்புத ஆவணப் படத்தை தார்கோவ்ஸ்கியின் படங்களுக்கு ‘எடிட்டர்’ ஆகப் பணிபுரிந்த ரஷ்ய இயக்குனர் மிச்சல் லெஸ் கிஸிலோவ்ஸ்கி (MICHAL LESZCZYLOWSKY) தயாரித்திருக்கிறார். இதில் SACRIFICE படப்பிடிப்பு, ஸ்வென் நிக்விஸ்டின் கேமரா கோண அமைப்பு, தார்கோவ்ஸ்கி பாரிஸ் ரசிகர்கள் கூட்டத்தில் ஆற்றும் உரை, அவரது மனைவியின் பதில்கள் இடம் பெற்றுள்ளன.

எழுதியவர் :

விட்டல்ராவ்

Click to Join WhatsApp Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *