பயாஸ்கோப்காரன் 48: சோவியத் ரஷ்ய சினிமா (Soviet Russian Cinema) - 7 | அலெக்சாண்டர் சொகுரோவ் (Alexander Sokurov)

தொடர் 48: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

சோவியத் – ரஷ்ய சினிமா- 7
அலெக்சாண்டர் சொகுரோவ் (Alexander Sokurov)
– விட்டல்ராவ்

தார்கோவ்ஸ்கியின் திரைப்பட காலடிச் சுவடுகளைப் பின்தொடர்ந்த ஓரிருவரில் முக்கியமானவர் அலெக்சாண்டர் நிகோலயேவிச் சொகுரோவ் (Aleksandr Nikolayevich Sokurov). அலெக்சான்டர் சொகுரோவ் 1951ல் ரஷ்ய சைபிரியாவின் போதோர்விகா (Podorvikha) எனும் கிராமத்தில் பிறந்தவர். 1974-ல் வரலாற்றில் பட்டப் படிப்பும் 1979ல் VGIK ரஷ்ய திரைப்படப் பள்ளியில் திரைப்பட ஆக்கத்துக்கான பட்டப்படிப்பும் பெற்றவர். 40 திரைப்பட ஆக்கத்துக்கான பட்டப் படிப்பும் பெற்றவர். 40 திரைப்படங்கள், 20 குறும்படங்கள் என்று ரஷ்ய சினிமாவுக்கான தம் பங்களிப்பாக செய்திருக்கும் சொகுரோவின் குறிப்பிடத்தக்க படங்கள் ‘தாயும் மகனும்’ (Mother and son- 1997), மொலோக் (Moloch- 1999) ரஷ்யன் ஆர்க் (Russian Ark – 2002 மற்றும் ஃபாஸ்ட் (Faust- 2011) என்பவை. தார்கோவ்ஸ்கியின் திரைப்பட ஆக்கத்தின் பாதிப்பு இவரது படங்களில் நன்கு வெளிப்படுகிறது. ஜெர்மன் இலக்கியவாதி கதே (Goethe)யின் Faust கதையை இவர் 2011ல் எடுத்த திரைப்படம் Faust கதையை இவர் 2011ல் எடுத்த திரைப்படம் Faust அவ்வாண்டுக்கான தங்கப்பரிசை வெளிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பெற்றுத் தந்தது.

1982ல் ஓலெக் கோவலோவ் (Oleg Kovalov) என்ற இளம் கலை விமர்சகர் ‘இஸ்குஸ்த்வோ கினோ’ (Iskusstvokino) பத்திரிகையின் ஆசிரியரிடம் ‘The Solitary voice of Man’ என்ற குறும்படமொன்றைக் கொண்டு வந்தார். அதன் இயக்குனர் அலெக்சாண்டர் சொகுரோவ் (Alexander Sokurov) எனும் திரைப்படக் கல்விக் கூடத்திலிருந்து பட்டப்படிப்பு முடித்து வந்த புதிய கலைஞன் எனும் பேச்சு பரவியது. ‘‘7.ரீல் கொண்ட ‘The Solitary voice of Man’ உட்பட அந்நாட்களில் திரைப்பட அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்ட எதுவுமே பிறகு அன்னாரின் தலைசிறந்த படைப்பாக கருதப்பட்டது. இவரது கார்கி பிரதேசத்தில் படமெடுக்கப்பட்ட ‘Maria voinova’s summer’ எனும் ஆவணப்படம் தலைசிறந்தது’’ – என்று அன்று ‘இஸ்குஸ்த்லோ கினோ’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலிருந்த எலினா ஸ்டிஷோவா (Yelena Stishova) என்ற ரஷ்ய திரைப்படக் கலை விமர்சகர் கூறுகிறார். சோவியத் ஒன்றியத்தின் புகழ்பெற்ற அறிவியல் எழுத்தாளர் சகோதரர்கள் ஆர்கேடி ஸ்ட்ருகாட்ஸ்கி மற்றும் போரிஸ் ஸ்ட்ரூகாட்ஸ்கி (Arkadi and Boris Strugatsky) கள் எழுதிய நூலைத் தழுவி சொகுரோவ் 1988-ல் ‘The days of Eclipse’ எனும் அறிவியல் திரைப்படத்தைச் செய்திருக்கிறார். இப்படமும் ரஷ்யாவிலும் பிற சோஷலிச நாடுகளிலும் பெரிதும் பேசப்பட்டது.

உலகளாவிய திரைப்படப் பார்வைகளின் பெரும் கவனத்தையும் பாராட்டையும் பெற்ற சொகுரோவின் உன்னத திரைப்படம் ‘தாயும் மகனும்’ (Mutter and Sohn-Mother And son 1997). 1997ல் திரையிடப்பட்ட இத்திரைப்படம் முதல் பார்வைக்கு மிக மிக எளிமையாக – எளிதாகத் தோன்றும். ஆனால், ஓரிரண்டு தடவைக்கு இப்படம் நமது கவனமான பார்வையை வேண்டும் ஒன்று.

What is my movie? - Item

ரஷ்ய கிராமப்புறம் ஒன்று. ஆளரவமற்ற, ஈ, காக்காயற்ற என்று கூறுவது சும்மாயில்லை- அந்தளவுக்கு ஏதோ செட் போட்டு எடுத்தது போன்று- நிஜமான மோனத்தவம் புரியும் சிறிய வீடு, அந்த வீட்டில்- அது காலை வேளை. தாயும் மகனும் படுத்திருக்கிறார்கள். தாய், முதுமையைக் காட்டிலும் உடல் நோயால் எழுந்து நடமாட முடியாதவளாய் படுத்திருக்க, மகனும் ஏறக்குறைய அதே மனநிலையில் படுத்திருக்கிறான். வேலை- சம்பாதனை- சமையல்- சாபபிடுவது கொள்வது என்ற புற காரியங்கள் எதையும் நாம் யோசிக்கும் அளவுக்கே விட்டுவைக்கிறார் சொகுரோவ், கச்சிதமாக மெளனியின் கதையொன்றை காட்சிரூபமாக்கினாற்போன்று… அவை எதையும் நாம் பார்க்கவில்லை. தேவையுமில்லை என்பதுபோல.

நன்கு திடகாத்திரமாய் வளர்ந்த கிராமத்து மகன், முடங்கிய அம்மாவைத் தேற்றுவதுபோன்ற வார்த்தைகளால் அவள் மனதை வருடுகிறான். சொல்லாமலே தெரிகிறது- முதியவள் மரணத்தை நெருங்குவது. மகனும் அதிர்ச்சியுற்றதாய் தோன்றவில்லை. அது தவிர்க்க முடியாத முடிவு என்பது இருவருக்குமே தெரிந்திருக்கிறது. நோயாளி முதியவளுக்கு மரணம் தவிர்க்க முடியாதது என்பதைவிட இன்றியமையாதது விடுதலை-என்றே உணர்த்தலேற்பட்டிருக்க வேண்டும். தன்னைவிட்டு ஒரு கணமும் மகன் எங்கும் போக முடியாதவனாய் அவளை அணைத்தபடியே கிடக்கிறான். தன்னால் மகனுடைய வாழ்வும் பாழாகிறதென்ற உணர்வு மரணத்தை விரைந்து பெற்றுக்கொள்ள அம்மாவுக்குத் துடிக்கிறது.

அன்று காலை சூரிய ஒளி ஆரஞ்சு நிறத்தில் வீட்டுக்குள் பாய்கிறது. அம்மா, நம் காதுக்குக் கேட்காத தொனியில் மகனிடம் முணுமுணுக்கிறாள்.
‘‘நான் கொஞ்சம் நடக்கணும்’’ என்கிறாள். ஏதோ தன் ஒரே ஒப்பற்ற ஆசையாக மீண்டும் ஒரு முறை, தான் நடக்க வேண்டும் என்று மகனிடம் கூறுகிறாள் அம்மா. இந்தக் காட்சியை சொகுரோவ் சற்று நீட்டி சாவகாசமாக கேமராவை நகர்த்த வைக்கிறார். பார்வையாளன் அந்தக் காட்சியின் இறுக்கத்தில் தன்னை முழுமையாக உட்படுத்திக்கொள்ளத் தேவையான அவகாசமாக கருதும் சொகுரோவ் நிதானமாய் காட்சிகளை நீட்சிகொள்ள விடுகிறார். இங்கிருந்தே தார்கோவ்ஸ்கியின் ஆசியும் அவருக்கு அருள் பாவிக்கிறது எனலாம்.

அம்மாவால் நடக்க இயலாது, என்பது மகனுக்குத் தெரியும் தன்னாலாகாது என்பது அம்மாவுக்கும் தெரியும். இவை அவ்வளவும் மனித எத்தனிப்பின் புறச் செயல்கள். தான் நடக்க வேண்டும் என்பது அம்மாவின் அகத்தூண்டுதல். மகனுக்கு அதுவும் விளங்குகிறது. தனக்கு விளங்குவதால் அவன் சாதிக்கும் மெளனத்தின் வழியே நமக்கு விளங்க வைக்கிறார் சொகுரோவ்- ஒரு குழந்தையைப்போல நிதானமாய் வாரித் தூக்கி அம்மாவைத் தன் உடலோடு உடலாக்கி மெதுவாக நடந்து வாசலைக் கடந்து சிறு படிகளில் எச்சரிக்கையோடு நடந்து வெளியில் கொண்டுவருகிறான் மகன்.

வெளியுலகம்! அப்பா, வெய்யில் என்று அம்மா கருதியிருக்கலாம். அதே சிறு திருப்தி நமக்கும் ஏற்படுகிறது. அது ஏற்படத்தான் இக்காட்சியாடலுக்கு இவ்வளவு நிதானமும் அவகாசமும் தருகிறார் சொகுரோவ். கண்ணுக்கெட்டிய தொலைவுக்கு மலைகளும் பசுமையான வெட்டவெளியும் ஒரு வண்டிப்பாதையுந்தான். அதில் கிடைக்கும் இயற்கையான ஓசைகள்தான் பின்னணியிசை. மகன் அங்குள்ள மர பெஞ்சு ஒன்றில் அம்மாவோடு உட்காருகிறான். அவன்தன் தாயைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டிருக்கையில் அவளது கால்கள் நீண்ட அங்கிக்குள் மறைந்து, அவனது வலது கையணைப்பில் படிந்து வெளியில் தொங்குவதும், அம்மாவின் மார்பு மற்றும் தலைப்பகுதி மகனுக்கு இடப்புறமாய் சேர்ந்திருக்கும் காட்சி – இத்தாலிய சிற்பி மைகேலாஞ்சலோவின் அமர சிற்பமான ‘பயட்டா’ (Pieta)- வை நினைவூட்டுகிறது. இறந்துபோன இயேசு கிறிஸ்துவை அவரது தாய் கைகளில் ஏந்தியிருக்கும் நிலையில் சலவைக்கல்லில் மைகேலாஞ்சலோ வடித்த அற்புத சிற்பம் ரோமில் செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்திலுள்ளது. அதே காட்சி வடிவில் சொகுரோவ் தாயை மகன் ஏந்தியிருக்கும் கோலத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.

மகன் தன்னைத் தூக்கிக்கொண்டு வெளியில் வருவதே தானும் சிறிது அவனோடு சேர்ந்து நடந்துவிட்டு வருவதான உணர்வையடைகிறாள் தாய். அசைவுகளையிழந்த தன் உடலை மகன் அவனது உடலோடு பொருத்திக்கொண்ட நிலையில் அவன் நடப்பது, அமர்வதுபோன்ற புறச்செயல்களில் அவளும் இணைந்து அச்செயல்களில் பங்கேற்று திருப்தியுறுகிறாள் தாய். திரும்ப வீட்டுக்கு தூக்கிச் சென்று உணவூட்டுகிறான். இருவருமே தங்களைச் சுற்றிய எவ்வித சந்தடியுமற்ற மெளனமான இயற்கைக் காட்சி வெளியில் லயித்துக் கிடக்க, அம்மாவின் முடிவு நெருங்குகிறது. அம்மாவை முதலில் நாற்காலியில் அமரவைத்துப் பார்த்துவிட்டு படுக்கைக்கே கொண்டுபோய் விடுகிறான். பிறகு அவன், ‘‘சீக்கிரம் வந்துவிடுகிறேன்’’ என்று சொல்லி விட்டு வெளியேறி மண்சாலையைக் கடந்து மலைச்சரிவில் ஒற்றையடிப்பாதைக்கு வந்து நிற்கிறான். வெகுநேரம் விட்டு வீட்டையடைகிறான். அம்மா… அம்மா என்று குரல் கொடுத்துவிட்டு அவள் மூச்சை சோதிக்கிறான்.

அம்மா இறந்து கிடக்கிறாள். இறந்து கிடக்கும் அம்மாவின் பக்கமாகவே மகனும் சிறிது நேரத்துக்குப் படுத்துக்கொண்டிருந்துவிட்டு அவளது வெளுத்த கை விரல்களை நீவிப் பார்க்கிறான். இறுதியாகத் தன் தாயுடன் பேசுவதுபோல மகன் பேசுகிறான்.

‘‘அம்மா… அம்மா… எனக்காக காத்திரு. நாம் எங்கே சந்திக்கலாமென ஒப்புக்கொண்டோமோ அங்கே சந்திப்போம்.’’

ஒரு வயது வந்த மகனுக்கும் அவனது படுத்த படுக்கையான இறந்தபடியிருக்கும் தாயிக்குமிடையேயான சாவேயில்லாl உயர்ந்த பாசப் பிணைப்பைக்கொண்ட இத்திரைப்படம் இரண்டு சர்வதேச விருதுகளை வெனிஸின் திரைப்பட விழாவில் பெற்றிருக்கிறது. படத்தின் இறுதியில் இயக்குனர் ஓர் அறிமுக உரையை நம்மைப் பார்த்து வழங்குகிறார். அது மிகவும் அவசியமானது.

‘‘அன்பார்ந்த பார்வையாளர்களே!’’

நீங்கள் ஓர் எளிய திரைப்படத்தைக் காண இருக்கிறீர்கள். எளிய வாழ்க்கையை அனுபவிக்கும் இரு பாத்திரங்களைக்கொண்ட எளிய கதை. தாயும் சரி, மகனும் சரி, தொழில்ரீதியான நடிகர்களல்லர். இத்திரைப்படம் நம் ஜெர்மன் நண்பர்கள், ரஷ்யத் தோழர்களின் உதவியுடன் ரஷ்யாவில் செய்யப்பட்டது. பாரம்பரிய செவ்வியல் இலக்கியம் மற்றும் பாரம்பரிய ஓவியங்களைக்கொண்டும் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தின் பாரம்பரிய படைப்பாக்கம் 19-ம் நூற்றாண்டின் ஜெர்மன் மற்றும் ரஷ்ய உணர்வுபூர்வ ஓட்டத்தை முழுக்கவே கொண்டிருக்கிறது. இங்கே கதாபாத்திரங்கள் இல்லை. உறவுமுறை இருப்பதாய் தெரியாது. சூழல்கள் என்று எதுவுமில்லை. ஆனால் இப்படத்தை உருவாக்கியதிலிருந்து நாங்கள் மிகவும் உள்நோக்கி உணர்ந்தோம். நாங்கள் இதை ஒரு பொழுதுபோக்குப் படமாகச் செய்யவில்லை. எங்களை ஆழமாய் தொட்டது அனைத்தும் மற்றவர்களையும் தொடுமென நம்புகிறோம்’’ – என்று முடிக்கிறார் சொகுரோவ்.

அலெக்சாண்டர் சொகுரோவின் திரைப்படச் சட்டகங்களின் சலன உருவங்கள் 19-ம் நூற்றாண்டு ஜெர்மன் உணர்ச்சிபூர்வ ஓவியர் காஸ்பர் டேவிட் ஃப்ரீட்ரிச்சின் (Casper David Friedrich). 1774- 1840 ஓவியங்களின் ஆழ்ந்த கண்டுணரும் அழகியலை ஒத்தவையென ஒப்பிடப்படுபவை. ஃப்ரீட்ரிச் ஓவியங்களில் முன்னணி- பின்புலம் என்பவை துல்லியமாக தனித்து நிற்பவை. இவ்வோவியர் காடுகள், மலைகளின் அமானுஷ்யமான மெளனத்திலும் அமைதியிலும் தம் உணர்வுகளைக்கொண்டு தீட்டக்கூடியவர். இத்திரைப்படத்தில் இவ்வகையாக இருக்குமாறு வண்ண ஒளியமைப்பை அமைத்திருப்பவர் ரஷ்ய கேமரா நிபுணர் அலெக்ஸி ஃப்யோடோரோவ் (Aleksey Flodorov). ஒரு நேர்காணலின்போது, ‘‘திரைப்பட இயக்குனர் ஓவியர்களின் படைப்புகளிலிருந்து தனது சினிமாவுக்கான வண்ண ஒளிப்பதிவின் கூறுகளை அறிந்துகொள்ள வேண்டும்’’ என்கிறார் அலெக்சாண்டர் சொகுரோவ் (Alexander Sokurov).

மிகக் குறைந்த இசைக் கருவிகளால் ஐரோப்பிய செவ்வியல் பாரம்பரிய இசையிழைகளை இயற்கை ஓசைகளினூடே நெய்திருப்பவர் மிஹேய்ல் இவானோவிச் (Mikhil Ivanovich). மகனாக அலெக்ஸி அனானிஸ் ச்னோவ் (Alexe Ananischnov) என்பவரும் அம்மாவாக குட்ருன் கேயர் (Gudrun Geyer) என்பவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

Moloch (Молох) 1999 in English Online

அந்த இடம் பவேரியாவில் ஹிட்லரின் கோடைகால தங்குமிடம். புகை போன்ற மேகமூட்டம் கவிழ்ந்த மலையுச்சியிலுள்ள அற்புதக் கோடை மாளிகை. வருடம் 1942, ரஷ்யாவில் ஸ்டாலின்கிராடை முற்றுகையிட்டு தாக்கி வந்த ஹிட்லரின் நாஜி ராணுவம் செம்படையினரால் தோற்கடிக்கப்படுவதற்கு சிறிது காலம் முன் நடைபெறும் நிகழ்வுகளைக்கொண்ட அலெக்சாண்டர் சொகுரோவ் (Alexander Sokurov)-வின் அற்புதத் திரைப்படம் ‘மொலோச்’ (Moloch) மொலோக் என்றும் உச்சரிப்பர். 1999-ல் திரையிடப்பட்டது. இப்படத்தின் திரைக்கதை வடிவை யூரிஆரபோவ் (YURI ARABOV) என்பவரும் மரினா கோரெனேவா (Marina Koreneva) என்பவரும் இணைந்து செய்துள்ளனர். இந்த ரஷ்ய திரைப்படத்தின் ‘மெலோச்’ எனும் தலைப்பு பழைய கிறிஸ்துவ ஏற்பாட்டில் (Old Testament) குறிப்பிடப்பட்டுள்ள குழந்தை பலி கேட்கும் மனித மாமிசப்பட்சினியான கடவுள் மொலோச் என்பதைக் குறிக்கும். இத் தலைப்பானது அதிகாரத்தின் அழிவுச் செயல்பாட்டு குணத்தையும், மனிதனின் சர்வாதிகாரத்தையும் அடால்ஃப் ஹிட்லரின் அந்தரங்கத்தையும், அந்தரங்க உறவுகளினூடேயும் குறியீடுகளாக ஆய்ந்து சொல்லுகிறது.

ஹிட்லரின் காதலி ஈவா ப்ரானும் Eva Braun ஹிட்லருடன் அம்மாளிகையில் தங்கியிருக்க ஏற்பாடான நிலையில் ஈவா எல்லாருக்கும் முன்பாக தனியாளாய் அங்கு வந்து காத்திருக்கும் பொழுதிலிருந்து படம் தொடங்குகிறது. ஈவா தன் முழு நிர்வாண உடல் வாளிப்பை நமக்கு காட்டினபடியே காலையின் உதயத்தில் மலைமீதுள்ள அம்மாளிகையின் ஆளோடியில் உடற்பயிற்சி செய்கிறாள். மலர்ச்சியான முகம். ஏராளமான இளம் எதிர்பார்ப்புகள். இளம் ரத்தமும், நரம்பு முறுக்கும் வாழ்க்கையை அன்றிரவே அனுபவித்துத் திளைக்கத் துடிக்கும் வயது, வாளிப்பு, சுதந்திரம், உறவு அந்தஸ்தின் கர்வம் எல்லாம் அவளை ஓடாடி குட்டிக்கரணம் போடவைக்கிறது. கைப்பிடிச் சுவர் மீது நின்று கைகளை விரித்து தன் நிர்வாண உடலோடு சூரிய நமஸ்காரம் செய்வதுபோல நிற்கிறாள். வெகு தூரத்தில் மரங்களுக்கிடையில் மறைந்து நிற்பவன் ஒருவன் பைனாகுலர் வழியே ஈவாவை குறிபார்த்துக் கொண்டிருப்பதை அவள் கவனித்துவிட்டு மகிழ்ச்சியோடு தன் உடலழகுக்கு உடனடியாக ஓர் அங்கீகாரம் கிட்டின சுகத்தில் சிரித்து கையசைத்துவிட்டு மறைகிறாள்.

ஹிட்லரும் அவரது பரிவாரமும் வருமுன் நேரத்தைக் கொல்ல ஈவா எதையெதையோ குடைகிறாள். ஓர் இசைத்தட்டை அதன் உறையிலிருந்து உருவி வைத்து முடுக்குகிறாள். ஹிட்லர் காலத்து கிராமபோன் பெட்டி பிரமிக்க வைக்கிறது. அந்த இசை இராணுவ அணிவகுப்பு நடைக்கானது. நாஜிராணுவம் மிடுக்குநடை செய்கையில் வாசிக்கப்படும் மிலிடரி பாண்ட், ஈவா தன்னை ராணுவ வீரனாக நினைத்து சாப்பாட்டு மேஜையை மிடுக்குநடையில் சுற்றி வந்து அமர்ந்து ராணுவ இசைக்கு தன் நிர்வாணக் கால்களாலேயே இப்படியும் அப்படியும் அபிநயம் செய்வது மிகவும் ரசிக்கத்தக்கது. அவர்கள் யாவரும் வந்துவிட்டதை கீழேயிருந்து வரும் ஓசை தெரிவிக்க ஈவா எழுந்து அங்கியணிந்து கீழே இறங்குகிறாள்.

ஹிட்லரோடு நெருக்கமான ஜோசெப் கோயபெல்ஸ், மார்டின் போர்மன், இவர்களின் மனைவிகள், ஹிட்லரின் அந்தரங்கச் செயலர் எரிக் பிக்கர் ஆகியோரும், கருப்பு சீருடை தரித்த எஸ்.எஸ். படைப்பிரிவின் ஆண், பெண் அதிகாரிகளும் வந்திருந்தனர். இப்படையினர் ஹிட்லருக்கு பாதுகாப்புக்கும், ஒட்டுக்கேட்பதற்குமாய் வந்தவர்கள். ஹிட்லருடன் மற்றவர்கள் பேசும்போதும், மற்றவர்கள் தத்தமக்குள்ளே தாழ்ந்த குரலில் ஹிட்லர் இல்லாதபோது பேசிக்கொள்ளும்போதும் ஒட்டுக்கேட்டு கவனிக்க எஸ்.எஸ். காரர்கள் தயாராகின்றனர். ஹிட்லரோடு வந்திருக்கும் அவர் முன்னிலையில் ஒரு மாதிரியும் அவரில்லாதபோது வேறு மாதிரியும் பேசிக்கொள்ளுகின்றனர். ஏழெட்டு சமையல் வித்தகர்கள் வந்திருக்கிறார்கள். ஹிட்லர் முதலில் அவர்களை நலம் விசாரித்து கை குலுக்கிவிட்டு சைவ உணவு, காய்கறிச் சமையல் குறித்து மிகவும் பெருமையாக எல்லோரிடமும் சொல்லிக்கொள்ளுகிறார். ஹிட்லர் மற்றவர்களைப் பார்த்து, ‘‘என்ன புது செய்தி?’’ என்று கேட்கிறார். ஒருவர் உடனே கூறுகிறார். ‘‘காலையில்தான் குட்டி போட்டது’’என்று, பாதுகாப்பான துணி மீது படுத்து அசைந்தபடியிருக்கும் கருப்பு நாய்க்குட்டிகளை ஹிட்லருக்கு காட்டுவார். ஹிட்லர் முகம் மலர்கிறது.

ஜோசப் கோயபெல்ஸ்ஸுக்கு (Joseph Goyebells) மார்ட்டின் போர்மனைக் (Martin Bormann) கண்டால் ஆகாது. இருவருக்கிடையேயான பொறாமை இங்கே வெளிப்படுகிறது. கோயபெல்ஸின் மனைவி மார்டினை மட்டந்தட்டுவதில் கணவனை முந்திக்கொள்ளுவாள். கோயபெல்ஸ் அன்டப்புளுகன் – ஆகாசப்புழுகன் என்று உலகளாவிய முத்திரை குத்தப்பட்டவன். மார்டின் போர்மன் யூதர்களை ‘மஸ்டர்டு காஸ்’ (Mustardgas) எனும் படுபயங்கர விஷவாயுவை யூதர்களை அடைத்து வைத்த மரண அறைகளுக்குள் செலுத்திக் கொன்றவன் என்பதும் உலகளாவிய செய்தி. அதை உறுதிபடுத்தும் தொனியில் இத்திரைப்படத்தில் ஓர் அரிய உரையாடலும் காட்சியும் வைக்கப்பட்டுள்ளது. கோயபெல்ஸின் வழிகாட்டலில் இக்காரியத்தை அவர் மனைவி மேற்கொள்ளுகிறாள். ஹிட்லர் ஓய்வெடுத்துக்கொள்ள மாடிக்குச் சென்றவுடன் கோயபெல்ஸின் மனைவி ஈவா ப்ரானுக்கென, தான் கொண்டுவந்ததாகச் சொல்லி சில பெண்கள் ஃபாஷன் பத்திரிகைகளைக் கொடுக்கிறாள். ஹிட்லரின் காதலியென்பதால் ஈவாவுக்கு தனி கெளரவம், மரியாதை, மதிப்பு எல்லாம் கிடைக்கிறது.

ஹிட்லர் மாடிக்குப் போனதும் இவர்கள் கூத்து ஆரம்பமாகிறது. முதற் காரியமாக அலமாரியைத் திறந்து மதுப் புட்டிகளை ஒரு கை பார்க்கின்றனர். இப்போது எஸ்.எஸ். ஒற்றர்கள் உஷாராகி சுவர்களில் ஒளிந்து இவர்களின் பேச்சை ஒட்டுக்கேட்பதிலிருக்கின்றனர். எல்லாரது பேச்சையும் சுருக்கெழுத்தில் எழுதிக்கொண்டே வருகிறார் ஹிட்லரின் அந்தரங்க காரியதரிசி எரிக் பிக்கர் (Erick Picker). ஒரு முக்கிய தகவல், எரிக் பிக்கரின் நாட்குறிப்புப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் யூரி ஆரபோவ் மொலோச் திரைப்படத்துக்கான கதை வடிவை உருவாக்கி சொகுரோவ் படமாக்கியுள்ளார்.

The Aleksandr Sokurov Collection : Kirill Mashkovi, Igor Yerdin, Robert  Vaap, Tsetsiliya Zervudaki, Aleksandr Abdulov, Yuri Sternin, Aleksandr  Cherednik, Viktor Palech, Vyacheslav Rogovoy, R. Molokeyev, D. Samokhin, N.  Sidash, Sergei Yurizditsky, Mikhail

‘‘இங்கே எவ்வித அரசியலும் பேசக்கூடாது’’ என்று எல்லோருக்கும் கோயபெல்ஸ் சொல்லி வைக்கிறார். ஆனால் அவர்களின் உரையாடல்களின்போது அரசியலின் தவிர்க்க முடியாத தாக்கம் அவ்வப்போது தலைதூக்குகிறது. குறிப்பாக கிழக்கில் ரஷ்யாவுடனான போர் அரங்கம், மார்டின் போர்மன்பேரில் தனக்குள்ள பொறாமையை அவ்வப்போது ஜோசப் கோயபெல்ஸ் நக்கலாக வெளிப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. அதே சமயம், தான் சொல்ல வருவது எதையும் தன் மனைவியைவிட்டே பேசச் செய்தவர் அவர். அன்றிரவு சாப்பாட்டுக்கு முன்பாக கோயபெல்ஸ்ஸின் மனைவி ஈவா ப்ரானின் காதில் ஓதுகிறாள்,

‘‘மார்டின் மேலே மஸ்டார்டு காஸ் நாத்தமடிக்குது. பக்கத்தில வந்தாலே அந்தக் கடுகு வாயு நாத்தம் தாங்கல்லே. தலைவருக்கு (ஹிட்லருக்கு) அந்த நாத்தம்னாலே ஆகாது.’’

‘‘சீ, அப்படியெல்லாம் இருக்காது’’ என்கிறாள் ஈவா.

‘‘வேணும்னா நீயே பக்கத்திலே போய் நின்னு பாரு’’

ஈவா மெதுவாக நடந்துபோய் மார்டின் போர்மனுக்கு பின்பக்கமாய் நின்று மூக்கை கூர்மையாக்கிக் கொள்ளுகிறாள். அவள் திரும்பி வரும்போது, மார்டின் வேகமாய் வந்து மூவரையும் பார்த்து, ‘‘என்ன விஷயம், எல்லாரும் எம்பின்னாலயே வந்து நிக்கறீங்க?’’ என்று அதட்டலாகக் கேட்கிறார். ஒருவர் மீது ஒருவருக்குள் சந்தேகம் வலுப்பதை சொகுரோவ் அற்புதமாகச் சித்தரிக்கிறார். அது மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான யூதர்களை விஷவாயு செலுத்தி காஸ் சேம்பரில அடைத்துக் கொன்ற கொடூர நாஜி அதிகாரிகளுள் மார்டின் போர்மனும் ஒருவர். விஷவாயுக் கிடங்கில் யூதர்களை அடைத்து நச்சுவாயுவை செலுத்தி கொன்றுபோட்ட கையோடு அவர் ஹிட்லரோடு வந்திருக்கிறார் என்பதை சூசகமாக சொல்லும் வார்த்தைகள். யூதர்களைக் கொல்ல நாஜிகள் பயன்படுத்திய விஷவாயு தினுசுகளிலேயே மிகக் கொடூர சக்திமிக்கது Mustard Gas எனும் வகை. இப்படத்தில் ஓரிடத்தில் ஹிட்லர் விஷவாயு அறைகள் இருப்பதே தனக்குத்
தெரியாது என்பார்!

இராச் சாப்பாட்டுக்கு ஏற்பாடாகிறது. ஹிட்லர், யாரார் எங்கே அமர்வது என்பதை சொல்லுகிறார். குஷி தாங்காது பைத்தியம்போல குதிக்கிறார். இரு இளம் பெண்பரிசாரகர்களைப் பார்த்து அவர்களையும் உடனமர்ந்து சாப்பிடுமாறு சொல்லுகிறார். அந்தப் பெண்கள் பயந்துபோய் உட்கார்ந்த பின் கோயபெல்ஸ் ஜாடை காட்டவும் எழுந்து போகிறார்கள்.

ஈவா ப்ரான் அன்றிரவே உடலார்ந்த தேக சுகம் அனைத்தையும் பெற்று அனுபவித்துவிடவேண்டுமென்ற துடிப்பிலிருக்கிறாள். ஹிட்லர் இந்தப் போரில் தோற்றுவிடப் போகிறோம் என்ற உள்ளார்ந்த நடுக்கத்திலிருக்கிறார். சாப்பாட்டு மேஜையில் எல்லோரும் உட்கார்ந்ததும் சொகுரோவ் ஒரு ரசாபாசக் காட்சியை மின்னலிடுகிறார். ஈவா தனக்கு அமர்ந்துள்ள போர்மனின் கால்சட்டைப் பித்தான் பகுதியில் கையை வைத்து அழுத்திப் பிசைகிறாள். அவளது உடல் வேட்கை புலப்படுவதை கோயபெல்ஸின் மனைவி தவறாது கவனிக்கிறாள். உணவு முடித்து ஹிட்லர் புறப்படுகையில் கோயபெல்ஸின் மனைவி அவருக்கு அறிவுரையொன்று கூறியனுப்புகிறாள்.

‘‘அமைதியாயிருங்கள், படுக்கைக்குப் போகுமுன் மூலிகை தேநீர் பருகுங்கள்.’’

ஹிட்லரின் படுக்கையறை நிகழ்ச்சி ஒரு புறம் நகைச்சுவை மிக்கதாயும் ஒரு புறம் ஆழ்ந்த கவனம் கொள்ளத்தக்கதாயும் இருக்குமாறு பார்த்துக் கொண்டிருக்கிறார் சொகுரோவ். ஹிட்லர் சாமானியத்தில் பெண்கள் தன்னை நெருங்கவிட மாட்டார், பெண்களை நெருங்கவும்மாட்டார் என்பது ஒரு புறம். மற்றொன்று தனது பலஹீனங்கள் எதையும் பிறர் அறியலாகாது என்று உறுதியாகவும் கடுமையாகவுமிருந்தவர். படுக்கையறைக்குள் போனதும் ஹிட்லர் தன் ராணுவ சீருடை மற்றும் சட்டைகளைக் களைந்து வெறும் உள்ளாடைகளில் படுத்திருக்கிறார். விரகதாபம் மேவிய ஈவா அவரையொட்டி படுக்கையில் உட்கார்ந்தபடி அவரை மெதுவாக சீண்டுகிறாள். முதலில் ஹிட்லர் தனக்கு உடல்நிலை சரியில்லையென்று கூறி அவளை தட்டிக்கழிக்க முயல்கிறார். அவள் அதை நம்பவில்லை என்றதும், தான் வயதானவன் என்பார். அவள் அதைப் பொருட்படுத்தவில்லை என்றதும் தனக்கு இருக்கும் உடல் உபாதைகள் என்று ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துச் சொல்லுகிறார். அப்போது ஈவா எழுந்து நின்று தன் நிர்வாண உடலைக் காட்டுகிறாள். ஹிட்லர் பரிகசித்து கடிந்துகொள்ள, அவள் அவரது ஆண்மையை குத்திக் காட்ட, அவர் அவளைத் தாக்க உள்ளாடையில் துரத்துகிறார். பெரிய மேஜையொன்றை இருவரும் துரத்திப் பிடிக்க ஓடுகிறார்கள். ஈவா போக்குக் காட்டுகிறாள். முடிவில் பிடிபட்டு இருவரும் தரையில் உருண்டு புரண்டு மூச்சிரைக்க ஓய்வுறுகிறது இரவு.

மறுநாள் அவர்கள் அனைவரும் இடத்தைக் காலி செய்ய வேண்டியது. போர் ஆவணத் திரைப்படமொன்றை போட்டுக் காட்டுகிறார்கள். கிழக்கு ஐரோப்பிய போர் அரங்கில் சோவியத் படைகளிடம் ஜெர்மன் நாஜிப்படைகள் அடிவாங்க தோல்வி முகத்திலிருக்கும் உண்மை நிலையை ‘தலைவர்’ அறியக்கூடாதென உண்மையை மறைத்து பொய்யான ஆவணப்படங்களையும் தயாரித்து ஹிட்லருக்குப் போட்டுக் காட்டி வந்தனர். ஆனால் ஹிட்லரா கொக்கா? ஜெர்மன் படைகள் வெற்றிமுகம்- சோவியத்துகள் பின்வாங்கல் என்ற காட்சி – ஓர் அரிய ராணுவ இசைப்பிரவாகம் பொழியப்படுகிறது. ஹிட்லர் அந்த முழு ஆவணப் படத்தையும் பார்த்து முடிந்த பின் அதையெல்லாம் அபத்தமானதென்று திட்டுகிறார்.

தேவாலய மத குரு ஒருவர் ஹிட்லரை வந்து பார்த்து ஜெர்மன் ராணுவத்தினர் தேவாலயங்களுக்குப் போய் ஜெபம் செய்வதை ஹிட்லர் தடை செய்திருப்பதை எடுத்துக்கூறி அவ்வாறு சென்றவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்துவந்த ஹிட்லரை மன்றாடி சிப்பாய்களை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறார்.
அதற்கு ஹிட்லர், ‘‘நான் வெற்றி பெற்றால் எல்லோரும் என்னைத் துதித்து வழிபடுவார்கள். தோற்றுப்போனால், வாசலில் போடும் ஒரு மிதியடியாகக்கூட என்னை மதிக்கமாட்டார்கள்’’ என்று பதிலளிக்கிறார்.

பிறகு ஒரு பிக்னிக் ஏற்பாடாகிறது. மலைப்பகுதியில் எல்லோரும் நடனமாட ஹிட்லரும் ஆண், பெண்களோடு கை கோர்த்து குதித்து நடனமாடுகிறார். பிறகு சற்று நேர தனிமைவேண்டி நடந்து சிறு பள்ளத்தாக்கை அடைந்து நிற்கிறார். தொலைவில் பாறையிடுக்கில் அவரை எஸ்.எஸ். ஒற்றர்கள் கண்காணிக்க, ஒருவன் டெலெஸ்கோப் இணைத்த துப்பாக்கியால் அவரை குறிபார்த்துவிட்டு சிரித்துக் கொள்ளுகிறான். எல்லோரும் அந்தக் கோடை மாளிகையைவிட்டு புறப்படுகையில் ஹிட்லர் சிலரைப் பற்றி விசாரிக்கிறார்.

‘‘அவர்களெல்லாம் ஆஸ்விட்ஸ் கைதிமுகாமுக்கு போயிருக்கிறார்கள்’’ என்கிறாள் ஈவா.

(Auzwitz) போலந்திலுள்ள படுபயங்கர நாஜி கைதிமுகாம், லட்சக்கணக்கில் யூதர்கள், ஜிப்சிகள், கம்யூனிஸ்டுகளை இங்கு அடைத்து விஷவாயு செலுத்தி நாஜிகள் கொன்றார்கள்.

‘‘அது எங்கே இருக்கிறது?’’ என்று கேட்கிறார் ஹிட்லர் அதற்கு உடனே கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு மார்டின் போர்மான் கூறுகிறார், ‘‘ஆஸ்விட்ஸ் என்ற பெயரில் எந்த இடமும் எங்குமே கிடையாது. இந்தப் பெண் அபத்தமாகப் பேசுகிறாள். என்ன பேசுவது, எப்படிப் பேசுவதென்றே இவர்களுக்குத் தெரியவில்லை.’’
படம் முடிகிறது. இப்படத்திற்கு அலெக்ஸி ஃப்யோடோரோவ் (Aleksey Fyodorov) மற்றும் அனடோலி ரேடினோவ் (Anatoli Radionov) என்ற இரு கேமரா கலைஞர்கள் அரிய முறையில் ஒளிப்பதிவாக்கியுள்ளனர். எலினா ருஃபானோவா (Elena rufanova) என்பவர் ஈவா ப்ரான் பாத்திரத்திலும் ஹிட்லராக லியோனிட் மோஸ்கோவோய் (Leonid Mosgowoi) என்பவரும் அலெக்சாண்டர் சொகுரோவை அனுசரித்து நன்கு நடித்துள்ளனர்.

Russian Ark (2002) - IMDb

ரஷ்யன் ஆர்க் (Russian Ark–2002 Russkij Kovcheg) 96 நிமிடம் ஓடும் அலெக்சாண்டர் சொகுரோவ் (Alexander Sokurov) இயக்கிய பிரமிக்கத்தக்க இத்திரைப்படம் ஒரே மூச்சில் 2001-ல் 87 நிமிடங்களில் ஒரே டேக்கில் எடுக்கவல்ல Steadicam Sequence படப்பிடிப்பு முறையில் ஜெர்மனியின் சிறந்த கேமரா கலைஞர் Tilman Bijttner என்பவரால் படமாக்கப்பட்டது. கான் சர்வதேச திரைப்பட விழாவில் 2002-ல் திரையிடப்பட்ட பின் ரஷ்யாவில் 2003-ல் திரையிடல் கண்டது ரஷ்யன் ஆர்க். இது ஒரு ரஷ்ய – ஜெர்மன் கூட்டுத்தயாரிப்பாகும். இத்திரைப்படம் முழுக்கவும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கிலுள்ள ஜார் மன்னனின் குளிர்கால அரண்மனையின் ஹெர்மிடேஜ் (Hermitage) அரும் பொருட்காட்சியகத்திலேயே படமாக்கப்பட்டது. ஹெர்மிடேஜ் எனும் பெயர் குளிர்கால அரண்மனையிலுள்ள சில மாபெரும் அறைகளின் பெயரிலிருந்து பெறப்பட்டது. தற்போதுள்ள ஹெர்மிடேஜ் வளாகம் புகழ்பெற்ற இத்தாலிய கட்டிட நிபுணர் பார்தலோமியோ ராஸ்ட்ரெல்லி (Bartolomeo Rastrelli) என்பவரால் 1754-1762 காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்த பிரமாண்ட கட்டுமானம் ரஷ்ய பரோக் பாணியில் வடிவமைக்கப்பட்டு உருவான மாளிகை. ஜார் மன்னனின் வசிக்குமிடமாய் பயன்படும் நோக்கத்தில் கட்டப்பட்டது. பரோக் பாணியென்பது (Baroque style) என்பது 17-ம் நூற்றாண்டுக் கலையில் ஓர் முக்கிய வகைமை.

17-ம் நூற்றாண்டில் ஒரு புறம் மறுமலர்ச்சிக் காலத்தின் நன்னம்பிக்கையும் மறுபுறம் மதமும் ஒழுக்க விதியும் வற்புறுத்திய தன்நிலை மறுப்பும் முரணாகி நின்றன. பகட்டான கலை இலக்கிய செயல்பாடுகளும் அவற்றை அறவே துறக்கச் சொல்லும் மத நிறுவனமும் என வாழ்வும் கலையும் முரண்பாடுகளால் அதிர்ந்தன எனலாம்.

‘‘உலகமே ஒரு நாடகம், ஆண், பெண்ணென்ற நாம் அனைவரும் நடிகர்கள் மட்டுமே. நடித்துவிட்டு வெளியேற வேண்டியவர்களே நாம்’’ என்று ஷேக்ஸ்பியர் விரக்தியுற்று சொல்லுவதும் பரோக் சிந்தனையே. 17-ம் நூற்றாண்டில் உருவான கலை இலக்கியங்கள் மீது பரோக் என்ற முத்திரை குத்தப்பட்டது. போர்த்துக்கீசிய மொழியில் பரோக்கோ (Barrocco) என்ற சொல்லிலிருந்து பிறந்தது பரோக் எனும் சொல். என்றால் ஒழுங்கற்ற வடிவம் கொண்ட முத்து என்று பொருள். சாதாரண இயல்பான கலைகளைவிட ஒழுங்கின்மையால் ஆன பரோக் கலைகள் முரண்பட்ட தன்மையுடன் வித்தியாசமாயுள்ளன. மரபின் ஒழுங்கை பரோக்கின் ஒழுங்கின்மை தகர்க்கிறது. பிரமாண்டமான வண்ண ஓவியங்கள் அகன்ற மிகப் பெரிய மேற்கூரையின் உட்பரப்புகளில் மிகப் பரந்த அளவில் தீட்டப்பட்ட ஓவியங்கள் என்று பரோக் ஓவியங்கள் பார்வையாளனை அசத்தின. இக்கலை வகைமையின் முக்கிய பங்களிப்பு கட்டிடக்கலையில்தான் தெரிகிறது. தேவாலயங்கள், மாளிகைகள் போன்றவை. பாரிஸ், வியன்னா, மியூனிக், மாட்ரிட், வார்சா, ப்ராக், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற பெரு நகரங்கள் யாவும் பரோக் நகரங்களாய் உருவாகியவை.

ரஷ்யன் ஆர்க்- படம் தொடங்கினதும் 17-ஆம் நூற்றாண்டு உடை ஒப்பனையில் அழகிய ஆண், பெண்களை காண்கிறோம். ஓர் இளம் பெண்ணைத் தூக்கிக்கொண்டு இளம் வீரன் ஒருவன் ஹெர்மிடேஜ் வளாகத்தில் கூடியுள்ள கூட்டத்தில் இருக்கிறான். நூற்றுக்கணக்கான கவர்ச்சிமிக்க ஆண், பெண் இணைகள் சிரிப்பும் கூச்சலுமாய் மாளிகையின் படிகளில் நெருக்கித் தள்ளிக்கொண்டு போகிறார்கள். பெயரில்லாத ஒருவன் கருப்பு உடையில், கலைந்த தலையில் மாளிகையில் கூட்டத்திடையே அலைகிறான். இவன்தான் படத்தின் ஓட்டத்தினூடே விளக்க உரை தந்தபடி அலைகிறான். இவன் தான் படத்தின் ஓட்டத்தினூடே விளக்க உரை தந்தபடி அலைகிறான். இந்த மனிதன் மாளிகையில் சுற்றி நடமாடும் பிற மனிதர்களின் கண்களுக்குப் புலப்பட மாட்டான். திடீரென சிலருக்கு மட்டும் புலப்படுவான், மீண்டும் ‘MR, X’ ஆகிவிடுவான். அவனுக்காக விளக்கவுரை தரும் குரல் படத்தின் இயக்குனர் சொக்ரோவுடையது. இந்த மறைந்த மனித ஜீவி கூறுகிறான், தான் மோசமானதொரு விபத்தில் மாண்டுபோனவன் என்றும், இப்போது பிறர் கண்களுக்குப் புலப்படாத தான் மாண்டவனின் அருவரூப் பிசாசு என்கிறான். எனவே, அந்தப் பிசாசு மனிதர்களோடு கலந்து மாளிகையின் ஒவ்வொரு அறையாக வலம் வருகையில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் 300 வருட வரலாற்றின் பல்வேறு விதமான நிஜமானவர்களையும், கற்பனை வடிவ மனிதர்களையும் எதிர்கொள்ளுகிறான். வரலாறும் அதன் மாந்தரும் 300 ஆண்டுகளில் கடந்த காலத்தவராயும் சமகாலத்தவராயும் மாறி மாறி காட்சிப்படுத்தப்படுகிறார்கள். சொக்ரோவ் தொடர்ந்து பாராட்டப்படுபவராகவே குரல் தந்தபடி தாம் காட்சிபடுத்திய சலனங்களில் நம்மையும் நகர்த்திச் செல்லுகிறார்.

ஓர் அரிய நேர்காணலின்போது இப்படம் ஒளிப்பதிவாகும் முறை, கேமரா கலைஞரின் செயல்பாடு, இயக்குனரின் செயல்பாடு எல்லாவற்றையும் காண வகை செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களுக்கு முன் சத்யஜித்ரே தமது ‘கரே பாய்ரே’ படத்தின் படமாக்கலின்போதே ஷியாம் பெனகலின் நேர்காணலையும் வைத்துக் கொண்டார். பெனகலின் நேர்காணல் கேள்விகளுக்கான ஒரு சில பதில்கள் மாதிரி படப்பிடிப்பும் ரேயின் இயக்கமும் தற்செயலாக அமைந்துவிட்டிருக்கும். அதை நினைவூட்டும் விதமாக அலெக்சாண்டர் சொகுரோவ் (Alexander Sokurov)-வின் நேர்காணல், அவரது பதில்கள், படப்பிடிப்பு- அதன்போதான இயக்கம் மற்றும் ஒளிப்பதிவாளரின் திறனெல்லாம் ரஷ்யன் ஆர்க் படத்தின் படப்பிடிப்பின்போதும், தற்செயலாக இடம் பெறுவதுபோல் அமைந்துள்ளது.

படத்தில் ‘NARRATOR’ விளக்க உரை தந்தவாறு [விளக்க உரையைத் தம் குரலில் தருவது இயக்குனர் சொகுரோவ்] அலைகையில் அவனோடு வெறொரு ஐரோப்பியனும் கூட வருவான். அந்த ஐரோப்பியன் பகழ்பெற்ற ஃபிரெஞ்சு நீண்டதூரப் பயணியான 19-ம் நூற்றாண்டு MARQUES DE CUSTINE என்பவரின் சார்பாக வந்தவன் என அறியப்படுகிறது. இதை இயக்குனர் சொகுரோவின் உரையில் சூசகமாயும் நாம் புரிந்து கொள்ளலாம்.

சொகுரோவ் கூறுகிறார்: “இது ரஷ்யா மற்றும் ஐரோப்பிய கலாச்சாரம் மற்றும் வரலாற்றுக்கு இடையேயான உறவு மட்டுமல்ல, ரஷ்யாவிலிருந்து ஒரு ரஷ்யனுக்கும் ஐரோப்பாவிலிருந்து ஓர் ஐரோப்பியனுக்கும் இடையேயான – எதிர்கொண்ட சந்திப்புமாகும். இச்சந்திப்பு என்பது இரு குணாம்சங்கள், அவற்றின் பாத்திரங்கள், இரு உலக கருத்துக்களுக்கிடையேயான சந்திப்பு. இது மிகவும் ஆர்வமிக்கதும் மிக அசிங்கமான சந்திப்புமாகும். ஒரு ரஷ்யனுக்கும் ஒரு ஐரோப்பியனுக்கும் இடையேயான சந்திப்பு–ரஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையேயான சந்திப்பு. மகத்தான எதிர்பார்ப்புகளுக்கு இச்சந்திப்பு நியாயமிக்க வழியை அமைக்கும். ஐரோப்பா மீதான நேசமும். ஐரோப்பா மீதான ரஷ்ய ஈர்ப்பையும் உள்ளிட்ட ரஷ்யாவின் குறியீடுமாகும் இச்சந்திப்பு. ரஷ்யாவின் பேரில் ஐரோப்பாவுக்கு ஓரிரு ஒவ்வாமையுண்டு, துரதிர்ஷ்டவசமாக இது ஐரோப்பாவின் மன்னிக்கும்படியான ஒன்று. ஏனெனில் ஐரோப்பா காலாகாலமாக ரஷ்யாவை ஒருவித வேற்றுமனப்பான்மையோடும் கொடூரமாகவும் நடத்தியிருக்கிறது.

சொகுரோவ் ஹெர்மிடாஜ் அரும்பொருட்காட்சிக் கூடத்தை ரஷ்யன் ஆர்க் திரைப்படத்தின் மையமாய் வைத்ததற்கான காரணத்தையும் எளிமையாகக் கூறுகிறார்: “ரஷ்ய கலாச்சாரத்திலிருந்து ஹெர்மிடேஜை எடுத்துவிடுவதென்பது மிகவும் கடினமானது. மற்ற நாடுகளைவிடவும்கூட ரஷ்யாவிலுள்ள பெரும்பான்மை ரஷ்யர்களுக்கு கலாச்சாரம் மிக முக்கியம். ஹெர்மிடேஜ் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின் அடிக்கல்லும் மையக் குவியமுமாகும் முற்றிலும் உயிரோடுள்ள ரஷ்ய வரலாறு. ஐரோப்பிய கலாச்சாரமுமாகும். இதனால்தான் நான் ஹெர்மிடேஜை படத்துக்கான மையமாக தேர்ந்தெடுத்தேன்.”

ஹெர்மிடேஜின் ஏராளமான ஓவியக் கூடங்களிலும் சிற்பக்கூடங்களிலும் நாம் பயணிக்கிறோம். கிளியோபாட்ராவின் ஓவியமொன்றைக் கடக்கிறோம். யூத மதத்தினரும் ஆண் பிள்ளைகளுக்கு சிறுவயதில் ‘சுன்னத்’ செய்யும் வழக்கமுண்டு. இயேசுநாதர் யூதர் என்பதால் அந்தச் சடங்கு அவருக்கும் நடந்தது. இயேசுவின் அச்சடங்கு நிகழ்ச்சியை சித்தரிக்கும் பெரியதைல வண்ண ஓவியம் இத்தாலிய பக்தி சிரத்தை மிக்க ஓவியர் லேடோவிகோ கார்டி (LODOVICO GARDI) என்பவரால் தீட்டப்பட்டது. இவ்வோவியத்தையும் ஹெர்மிடேஜில் நாம் பார்க்கிறோம். மகத்தான இசை நாடகமொன்று [OPERA] நடைபெறுவதையும் அதற்கான பிரமிக்க வைக்கும் இசைக் கோர்வையும் பார்க்கிறோம். இவ்வரங்கு மாரின்ஸ்கி அரங்கு [THE MARIINSKY THEATRE] எனப்படுவது.

ரஷ்யன் ஆர்க் திரைப்படத்தின் இறுதிக்கட்டம் – உச்ச காட்சியும் நெருங்குகிறது. எல்லோரும் 18-ம் நூற்றாண்டு சீமான் – சீமாட்டிமார் உடை-நடை- பாவனை ஒப்பனையில் மிகப் பிரமாண்டமான குளிர்கால மாளிகையின் பால்ரூம் நடன நிகழ்ச்சியில் பங்கேற்க அந் நடனக்கூடத்துக்குப் போகும் காட்சி நம்மை திக்குமுக்காட வைக்கிறது. அக்கூடம் முதல் தளத்திலிருக்கிறது. அதையடைய வெள்ளை சலவைக் கற்களால் அழகுற இருபுறம் ஏறத்தக்க வகையில் வளைவாக அமைக்கப்பட்ட AMBASSADORIAL படிகளை ஏறிக் கடக்க வேண்டும். இப்படிக்கட்டு அமைப்பை 18ம் நூற்றாண்டில் ‘THE AMBASSADORIAL STAIRCASE’ என்றழைப்பார்கள். வெளிநாட்டுத் தூதுவர்கள் இதன் மேலேறி மேலேயுள்ள அறைகளில் தங்குவார்கள். இன்று ஹெர்மிடேஜுக்கான நுழைவாக அது இருக்கிறது. இந்த பிரமாண்ட படிகள் வழியே ஏறுவதும், நடனம் முடிந்து இறங்குவதும் கண்டுகொள்ளா காட்சி.

முன்னூறு ஜோடிகள் முன்னூறு விதமான உடையலங்கார ஒப்பனையில் பால் டான்ஸ் செய்யக் கூடுகிறார்கள். ஒளிப்பதிவாளரான ஜெர்மன் தேசத்து கேமராமேன் டில்மன் பட்னெர் [TILMAN BUTTNER] கூறுகிறார்: “பிரமாண்ட பால்ரூம் படப்பிடிப்பு. நான் என் உதவி கேமராமேனிடம் சொன்னேன். ஆணட்ரே, எனலாகாது… முன்னூறு கோடி ஆண், பெண்கள் 18ஆம் நூற்றாண்டுத் தோன்றத்தில் ஒப்பனையில் நடனமாட குழுமியிருக்கிறார்கள். 18-19 நிமிடங்களில் இந்நிகழ்ச்சி படமாக்கப்பட வேண்டும். என்னாலாகாது”

இந்நடன நிகழ்ச்சி வரலாற்று நிகழ்வு. இது நிஜமாக முதல் உலக மகா யுத்தம் தொடங்குமுன் 1913-ல் இடம்பெற்றது. கூடியிருந்த ஐரோப்பியர்கள் ரஷ்யாவை அன்றுதான் ஒரு ஐரோப்பிய நாடாக ஏற்றுக்கொண்டார்கள். ரஷ்யாவில் நடந்த கடைசி மன்னரது ராஜாங்க நடனமும் இதுதான். நடனமும் அதற்கான இசைக்கோர்வையும் பராட்டுக்கப்பாற்பட்டது. அவர்களனைவரும் அந்த மகத்தான படிகளைக் கடந்து இறங்கி வரும் காட்சியோடு படம் முடிகிறது.
செர்கேய் டிரைடன் [SERGEI DREIDEN] விளக்குபவராக–பிசாசாக நடிக்கிறார். மிகச் சிறப்பான இசையை அமைத்திருப்பவர் இசைகோர்வையாளர் செர்காய் யெவ்டுஷெங்கோ [SERGEI YEVTUSHENKO] ANATOLI NIKI FOROV மற்றும் சொகுரோவும் சேர்ந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.

எழுதியவர்:

விட்டல்ராவ்

Click to Join WhatsApp Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *