பயாஸ்கோப்காரன் 49: சோவியத் ரஷ்ய சினிமா (Soviet Russian Cinema) - 7 | செர்காய் பராட்ஜனோவ் (Sergei Parajanov) - https://bookday.in/

தொடர் 49: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

பயாஸ்கோப்காரன் – 49

சோவியத்–ரஷ்யசினிமா- 8
செர்காய் பராட்ஜனோவ்

விட்டல்ராவ்

 

  ஆர்மேனியரான செர்காய் யோசி ஃபோவிச் பராட்ஜனோவ் (sergei Yosiforich Paradzhanov) 1924ல் டிஃப்லிஸ் (Tiflis) என இன்றைய பெயரான ஜியார்ஜிய தலைநகர் டிபிலிஸியில் (TBILIS) பிறந்தவர். 1942- 45களில் ரெயில்வே போக்குவரத்து பொறியாளர் கல்வி நிலையத்தில் படித்துத் தேர்ந்தார். இவ்வாண்டில் உக்ரேய்னின் கைவ் நகரிலுள்ள டாவ்ஷெங்கோ திரைப்பட ஸ்டூடியோவில் உதவி இயக்குனராய் பணியாற்றினார். ரஷ்ய திரைப்பட கல்விக் கூடத்தில் (VGIK) 1952ல் இயக்குனர் பிரிவு கல்வியில் பட்டப்படிப்பு முடித்துத் தேறி தன் டிப்ளொமோ படிப்பு இறுதிக்கு பராட்ஜனோவ் செய்த அரிய குறும்படம் ‘‘ஒரு மோல்டேவிய கதை’’ (A Moldavian Tale) என்பது. சோவியத் யூனியன் அன்று உக்ரேய்ன், ஜார்ஜியா, ஆர்மேனியா, அசர்பைஜன், தர்க்மனிஸ்தான், கஸக்ஸ்தான் பைலோ ரஷ்யா முதலான சிறு நாடுகள் சேர்ந்த ஒன்றியமாயிருந்த சமயம் அவ்வந்த பிரதேசத்து தனித்துவமிக்க கலை கலாச்சாரத்தைக் கொண்ட கவிதை, சிறுகதை, நாவல்கள், சிறுவர் இலக்கியத்தை அவ்வந்த மொழிகளிலும் ரஷ்யா, ஆங்கில மொழிபெயர்ப்பிலும் பின் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் வெளியிட்டு வந்தது. அதையொட்டி திரைப்படங்களும் உருவாக்கம் கொண்டன. அதன் முக்கிய பிரதிநிதியாகத் தோன்றியவர் செர்காய் யோசிஃபோவிச் பராட்ஜனோவ். இவரது திரைப்படங்கள் தனிமனிதன் பற்றியதும் இனக்குழு சார்ந்தும் குறிப்பாக அவ்வந்த தேசியக் களத்தையும் பிரபஞ்சரீதியான மனிதத் தன்மை கொண்டவையாகவும் இருப்பவை. அதற்கொப்ப இவர் ஆர்மேனியா, ஜியார்ஜி மற்றும் உக்ரேய்ன் பிரதேசத்து மண் சார்ந்த நாடோடிக் கதைகள், பழங்குடியினர் கதைகளைத் தேடிப் போய் திரைப்படமாக்கியவர்.

 

பயாஸ்கோப்காரன் 49: சோவியத் ரஷ்ய சினிமா (Soviet Russian Cinema) - 7 | செர்காய் பராட்ஜனோவ் (Sergei Parajanov) - https://bookday.in/

  பராட்ஜனோவ் சிறந்த ஓவியர். இவரது ஓவியங்கள் சர் ரியலிஸ பாணியிலமைந்தவை. பல ஓவியங்களில் சர்ரியலிஸ மேதை சால்வெடார் டாலியின் ஓவியங்களின் பாதிப்பு வெளிப்படுகிறது. எடுத்துக்காட்டாக, டாவின்சியின் மோனாலிஸா ஓவியத்தை பல்வேறு துண்டுகளாக வெட்டி ஒவ்வொரு துண்டையும் ஆண் தோற்றமும் பெண் தோற்றமும் கொண்ட தனித்தனியான வெவ்வேறு ஓவியங்களாய் பராட்ஜனோவ் உருவாக்கியிருக்கிறார். பிக்காஸ்ஸோ தன் மார்பளவுப் படத்தையே வண்ணங்களைக் கொண்டு அங்கேயுமிங்கேயும் கோடிழுத்து தலையில் இறகு வைத்த தொப்பி வைத்து காட்சி தந்தவர். அந்த சுய ஓவிய ஆசை பராட்ஜனோவுக்குமுண்டு, தன்னையும் அப்படியெல்லாம் அலங்கரித்து வண்ணந்தீட்டி பறவையொன்று உட்கார்ந்திருக்கும் தொப்பியை வைத்து ஓவியமாக்கி நம்மை பார்க்கிறார். இவரது ஓவியங்கள் அதி நவீனத் தன்மையும் கூர்மையான சிந்தனை வெளிப்பாட்டையும் கொண்டவை.

  பராட்ஜனோவ் 1964ல் ‘‘Shadows of Forgotten Ancestors’’ எனும் படத்தை இயக்கி 1965ல் வெளியிட்டார். இப்படம் உக்ரேனிய எழுத்தாளர் மிகேய்ல் கோட்சியுபின்ஸ்கி (Mikhail Kotsyubinsky) என்பவரின் சிறுகதைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. சிறுகதைகளின் சூழலும், பாத்திரங்களும் கதைக்கு கதை வேறு வேறாக இல்லாது ஒன்றாக இருப்பதால் தொடர்ச்சியாக இருப்பதோடு பராட்ஜனோவ் அவற்றை ஒரே கதையாக கோர்த்துப் படமாக்கியிருக்கிறார். உக்ரேய்னின் கைவ் நகரிலுள்ள டாவ்ஷெங்கோ திரைப்பட நிலையம் தயாரித்த இப்படம் மேற்கு நாடுகளில் ‘‘Fiery Horses’’ என்ற பெயரில் திரையிடப்பட்டது. உக்ரேயினின் சிறப்பான பழங்குடி நாடோடி இசை அவர்களின் பளிச்சென்று வண்ணங்களை படத்தில் கொண்டு வருகிறார் பராட்ஜனோவ். இப்படத்தின் பல காட்சியாடல்களின் சட்டகங்களை ஓரிரு நிமிடங்களுக்கு அசையாதபடி நிறுத்திப் பார்க்கையில் 60, 70-களில் சோவியத் ரஷ்யா ஆண்டாண்டு கொண்டுவரும் வண்ணப்படங்களாலான காலண்டர்கள் நினைவுக்கு வருபவை. சோவியத் ரஷ்யாவின் பல்வேறு மாத இதழ்களுக்கு சந்தா பிடிக்க ஏஜெண்டுகள் வருட ஆரம்பத்தில் வங்கிகள், மத்திய-மாநில அரசு அலுவலகங்களுக்கு வந்து, சந்தாதாரர்களுக்கு இலவச அன்பளிப்பாக தரப்படும் ரஷ்ய காலண்டர்கள் முதலானவற்றை காட்டுவார்கள். நான் சோவியத் லிட்டரேச்சர், சோவியத் யூனியன் இரண்டுக்கும் பிறகு ஸ்புட்னிக் இதழுக்கும் சந்தாதாரனாக சேர்ந்தபோது அற்புதமான காலண்டர்களைப் பெற்றேன். அவற்றில் ஒன்று, சோவியத் ஒன்றிய நாடுகளின் பழங்குடி பெண்களின் அணிகலன்-உடை தினுசுகளில் அவ்வழகிய 12 பெண்களை விதவிதமாய்க் கொண்ட 12 மாதங்களின் காலண்டர். அந்தப் பெண்களையே திரையில் நடமாடவிட்டதுபோன்று பராட்ஜனோவின் இப்படத்தில் சட்டகங்களில் சலனிக்கும் அற்புதமான வண்ண ஒளிப்பதிவு-கேமரா கோணம்.

பயாஸ்கோப்காரன் 49: சோவியத் ரஷ்ய சினிமா (Soviet Russian Cinema) - 7 | செர்காய் பராட்ஜனோவ் (Sergei Parajanov) - https://bookday.in/

   சிவந்த தீத்தனல் வழியாகவும் வெள்ளைப் பனியின் மீது சிதறிய செங்குருதி வழியாகவும் வீட்டில் தயாரிக்கப்பட்ட தலை விரிப்பு ஒன்றின் சிவப்பு நூல் வழியாகவும்கூட பார்வையாளன் பராட்ஜனோவ் காட்டும் ‘‘மறக்கப்பட்ட முன்னோர்களின் நிழல்களை’’ இனம் காண முடிகிறது. உக்ரேய்னிலுள்ள கரடுமுரடான அழகிய கார்பேதியன் (Carpathian Mountains) மலைகள் பகுதியில் இப்படம் இடம் பெறுகிறது. ஜென்மப் பகை கொண்ட இரு குட்ஜுல் (GUTZUL) இனக் குடியானவர் குடும்பங்களைச் சேர்ந்த இவான் மற்றும் மாரிக்கா (Ivan and Marichka) என்ற இளம் காதலர்களின் நிறைவேறாமல் முறிந்த காதலைப் பற்றிய கதையை படம் விவரிக்கிறது. தேவதாஸ் காதல்போல சின்னப்பிள்ளைகளாய் ஆடிப் பாடி வளர்ந்து காதலர்களான இருவரும் கணவன், மனைவியாக இணைய விடாத குடும்பப் பகையில் இவான் வேலை தேடி வேற்றூருக்குப் போய்விடுகிறான். நினைவுகளில் இருவரும் வாழ்க்கையில் மாரிச்கா இவானை சந்திக்க மலைச் சரிவில் நடக்கையில் பாறை சரிந்து அவள் ஆற்றில் விழுந்து மூழ்கி இறந்து போகிறாள். பைத்தியம் பிடித்துவிட்டாற்போலாகிவிட்ட இவான் பித்தனாய் சுற்ற, ஊரார் அவனுக்கு பாலக்னா (Palagna) எனும் பெண்ணை திருமணம் செய்து வைக்கின்றனர். இத்திருமணக் காட்சி மணமக்கள் உடை, ஒப்பனை மற்றும் சடங்குகள் அசத்துகின்றன. பராட்ஜனோவின் வழிகாட்டலில் அவரது மாஸ்டர் ஒளிப்பதிவாளரான யூரி இல்யெங்கோ (Yuri IlYenko)வின் கேமரா கோணங்கள் ஒவ்வொரு சட்டகத்தையும் கவித்துவமிக்க ஓவியங்களாக்குகின்றன. பராட்ஜநோவின் கதைக்களச் சூழலில் பழங்குடியினரின் ஆதி நம்பிக்கையான இயற்கை வழிபாடும் அவர்களின் பிற்கால கிறிஸ்தவ நம்பிக்கையும் கலந்து இணைந்து வருவதை அந்தக் கலப்புச் சடங்குகள் மூலம் காட்சி ரூபமாக்கியுள்ளார். அதற்கேற்றவாறு வியப்பூட்டும் வண்ணமுறையையும் பின்னணி இசையையும் சேர்த்திருக்கிறார்.

    ஆனால் இவான் இறந்து போன காதலி மாரிச்காவையே சதா நினைப்பதால் பாலக்னாவுடன் தாம்பத்ய உறவில் ஈடுபடவும் முடியவில்லை. இதனால் மனம் சோர்வுற்ற அவள் தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டி பில்லிசூனியத்தை (Black Magic) மேற்கொள்ளுகிறாள். பில்லிசூனிய நம்பிக்கை பழங்குடி கலாச்சார வாழ்வில் முக்கிய அங்கம் வகித்திருக்கிறது. நடு இரவில் யாருமறியாது அவள் முழு நிர்வாணக் கோலத்தில் சுடுகாட்டுக்குச் சென்று பூஜை செய்யப் போகையில் அவள் மீது ஒருவன் கண் வைக்கிறான். அவளை அணைத்துத் தழுவுகிறான். பிறகு அவனுக்கும், இவானுக்கும் ஏற்படும் சண்டையில் பயங்கரமாய் தாக்கப்பட்ட இவான் மரணமடைகிறான். இந்த மரணத்தை ஒட்டிய சடங்கும் உக்ரேனிய பழங்குடி கலாச்சார வழக்கத்தையும் கிறிஸ்தவ நம்பிக்கையையும் இணைந்ததாக நிகழ்த்தப்படுவதை பராட்ஜனோவ் காட்டுகிறார்.

  படத்தின் தொடக்கக் காட்சிகள் ஒன்றில் பராட்ஜனோவ் கைப்பிடியளவுக்கு மேற்கு உக்ரேய்னிய பழங்குடியினர் அணியும் ஆபரணக் கற்களை அள்ளி வீசி சிதறடிக்கிறார். இதுவும் படத்தின் போக்கை காட்டும் ஒரு குறியீடாகக் கொள்ளப்பட வைக்கிறது. உக்ரேய்னின் பண்டைய வழக்கப்படியான திருமண மந்திர ஓதல்கள் முதல் ஒவ்வொரு அன்றாடப் புழக்கத்துக்கான பாத்திர பண்டங்கள் வரை பராட்ஜனோவ் தன் ஓவிய அடிப்படை ரசனையை பழங்குடியின கலைப் பொருட்கள் வாயிலாக வெளிப்படுத்துகிறார்.

    உக்ரேனிய மொழியில் செர்காய் பராட்ஜனோவ் இயக்கிய இத்திரைப்படம் 1965ல் சோவியத் ரஷ்ய திரைப்பட விழாவின்போது சென்னையில் காண நேரிட்டது. இதன் மூலக்கதை மிகைலோவிச் கோய்ஸ்யுபின்ஸ்கி (Mikhaylovich Koysyubinsky) என்பவரின் உக்ரேனிய நாவலைத் தழுவியது. இப்படத்தின் வியத்தகு வண்ண ஒளிப்பதிவை யூரி இல்யெங்கோ (Yuri ilyenko) என்ற திறமை மிக்க கேமராமேன் விக்டர் பெஸ்டயேவ் (Victor Bestayev) என்பவரோடு இணைந்து செய்திருக்கிறார். அரிய பழங்குடி இசையை பொழிந்திருப்பவர் மிரோஸ்லாவ் ஸ்கோரிக் (Miroslav Skorik). இவானாக, இவான் மிகோலே சூக் (Ivan Mikolay Chuk) என்பவரும் மாரிச்காவாக லாரிசா கடோசி நிகோவா என்பவரும் மனதை உருக்கும்படி நடித்துள்ளனர்.

    பராட்ஜனோவ் 1969ல் ஆர்மேனிய மொழியில் ஆர்மேனியாவிலுள்ள எரெவான் (Yeravan) என்ற  இடத்தில் ஒரு சிறந்த திரைப்படத்தைச் செய்தார். ‘‘மாதுளம் பழங்களின் நிறம்’’ (The Color of Pomegranates) என்ற அத்திரைப் படம் சர்வதேச அளவில் பலத்த பாராட்டைப் பெற்றது. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆர்மேனிய கவிஞனும் மத குருவுமான சயட்- நோவா (Sayat-Nova) என்பவரின் வாழ்க்கையை அவர் காலத்து ஓவியங்கள் வழியாகவும் அவரது கவிதை வரிகளினூடேயும் தேடிக் காட்டுகிறது திரைப்படம். சயட்-நோவா என பரவலாக அறியப்பட்ட ஆர்மேனிய கவிஞர் ஆருதின் சயாதின் (Aruthin Sayadin) என்பவரின் பூடகமும் நெறிமுறையும் நிறைந்த வாழ்க்கை, எழுத்துப் பணி மற்றும் அக உலகு பற்றிய வரலாற்றை பின்னிய திரைப்படம், சயட் நோவா என்றால் ஆர்மேனிய மொழியில் ‘‘பாடலின் அரசன்’’ என்று பொருள். காதலும், கூடலும், ஊடலும், பிரிவும் போற்றுதலும், இறை நம்பிக்கையும், அருளும் கவிதை வரிகளில் குறியீடுகளாய், செவ்வண்ணத்தால் வெளிப்படுகையில் மனித உருவங்கள் பெயரற்ற பாத்திரங்களில் நிதானமாக அபிநயித்து, ஆடிப் பாடி நகர்ந்தும் மறைந்தும், தோன்றியும் காட்சி சட்டகங்களை நகர்த்துகின்றன.

   படம் தொடங்குகையில், கேமரா நிதான கதியில் காட்சியை நகர்த்த–சுருக்கமான பதிப்போவிய தோற்றத்திலமைந்த கச்சித வடிவங்களில் ஆர்மேனிய கவிதை வரிகளைக் கொண்ட மிகப் பழைய புத்தகம் ஒன்று அகல விரிந்து திறக்கப்பட்ட நிலையில் திரையில் தோன்றுகிறது. அடுத்து செக்கச் சிவந்த மூன்று மாதுளம் பழங்கள் விரிப்பு ஒன்றின் மேல் வைக்கப்பட்டுள்ளன. ஓர் அழகிய குறுவாள் தோன்றுகிறது. ஒரு ரொட்டித்துண்டுடன் மூன்று வெள்ளிநிற மீன்கள்…ஒரு ரோஜா மலர். மேற்சொன்ன திறந்த புத்தகம் சயட்-நோவா எழுதிய கவிதைத் தொகுப்பான ‘‘டாவ்தார்’’ (Davtar) என்பது பின்னணியில் மென்மையான இசைக் கருவி ஒலிக்க, ஓவன்ஸ் துமானியன் (Ovenes Tumanyan) என்ற ஆர்மேனிய கவிஞனின் குரலில் ஆர்மேனிய மொழியில் சயட்- நோவாவைப் புகழ்ந்து பாராட்டும் கவிதை ஓதப்படுகிறது. சயட்-நோவாவின் கவிதைகளின் இசை நாடக வடிவாகக் கொள்ளும்படி குறியீட்டு தினுசுகளும் உரையாடலற்ற மெளன கதியிலமைந்த ஆண், பெண் பாத்திரங்களின் உடலசைவுகளும் சலனிக்கின்றன. அதே சமயம் அவை யாவும் விவரித்துச் சொல்லப்படாத ஆர்மேனிய மண்ணின் குறியீடுகள். அம்மண்ணின் இயற்கைக் காட்சிகள், கலாச்சாரம் மற்றும் வாழ்வின் பாணியென்றும் கொள்ளலாம். இவற்றை இவ்வாறு சொல்லுவதில் ஆர்மேனிய கலை கலாச்சாரப் பெருமைகளை திரைப்படங்கள் வழியே வெளிக் கொணர்வதில் பராட்ஜனோவ் பெருமையடைகிறார். பராட்ஜனோவின் இத்தகைய காட்சிரூபக் கோர்வைகள் மூலம் சினிமா என்பது எல்லா லலித கலைகளுக்கும் இளைய சகோதரன்போல என புரிதல் உண்டாக்குகிறது.

   ஆனால் மாதுளம் பழங்களின் வண்ணம் அன்றைய ரஷ்ய அதிகாரிகளோடு கருத்து மோதல் கொண்டது. இத்திரைப்படத்தின் மூலம் சோவியத் சோஷலிஸ யதார்த்தத்தை பராட்ஜனோவ் ஏற்க மறுத்தவர் என்று முடிவானது. தமது நீண்ட நேர்காணலில் இதை அவரே கூறுகிறார். இப்படத்தை வெளிநாட்டு திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப ஏற்றுமதி லைசென்ஸ் மறுக்கப்பட்டது. ரஷ்ய அதிகாரத்தோடு நெருக்கடி மிக்க சங்கடங்கள் அதிகரித்த நிலையில் பராட்ஜனோவ் ஓரினப் பாலுறவு மற்றும் அரசுக் கொள்கைகளை எதிர்ப்பவர் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1973ல் சிறையிலடைக்கப்பட்டார். 

   ஐந்தாண்டுகள் தனிச் சிறையிலடைக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்ட சோவியத் ஒன்றிய அரசால் விடுதலை பெற்றார். கான்சர் நோயால் கஷ்டப்பட்ட செர்காய் பராட்ஜனோவ் 1990ல் காலமானார்.

   படத்தின் தொடக்கத்தில் கவிஞர் சயாதின் மேற்கோள்களாய் திரையில் தோன்றும் வரிகள், ‘‘எனது தண்ணீர் மிகச் சிறப்புமிக்கதொரு வகையானது; ஒவ்வொருவரும் அதைப் பருக முடியாது; எனது எழுத்து மிகச் சிறப்புமிக்கதொரு வகையானது. ஒவ்வொருவரும் அதை வாசிக்க இயலாது. என் அஸ்திவாரங்கள் மணலால் செய்யப்பட்டவை அல்ல; திடமான கருங்கல்லாலானவை.’’ இவை இயக்குனர் பாராட்ஜனோவின் செயல்பாட்டு ஆக்ருதிக்கும் போய்ச் சேர்வன. தொடக்கத்தில் ஒரு வெள்ளை மேஜை விரிப்புத் துணி மீது மூன்று மாதுளம்பழங்கள் சிவப்பு பழச்சாறை கசிய விடுகின்றன. ரத்தக்கறை படிந்த குறுவாள் ஒன்று; நிர்வாண ஆண், பெண் கால்கள் திராட்சைப்பழங்களை மிதித்து நசுக்குகின்றன. ஒரு மீன் தோன்றி பின் மூன்று மீன்களாகுதல்- துள்ளல்; புத்தகங்கள் மீது தண்ணீர் கொட்டும் காட்சி! மாதுளம்பழங்கள் தம் சிவந்த சாறை ஆர்மேனியாவின் பழம் பகுதியொன்றைக் குறிப்பிடும் தேசப்படம் ஒன்றின் மீது கசிய விடுகின்றன. கவிஞரின் காலத்தை ஒட்டி தீட்டப்பட்ட சீமாட்டிகள், சீமான்கள், சிறுவர்-சிறுமிகளின் பல்வேறு மார்பளவு ஓவியங்கள் (Portraits) ஒவ்வொன்றாக நகர்த்தப்படுகின்றன. ஏனோ, எல்லா ஓவியங்களிலுள்ள முகங்களின் கண்களும் நம்மை நேருக்கு நேர்பாராமல் பக்கவாட்டில் ஓரக்கண் பார்வையிலேயே பார்க்கின்றன. எல்லா முகங்களிலுமே ஒரு வஞ்சகத்தனம் இழையோடுகிறது. எல்லாமே தைல வண்ண ஓவியம் (Oil PainTing) என்பதைச் சொல்லும்படி, ஓரிரு ஓவியங்களின் வண்ணமேறிய பரப்பு ஏராளமாய் விரிசல் கண்டிருக்கிறது.

   கவிஞர் தன் கவி வாழ்வில் ஒரு முறை தன் ஆண்பாலிலிருந்து பெண்பாலுக்கு உருமாறியதாயும் காட்சிப்படுத்தப்படுகிறது. தேவதைகளும், தெய்வீக உருவங்களும் ஓவியம்- சிற்ப வடிவிலும் ஒப்பனை பெற்ற மனிதர்களுமாய் வந்து போவதெல்லாம் தார்கோவ்ஸ்கியின் திரைப்படங்களைப் பார்த்துப் பழகிய பார்வையாளர்களுக்கு எவ்வித சிரமத்தையும் பிரச்சினையையும் ஏற்படுத்தாது. எல்லாம் இந்தத் திரைப் படம் உருவான கலாச்சாரத்தின் சாரமாகவே படுகிறது. இந்த ஆர்மேனிய திரைப்படத்திற்கு மூவர் வண்ண ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். A. சாம்வெல்யான் (A.Samvelyan), மார்டின் ஷக்பஜியான் (Martyn Shakhbazyan) மற்றும் சூரென் ஷக்பஜியான் (Suren Shakhbazyan) என்ற மூன்று கேமரா கலைஞர்கள். படத்தின் நாடோடி இசையை அமைத்திருப்பவர் டிக்ரன் மன்சூரியன் (Tigran Mansuryan). சோஃபிகோ சியாவ்ரெலி (Sofiko Chiaureli) நாயகனாகவும் மெல்கோன் அலெக்சானியன் (Melkon Aleksanyan) மற்றொரு முக்கிய தோற்றமாயும் நடித்துள்ளனர்.

   செர்காய் பராட்ஜனோவ் மற்றொரு ஜியார்ஜிய திரைப்பட இயக்குனர் டோடோ அபாஷிட்ஸே (Dodo Abashidze)  என்பவருடன் இணைந்து ஜியார்ஜிய மொழியில்
1984-ல் ‘‘The Lagend Of The Suram Fortress’’ (LEGENDA SURAMSKOl KREPOSTI) என்ற ‘‘ஃபண்டஸி’’ வகை திரைப்படத்தை உருவாக்கினார். குழந்தைகளுக்கான படம்போல தோன்றினாலும் இது குழந்தைத்தனமான திரைப்படமல்ல. ஜியார்ஜிய வரலாற்றின் பகுதியாகவும் கிராமியkd கதையாகவுமுள்ள திரைக் கதை. படத்தின் பாத்திரங்களின் உடையலங்காரம், இயற்கை எழில்மிக்க வெளிப்புறக் காட்சிகள், விலங்குகள்- பறவைகளின் அழகு, இசை, நடனம் யாவும் கட்புலனையும் செவிப் புலனையும் ஈர்ப்பவை. ஜியார்ஜிய பகுதியில் இன்றும் சிதைவுற்ற நிலையிலுள்ள சுராமி கோட்டை வளாகத்திலேயே படம் முழுவதும் ஒளிப்பதிவாகியுள்ளது. மரணத்தை வென்ற காதலுக்கும், அடிமைத்தனத்துக்கும் எதிராக வெற்றிகண்ட ஆன்மிக விடுதலைக்கும், கொடுங்கோலனுக்கும் கொடுங்கோன்மைக்கும் எதிரான வெறுப்பை வெளியிடும் வகையிலுமான கதை.

பயாஸ்கோப்காரன் 49: சோவியத் ரஷ்ய சினிமா (Soviet Russian Cinema) - 7 | செர்காய் பராட்ஜனோவ் (Sergei Parajanov) - https://bookday.in/

    ஜியார்ஜிய பகுதியான சூரம் அல்லது சுராமியிலுள்ள குடியானவ இளைஞன் துர்மிஷ்கான் (Durmish Khan).  இவன் மனைவி வார்தோ (Vardo). துர்மிஷ்கான் அவ்வூர் அரசனுக்கு அடிமை. இளவரசன் தன்முன் நடனமாடும்படி வார்தோவை பணித்து துர்மிஷ்கானிடம் அவளுக்கு புதிய ஆடையை தந்திருக்கிறான். துர்மிஷ் வார்தோவை நடனமாடச் சொல்ல, அவள் அந்த ஆடையை நிராகரிப்பதோடு தன்னால் நடனமாட முடியாது என்கிறாள். நடனமாடி இளவரசரை மகிழ்வித்தால் தன்னை அடிமைத்தளத்திலிருந்து விடுவித்து சுதந்திர மனிதனாக்குவார் என்கிறான் துர்மிஷ்கான். அவளும் ஒப்புக் கொண்டு நடனமாடுகிறாள். இளவரசன் முன் நடைபெறும்  ஜியார்ஜிய கிராமிய நடனமும், பின்னணி இசைக் கோர்வையும் அதற்கு ஒத்திசைக்கும் ஜியார்ஜிய இசைக்கருவிகளின் தோற்றமும் இசையொலியும் அற்புதமானவை. ஜியார்ஜிய இசையமைப்பாளர் தன்சுக் காகிட்ஸின் (Dhanzuk Khaghitze) அற்புத இசை படம் முழுக்கவும் கேட்கிறது. வார்தோவின் நடனத்தைக் கண்டு பெருமகிழ்வுற்று துர்மிஷ்கானை அடிமைத் தளத்தினின்று விடுவித்து சுதந்திர மனிதனாக்குவதோடு ஒரு குதிரையையும் கொடுத்தனுப்புகிறான் இளவரசன், அவன் வேலை தேடி வெளியூர் செல்லுகையில் அவன் திரும்பி வரமாட்டான் என பயப்படுகிறாள். அவன் வேகமாய் குதிரையில் போகையில் அரசு அதிகாரி தன் குதிரையில் துரத்தி வருகிறான் குதிரையைக் கொடுத்து விடும்படி துர்மிஷகானை கட்டளையிடுகிறான் அதிகாரி. குதிரை இளவரசனால் தனக்கு பரிசளிக்கப்பட்டது என்றும், தான் சுதந்திரம் வழங்கப்பட்டவன் என்றும் கூறியும் அதிகாரி மறுத்து, இவனை கீழே தள்ளிவிட்டு குதிரையுடன் பறந்து விடுகிறான். இவன் அடுத்த நாட்டை பரதேசியாய் சென்றடைகிறான். அது இஸ்லாமிய நாடு, அங்கு முதலில் அவன் சந்திப்பது நோடார் ஸாலிகாஸ்வில் (Nodar Zhalikasville) என்று பெயர் கொண்ட இஸ்லாமிய பணக்கார வியாபாரி ஒருவரை. இவரை ஓஸ்மான் ஆகா (Osman Agha) என்று மரியாதையோடும் அன்போடும் அழைக்கின்றனர். ஓஸ்மான் ஆகாவின் வேண்டுகோளின்படி துர்மிஷ்கான் கிறிஸ்தவ மதத்திலிருந்து இஸ்லாமிய சமயத்துக்கு தன்னை மாற்றிக் கொள்ளுகிறான். சுராமியிலுள்ள அவன் மனைவி வார்தோ தன் கணவன் துர்மிஷ்கானை தன்னிடம் திரும்பிவர அருள்புரியுமாறு புனிதர்களான நினோ, டேவிட், ஜார்ஜ் ஆகியோரை வேண்டிக்கொண்டு சேவற்கோழியை பலியுமிடுகிறாள்.

   துர்மிஷ்கானை ஓஸ்மான் ஆகா வியாபாரியாக்க, அவனும் வியாபாரத்தில் நன்கு விளங்கி பெரிய பணக்காரனாகிறான். ஒஸ்மான் ஆகா துர்மிஷ்கானுக்கு ஒரு பெண் பார்த்து திருமணமும் செய்து வைக்கிறார். அவள் நிறைமாத கர்ப்பிணியானபோது ஆண் குழந்தை பிறந்தால் அதற்கு ஸுராப் (Zurab) என்ற பெயரையும், பெண்ணானால் குலிஸ்வர்தி (Gulisvard) என அழைப்பதாயும் முடிவு செய்த சமயம் வார்தோ சந்தைகள் தோறும், வியாபாரிகள் அனைவரையும் சந்தித்து துர்மிஷ்கானைக் கண்டார்களா என விசாரித்து ஓய்ந்துபோய் புகழ்பெற்ற ஜோசியக்காரியான ஆர்சில் (Archil) என்பவனிடம்போய் அவன் எங்கிருப்பான் எனக் கேட்கிறாள். ஜோசியக் கிழவி ஆர்சில் பேசின் ஒன்றில் திரவத்தை ஊற்றி முணுமுணுத்துவிட்டு அதில் பார்க்கச் சொல்லுகிறாள். பாத்திரத்திலுள்ள மந்திரிக்கப்பட்ட திரவத்தில் துர்மிஷ்கான் கர்ப்பவதியான தன் மனைவியை அணைத்துப் படுக்கும் காட்சியை வார்தோ காண்கிறாள். தன்னம்பிக்கையும், வாழ்க்கையும் பாழாய்ப் போனதால் அவள் தன் அழகிய போர்வையை கடையில் கொடுத்துவிட்டு பதிலாக கறுப்புப் போர்வைகளை வாங்கி போர்த்திக்கொண்டு ஜோசியக் கிழவியிடம் திரும்பி வந்து தனக்கும் ஜோதிடம் பார்க்கத் தெரியுமாதலால் தானும் அங்கேயே இருப்பதாக வேண்டுகிறாள். கிழவி தடுத்தும் கேட்பதில்லை. அப்போது கிழவி ஆர்சில் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு செத்துப் போகிறாள். வசதியாக, வார்தோ அங்கேயே இருந்து ஜோசியக்காரியாகிறாள்.

துர்மிஷ்கானுக்குப் பிறந்த பையன் ஸுராப் எனப் பெயரிடப்பட்டு வளர்கிறான். சைமன் என்ற காற்றுத் துகுத்தியால் ஊதப்படும் இசைக் கருவி வாசிப்பவன், சைமன் ஸுராபுக்கு நிறைய கதை சொல்லுகிறான். ஸுராப் இளைஞனானபோது ரஷ்ய ஜார்மன்னன் எதிரிகளை சமாளிக்கக் கட்டிய கோட்டைகளில் சுராமியிலுள்ள சூரம் கோட்டை ஒன்று மட்டும் சீராக்க சீராக்க நிற்காது உடைந்து விழுவதால் கஷ்டப்படுகிறான். சூரம் கோட்டைதான் சுராமியை பகைவர்களிடமிருந்து பாதுகாப்பது. அது உடைபட்டிருப்பதால் எதிரிகளின் படையெடுப்பும், ஊர் மக்களின் உயிர், பொருட்சேதம் அளவிட முடியாதென எல்லோரும் பயப்படவும், தனது உயிரும் சொத்துக்களும் கொள்ளை போய்விடுமென்ற பயம் துர்மிஷ்கானையும் பீடிக்கிறது. முஸ்லிமாக மதம் மாறிய அவன் அப்போது அந்த நம்பிக்கைப்படி இறைவனிடம் வேண்டுகிறான். அப்போது அவன் மகன் ஸுரப் ‘‘நம் ஆதி மத நம்பிக்கையான கிறிஸ்தவ மதப்படி பிரார்த்தனை செய்,’’ என்று அப்பாவுக்குச் சொல்லவும் துர்மிஷ் மகனைக் காலால் எட்டி உதைத்துத் தள்ளுகிறான்.

சூரம் கோட்டையை எத்தனை முறை கட்டினாலும் இடிந்து விழுகிறது. ஜார் மன்னன் தன் முக்கிய பிரதானிகளையழைத்து ஜோசியம் கேட்டுவர அனுப்புகிறான். ஸுரப்பும் ஜோசியம் கேட்க வருகிறபோது அரசப் பிரதானிகளோடு சேர்ந்து எல்லோருமாய் ஜோசியக்காரி வார்தோவிடம் போய் நிற்கிறார்கள். இப்போது வார்தோவும் வயதாகி தோன்றுகிறாள். அரசப் பிரதானிகள் சூரம் கோட்டை விஷயம் சொல்லவும், வார்தோ கடுமையாக சினங்கொண்டு எல்லோரையும் வெளியே போகும்படி திட்டியனுப்ப… அவர்கள் பயந்து வெளியேறுகையில் ஸுரப் ஒருவனை மட்டும் இருக்கச் சொல்லுகிறாள், அவனை உற்றுப் பார்த்து, அவன் ஓடிப்போன தன் கணவன் துர்மிஷ்கானின் மகன்தான் எனக் கண்டுகொள்ளும் விதம் மிக அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. வயதான தோற்றத்திலுள்ள ஜோசியக்காரி வார்தோவின் தலைக்குப் பின்புறமிருந்து இளம் வார்தோவின் முகம் வெளியில் வருவதும் பழையபடி ஒளிவதுமாய்…

‘‘என்ன கொண்டு வந்திருக்கிறாய்?’’ என்று ஜோசியக்காரி கேட்க, ‘‘சூரம் கோட்டையிலிருந்து மண்ணையும் தண்ணீரையும் கொண்டு வந்திருக்கிறேன்’’ என்று ஸுரப் கூறவும் அவற்றை தன் பேசினில் கொட்டச் சொல்லுகிறாள் வார்தோ.

‘‘வேறென்ன கொண்டு வந்திருக்கிறாய்?’’

‘‘தங்க நாணயம் ஒன்று.’’

‘‘போடு அதையும், மூன்றையும் கலக்கு. இப்போது அங்கே பார்’’

பார்க்கிறான், சூரம் கோட்டை தெரிகிறது. இடிந்து விழாமல் நிற்கிறது. ‘‘அப்படியே நிலைத்து நீடிக்க வழியென்ன?’’ என்று கேட்கிறான் ஸுரப்.

 தங்கத்தையும் முட்டையையும் கலந்து கட்ட வேண்டுமென வார்தோ சொல்ல, அவ்வளவு தங்கம் கிடைக்காதென்று இளைஞன் கூறுகிறான். வார்தோ மற்றொரு வழியைக் கூறுகிறாள். ‘‘உயரமும் அழகும், இளமையுமுள்ள ஓர் ஆண் மகன் தன்னையே வைத்து கட்டிடம் எழுப்ப வேண்டும்’’ என்கிறாள். ஸுரப் தன்னையே அனார்கலிக்கு சமாதி கட்டினாற்போல வைத்து கட்டிடம் எழுப்ப முடிவு செய்து புறப்படுகிறான். சைமன் உதவி செய்ய, முட்டையையும் சுண்ணாம்புக் காரையையும் கொண்டு சுவர் மீது நின்று காரையால் மூடப்படுகிறான். சூரம் கோட்டையின் கட்டுமானம் ஸுரப் மீது எழுப்பப்பட்டதும், அது இடிந்து விழாமல் நிலைத்து நின்று சுராமியையும் அதன் பிரஜைகளையும் பகைவர்களிடமிருந்து காப்பாற்றியதாய் படம் முடிகிறது. படத்தின் பல காட்சிகள் இன்று அழிந்த நிலையிலுள்ள அந்தக் கோட்டை வளாகத்தில்தான் எடுக்கப்பட்டுள்ளது.

 பராட்ஜனோவ் ஜியார்ஜியாவின் ஜீவனையும், தேசிய குணாம்சத்தையும், அரண்மனைகள், மடாலயங்கள், தேவாலயங்களின் அழகியலையும் அப்படியே கொண்டு வந்துவிடுகிறார். அவற்றின் பேரில் அவருக்குள்ள பிரேமையும் தத்ரூப ஓவியப் பார்வையும் மிளிர்கிறது. ஜியார்ஜியாவோடு பராட்ஜனோவின் தொடர்பின் வழி வெளிப்படும் நிஜத் தன்மையும் அவரது ஓவியக் கலையறிவின் விளைவால் உந்தப்பட்டு உருவான பாத்திரத் தோற்றங்களும் அதிசயக்கத்தன. பழைய டிபிலிஸியின் வாழ்க்கை முறைமையும் தேசிய கலாச்சாரமும் ஒவ்வொரு சட்டகத்திலும் வெளிப்படுகிறது. ஜியார்ஜியாவின் மாபெரும் ஓவியன் நிகோ பிரோஸ்மானிஷ்விலி (Nico Pirosmanishvili) என்பவர் கிட்டதட்ட பிரெஞ்சு இம்பிஷனிஸ ஓவியரான உடல் வளர்ச்சி பெறாத துலாஸ் லாவ்த்ரெ போன்றவர் (Toulouse- Lautrec) இவரைப் பற்றிய ‘‘பிரோஸ்மனி’’ (Prirosmani–1986) என்ற குறும்படம் நிகோ பிரோஸ்மனிஷ் விலியின் பெருமையைக் கூறும் ஒன்று. இவ்வோவியர் தீட்டிய டிபிலிஸியின் பருத்த அழகிகளின் போர்ட்ரெய்ட் ஓவியங்கள் ‘‘ஓர்டசாலியின் அழகிகள்’’ (The Belles of Ortachali) என்று அழைக்கப்படுபவை. இவற்றை இத்திரைப்படத்தில் பராட்ஜனோவ் வரிசையாகக் காட்சிபடுத்தியிருக்கிறார்.

 வெனரிகோ ஆன்ட்ஸாபரிட்ஸே (Veneriko Andzhaparidze) எனும் நடிகர் ஸுரப்பாகவும் இயக்குனர் டோடோ அபாஷிட்சே துர்மிஷ்கானாகவும் நன்கு செய்திருக்கிறார்கள்.

 ரஷ்யக் கவிஞரும் சிறுகதை நாவலாசிரியருமான மிகேய்ல் யூரியெவிச் லெர்மாண்டோவ் (Mikhail Yuryevich Lermantov) மாஸ்கோகாரர். இவர் 1837ல் காகஸஸ் மலைப் பகுதியில் பயணிக்கையில் துருக்கியப் பெண்ணொருத்தி தமக்குச் சொன்ன கிராமியக் கதையொன்றைக் கொண்டு ‘‘ஆஷிக் கெரிப்’’ (Ashik-Kerib) என்ற கதையைத் தழுவி பராட்ஜனோவ் 1988ல் அதே தலைப்பில் திரைப்படமாக்கினார். இப்படத்தை இவர் டேவிட் அபாஷிட்ஸ் (David Abashidze) என்ற நடிகரும் இயக்குனருமான ஒருவருடன் இணைந்து இயக்கியிருக்கிறார். கதைக் களமாக இன்றைய டிபிலிஸி நகரம் அமைகிறது. கதை இஸ்லாமிய மார்க்கத்தினரைக் கொண்டது. ஆஷிக் என்றால் நாடோடிக் கவிஞன்-பாடகன் என்றாகிறது. கெரிப் ஓர் ஏழைப் பாடகன்- கவிஞன், அவனது அழகிய காதலி மாகுல் மெகெரி (Magul Megeri) என்பவள். மாகுல் அவ்வூர் பணக்காரனின் மகள். பணமேயில்லாத ஏழை கெரிப்புக்கு தன் மகளைத் தர முடியாததென்று சொல்லிவிடவே… பணக்காரனின் வாயை அடக்கி மாகுலை மணமுடிக்க தூரதேசம் பயணிக்கிறான் கெரிப். அவனுக்கு உறுதியளிக்கும் மாகுல் அவன் திரும்பி வரும்வரை காத்திருப்பதாய் கூறுகிறாள். மாகுல் மீது கண் போடும் முரடன் குர்ஷித் பேக் (Kurshid Beg) என்பவன் கெரிப்பை தொடர்ந்து குதிரையில் வந்தவன், கெரிப் ஆற்றில் குளிக்கையில் அவனது ஆடைகளை களவாடிச் சென்று விடுகிறான். கோவணத்தோடு விடப்பட்ட கெரிப் கதறியவாறு ஊர் எல்லையில் கிடக்கையில் ஒரு சிலர் நல்ல ஆடைகளைத் தந்து உதவுகின்றனர். 

  அவனது இசைக் கருவியான பிடிலை எடுத்துச் சென்று ஊர்ப் பெரியவரிடம் சேர்ப்பிக்கின்றனர். பாணன் கெரிப் தன் இசைக் கருவியைத் தேடி பெரியவரிடம் வருகிறான். பெரியவர் இறக்கும் தருவாயிலிருப்பவர், அவனை ஆசிர்வதிப்பதோடு அவன் வாசிக்கும் பிடிலுக்கும் ஜெபித்து, ‘‘இது உனக்கு சகல சம்பத்தையும் தருமாக,’’ எனக் கூறி அவனது கைத்தாங்கலில் ஊருக்கு வெளியில் இறக்கிறார். அவரது உடலை அவனே குழிவெட்டிப் புதைத்துவிட்டு மேலும் தூரமாய் பயணிக்கிறான். அவன் (பாடகன்) பாணன் கெரிப் என்ற பொருளில் ஆஷிக் கெரிப் என்றாகிறான்.

 அதே சமயம் இவனது ஆடைகளைக் களவாடிச் சென்ற வஞ்சகன் குர்ஷித் பேக் அவற்றைக் கொண்டு போய் மாகுல் அம்மாவுக்குக் காட்டி, கெரிப் ஆற்றில் முழுகிச் செத்துப் போனான் என்று கூறி மாகுலை, தான் மணமுடிப்பதாக சொல்லுகிறான். ஆயிரம் வருடமானாலும் காத்திருப்பதாயும் கெரிப் இறந்திருக்க முடியாது, நிச்சயம் திரும்பி வருவான் என்று கூறி பேகை நிராகரிக்கிறாள் மாகுல். ஆஷிக் கெரியின் சகோதரியும் தாயும் மாகுலுக்கு ஆதரவாய் பேசுகின்றனர்.

ஆஷிக் கெரிப் அடுத்த நாட்டின் அரசன் நாதிர் பாஷா (Nadir Pasha) என்பவனை சந்திக்கிறான். நாதிர் பாஷா காலஞ்சென்ற புகழ்பெற்ற இஸ்லாமிய பெண்மணியான நர்கிஸ் கானும் (Nargiz Khanum) என்பவளின் மகன் நாதிருக்கு கெரிப்பேரில் பொறாமை ஏற்பட்டு இசைக்கும்படி முரட்டுக் கட்டளை பிறப்பிக்கவும் கவிஞன் இசைக்க மறுக்கிறான். அவனை தங்கச்சங்கிலியால் பிணைத்து, தான் பரிசளித்த விரிப்பால் சுருட்டியெடுத்து அடிமைப் பெண்கள் இருக்குமிடத்தில் போடுகிறான். அடிமைப்பெண்களின் உதவியால் தப்பி வெளியேறுகிறான் ஆஷிக்- கெரிப். அங்கிருந்து கொடிய அரசன் சுல்தான் அஜீஸை
(Sultan Aziz) அடைகிறான். சுல்தானின்  பயமுறுத்தலும் கட்டளையும் கெரிபை இசைக்க முடியாத கதிக்குள்ளாக்குகிறது. சுல்தான் புலிக் கூண்டுக்குள் பாணனை தள்ளிவிடுகிறான். கெரிப் வாசிக்க… புலியும் சாந்தமடைந்து அவனை ஒன்றும் செய்வதில்லை. அவன் ஒரு வெளியில் கிடக்கையில் வெள்ளைக்குதிரையில் வெள்ளையுடையில் ஒரு தேவதூதன் வருகிறான். அங்கே மாகுலை குர்ஷித் பேகிற்கு மணம் செய்விக்க ஏற்பாடு நடக்கிறது. அவளோ தற்கொலை புரிந்துகொண்டு இறந்துபோகத் தயாராகிறாள். இதை கெரிபுக்கு எடுத்துச் சொல்லி அவனை ஆயிரம் மைல் தொலைவிலுள்ள மாகுலிருக்கும் ஊரில் கொண்டுவிட்ட தேவதூதன் ஒரு பண முடிப்பையும் கொடுத்துச் செல்லுகிறான். காதலர்கள் ஒன்று சேர்ந்து கணவன், மனைவியாகின்றனர்.

கீழை நாட்டு சிற்றோவியங்களின் பாதிப்பில் இப்படத்தை இயக்கியதாக பராட்ஜனோவ் கூறுவார். இத்திரைப்படத்தை தார்கோவ்ஸ்கிக்கு சமர்ப்பணமாக்குகிறார் பராட்ஜனோவ். இவரது எல்லா படங்களிலுமே மாதுளம்பழங்கள் வருகின்றன. இப்படம் வெனிஸ் திரைப்பட விழா, நியூயார்க் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. ஐரோப்பிய திரைப்பட அகாதெமி பரிசு பெற்றது. பராட்ஜனோவின் கொல்லாஜ் வகை ஓவியங்கள், செராமிக் உருவங்கள், பொம்மைகள் மற்றும் திரைப்படங்களின் பல்வேறு காட்சிகளுக்கென அவர் வரைந்த கோட்டோவியங்கள் கொண்ட முதல் கண்காட்சி 1985லும் ஆர்மேனிய கிராமியக் கலை அருங்காட்சிக் கூடத்தில் 1988லும் 1989லும் நடைபெற்றது.

 பராட்ஜனோவ் எரெவான் நகரில் 1990ல் காலமானார். இப்படத்தின் அற்புத வண்ண ஒளிப்பதிவை யூரி கிளிமெங்கோ (Yuri Klimenko)வின் கேமரா புரிந்துள்ளது. அரிய இனிய இசைக் கோர்வையை ட்ஸான்சுக் காகிட்ஸே (Dzhansug Kakhidze) புரிந்துள்ளார்.

கட்டுரையாளர் :
விட்டல்ராவ்

 

Click to Join WhatsApp Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



 
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *