பயாஸ்கோப்காரன் 50 : சோவியத் ரஷ்ய சினிமா (Soviet Russian Cinema) - 9 | விட்டல்ராவ் (Vittal Rao K) | “நாயின் மனம்” (HEART OF A DOG) | THE THIEF

தொடர் 50: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

சோவியத் ரஷ்ய சினிமா – 9

பயாஸ்கோப்காரன் – 50

– விட்டல்ராவ்

பயாஸ்கோப்காரனின் இறுதி திரைப்படப் பயணம் இது. இங்கே சில முக்கிய ரஷ்ய திரைப்படங்களைப் பார்த்து ரசித்த அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டு தன் நீண்ட சினிமா பயணத்தை முடித்துக் கொள்ளுகிறான். இது வரை எட்டு பகுதிகளில் ரஷ்ய திரைப்பட ஆளுமைகள் பலரை பயாஸ்கோப்காரன் காட்டிவிட்டு இந்த இறுதிப் பகுதியில் உதிரியான சில ஆளுமைகளின்  திரைப்படங்களைப் பற்றி கூறி நிறைவு செய்கிறேன். பழைய பாதாள பைரவி, பாலநாகம்மா, 1000 தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி போன்ற மாயாஜால திரைப்படங்களில் மனிதனை மிருகமாக மாற்றுவது. மிருகத்தை மீண்டும் மனிதனாக்குவது என்ற மந்திர மாயாஜால வித்தைக் கதைகளைப் பார்த்து கைதட்டியிருக்கிறோம். பிறகு இந்த குறளி வித்தைக் கதைகள் விஞ்ஞான அறிவு மேலிட்ட வகையில் உருவாகின. இப்படிப்பட்ட விஞ்ஞான மாயாஜாலக் கதைகளில் H.G.வெல்ஸின் ‘’INVISIBIE MAN” போன்ற கதைகள் பிரபலமாகி திரைப்படங்களாய் ஆங்கிலத்திலும் இந்தியிலும் (MR.X) தமிழிலும் (மாயமனிதன்) வந்திருக்கின்றன. இந்த கதை வெறும் அறிவியல் மாயாஜாலத்தோடு நின்று விட்டன. ஆனால் ரஷ்ய விஞ்ஞான புனை கதை எழுத்தாளர் மிகேய்ல் புல்ககோவ் (MIKHAIL BULGAKOV) என்பவரின் நாவல் ‘’THE HEART OF A DOG” என்பது அன்றைய அரசியல் நையாண்டிக் கதையாயுமுள்ளது.

பயாஸ்கோப்காரன் 50 : சோவியத் ரஷ்ய சினிமா (Soviet Russian Cinema) - 9 | விட்டல்ராவ் (Vittal Rao K) | “நாயின் மனம்” (HEART OF A DOG) | THE THIEF | Heart of a Dog - Bulgakov

1920-களில் சோவியத் அரசு புதிய சோஷலிஸ பொருளாதார கொள்கையொன்றை வெளியிட்டது. இதை உள்ளூர ஏற்காமல் எதிர்த்தவர்கள் சிறுபான்மையாக உண்டு. இப்புதிய பொருளாதார கொள்கையை அமுல்படுத்தினால் தங்கள் தொழில் மற்றும் வருமான ரீதியாக தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு நிம்மதியிழக்க நேரிடும் என சோவியத் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் எழுத்தாளர்கள் நினைத்தனர். இந்த சூழ்நிலையில் சோவியத் ரஷ்ய நாவலாசிரியர் மிகேய்ல் புல்காகோவ் 1925-ல் “நாயின் மனம்” (HEART OF A DOG) எனும் நகைச்சுவையும் அரசியல் அங்கதமுமாய் அறிவியல் நாவலொன்றை எழுதினார். இது அந்நாளில் தடை செய்யப்பட்டிருக்கக் கூடும். 1988-ல் விளதிமிர் போர்ட்கோவ் (VLADIMIR BORTKOV) எனும் ரஷ்ய திரைப்பட இயக்குனரால் நாயின் மனம் அரிய கருப்பு வெள்ளைத் திரைப்படமாக்கப்பட்டது. இந்த நாவலும் அதைக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமும் முன்னர் கூறிய விஞ்ஞான மாயாஜால வகைமையைச் சார்ந்த கதையும் திரைப்படமாகும். இதை முற்றிலும் கற்பனையான நகைச்சுவைப் படைப்பென்று பார்க்கும் அதே சமயம் இது ஓர் அரிய அரசியல் நையாண்டித் திரைப்படமாயுமுள்ளது.

பயாஸ்கோப்காரன் 50 : சோவியத் ரஷ்ய சினிமா (Soviet Russian Cinema) - 9 | விட்டல்ராவ் (Vittal Rao K) | “நாயின் மனம்” (HEART OF A DOG) | THE THIEF

திரைப்பட தொடக்கத்தில் சோவியத் செம்படை (RED ARMY)யினரின் இராணுவப் பீடு நடை நடக்கிறது. பனிக்காலமாதலால் பனியபர்ந்த சாலையில் நடக்கிறது. போல்ஷெவிக் செம்படையினருக்கு எதிராய் போரிட்டபடியிருந்த வலதுசாரி வெண்படையினரின் (WHITE GUARDS) இடைஞ்சல் குறித்த பாடலை செம்படையினர் உரக்க பாடினபடி நடக்கின்றனர். அப்பீடு நடைபாட்டில் “வெண்படையினரால் இனி எவ்வித பாதிப்புமில்லை. அவர்களை முற்றிலுமாய் செம்படை வெற்றிகொண்டு விட்டது.” என்ற வரிகள் திரும்பத் திரும்பக் கேட்கின்றன. இந்நடை காட்சியை பொதுமக்கள் குளிரில் முழுக்க தங்ஙகளை மூடிக் கொண்டு பார்க்கிறபோது, அவர்களோடு ஒருநாயும் வேடிக்கை பார்க்கிறது. நாய் பிறகு ஓரிடம் பார்த்து ஒதுங்கி படுக்கிறபோது அங்கு சுத்தம் செய்யும் பெண் அதைத் துடைப்பத்தால் அடித்து விரட்டுகிறாள். அது எழுந்து ஒரு வீட்டுக் கதவருகில் ஒதுங்குகையில் வீட்டுக்காரி சுடுநீர் கொண்டு வந்து நாய் மீது கொட்டி ஓட்டுகிறாள். நல்ல மனம் கொண்ட இளம் பெண்ணொருத்தி தன்னிடமுள்ள சில பிஸ்கட்டுகளை நாய்க்குப் போட்டு தடவிக் கொடுக்கிறாள். நாயிக்கு ஷாரிக் (SHARIK) என்று பெயரிட்டு அழைக்கிறாள். முதன் முதலாக மனிதப் பாசப்பிணைபை அந்த நாய் பெற்றதாகத் தெரிகிறது.

பேராசிரியர் – விஞ்ஞானி – அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஃபிலிப் ஃபிலிவோவிச் பிரியேபிராழென்ஸ்கி என்பவர் (PHILIP PHILIPOVICH PREOBRAZHEN SKY) இந்த நாய் ஷாரிக் மீது பாசம் காட்டி அழைத்து உணவிட்டு தன் வீட்டுக்குள் வைக்கிறார். டாக்டர் ஃபிலிப் ஃபிலிவோவிச் ஷாரிக் – நாயை வைத்து ஒரு பரிசோதனையைச் செய்கிறார். மனிதனின் பிட்யூட்டரி சுரப்பியையும் ஜன்னேந்திரியத்தின் விரைகளையும் எடுத்து அறுவை சிகிச்சை மூலம் நாய் ஷாரிக்கிற்கு பொருத்தி வைத்து விளைவைப் பார்க்க நினைக்கிறார். இந்த இரட்டை அறுவை சிகிக்சையில் அவருக்கு உதவி அறுவை சிகிச்சையை நிபுணராயுள்ள டாக்டர் இவான் ஆரனால்டோவிச் போர்மெண்டால் (DR. ARNOLDOVICH BORMENTAL ) என்பவரும் சேர்ந்து கொள்ளுகிறார். அவருக்கு அப்போதுதான் மரணமடைந்த க்ளிம் சுகுங்கின் (KLIM CHUGUNKIN) என்ற பிரபல ரௌடியும் குற்றவாளியும் மொடா குடிகாரனுமான வின் சடலம் கிடைக்கிறது. அறுவை சிகிச்சை மூலம் அவனது உடலிலிருந்து பிட்யூட்டரி சுரப்பியையும் விரைகளையும் எடுத்து நாய் ஷாரிக் உடலில் பொருத்திவிடுகிறார்.

பயாஸ்கோப்காரன் 50 : சோவியத் ரஷ்ய சினிமா (Soviet Russian Cinema) - 9 | விட்டல்ராவ் (Vittal Rao K) | “நாயின் மனம்” (HEART OF A DOG) | THE THIEF

முதலில் நாயின் வால் விடுபட்டு விழுகிறது. நாயின் குரைப்பு ஒலியும் மனித முனகல் ஓசையும் கலந்த ஓர் ஓசை அறையிலிருந்து கேட்கிறது. பாதி நாய் முகமும் மனித முகமுமாய் ஓர் அவதாரம் தோன்றி அடுத்த காட்சியில் ஓரளவுக்கு மனிதனாக ஒருவனைப் பார்க்கிறோம். நாயிலிருந்து உருவான – உருமாறிய மனிதன். தனக்கான மனிதப் பெயரை நாயின் பெயரிலிருந்தே தானே சூட்டிக் கொள்ளுகிறான். ஷாரிக் என்ற நாயின் பெயரை அம்மனிதன் போலிகிராஃப் போலிகிராஃபோவிச் ணாரிகோல் (POLIGRAF POLIGRAFOVICH SHARIKOV) என்று தனக்கு வைத்துக் கொள்ளுகிறான். அதே சமயம் நாய் மனிதனான ஷாரிகோவின் சகல அகம் – புறம் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் தனக்குப் பொருத்தப்பட்ட மனித உலின் உள்ளுறுப்புகளுக்கு சொந்தக்காரனான்ன அயோக்கியனின் சகல வித தீய தன்மைகளையுமே கொண்டு விடுகிறது. முதலில், அசல் நாயின் குணம் மாறாத ணாரிகோவ் பூனைகளை எங்கே பார்த்தாலும் நாய்ப் பாச்சலில் விரட்டி பிடிக்கிறான். பூனைகளின் பிரசன்னத்தை அவனால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. நாய் மனிதனானதும் தன் காலில் நிற்க விரும்பி தெருவில் அலையும், ஜனங்களுக்கு இடைஞ்சலளிக்கும் பிராணிகளை அழிக்கும் மாஸ்கோ இலாகாவில் சேர்ந்து பணியாற்றுவதோடு போல்ஷெவிக் கட்டிட கட்டுமான நிர்வாகத்தோடும் இணைந்து கொள்ளுகிறான்.

புரொபனர் ஃபிலிப் ஃபிலிபோவிச் தன் தேவைக்கு அதிகமான இடத்தை குடியிருப்பில் வைத்திருப்பதாயும் அதைப் பிடுங்கிக் கொள்ளவும் கட்டிட கட்டுமான நிர்வாகம் முடிவு செய்கிறது. நாய் மனிதன் ஷாரிகோவ் தனக்குப் பொருத்தப்பட்ட கேடிப் பயலின் உடலின் உறுப்புகளால் அவனது வார்ப்பாகவே மாறி வளரவும் டாக்டரின் பணத்தைத் திருடி குடிக்கிறான். குடியிருப்பல் ஒரு பகுதியைத் தன் பெயருக்கு மாற்றுமாறு கலாட்டா செய்கிறான். பூனையைத் துரத்தும் வேகத்தில் டாக்டரின் வீட்டுக்கு வரும் பிரதான தண்ணீர் குழாயை உடைத்துவிடுகிறான் ஷாரிகோவ். அது அந்த குடியிருப்பு முழுவதையும் வெள்ளத்தில் ஆழ்த்துகிறது. ஷாரிகோவ் உடலுறவு உணர்வுக்கும் ஆளாகி, அந்த வீட்டு சமையற்காரியின் பெண் தாரியாவை (DARYA)ஐ உடலுறவுக்கு முயற்சிக்கையில் சமையற்காரி அவனைத் தாக்கி தூக்கி வந்து வெளியில் போடுகிறாள். இரு டாக்டர்களும் பெரு முயற்சியெடுத்து ஷாரிகோவை திருத்த முற்பட்டவை பலனளிப்பதில்லை. டாக்டர் ஃபிலிபோவ் ஃபிலிபோவிச்சை ஷாரிகோவ் சோவியத் ரகசிய போலீசுக்கு போட்டுக் கொடுக்கிறான். அவனை தன் குடியிருப்பிலிருந்து வெளியேறுமாறு கூறுகிறார் டாக்டர். அவன் கோபத்தோடு மறுப்பதுடன் ஒரு துப்பாக்கியை எடுத்து அவரை கொன்று விடுவதாய் மிரட்டவும், உதவி டாக்டர் அவனை மடக்கி சண்டையிட்டு அறையில் தள்ளுகிறார். பிறகு இரு டாக்டர்களுமாய் ஒரு முடிவெடுத்து ஷாரிகோவுக்கு பழைய நிலைக்கான மறு அறுவை சிகிச்சை செய்து மனித உறுப்புகளை நீக்கவும் அவன் பழையபடி நாய் ஷாரிக்காக உருமாறி அமைதியாக டாக்டரின் வீட்டு செல்ல பிராணியாக முடங்குகிறான்.

இப்படம் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. நடாலியா போர்ட்கோ (NATALYA BORTKO) வின் திரைக்கதை வடிவம் சிறப்பானது. யூரி ஷெய்கார்தனோவின் (YURI SHAIGARDANOV) உயரிய காமிரா கோணங்கள் அற்புதம். எவ்கினி எவ்கிஸ்டினெயெவ் (YEVGENY YEVSTIGNEYEV) என்பவர் டாக்டர் ஃபிலிப்பாகவும்,  போரிஸ் ப்ளாட்நிகோவ் (BORIS PLOTNIKOV) அவருக்கு உதவி டாக்டராயும், விளதிமிர் தோலோக்கோனிகோவ் (VLADIMIR TOLOKONNIKOV) நாய் மனிதன் ஷாரிகோவ் பாத்திரத்திலும், ப்டரோவ்னா இவானோவா (PETROVNA IVANOVA) டாக்டரின் சமையற்காரியாகவும் அவள் மகள் தாரியாவாக நைனா ருஸ்லனோவா (NINA RUSLANOVA) வும் நாய் ஷாரிக்காக காரேய் என்ற (KARAI) நாயும் சிறப்புற நடித்திருக்கின்றனர்.

பயாஸ்கோப்காரன் 50 : சோவியத் ரஷ்ய சினிமா (Soviet Russian Cinema) - 9 | விட்டல்ராவ் (Vittal Rao K) | “நாயின் மனம்” (HEART OF A DOG) | THE THIEF

ஆங்கில எழுத்தாளர் ஜேன் ஆஸ்டின் எழுதிய ஓரிரு புகழ் பெற்ற நாவல்கள் ஹாலிவுட்டில் சிறப்பாக படமாக்கப்பட்டன. 18இ 19ம் நூற்றாண்டு சூழலை கண்ணுக்கினிய காட்சிகளாய் அவை விளங்கினது மாதிரியே ஒரு சோவயத் ரஷ்ய திரைப்படம். “இல்யா இல்யிச் ஓப்ளொமோவின் வாழ்க்கையில் பல நாட்கள்”, (SEVERAL DAYS IN THE LIFE OF I.I OBLOMOV) எனும் வண்ணப்படம். இத்திரைப்படம் 1980-ல் வெளிவந்தது. இப்படத்தை இயக்கியவர் நிகிடா மிகல்கோவ் (NIKITA MIKHALKOV) என்பவர். “ஓப்ளொமோவ்” எனும் தலைப்பிலான நாவலை எழுதியவர் இவான் கோஞ்சரோவ் (IVAN GONCHAROV) இந்நாவலைக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் சற்றே நவீனமாக்கப்பட்ட நிலையில் மூல நாவிலிலிருந்து கொஞ்சும் வேறுபட்டதாக ஒரு சோவியத் விமர்சகர் எழுதினார்.

ஓப்ளோமோவ் திரைப்படம் தொடங்குகையில் ஓப்ளோமோவ் சோபாவில் முழுக்க போர்த்திக் கொண்டு தூக்கம் கலைந்து காலை நேரம் நன்கு புலர்ந்தும் படுத்துக் கொண்டேயிருக்கிறான். ஒரு புகழ்பெற்ற சோம்பேரி. அன்றைய ரஷ்யாவில் சோம்பேறித்தனத்தை குறியீடாக்கிச் சொல்ல ஓப்ளோமோவின் பெயரையே குறிப்பிடுவதாய் மூலநூலில் வரும். அவன் “அம்மா பிள்ளைஈ”, சதா அம்மாவின் நினைவே. அவள் அழகிய அம்மா. படத்தில் அம்மா நினைவு வருகையில் ஓப்ளோமோல்பையனையும் இளம் அழகிய அம்மாவையே காண வைக்கிறார் இயக்குனர்.

ஓப்ளோமோவ் புத்திசாலியும், கெட்டிக்காரனுமாயிருந்தும் மந்த புத்தியும் சோம்பல் மிக்கவனுமாவான். அதே சமயம் அவனுடைய பால்யகால நண்பன் ஆண்ட்ரீ இவானோவிச் ஸ்டோல்ட்ஸ் (ANDREI IVANOVICH STOLTZ) புத்திசாலியும், கெட்டிக்காரனும் சுறுசுறுப்பானவனுமாவான். ஸ்டோல்ட்ஸ் ஜெர்மன் தாயிக்கும் ரஷ்ய தந்தைக்கும் பிறந்தவன். ஓப்ளோமோ சிறுவனாயிருந்ததிலிருந்து வீட்டில் சகல எடுபிடி வேலைகளையும் கவனித்துக் கொண்டு வரும் ஸகார் (ZAKHAR) படத்தில் முக்கிய பாத்திரங்களில் ஒருவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் ஸகார் தமிழ் படம் சபாபதியில் வரும் காளி என் ரத்தினம் போன்ற பாத்திரம். செகாவ் நாடகம் “செர்ரி ஆர்செட்” டில் வரும் வேலைக்கார பாத்திரம் ‘’FIRR” என்ற உருவ ஒற்றுமை. ஓப்ளோமோவ் ஸகார் மீது அன்பும் வாஞ்சையும் கொண்டவனே என்றாலும் எரிந்து விழுவான். விரட்டிக் கொண்டேயிருப்பான். ஓப்ளோமோவ் கால முழுக்க இப்படியே இருந்து விடுவானா அல்லது மாறுவானா, மாறவே மாட்டானா என நாம் நினைக்கும்படி செய்து விடுகிறார் இயக்குனர் மிகல்கோவ், அப்படியான ஒரு மாற்றத்துக்கான போதுமான காரணமும் நமக்கு புரிபடாத அளவு ஒருவித நியாயமான சோம்பேரித்தனமாய் படுகிறது.

பயாஸ்கோப்காரன் 50 : சோவியத் ரஷ்ய சினிமா (Soviet Russian Cinema) - 9 | விட்டல்ராவ் (Vittal Rao K) | “நாயின் மனம்” (HEART OF A DOG) | THE THIEF

பெஸ்தோஞ்சி என்ற இந்தி படத்தில் வரும் பெஸ்தோஞ்சி பாத்திரம் போல (நசிருதின் ஷா) ஆகிவிடுகிறது ஓப்ளோமோவ். ஓரிடத்தில் ஓப்ளோமோவ் கூறுவான், “ஒவ்வொருவரும் எப்படி வாழ்வது என்றே நினைக்கிறார்களே தவிர ஏன் வாழ்வது என்று கொஞ்சம் மாற்றி நினைப்பதில்லை”, என்று நண்பன் ஸ்டோல்ட்ஸ் இங்கிலாந்துக்கு போய் படிக்க ஏற்பாடு நடக்கையில் அவனுக்கும் ஓல்கா செர்கயேவ்னா (OLGA SERGAYEVNA) என்பவருக்கும் காதல் படலம் ஆரம்பமாகிறது. காதல் வளர்கையில் ஸ்டோல்ட்லை அவன் தந்தை லண்டனுக்கு அனுப்பி விடுகிறார். ஓப்ளோமோவை நோக்கி ஓல்காவின் காதல் திரும்பும் சமயம் ஸ்டோல்ஸ் இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்து விடுகிறான். அவன் தன்னோடு ஒரு புதிய சாதனத்தைக் கொண்டு வருகிறான். மனிதனின் புதிய கண்டுபிடிப்பான் மிதிவண்டி (சைக்கிள்) இரு சக்கரமல்ல. பின்னால இரு பெரிய சக்கரங்களையும் முன்னால் ஒரு சிறிய சக்கரமும் கொண்ட மிதிவண்டி. அதில் ஓல்காவை அமர்த்தி நண்பர்கள் இருவரும் அவளைத் தாங்கிப் பிடித்து சைக்கிள் ஓட்டச் செய்யும் காட்சி நன்றாக இருக்கிறது. இச்சமயம் ஆண்ட்ரீ இவானோவிச் ஸ்டோல்ஸுக்கும் ஓல்காசெர்கவேய்னாவுக்கும் திருமணம் நடந்தேறுகிறது. ஓப்ளோமோவ் தன் கிராமத்து எஸ்டேட்டுக்கு பெரிய பங்களாவில் போய் குடியேறுகிறான். சிறிது நாட்கள் கழித்து ஓப்ளோமோவ் அகாஃயா மாட்வெயெவ்னா (AGAFYA MATVEYEVNA) என்ற சீமாட்டி விதவையை திருமணம் செய்து கொண்டு விதவையின் மகனையும் ஏற்றுக் கொள்ளுகிறான்.

ஓப்ளோமோவாக ஓலெக் தபகோவ் (OLEG TABAKOV) நிறைவாக நடிக்க, ஸ்டோல்ட்ஸ் பாத்திரத்தில் வரும் எவ்கெனி ஸ்டெப்லோவ் (YEVGENY STEBLOV) நடிப்பில் முந்துகிறார். ஓல்காவாக நடிக்கும் எவ்கெனியா க்ளுஷெங்கோ (YEVGENIYA GLUSHENKO) பரவாயில்லை. ஸாகர் பாத்திரத்தில் நடிக்கும் ஆண்ட்ரு போபோவ் (ANDREU POPOV) அனுபவமிக்க ரஷ்ய நடிகர் என்பது நிரூபிக்கப்படுகிறது. இவ்வழகிய படத்தின் காட்சி நட்டகங்களை காமிரா வசிப்படுத்திய ஒளிப்பதிவாளர் பேவல் லெபெஷெவ் (PAVEL LEBESHEV) என்பவர்.

பயாஸ்கோப்காரன் 50 : சோவியத் ரஷ்ய சினிமா (Soviet Russian Cinema) - 9 | விட்டல்ராவ் (Vittal Rao K) | “நாயின் மனம்” (HEART OF A DOG) | THE THIEF

இரு ரஷ்ய இளம் இயக்குனர்கள் ஒன்றாக சேர்ந்து ஓர் அரிய திரைப்படத்தைச் செய்திருக்கிறார்கள். பயாஸ்கோப்காரனைக் கவர்ந்த இத்திரைப்படம் 2003-ல் வெளி வந்தது. படம் – (கிரிமியாவிலுள்ள) கோக்டெபெல்லுக்கான பாதை (ROAD TO KOKTEBEL) என்பது. போரிஸ் க்ளெப்னிகோவ் மற்றும் அலெக்ஸி போபோக்ரெப்ஸ்கி எனும் இருவரும்தான் அந்த இளைஞர்கள். போரிஸ் க்ளெப்னிகோவ் (BORIS KHLEBNIKOV) 1972-ல் தன் சக மாணவர் அலெக்ஸி போபேரெப்ஸிகியுடன் (ALEXEI POPOREBSKY) இணைந்து மிமோகாத் (MIMOKHAD) எனும் திரைப்படத்தை தயாரித்து இயக்கி வெளியிட்டார். 2000-ல் இருவரும் சேர்ந்து “தந்திரமிக்க தவளை” (TRICKY FROG) எனும் குறும்படத்தைத் தயாரித்தனர். அலெக்ஸி போபோரெப்ஸ்கி 1972-ல் பிறந்தவர் மாஸ்கோ மாநில பல்கலைக் கழகத்தில் மனோதத்துவ துறையில் படித்துப் பட்டம் பெற்றவர். முன்னவருடன் இணைந்து மேற்கூறிய படம், குறும்படம் என இயக்கியவர்.

இறுதிவரை பெயர் குறிப்பிடாத தந்தையும் பத்து வயது மகனும் காட்டுப்பகுதியில் நடந்து ரயில் நிலையத்துக்கு வருகிறார்கள். பையனின் அம்மா இறந்து போய் விட்டாள். சரக்கு ரயில் பெட்டி ஒன்றில் டிக்கட்டில்லா பயணம் செய்கின்றனர். அவர்களிடையே

“அப்பா, நாம் இப்போ எங்கே போறோம்?”

“கோக்டபெல்லுக்கு,”

“அது எங்கே இருக்கு?”

“க்ரிமியாலே…”

அந்த பாதையில் அவர்கள் போக வேண்டும்.

ரெயில்வே இன்ஸ்பெக்டர் அவர்களைப் பிடித்து அழைத்துச் சென்று அறையொன்றில் தள்ளி சாப்பிட எதையோ தந்து இரவைக் கழிக்கச் சொல்லுகிறான். தந்தையும் மகனும் ஒழுங்காக ரயில் பயணம் செய்து நடு வழியில் இறங்கி நடக்கின்றனர். கூரை நாசமாயிருக்கும் ஒரு வீட்டையடைகின்றனர். அங்கே ஒண்டியாக ஒரு மனிதன் வசிக்கிறான். அவன் பெயர் மிகேய்ல் அலெக்சாண்ட்ரோவிச் (MIKHEIL ALEXANDROVICH). பையனின் தந்தை மிகேய்லின் வீட்டுக்கூரையை செப்பனிட்டுத் தருவதாகச் சொல்ல, அவன் நம்பத் தயங்கவும் தன் பாஸ்போர்டை எடுத்துக் காட்டுகிறான் பையனின் தந்தை. அன்றிரவு நல்ல உணவும் உறைவிடமும் கிடைக்கிறது. பையனுக்கு மிகேய்ல் படிப்பதற்கு பத்திரிகைகள் தருகிறான்.

பயாஸ்கோப்காரன் 50 : சோவியத் ரஷ்ய சினிமா (Soviet Russian Cinema) - 9 | விட்டல்ராவ் (Vittal Rao K) | “நாயின் மனம்” (HEART OF A DOG) | THE THIEF

மறுநாள் புலர்ந்தது முதலாக தந்தையும் மகனுமாய் அந்த வீட்டின் பிய்ந்து போன கூரையை புதுப்பித்துத் தந்துவிட்டு கூலியை எதிர்பார்க்கையில் தன் பணம் மொத்தமும் காணவில்லை நீதான் திருடியிருக்கிறாய், திருடா என்று குற்றம் சுமத்தி கத்துகிறான். நீ அதிகமாய் குடித்திருக்கிறாய், மப்பு குறைந்ததும் எங்கே வைத்தாய் என்பது தெரிய வரும், நான் பணத்தை எடுக்கவில்லை என்கிறான் பையனின் அப்பா. மிகேய்ல் துப்பாக்கியால் சுட்டு விடுகிறான். இரத்த காயத்துடன் தந்தையும் மகனும் ஓடி விடுகின்றனர். வசதி மிக்க ஒரு வீட்டையடைகின்றனர். யுத்தத்தில் கணவனையும் மகளையும் பறிகொடுத்து விட்டு தனியளாய் வாழும் ஸெனியா (XENIA) என்ற அழகிய பெண்ணின் வீடு அது.

ஸெனியா பையனின் தந்தைக்கு முதலுதவியளித்து இருவருக்கும் அடைக்கலமளிப்பதோடு அவர்களின் பாஸ்போர்ட் முதலானவற்றை மிகேய்லிடமிருந்து மீட்டுக் கொண்டு வந்து தருகிறாள். பையனின் தந்தைக்கும் ஸெனியாவுக்கும் அந்தரங்க உறவும் ஏற்படுகிறது. அதை சற்றும் விரும்பாத பையன் அங்கிருந்து போய்விடலாமென அப்பனை நச்சரிக்கிறான். பையன் தந்தையோடு சண்டை போடுகிறான்.

“நீ பொய் சொல்லுகிறாய், கிரிமியாவில் கோக்டெபெல் என்று ஓரிடம் இல்லவேயில்லை, நான் உலக தேசப் படத்தில் தேடிப் பார்த்துவிட்டேன்”, என்கிறான் பையன். அதற்கு அப்பன் சொல்லுகிறான், “கோக்டெபெல் 1944ல் ப்ளானர்ஸ்கோயி (PLANERSKOYE) என்று பெயர் மாற்றப்பட்டது.”

“நீ பொய் சொல்லுகிறாய். அந்தப் பெய் கூட ஜாலியா இருக்கிறதை மட்டுமே செய்யறே, அவளை எனக்குப் பிடிக்கல்லே” என்று கூறும் சிறுவன் இரவில் தன் துணிகளோடு ஓடிப்போகிறான். வழியில் ஒரு லாரியில் இடம் கிடைத்து க்ரிமியாவை அடைந்து கோடெபெல்லை சேர்கிறான். தன் தந்தையின் சகோதரியும் தனக்கு அத்தையுமானவள் இருக்கும் வீடு போலியானிச்கோவ் என்பதில் கடற்புற தெரு (SEASIDEST)விலுள்ளது என்றும் அங்குதான் போவதாக இருவரும் பயணப்பட்டதை எண்ணி பையன் அந்த வீட்டை அடைகிறான். வீட்டில் அத்தை இல்லை. அவள் சைபீரியாவுக்குப் போய் விட்டாளென்றும், இவர்களிருவரும் வந்தால் கொடுக்கும்படி சொல்லித் தந்த உறை ஒன்றை தருகிறாள் அத்தை வீட்டில் குடித்தனமிருக்கும் பெண்மணி. பையன் அதைப் பிரித்துப் பார்க்க அதில் கடிதத்துடன் கொஞ்சம் பணமும் இருக்கிறது. பையன் பணத்தை கொஞ்சம் செலவு செய்து விட்டு தான் பார்க்க ஏங்கிய கருங்கடல் கரையிலமர்ந்து கடலை ரசிக்கிறான். சிறிது நேரத்தில் அவனுடைய அப்பனும் வந்து சேர்ந்து கொள்ளுகிறான். இவ்வழகிய வண்ணப்படத்தின் காமிரா கோணங்களை அமைத்த ஒளிப்பதிவாளர் ரோமன் போரிஸ்விச் (ROMAN BORISVICH) பையனாக க்ளெப் புஸ்கெபாலிஸ் (GLEB PUSKEPALIS) என்ற கிரிமிய சிறுவன் நன்கு செய்திருக்க, தந்தையாக ஐகோர் செர்னவிச் (IGOR CHERNEVICH) நன்கு ஈடு கொடுக்கிறார். மிகேய்லாக விளதிமிர்குசெரெங்கோ (VLADIMIR KUCHERENKO)வும் ஸெனியாவாக அக்ரிப்பினா ஸ்டெக்லோவா (AGRIPPINA STEKLOVA) என்பவர் நிறைவாக நடித்திருக்கின்றனர்.

பயாஸ்கோப்காரன் 50 : சோவியத் ரஷ்ய சினிமா (Soviet Russian Cinema) - 9 | விட்டல்ராவ் (Vittal Rao K) | “நாயின் மனம்” (HEART OF A DOG) | THE THIEF

நவீன ரஷ்ய சினிமாவில் பேவெல் சுக்ரேய் (PAVEL CHUKRAI) கொஞ்சம் வெகுஜன ருசிகொண்டவர். சமரசம் பண்ண தயங்க மாட்டார் என்றும் தோன்றுபவை இவரது திரைப்படங்கள். அவற்றில் 1997ல் வெளிவந்த படம் ‘’THE THIEF” (RUSSIAN; ‘’VOR”). நல்ல படம் என்றே சொல்லலாம். இது பேவெல் சுக்ரேய்னுக்கு எட்டாவது படம். கட்யா (KATYA) அழகிய யுத்த விதவை. உலகப் போரின் போது படுகாயமுற்று வீடு திரும்பிய அவள் கணவன் செத்துப் போன விவரம் படத்தின் தொடக்கத்தில் வாசகமாக தெரவிக்கப்படுகிறது. கட்யாவின் ஆறு வயது அழகிய பையன் சன்யா (SANYA)வின் குரல் வழி விவரிப்பில் படம் முன்னோக்கிச் செல்லுகிறது.

1946-ல் இரண்டாம் உலகப் போர் முடிவுறுகையில் கட்யா விதவையாகும் போது சன்யா பிறக்கிறான். விதவை கட்யா நிறைமாதமாய் ஒரு மூட்டையுடன் கிராமத்து மண் சாலையில் தள்ளாடி நடப்பவள் பிரசவ வலிகண்டு சாலையில் விழுவதும் பிறகு லாரியொன்றில் ஏறி போவதும் படத்தின் தொடக்கமாய் காட்டப்படுபவை. அடுத்த காட்சியில் ரயில் பெட்டிக்குள்- நம்மூர் ரயில் பயணம் போலவே தோன்றும் – ஆறு வயது சன்யாவும் கட்யாவும் சீட்டு விளையாடினபடி பயணிக்கையில் பையனுக்கு மேல் பெர்த்தில் ஏறியமர ஆசை ஏற்பட, கட்யா அதில் யாராவது வந்து படுப்பார்கள், நீ போகாதே என தடுக்கிறாள். பெட்டிக்குள் நிற்பவர்களையெல்லாம் தள்ளி ஒதுக்கிக் கொண்டு வசீகரமான உயரமான திடகாத்திர மனிதன் ஒருவன் அப்பழுக்கற்ற ராணுவ சீருடையில் வந்து கட்யா-சன்யா உட்கார்ந்துள்ள இருக்கைக்கு மேலுள்ள தளத்தில் ஏறிப்படுக்கிறான்.

பயாஸ்கோப்காரன் 50 : சோவியத் ரஷ்ய சினிமா (Soviet Russian Cinema) - 9 | விட்டல்ராவ் (Vittal Rao K) | “நாயின் மனம்” (HEART OF A DOG) | THE THIEF
பேவெல் சுக்ரேய் (PAVEL CHUKRAI)

அவன் பார்வை கட்யா மீதும் சன்யா மீதும் பதிகையில் பையனின் பார்வை ஆர்வத்தோடு ராணுவ வீரன் அவிழ்க்கும் தோல் பெல்டோடு இணைந்த ராணுவ கைத் துப்பாக்கி மீது நிலைக்கிறது. ராணுவ வீரன் பெயர் டோலியான் (TOLYAN) என்பது. அவன் கட்யாவுக்கு ஜாடை காட்டி கழிப்பகத்துக்கு அழைத்துச் சென்று உடலுறவு கொள்ளுகிறான். ரயிலின் அதே பெட்டியில் ஒரு பெண்மணி தன் பணமும் சில நகைகளும் களவு போய் விட்டதாக்க் கத்தி அழுகிறாள். ஓர் ஊரில் டோலியான் கட்டியா, சன்யாவுடன் இறங்கி ஒரு குடியிருப்பு அடுக்குமாடியில் வாடகைக்கு இடம் பிடிக்கிறான். பையனை வெளியில் தள்ளி கதவை உட்புறம் தாழிட்டுவிட்டு கட்யாவுடன் உடலுறவு கொள்ளுகிறான். வெறுப்பில் தண்ணீர் குழாயை திறந்து போட்டு விட்டு சன்யா ஓடிவிட குடியிருப்பின் அப்பகுதி முழுவும் வெள்ளக்காடாகிறது. கட்யா ஆவன செய்கிறாள். எல்லாருமாய் தண்ணீரைப் பிழிந்தெடுக்க வீட்டுக்காரியும் மற்றவர்களும் சிப்பாயின் பாஸ்போர்ட்டில் சந்தேகம் கொள்ளுகின்றனர். டோலியான் பையனை “அப்பா” என்று தன்னை அழைக்கும்படி சொன்னால் அவன் “அங்கிள்” என்றே அழைக்கிறான். சில தங்க நகைகளை, கைக்கடிகாரத்தை கட்யாவுக்கு பரிசாக தருகிறான். பணம் செலவழித்து மற்ற குடித்தனக்காரர்களையழைத்து விருந்து படைக்கிறான்.

எல்லோரும் ஆடிப்பாடியிருக்கையில் கள்ளச் சாவி போட்டு ஒரு வீட்டைத் திறந்து ரொக்கம், பிற சாமான்களை வேகமாய் திருடுகையில் கட்யா வந்து பார்த்து நடுங்குகிறாள். ராணுவ வீரனல்ல, அந்த உடையில் திருடன் என்று நினைக்கிறாள். அதிவேகமாக அவளையும் பையனையும் இழுத்துக் கொண்டு ரயிலேறி மற்றொரு ஊரை அடைகிறான். அங்கொரு சீமாட்டியை சர்க்கஸ் பார்க்க அழைத்துச் சென்று தன் மனைவியென்று கட்யாவைக் காட்டி அவளை உட்கார வைக்கிறான். சீமாட்டிக்கு டோலியின் மீது காதல். சிறிது நேரம் கழித்து நைசாக நழுவி சன்யாவுடன் சீமாட்டியின் வீட்டைத் திறந்து திருட்டிலீடுபடுகையில் தொடர்ந்து வந்த கட்யா, அவனைத் திட்டி எச்சரிக்க அவன் அவளை தள்ளித் தாக்கிவிட்டு போகிறான். அவனை விட்டு நீங்குவதாக முடிவெடுக்கும் கட்யா மகனோடு வேற்றூருக்குப் பயணமாக உத்தேசக்கையில் டோலியன் போலீசால் கைதாகிறான். அவனால் கர்ப்பமுற்ற கட்யா பிரசவத்தின் போது மரணமடைகிறாள். ஒரு சூட்கேஸ் சகிதம் சன்யா அனாதை இல்லத்தில் சேர்க்கப்படுகிறான்.

டோலியன் விட்டுச் சென்ற ராணுவ கைத்துப்பாக்கி குண்டுகளோடு சூட்கேஸ் அடியில் கிடக்கிறது. அனாதை விடுதியில் வளர்ந்து பெரிய பையனாகும் சன்யா தன் வயதையொத்த பையன்களோடு குப்பை மேட்டில் வீசியெறியப்பட்ட ஜவுளிக் கடை பெண் பொம்மையை வைத்து ரயில்வே பகுதியில் புரியும் வாலிப சேஷ்டை படத்தில் வரும் அரிதான சிரிப்புப் பகுதி. ரயில்வே பாதையை ஒட்டிய சிறிய வீட்டின் முன் மீசை வைத்து சற்று வயதான டோலியன் நண்பர்களுடன் உட்கார்ந்து குடிப்பதை சன்யா பார்க்கிறான். டோலியனுக்கு சன்யாவை அடையாளம் தெரியவில்லை. தன் அம்மா கட்யா என்று கூறி நினைவுபடுத்துகிறான் சன்யா. அப்போது வீட்டுக்குள்ளிருந்து டோலியனின் புது மனைவி வெளியில் வருபவள் நிலைமையை விளங்கிக் கொண்டு கேள்வி கேட்கிறாள். யாரோ அனாதைப் பெண், ரயிலில் ஒரு சமயம் மாட்டினாள், இருவரும் மஜா செய்தோம், அவ்வளவுதான் என்று அலட்சியமாக சிரிக்கிறான் டோலியன். அவளிடமே ஓடு என்று கூறி உள்ளே போகிறாள் புது மனைவி. டோலியன், சன்யாவால் சிக்கல் வரும் என பயந்து அங்கிருந்து ஓடிவிட முயற்சிக்கிறான்.

பயாஸ்கோப்காரன் 50 : சோவியத் ரஷ்ய சினிமா (Soviet Russian Cinema) - 9 | விட்டல்ராவ் (Vittal Rao K) | “நாயின் மனம்” (HEART OF A DOG) | THE THIEF

அவனைத் தீர்த்துக் கட்டும் முடிவோடு சன்யா துப்பாக்கியோடு வருகிறான். டோலியன் தன் மூட்டைகளோடு ஒரு காலியான சரக்கு ரயிலில் தாவுகிறான். வண்டியும் கிளம்புகிறது. சன்யா குறி பார்த்தும் டோலியனின் துப்பாக்கி வேலை செய்வதில்லை. வண்டி வேகமெடுக்கையில் சன்யா டோலியனின் தலைக்கு குறி வைத்துச் சுடுகிறான். இம்முறை துப்பாக்கி ஏமாற்றுவதில்லை. டோலியன் பிணமாக பெட்டியில் சாய்கிறான். சன்யா துப்பாக்கியை ஓடும் சரக்கு ரயிலின் இன்னொரு காலிப் பெட்டியில் வீசிவிட்டு “இப்போது எனக்கு யாருமில்லை” என்ற வசனத்தோடு படத்தை நிறைவு செய்கிறான்.

கட்யாவாக ஏகதெரினா ரெட்னிகோவா (EKATERINA REDNIKOVA) மனமுறுக நடிக்கிறார். சின்னப்பையன் சன்யாவாக தியற்புதமாய் நடிக்கும் அழகிய ரஷ்ய பையன் மிஷா ஃபிலிப்சுக் (MISHA PHILIPCHUK) எல்லோரது பாராட்டையும் பெறும் குழந்தை நட்சத்திரம். டோலியன் பாத்திரத்தில் அதி சிறப்பாக நடித்திருக்கும் விளதிமிர் மாஷ்கோவ் (VLADIMIR MASHKOV) ரஷ்யாவில் “ரஷ்யாவின் கிளார்க் கேபிள்,” எனப்படுபவர்.

பேவல் சுக்ரேய் 1946-ல் பைகோவா (BYKOVA) எனும் ஊரில் பிறந்தவர். புகழ் பெற்ற ரஷ்ய திரைப்பட இயக்குனர் கிரிகோரி சுக்ரேய் (GRIGORI CHUKRAI) இவரது தந்தை. பேவல் இயக்கிய படங்களில் A DRIVER FOR VERA, COLD TANGO, மற்றும் THE RUSSIAN GAME என்பவையும் பார்க்கப்பட வேண்டியவை.

THE THIEF திரைப்படத்தின் வண்ண ஒளிப்பதிவை காமிரா கலைஞர் விளதிமிர் க்ளிம்ரோவ் (VLADIMIR KLIMROV) சிறப்பாகச் செய்திருக்கிறார்.

இந்த ரஷ்ய திரைப்படத்தோடு ரஷ்ய சினிமா பகுதியும் பயாஸ்கோப்காரனின் பயணமும் நிறைவுறுகிறது. மற்ற வாசகர்களின் பயணம் நிறைவுற நிறைய இருக்கிறது. அது அவரவர் பாடு.

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *