விட்டல்ராவின் ‘காம்ரேடுகள்’ நாவல் | Vittalrao's Comradugal Tamil Novel Book Review | எஸ்ஸார்சி | www.bookday.in

விட்டல்ராவின் ‘காம்ரேடுகள்’ நாவல் – நூல் அறிமுகம்

தான் பணியாற்றிய தொலைபேசித்துறையின் அன்றைய சூழலைத் தொழிற்சங்கச் செயற்பாடுகளை, போராட்ட இயக்கத்தை முன்னின்று நடத்திய தலைவர்களின் ஏற்ற இறக்கங்களை ’காம்ரேடுகள்’ என்னும் புதினத்தில் சித்திரமாகக் கொண்டு தருகிறார் விட்டல்ராவ். இப்புதினத்தை ஜைகிரி பதிப்பகம் பெங்களூர் வெளியிட்டுள்ளது. தனது முன்னுரையில் விட்டல்ராவ் இந்நூலின் நோக்கம் குறித்து இப்படிக்குறிப்பிடுகிறார்.

‘1962 –இல் நிகழ்ந்த இந்திய சீன எல்லைப்போரையடுத்து பொதுவுடைமைக் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேற்றுமை, பிரிவு என்பவை இந்திய தொழிற்சங்கங்களிலும் எதிரொலித்து அதே விளைவை ஏற்படுத்திய அக்குறிப்பிட்ட காலத்தில் அரசுத்துறையொன்றின் தொழிற்சங்கத்துப் பின்னணியை விவரிப்பது.’

தென்னக ரயில்வே அலுவலகத்துக்கும் வால்டாக்ஸ் சாலைக்குமிடையேயுள்ள சாலைச் சந்திப்பில் தொலைபேசி இலாகாவின் முக்கிய சிகப்பு நிற கேபிள் கையிழுப்பு வண்டி வந்து நின்றது. தென்னக ரயில்வே, பொதுமருத்துவமனை , மருத்துவக்கல்லூரி இவைகளின் கேபிள்கள் பழுதாயின. கேபிள் ஜாயிண்டர் முத்துமல்லா அந்தப்பழுது நீக்கும் பணியிலிருக்கிறார். அவர் சைக்கிளின் அழகு பற்றி விவரிக்கிறார் விட்டல்ராவ்.’ பள பளக்கும் புதிய சைக்கிள், சைக்கிளுக்குப்பின்னால் பக்கத்துக்கொன்றாக இரு சிவப்பு விளக்குகள், ஹாண்டில் பார் பிடிகளில் குஞ்சங்கள், சைக்கிள் பாருக்குப் பட்டுக்கவசம்,ஆசனத்துக்கு வெல்வெட் உறை,, முன் மட்கார்டையொட்டி காத்திரமான பம்பர், பம்பர் நுனியில் அழகிய பிளாஸ்டிக் வண்ணக்குப்பி, முன் மட்கார்டு நுனியில் பறக்கும் நிலையில் பொருத்தப்பட்ட வெண்கல குதிரைப்பதுமை, பெரிய மணியுடன் சுழன்று சுழன்று ஓசை எழுப்பும் சிறிய மணி ஒன்று.’

அலுவலகத்தில் கேபிள் பணிக்குக் கொடுத்த அரசாங்க ஈயத்தில் ஒருபகுதியை முத்துமல்லா திருட்டுத்தனமாய் விற்றுக் காசுபார்க்கிறார். தன் உதவியாட்களுக்குக்கொஞ்சம் காசு கொடுத்துவிட்டு மீதியைத் தன் ஜேபியில் பத்திரப்படுத்துகிறார்.

தம்பய்யா பொது மருத்துவமனையின் தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றுகிறார். அவரிடம் கேபிள்ஜாயிண்டர் முத்துமல்லா மீன் எண்ணெய் மாத்திரை தனக்கு வேண்டும். அது தீர்ந்து போய்விட்டது என்கிறார். அதற்கும் தம்பய்யா அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யவேண்டும்.

சத்தியநாராயணா காலமாகிவிட்டார். இதுதான் புதினத்தில் வரும் பிரதான செய்தி. சத்தியநாராயணா யார் என்பதைச் சொல்லவேண்டும். தொலைபேசி ஊழியர் தொழிற்சங்கத்தின் தலைவர். அவரை அறியாதவர்கள் அனேகமாக யாரும் அங்கே இருக்கமாட்டார்கள். அகில இந்திய சம்மேளனத்தின் உதவிப்பொதுச்செயலராய் நியமிக்கப்பட்டவர். இந்திய அளவில் அவரின் பெயர் பிரபலம்

.’ போயிட்டார். காம்ரேட்டு சத்தியநாராயணா போயிட்டார்.பாடி ஜி. ஹெச்லே இருக்கு. போஸ்மார்ட்டம் முடிஞ்சி வரும்’ என்று அப்பர்சாமி அறிவித்துக்கொண்டே போகிறார். அவரைச் சக ஊழியர்கள் எப்படி அடையாளம் காண்கிறார்கள் என்பதை விட்டல்ராவ் அழகாகக் கையாள்கிறார்.புதினத்தில் வரும் அப்பர்சாமி விட்டல்ராவ்தான்.

‘ஆரு சத்தியநாராயணா’

‘அஞ்சி வருஷத்துக்கு மின்னாடி அவரு ஒரு தலைவரு. அஞ்சி வருஷத்துக்கு மின்னாடி சர்க்கிள் கான்ஃபரன்சுக்கு வந்திருந்தயா,மகாஜன சபாலே நடந்திச்சே’

‘இல்லியே இப்ப இப்பத்தான் யூனியன் கூட்டத்துக்கெல்லாம் வந்து போறேன்’

‘இருயிரு செவப்பா.ஒல்லிய,ஒசரமா தண்ணி போடறாஆளா?’

‘அதேதான் வுடாதே புடிச்சிக’

‘கம்னீஷ்டா’

‘கம்னீஷ்டுதான்..கம்னீஷ்டுதான்’

‘ஓஅவரா’

ஊழியர்கள் அந்தத்தலைவரை நினைவுக்குக்கொண்டு வந்துவிட்டார்கள்.

போஸ்ட்மார்டெம் முடித்தபின் பாடியை எந்த வீட்டுக்குக் கொண்டுவந்து இறுதிச்சடங்குமுடிப்பது பின் மயானத்திற்கு எடுத்துச்செல்வது என்பதில் பிரச்சனை.

‘தப்பா நினைச்சிக்காதீங்க சார். சத்தியநாராயணா ஒங்க தம்பி சார் ‘ என்றான் ரமணய்யாவிடம் அப்பர்சாமி.

‘பாரு அப்பர் வெளியிலேந்து பிரேதத்தை, வாடகைக்கு குடியிருக்கிற வீட்டுக்குக் கொண்டு வர்ரதுங்கறது மட்றாஸ் சிடியிலே பொதுவா ஒத்துக்கற விஷயமில்லே. இங்கே ஏழெட்டு குடித்தனமிருக்கு. எல்லாம் ஆச்சாரமான குடும்பங்கள், பொணத்தை இங்கே கொண்டுவந்து வைக்கறதிலே ஆட்சேபணை எழுப்பும். ஆகாது, ஆகவே ஆகாது’ என்று மறுத்துப்பேசுகிறார் ரமணய்யா.

புதினத்தில் சோஷலிச நாட்டுப் புத்தகங்கள் விற்பனைக் குறித்து விவரணை வருகிறது. அது கூர்மையான விமரிசனமாக அமைந்துள்ளது.

‘சோஷலிஸ நாட்டுப்புத்தகங்கள் முதன்மையும் பெருவாரியாகவும் இருந்தன. அதிலும் சோவியத் சீனப் புத்தகங்கள் ஆளுமை கொண்டிருந்தன. பல்கேரிய ,ருமேனிய, கிழக்கு ஜெர்மனி நாடுகளின் மாத காலாண்டிதழ்கள் தென்பட்டன. இவற்றின் மேல் அப்புத்தக நிறுவனமாகவே விலையைநிர்ணயித்துப் போட்டிருந்தது. விலை மலிவில் சீனப்புத்தகங்களுக்கும் ருஷ்யப்புத்தகங்களுக்கும் சரியான வியாபாரப் போட்டியிருந்ததைப் பார்க்க முடிந்தது. வியாபாரத்தைக் காட்டிலும் கொள்கை பரப்பும் முகமாயும் அந்த விலை நிர்ணயப்போட்டி தெரிந்தது.’

இன்றைய வாசகன் நினைத்துப்பார்க்கிறான். சிவப்பு ருஷ்யாவையும் செஞ் சீனாவையும் வரலாறு எங்கே கொண்டுபோய் நிறுத்தி கண் சிமிட்டி விளையாடிக்கொண்டிருக்கிறது என்பதனை.

ஒரு சமயம் சத்தியநாராயணாவும் அப்பர்சாமியும் சென்னையிலிருந்து திருப்பதி கோவிலுக்குப் புறப்படும் குடை ஊர்வலத்தைக்காணக்கிளம்புகிறார்கள். சென்னை நகரமே திரண்டு வந்து அந்த பெரம்பூர் பாரக்ஸ் சாலையில் நிற்கிறது. அவதானம் பாப்பய்யர் தெரு, என்பது திருப்பதி குடை ஊர்வலம் கடந்து செல்லவேண்டிய நிகழ்ச்சி நிரலின் பார்வையில் கிட்ட தட்ட ஒரு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தந்திரமிக்க மையம் போன்றது . அழகாய் ஆடம்பரமாய் கண்ணைப்பறிக்கும் வண்ணங்களிலும் ஜிகினா மினு மினுப்பிலுமாய் ஜோடி ஜோடியாகக் குடைகள் ஒரு வழியாக அவதானம் பாப்பய்யர் தெருவைக் கடந்து விட்டன என்று எழுதுகிறார் விட்டல் ராவ்.

புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை தோறும் வரும் நாராயணா கோபாலா அரிசி கேட்டு யாசிக்கும் நாமதாரிகள் பற்றியும் குறிப்பிடுகிறார் ‘கோய்ந்தா கோய்ந்தா…… கோ யிந்தா.’ மாடிப்படி ஏறி வருகிறது செம்புக்கூட்டம். சத்தியநாராயணா சொல்லி அனுப்புகிறார்.’ இங்கெல்லாம் ஒண்டிக்கட்டைங்க குடியிருக்கிறது. கீழே போய் கேளு’.

’இல்லை, போய்ட்டுவா என்று சொல்லியனுப்ப பயம்’ பொது ஜனங்களுக்கு என்கிற உள்விஷயத்தையும் சொல்லிவிடுகிறார் ஆசிரியர்.

சத்தியநாராயணா இன்று இல்லை. அவரின் பூத உடலுக்கு மாலை மரியாதை செய்ய காம்ரேடு காசி கைக்குட்டையை விரித்துக் காசு கேட்கிறான். வழக்கமாய் இந்தக்காரியங்களுக்கு எடுப்பு எடுத்து செய்வதில் முனைப்பாய் இருப்பவன் இந்தக் காசி. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குக் குறைந்த பட்சம் இவ்வளவு போடவேண்டும் என்று நிர்ணயித்து விடுவான் காசி. ஆனால் இறப்புக்கு அப்படியில்லை. மாலை வாங்க காசு போடுவது அவரவர் விருப்பம். கருப்பு ரிப்பன்களைத் துண்டு துண்டாக வெட்டி குண்டூசியுடன் விநியோகம் நடக்கிறது. சத்தியநாராயணாவைத் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் விரும்பியவர்கள் வெறுத்தவர்கள், ஏற்றுக்கொண்டவர்கள் வேறுபட்டுப்போய் எதிர்த்தவர்கள் என்று எல்லோருமே கருப்பு ரிப்பனை வாங்கி சட்டையில் குத்திக்கொண்டனர். ஒருவருக்கும் முகமே சரியில்லை என்கிறார் விட்டல்ராவ்.

அப்பர்சாமி பாண்டியனைத்தேடிச் சென்றிருந்தான். இருவரும் ஒரு தேநீர்க் கடையில் அமர்கின்றனர். அப்பர் சாமி சிரித்துக்கொண்டான்.’

‘என்ன நீங்களே சிரிக்கிறீங்க?’

‘ஒரு விஷயத்தை நினைச்சேன் சிரிப்பு வந்தது’’

‘தெரிஞ்சிக்கலாமா, மிஸ்டர் அப்பர்?’

‘இந்த இடது சாரி வலதுசாரி விஷயம்தான். யாரெல்லாம் இடதுசாரி, வலதுசாரி?’

‘எல்லாம் இடதுசாரிதான். இடதுக்குள்ளேயே தீவிரமானது, மிதமானதுன்னு ஆயிட்டது பாருங்க அதுக்குள்ளேயே இடது வலதுன்னு’

அப்பர்சாமி மேலும் சொல்லுகிறான்.

‘இன்னைக்கு இடது சாரியா தோண்றது நாளைக்கு வலது சாரியா சூடாறிடலாம்’

இவை அனைத்தும் வாசகர்க்கு விஷயதானங்கள் ஆகின்றன.

காம்ரேடு கிருஷ்ணனுக்கு ஆறு ஆண் குழந்தைகள். ஏழாவது பிரசவத்துக்குத் திருமதி கிருஷ்ணன் மருத்துவமனையில் இருக்கிறாள். கிருஷ்ணன் உண்ணாவிரதப்போராட்டத்தில் பந்தலில் இருக்கிறார். அவருக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையைப் பார்க்கக் கூட கிருஷ்ணன் மருத்துவமனைக்குச் செல்ல மறுக்கிறார். உண்ணாவிரதம் முக்கியமாகிவிடுகிறது. அன்று மாலையில் பிறந்த குழந்தை இறந்து விடுகிறது. அப்போதும் உண்ணாவிரதப்போராட்டத்திலிருந்து கிருஷ்ணன் எழுந்து மருத்துவமனைக்குப் போகவில்லை. கணவன் மனைவிக்குள் நிரந்தரமாய் அந்த வடு இருக்கவே செய்தது.

தோழர்களிடையே தலைமாட்டிலிருந்து உள்ளங்கால்வரை நெரி ஏறிப்பரவி பிளவுகளை ஏற்படுத்தக் கருத்துப்போர் நிகழ சீனப்படையெடுப்பு அளவு கோலாகக்கொள்ளப்பட்டது. ஒருவரை ஒருவர் துரோகி என்றனர்.தொழிற்சங்கம் பகிரங்கமாக இரண்டு பட்டு நின்றது.

இரண்டு பட்டு மட்டும் நிற்கவில்லை. அது முடிந்த கதை. இரண்டும் வேறு வேறு தொழிற்சங்கமாக மாறிப்போனது என்பதுவே இன்றைய யதார்த்தம்.

தொழிற்சங்கத்திலே மிலிடன்சி சரிவராது. முதல் ரெண்டு ரவுண்டிலேயே ஆட்டம் பிரமாதமாக இருக்கும். அப்புறம் கவுந்துக்கும். தீவிரப்போக்குக்கு நீண்ட நாள் உத்திரவாதமிருக்காது’ என்கிறார் சத்தியநாராயணா. தேசியத்தலைவர்கள் மரணமுறும்போது இரட்டை ஒவர் டைம் பணிக்காசு கிடைக்கும் என்பது தொழிலாளர்கள் எல்லோருக்கும் எப்போதும் சந்தோஷத்தைத்தருவது. மாநில அளவிலான தலைவர்கள் மரணம் இந்த வகையில் காசு கொண்டு தராது. ஆக அது அவர்களுக்கு வருத்தமே.

இயற்கைச் சீற்றம் சென்னை தொலைபேசி சேவயைப் புரட்டிப்போட்டபோது சத்தியநாராயணா ஒரு அறிக்கையைத் தொழிலாளர்களுக்காக விடுவிக்கிறார். அது இப்படிப் போகிறது.

‘தொழிலாளிக்கு தொழிற்சங்கம் ஒரு கண் என்றால் அவன் சேவைபுரியும் தொலைபேசிச் சந்தாரர்கள் மற்றொரு கண் ஆகும். அவர்களுக்கு அளிக்கப்படும் சிறந்த சேவைதான் தொழிலாளர் நலன் மீது அவர்களுக்கும் கவனமும் அக்கறையும் கொள்ளச்செய்யும். சந்தாதாரர்களான பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிறந்த சேவைதான் தொழிலாளரின் ஸ்தாபன எதிர்ப்பின் போதும் வேலநிறுத்த நடவடிக்கையின் போதும் அவன் மீதும் அவன் தொழிற்சங்க நடவடிக்கை மீதும் இரக்கமும் கவனமும் கொண்டு நியாயம் பார்த்து ஆதரவுக்கரம் நீட்டவும் ஏதுவாக இருக்கும்’

அப்பர்சாமி ‘ஃப்ராக்‌ஷன்னா? என்ன என்கிறான்.

‘காம்ரேடுகள் சந்திச்சுப் பேசுற முறைக்கூட்டம்னு வச்சுக்க’ சத்திய நாராயணா விடை தருகிறார்.

காம்ரேடுகளுக்குக் கிருஷ்ணன் தெய்வம் போல. ஒரு காம்ரேடு கொஞ்சம் மாடுகளை வைத்திருப்பவர். அவர் கிருஷ்ணனுக்கு ஒரு சினை மாடு ஒன்றினை பரிசாக அளிக்கிறார். கிருஷ்ணனின் குடும்பம் அந்தப்பசு மாடு மீது தன் உயிரையே வைத்திருந்தது. திருமதி கிருஷ்ணன் மாட்டின் பாலை விற்றுக் காசாக்கிக் குடும்பத்திற்கு ஒத்தாசையாக இருந்தாள். மாட்டுக்குத் தீவனம் வாங்கிப்போடுவாள். மாட்டின் சாணத்தை வரட்டி தட்டி விற்று வீட்டு காய்கறிச்செலவுக்கு வைத்துக்கொள்வாள்.

ஒரு நாள் அதிகாலை அப்பர்சாமியின் வீட்டுக்கதவு தட்டப்படுகிறது. காம்ரேடு கிருஷ்ணன் திருமதி கிருஷ்ணன், அவரது பிள்ளைகள் யாவரும் வாயிலில் வந்து நிற்கிறார்கள்.

‘மாட்டைக்காணோம்’ சின்னவன் சத்தம் போட்டுச்சொன்னான். எல்லோரும் மாட்டுக்கொட்டகை நோக்கி விரைவாக நடக்கின்றனர்.’

‘நேத்து ராத்திரி கடைசியா நாந்தான் பார்த்தது.தண்ணி வச்சேன்’ என்று கூறிவிட்டு கலங்கின கண்களோடு கொட்டகையைச்சுற்றிச்சுற்றி நோட்டம் விட்டாள் திருமதி கிருஷ்ணன். காலையில் பால் கறக்க வந்த வாடிக்கைக்காரன் சொல்லத்தான் மாடு காணும் என்பதே எல்லோருக்கும் தெரிய வருகிறது. தொலைந்து போன மாடு கொட்டகையில் போட்டு விட்டுப்போன சாணம் பற்றி இப்படிப் பேச்சு. பள பள என்று பூட் பாலிஷ் மாதிரி போட்டு விட்டுச்சென்றிருக்கிறது. சுவாரசியமான ஓர் தகவலும் வருகிறது.

‘விடிய காத்தாலே போட்டிருக்கு’ என்கிறார் திருமதி கிருஷ்ணன்.

மாட்டை ஊரெல்லாம் தேடுகின்றனர். காம்ரேடுகள்தான் புறப்படுகின்றனர். மேடவாக்கம் ஏரி வரைச் சென்று மாடு தேடப்படுகிறது. எரி வறண்டு கிடக்கிறது. தண்ணீர் இல்லை. புல் பூண்டுகள் முளைத்திருந்தன. ஏரியுள் ஆங்காங்கே மாட்டுச்சாணம் கிடந்தது. திருட்டு மாடுகளை ஓட்டி வந்து பேரம் பேசி விற்கும் இடம் அது என்று அழகாகச்சொல்கிறார் விட்டல் ராவ். மாடு தேடிப் போனவர்கள் அங்கு தரை மீது கிடந்த கயிற்றின் துண்டுகளைப் பார்க்கிறார்கள். எதுவும் தொலைந்துபோன மாட்டின் கயிற்றோடு ஒத்துப்போகவில்லை. கிருஷ்ணனுக்கு பசுமாடு கொடுத்த ரெட்டியார் தம்பதி வீட்டிற்கு வருகை தருகிறது. ரெட்டியார் மனைவி, திருமதி கிருஷ்ணனிடம் பேசுகிறார். மந்திரவாதி ஒருவரிடம் போய் யோசனை கேட்கலாம் என்று சிபாரிசு சொல்கிறார்.

‘கோயில் இல்லே வீடுதான். வெத்திலையில் மை தடவிப் பாத்துச் சொல்லுறா அந்த அம்மா. சொன்னா சரியா இருக்கும் தப்பாது’ என்று விளக்கம் தருகிறாள்.

‘எனக்குத்தெரிஞ்சி நிறையபேர் சொல்றாங்க காம்ரேட், அந்தம்மா பார்த்து சரியா சொல்றாங்களாம். இந்த திசை இவ்வளவு தூரம்னு தெரிஞ்சிடுதாம்’ என்கிறார் ரெட்டியார்.

காம்ரேட் கிருஷ்ணனுக்குப் போக மனமில்லை. திருமதி கிருஷ்ணன் சின்னு ரெட்டியாரின் மனைவியோடு மந்திரவாதி வீட்டுக்குப் புறப்பட்டுப் போகிறார்.

’தென்கிழக்காலே தென்னந்தோப்பிலே இருக்குமாம். அமாவாசைக்குள்ளே திரும்பி வராட்டா மாடு நம்பளது இல்லையாம்’ மந்திரவாதி அம்மா சொன்னதாய் நமக்கும் சேதி சொல்லப்படுகிறது.

அதற்குள்ளாக மாடுதேடும் குழாம் நங்கநல்லூரை அடுத்த தலக்காணாஞ்சேரிக்கு விரைகிறது. அங்கு ஒரு சிறிய குட்டை . அதன் அருகே மாடு அடிக்கிற இடம்.

அங்கு ஒரு பறட்டைத்தலையன் வந்தவர்க்கு விளக்கம் அழகாகச்சொல்கிறான், பழைய கட்டிடம் ஒன்றைச் சுட்டிக் காட்டுகிறான்.

‘அதுக்குள்ளேதான் திருட்டு மாடுங்களை அடிக்கிறது. வம்புத் தும்பு எதுவும் வச்சிகாதிங்க. அவங்களுக்கெல்லாம் எம். எல். ஏ. மந்திரின்னு ஆளிருக்கு. எவனும் ஒண்ணும் ஆட்ட முடியாது. இந்த மாதிரி னு நயமா சொல்லி தன்மையா கெஞ்சிக்கேட்டாக்க ஒரு தொகை சொல்லுவாங்க. குடுத்துப்டு மாட்டைப் புடிச்சிகிட்டு போய்ட்டே இருங்க. ஆமா. திருட்டு மாட்டைத்துட்டு குடுத்துல்லே இவங்க வாங்கறாங்க.நாம்ப பணம் குடுத்தாவணும்.. போய்க் கேளுங்க.ஒரு ஆளை மாத்திரம் உள்ளே போய் பார்க்க வுடுவாங்க. மாட்டை அடையாளம் தெரிஞ்சவங்க போங்க’ என்கிறான். இப்படித்தன்மையாய்ப் பேசிய அவனைக் கெளரவப்படுத்தாமல் போனால் எப்படி? எனவே இடை மறிக்கிறான் அந்தப்பறட்டை. பத்து ரூபாய் தருகிறார்கள் அவனுக்கு. அவன் அதனை ஏற்க வில்லை. அவன் பின்னுக்காய் இரண்டடி நகர்ந்து கொள்கிறான். இருபத்தைந்து ரூபாய்க்குக் குறையாத நயம் அவனுடைய சொல் வியாபாரம். அதனைக்கொடுத்துவிட்டுத்தான் அவர்கள் அங்கிருந்து நகர்ந்திருக்க வேண்டும். கம்பீரமாய்ப்பேசும் அந்த பறட்டைத்தலையனை நமக்கும் கண்ணால் பார்த்துவிடவேண்டும் என ஆசை வருகிறது. விட்டல் ராவ் இவ்விடத்தே நல்ல சிறுகதையொன்றைச் செறுகி யிருக்கிறார்.

காம்ரேடு கிருஷ்ணன் மட்டும் பழைய கட்டிடத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார். எங்கெங்கோ களவாடப்பட்ட மாடுகள் அங்கே எலும்பும் தோலுமாய்க் காட்சியாகின்றன. கசாப்புக்கென அவை தயாராக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாடும் அவரைத்திரும்பிப் பார்க்கிறது. காதை ஆட்டி ஆட்டி ’என்னைக் காப்பாற்று என்னைக் காப்பாற்று’ என்று அழைப்பது போல இருந்தது கிருஷ்ணனுக்கு என்கிறார் விட்டல் ராவ். அங்கு எந்த மாடும் அவருடையதாக இல்லை. மாடு களவு போனது போனதுதான்.

ஒரு சமயம் காம்ரேடு கிருஷ்ணன் சவால்விட்டுச்சொல்கிறான்.

‘வேணுமானாப்பாரு. என்னோட மூத்தப் பையன்களிலே ஒருவனுக்காச்சும் நிச்சயமா சேரிக் குடும்பம் ஒண்ணிலேந்து பொண்ணு கட்டுவேன்’ ஆரோக்கியமான சமூகப்புரிதலில் விளைந்த சொல்லாட்சி.

கிருஷ்ணன் அரும்பாக்கத்திலே வீடு கட்டிக்குடி போகிறார். நாள் நட்சத்திரம் பார்த்துத்தான். நாள் நட்சத்திரம் எல்லாம் எல்லா ‘இசத்திற்குள்ளும்’ நுழைந்து வெளிப்பட்டு விடும் ஆற்றலுடையது. . இராகு காலத்திற்கு யோகம்தான் என்கிறார் விட்டல்ராவ். யாரும் அலட்சியம் செய்யாதபடிக்கு ராகு காலம் ஆளுகையின் உச்சத்தில் உள்ளது என்பதைச் சொல்லுகிறார்.

மத்திய அரசு ஊழியர்கள் எப்போதும் எதாவது கடன் வாங்கிக்கண்டே இருப்பவர்கள். கடனிலிருந்து விடுதலை என்பதை அறியாதவர்கள். அவர்களை கடனாளி ஆக்குவதில் அரசுக்கே ஆனந்தம் போலும் என்கிறார் விட்டல் ராவ். மின்விசிறி வாங்கக்கடன், சைக்கிள் வாங்கக் கடன்,ஸ்கூட்டர் கடன், வீடு கட்டக்கடன், வறட்சி நிவாரணக்கடனுதவி, அல்லது வெள்ள நிவாரணக்கடனுதவி என்று பட்டியல் நீளுகிறது. கடன் சொசைட்டிக்கள் அவற்றின் பலவகைக் கடன் கொடுக்கும் வசதி. அதன் ஆளுகை அங்கு ஆட்சி செய்வோர் தேர்ந்தெடுக்கப்படுதல், அதனில் தொழிற்சங்கத்தின் பங்கு என எல்லா விஷயங்களையும் அடுக்கி அடுக்கிச் சொல்கிறார் விட்டல் ராவ். சொசைட்டியில் கடன் பெற்றவர்கள் அதிலிருந்து விடுதலையே ஆவதில்லை. எதாவது ஒரு கடனில் தன் தலையைக் கொடுத்து விட்டு அல்லல் படுபவர்களாகவே இருக்கிறார்கள். சொசைட்டிக்கான நிர்வாகிகள் தேர்தல் அரசியல் ரீதியாகவும் ஜாதி ரீதியாகவும் நடக்கும் தன்மை கொண்டது என்பதையும் பாக்கி வைக்காமல் சொல்லி விடுகிறார்.

தொழிற்சங்க வேலையாய் டெல்லிக்குப்போய் ஒரு வாரம் கழித்துத் திரும்பி வருகிறார் சத்திய நாராயணா. வீடு பூட்டியிருந்தது. டெம்போ ஒன்றில் சாமான்களை அள்ளிப்போட்டுக்கொண்டு மனைவி அலமேலு எங்கோ கிளம்பிப்போய் விடுகிறாள். யாரோ ஒரு கருத்த ஆசாமி கூட வந்துஇருந்திருக்கிறான் என்று சொல்கிறார்கள். பொய் அட்ரெ்ஸ் ஒன்று கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறாள். அங்கு போயும் சத்தியநாராயணா பார்த்திருக்கிறான். அவள் எங்குதான் சென்றாளோ?

சத்தியநாராயணா குடிகாரன் என்றும் ஓடுகாலி என்றும் சமூகத்தில் கெட்டபெயர் வாங்குகிறான். பதவி உயர்வுக்கான இலாகாத் தேர்வு எழுதக்கூட அவனை நிர்வாகம் அனுமதிக்க மறுக்கிறது. ஓடிப்போன மனைவி அலமேலு அவள் பெங்களூரில் இருப்பதாக சுகுமார் நாயர் மூலம் தெரிந்துகொள்கிறான். சத்தியநாராயணாவும் பெங்களூர் செல்கிறான்.

என் மகனுக்கு ‘ நான் வச்ச பேரு வருண்’ என்கிறான். அது இல்லை இப்போது. அவள் பையன் பெயரை ராஜா என மாற்றிவிட்டாள். அவனைப்பையன் தந்தையாகப் பார்க்கவில்லை. அந்நியனாகவே பார்க்கிறான். பயந்து பயந்து ஓடுகிறான்.

மின்சார ரயிலில் அப்பர்சாமி பயணிக்கும்போது நக்சல்பாரித்தோழர்களைப் பார்க்கிறான்.’ பார்ப்பன பாசிச ஆதிக்கம் ஒழிக. நக்சல்பாரிகளை பயங்கரவாதிகளாய்ப் பிரகடனப் படுத்தாதே. நக்சல்பாரிகளை முற்போக்குப் புரட்சியாளர்களாக அங்கீகரி. பிற்போக்குக் கலாசாரமும் நசிவு இலக்கியமும் ஒழிக. ஓட்டுக்கட்சிகளின் பின்னால் போகாதீர்கள். புரட்சிகர முற்போக்கு அரசியல் கொள்கைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.மார்க்சிஸ்ட் லெனினிசம் வாழ்க’ என்று முழக்குகிறார்கள் அந்த நக்சல்பாரிகள். கம்யூனிசத்தின் மற்றுமொரு தடமும் வாசகனுக்குக் காட்சியாகிறது.

‘ஓவரா குடிச்சிருப்பாருங்க. அர்த்த ராத்திரியிலே தண்ணி தாகம் எடுக்கும். உடனே குடிச்சாவணும். தண்ணி சொம்புக்குதான் கட்டில்லயிருந்து குனிஞ்சபடியே கையை கட்டிலுக்குக் கீழே நீட்டித்துழாவியிருக்காரு. அதுக்குள்ளே எல்லாம் குளோஸ். இருதயம் நின்னுபோயிருக்கு’ விடுதிக்காரர் தலைவர் சத்தியநாராயணா பற்றிய கடைசிச் செய்தி சொல்கிறார்.

சத்தியநாராயணாவின் சடலத்தை தம் வீட்டில் வைத்து சடங்கு முடித்து மயானத்துக்குக் கொண்டு செல்லத்தான் உறவு மயங்குகிறது. நட்பும்தான்.

‘எவனும் வர வேணாய்யா. எவனையும் இனி கெஞ்ச வேணாம். எங்கயும் தோழரைக் கொண்டு போக வேணாம். நாமெல்லாம் யாரய்யா? நாமெல்லாம் அவருக்கு அண்ணன் தம்பி இல்லையா ? நாமளே எல்லாத்தையும் செஞ்சி முடிச்சா போச்சி. பாடிய நேரா யூனியன் ஆபிசுக்கே எடுத்திட்டுப் போயிடலாம். எல்லாரையும் யூனியன் ஆபிசுக்கே வரச்சொல்லிடலாம்’ என்கிறார் தோழர் ஆதி. சிவப்புக்கொடியைப் போர்த்திக்கொண்டு சத்தியநாராயணாவின் சடலம் யூனியன் அலுவலகப் பெஞ்சில் கிடத்தப்பட்டது.

சத்தியநாராயணாவின் இறப்பு இலாகாவில் எவ்வளவு பணத்தை விடுவிக்கும். அலுவலகத்தில் வாரிசு என்று யாரைக்குறிப்பிட்டுச் சென்றிருக்கிறார் அவர் என்கிற பேச்சுக்கள் பேசப்பட்டன. தூரத்து உறவுகள் அது குறித்துக் கவலைப்பட ஆரம்பித்தன. காசா லேசா என்பதே கடைசி விஷயமாகிறது. அப்பர்சாமியின் வீட்டிற்கு ரமணய்யா வருகிறார். சத்தியநாராயணாவின் இறப்பில் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை அறிய ஆர்வமாய் இருக்கிறார். தனக்கு ஏதும் தொகை தரப்படுமா என்பதே அவரின் கேள்வி. இடுகாட்டு வெட்டியான் புத்தகத்தில் அவர்தான் கையெழுத்துப்போட்டவர். மரணச்சான்றிதழ் தானே பெற்றுத் தன் வசம் வைத்துக்கொள்ள முனைப்பாக இருக்கிறார். இந்நேரம் பார்த்து சுகுமாரன் நாயர், சத்தியநராயணாவை உதறிவிட்டுப்போன அலமேலு, அவளின் சிறு பையன் ஆகிய மூவரும் வந்து அப்பர்சாமி முன்பாக நிற்கின்றனர். எல்லோருக்கும் சத்தியநாராயணாவின் இறப்பு எவ்வளவு காசு அள்ளித்தரும் என்பதே வினாவாகி நிற்கிறது.

ஆகப்பெரிய பொதுவுடைமைத் தத்துவத்தை சரியாகப் புரிந்துகொண்டு அதன்படி வாழ்ந்து காட்ட ஆசைப்பட்டவன் சத்தியநாராயணா.தனிமனித ஒழுக்கம் என்பதில் கோட்டை விட்டுவிட்டு தானே முச்சந்திக்கு வருகிறான். வாழ்க்கையில் தோற்றுப்போகிறான். அவனைச்சுற்றி மனிதம் வறண்டு போகிறது. காசே பிரதானமாய்ப்போன நடப்புலகு நெருக்கிக்கொண்டு நிற்கிறது. விட்டல்ராவ் ‘ காம்ரேடுகள்’ நாவல் வழி யதார்த்தம் சொல்கிறார். மெய்யான தோழர்கள் மட்டுமே கேட்டிலும் துணிந்து அவனோடு நின்று தோழமைபு காட்டுகிறார்கள். அவர்கள்தானே காம்ரேடுகள்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:காம்ரேடுகள்
ஆசிரியர்:விட்டல்ராவ்
வெளியீடு:
ஜெய்ரிகி பதிப்பகம்
விலை:₹.
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 எஸ்ஸார்சி

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *