விட்டல்ராவ் எழுதிய "வகுப்பறைக் கதைகள்" புத்தகம் | VittalRao's Vagupparai Kathaigal Tamil Book Review | எஸ். ஜெயஸ்ரீ | www.bookday.in

விட்டல்ராவ் எழுதிய “வகுப்பறைக் கதைகள்” – நூல் அறிமுகம்

விட்டல்ராவ் எழுதிய “வகுப்பறைக் கதைகள்” – நூல் அறிமுகம்

சின்னச் சின்னதாய் சிங்காரச் சித்திரங்கள்

எனது கல்லூரி நண்பன் ஒருவரின் மணிவிழா இரண்டு மூன்று மாதங்கள் முன்பு நடந்தறியது. அதற்கான அழைப்பை அவர் ஓரூ மாதம் முன்பே அனுப்பி வைத்திருந்தார். கட்டாயம் வர வேண்டும் என்று மிகவும் அழுத்திச் சொன்னார். அவரே கல்லூரி நண்பர்களை  இணைத்து புலனத்தில் குழு அமைத்து, தொடர்பு கொள்ளச் செய்தவர். அவர் அழைப்பு அனுப்பி விட்டு என்னிடம் கைப்பேசி வழியாக பேசும்போது, அவசியம் வந்தால், நாம் நண்பர்கள் எல்லாரையும் சந்தித்துப் பேசுவதற்கு அருமையான வாய்ப்பாக இருக்கும் என்று திரும்பத் திரும்பச் சொன்னார். எனக்கும் ஆவல் மிகவும் அதிகமாகி விட்டது. அதனால், நிச்சயம் சென்று வருவது என்று முடிவு செய்து விட்டேன். ஏற்கனவே, குழுமம் ஆரம்பித்தவுடனே, கல்லூரி குழுப் புகைப்படம் எல்லாம் பகிர்ந்து கொண்டாகி விட்டது.  அதனால், நாள் நெருங்க, நெருங்க  எல்லோரையும் சந்திக்கும் ஆவல் அதிகமாகியது.

அந்த நாளும் வந்தது. யாருக்கு மணிவிழாவோ அந்த நண்பருக்கு மிகுந்த மகிழ்ச்சி. 1986 ல் பி. காம் முடித்து வெளியில் வந்தது. முடித்த ஆறு மாதத்தில் எனக்கு வேலை கிடைத்துச் சென்னை சென்று விட்டேன். அவ்வளவுதான். ஏப்ரல் 86 ல், எல்லோரும் சேர்ந்து உண்பதும், உணர்ச்சி பொங்க அழுததும், ஆட்டோகிராப் புத்தகத்தில் கையெழுத்துகள் வாங்கி மகிழ்ந்ததும், பிடித்த ஆசிரியர்கள் கடைசி வகுப்பு எடுக்க வந்தபோது அழுததும் எல்லாம் எங்கே போயின என்பதே தெரியவில்லை.   குழு புகைப்படம் எடுத்த பிறகு, தேர்வுகள் என்ற பதற்றத்தில் நாட்கள்  போனதோடு அவ்வளவுதான். அதனால், நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அங்கு வந்த நண்பர்கள் ஒருவரைக் கூட அடையாளம் தெரியவில்லை. இந்த மாதிரி தொலைத்தொடர்பு வசதியும் இல்லாத, எந்த ஊரில் யார் இருக்கிறார்கள், என்ன வேலை செய்கிறார்கள் என்ற எந்த விபரமும் தெரிந்து கொள்ள முடியாமல், அவரவருக்குக் கிடைத்த பணி சார்ந்த, அலுவலக நண்பர்கள் என்று காலம் என்னை யும், என தோழிகள், நண்பர்கள் என எல்லோரையும் வேறு ஒரு உலகத்தில் தூக்கிப் போட்டது. அதன் பிறகு திருமணம், குடும்பம், குட்டிகள் என எல்லோருக்குமே வாழ்க்கை வேவேறு விதமாக அமைந்திருக்கிறது.

நாற்பது ஆண்டு கால இடைவெளி மனிதர்களை அகம், புறம் என எல்லா விதத்திலும் மாற்றி இருக்குமல்லவா? அதனால், வெளித் தோற்ற அடையாளமும் தெரியவில்லை. எவ்வித நெருக்கமும் தோன்றவில்லை. நான் கற்பனை செய்து வைத்திருந்த ஆர்வமும், ஆர்ப்பரிப்பும் யாரிடமுமில்லை. அவரவர் அவர்கள் மனைவிகளுடனும், இல்லாவிட்டால், செல்போனைப் பார்த்துக் கொண்டும் உட்கார்ந்திருந்தனர். தோழிகள் யாருமே வரவில்லை.  எங்கள் வீட்டுக்கு ஒரு முறை வாருங்கள் என்ற மரியாதை நிமித்தமான அழைப்பு கூட ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவில்லை. எனக்கு, இந்த நிகழ்வு பெரிய மனத் தாங்கலாக அமைந்து விட்டது.

நாற்பது வருடங்களுக்கு முன் பிரிந்த கல்லூரி நண்பர்களுடனேயே இந்த நிலைமை என்றால், அதற்கும் பத்து வருடங்கள்  முன்னால் பிரிந்து விட்ட பள்ளி நண்பர்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம். அவர்கள் முகம் கூட இப்போது நினைவில் எழும்பி வருமா என்று தெரியவில்லை.

இந்த முகங்கள் எல்லாம் நினைவில் இல்லாத  நிலைமை இப்படி இருக்க,  அன்பின் விட்டல்ராவ் அவர்களின் “ வகுப்பறைக் கதைகள்” தொகுப்பு, பள்ளி  நினைவுகளைக் கிளர்த்தி விட்டது. எனக்கு மட்டுமில்லை. இந்தப் புத்தகத்தை வாசிக்கும் யாருமே அவரவர் பள்ளி  நினைவுகளில் மூழ்கி, சிறு பிள்ளையாகி மகிழக்கூடும்.

இந்தப் புத்தகம் வெறுமனே அவருடைய பள்ளிக் கால நினைவுகளை மட்டும் சொல்லவில்லை. ஒரு சிறப்பான எழுத்தாளர் பள்ளி வயதிலிருந்தே எப்படி நன்றாகப் படிக்கும் ஒரு  மாணவனாக, எல்லாக் கலைகளிலும் வல்லவனாக, சிறந்த மனிதனாக உருவாகியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வைக்கிறது.  இது அந்தக் கால வாழ்க்கையைப் பேசுகிறது. ஒரு  தனி மனிதனின் நினைவுகள்  வழியாகவே அந்தக் கால கல்வி முறையைச் சொல்கிறது. ஆசிரிய, மாணவ உறவினைப் பற்றிச் சொல்கிறது. களங்கமற்ற நட்பினைப் பற்றிப் பேசி மனதினை சிலிர்க்கச் செய்கிறது. வறுமையைப் பேசுகிறது. .

சாதாரண அரசாங்க குமாஸ்தாவாக இருந்த ஒருவரின் வீட்டில் நான்கு குழந்தைகளை கல்விக்காக  பள்ளிக்கு அனுப்புவது என்பது எவ்வளவு பெரிய விஷயமாக இருந்திருக்கிறது என்பதை , இந்தப் புத்தகத்தின் பல கட்டுரைகளின் வாயிலாகப் புரிந்து கொள்ள முடியும். 1977 க்குப் பிறகே தமிழ் நாட்டில் கல்வி முறையில் பெரிய மாற்றம் வந்திருக்கிறது. அதற்கு முன்னர் பள்ளி என்றால், அது அந்த ஊரில் இருக்கும் அரசுப் பள்ளிதான். அந்தப் பள்ளியில்தான் அந்த ஊரின் பணக்கார வீட்டுப் பிள்ளைகளும் படிப்பார்கள். நடுத்தர வருமானம் உள்ள வீ ட்டுக் குழந்தைகளும் படிப்பார்கள். மிகச் சாதாரணமான, கூலி வேலை பார்ப்பவர் வீ ட்டுப் பிள்ளைகளும் படிப்பார்கள். அதனால், பிள்ளைகள் எவ்வித ஏற்றத் தாழ்வு, பாகுபாடு என்பதெல்லாம் இல்லாமல் வளர்ந்தார்கள். இதை இப்புத்தகத்தின் பல கட்டுரைகளில் காண முடிகிறது.

“எப்பேசு” என்ற கட்டுரையில் அந்தக் கால கல்வி அமைப்பு பற்றிக் குறிப்பிடுகிறார். மேச்சேரியின் பஞ்சாயத்து போர்டு பள்ளி பெரியது. எட்டாம் வகுப்பு வரை இருந்தது. அந்தக் காலத்தில் எட்டாம் வகுப்பு இறுதித் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றால் (இ. எஸ். எல். சி)   என சுருங்க அழைக்கப்பட்ட : எலிமென்டரி ஸ்கூல் லீவிங் சர்டிபிகேட்” என்ற சான்றிதழை அரசு வழங்கும். இதைக் கொண்டு உயர் வகுப்பான ஒன்பதாம் வகுப்பில் (நான்காம் படிவத்தில்) சேரலாம். ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பித்து, பயிற்சி பெற்று ஒன்று முதல் ஐந்து வகுப்புப் பிள்ளைகளுக்கு கல்வி புகட்டும் ஆசிரியராகலாம். தொடர்ந்து பட்டதாரி படிப்புக்கும் முயற்சிக்கலாம். குறைந்த படிப்பறிவு கொண்டவர்களுக்கும் கௌரவமான அரசு வேலை வாய்ப்பளிக்கும் வழி வகைகளை அரசு ஏற்படுத்தியிருந்தது. இந்த வரிகளை வாசிக்கும்போது அந்தக் காலம் எபபடிப்பட்ட பொற்காலம் என்று எண்ணத் தோன்றுகிறது.  இப்படியான ஓரூ நிலையை இந்தக் காலத்தில் நினைத்துப் பார்க்கவாது முடியுமா? ஃஎப் எஸ் ஓ என்கிற உணவு வழங்கல் அலுவலரான இவருடைய அப்பா எப்பேசு ஆனதை இவர் இக்கட்டுரையில் குறிப்பிடுவது மிகவும் சிரிப்பை வரவழைக்கக் கூடியது.  ரேஷன் முறை எப்படி இருந்தது என்பதையும் இந்தக் கட்டுரையின் வாயிலாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆசிரிய மாணவ உறவு என்பது எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கிறது என்று நினைத்துப் பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சித்திரப் பயிற்சி ஆசிரியர் ஒருவரின் மேல் கோட் கிழிந்திருப்பதைப் பார்த்த மாணவர்கள் அவரவர் குடும்பப் பொருளாதார வசதிக்கேற்ப பைசா வசூல் செய்து அதில் துணி எடுத்து, அதையும் தலைமையாசிரியரிடம் கொண்டு போய்க் கொடுக்கிறார்கள். அவரோ, தான் கொடுத்தால் , சித்திரப் பயிற்சி ஆசிரியர்  தவறாக எடுத்துக் கொள்வார் என்று சொல்லி மாணவர்களையே அன்பளிப்பாகக் கொடுக்கச் சொல்லுகிறார். இதில், மாணவர்களின் பெருந்தன்மையைப் பாராட்டுவதா அல்லது அந்தத் தலைமையாசிரியரின் பெருந்தன்மையைப் பாராட்டுவதா என்றே தெரியவில்லை.

“அம்மாங்க ஆசுபத்திரி “ என்று ஒரு கட்டுரை. ராஜம்மா டீச்சருக்கு முத்துப் பிரசவம் ஆகியிருக்கிறது என்று மாணவர்கள் ஆளுக்குக்  காசு பிரித்து ஜட்கா வண்டி அமர்த்திக் கொண்டு மருத்துவமனையில் சென்று பார்க்கப் போகிறார்கள்.  ஆசிரியைகள், மாணவர்கள் எல்லோரும் பாகுபாடின்றி செல்கிறார்கள். அதற்கு முந்திய ஒரு கட்டுரையில், ராஜம்மா டீச்சர், பிள்ளைப் பூச்சியை செருப்புக் காலால் நசுக்கிக் கொன்று விட்டார். அதை அப்படி சாகடித்திருக்கக் கூடாது என்று மாணவிச்  சிறுமிகள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். டீச்சர்களும் அதையே சொல்கிறார்கள். இது மூட  நம்பிக்கையா, நிஜமா என்று தெரியாது. ஆனால், இதன் மூலம், அந்தக் காலச் சிறுமிகளின் பெரிய மனுஷத்தனமும், கிராமங்களில் மக்களிடையே இருந்த நம்பிக்கையையும் வாசகர்களுக்குக் கடத்துகிறார் விட்டல்ராவ். பெண்பிள்ளைகள் சோகத்தோடும், ராஜம்மா டீச்சர் மீது பாசத்தோடும் ஒரு வித பயத்தோடும் பார்த்தனர் என்று எழுதுகிறார்.

சில கட்டுரைகள் சிறுகதைக்கு நிகராக இருக்கின்றன. “ காதல்” என்றொரு கட்டுரை. இவர்களுடன் வகுப்பில் ஒன்றாய்ப் படிக்கும் ரமணியின் அக்கா சரோஜினி டீச்சர். மிகவும் அழகாக ஒப்பனை செய்து கொண்டு வகுப்பிற்கு வருபவர். அவர் ஆறாம் வகுப்பிற்கு எடுப்பவர். ஆனால், இப்போது நான்காம் வகுப்பிற்கு வந்திருக்கிறார். எல்லோருக்கும் ஒரே ஐயம் இது ஏனென்று? கணக்குப் பாடம் எடுப்பதற்காக, ராபர்ட் துரைராஜ் என்பவர் வருகிறார். அவருக்கும், சரோஜினிக்கும் காதல் இருக்கிறது. ரமணி மூலமாகவே காதல் கடிதங்கள் பரிமாறப்படுகின்றன. அப்படி ராபர்ட் கொடுக்கும் கடிதத்தை  ரமணியின் நண்பர்கள் கேட்டுத் தொந்தரவு செய்ததில் அது கிழிந்து விட்டது. அதனால், ரமணி குற்றவுணர்வு கொள்கிறான். அதன் பிறகு சரோஜினி அக்கா இவனை ஒரு நாள் சினிமாவுக்கு அழைத்துச் செல்கிறாள். அப்போது அக்கா தரும் கடித  உறையை அதே வரிசையில் அமர்ந்திருக்கும் ராபர்ட் சாரிடம் கொடுத்து விடுகிறான். குற்றவுணர்விலிருந்து  விடுபடுகிறான்.  அதன் பிறகுதான் பெரிய திருப்பமே. தேர்வுகள் முடிந்து பள்ளி விடுமுறை விடப்படுகிறது.  அந்த விடுமுறையில் ஒருநாள் ரமணியின் வீடு களேபரமாகிறது.  விளையாட வரும் பிள்ளைகளை சரோஜினியின் சித்தப்பா விரட்டி விடுகிறார்.

பள்ளி திறந்த பிறகு சரோஜினி டீச்சர் வரவில்லை என்பதைப் பற்றி பெண்பிள்ளைகள் பேசிக் கொள்கிறார்கள்.  அவன் அப்பா குதிரை வண்டி ஓட்டும்போது கூட இருந்ததால் பாஷா,  சரோஜினி டீச்சரையும், ராபர்ட் சாரையும் பார்த்திருக்கிறான். ஆனால், இப்போது அதை அவன் யாரிடமும் சொல்லவில்லை.

இன்னொரு கட்டுரை, “கோயில் பிரசாதம் “. மீனாட்சி இவருடைய வகுப்பில் படிப்பவள். அவள் கோவில் குருக்கள் மகள் என்பது இவருக்குத் தெரிய வர சந்தர்ப்பம் ஒன்று அமைகிறது. இவரும் அண்ணன் ராமுவும் ஒருநாள் பூங்காவுக்குப் போய் அமர்ந்து விட்டு, பக்கத்தில் இருக்கும் கோவிலுக்குப் போகிறார்கள். அங்கு மீனாட்சியைப் பார்க்கும்போதுதான் அவள் குருக்கள் மகள் என்று தெரிகிறது. அவள் தன்னால், பாடங்களை வேகமாக எழுத முடியவில்லை என்று வருத்தப்படுகிறாள். வீட்டில் சென்று எழுதி விட்டுத் தருவதாகச் சொல்லி இவருடைய நோட்டு ஒன்றினை,  வாங்கிச் செல்கிறாள். அடுத்த முறை இவர் கோவிலுக்குச் செல்லும்போது, இவருக்குச் சுண்டல் தருகிறார் மீனாட்சியின் அப்பா. இவர் சுண்டல் தின்று விட்டு அந்தப் பேப்பரை வாசிக்கலாம் என்று விரிக்கிறார். அதில் அவர் கையெழுத்தாகவே இருக்கிறது. இவர் மீனாட்சியிடம் கேட்க, அவள், பழைய பேப்பர்களுடன் இந்த நோட்டையும் அவளுடைய அப்பா எடுத்துக் கொண்டதற்காக வருத்தம் தெரிவித்து, அவளுடைய நோட்டை இவருக்குக் கொடுத்து, இவர் அதை பார்த்து மீண்டும் எழுதிக் கொள்கிறார். என்ன அழகான நட்பு. எந்த ஆர்பாட்டமும், அழுகையும், வருத்தமும் இல்லை. அவ்வளவு எளிதாக இந்தப் பிள்ளைகள் அதைக் கையாளும் விதம் அப்படியே ஒரு  கவிதை மாதிரி இருக்கிறது.

“தரிசனம்” என்று ஒரு  கட்டுரை.  இவர்களுடைய விஞ்சான ஆசிரியர் சீதாராமய்யா பற்றியது. அவர், மாணவர்களை இரவில் தன் வீட்டிற்கு வரச் சொல்லி, மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று , கோள்கள், நட்சத்திரங்கள் எல்லாம் காட்டி விளக்குபவர். பெண் பிள்ளைகள் வருவதாகச் சொன்னால், தனியே வரக் கூடாது என்று சொல்பவர். பார்த்து வந்த ஆண் மாணவர்கள் மற்றவர்களிடமும் ஆர்வமாகச் சொன்னதால், மற்றொரு நாள், ஆண்களும், பெண்களுமாக அவர் வீட்டிற்குச் செல்கிறார்கள். அப்போது, வீட்டில் ஒரே சத்தம். இவருடைய அம்மா, இவரை, அவர்கள் வீட்டில் ஒரே சண்டை அதனால் போக வேண்டாம் என்று தடுத்து விடுகிறார். அன்று அந்த ஊர் சந்திரக்குடீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா. சண்டையின் நடுவே சீதாராமய்யா அவர் எங்காவது ஆற்றில், குளத்தில் விழுந்து  செத்துப் போய் விடப்போவதாகக் கோபமாக கத்துகிறார். பதிலுக்கு அந்த அம்மாவும், அவர் போனால் என்ன, அவள் நாலு வீட்டில் சமைத்துப் போட்டு காலம் தள்ளிக் கொள்ள முடியும் என்று கத்துகிறாள். அவர், கோபம் கொப்பளிக்க சட்டையைப் போட்டுக் கொண்டு, வேகமாக வெளியேறிச்  சென்று விடுகிறார்.  இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவர் மனைவி, விட்டல் ராவ் அம்மாவிடம் வந்து அழுகிறாள். அப்பா பதறிப் போகிறார். இரவெல்லாம் தேடுகிறார். குளத்தைச் சுற்றி கூட்டம்  நிற்கிறது. சடலம் மூடப்பட்டிருக்கிறது.  அது ஏதோ பிச்சைக்காரன் சடலம் என்று கூட்டம் சொல்கிறது. மற்றொரு குளத்தையும் அப்பா பார்த்து விட்டு வருகிறார். பனிரெண்டு மணிக்கு அப்பா திரும்பி வந்து இந்தத் தகவல்களைச் சொன்னார். அந்த அம்மா, இவர் வீட்டிலேயே இருந்தவர், அழுது கொண்டே அவர்கள் வீட்டுக்குச் சென்று விடுகிறார். அடுத்த நாள் காலை, இவரும், இவருடைய வசந்தா அக்காவும், காப்பி வில்லை வாங்கப் போகும்போது, சீதாராமய்யா தேரில் உட்கார்ந்து வருவதைப் பார்த்ததை அம்மாவிடம் சொல்கிறார்கள். அம்மா அவர்கள் வீட்டுக்குச் சென்று அவர் மனைவியிடம் சொல்கிறார். அதன் பிறகு அவர்கள் இருவரும், தம்பதியாகக் கோவிலுக்குச் சென்று வருகிறார்கள். நடந்தது என்னவென்றால், சீதாரமய்யா, தேங்காய் பழம் நைவேத்தியம்  செய்வதற்காக, தேர் மேல் ஏறியிருக்கிறார்.  அந்த நேரம் தேர் கிளம்பிவிட்டது. கிளம்பிய தேரை நிறுத்த முடியாது. அதனால், இவரும், இரவு முழுவதும் தேருடனேயே ஊர்வலம் வரும்படியாகிவிட்டது. இந்தக் கட்டுரையை வாசிக்கும்போது சிரிக்காமல் இருக்கவே முடியாது. இந்த நிகழ்ச்சியை எழுதும்போது, “ இந்தப் புருஷன் பெண்சாதி சண்டை நடந்தால்தான், சாமி தரிசனமும், திருவிழாவும் நிறைவேறுமோ என்னவோ? என்று விட்டல்ராவ் எழுதுகிறார்.

புத்தகம் முழுவதும் நகைச்சுவை விரவிக் கிடக்கிறது. “ குட்டிக் குறளோன்” என்று ஒரு தமிழாசிரியாருக்குப் பட்டப் பெயர் இவர்கள் சூட்டுகிறார்கள்.  அவர் ஈரடிக் குறளை ஒரேயொரு அடியில் சுருக்கி இயற்றி வெளியயிட்டிருப்பதால் அவருக்கு அந்தப் பெயர். அவர் எப்போதும், எல்லாரும், சுத்தத் தமிழிலேயே பேச வேண்டும் என்று வற்புறுத்துபவர். அந்தப் பள்ளியில், சுப்பிரமணிய செட்டியார், ஆங்கில வழிக் கல்வி கற்ற, ஆங்கில ஆசிரியர். ஒரு  முறை, அவர், குட்டிக் குறளோனிடம்,  “ எஸ். .. வாட் பிராட் யு ஹியர்” என்றபோது, இவர்,” மை  லெக்ஸ் பிராட் மி ஹியர்”  என்று பதில் சொன்னார். ஆங்கில ஆசிரியர், சிரித்துக் கொண்டே அவரை தமிழிலேயே பேசும்படிச் சொன்னார். இன்னொரு நாள், விட்டல்ராவ், அவருடைய புத்தகங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு, முன்னால் நடக்க, குட்டிக் குறளோன் பின்னால் நடந்து வருகிறார். அப்போது எதிர்பார்க்காமல், சந்து ஒன்றிலிருந்து முரட்டுத்தனமாய் பசுமாடு ஒன்று வந்தது. இவர்  “ ஆ” என்று அலறுகிறார். தமிழய்யா என்னவென்று கேட்க , இவர் மீண்டும் “ஐயா.. ஆ..” என்று சொல்லி முடிக்கவும், அது அவரை ஒரு முட்டு முட்டித் தள்ளி ஓடியது. அவருடைய கண்ணாடி ஒரு  பக்கம் விழ, அவர் மறு பக்கம் விழ.. அவர் உடனே: ஏண்டா மடையா , பசு மாடு வருதுனு  சொல்லியிருந்தா ஒதுங்கியிருப்பேன்ல.. இடியட் என்றார்.  இதைப் படிக்கும்போது நாங்கள் பள்ளியில் நடத்திய ஒரு நாடகம் நினைவுக்கு வந்தது. ஒரு முட்டாள் பணியாள் இருப்பான். அவனிடம் எப்போதும் எல்லோரையும் திரு என்று சேர்த்து மரியாதையாகத்தான் பேச வேண்டும் என்று சொல்லுவார். ஒரு நாள் அவர் வீட்டுக் கொட்டகை தீப்பிடித்து விடும். அதை வந்து அவரிடம் அவன் சொல்லும்போது, “ திரு கொட்டகையில்,திரு தீ பற்றிக் கொண்டு விட்டது. திரு மாடுகள் அலறுகின்றன. என்று சொல்லுவான். இவருக்கு சரியாகப் புரியாது. அப்புறம் விஷயம்  தெரியும். இனிமேல் இப்படிச் சொல்ல வேண்டாம் என்று  சொல்லுவார். பின்னொரு நாளில் முதலாளி வீட்டில் திருடு போய்விடும், அப்போது, அவன் “ அய்யா.. டன் வந்து டிக்  கொண்டு ஓடி விட்டான். என்பான். அப்போதும் அவருக்கு சரியாகப் புரியாது.

சின்னப் பையனாக மூன்றாவது, நாலாவது வகுப்புப் படிக்கும்போது,  வகுப்பில் பட்டப்பெயர் வைத்து அந்தப் பெயராலேயே அழைப்பது என்பது இயல்பான  ஒரு  வழக்கமாக பிள்ளைகள் மத்தியில் இருந்து வந்தது. அதெல்லாம் ஓரூ குற்றமாக பாரக்கப்படாத காலம்.  குள்ளன், தொர்ரி காதன், பனங்கொட்டைத்தலையன், தேங்காய்தலையன், முண்டக்கண்ணி இப்படி பல பெயர் பெற்றவர்கள் வகுப்பில் இருக்க, விட்டல்ராவுக்கு மட்டும் பட்டப்பெயர் வெகு நாட்கள் கிடைக்கவில்லை. அது அவருக்கு மிகப் பெரிய வருத்தமாக இருக்கிறது.  தாமதமாகத்தான், “ சுடச்சுட “ என்ற பட்டப்பெயர் கிடைக்கிறது. விட்டல் ராவ், சர்  பட்டமோ, டாக்டர் பட்டமோ கிடைத்தது போல மகிழ்ச்சி அடைந்ததாக எழுதுகிறார்.

அந்தக்கால ஆசிரியர்கள் எப்படி எல்லாம் இருந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதாக சில கட்டுரைகள் இருக்கின்றன. “ பெஸ்ஸி  டீச்சர்” பற்றி எழுதுகிறார். அண்ணனோடுதான் இருப்பேன் என்று அடம்பிடிக்கும் மாணவன் ஒன்றாம் வகுப்பில் இருக்க வேண்டியவன். ஆனால், அவன் அண்ணனின் மூன்றாம் வகுப்பில் வந்து அவனுடனேயே இருக்கிறான். இவர்கள் எல்லாம் எழுதும்போது அவனும் சிலேட்டில் கிறுக்கிக் கிறுக்கி முட்டையயாக போட்டு வைக்கிறான். அதற்கு விட்டல்ராவ் “ குண்டாலாம் குண்டாலமாக” என்று வார்த்தை பயன்படுத்தியிருக்கிறார். அது நன்றாக இருக்கிறது. மற்ற மாணவர்கள் குட்டிப் பையனைச் சீண்டி அழ விடும்போது, பெஸ்ஸி டீச்சர் அவனை மடியில் எடுத்து வைத்துக் கொஞ்சுகிறார். அந்த டீச்சர் விடுப்பு எடுத்திருந்தபோது, ஒன்றாம் வகுப்பு  ரஞ்சிதம் டீச்சர் வருகிறார் . அவர், அன்வர் எனும் அந்தக் குட்டிப்பையனை டீச்சர் நாற்காலியில் அவன்  உட்கார்ந்ததற்காக அதட்டுகிறார். விடுப்பு முடிந்து பெஸ்ஸி டீச்சர் வந்தவுடன், தலைமையாசிரியர் அந்த இரு ஆசிரியைகளையும் அழைத்து,   ரஞ்சிதம் டீச்சரை மூன்றாம் வகுப்பிற்கும், பெஸ்ஸி டீச்சரை முதல் வகுப்பிற்கும் மாற்றி விடுகிறார். மூன்றாம் வகுப்பில் தன் பியாரி ஜான்  அண்ணனுடன் அமர்ந்திருந்த அன் வரை பெஸ்ஸி டீச்சர் நம்ம வகுப்புக்குப் போகலாம் வா என்றவுடன் அவன் அந்த டீச்சர் பின்னாடியே  போகிறான். இதைப் படிக்கும்போது, ஆசிரியைகள் எப்படி மாணவர்களைக் கையாண்டார்கள், எப்படி குழந்தைகளின் மனநிலை உணர்ந்து கொண்டவர்களாக இருந்தாரகள் என்பதெல்லாம் மனதை வருடுகிறது.

மாணவர்கள், பதின்பருவத்தில் காதல் என்ற கண்மூடித்தனமான ஈர்ப்பினால், மனம் திரும்பிவிடக் கூடாது என்பதில் ஆசிரியர்கள் மிகவும் அக்கறையாக இருந்திருக்கிறார்கள். பள்ளியில் நடைபெறும் நாடகம், பாடல் என்று எதுவாக இருந்தாலும், அதில் காதல் என்ற வார்த்தை கூட வந்து விடக் கூடாது என்பதில்  மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்கள். ஆசிரியர்கள் சொல்லும் விதத்தில் ஒழுக்க விதிகளைக் கவனத்தில்  கொள்ளும் விதமாக அக்கறையோடு மனதில் பதியும்படியாகக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் .

விட்டல்ராவ் காட்டும் சில உதாரணங்கள் மிகவும் அழகாகவும், சிரிப்பை வரவாழைப்பதாகவும் இருக்கின்றன. ஜாலன் என்றொரு கட்டுரை. மாயவித்தைக்காரன் பள்ளியில் நிகழ்ச்சி நடத்த ஒப்புதல் கேட்பதற்காக வந்திருக்கிறார். அவரை தலைமையாசிரியர் அறை  வாசலில் அமரச் செய்த பியூன் சற்குணம், அவர் எதற்காக வந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டதை, “வாழைப்பூவிலிருந்து கள்ளனைப் பிடுங்குவதைப் போல என்று சொல்கிறார். லூர்து மேரி டீச்சரைப் பற்றிச் சொல்லும்போது அவருடைய ஒட்டிய கன்னத்தைப் பற்றிச் சொல்கிறார். உருவக் கேலி  என்று எடுத்துக் கொள்ள முடியாத மாதிரி அழகாகச் சொல்கிறார். அவர் கன்னம் ஒட்டியிருகக்கிறது. இவர் வீட்டுக்கு இவருடைய அப்பா அலுவலக பியூன் ஞ்யானம்  வருவார். அவருக்கு கன்னம் ஒட்டியிருக்கும். அப்பாவிடம் இவர் அதற்கான காரணத்தைக் கேட்கிறார்.  பீடி குடிப்பதால் அப்படி இருப்பதாக அப்பா சொல்கிறார், ஆனால், லூர்து மேரி டீச்சர் கன்னத்தைப்பற்றி யாரிடமும் கேட்டதில்லை என்கிறார். லூர்து மேரி டீச்சர் மாராப்பு பற்றி இவர் எழுதுவதும் நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிறது.

இப்படி புத்தகம் முழுவதும் இருக்கும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் ரசித்து ரசித்து வாசிக்கக் கூடியதாகவும், வேடிக்கையாகவும், புத்தகத்தை எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவுக்கு சுவாரசியத்தை அளிப்பதாகவும் இருக்கின்றன.  விட்டல்ராவ் அவர்களின் நினைவாற்றலை நினைத்து ஆச்சரியமாளிப்பதாகவும் இருக்கின்றன.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:வகுப்பறைக் கதைகள்
தொகுப்பாசிரியர்: 
வெளியீடு:
விலை:₹.410 (10% Discount price was: ₹.369
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 எஸ். ஜெயஸ்ரீ, கடலூர்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
தொடர்புக்கு: 9444960935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *