விட்டல்ராவின் உரையாடல்கள்; சில நினைவுப்பதிவுகள் – நூல் அறிமுகம்
இந்த வருடத்திற்கான புதுமைப்பித்தன் விளக்கு அறிவிக்கப்பட்டுள்ள விட்டல்ராவ் அவர்கள், கடந்த 40 வருடங்களாக தமிழ் இலக்கியத்தில் இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய மிகப் பெரிய ஆளுமையாக இருக்கிறார் 82 வயதிலும் 20 வயது இளைஞருக்குரிய உற்சாகத்துடனும், துள்ளலுடனும் உரையாடக் கூடிய அருமையான மனிதர். பன்முகத் திறமை கொண்ட திறமையான ஆளுமை. தொலைபேசித்துறையில்; பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய இலக்கியப் பங்களிப்புகள் 9 நாவல்கள், 140 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் கொண்ட 4 சிறுகதைத் தொகுப்புகள், மற்றும் பல கட்டுரைத் தொகுப்புகள் என் பட்டியல் நீளுகிறது. இவருடைய “ போக்கிடம் “ நாவல் இலக்கியச் சிந்தனை விருது பெற்றது. “ நதிமூலம் “ ” காலவெளி “ ஆகியவை பரவலான கவனத்தைப் பெற்றவை. வயது மூப்பு ஒரு தடையே இல்லை என இவரைப் பார்க்கும்போது யாருக்குமே தோன்றி விடும். அந்த அளவுக்கு எப்போதுமே அடுத்தவரையும் தொற்றிக் கொள்ளும் உற்சாகத்தோடேயே எப்போதும் இருப்பவர். இவரது நினைவுச் சுரங்கம் ஒரு போதும் வற்றுவதேயில்லை எனத் தோன்றும்படியாக, இவருடைய சமீபத்திய கட்டுரைத் தொகுப்பு “ தொலைபேசி நாட்கள் “ வந்துள்ளது. அது பற்றி தனியாகக் கட்டுரை எழுத வேண்டும். இந்தக் கட்டுரையின் நோக்கம், பாவண்ணன் எழுதியுள்ள, “ விட்டல்ராவின் உரையாடல்கள்:” புத்தகம் பற்றியது.
மண்ணுக்கடியில் பொக்கிஷம் இருப்பதைத் தோண்டித் தோண்டித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. தோண்டப்படாமல் விட்டு விட்டால், பொக்கிஷம் துலங்காமலேயே போய்விடும். அப்படி, விட்டல்ராவ் எனும் அருமையான மனிதரின், நினைவுகளைத் தோண்டித் தோண்டி அரும் பெரும் பழம்பெரும் நினைவுப் பொக்கிஷத்தை நம் முன்னே திறந்து வைக்கிறார் பாவண்ணன்.
சாதாரணமாக வயதில் மூத்தோருடன் உரையாடிக் கொண்டிருந்தால், பழங்கால நினைவுகள், நிகழ்வுகள், சில அபூர்வ மனிதர்கள் என எல்லாம் நம் கண் முன்னே விரியும்படி அவர்கள் சொல்வது கேட்கக் கேட்க ஆனந்தமாக இருக்கும். அதுவும், இரண்டு இலக்கியகர்த்தாக்கள் உரையாடினால் எவ்வளவு அபூர்வ செய்திகள் நமக்குக் கிடைக்கும் என்பதற்கு இந்தப் புத்தகமே ஒரு உதாரணம். அதுவும், விட்டல்ராவ் அவர்களின் நினைவாற்றல் மிக மிக ஆச்சர்யப்பட வைக்கிறது.
இந்தப் புத்தகம், வாசகர்களுக்கு, அவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள், பார்க்க வேண்டிய திரைப்படங்கள், இது வரை தெரிந்து கொள்ளப்படாத அரிய மனிதர்கள் என புதிய புதிய வாசல்களைத் திறந்து காண்பித்துக் கொண்டே போகிறது.
82 வயது விட்டல்ரவ், சிறுவனாக இருக்கும்போது திருட்டு மாங்காய் அடித்துச் சாப்பிட்டது அவரது சிறுவயதுக் குறும்புகளைக் காட்டும்போது இது போன்ற சம்பவம் எல்லோர் வாழ்க்கையிலும் நடந்திருக்கும் அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்கிறது. சிறு வயது முதலே, அவரது அப்பா எப்படி ஆங்கிலப் புலமையை வளர்த்துக் கொள்ள படிப்பித்தார் என்பதை மிக அழகாக வர்ணிப்பதை பாவண்ணன் தன் எழுத்தில் கொண்டு வந்திருப்பது சிறப்பு. விட்டலின் தந்தை ஒரு பழைய புத்தகக் கடைக்காரரிடம், தொடர்ந்து புத்தகங்கள் வாங்குகிறார். அங்குதான், நெஸ்ஃபீல்ட் கிராமர் புத்தகம், ஷேக்ஸ்பியர் நாடகங்கள் போன்ற புத்தகங்களை வாங்கி வந்து இவர்களுக்குப் படிக்கத் தருகிறார். ஒருமுறை அவரிடமிருந்து கடனாக வாங்கி வந்த ஒரு புத்தகத்தில் தனக்குப் பிடித்த வரிகளை அடிக்கோடிட்டு வைக்கிறார். புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கும்போது, புத்தகக் கடைக்காரர், ஏன் அவர் அடிக்கோடு போட்டிருக்கிறார் என்று கேட்டதற்கு, அவை எல்லாம் முக்கியமான வரிகள் என்று அப்பா சொல்லியிருக்கிறார். அவரும், அந்தப் புத்தகத்தை வாங்கி வைத்து விடுகிறார். இப்படியே இவருடைய தந்தைக்கும், புத்தகக் கடைக்காரருக்குமிடையே ஒரு நட்பு உருவாகி விடுகிறது. தந்தை இறந்தபோது, சொந்தக்காரர்களையும் விட இவரே இறுதி வரை கூடவே இருந்துள்ளார். அதன் பிறகு, ஒரு இருபது வருடங்கள் கழித்து, தற்செயலாக, அந்தப் புத்தகக் கடைக்காரரை சந்திக்க நேர்கிறது. விட்டல் கடைக்குப் போகிறார். புத்தக அடுக்குகளைத் துழாவி, தனக்குத் தேவையான ஒரு புத்தகத்தைத் தேடுகிறார். அப்போது, அவருக்கு, நிறைய பக்கங்களில் அடிக்கோடிட்ட புத்தகம் கிடைக்கிறது. அந்தப் புத்தகத்தைத் தன்னோடு எடுத்துப் போக நினைத்து, அதன் விலையைக் கேட்கிறார். அந்தக் கடைக்காரை அது விலைக்கானது அல்ல என்று மறுத்து விடுகிறார். விட்டல் அது தன் அப்பாவின் கையால், அடிக்கோடிட்ட புத்தகம்தான், தான் அவருடைய மகன் என்றும் அறிமுகப்படுத்தி கொள்கிறார். அப்போது கூட, கடைகாரர், அந்தப் புத்தகம் அவருக்கும், விட்டலின் தந்தைக்குமிடையேயான நட்பின் ஞாபகார்த்தமாக அதை வைத்திருப்பதாகவும், விற்பனைக்கு அல்ல என்றும் சொல்லி விடுகிறார். இந்தப் பகுதி ஒரு சிறுகதை படித்த உணர்வை வாசகருக்கு அளிக்கிறது.
அது போலவே, முட்டை என்றொரு கட்டுரை. அதுவும் ஒரு சிறுகதை படித்த உணர்வை அளிக்கிறது. இந்தக் கட்டுரையில், பாவண்ணன் தான் முட்டை சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை ஒரு கதை போல விவரிக்கிறார். அதைத் தொடர்ந்து, விட்டல்ராவ், தனக்கு புறா முட்டை சாப்பிடக் கிடைத்ததைச் சொல்வது சிறுகதை போலவே இருக்கிறது. அவருக்கு கேத்துரெட்டிப்பட்டியில் ஒரு பள்ளியில் ஐந்து வகுப்புகள் வரை உள்ள பள்ளியில் ஓராசிரியர் வேலை கிடைக்கிறது. அங்கு ஒரு நாள், ஒரு மாணவனைக் கண்டித்து அடித்து விடுகிறார். அந்தப் பையன் அம்மாவோடு அவர் வீட்டுக்கே வந்து விடுகிறான். தன் அம்மா அந்த வாத்தியோரோடு சண்டை போடுவார் என நினைத்ததற்கு, மாறாக, அவர்கள் இருவரும், ஒருவரையொருவர் பெயர் சொல்லி, சிரித்துப் பேசுவது கண்டு வியக்கிறான். அவர்கள் இருவரும், சிறிய வயதில் பள்ளி நண்பர்கள் என்பது புரிகிறது. தொடர்ந்து, அந்தச் சிறுவனின் அப்பாவும் இவரோடு நண்பனாகி விடுகிறார். இவர், தனியே சமைத்துச் சாப்பிடுவதைப் பார்த்த அம்மா பாலாமணி தினமும் குழம்பு கொடுப்பதாய்ச் சொல்கிறாள். அப்பா சண்முகம், தினமும் புறா முட்டைக் கொண்டு வந்து கொடுக்கிறார். இந்தப் பகுதியை வாசிக்கும்போது ஒரு சிறுகதை வாசித்த அனுபவமும், மலர்ச்சியும் நமக்கு ஏற்படுகிறது.
சிறுவனாக இருக்கும்போது, பள்ளிக் கால நினைவுகளைச் சொல்லும்போது, சிறுவர் பாடல்களை இன்னும் நினைவு மறக்காமல் விட்டல் ராவ் சொல்கிறார். அந்தப் பகுதியை வாசிக்கும்போது, பாவண்ணனும், அவரும் சிறுவர் பாடல்களை மாற்றி மாற்றி பாடுகிறார்கள். வாசிக்கும் ஒவ்வொருவருக்கும், நிச்சயம், தம் பள்ளிக்காலமும், சிறுவர் பாடல்களை தமக்குச் சொல்லிக் கொடுத்த ஆசிரியரும், அந்தக் குதூகலமும் கண் முன்னே விரியும்; மனம் பொங்கும்.
ஊர் விட்டு ஊர் வந்த பிறகு, அந்த ஊரில் நண்பனாக இருந்தவனுக்கு பள்ளி முகவரிக்குக் கடிதம் எழுதியதையும், அதோடு, ஒரு ஆசிரியைக்கும் கடிதம் எழுதியதையும், அது கொண்டு வந்த விளைவுகளையும் எல்லாம் சுவை படச் சொல்லும் விட்டல் ராவின் இந்த நினைவுப் பதிவு, இந்த வாட்ஸப் யுகத்தில் நம்மை மனம் கனிய வைக்கிறது.
கூரியர் சேவையும், ஜி-பே, ஃபோன் பே என்று வந்து விட்ட இந்தக் காலத்தில் நாணயங்கள், ஸ்டாம்புகள் பற்றிச் சுவையான தகவல்கள் இரண்டு உரையாடல் கட்டுரைகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பழைய நாணயங்கள் அவற்றின் மதிப்புக்கும் நாணயங்கள், ஸ்டாம்புகள் இவற்றைச் சேமித்து வைக்கும் ஒரு பழக்கம் சிலரிடம் இருந்து வந்தது; இன்றும் இருந்து வருகிறது.. பழைய நாணயங்கள் அவற்றின் மதிப்புக்கும் மேலே பல லட்ச ரூபாய் அளவுக்குக் கூட விலை கொடுத்து வாங்கப்படுவதை ஒரு பகுதி பேசுகிறது. அதில், சுதந்திர கால நினைவுகள், காந்தித்தாத்தாவைத் தாங்கிய ஒரு ஸ்டாம்ப்பின் கதையை விட்டல் விவரிக்கும்போது, ஒரு வரலாற்று நிகழ்வை இவ்வளவு அழகாக நினைவிலிருந்து விவரிப்பது மகிழ்ச்சி தரக் கூடியது. தெரிந்து கொள்ள வேண்டியது. புதிய ஸ்டாம்ப் வெளியிடும்போது அதை வாங்குவதற்குக் கூட்டம் வரிசை கட்டி நிற்கும் என அவர் சொல்லும்போது, நம் புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்கிறது.
இதே போல, ஸ்டாம்பு பற்றிய மற்றொரு சுவையான பகுதியும் ஒரு கதை போல சுவாரசியம் தரக் கூடியது. இப்படியெல்லாம் இந்த விஷயம் நடக்கும் என்பதே விட்டல்ராவின் அடுத்த தலைமுறைக்கே கூட தெரிந்திருக்குமா என்பது ஆச்சர்யம்தான். இந்திராகாந்தி பிரதமராக இருக்கும்போது, பல மாநிலங்களின் நடன வகைகளை ஸ்டாம்புகளாகக் கொண்டு வர வேண்டும் என ஆலோசனை செய்து நடைமுறைப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில் பரதநாட்டிய ஸ்டாம்ப் வெளியிடுவதற்காக சென்னை கலாஷேத்ராவுக்கு வந்து, சிறப்பான நடனமங்கையாக ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து, அத்ற்காக புகைப்பட படப்பதிவு நடந்தது பற்றி விட்டல் விவரிக்கும்போது வாய்பிளந்துதான் நாம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதிருக்கிறது. இலங்கையிலிருந்து குடிபெயர்ந்து, சென்னையில் வந்து குடியேறி நிலைத்த, இலங்கை எழுத்தாளர் சிவபாதசுந்தரத்தின் மகள் பிரசன்னவதனி என்பவர்தான் அவர் என்றும், அந்தப் பெண் சமையல் செய்யும்போது ஸ்டவ் வெடித்து இறந்து போனதையும் எல்லாம் வாசிக்கும்போது, நாம் அறியாத வரலாற்றுத் தகவலையும், ஒரு நாவல் படிக்கும் சுவாரசியத்தையும் தருகிறது.
புதிய பன்முகத் தன்மை கொண்ட பல ஆளுமைகளை இந்தப் புத்தகம் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இருபத்தைந்து ஓவியங்கள் என்ற ஒரு உரையாடல் பகுதியில், தனுஷ்கோடி என்பவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது. அவர் ஓவியத்தின் மீதே அதிக அளவில் நாட்டம் கொண்டவர். அவர் ஜெர்மன் மொழியிலிருந்து, “விசாரணை” என்ற நாவலை மொழிபெயர்த்திருக்கிறார். கிளாசிக்கல் லிட்ரேச்சர் என்று சொல்லக்கூடியவற்றிலிருந்து குறிப்பிட்ட காட்சிகளை ஓவியமாகத் தீட்டியிருக்கிறர். ஆங்கில ட்யூட்டராக இருந்திருக்கிறார். குறும்படம் எடுத்திருக்கிறார். இப்படி பல்திறமைக் கலைஞர் என்று சொல்லக்கூடிய மல்டி டேலண்டட் மனிதராக இருந்திருக்கிறார் என்பது ஆச்சர்யமளிக்கிறது.
தாமரை என்கிற ஓவியர் பற்றிச் சொல்கிறார் ஒரு உரையாடல் கட்டுரையில். அவர் ராஜம், பாலாஜி, தமரியோ என்று பல பெயர்களில் பல பத்திரிகைகளில் ஓவியம் வரைந்திருக்கிறார். நல்ல மேடைப் பாடகனாகவும் இருந்திருக்கிறார்.
பலவகைப்பட்ட இலக்கியப் புத்தகங்களை அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம். பயண இலக்கியம் வகையில் ஆகச் சிறந்ததாக ஏ.கே.செட்டியாரின் பயணக் கட்டுரைகள் பற்றியும், காந்தி பற்றிய முதல் ஆவணப்படத்தை உருவாக்கியவர் அவர்தான் எனவும் , அட்டன்பரோ எடுத்த காந்தி படத்திற்கு இவருடைய ரீல்ஸ்சை எடுத்து உபயோகப்படுத்தியதற்கு, அவர் காசே வாங்க்கிக் கொள்ளவில்லை என்றும் தகவல்கள் விட்டலின் உரையாடல் வழியே தெரிகிறது.
வாசிக்க வேண்டிய பல நல்ல சிறுகதைகள், நாவல்கள், நூல்கள் என்பவை இந்தப் புத்தகத்தின் வழியே வாசகருக்குக் கிடைக்கிறது. ஸ்ரீராம் மொழிபெயர்ப்பில் ஃப்ரெஞ்ச் நாவல்கள் அந்நியன், முதல் மனிதன், குட்டி இளவரசன், ஃபாரன்ஹீட், மீளமுடியுமா போன்ற நாவல்கள், தனுஷ்கோடி மொழிபெயர்ப்பில் ஜெர்மன் நாவல்கள், க நா சு வின் மொழிபெயர்ப்பில் நல்ல நிலம், அன்பு வழி, குறுகிய வழி, மதகுரு, தாசியும், தபசியும், மிண்டோ எழுதிய சிறுகதைகள், இறையடியான் மொழிபெயர்ப்பில், மஹம்மது குன்ஹியின் நாவல் “ முத்துப்பாடி சனங்களின் கதை” என ஒரு நீண்ட பட்டியல் கிடைக்கிறது.
விட்டல்ராவ் அவர்களின் கைவண்ணத்தில் தொடராக வந்த உலகத் திரைப்படங்களூம், கலைஞர்களும் என்பது நர்மதா பதிப்பக வெளியீடாக புத்தகமாக வந்துள்ளது. தமிழ் சினிமாவின் பரிமாணங்கள், நவீன கன்னட சினிமா போன்ற புத்தகங்களும் வெளி வந்துள்ளன. சிறுகதைகள், நாவல்கள் இவற்றைத் தாண்டி சினிமாத்துறையில் இவருக்கிருக்கும் அனுபவங்களும் இப்படிப் புத்தகங்களாக வந்துள்ளன.
விட்டல்ராவ் என்பவர் ஒரு எழுத்தாளர் மட்டுமல்லர். ஓவியர், சினிமாக் கலைஞர் என பன்முக ஆளுமைக்குச் சொந்தக்காரர் என்பது இந்தத் தொகுப்பின் மூலம் தெரிகிறது. கலைஞர்களுடைய பயணப்பாதையை ஒரு பார்வையாளனா நாம எப்படித் தீர்மானிக்க முடியும்? அவருடைய மனோவேகம் எந்தப் பக்கம் தள்ளுதோ, அந்தப் பக்கம் அவர் போனார் என்று தனுஷ்கோடி பற்றிச் சொல்லும்போது விட்டல் சொல்கிறார். நாமும் இப்போது அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கிறது. அவர் பன்முகத் திறமை நம்மை வியக்க வைக்கிறது. இப்படிப்பட்ட பன்முகத் திறமைகள் கொண்ட ஆளுமையை, சிப்பிக்குள் முத்தினைத் திறந்து காண்பிப்பது போல பாவண்ணன் இந்தப் புத்தகத்தின் வாயிலாக வாசகருக்குத் திறந்து காண்பிக்கிறார். அவருடைய இந்தப் பணி மிகவும் பாராட்டுக்குரியது. விட்டல் மிகவும் போற்றுதலுக்குரியவர். நூலாக்கி வெளிக்கொண்டு வந்திருக்கும் சந்தியா பதிப்பகத்தார் பாராட்டுக்குரியவர்கள்.
நூலின் விவரம்:
நூல்: விட்டல்ராவின் உரையாடல்கள்; சில நினைவுப்பதிவுகள்
ஆசிரியர்: பாவண்ணன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.300/-
நூல் அறிமுகம் எழுதியவர்:
எஸ்.ஜெயஸ்ரீ
கடலூர்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.