சிறார் கதை: தோழர் மூக்கன் – விழியன்

மூக்கன் என்று தான் அதனை எப்போதும் அழைப்பான். சலீம் தன் அப்பாவிற்கு சாப்பாடு எடுத்துச் செல்லும் போதுதான் முதன்முறையாக மூக்கனை பார்த்தான். முதலில் அந்த பறவையின் பெயர் தெரியவில்லை. தன் அறிவியல் ஆசிரியரிடம் சார் இப்படி ஒரு பறவை, மூக்கு நீட்டமா இருக்கும் சார் அது என்ன பறவை என்று கேட்டான். கடைசியாக அது அன்றில் பறவை என்று தெரிந்தது. சலீம் தன் பள்ளிக்குச் செல்லும் வழியிலும் அப்பாவிற்கு சாப்பாடு எடுத்துச்செல்லும் வழியிலும் அதனை சந்தித்துவிடுவான்.
மூக்கன் என்ன சாப்பிடுவான் என்று தெரியவில்லை. அது ஏரிக்கு அருகாமையில் வசிக்கின்றது என்று தெரியும். குட்டி மீன்களை உண்டு வாழும் என்று பாட்டி சொன்னார்கள். ஆனால் மீன் பிடிக்கும் திறமை சலீமிடம் இல்லை. வீட்டின் அருகே தண்ணீரில் விளையும் சில தண்டு செடிகள் இருந்தன. ஒருநாள் அந்த தண்டினை எடுத்து நன்றாக நறுக்கி அதன் அருகே வைத்தான். மூக்கன் முதலில் தயங்கியது. பின்னர் மெது மெதுவாக உண்டது. இப்படியாக அவன் தினமும் சில தண்டு துண்டுகளை மூக்கனுக்கு வைத்தான்.
சலீம் வாழ்ந்து வந்தது ஒரு காட்டின் எல்லைப்பகுதி. அவன் அப்பா ஒரு சின்ன பெட்டிக்கடை வைத்திருக்கின்றார். அதுவும் வனப்பகுதிக்குள் செல்லும் சோதனைச் சாவடிக்கு அருகில். வனத்திற்கு சென்றால் உள்ளே ஒரு சுற்றுலா மையம் உள்ளது, போவோர் வருவோர் சில பொருட்களை வாங்கிச்செல்வார்கள். நெகிழிகளை பயன்படுத்தக்கூடாது என சலீம் தன் அப்பாவிடம் கண்டிப்பாக சொல்லி இருந்தான். அப்பாவின் கடையில் வந்து அமர்வது சலீமிற்கு மிகவும் பிடித்தமனாது. மிக நீண்ட மரங்கள் சூழ்ந்திருக்கும். சிலுசிலுவென காற்று வீசும். வீட்டில் இருந்து வேறு வேறு பாதை வழியாக அந்த சோதனைச்சாவடிக்குச் செல்ல சலீமிற்கு மிகவும் பிடிக்கும்.
சோதனைச் சாவடியில் ஒரே ஒரு காப்பாளர் மட்டும் தான் இருப்பார். அவர் எந்த வண்டிகள் எப்போது உள்ளே செல்கின்றன என்று ஒரு நோட்டில் எழுதி வருவார். சலீம் அவருக்கு துணை புரிவான். பள்ளியில் இருந்து நேராக இங்கே வந்துவிடுவான். சில நாட்கள் உடல்நிலை சரியில்லை எனச்சொல்லி இங்கே வந்துவிடுவான். வரும் வழியில் தவறாமல் மூக்கனுக்கு தண்டுகள் வைத்துவிட்டு வருவான். “அடேய் அது மீனைத்தான் சாப்பிடும் எப்படி தண்டை சாப்பிடுதுன்னு தெரியல” என்றார் விஷயம் கேள்விப்பட்ட காப்பாளர் சோமு மாமா.
ஒரு நாள் சோமு மாமாவே இரண்டு ஷிப்டுகளை பார்க்க நேர்ந்தது. மற்றொரு காப்பாளர் அவசரமாக விடுமுறை எடுத்துக்கொண்டார். வழக்கம்போல சலீம் மூக்கனுக்கு தண்டுகளை போட்டுவிட்டு அதன் தலையில் தடவிக்கொடுத்துவிட்டு சோதனைச்சாவடிக்கு வந்திருந்தான். அதிசயமாக அறிவியல் புத்தகம் எடுத்து வாசிக்க ஆரம்பித்து இருந்தான். மூக்கன் விநோத சத்தமிட்டபடி பறந்துவந்தது. அந்த மாதிரி சத்தம் எழுப்பி சலீம் பார்த்ததே இல்லை. அவனை எங்கோ அழைத்தது போல இருந்தது. அதன் பின்னால் சென்றான். அது வேகமாக பறந்தது. காட்டின் ஒரு திருப்பத்தில் கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அது சற்று முன்னர் சென்ற கார் தான். அந்த எண் கூட வித்யாசமாக இருந்ததால் சலீமிற்கு நன்றாக நினைவில் இருந்தது. அதனை செலுத்திச்சென்றவர் மயக்க நிலையில் இருந்தார். உடனே ஓடி வந்து சோமு மாமாவிடம் தெரிவித்தார். மாமாவும் விரைந்து வந்தார்.
நல்லவேளை மாமாவிற்கு வண்டி ஓட்ட தெரிந்து இருந்தது. அவரை பின்னால் அமர்த்தி அருகே இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். மாமா திரும்பி வரும்வரையில் சோதனைச்சாவடியை சலீமும் அவன் அப்பாவும், சலீமின் நண்பன் அன்றில் மூக்கனும் பாதுகாத்தார்கள். நல்லவேளை ஒரு வண்டியும் வரவில்லை.
இரண்டு நாள் கழித்து காப்பாற்றப்பட்ட பெரியவர் சலீம் வீட்டிற்கு வந்து நிறைய பழங்களையும் புத்தகங்களையும் கொடுத்தார். உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார்.
“ஒரு தூண்டில்” என்றான் சலீம்.
– விழியன்
(இந்த கதை பறவை அறிஞர் சலீம் அலி நினைவாக எழுதப்பட்டது. நவம்பர் 12 அவருடைய பிறந்த தினம். இந்தியாவின் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவர். குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள்)