நூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சிநூல்: மலைப் பூ (சிறார் நாவல்)
நூலாசிரியர்: விழியன்
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
(பாரதி புத்தகாலயம்)
சென்னை.
விலை: ரூபாய் 95/-
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/malai-poo-by-vizhiyan/

அறிவியல் தொழில்நுட்பம் அதிகம் இல்லாத அறியப்படாத ஒரு மலை கிராமம், மாஞ்சாலை. அதில் படிப்பறிவு அதிகம் இல்லாத மக்கள். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ள ஒரே பள்ளி. வாழ்வதற்கு தவிர மற்ற அனைத்திற்கும் மலையிலிருந்து கீழே இறங்கி வர வேண்டிய சூழல். படிப்பு, மருத்துவம், தொழில் என அனைத்திற்கும் ஊருக்குள் தான் வரவேண்டும். கக்கூஸ்கூட இல்லாத அந்த கிராமத்தில் இருந்து தினமும் அதிகாலையிலேயே 5 கிலோமீட்டர் பயணித்து மெயின் ரோட்டிற்கு வந்து பஸ்ஸைப் பிடித்து ஆகாசப்பட்டணம் என்ற ஊருக்குள் வந்து இறங்கி அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய சூழலில்தான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள் இந்த கதையின் நாயகி, மலைப்’பூ,’ லட்சுமி.

அதிகாலையிலேயே கிளம்ப வேண்டி இருக்கிற காரணத்தினாலேயே சின்னப்பெண் லட்சுமி காலையில் உணவு கொள்ள முடியாது. அனைத்து ஆகாசப்பட்டணம் வந்து இறங்கிய பிறகே தோழி கோமதி கொடுக்கும் உணவும் அவளுடன் பயணிக்கும் அந்த ஒரு கிலோமீட்டர் சைக்கிள் பயணமும் தான் அவளை பள்ளிக்கு கொண்டு போய் சேர்க்கின்றன. தோழி கோமதி ஒவ்வொரு நாளும் லட்சுமிக்காக உணவை எடுத்துக்கொண்டு வந்து சைக்கிளோடு காத்துக் கொண்டிருப்பாள். இங்கே சாப்பிட்ட பிறகுதான் பள்ளிக்கு கிளம்புவார்கள் என்றால் அதிகாலை எத்தனை மணிக்கெல்லாம் லட்சுமி கிளம்பி வர வேண்டியிருக்கும் என்று நினைத்துப் பார்க்க தோன்றுகிறது.

இதுதான் நாவல் காட்டும் இந்த சூழல். இதுபோன்ற சூழல்களில் பள்ளிகள் இருக்கின்றனவா என்று கேட்டால் நிறையவே இருக்கின்றன. இப்படியான சூழல்களில் நிறைய பள்ளிகள் இன்றும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன என்பது கண்கூடு. மலைவாழ் மக்களின் பிள்ளைகள் சிலர் பள்ளியிடை நிற்றலுக்கு இதுவும் ஒரு காரணம் என்றுகூட சொல்லலாம். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமானால் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாதுமலையில் இயங்கும் ஒரு மாணவர்கூட இல்லாத பள்ளி ிருந்தது. ஆனால் இன்று அது ஒரு மாதிரி(மாடல்) பள்ளிக்கூடமாக மாறியிருக்கிறது. மலைவாழ் மாணவர்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளி, அதுவும் நடுநிலைப்பள்ளியாக மாறியிருக்கிறது. இதற்கு காரணம் அங்கிருந்த ஆசிரியை மகாலட்சுமிதான். இக்கதையின் நாயகியின் பெயரும் லட்சுமிதான். நல்ல ஒற்றுமை.

அந்த ஆசிரியைப் போலவே இக்கதையில் ஆசிரியை முத்துக்குமாரி அறிவியல் ப்ராஜெக்ட் செய்ய ஐந்து மாணவிகளைத் தேர்வு செய்திருந்தார். அவர்களில் கோமதியும் லட்சுமியும் இருந்தனர். ஆனால் இதில் ஆண்பிள்ளைகளை சேர்க்கவில்லையென தலைமையாசிரியைக்கு கோபம். பெண்களுக்கு இந்த அறிவியல் அறிவு வேண்டும் என்றுதான் முத்துக்குமாரி விரும்பியிருக்கிறார். ஆதலால், முடிவு மாறாமல் மாணவிகளையே தேர்ந்தெடுக்கிறார். தேசிய அறிவியல் மாநாட்டிற்கு அவர்களை ஆய்வு செய்வித்து சமர்ப்பிக்க அவர்களை தயார்படுத்துகிறார். ஆனால் எதில் ஆய்வு செய்வது என்று தெரியாமல் இருந்ததால் அவர்களைக் கூட்டிக்கொண்டு ஒரு ஊரைச் சுற்றிப் பார்த்து முடிவு செய்தனர். அதன்படி மாணவிகள் பனைமரத்தைப்பற்றி ஆய்வு நடத்தலாமென தேர்வு செய்கின்றனர். அதற்கான அனைத்து தகவல்களையும் திரட்டி கொடுக்கிறார் ஆசிரியை. ஆய்வினை சமர்ப்பிக்க சென்னைக்கு போக வேண்டியிருக்கிறது. அதை வீட்டில் நேரடியாக எடுத்து சொல்லி விளக்கி, அவர்களை அழைத்துக் கொண்டு சென்னைக்கு சென்று ஆய்வினை சமர்ப்பிக்கிறார் ஆசிரியை.நாவலின் இடையிடையே லட்சுமியின் கூற்றென அவளது பார்வையில் கதையை நகர்த்துகிறார் ஆசிரியர். அதுவரை, வெளியூர் பயணம் செய்திருக்காத லட்சுமிக்கு பார்ப்பவை எல்லாமே ஆச்சர்யத்திற்குறியதாக ஆகின்றன. கழிவரையில் எப்படி அமர்வது என்றுகூட தெரியாத நிலையில் இருந்தாள் லட்சுமி. வாழ்க்கைக்கான பாடத்தை கற்று தருவதும் தனது கடமைதான் என்றுணர்ந்த ஆசிரியைதான் இந்திய கழிவரைக்கும் மேற்கத்திய கழிவரைக்குமான வித்தியாசத்தைக் கூறி புரிய வைக்கிறார். சென்னையில் நடக்கும் ஆய்வு மாநாட்டிற்கு வருகையில்தான் அறிவியல் இயக்கத்தின் முகங்களான, த.வி. வெங்கடேஸ்வரன், விழியன், அவரது இணையர் வித்யா ஆகியோரை சந்திக்கிறாள். அவர்களை ஏற்கனவே தெரியும் என்பதால் மகிழ்வோடு பேசுகிறாள் லட்சுமி. த.வி. வெங்கடேஸ்வரன் அங்குதான் மாணவிகளிடம் ஒரு கேள்வி கேட்கிறார். பெரியவர்களானப்பின் அறிவியலுக்கு என்ன செய்யப்போறீங்க.? என்று அவர் கேட்டது லட்சுமிக்கு மனதில் அப்படியே பதிந்துவிட்டது.

அவர்களது ஆய்வு பனையை வைத்து பொருளாதாரம் என்பதாக மாறியது. அடுத்து காசிக்கு செல்ல வேண்டும். அந்த நேரம் பார்த்து ஆய்வு செய்யும் மாணவிகளில் ஒரு மாணவிக்கு பூப்பெய்தல் நடக்கிறது. அதன்படி அவள் இனி எதிலும் கலந்துகொள்ள முடியாது. அடுத்து கோமதியின் அப்பாவும் சபரிமலைக்கு செல்லவிருக்க, கோமதியாலும் வரமுடியவில்லை. அதன்பின் நேரடியாக லட்சுமியின் வீட்டிற்கே சென்று அவளது பெற்றோர்களிடம் பேசுகிறார் ஆசிரியை முத்துக்குமாரி. லட்சுமியையே காசியில் நடக்கும் மாநாட்டிற்கு அனுப்பச் சொல்லி கேட்கிறார் குடும்பத்தினரில் அனைவரும் மறுக்க, லட்சுமியின் அம்மா மட்டும் இதற்கு ஒப்புக் கொண்டு அனுப்புகிறார். அவர்களிடமிருந்து லட்சுமி, ஐஸ்வர்யாவிடம் விடப்படுகிறாள். அதுவரை கண்டிறாத சென்னை போன்ற பேரூர்களை, சாலைகளை, கட்டிடங்களை, மக்களை, பேருந்துகளை, ரயிலையெல்லாம் கண்டு ஆச்சர்யித்து போகிறாள். அவளது மனதில் தோன்றுவதாக, ‘லட்சுமியின் கூற்று’ என ஆசிரியர் எழுதியிருப்பது லட்சுமே நம்மிடம் நேரடியாக பேசுவதைப்போல இருப்பது நாவலின் சிறப்பு. அதன்படி லட்சுமி காசிக்கு கிளம்ப தயாராகிறாள். இடையில் பனை ஆய்வாளர் காட்சனையும் ஐஸ்வர்யாவின் வீட்டில் சந்திக்கிறாள். ரயிலேரும் முன்பாக பேரா.மோகனா அறிமுகமாகிறார். அவருடன் நன்கு ஒட்டிக்கொள்கிறாள் லட்சுமி. ரயில் நகர்கிறது என்பதை முதல் பயணத்தில் லட்சுமியால் நம்பவே முடியவில்லை என்று ஆசிரியர் காட்சிப்படுத்தியிருக்கிறார். அதன்மூலம் வாசகர்கள், நமது முதல் பயணம் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணியிருந்தால் அது, நாவலின் சிறப்பு.

நிறைய சொல்லித்தருகிறார் பெரிய டீச்சராகிவிட்ட பேரா. மோகனா. இரா. நடராசன் எழுதிய ஆயிஷா நூலையும் லட்சுமிக்கு வாசிக்க கொடுக்கிறார். அதைப்படித்ததும் லட்சுமிக்கு துக்கம் தாங்க முடியவில்லை.

காசி மாநாட்டில் அவளுக்கு நிறைய அனுபவங்கள் காத்திருந்தன. மாநாட்டின் இரண்டாம் நாளில் காசியை சுற்றிப்பார்க்க, அனைவரும் சென்றனர். நிறைய இடங்களைப் பார்த்துவிட்டு திரும்ப வரும்போதுதான் தனது உற்றத் தோழியாகியிருந்த ராணியைக் காணவில்லை என்றறிந்தாள் லட்சுமி. உடனே மீண்டும் காசிக்கு சென்ற இடத்திற்கு கிளம்பினர். ஆளுக்கொரு பக்கம் தேடுகையில், தரையில் ஓரிடத்தில் பனைமரம் வரையப்பட்டிருந்ததைக் கண்டாள் லட்சுமி. போலீசாரை அழைத்து காட்டினாள். அருகிலிருந்த கடைக்காரர்களிடம் அழைத்துக் கேட்டார்.

ஒரு சின்னப்பெண் வந்து இது நான் வரையவில்லை, வேறொரு பெண் வரைந்தாள் என்று கை காட்டும்போது அங்கிருந்து ராணி வெளிவந்தாள்.
காசியை சுற்றி பார்த்துவிட்டு கடைசியாக லட்சுமிக்கு அவள் ஆசைப்பட்ட சங்கை வாங்கலாம் என்று நினைத்து ராணி இங்கே வந்ததாகவும் அதற்குள் இவர்கள் கிளம்பி விட்டதாகவும், திரும்ப தன்னைத் தேடி வருவார்கள் என்று இங்கேயே இருந்ததாகவும் கூறினாள் ராணி. தொலைந்துபோன ராணி திரும்ப கிடைத்ததே மகிழ்ச்சி என அனைவரும் அமைதியாக அங்கிருந்து கிளம்பி மாநாடு நடக்கும் இடத்திற்கு வருகிறார்கள்.

மூன்றாம் நாள் காலை மாநாட்டில் காணாமல்போன ராணியும் கண்டுபிடித்த லட்சுமி பற்றியும் அனைவரும் பேசிக் கொண்டனர். அன்று ராணி மேடையில் பேச வேண்டிய நாள். ஆனால் ராணி தனது பேருக்கு பதிலாக லட்சுமியின் பெயரை கொடுத்துவிட்டாள். எந்தவித முன் தயாரிப்பும் இன்றியும் மேடைக்கு சென்றால் மெதுவாக சென்று தேடிபிடித்து தான் எங்கிருந்து வருகிறோம் தனது நோக்கத்தை கூறினார்.இறுதியில் இரண்டு கேள்விகளை முன் வைத்து கேட்டாள். மேடையில் பிரதமர் இருக்க, அவளது கேள்விகள் பிரதமரை யோசிக்க வைத்தது. அவை என்ன கேள்விகள் என்பதை நூலைப் படித்து அறிவதே ஆசிரியருக்கு நாம் செய்யும் மரியாதை.

இதைக் கேட்கும் பொழுது ஒட்டுமொத்த மேடையும் அவளைக் கண்ட கண்கள் கூட்டின. சிலர் சிரித்தனர். இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது அனைவருக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை வசதியைதான் நான் இல்லை என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிடுகிறாள்.

அங்கிருந்த அனைவரது கவனமும் லட்சுமியின் மேல் குவிந்து விட்டன. கேள்வி கேட்டு முடித்த பின் மெதுவாக தரையில் இறங்கி தன்னிடம் சார்ந்தாள் லட்சுமி. மாநாடு முடிந்து அனைவரும் கிளம்பினர்.

அலைபேசியில் த.வி.வெங்கடேஸ்வரன் அழைத்து வாழ்த்துச் சொல்லி பேசுகிறார். ஏற்கனவே அவரை சந்தித்ததையும் அன்று அவர் கேட்ட அந்தக் கேள்வியை இன்னும் நினைவு வைத்திருப்பதாகவும் அதற்கான பதிலையும் வைத்திருப்பதாகவும் லட்சுமி கூறுகிறாள். என்ன கேள்வி என்று அவர் கேட்டபோது ‘அறிவியலுக்கு என்ன செய்ய போறீங்க.?’ என்று கேட்டதை குறிப்பிட்டாள் லட்சுமி. ‘அறிவியலுக்கு எதையுப் செய்ய போறதில்லை. ஆனால் அறிவியலை எல்லோருக்கும் பரவலாக கொண்டு போகப் போறேன்’ என்று கூறுகிறாள். ‘இதைவிட அறிவியலுக்கு வேற யாராலும் எதுவும் செய்துவிட முடியாது’ என்று பாராட்டுகிறார் வெங்கடேஸ்வரன். ஊரை அடைந்தப்பின், பள்ளியில் ஆசிரியர், தலைமையாசிரியர் என அனைவரும் பாராட்டுகிறார்கள் என்பதோடு இந்த கதை முடிகிறது.

சிறு சிறு அத்தியாயங்களாக, அதன் இறுதியில் ஒரு கேள்வியோடு, பல வரைபடங்களோடு நாவல் அமைந்திருக்கின்றது. ஒருசில விசயங்களைத்தவிர மற்ற அனைத்துமே தனது புனைவு மட்டுமே என்று ஆசிரியர் கூறியுள்ளார். கதையில் நிறைய நம் கண் முன்னே வாழுகின்ற பல ஆளுமைகள் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். உதாரணமாக, பேராசிரியர் மோகனா பெரிய டீச்சர் என்ற பெயரில் வருகிறார். விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் இரண்டு இடங்களில் வருகிறார். கதையின் எழுத்தாளர் விழியன் அவரது மனைவியோடு வருகிறார். பாதிரியார் காட்சன், பனையை ஆய்வு செய்பவர், வருகிறார். லட்சுமியின் குடும்பத்தார், ஆசிரியர்கள் கடந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் வருகிறார்கள். இப்படி வாழும் மனிதர்களை கதை மாந்தர்களாக காட்டுவதும் நாவலுக்கு ஒரு சிறப்பு உத்திதான். பெரிய ஆடம்பர சொற்கோவைகள் இல்லாமல் மிக எளிமையாக நாவலை அமைத்திருக்கிறார் ஆசிரியர். குழந்தைகளின் வாசிப்பை மனதில் வைத்து இந்நாவலை எழுதியிருப்பதாக எண்ணுகிறேன். ‘சீரியஸ் லிட்டரேச்சர்’ என்ற வகைக்கும் குழந்தைகளுக்கான கதைகளுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்தவர் விழியன். ஆக, சிறார்களுக்கு ஏற்றவாறு கதையை அமைத்திருக்கிறார்.

நாவலின் உள்ளே சில இடங்களில் சொல்லப்பட்டுள்ள விசயங்கள் இன்றைய அரசியலைப் பேசுகின்றன. உதாரணமாக, மொழி பிரச்சனை. ஹிந்தியை ஏன் தமிழர்கள் கற்கவில்லை என்று ஓர் ஆசிரியர் கேட்டதற்கு, பெரிய டீச்சர், பேரா. மோகனா சொல்லும் பதில் அருமை. சொந்த தாய்மொழியில் படிப்பது அத்தியாவசியம் எனவும் சொந்த மாநில மொழியில் பயில தமிழும், உலகலவில் தொடர்பு கொள்ள ஆங்கிலமும் போதுமானது, அதைத்தவிர்த்து யார் விரும்பினாலும் வேறெந்த மொழியானாலும் கற்கலாம் என்று எளிமையாகக் கூறிவிடுவார். அந்த ஆசிரியரோ எழுந்தே போய்விடுவார்.
காசியில் கோவிலைக் கண்டு தனது ஊரில் மரத்தடியிலிருக்கும் சின்ன சிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கிறாள் லட்சுமி. மற்ற கோவில்களைப் போல் அல்லாமல் காசியில் நேரடியாக போய் சாமி சிலையை தொட முடிகிறது என்று ஆசிரியர் பதிவு செய்கிறார்.மாநாட்டின் இரண்டாம் நாளில் பறவையியல் ஆராய்ச்சியாளர் கிருபா நந்தினியிடம், குருவிகள் குறைகின்றனவா அல்லது நகரங்களை விட்டு இடம்பெயர்கின்றனவா என்று கேள்வி எழுப்பப்பட்டது. நாவலில் இந்த கேள்விக்கான பதில் எங்கும் இல்லை. எனது அனுபவத்தின்படி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேலத்தின் தலைவராக இருந்த ஏற்காடு இளங்கோ அவர்களின் பதில் இங்கே பொருத்தமானதாக இருக்கும். ‘பறவைகள் அழிகின்றன என்பதைவிட பறவைகள் இடம் பெயர்கின்றன’ என்பது சரியான பதில்.

பனையைப் பற்றிய ஆய்வுகள் ஏகப்பட்டவை நடக்கின்றன. காமராஜர் ஆட்சி காலத்தில் பனைமரம் பற்றிய ஆய்வுக்காக ஒரு இடமே ஒதுக்கப்பட்டு ஆய்வுக் கூடமே நிர்மாணிக்கப்பட்டது. ஆனால் இன்று ஆராய்ச்சி நிலையம் மோசமான நிலையில் இருக்கிறது. அரசாங்கங்கள் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை. ஆக, காலத்தின் தேவை பனை என்பது இந்த நாவலின் ஒரு கதாபாத்திரமாகவே வந்து செல்வதாக ஆசிரியர் கதையை அமைத்திருக்கிறார்.பனை என்பது தமிழ்நாட்டின், தென்னகத்தின் ‘இயல் தாவரம்’ என்று எழுத்தாளர் நக்கீரன் தனது ‘சூழலும் சாதியும்’ என்ற நூலிலும் குறிப்பிட்டிருக்கிறார்.
தாய்லாந்து போன்ற நாடுகளில் பனை மரங்களின் பாதுகாப்பும் வளர்ச்சியும் அதை ஒட்டிய மக்களின் பொருளாதாரமும் என அவர்களுக்கு தன்னிறைவை

அளிக்கின்ற வகையில் பார்த்து கொள்கின்றனர். ‘கற்பக தரு’ என்ற பெயர் பனைக்கு பொருத்தமாக இருக்கும். பனை மரத்தின் உச்சி முதல் அடிவரை அனைத்துமே மக்களுக்குப் பயன்படக்கூடிய பொருட்களாகவே இருக்கின்றன அத்தியாவசிய பொருட்களாகவும் இருக்கின்றன. உண்ணும் உணவு முதல் வேயும் கூரை முதல் விளையாட்டு பொருள் வரை பல பொருட்கள் பனையிலிருந்து கிடைக்கின்றன அப்படிப்பட்ட பனையை இந்நாவலில் ஆய்வு பொருளாக எடுத்திருக்கிறார் ஆசிரியர் விழியன் என்பதே எனக்கு மிக மிக பிடித்த விசயம்.

லட்சுமியும் பனையும் ஒன்றுதான் நீரூற்றிக்கொண்டே இருக்க வேண்டி, யாரையும் எதிர்ப்பார்க்காமல் சுயமாக வளர்பவர்கள். பனை எப்படி அத்தியாவசியமோ அதேப்போல அறிவியலும் மக்களுக்கு அத்தியாவசியம்தான்..!

– கார்த்தி டாவின்சி
த மு எ க ச, சேலம்.