நூல்: மலைப் பூ (சிறார் நாவல்)
நூலாசிரியர்: விழியன்
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
(பாரதி புத்தகாலயம்)
சென்னை.
விலை: ரூபாய் 95/-
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/malai-poo-by-vizhiyan/
சில நாட்களுக்குமுன் நள்ளிரவில் தூக்கம் கலைந்தது. படுக்கையில் பக்கத்தில் விழித்துக்கொண்டிருந்தது முகநூல் நண்பர் குழந்தை இலக்கியப் படைப்பாளர் விழியனின் (Umanath selvan) மலைப்’ பூ’ புத்தகம்.தூக்கம் வரும்வரைக்கும் படிக்கலாம் என்று படிக்க ஆரம்பித்தால் அந்த நள்ளிரவில் என்னைக் குழந்தையாய் மாற்றி கூட்டிக்கொண்டு போனதுமில்லாமல் விடியும்வரை தூக்கத்தைத் தொலைத்துவிட்டு லட்சுமியுடன் பேசிக்கொண்டிருக்கவும் வைத்துவிட்டது. லட்சுமி வேறு யாருமில்லை. மாஞ்சாலை என்னும் மலைக் கிராமத்தில் இருந்து ஐந்து மைல் தொலைவில் இருக்கும் ஒரு பள்ளிக்கூடத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமி.தேசியக் குழந்தைகள் அறிவியல் விழாவில் பங்குபெற முத்துக்குமாரி என்னும் ஆசிரியரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மாணவிகளில் ஒருத்தி.
இந்த லட்சுமியின் மூலம் விழியன் குழந்தைகளுக்கு ஒளவையைப்போல் ஓதுவது ஒழியேல் என்றும் பாரதியைப்போல் புதியன விரும்பு வையத்தலைமைகொள் என்றும் குழந்தைகளுக்கு குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கிறார்.
ஒரு மலைக்கிராமத்துச் சிறுமியின் துயர்களையும் அந்தக் குழந்தைக்கு அறிவுலகம் காட்டவேண்டிய வழிகளையும்,குழந்தைக்கல்வியை விஞ்ஞானவழியில் அமைத்துக்கொடுக்கவேண்டிய அவசியத்தையும்,தாய்மொழியின் சிறப்பையும்,முறையாக அழைத்துச் செல்லப்படும் குழந்தை தடைகளைத்தாண்டி அடையும் இடத்தையும் மிகத்தெளிவாக குழந்தைகளுக்குப் புரியும் வண்ணம் அதேநேரத்தில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஒரு குழந்தையின் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் புரிந்துகொள்லும் வண்ணம் மலைப்” பூ” வில் மலைப்பு ஏற்படும் வண்ணம் எழுத்துக்க்களால் காட்சிப்படுத்தி இருக்கிறார்.
ஒரு குழந்தையின் குதூகலத்தோடு படிக்கப்படவேண்டிய இந்தப்புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றிப் பேசி விவரித்து இதைப்படிக்கும்போது உங்களிடம் வரும் குழந்தைமனதை தடுத்துநிறுத்த விரும்பவில்லை.
இறுதியில் லட்சுமி பிரதமமந்திரியிடம் கேட்கும் அந்தக் கேள்விகள் தமிழகப் பள்ளிகளின் கேள்விகள். அந்தக் குழந்தைமனது பெரியவர்களால் சிந்திக்க முடியாததை சிந்திக்கிறது.
விழியன் சார் இந்த மலைப்” பூ” ஒவ்வொரு குழந்தையும் படிக்கவேண்டிய புத்தகம். காலம் அனுமதித்தால் இதை ஒரு குழந்தைகள் திரைப்படமாக உருவாக்க முயற்சி செய்யுங்கள். இனி உங்களைத் தேடிப் படிப்பேன். வாழ்த்துக்கள்
ஒரு தாத்தாவாய் குழந்தைகளின் சார்பில் நன்றிகள்.
அன்புடன்
அகத்தியன்.