நூல் அறிமுகம்: விழியன் எழுதிய *மலைப் பூ (சிறார் நாவல்)* – முத்துசாமி ஜெய பிரபாகர்நூல்: மலைப் பூ (சிறார் நாவல்)
நூலாசிரியர்: விழியன்
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
(பாரதி புத்தகாலயம்)
சென்னை.
விலை: ரூபாய் 95/-
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/malai-poo-by-vizhiyan/

ஆசிரியர்கள் குறிப்பாக அறிவியல் ஆசிரியர்கள் இன்னும் குறிப்பாக அறிவியல் இயக்க உறுப்பினர்கள் மற்றும் கள பணியாளர்கள் அவசியம் வாங்கி படிக்க வேண்டியதும் பாதுகாக்க வேண்டிய நூல் ஆகும்.

அரசின் கடமை அனைத்து பள்ளிகளில் (அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள்) உள்ள நூலகங்கள் மற்றும் அரசு நூலகங்களில் இந்நூல் இடம் பெற ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சமீபத்தில் வந்த சிறுவர்களுக்கான மிக முக்கியமான நாவல் மலைப் பூ ஆகும்.

எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத மலைப்பிரதேசத்தில் படிக்கும் குழந்தை இந்திய அளவில் பேசப்படும் குழந்தையாக மாறுவது குறித்த நாவல் இது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைத்து ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் உதவியோடு நடைபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நிகழ்வில் மலைப்பிரதேசத்தில் படிக்கும் குழந்தை பள்ளி ஆசிரியரின் உதவியோடு ஆய்வில் ஈடுபடுகிறது.

குடும்பத்தில் வறுமையின் காரணமாக படிக்க இயலாத சூழல் உள்ள நிலையில் இந்த குழந்தை ஏழாம் வகுப்பு படித்து வருகிறது. அந்த கிராமத்தில் இதையே பெரிய படிப்பாக கருதுகின்றனர். பள்ளி ஆசிரியரின் உதவியோடு மாவட்ட அளவில் நடைபெறும் தேசிய குழந்தைகள் மாநாட்டில் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள பனைமரம் குறித்த கள ஆய்வை சமர்ப்பித்து மாவட்ட அளவில் முதல் இடம் பெறுகின்றனர்.அதைத்தொடர்ந்து சென்னையில் மாநில அளவில் நடைபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இந்த குழந்தைகள் கலந்துகொண்டு பனைமரம் குறித்த ஆய்வை சமர்ப்பிக்கின்றனர். இந்த ஆய்வு அகில இந்திய மாநாட்டிற்கு செல்ல தேர்வு செய்யப்படுகிறது. தங்கள் கிராமத்தை விட்டு வேறெங்கும் செல்லாத சூழலில் மலையை விட்டு கீழே இறங்கி மாவட்ட அளவில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்று அதைத்தொடர்ந்து மாநில அளவில் பங்கேற்று அங்கே வெற்றியடைந்து அகில இந்திய அளவில் நடைபெறும் தேசிய குழந்தைகள் மாநாட்டில் பங்குபெற்று சிறந்த குழந்தை விஞ்ஞானியாக தேர்வு செய்யப்படும் மாணவியின் அனுபவபூர்வமான நாவல் இது.

முதன்முதலாக நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் பேருந்து அனுபவம் மாநில மாநாடு நடைபெறும் கல்லூரியில் நடைபெறும் நிகழ்வுகள் வீட்டைவிட்டு எங்கும் செல்லாத குழந்தை மூன்று இரவுகள் வெளியே தங்கி அங்கே சந்தித்த விஷயங்களை சந்தித்த நட்புகளை சந்தித்த ஆசிரியர்களை சந்தித்த அறிவியல் இயக்க செயல்பாட்டாளர்கள் குறித்த அனுபவப்பகிர்வு இந்த நாவல்.

தன் கிராமத்தை விட்டு வெளியே செல்லாத இந்த குழந்தை விஞ்ஞானி ஒருவார ரயில் பயணம் தேசிய குழந்தைகள் மாநாட்டில் பங்குபெற்று மிகப் அறிவியல் அறிஞர்களை சந்திக்கவும் கிடைத்த வாய்ப்பும் அந்நிகழ்வில் பங்கேற்ற பாரத பிரதமரிடம் கேள்விகள் கேட்க முடியும் என்ற நிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்ளும் இந்த குழந்தை விஞ்ஞானி பெற்ற அனுபவம் தான் இந்த நாவல்.

கழிப்பறையை கண்டிராத கிராமத்திலிருந்து மேற்கத்திய கலாச்சாரத்தில் உள்ள கழிப்பறையை பார்த்தவுடன் எப்படி இந்த கழிப்பறையை பயன்படுத்துவது என்று வியந்து பார்க்கும் சூழலில் உள்ள குழந்தை. ரயில் செல்லும் போது எப்படி நமது கழிவுகளை வெளியேற்றுவது என்ற பயத்தோடு ரயிலில் உள்ள கழிவறையை பயன்படுத்தியது முதல் உடன்வந்த மற்ற மாவட்ட பங்கேற்பாளர்கள் உடன் கிடைத்த அனுபவம் இவர்களை வழிநடத்திய அறிவியல் இயக்க செயல்பாட்டாளர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் அவர்களோடு கலந்து கலந்துரையாடிய அனுபவம் இவையெல்லாம் சேர்ந்து இந்த குழந்தையை எப்படி குழந்தை விஞ்ஞானியாக ஆக்குகிறது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் என்பதை மிகவும் எளிமையாக அருமையாக படைத்துள்ளார் எழுத்தாளர் விழியன்.