கிச்சா பச்சா 2.0 (Kicha Pacha 2.0) நூலிலிருந்து….
நூறு ரூபாய் கொடுத்தால் அண்டார்டிகாவுக்கு போயிட்டு வர முடியுமா? என்ன காமெடி பண்றீங்களா? நூறு ரூபாய் கொடுத்தால் எப்படி போக முடியும் என கேட்கிறீர்களா உண்மையிலேயே நூறு ரூபாய் கொடுத்து விழியன் எழுதிய ‘கிச்சா பச்சா’ என்ற புத்தகம் வாங்கி வாசித்தால் காகங்களுடன் சேர்ந்து நாமும் அண்டர்டிகாவை ஒரு சுற்றுச்சுற்றி திரும்பி வந்துவிடலாம்.
மனிதன் தன் அன்றாட வாழ்வில் தினம் காணும் பறவை காகம். நமது இறந்த முன்னோரின் அம்சமாக காகங்கள் திகழ்வதாகவும், எனவே அவர்களின் நினைவு நாட்களில் காகத்துக்கு சாப்பாடு இடுவது சிறப்பு என்று நாம் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் உண்மையில் நாம் செய்ய வேண்டியது அது மட்டும் தானா?
காகங்கள் நாம் ஏன் கறுப்பானோம் என்ற கேள்வி தங்களுக்குள்ளேயே எழுந்து கிச்சாவும் பச்சாவும் என இரண்டு காகங்கள் அதற்கான விடை தேடி அலைகின்றனர்.
ஒரு நாள் குழந்தைகள் புத்தகம் வாசிப்பதை ஆர்வமாக கேட்டனர் கிச்சாவும் பச்சாவும், அந்த புத்தகத்தின் தலைப்பு ‘பறவைகள் பலவிதம்’ பறவைகள் பற்றி நிறைய தகவல்கள் அதில் இருந்தன. குழந்தைகள் ஆர்வமாகப் படித்தார்கள் அப்போது காகங்கள் பற்றியும் படித்தார்கள்.
“அட..நம்மைப் பற்றி எல்லாமே சரியா சொல்றாங்க” என்று மகிழ்ந்தது கிச்சா.
மனிதர்கள் முகங்களை காகங்கள் மறக்காது என்பதைப் படித்தபோது விசிலடிக்கலாம் என பச்சா நினைத்தது. ஆனா என்ன செய்ய, கா…கா…கா…என்று மட்டும் கரைந்தது.
அடுத்த சில வரிகள்தான் அன்றைய தினத்தின் பேசுபொருளாக இவர்களுக்குள் மாறியது.
“எல்லாக் கண்டங்களிலும் இருக்கும் காகங்கள் அண்டர்டிகாவில் மட்டும் வசிப்பதில்லை” என்ற வரி தான் அது.
இப்படி தொடங்கும் அந்த புத்தகம் காக்கைகள் அண்டார்டிகாவுக்கு சென்றனவா.?
காகங்களால் அண்டார்டிகாவுக்கு பறந்து செல்ல முடியுமா அவர்கள் யாருடன் சென்றிருப்பார்கள் என்று கதை நீள்கிறது குழந்தைகள் படிக்கும் படி எளிமையாக கதையை நகர்த்திச் செல்கிறார் எழுத்தாளர் விழியன்.
அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் கிச்சா பச்சா.
புத்தகத்தில் எனக்குப் பிடித்த ஒரு சில வரிகளை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
காகங்கள் அண்டார்டிகாவுக்கு செல்லும் போது. ..
“வானதி வெளியே வா, உலகம் தட்டையானது இல்லைன்னு புரிஞ்சிக்க ஒரு வாய்ப்பு” என்று சங்கரன் அழைத்தார். காகங்களும் அவர் அப்படி என்னத்தைக் கண்டுபிடிச்சார்னு எட்டிப்பார்த்தன. கடலுக்கு நடுவில் கப்பல் சென்று கொண்டிருந்தது தொடுவானம் நேர்கோடாக இல்லாமல் மெல்லிய வளையுடன் இருந்தது.
“இதையே இப்பத்தான் கண்டுபிடிக்குறீங்களா? “
என்று காகங்கள் சிரித்துக்கொண்டன.
“முதன் முதலில் உலகம் தட்டையல்ல ஒரு உருளை வடிவம் கொண்டது” என்று சொன்னவரை எப்படி நடத்தினார்கள் என்ற சங்கரன் விளக்கியதும்,
இப்படி ஒரு கடல் பயணத்தில்தான் சர்.சி.வி ராமனுக்கு வானம் ஏன் நீல நிறமாக இருக்கின்றது என்ற கேள்வி எழுந்து விடை கண்டுபிடிக்க ஆரம்பித்தார்” என்ற கதையும் கூறியது சிறப்பு.
அண்டர்டிகாவுக்கு சென்றவுடன் காகங்கள் படும் துயரத்தையும், அனுபவத்தையும் அழகாக விவரிக்கிறார்.
“ஆமாம் ஒவ்வொரு புதிய இனம் வேறு நிலத்திற்குச் செல்லும்போதும் அங்கே சின்ன சலசலப்பு ஏற்படும். அது அங்கேயே வசிப்பவர்களுக்கு சில நேரம் சிக்கலை ஏற்படுத்தலாம். வயதான பென்குயினின் வருத்தம் எல்லோருக்கும் புரிந்தது. ஆனால் அதனை விட முதலில் இந்த பறவையை காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணம் மேலோங்கியது”
“இது சீக்கிரம் இறந்துவிடும் இந்த கருப்பு நிறம் நம்ம ஊரில் வசிப்பதற்கு ஏற்றது அல்ல. வெயில் அதிகமா இருக்கும் நிலத்தில் மட்டுமே வசிக்க முடியும்” என்று கூட்டத்திலிருந்த மற்றொரு பென்குயின் சொன்னது.
அழகான பென்குயின்கள் கதைகள் ஒருபுறம் மற்றொருபுறம் கடல்யானை.
காகங்களும்,பென்குயின்களும் யானைகளும் பேசிக் கொள்வது ஒரு ஹாலிவுட் திரைப்படம் பார்ப்பது போல இருக்கிறது.
மேலும், புத்தகத்தில் “கடல் யானை, பச்சா குடிப்பதற்கு நீரையும் ஏற்பாடு செய்திருந்தது. உலகில் உள்ள சுத்தமான நீரின் எழுவது சதவீதம் இதோ இந்தக் கண்டத்தில் பனிக்கட்டியாக உள்ளது.
இந்த கட்டிகள் உருகினால் என்னவாகும் தெரியுமா உலகில் ஒவ்வொரு பகுதியும் 160 அடிக்குத் தண்ணீர் உயரும். அவ்வளவு நீர் கட்டியாக உள்ளது. பென்குயின்கள் இந்தக் கட்டிகளையே சாப்பிட்டுவிடும். நீருக்காகக் குடித்து விடும்.”
அண்டார்டிகாவில் வாழும் விலங்குகள் ஏன் எல்லோருக்குமே மனிதர்கள் மீது அவ்வளவு கோபம் என்று கேட்கும்போது. .
“இங்கே சுற்றுலாவிற்கு வருகின்றார்கள். குப்பையாக்கிவிடுகின்றார்கள். ஏதாச்சும் விட்டுவிட்டுச் செல்கின்றார்கள். அதனை சாப்பிடும் உள்ளூர் குட்டி உயிரினங்கள் புதிய வியாதிக்கு உள்ளாகின்றார்கள். அது இன்னும் சிக்கலை உண்டு செய்கின்றது. இறப்பு, வாழ்க்கை பாதிப்பு என அது தொடர்ச்சியாக ஏதேனும் சிக்கலை உண்டு செய்கின்றது”.
“இயற்கையின் அழகை ரசிக்கலாம்.
ஆனால் இயற்கையைத் தன் வசப்படுத்த நினைத்தால் இயற்கை சும்மா இருக்காது”
ஒரு காக்கையின் கதைக்குள் அண்டார்டிகாவை கொண்டு வருகிறார், இயற்கையை யாரும் காப்பாற்ற வேண்டாம் அதன் போக்கிலே விட்டு விடுங்கள் எனவும் ,அறிவியலை சொல்லிக் கொடுக்கிறார்,பாரதியின் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று காக்கைகள் மூலம் நமக்கு பாரதியை விதைக்கிறார்.
இறுதியாக இந்த பூமியில் வளங்கள் நிறைந்து இருக்கு, ஆனால் மனிதன் மட்டுமே அவை எல்லாத்தையும் ஆளணும்னு நினைக்கிறான். அங்கதான் சிக்கல் ஆரம்பிக்குது. பல நூற்றாண்டுகளாக மண்ணில் புதைந்த புதைபடிவ எரிபொருட்கள் எல்லாத்தையும் கிட்டத்தட்ட காலி செய்தாச்சு. அதனால் என்னாச்சு? பூமி வெப்பமடைஞ்சு இருக்கு. அதுமட்டுமா,பனிக்கட்டிகள் உருகுது. இங்க இருக்க பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு பேராபத்தா முடியுது. எங்கேயோ நாம செய்யுற சின்ன சின்ன தவறுகள் வேறு எங்கேயோ ஒரு உயிருக்கு பாதிப்பா இருக்கு நாம ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும் இல்ல. ஒவ்வொரு செயலும் முக்கியம், அறிவியல் வளர்ந்திருக்குதுன்னு பேரு, ஆனா இன்னும் நாம் வலுவா பயன்படுத்தல”.
சிறுவர்களுக்கான கதைக்குள் இது போன்ற கருத்தியலை சொல்வது எளிதல்ல; இயற்கை பற்றிய புரிதலும் மனிதர்கள் பற்றிய அன்பும் மிகுந்த ஒருவரிடம் மட்டுமே இது போன்ற கதைகள் உருவாகும்.
அண்டார்டிகாவுக்கு சென்ற காகங்கள் கிச்சா பச்சா திரும்பி வந்தனவா? அவற்றுக்கு என்ன நேர்ந்தன?
பென்குயின்களும்,யானைகளும் மற்றும் மனிதர்களும் காகங்களுக்கு செய்த உதவி என்ன? என்பதை ‘கிச்சா பச்சா’ புத்தகத்தை முழுவதும் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
புத்தகம் வாசித்ததில் நான் அறிந்து கொண்டது ஒன்றே ஒன்றுதான்..
“இயற்கையை யார் அழிக்க நினைச்சாலும் நாம ஒன்னு கூடி அங்கே நிக்கணும் உயிரினங்களோடு நாம ஒன்னு கூடி நிற்போம். இயற்கை வளங்களை பாதுகாப்போம்”
புத்தகம் எழுதிய தோழர் விழியன் அவர்களுக்கும் வெளியிட்ட வானம் பதிப்பகத்துக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.
நூலின் விவரம்:-
நூல்: கிச்சா பச்சா 2.0 (Kicha Pacha 2.0)
ஆசிரியர்: விழியன் (Vizhiyan)
வெளியிடு: நூல் வனம் (Nool Vanam)
விலை: ரூ.100
எழுதியவர்:-
அமுதன் தேவேந்திரன் (Amuthan Devendran)
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.