கண் தெரியாத இசைஞன்.
விளாதீமிர் கொரலேன்கோ
தமிழில் ரா.கிருஷ்ணையா.
பாரதி புத்தகாலயம்
04424332924
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
அன்றைய ரஷ்யாவின் உக்ரைன் பகுதியில் ஒரு பண்ணை சீமானுக்கும் சீமாட்டிக்கும் பணக்கார வாரிசாக பியோத்தர் என்ற ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.
பிறந்த குழந்தைக்கு கண் தெரியவில்லை என்பதை முதலில் தாய் கண்டறிய பின் மருத்துவரும் அதையே உறுதிப்படுத்துகிறார்.
அந்தக் குழந்தைக்கு மக்ஸீம் என ஒரு மாமன் இருக்கிறான். அந்த மாமன் ஒரு போர்வீரன், கொள்கை வீரன். ஒரு போரில் தன் ஒரு கை, கால்களை இழந்து முடமாகிறான். இந்த மாமனின் வளர்ப்பிலும், பாடம் சொல்லிக் கொடுப்பதிலும் அக்குழந்தை வளர்கிறான். அந்த வீட்டின் குதிரை லாயக்காரனான #இயோஹீமின் புல்லாங்குழல் இசையில் அக்குழந்தை தன்னை மறக்கிறது. பின் தன் தாயின் பியானோ இசையில் தன் இசை ஆர்வத்தை கண்டுகொள்கிறான் பியோத்தர்.
பியோத்தரின் வீட்டின் அருகில் இருக்கும் சிறுமியான இவெலீனா பியோத்தரின் மீது எந்த எதிர்ப்பார்ப்புமில்லா அன்பைச் செலுத்துகிறாள். தன் தாய் ஆன்னா, தன் மாமா மக்ஸீம், தன் தோழி இவெலினா இவர்களால் பொத்திப் பாதுகாக்கப்பட்ட பியோத்தர் வளர வளர அவனது உள்ளம் விசாரணையில் ஈடுபடுகிறது.
ஆம்… அதுவரை புற உலகத் தொடர்பு ஏதுமின்றி வீட்டிலேயே வளர்க்கப்பட்டு, ஒலியால் உலகை அடையாளப்படுத்திக் கொண்ட பியோத்தர் தனக்குள்ளேயே தான் யார்? தனது பிறவியின் நோக்கமென்ன என்ற ஆத்ம விசாரணையில் ஈடுபடுகிறான். இந்நிலையில் தன்னைச் சுற்றி கேட்கும் ஒலியின் மூலம் நிறங்களை கற்பனை செய்து கொள்ளப் பழகிக்கொள்கிறான். பியானோ இசையில் புதுப்புது சாகசங்களை நிகழ்த்திக் காட்டுகிறான்.
இந்த நிலையில் புத்திப்பேதலிக்கும் அளவுக்கு தன் அகப்பயணத்தை மேற்கொள்கிறான் பியோத்தர். கண் வழியாக இவ்வுலக வாழ்வை நாம் தெரிந்து கொள்கிறோம். ஆனால் கண் தெரியாத பியோத்தர் இதுநாள் வரையில் தன் மரபு வழி பெற்ற உள்ளாற்றலால் இந்த உலகைப் புரிந்து கொள்ள முயன்று உளவியல் சிக்கல்களை சந்தித்து மீள்கிறான்.
அவதாரம் என்ற நாசரின் திரைப்படத்தில் கண்தெரியாத பெண்ணாக ரேவதி நடித்திருப்பார்.
இத்திரைப்படத்தில், “தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலே…
திங்கள் வந்து காயும் போது என்ன எண்ணமோ நினைப்புல…” என்றொரு பாடல் வரும்.
இதில் முதல் வரியான…
தென்றல் வந்து தீண்டும் போது காற்றைத் தானே உணர முடியும்…
வண்ணங்களை எவ்வாறு தென்றல் வந்து தீண்டும் போது உணர முடியும்…
இதைத்தான் கண் தெரியாத இசைஞனான பியோத்தர் முயற்சித்தான். அதாவது ஒலியைக் கொண்டு நிறங்களை அறியும் முயற்சி…
உளவியல் ரீதியான அருமையான பயணம் இந்த நாவல்.
புறச்சூழல் மூலம் கற்க முடியாத சூழலிலும் பியோத்தர் தன் அகத் தூண்டலால் தனக்குள்ளேயே எழுப்பிக் கொண்ட கேள்விகளும், அதற்காக அவர் பெற்ற பதில்களும், குழப்பங்களும், உளவியல் சிக்கல்களும் இந்நாவலில் அருமையாக விரிகின்றன.
பொதுவாக ரஷ்ய இலக்கியங்கள் பேசும் மானுடத்தை இந்நாவல் பியோத்தர் என்னும் கண் தெரியாத கதாபாத்திரம் மூலம் பேசுகிறது.
அருமையான வாசிப்பனுபவம்…
வாசித்துப் பாருங்கள்…
நன்றி!
இராமமூர்த்தி நாகராஜன்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.