நூல் அறிமுகம்: வ.உ.சி.யும் பாரதியும் – ரெங்கையா முருகன்

நூல் அறிமுகம்: வ.உ.சி.யும் பாரதியும் – ரெங்கையா முருகன்

 

பெரியவர் வ.உ.சி என்ற ஆளுமை என் மனதில் முழுமையாக வியாபித்துக் கொண்டது என் வாழ்நாளில் சுமார் 42 வயதுக்கு மேல். அவரது தியாக வாழ்வின் மீது ஈர்ப்பு ஏற்படுவதற்கு தூண்டுதலாக அமைந்த நூல் பெருமதிப்புக்குரிய ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய ”வ.உ.சி. வாழ்வும் பணியும்” என்ற சிறுநூல்.

இந்த நூலின் சிறப்பே மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்பார்களே. அப்படித்தான் தற்செயலாக படிக்கப் போய் இந்த சிறு நூலில் வ.உ.சி.யின் பன்முகத்தன்மை குறித்து மிகச் சிறப்பாக விளக்கியிருப்பார். பின்புதான் வ.உ.சி. என்ற முழு ஆளுமையைத் தெரிந்து கொள்ள ஆவணங்களைத் தேடித் தேடி படிக்க பயணிக்க ஆரம்பித்தேன். சதாகாலமும் வ.உ.சி . என்ற நாமத்தை உச்சரிக்காத நாளே இல்லை என்ற அளவில் இப்பொழுது என்னை ஆட்கொண்டு விட்டது.

நான் மறைமலையடிகள் நூலகத்தில் வேலை செய்த பொழுது வ,உ.சி. கைப்பட எழுதிய பல மடல்களை கண்டிருக்கிறேன். அவரது திருக்குறள் உரை, தொல்காப்பிய உரை, மெய்யறிவு, மெய்யறம், ஜேம்ஸ் ஆலனின் மொழிபெயர்ப்பு நூல்கள் கண்ணில் எளிதாகவே பட்டுக் கொண்டேயிருக்கும். குறிப்பாக வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்கள் எழுதிய வ.உ.சி.யும் பாரதியும் நூல் பி3 வகுப்பிடப்பட்ட வரிசைப் பட்டியல் பகுதியில் எளிதாக கண்ணில் பட்டுக் கொண்டேயிருக்கும். ஆனால் அன்றைய நாளில் அந்த நூலினை எடுத்து படிக்கக் கூட தோன்றவேயில்லை. சொல்லப்போனால் வ.உ.சி, பாரதி ஆளுமைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லாத வேறொரு வாழ்க்கைச் சிக்கலில் சென்று கொண்டிருந்த காலமது. ஒரு நூலகராக புத்தகத்தை வரும் வாசகரிடம் கொடுத்து வாங்கும் தொழில் சார்ந்த ஆளாக மட்டுமே இருந்த சிக்கலான காலமது.

தற்பொழுதிருக்கும் என்னுடைய மனநிலைக்குத் தகுந்தவாறு தற்செயலாக எனது நண்பர் அறிவழகன் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று அவரது நூல் சேகரிப்பிலிருந்து மேற்கண்ட ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் தொகுத்த நூலினை படிப்பதற்காக எனக்கு கொடுத்தார்.

நான் மறைமலையடிகள் நூலகத்தில் வேலை பார்த்த போது எனக்கு வயது சுமார் 26. ஆனால் இந்த நூலினைத் தொகுத்த ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு இந்த நூலினை வெளியிட்ட பொழுது சுமார் 26 வயதிற்குள்ளாகத்தான் இருந்திருக்க முடியும். 26 வயதிற்குள்ளாகவே வ.உ.சி குறித்து இவ்வளவு சிறப்பான தொகுப்பை வெளியிட்டதை தற்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். அவ்வளவு அசாதாராண வேலையை செய்திருக்கிறார் ஆ.இரா. வேங்கடாசலபதி. அப்படியெனில் அதற்கும் முன்னதாக சுமார் 20 வயதிற்குள்ளாகவே இந்த நூலிற்கான வித்து அவர் மனதில் உருவாகியிருக்கக் கூடும்.

இந்த தொகுப்பினைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு தோன்றும் வாசகம் திருக்கோளூர் இரகசியத்தில் வரும் “பிஞ்சாய் பழுத்தேனோ ஆண்டாளைப் போல” என்ற வாசகம்தான் மனதில் வந்து போகிறது. அவ்வளவு சிறிய வயதிலேயே கொண்டு வந்திருக்கிறார் இந்த சிறப்பான தொகுப்பு வ.உ.சி.யும் பாரதியும்.

மேலும் நான் முன்பாகவே வேலை பார்த்த நூலகத்தில் எளிதாக பார்க்கக் கிடைத்த வேளையில் கூட இந்த நூலினை அப்போதே வாசிக்காமல் இருந்திருக்கிறோமே என்று என் மனம் இன்று விசனப்படுகிறது. அதனதற்கான வேலை வரும்பொழுதே அதனதற்கான ஞானம் கிட்டும் வகையறாக்களைச் சேர்ந்தவன் நான் போலும்.

இன்றைய காலத்தில் எவ்வளவு பெரிய தொகுப்பு வேலை என்பது ஆவணத்தைச் சேகரிப்பதும், தொகுப்பதும் இன்றைய தொழில்நுட்பம் மிகவும் எளிதாக்கியுள்ளது என்பதையும் மனதில் கொள்ள வேண்டியுள்ளது.

கப்பலோட்டிய தமிழன் - வ. உ. சிதம்பரம் ...

1990 களில் வெளியாகும் ஒவ்வொரு தொகுப்புக்கும் எவ்வளவு சிரமம் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

முதலில் இந்த நல்ல தொகுப்பை கொண்டு வர எண்ணியதோடல்லாமல் அனைவரையும் கவரக்கூடிய மிகச் சிறந்த தனி அச்சு உரு அமைப்பு, புத்தக வடிவாக்கம் மற்றும் வெளிவராத அவ்வளவு சிறப்பான தகவல் களஞ்சியம் அடங்கிய தொகுப்பிற்காக ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களுக்கு பெரிய ஓ! போடலாம்.

மூத்த ஆய்வாளர் ரா.அ.பத்மநாபன், மூத்த எழுத்தாளர் பெ.சு.மணி, பெருமதிப்புக்குரிய ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன், மற்றும் அன்புக்குரிய பேராசிரியர் ம.ரா. அரசு, ரகுநாதன் போன்றோர் வ.உ.சி.யின் ஆய்வுகளுக்கு நீர் பாய்ச்சி செழிக்க வைத்தவர்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

தமிழ் உலகில் பல்வேறு வ.உ.சி. குறித்த ஆய்வுப் புத்தகங்களிடையே என்னை மிகவும் கவர்ந்த நூலின் வரிசைப் பட்டியலில் வ.உசி.யும் பாரதியும் என்ற இந்த தொகுப்பு நூலினை தலையானதாக மதிக்கிறேன். இந்த நூலின் சிறப்பம்சங்கள் என்னவென்று கீழே தருகிறேன்.

இந்த தொகுப்பு வருவதற்கு முன்பாகவே வ.உ.சி. கடிதங்கள் சேகர் பதிப்பகம் மூலமாக 1984 ம் ஆண்டிலேயே பதிப்பித்து வெளியிட்டார் என்பதையும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். (அப்பொழுதும் அவருக்கு 16 வயதளவில்தான் இருந்திருப்பார். )

சொல்லப்போனால் அவர் பள்ளிப் பருவ காலத்திலேயே இந்த பதிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கக்கூடும். வ.உ.சி.யும் பாரதியும்வெளிவந்த காலத்தையொட்டியே இந்தியா பத்திரிக்கையிலிருந்து பாரதியின் கருத்துப்படங்களையும் வெளியிட்டிருப்பார் என்று தோன்றுகிறது.

இத் தொகுப்பில் பாரதியின் இந்தியா இதழ், சுதேசமித்திரன், கர்மயோகி, சுப்பிரமணிய சிவா நடத்திய ஞானபாநு, ஏ.கே.செட்டியார் நடத்திய குமரிமலர், சிவநேசன், இந்து (ஆங்கிலம்) போன்ற இதழ்களிலிருந்து பல விசயங்கள் திரட்டித் தந்திருக்கிறார்.

வ.உ.சி. பாரதியாரைக் குறித்து எழுதிய கையெழுத்துபடி ”ஸ்ரீ C. சுப்பிரமணிய பாரதியாரைப் பற்றிய சில குறிப்புகள்”மற்றும் மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியார் எழுதிய கையழுத்துப்படி “ யான் கண்ட இரு பெரியார்: வ.உ.சிதம்பரம் பிள்ளையும் சி. சுப்பிரமணிய பாரதியாரும். இரண்டும் அன்றைய சமகாலத்தில் வாழ்ந்த பெரியார்களின் வாழ்வியல்பைச் சிறப்பாக ஆவணப்படுத்தும் காலப்பெட்டகத்தின் கண்ணாடியாக இத் தொகுப்பை முதண்மைபடுத்தியுள்ளது.

பாரதி குறித்த வ.உ.சி.யின் நினைவுக் குறிப்பு ஆகச் சிறந்த உரைநடைக் காவியம். இதில் சூரத் மாநாடு, காங்கிரஸ் பிளவு, வ.உ.சி. சிறையில் இருந்த போது பாரதி வந்து சந்தித்தது, சிறை வாழ்வுக்குப் பின்பாக வ.உ.சி பாரதியாரை புதுவையில் சந்தித்த நிகழ்வு, இறுதியாக பெரம்பூரில் வசித்த வ.உ.சி.யை பாரதி வந்து சந்தித்த நிகழ்வு, இந்தச் சந்திப்பில் பாரதி ஒரு மக்கு சாமியாரை அழைத்து வந்து போதை மருந்தை சாப்பிட்டதை நகைச்சுவை தொனியில் கூறிய அனைத்து நிகழ்வையும் பதிவு செய்திருக்கிறார்.

மண்டையம் ஸ்ரீனிவாசச்சாரியார் நினைவலைகளில் வ.உ.சி மற்றும் பாரதி குறித்த அருமையான ஆவணம் இடம் பெறுகிறது. குறிப்பாக வ.உ.சி. வெறுமனே வாய்ச் சொல்லில் மட்டுமல்ல 100% சுதேசியாக வாழ்ந்து காட்டிய தான் கண்ட அனுபவத்தை சொல்லியிருப்பது, வ.உ.சி.யை பாளையங்கோட்டைச் சிறையில் சந்தித்த அனுபவம், வ.உ.சி. சிறை வாழ்வுக்குப்பின் என்ன மாதிரியான மனநிலையில் இருந்தார் என்ற அனுபவ குறிப்பு, சுதேசி கப்பல் கம்பெனி சம்பந்தமான பல விசயங்கள் அடங்கியுள்ளது.

வரலாற்றில் இன்று: கப்பலோட்டிய ...

குறிப்பாக பாரதியார் தமிழில் எழுத்துக்குறை என்ற கட்டுரை ஞானபானு இதழில் எழுதியமைக்கு வ.உ.சி. தனது ஆத்மார்த்தமான நண்பராக விளங்கிய பாரதியிடமே நக்கீரராக சீறி தமிழில் என்ன குறை கண்டீர் என்னும் கருத்து நோக்கில் எழுதிய மறுப்புவிவாதக் கட்டுரையும் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

பாரதியார் பார்வையில் இந்தியா பத்திரிக்கையில் வ.உ.சி. தேசிய போராட்டத்தை விளக்கும் வண்ணமாக பல்வேறு தலைப்புகளில் சுதேசி கப்பல் கமபெனி குறித்த மேலதிக தகவல்கள், காங்கிரஸ் யாத்திரை,கலெக்டர் வின்ச் – சிதம்பரனார் வாத விவாத தர்க்கத்தை நந்தனார் சரித்திரத்தில் வரும் சேரிமுற்றுஞ் சிவபக்தி பண்ணும்பட்டை விட்டையாம் என்ற வர்ணமெட்டில் அடங்கிய புகழ்பெற்ற பாட்டு, திருநெல்வேலி கஷ்ட நிவாரண நிதி, சுதேசி கப்பல் தரும நிதி போன்றவை வரலாற்றுச் சிறப்புமிக்க தகவல் அடங்கியுள்ளது.

வ.உ.சி. சிறையில் பட்ட கஷ்டங்களை சகிக்க முடியாமல் மனைவி மீனாட்சி அம்மையார் ”ஐயோ உனக்கு இரங்குவார் யாருமில்லையா? என்ற குறிப்பு, சிறைக்குள்ளகப்பட்டிருக்கும் தேசபக்தர்கள், சிறையில் வ.உ.சி. படும் பாட்டை கண்டு காணச் சகிக்காது பரலி சு. நெல்லையப்பர் துன்பம் சகியான் என்ற புனை பெயரில் எழுதிய கட்டுரை, கர்மயோகி இதழில் சிறையில் வ.உ.சி.யை சந்தித்த வேளையில் கூறிய முக்கிய வாக்குகள் “தமிழர்கள் எல்லோரும் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்ய வேண்டும். 1330 குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழன் முற்றுந்திறந்த முனிவரேயாயினும், என்னைப் பெற்ற தந்தையேயாயினும், யான் பெற்ற மக்களேயாயினும் யான் அவர்களை பூர்த்தியாக மதிப்பதுமில்லை; நேசிப்பதுமில்லை என்ற அறிவுறுத்திய செய்தி கர்மயோகி இதழில் இடம் பெற்றுள்ள பல சிறை குறித்தான அரிய தகவல்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

வ.உ.சி. எழுதிய பல்வேறு நூல்களுக்கான மதிப்புரை இடம் பெற்றுள்ளது

இந்தியா இதழில் சுதேசி கப்பல் வருகை குறித்தான கார்டூன் படம்

”இந்தியா ஆபீஸ்” புதுச்சேரி அலுவலகத்தில்கிடைக்கும் புத்தகங்கள் என்ற விளம்பரத்தில் ஒரு முக்கிய செய்தி இடம் பெற்றுள்ளது..
ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை படம் 1-க்கு 0 0 6
ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சரித்திரம் 0 3 0
ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சரித்திரம் (ஆங்கிலம்) 0 6 0

இந்த விளம்பரம் 1909 ம் ஆண்டு இந்தியா இதழில் இடம் பெற்ற செய்தி முக்கியமானது. வ.உ.சி. வாழும் காலத்திலேயே அவருக்கு எம்.கிருஷ்ணசாமி அய்யர் அவர்களால் எழுதப்பட்ட முதல் வாழ்க்கை சரித்திர நூல் குறித்தான விளம்பரம் அடங்கியுள்ளது.

குறிப்பாக தமிழக அரசியல் தலைவர்களில் முதன் முதலாக வ.உ.சி. அவர்களின் உருவச் சித்திரத்தை அச்சடித்து வெளியிட்டுள்ளார்கள் என்பதன் மூலம் எவ்வளவு செல்வாக்கு மிக்கவராக இருந்திருந்தால் உருவப்படம் அச்சிட்டு வெளியிட்டுள்ளார்கள் என்பது இதன் மூலம் அறிய நேரிடலாம். 1908 வாக்கில் இருந்த வ.உ.சி. அவர்களின் செல்வாக்கு சிறைக்குப் போய் வந்த பிறகு வரலாற்றையே மாற்றிவிட்டார்கள் எனபது தெள்ளென தெளிவாகிறது. ஆனால் பட்டாபி சீதாரமையா எழுதிய காங்கிரசு சரித்திரத்தில் இவர் குறித்து ஒரு வரி கூட இடம் பெறவில்லை என்ற கசப்பான செய்தியும் மனதிற்குள் வந்து தொலைகிறது.

இவை தவிர வ.உசி. வழக்கு சம்பந்தமான பல்வேறு இரகசிய போலீஸ் அறிக்கைகளும் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

வரலாற்றாய்வாளர் ஆ. இரா. வேங்கடாசலபதி அவர்களுடைய அரிய முயற்சியில் பல்வேறு தொகுப்புகள் வெளிவந்தாலும் என்னை மிகவும் கவர்ந்த நூல் என்று பட்டியலிடும் போது ”வ.உ.சி.யும் பாரதியும்” என்ற தொகுப்பு இன்றைய நாளில் நான் ஆராதிக்கும் மிக முக்கிய நூல் என குறிப்பிட விரும்புகிறேன்.

இந்த நூல் வரப்போகும் அடுத்த வருடம் (2021) வ.உ.சி.யின் 150 ம் ஆண்டு விழாவில் மீண்டும் மறுபதிப்பு வந்தால் தமிழ் உலகம் அதனை இருகரம் கூப்பி வரவேற்கும். வ.உ.சி. ஆய்வுகளின் முன்னத்தி ஏராக விளங்கக்கூடிய வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களிடமிருந்து வ.உ.சி.யும் பாரதியும் போன்ற இன்னுமொரு அட்டகாசமான வ.உ.சி. தொகுப்பினை அளித்திடுவார் என தமிழ் ஆய்வுலகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

ரெங்கையா முருகன்

வ.உ.சி.யும் பாரதியும்.
தொகுப்பு : ஆ. இரா. வேங்கடாசலபதி
வெளியீடு : மக்கள் வெளியீடு
ஆண்டு : 1994

Show 1 Comment

1 Comment

  1. நா.வே.அருள்

    ஒரு நூல் விமர்சனம் எவ்வளவு தகவல்களை நூலுக்கு வெளியில் இருந்து தர முடியும் என்பதும், நூலின் உயிர்த்துவமான சாராம்சத்தை எவ்வளவு நேர்த்தியாக தரமுடியும் என்பதும் வாசகர்கள் புரிந்துகொள்ளலாம். பழங்குடி இனத்தவரின் அனுபவ நிழல் தந்த ரெங்கையா முருகன் இவர் என்று கருதுகிறேன். மகிழ்ச்சியும் பாராட்டுகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *