உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. மொத்த மக்கள் தொகையில் 96.9 கோடி மக்கள் (சுமார் 70 விழுக்காடு) வாக்களிக்க தகுதி உடையவர்கள். இந்தியா முழுவதும் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் உட்பட, 543 மக்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் 2660 பதிவுபெற்ற கட்சிகளும், பல சுயேட்சை வேட்பாளர்களும் களம் காண்கின்றனர். 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற 17வது மக்களவை தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 2024லில் சில மாற்றங்களை, முன்னேற்றங்களைக் காண முடிகிறது. சுவரொட்டிகள் ஒலிபெருக்கி விளம்பரங்கள் குறைவு. அனைத்து கட்சிகளும் சமூக ஊடகங்களை அதிகம் பயன்டுத்த தொடங்கிவிட்டன. தேர்தல் கூட்டணி பிரச்சாரங்கள் அதிகம் காண முடிகிறது. தேர்தல் ஆணையத்தின் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை முயற்ச்சிகள் நிச்சயம் பலன் அளிக்கும் என நம்புவோம்.
அது ஒரு புறமிருக்க, அரசியல் ஒரு சாக்கடை, நமக்கு தேவையில்லாத ஒன்று, எனது ஒரு ஓட்டால் என்ன ஆகிவிடப்போகிறது? என்ற சிந்தனையில் பயணிப்போரும் உண்டு. அந்த சிந்தனையில் பயணிப்போமானால் அந்த சாக்கடை, தேவையில்லாத ஒன்றால் நாம் ஆளப்படுவோம் என்பதுதான் உண்மை. மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே வர்க்க போராட்டம் ஆரம்பித்து விட்டது. ஆண்&பெண், ஏழை&பணக்காரர், உற்பத்தியாளர்& நுகர்வோர் என பல வர்க்க, உரிமைக்கான போராட்டங்கள் எதோ ஒரு வடிவில் தொடருகின்றன. எல்லோரும் விரும்புவது சுதந்திரம், சமத்துவம், சமூக நீதி, பொருளாதார முன்னேற்றம் மட்டுமே. அதுவே ஆரோக்கியமான மனித சமூகத்தையும் உருவாக்கி, உள்ளார்ந்த வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். இன்றையக் கல்வி முறை பணம் சம்பாதிப்பையே அதிகம் போதிப்பதாக தோன்றுகிறது. ஒழுக்கம், நன்னெறி சார்ந்த விஷயங்களை போதிப்பது குறைவாக இருக்கிறது.
குடும்பத்திலும் குழந்தைகள் மத்தியில் நல்ல எண்ணங்கள் அதிகம் விதைக்கப்பட்ட வேண்டும். அதற்க்கு பெற்றோர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஓட்டுக்கு பணமோ, பொருளோ பெறுவது தவறு என்பதையும், அது சட்டப்படி குற்றம் என்பதை அனைவரும் உணர வேண்டும். எல்லோருக்கும் அரசியல் விழிப்புணர்வு மிக அவசியம். காலத்தின் கட்டாயமும் கூட. நாட்டில் மக்கள் சந்திக்கும் தினசரி பிரச்சனைகளுக்கும் நாட்டின் நிர்வாகத்திற்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. ஒரு குடும்பம் சிறக்க குடும்பத்தலைவர் எப்படி முக்கியமோ, அதைப்போன்று நாடு சிறக்க நல்ல தலைவர் மிக அவசியம். அந்த தலைவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஐந்து ஆண்டுகொளுக்கொருமுறை வருகிறது. சரியான பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும்போது பன்முக தன்மை கொண்ட இந்தியா மறுமலர்ச்சி அடையும். சிறந்த மக்களாட்சிச்சிக்கும் பெருமை சேர்க்கும்.
அந்த ஜனநாயகத்தை பாதுக்காக்க சரியான பிரதிநிதிகளை தேர்வுசெய்வது நமதுக்கடமை. அரசியல் குடும்பத்தில் தான் துவங்குகிறது. ஒரு குடும்பத்திலேயே படித்தவர் & படிக்காதவர், வருமானம் ஈட்டுபவர் & ஈட்டாதவர், உடல் நலம் உள்ளவர் & இல்லாதவர், ஆண் & பெண் போன்றோரில் குடும்ப உறுப்பினர்கள் யாருக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதை சிந்தித்தாலே அரசியல் அறிவியலுக்கான முதல் தேடல். காரணம் குடும்பம் சமூகத்தின் முதல் அங்கம். அதிகாரம் யார் கையில் இருக்கிறது. முடிவு எதை வைத்து எடுக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் அரசிலுக்கான தொடக்கம். நாட்டில் பற்றாக்குறை மிக்க வளங்கள் யாருக்கு எவ்வாறு பகிரப்படுகிறது என்பதில்தான் அரசியல் பொருளாதாரம் துவங்குகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகம் தொடர்ந்து முன்னேறுவதும், ஒருகுறிப்பிட்ட சமூகம் தொடர்ந்து புறக்கணிக்க படுவதும் அரசியல் விளையாட்டுத்தான். புறக்கணிக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதித்துவம் அரசியலில் பலவீனமாக இருப்பதுதான் முக்கிய காரணமாக இருக்க முடியும். அரசின் திட்டங்கள், கொள்கைகள் அனைவருக்குமான சமூக மாற்றம் கொண்டதாக இருந்தாலும் அதனை நடைமுறைப்படுவதில் முன்னேற்றம் காணவேண்டியுள்ளது. பல இடங்களில் பெயருக்கு பொறுப்பில் இருப்பார்கள். முடிவெடுப்பது அதிகார வர்க்கங்களே. சில நிர்வாகங்களில் மக்களின் பிரதிநிதிகள் தலையாட்டி பொம்மைகளாக விளங்குவது நல்ல நிர்வாகமாக இருக்காது.
ஆண்கள் பெண்களை அடக்கி ஆளநினைப்பதும், ஆதிக்க சமூகம் எளிய சமூகத்தை அடக்கி ஆளநினைப்பதும் சரியா?. ஆரோக்கியமான அரசியல் என்பது பாகுபாடு இல்லா அனைவருக்குமான சம உரிமையை பெற்றுத் தருவதாகும். பிரதிநிதித்துவம் பெயரளவில் மட்டும் இல்லாமல் அது உயிர் பெற வேண்டும்.
கல்வித்தகுக்கேற்ப சிந்தனை செயல்பாடு பலருக்கு வளரவேண்டியுள்ளது. என்னுடைய களப்பணி அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். எட்டாவது படித்தவர்க்கு எழுத படிக்க தெரியவில்லை. இது கல்வி நிறுவனங்கள் உயர்ந்த அளவு கல்வித்தரம் உயரவில்லை என்பதைக் காட்டுகிறது. தேர்தல் விழிப்புணர்வு பற்றிய ஆராய்ச்சியில் தெரிந்துகொண்டது என்னவென்றால், பெரும்பாலோனருக்கு அந்த தொகுதி சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் பெயர் தெரியவில்லை. சிலருக்கு கட்சி கொள்கைகளைவிட, சின்னங்கள் பெரிதாக தெரிகிறது. சிலருக்கு ஜாதி மதம் பெரிதாகத் தெரிகிறது. வேட்பாளரின் விவரகங்களை தெரிந்து வைத்துள்ளவர்கள் மிகச்சிலரே.
விவரம் தெரிந்த பலர் ஒட்டு செலுத்துவதே இல்லை. இதனைப் போன்ற காரணங்களால்தான் நம்நாட்டில் 100 விழுக்காடு ஓட்டு என்பது வெறும் கனவாகவே இருக்கிறது. குறைகளை மட்டும் சுட்டிக்காட்டிக்கொண்டு அதற்கான தீர்வு காணாமல் இருப்பதும் குடிமக்களின் தவறுதான். மாவீரன் நெப்போலியன் சொன்னது போல “இந்த உலகம் கெட்டவர்களால் பாதிக்கப்படவில்லை. நல்லவர்கள் அமைதியாக இருப்பதனாலேயே பாதிக்கப்பட்டுள்ளது”. இந்த நாடு முன்னேற்றம் அடைய நமது பங்கு என்ன என்பதை சிந்திக்கவேண்டும். தகுதியுடையோர் அனைவரும் தங்களது ஓட்டு கடமையை தவறாமல் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். நமது தொகுதியில் வேட்பாளர் எத்தனைப்பேர், அதில் படித்ததவர், பண்புள்ளவர், பகுத்தறிவாளர், அனைத்து சமூகத்தாரின் உணர்வுகளை மதிக்கக்கூடிய ஒருவரை தேர்ந்தெடுக்கலாம். ஜனநாயகத்தை நிலைநாட்ட நாம் ஆரோக்கியமான அரசியலுக்கு முக்கியத்துவம் தருவோம். பகுத்தாய்வு செய்து சரியான பிரதிநிதியை தேர்ந்தெடுப்பது மிக அவசியம்.
குடும்பத்தின் ஆரோக்கியம் பெற்றோர்/பாதுகாப்பாளரை பொறுத்து இருக்கிறது. அதுபோல் நாட்டின் ஆரோக்கியம் நாம் தேர்ந்தெடுக்கும் தலைவரைப் பொறுத்து இருக்கிறது. மக்கள் போதைய விழிப்புணர்வின்மையால் பல இடங்களில் பணம்தான் வெற்றியைத் தீர்மானிக்கக்கூடிய காரணியாக இருக்கிறது. இந்நிலைமாற வேண்டும். பணத்திற்கும், பொருளுக்கும் ஆசைப்பட்டு ஓட்டை விற்பது நம்மை விற்பதற்கு சமம். ஓட்டு விற்கப்பட்டால் உரிமையை பற்றி பேச முடியாது. நாம் செலுத்தும் ஓட்டு அடுத்து ஐந்து வருடங்களுக்கு வலுவான ஆட்சியை உறுதிசெய்யும். ஆரோக்கியமான நாட்டை உருவாக்க ஒவ்வொருவரின் ஓட்டும் காரணமாக இருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும். தற்போது அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன. எப்படியாவது வெல்லவேண்டும் என்ற சிந்தனையில் பயணிக்கின்றனர். அங்கு வேட்பாளர்கள் சமூக பொறுப்பு பற்றி கவலைப்படுவதில்லை. கடந்த தேர்தல் வாக்குறுதிகள் எத்தனை விழுக்காடு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதையும் வாக்காளர் மனதில் கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் என்ன என்பதும், வெற்றி பெற்றால் ஏன் வாக்குறுதி நிறைவேற்றவில்லை என்று கேட்கும் உரிமை நம் எல்லோருக்கும் உண்டு. பெரும்பாலோனோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதனை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும். கைப்பேசியில் மூழ்கியிருக்கும் இளைஞர்கள் சிந்தனையில் மாற்றங்கள் வராமல் முன்னேற்றங்கள் வராது.
மாற்றத்திற்க்கான வாய்ப்பே தேர்தல் நாள். தமிழகத்தில் வரும் 19.04.2024 (வெள்ளிக்கிழமை) முதல் கட்டமாக 39 மக்களவை உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறுகிறது. அது நாம் அனைவரும் விழித்துக்கொள்ளும் நேரமும் கூட. அன்று அனைவரும் நமது வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை உறுதி செய்து, 100 விழுக்காடு, கடமை மற்றும் உரிமையுடன் வாக்கு செலுத்தி ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவோம். மாற்றம் முதலில் நம்மிடம் இருந்து உருவாக்கட்டும். விழித்திடு வாக்காளரே! விழித்திடு!
நன்றியுடன்,
முனைவர் இல.சுருளிவேல்
உதவிப் பேராசிரியர்,
மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை,
டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி
நிலையம்,
பொன்னேரி – 601 204,
திருவள்ளூர் மாவட்டம்
மின்னஞ்சல்: surulivel@tnfu.ac.in ;
91-9566362894
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.