மத்திய இந்தியாவில் வடக்கிலிருந்து தெற்காக 300 மைல்களும், கிழக்கிலிருந்து மேற்காக 500 மைல்களும் நீண்டு வளைந்து செல்லும் மலைத்தொடரில் தண்டகாரண்யா எனப்படும் அடர்ந்த காடு அமைந்துள்ளது. இயற்கை வளம் கொழிக்கும் அந்தக் காட்டில் இரும்பு, பாக்சைட் போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளன. பல்லாயிரம் ஆண்டுகளாக அங்கே சந்தால், கோந்த், முண்டா, கோல், ஒரோன், ஹோ போன்ற பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தங்களின் வாழ்வாதாரங்களான காட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாத்திட தொன்று தொட்டுப் போராடிய வண்ணம் இருக்கின்றனர். அன்றைய ஜமீந்தார்கள், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தொடங்கி இன்று சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம் என்ற பெயரில் ஆட்சி செய்யும் மத்திய மாநில ஆட்சியாளர்கள் வரை ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக அவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் வரலாறு வீரத்திலும், தியாகத்திலும் எழுதப்பட்டதாகும்.

C:\Users\Chandraguru\Pictures\Arundati Roy\Walking with comrades\Eml3G3hVgAEKVyI.jpg

அடர்ந்த காடுகளில் உயர்ந்து வளர்ந்துள்ள மரங்களை வெட்டி விற்கவும், நிலத்தில் ஆழக்கிடக்கும் தாதுப் பொருட்களைத் தோண்டி எடுக்கவும் கார்ப்பரேட் கழுகுகள் வட்டமிட்ட வண்ணமே இருக்கின்றன. டாட்டா, எஸ்ஸார், வேதாந்தா போன்ற பெரு முதலாளிகள் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசு அதிகாரகளிடம் பேரம் பேசி நிறைவேற்றிய வண்ணம் இருக்கின்றனர். தங்களின் லாபவேட்டைக்காக இயற்கை வளங்களைச் சூறையாட ஆட்சிக் கட்டிலேறும் கட்சிகள் இந்நிறுவனங்களுக்குத் துணைபோவது பழங்குடி மக்களை வஞ்சிப்பதன்றி வேறென்ன? பழங்குடி மக்களின் வாழ்வைச் சீரழிக்கும் கார்ப்பரேட்டுகள் முன் கைகட்டி சேவகம் செய்யும் ஏவலர்களாக காங்கிரஸ், பாஜக போன்ற முதலாளித்துவக் கட்சிகள் எப்போதும் காத்து நிற்கின்றன. இத்தொல்குடிகளின் மீட்பர்களாக ஆயுதம் ஏந்திப் போராடி வரும் மாவோயிஸ்டுகளின் பின்னால் இலட்சக்கணக்கான மக்கள் அணி வகுப்பதில் வியப்பேதுமில்லை.

C:\Users\Chandraguru\Pictures\Arundati Roy\Walking with comrades\4_0982.jpg

தண்டகாரண்யாவில் நடந்திடும் வீரம் செறிந்த போராட்டத்தை இரண்டு இந்தியப் பெண்மணிகள் நேரில் கண்டு கள ஆய்வு மேற்கொண்டனர். ’டில்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ்’ பேராசிரியர் நந்தினி சுந்தர் துணிச்சல் மிகு பயணத்தை மேற்கொண்டு ’The Burning Forest: India’s War in Bastar’ எனும் ஆய்வு நூலை எழுதியுள்ளார். இந்நூலை கல்லூரிப் பேராசியரான தருமி  தமிழில் மொழிபெயர்த்து ’பற்றியெறியும் பஸ்தர்’ என்ற நூலாக கொண்டு வந்துள்ளார். தண்டகாரண்யா காடுகளில் மாவோயிஸ்ட்டு போராளிகளுடன் பயணித்து தான் பெற்ற அனுபவங்களை ‘Walking with the Comrades’ என்று சமூகச் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான அருந்ததி ராய் ஆங்கிலத்தில் எழுதியுள்ள கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான அ.முத்துக்கிருஷ்ணன் ‘தோழர்களுடன் ஒரு பயணம்’ என்ற நூலாக வழங்கியுள்ளார்.

C:\Users\Chandraguru\Pictures\Arundati Roy\Walking with comrades\WhatsApp_Image_2020-11-13_at_13.jpeg

அருந்ததி ராய் எழுதிய அந்த ஆங்கிலக் கட்டுரை நெல்லை  மணோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எம்.ஏ ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு பாடப் புத்தகமாக வைக்கப்பட்டிருந்தது. கடந்த மூன்றாண்டுகளாக பாடத்திட்டத்தில் இருந்து வந்த அக்கட்டுரையை நீக்கச் சொல்லி வலியுறுத்திய ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபியின் மிரட்டலுக்குப் பயந்து பல்கலைக்கழக நிர்வாகம் அதனைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கி அறிவித்திருப்பது மிகப் பெரிய அவலம். பாடத்திட்டம்  குறித்த முடிவுகளை பல்கலைக்கழகத்தின் கல்விக் குழுவில் விவாதித்த பின்னரே எடுக்க வேண்டும். அதற்கான உரிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் துணைவேந்தர் தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களைக் கலாச்சாரக் காவலர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு தொடர்ந்து கருத்துரிமைகளுக்கு எதிராகவும், பல்கலைக்கழகங்களின் சுதந்திரச் செயல்பாடுகளுக்கு எதிராகவும் ஏபிவிபி உறுப்பினர்கள் அடாவடித்தனத்தில் ஈடுபடுவது கல்விச் சூழலைப் பெரிதும் பாதிக்கிறது.

C:\Users\Chandraguru\Pictures\Arundati Roy\Walking with comrades\Arundati Roy & Pitchumani MSU VC.jpg

இதேபோல் பேராசிரியர் ஏ.கே.ராமானுஜன் எழுதிய ’முன்னூறு ராமாயணங்கள்: ஐந்து எடுத்துகாட்டுகளும், மொழிபெயர்ப்பு குறித்த மூன்று சிந்தனைகளும்’ என்ற கட்டுரையை ஆங்கில இலக்கிய மாணவர்களுக்கு பாடத் திட்டத்தில் சேர்த்திருந்த டில்லி பல்கலைக்கழகம் ஏபிவிபியின் எதிர்ப்பால் அந்தக் கட்டுரையை விலக்கிக் கொள்ள நேர்ந்தது வெட்கித் தலைகுனிய வேண்டிய செயலாகும். மும்பை பல்கலைக்கழகத்தின் பி.ஏ ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவர்களின் பாடத் திட்டத்தில் ரோஹிண்டன் மிஸ்டிரி எழுதிய ‘மிக நீண்ட பயணம் (Such a Long Journey) என்ற பல விருதுகளை வென்ற நாவல் இடம் பெற்றிருந்தது. அந்த நாவல் மகாராஷ்டிரா  மாநிலத்தின் சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேயை தவறாகச் சித்தரிப்பதாகச் சொல்லி சிவசேனா நடத்திய போராட்டத்திற்கு அடிபணிந்த மும்பை பல்கலைக்கழக நிர்வாகம் கல்விக் குழுவைக் கூட்டி விவாதிக்காமல் நாவலை பாடத்திட்டத்திலிருந்து விலக்கிக் கொண்ட அவச்செயலும் உயர்கல்வித் துறையில் ஏற்கனவே நடந்தேறியுள்ளது.

C:\Users\Chandraguru\Pictures\Arundati Roy\Walking with comrades\maxresdefault.jpg

அருந்ததி ராய் எழுதியுள்ள ’தோழர்களுடன் பயணம்’ இன்றைய இந்தியாவின் சமூகம், பொருளாதாரம், அரசியலைத் தெரிந்து கொள்வதற்கு அனைத்து இளைஞர்களும் படிக்க வேண்டிய கட்டுரையாகும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆங்கிலத்துறை மாணவர்களுக்காக இக்கட்டுரையைத் தேர்ந்தெடுத்தது சாலப் பொருந்துவதாகவே இருக்கிறது. ‘சின்ன விஷயங்களின் கடவுள் (The God of Small Things)’, ‘மிகுந்த மகிழ்ச்சியின் அமைச்சகம்(The Ministry of Utmost Happiness)’, ’கற்பனையின் முடிவு (The End of Imagination)’, ’முதலாளித்துவம்- ஒரு பேயின் கதை (Capitalism – A Ghost Story)’, போன்ற சிறந்த படைப்புகளை அளித்திருக்கும் அருந்ததி ராய் ’புக்கர் பரிசு’, ’நார்மென் மெய்லர் பரிசு’, சிட்னி அமைதிக்கான பரிசு’, சாகித்ய அகாதமி விருது ஆகியன பெற்றுள்ளார்.  அருந்ததி ராயின்  ’தோழர்களுடன் பயணம்’ கட்டுரையைப் படிக்கின்ற  வாசகர்கள் தண்டகாரண்யா காட்டுக்குள் பயணிக்கும் உணர்வைப் பெறுகிறார்கள். கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக தண்டகாரண்யா காட்டில் தொல்குடி மக்களின் நலன் காக்க இந்திய அரசிற்கு எதிராக மாவோயிஸ்டுகள் நடத்தி வருகின்ற போர் எவ்வளவு நியாயமானது என்பதை வாசகர்களை உணரச் செய்யும் கட்டுரையாகவே, தோழர்களுடன் பயணம் என்ற அந்தக் கட்டுரை இருக்கிறது.

சட்டீஷ்கர் மாநிலத்தின் தண்டேவடா நகரிலிருந்து அருந்ததி ராயின் பயணம் தொடங்குகிறது. தன்னை அழைத்துச் செல்லவிருக்கும் சந்து என்ற மாவோயிஸ்ட் இளைஞனுக்காக தண்டேவடா நகரின் தண்டேஸ்வரி அம்மன் கோயில் வாசலில் அவர் காத்திருக்கிறார். சட்டீஷ்கர் மாநிலத்தில் நிலவிக் கொண்டிருந்த பல முரண்பாடுகளை நகைச்சுவை மிளிர அந்தக் கட்டுரையில் விளக்குகிறார்.

காடு முழுவதிலும் காவல்துறையினர் சிவில் உடையிலும், மாவோயிஸ்ட்டுகள் சீருடையிலும் வலம் வருகிறார்கள். சிறை சூப்பிரண்டெண்ட் ஜெயிலுக்குள் இருக்க, கைதிகள் எல்லாம் வெளியிலே உலாவுகிறார்கள். ஆமாம், அருந்ததி ராயின் பயணம் தொடங்கியிருந்த அந்தச் சமயத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட கைதிகள் தண்டேவடா சிறையிலிருந்து தப்பித்திருந்தார்கள். பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் காவல்நிலையத்தில் பூட்டி வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில், பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மேடைகளில் சுதந்திரமாக முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்திராவதி ஆற்றின் மேற்புறத்திலிருந்த காடு முழுவதும் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டுக்குள்ளும், ஆற்றின் கீழ்ப்புறம் முழுவதும் அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருந்தன. கிராமங்கள் காலியாக இருக்க, கிராம மக்கள் காடு முழுவதிலும் நிறைந்திருக்கிறார்கள். பள்ளி வளாகத்துக்குள் காவல்துறையினர் தங்கியிருக்க, பள்ளிகளுக்குள் இருக்க வேண்டிய குழந்தைகள் பள்ளி வளாகத்துக்கு வெளியே இருந்தனர். இந்த முரண்பாடுகளுக்கு காரணமாக இந்திய ராணுவம் துவங்கியிருந்த ’பசுமை வேட்டை’ (Operation Green Hunt) என்ற நடவடிக்கையே இருந்தது.

அன்றைக்கு ஆட்சியிலிருந்த அரசின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இந்த உண்மையை மறுத்ததோடு, அது ஊடகங்களால் கிளப்பிவிட்ட புரளி என்றார். பசுமை வேட்டை நடவடிக்கைக்காக அரசு கணிசமான நிதியை ஒதுக்கியிருந்ததும், ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் காடு முழுவதும் வலம் வந்ததும் அப்பட்டமான உண்மை என்பதை உலகறிந்தே இருந்தது. கனிமப் பொருட்களுடன் சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பழங்குடி மக்களின் தாயகமாகப் பரவி நின்ற தண்டகாரண்யா, கார்ப்பரேட்டுகளின் கனவுலகமாகவும் இருந்தது முரண்பாட்டின் உச்சமாகும்.

அரசுக்கு எதிரான அந்தப் போருக்கு மாவோயிஸ்ட்டுகள் தலைமை தாங்கியிருந்தாலும், சந்தால், கோந்த், ஒரொன், ஹோ இன மக்கள் காலங்காலமாக அதே கலகத்தை நடத்திய வண்ணமே இருக்கின்றனர்.  காலந்தோறும் தொடர்ந்த போராட்டங்கள் இப்பூர்வகுடிகளை வீரர்களாகவும், தீரர்களாகவும் புடம் போட்டு வளர்த்துள்ளன. சுரங்கங்கள், தொழிற்சாலைகள், பாலங்கள், அணைகள் கட்டுவதற்காக இந்தப் பூர்வகுடிகளை வனப்பகுதிகளிலிருந்து அகற்றும் போதெல்லாம், இதுபோன்ற திட்டங்கள் பழங்குடி மக்களை தேசிய நீரோட்டத்திற்கு கொண்டு வருகின்ற திட்டங்கள் என்ற பசப்பு வார்த்தைகளைச் சொல்லியே ஆட்சியாளர்கள் ஏமாற்றி வருகிறார்கள். எங்கெல்லாம் புற்று நோய் மருத்துவமனையை வேதாந்தா நிறுவனம் கட்டுகிறதோ அல்லது பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி அளிக்கிறதோ அங்கெல்லாம் பாக்ஸைட் சுரங்கத்திற்கான திட்டம் உருவாகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

C:\Users\Chandraguru\Pictures\Arundati Roy\Walking with comrades\Outlook.jpg

சந்துவின் மோட்டார் சைக்கிளில் அருந்ததி ராய் ஏறிக்கொள்ள நீண்ட பயணத்திற்குப் பின் அவர்கள் இருவரும் ஒரு கிராமத்தை வந்தடைகின்றனர். ஆண்களும் பெண்களுமாக இருபது இளைஞர்கள் காவல் பணியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். சீருடை அணியாதிருந்த அந்த இளைஞர்கள் சமீபத்தில் மாவோயிஸ்ட் படையில் சேர்ந்திருக்கிறார்கள் என்று அவர்களை அருந்ததி ராயிடம் சந்து அறிமுகம் செய்கிறான். அவர்கள் கைகளில் ஏந்தியிருந்த துப்பாக்கிகள் அவர்களைக் காட்டிலும் உயரமாகவே இருந்தன. அந்த முகாமில் அன்றிரவு இருபது இளைஞர்களுடன் அருந்ததி ராய் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். அவருக்கான உணவை ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு சந்து விடைபெற்றுக் கொண்டான். அடுத்த நாள் காலை சகோதரி ஒருவர் வருவார் என்றும், அவருடன் அருந்ததி ராய் பயணத்தைத் தொடர வேண்டும் எனவும், தனக்கிடப்பட்ட பணி முடிந்து விட்டதாகவும் அவன் சொல்லிச் சென்றான்.

C:\Users\Chandraguru\Pictures\Arundati Roy\Walking with comrades\arundhati_roy_moist_20100329.jpg

அன்றிரவு அத்துவானக் காட்டில், கட்டாந்தரையில் ஜில்லி எனப்படும்  பாயில் படுத்து இளைஞர் படையுடன் அருந்ததி ராய் உறங்கத் தயாரானார். தன்னுடைய பயணங்களின் போது தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல்களில் இருந்திடும் ஆடம்பர வசதிகளின் நினைவுகள் மேலிட பயணக் களைப்பில் தூக்கம் அவரைத் தழுவுகிறது.

மறுநாள் காலையில் அவரை அழைத்துச் செல்ல கமலா என்ற தோழர் வருகிறார். கையில் பிஸ்டலுடன் வந்திருந்த கமலாவுக்கு வயது பதினேழு இருக்கும். இந்திய ராணுவத்தினர், காவல்துறையினர், சல்வா ஜுடும் என அழைக்கப்படும் தனியார் ராணுவத்தினர் என்று யார் கையில் சிக்கினாலும் தோழர் கமலா பாலியல் வன்முறைக்கு உள்ளாகி கொல்லப்படுவது உறுதி. ஆனால் தோழர் கமலா எந்தச் சலனமுமின்றி புன்னகையுடன் இருந்தது கண்டு அருந்ததி ராய் வியக்கிறார். கமலாவுடன் இணைந்து அடுத்த பயணம் தொடருகிறது. ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் பாதுகாப்புடன் அருந்ததி ராய் மிகப் பெரிய ராணுவ முகாமை வந்தடைகிறார்.

C:\Users\Chandraguru\Pictures\Arundati Roy\Walking with comrades\boy-what-a-smile-comrade-kamla-17-wearing-a-pistol-on-her-hip-also-a-miracle.jpg

தோழர் வேணு என்ற மூத்த தோழரின் தலைமையில் மக்கள் விடுதலை கொரில்லா படையின் (People’s Liberation Gorilla Army- PLGA) ஓரணி முகாமிட்டுள்ளது. தோழர் வேணு ஆந்திராவில் கொண்டபள்ளி சீத்தாராமைய்யா தலைமையில் இருந்த ’மக்கள் போராட்ட குழு’வில் (People’s War Group) இருந்தவர். 1980இல் ஆந்திராவிலிருந்து கோதாவரி ஆற்றைக் கடந்து ரெட் காரிடார் வழியாக தண்டகாரண்யா வந்து சேர்ந்த ஏழு கொரில்லா படைப் பிரிவின் தலைவர். மாவோயிஸ்ட் போராளிகளின் முப்பதாண்டு வரலாற்றை மாவோயிஸ்டுகளின் பார்வையில் தோழர் வேணு சொல்லிச் செல்கிறார்.

பெண்கள் பிரிவிற்குத் தலைமை தாங்கும் தோழர் நர்மதாவுடனான சந்திப்பில் மேலும் சில செய்திகளை அருந்ததி ராய் சேகரிக்கிறார். அப்போது முகாமுக்கு ஒரு துயரச் செய்தி வந்தடைகிறது. நேற்று அருந்ததி ராய் தங்கியிருந்த முகாம் காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி ஐந்து தோழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்களாம்! நேற்றிரவு தன்னுடன் முகாமில் படுத்திருந்த  இளைஞர்களில் ஐவர் இன்று உயிருடன் இல்லை என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைகிறார். மாவோயிஸ்டுகளைப்  பொறுத்த வரை ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், சட்டீஷ்கர் என்று மாநிலத்திற்கிடையிலான பிரிவுகள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அவர்களைப் பொருத்த அளவில் ஆந்திராவில் தொடங்கி தண்டகாரண்யா மலையை நோக்கிய பாதைகள் எல்லாம் அவர்களின் எல்லைக்கு உட்பட்டவைகளே.

தோழர் வேணு பழங்குடி மக்கள் எவ்வாறெல்லாம் வியாபாரிகளால் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற தகவலை அளிக்கிறார். பழங்குடி மக்களின் கடும் உழைப்பால் சேகரிக்கப்படும் பீடி இலை, மூங்கில் போன்ற பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு அந்த வியாபாரிகள் வாங்கிச் செல்கிறார்கள். கூரிய முட்களுடன் இருக்கும் மூங்கில் கம்புகளை வெட்டி தலையில் சுமந்து வந்து கொடுக்கப்படும் இருபது மூங்கில் கொண்ட கட்டுக்கான விலை முப்பது பைசாக்களே! இந்த சொற்ப விலை கொடுத்து மூங்கிலை வாங்குகின்ற பாலார்ப்பூர் பேப்பர் மில் ஈட்டும் லாபம் பல கோடிகளாகும். மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் மரங்களை எளிதில் வெட்டிச் செல்ல முடியாது என்பதால் காடு விரிவடைந்துள்ளது என்பதை வனத்துறையே ஒத்துக் கொண்டுள்ளது. ஆனால் இப்பகுதிகளில் காடுகளைப் பாதுகாப்பதாகச் சொல்லி பழங்குடியினரை காட்டிலிருந்து விரட்ட நடவடிக்கை எடுப்பதும் வனத்துறையினரே.

இந்தியாவின் மிகப் பெரிய ஆபத்து மாவோயிஸ்ட்டுகளே என்று 2005இல் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். காவல்துறையும், ராணுவமும் அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக சல்வா ஜுடும் என்ற தனியார் படையை உருவாக்கிட காங்கிரஸ் எம்எல்ஏ மஹேந்திர கர்மாவை அனுமதித்தன. மஹேந்திர கர்மா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் காட்டின் ரகசியங்களையும், மாவோயிஸ்ட்டுகளைப் பற்றியும் நன்கறிந்தவன். அவனைப்  பயன்படுத்தி மாவோயிஸ்ட்டுகளை பழிவாங்க நினைத்தனர். சல்வா ஜுடும் உறுப்பினர்கள் கிராமங்களுக்குள் புகுந்து பெண்களை பாலியல் வன்முறை செய்தும், வீடுகளைக் கொள்ளையடித்தும், தீயிலிட்டும், கொலைவெறித் தாக்குதல் நடத்தியும் அராஜகம் செய்தனர். ‘கிராமங்களைத் திறம்பட நடத்துதல்’ (Strategic Hamleting) என்று  சொல்லி சல்வா ஜுடும் தேவையை  ராணுவம் நியாயப்படுத்தியது மிகப் பெரிய மோசடியாகும்.

ஒரு முறை சட்டீஷ்கர் காவல்துறை ’ராணி பொடிலி கன்னியாஸ்திரிகள் ஆஸ்ரம’த்தில் முகாமிட்டு விடுதியில் தங்கியிருந்த பெண்களைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு மாவோயிஸ்டுகள் மீது தாக்குதல் நடத்தியது. பெண்களுக்குப் பாதிப்பேதும் ஏற்படாமல் மாவோயிஸ்டுகள் காவல்துறையைத் திறம்பட எதிர்கொண்டு விரட்டி அடித்த நிகழ்வையும் தோழர் வேணு நினைவு கூர்ந்தார். இந்திய அரசு மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கு விதவிதமான படைகளை அனுப்பியது. சட்டீஷ்கர் தனிப்படை, மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லை பாதுகாப்பு படை, இந்தோ-திபெத் எல்லைப் படை, கிரேஹவுண்ட்ஸ், ஸ்கார்ப்பியன்ஸ், கோப்ராஸ் என்ற அனைத்து விதமான படைகளை அனுப்பியும் தோல்வியையே அது சந்தித்தது என்ற விவரத்தை தோழர் வேணு கூறினார்.

C:\Users\Chandraguru\Pictures\Arundati Roy\Walking with comrades\download (2).jpg

ஆண்டுதோறும் மாவோயிஸ்ட்டுகள் சிறப்பாகக் கொண்டாடி வருகின்ற ’பூம்கல் கலக’த்தின் நினைவு நாள் நிகழ்வில் அருந்ததி ராய் கலந்து கொள்கிறார். 1910இல் ஆங்கில ஆட்சியாளர்களுக்கு எதிராக கோயா இனத்தவர்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டமே ‘பூம்கல் கலகம்’ ஆகும்.

மாவோயிஸ்ட்டுகளின் ’மக்கள் நீதிமன்ற’த்தில் தீர்ப்புகள் எவ்வாறு நியாயமாக வழங்கப்படுகிறது என்பது குறித்தும் அருந்ததி ராய் அறிந்து கொள்கிறார். தொடக்க காலத்தில் மாவோயிஸ்ட் ஆண்கள் மத்தியில் ஆணாதிக்கப் போக்கு நிலவியதையும், பெண்களின் தொடர் போராட்டங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதையும் தோழர் கமலா விளக்குகிறார்.

C:\Users\Chandraguru\Pictures\Arundati Roy\Walking with comrades\Arundhati-book-Graphic_eiqkro.jpg

பயணத்தின் இறுதி நாளில் அருந்ததி ராய்க்கு மிகச் சிறந்த வழியனுப்பு விழாவை ஏற்பாடு செய்கிறார்கள். ஃப்ய்ஸ் அகம்மது ஃப்ய்ஸ் எழுதிய ’ஹம் தேக்கேங்கே’ (We will Witness the Day) என்ற பாடலைப் பாடுகிறார்கள். ”மகுடங்கள் வீழப்போகின்றன! சிம்மாசனங்கள் கவிழப்  போகின்றன! நாம் அதைப் பார்க்கப் போகிறோம்!” என்று உணர்ச்சி மேலிட பாடி அவரை வழியனுப்புகிறார்கள். சந்து மீண்டும் வருகிறான். அவனுடைய மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டு அனைவரிடமும் விடைபெறுகிறார் அருந்ததி ராய்.

பெ.விஜயகுமார்

—————————————- 


2 thoughts on “நூல் அறிமுகம்: அருந்ததி ராயின் ‘தோழர்களுடன் பயணம்’ (Walking with the Comrades) கட்டுரை – தோழமையின் அடையாளம்! | பெ.விஜயகுமார்”
  1. இயற்கையை பாதுகாப்பதாகவும், நேசிப்பதாகவும் சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் எத்தனை பேர் இத்தகைய பயணத்துக்கும், அனுபவத்துக்கும் தயாராக இருக்கிறார்கள். இயற்கையை நேசிப்பதாக சொல்லிக் கொள்ளும் இவர்கள் கார்ப்பரேட்களின் கைக்கூலிகளே ; ஆதிவாசிகளை அவர்களின் இருப்பிடத்திலிருந்து விரட்டியடித்துவிட்டு, இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் கும்பலே இவர்கள்; ஆதிவாசிகளால் காடுகள் பாதிக்கப்படுகின்றன என்ற பாட்டு படிக்கும் இவர்கள், எத்தனை கார்பொரேட் சாமியார்களின் காடழிப்புக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்கள். எத்தனை வனவிலங்குகளின் வாழ்விடங்களை அழித்தொழித்துள்ளார்கள் இந்த கார்பொரேட் நிறுவனங்கள்/சாமியார்கள். இவைகளை தோலுரித்துக் காட்டும் ஒரு புத்தகத்தை ஒரு பல்கலையின் பாடத் திட்டத்தில் விட்டுவைப்பது என்பது கார்பொரேட் கண்களை உறுத்தத்தான் செய்யும். அதன் விளைவுதான் இந்த நீக்கத்தின் காரணம் என்பது வெட்ட வெளிச்சம். பேராசிரியரின் இந்த புத்தகம் குறித்த பார்வையும், புத்தகம் பாடத் திட்டலிருந்து நீக்கப்பட்டதின் பின்புலம் குறித்த விளக்கங்களும்

  2. நன்றி. வேல்முருகன்! கட்டுரையின் மையப்பொருள் குறித்து மிகச் சரியான விளக்கத்தைக் கொடுத்துள்ளீர்கள். நீங்கள் குறிப்பிடுவது போல் சூழலியல் பாதுகாவலர்கள் அக்கறையுடன் செயல்பட வேண்டிய தருணமிது. காடுகளைப் பாதுகாப்பது மலைவாழ் மக்களால் மட்டுமே முடியும். இரும்பு, பாக்ஸைட் போன்ற கனிமங்களை வெட்டி எடுத்து லாபம் அடையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பேராசையால் காடுகள் பெருமளவில் அழிக்கப்படுகின்றது. இதனைத் தடுத்த நிறுத்த வேண்டிய அரசு அவர்களுக்குத் துணைபோவது மிகப் பெரிய அவலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *