வந்தனா சொனால்கர் (தமிழில் ம.சுசித்ரா) எழுதிய “நான் ஏன் இந்துப் பெண் அல்ல (கட்டுரைகள்)” புத்தகம் | Wandana Sonalkar's Naan Yen Indhu Pen Alla Tamil Book Review | அன்புச்செல்வன் | www.bookday.in

வந்தனா சொனால்கர் (தமிழில் ம.சுசித்ரா) எழுதிய “நான் ஏன் இந்துப் பெண் அல்ல (கட்டுரைகள்)” – நூல் அறிமுகம்

“நான் ஏன் இந்துப் பெண் அல்ல (கட்டுரைகள்)” – நூல் அறிமுகம்

தோழர்கள் பலரின் பரிந்துரையின்படியும் அப்போதைய சிற்றிதழ் வாசிப்பின்வழியும் அறியவந்து தொண்ணூறுகளின் இறுதியில் காஞ்சா அய்லய்யா எழுதிய ‘நான் ஏன் இந்து அல்ல’ நூலை வாசித்தேன். தனது சொந்த அனுபவங்கள் மூலமும் கோட்பாடுகளின் வழியும் – இந்துத்துவம் கட்டமைக்கும் ‘இந்து’ என்பது தான் அல்லவென்றும், தான் கால்நடைகளை மேய்க்கும் குரும்பர் என்ற இனக்குழுவைச் சேர்ந்தவராக மட்டுமே உணர்வதாகவும், எவ்வாறு இந்து மதம் என்று சுட்டப்படுவதே பார்ப்பனீய ஆதிக்க சாதியினரின் மதமாக உள்ளதென்றும், பெரும்பான்மையான ‘தலித் பகுஜன்’ (பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் ஆதிவாசியினர்) மக்கள் பின்பற்றும் பண்பாடும் கலாச்சாரமும் வேறானதென்றும், இந்துமயமாக்கலுக்கு ஒரு சிறந்த மாற்று ‘தலித்மயமாக்கல்’ என்றும் முன்வைத்த நூல் அது. ‘தலித் – பகுஜன்’ என்ற சொல்லாட்சி இந்நூலின் வழியாகவே எனக்குப் பசுமரத்தாணி போல பதிந்துவிட்டது.

அந்நூல் பல பதிப்புகள் வெளியாகி பரவலான வாசிப்புக்குள்ளாகி தொடர்ச்சியான ஒரு சமூக உரையாடலை முன்னெடுத்து இந்துத்துவ அரசியல் குறித்த விமர்சன அறிவுச் சூழலில் கவனம் பெற்ற இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், வலதுசாரியும் காங்கிரஸ் பிரமுகருமான சசி தரூர் ‘நான் ஏன் இந்து’ என்ற நூலை 2018ல் வெளியிட்டார். அதில் தான் சார்ந்த நாயர் சாதியானது சூத்திர வருணத்தைச் சார்ந்தது என்பதை மறைத்ததும், நம்பூதிரிகளுக்கும் நாயர்களுக்குமான உறவு முரண்களை வெகு சவுகரியமாக சசி தரூர் பேசாமல் விட்டதும் உள்ளிட்ட பல விசயங்கள் விமர்சனத்துள்ளாகின. அந்நூல் வெளிவந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தனா சொனால்கர் எழுதிய ‘நான் ஏன் இந்துப் பெண் அல்ல’ என்ற இந்நூல் வெளிவந்தது. ஓராண்டு இடைவெளியிலேயே ஆங்கிலத்தில் வெளியான அந்நூலின் தமிழ்ப்பெயர்ப்பு 2022-ல் காலச்சுவடு பதிப்பகம் வழியாக ம.சுசித்ராவின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக இந்திய ஒன்றியத்தில் ஆட்சி செய்ய நேர்ந்ததும் சங் பரிவாரங்களின் வகுப்புவாத பிளவுபடுத்தும் – ஒதுக்கும் அரசியல் மேலும் மேலும் பல்வகை சூழல்களில் வளர்ந்தபடியே இருப்பதுமான ஓர் இருள் சூழ்ந்த அவநம்பிக்கையான காலகட்டத்தில் இந்நூலின் வரவு முக்கியத்துவம் கொண்டதாகிறது. இத்தகைய சூழலே தன்னை இந்நூலை எழுத ஊக்கியதாகவும் வந்தனா குறிப்பிடுகிறார்.

தான் ஏன் இந்துப் பெண் அல்ல என்பது தொடர்பாக இரண்டு முதன்மையான அளவுகோல்களை அவர் நூலில் முன்வைக்கிறார்:-

1. புதிய ‘அரசியல்மயமான இந்து மதம்’ என்பது வலதுசாரி பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளித்துவ ஆதரவு பெற்றதும் அதற்கு சேவகம் செய்யக்கூடியதுமாகும். இந்து மதத்தின் மூர்க்கத்தனமான இந்த அவதாரத்தை எதிர்ப்பதற்காக.

2. ‘இந்துத்துவத் திட்டம்’ தலையெடுத்து நடைமுறைப்படுத்தப்படுகையில், முதலில் பாதிக்கப்படுவது இந்து சமூகத்தில் பெண்களாகவே இருக்கின்றனர். பொது இடத்தில் தலித் பெண்களை நிர்வாணமாக்கி கூட்டுப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிக் கொன்று போட்ட கயர்லாஞ்சி வன்கொடுமை சம்பவம், காஷ்மீர் சிறுமி ஆசிஃபா மீதான கூட்டு வல்லுறவு கொடுமையும் அதை செய்த கொடூரன்களுக்கு ஆதரவாக பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் பேரணி நடத்தியது, குர்மீஹர் கவுர் ‘எனது தந்தையை பாகிஸ்தான் கொல்லவில்லை – போர்தான் கொன்றது’ என்ற அட்டையை போருக்கு எதிரான நோக்கில் ஏந்தியதற்காக தேசத்துரோகி என்ற கொடூரமான வசை பாடிய நிகழ்வு, சபரிமலை அய்யப்பன் கோயிலில் மாதவிடாய் ஏற்படும் வயதுடைய பெண்களின் நுழைவு தடுப்பு போன்ற பல சம்பவங்களை ஆசிரியர் முன்வைக்கிறார். இந்து மதத்துக்குள் பொதிந்திருக்கும் இத்தகைய சாதிய ஆணாதிக்கத்தை எதிர்ப்பதற்காக.

நூல் நெடுக ‘இந்து’ என்ற சொல்லுக்கு ‘உயர்சாதி இந்து ஆண்’ என்றே ஆசிரியர் அழுத்தம் கொடுத்து அவ்வாறே வாசிக்குமாறு வாசகர்களையும் கேட்டுக்கொள்கிறார். இந்த நூலை அவர் எழுதப் போந்தமைக்கான முதன்மைக் காரணம் இதிலேயே நமக்குத் தெரிந்து விடுகிறது.

‘இந்துப் பெண்’ என்ற தன்னிலை வெறும் உடலாகவே இந்து மதத்தில் பார்க்கப்படுவதாகவும் அந்த உடலும் ‘தீட்டு’ என்ற கோட்பாட்டின் வழியே இந்து பொதுப்புத்தியில் கருத்தமைவாக்கப்படுவதாகவும் வந்தனா கூறுகிறார். பெண்ணின் மாதவிடாய் நாட்களிலும் பேறுகாலத்திலும் குடும்பத்தின் புனிதத்தைத் தீட்டாக்கிவிடும் பெண்ணின் உடலானது இந்து ஆணின் ‘உயரிய ஒழுக்கமான பிரம்மச்சரியத்தை’ சிதைக்கும் அழிவு சக்தியாகவும் கட்டமைக்கப்படுவதை எடுத்துவைக்கிறார்.

அதே சமயம், இவ்வாறு ‘தீட்டாக’ ஒதுக்கப்படும் பெண்தான் – உள்முரணாக – அதே மதத்தின், மதத்தின் அலகான சாதியின், சாதியின் அலகான குடும்பத்தின் மாண்பைத் தூக்கிச் சுமக்கவும் நிர்ப்பந்திக்கப்படுகிறாள் என்றும் முன்வைக்கிறார். அதுவே இந்து மதத்தின் பெரும் சூழ்ச்சி என்பதை நூல் நெடுக பல சொந்த அனுபவங்கள் மற்றும் நிகழ்வுகள் வழியாக எடுத்துரைக்கிறார்.

மனு ஸ்மிருதி விதித்துள்ள பெண்ணுக்கான ஒழுக்க நியதிகள் மற்றும் ஆணுக்கான கடப்பாடுகளை ஒழுகி நடக்கும்பட்சத்தில் அக்குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் என்ற கருதுகோள் இந்துமதத்தில் கட்டுப்பட்ட அனைத்து சாதியினருக்கும் பரவலாக்கி ஒரு கருத்தியலாக – நவீன இலக்கியங்கள் வழி, தொலைக்காட்சித் தொடர்கள் வழி, திரைப்படங்கள் வழி ஆதர்சமான இந்துக் குடும்பம் என்பது பிராமணக் குடும்பமாகவே காட்டப்பட்டு வந்துள்ளது – எவ்வாறு பொதுப்புத்தியில் கட்டமைக்கப்படுகிறது என்பதை ‘இந்துக் குடும்பம்’ என்ற பகுதியில் விரிவாக விளக்குகிறார்.

இந்தியாவில் ‘இந்துத்துவம்’ எவ்வாறு உருவாகி வந்தது – வந்துள்ளது என்பதையும், இந்துத்துவத்தின் வழியே அதன் இலக்கான ‘இந்து ராஷ்ட்ரம்’ எவ்வாறு உருவாக்கப்பட்டு வருகிறது என்பதையும், அதற்கு ‘மற்றமை’யை விலக்குதல், ‘பிறரை’ எதிரியாகக் கட்டமைத்தல், அதன் மூலம் ‘மற்றமைக்கு’ எதிராக ஒரு போர்ச் சூழலை – வெறியை – கட்டமைத்து, அது எவ்வாறு தேசபக்தியுடன் இணைக்கப்படுகிறது என்பதையும் இரண்டாம் இயலில்; விரிவாக எடுத்துரைக்கிறார். இங்கு இந்துத்துவத்தின் ‘மற்றமை, பிறர்’ என்பது மதத்துக்கு வெளியே உள்ள இசுலாம், கிறித்துவமாகவும் மதத்துக்கு உள்ளேயே விலக்கிவைக்கப்பட்டுள்ள பெண்களாகவும் தலித்துகளாகவும் விளங்குவதையும் தேர்ந்த அரசியல் பார்வையுடன் விவரிக்கிறார்.

2016-ல் வடிவமைக்கப்பட்ட பாரதத் தாய் கூட உயர்சாதிப் பெண்ணின் சாடையில், சண்டைக்குத் தயாராக சிங்கத்தில் மீது வீற்றிருப்பதாகவும் பின்னால் இந்திய வரைபடமும் தேசியக் கொடியும் காணப்பட்டதாகவும், அப்படம் பெரிய பிரம்மாண்ட அளவுகளில் மும்பை போன்ற பெருநகரங்களின் வீதிகளில் காண நேர்ந்ததைக் குறிப்பிடும் ஆசிரியர், 2015ல் சத்தீஸ்கர் மாநிலத் தலைநகரமான ராய்ப்பூரில் கண்ட மிக உயரமான கம்பத்தில் பறந்த பெரிய தேசியக் கொடியின் பிரம்மாண்டமும் ‘பெரியது உயர்ந்தது சிறந்தது’ என்கிற வகையில் தேசபக்தியை ‘ஆண்மையாகப்’ பறை சாற்றுவதாக உள்ளது எனக் குறிப்பிடுவது, எவ்வாறு இந்துத்துவம் இந்து தேசியத்தை ஆண் மைய நோக்கில் கட்டமைக்கிறது என்பதை விளக்குவதாக உள்ளது.

இராமாயணம், மகாபாரதத்தின் கீதை போன்ற புராணங்கள் எவ்வகையில் ஆண் மைய இந்துத்துவத்தைக் கட்டமைக்கத் துணை போகின்றன என்பதையும், 2018 பீமா – கோரேகான் தலித் நினைவு நாள் நிகழ்வை பிராமணர்கள் மூலம் கலவரமாக்கி தலித் நோக்கிலான வரலாற்று நிகழ்வு என்கிற உண்மையை திரித்து, தீவிரவாத ‘நகர்ப்புற நக்சல்கள்’ என்ற கதையாடலை கட்டமைத்து பல இடதுசாரி சமூகப் போராளிகள் கைது நடவடிக்கையாக சங்பரிவார அரசுகள் மாற்றியதையும் விவரிக்கும் வந்தனா, அம்பேத்கர் பிறந்தநாளான டிசம்பர் 6ல் பாபர் மசூதி இடிப்பு, 1974 மே 18 மற்றும் 1998 மே 11 புத்த பூர்ணிமா நாளன்று பொக்ரான் அணு ஆயுதச் சோதனைகள் நடத்தியது (தலித்துகள் அண்ணல் அம்பேத்கர் தலைமையில் பெருமளவில் பவுத்தத்துக்கு மதம் மாறியதை இங்கு நினைவு கூர்தல் வேண்டும்), 1994 சனவரி 14 அன்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராட்வாடா பல்கலைக்கழகம் என பெயர் மாற்றி அன்றைய தினம் பொது விடுமுறை விடுத்தது (மகர சங்கராந்திக்கு இந்துக்கள் தாலி மாற்றி வழிபட்டு கொண்டாடுவதற்கு வசதியாகவும் தலித்துகள் பெயர் மாற்றத்தைக் கொண்டாடவும் மேற்கொண்ட மடைமாற்று அரசியல்) போன்ற நிகழ்வுகளில் இந்துத்துவம் மேற்கொண்ட நாட்காட்டி அரசியலையும் தோலுரிக்கிறார் ஆசிரியர்.

இந்து மதத்தின் – இந்துத்துவத்தின் – அடிப்படை அலகாக இந்துக் குடும்பமே விளங்குகிறது. அந்த இந்துக் குடும்பத்தை மாதிரியாகக் கொண்டே இந்து மைய சமூகமும் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. ஒரு மாணவன் தனது வகுப்பில் படிக்கும் சக மாணவியிடம் முறைகேடாக நடந்து கொள்கிறான் எனில், அவனது சகோதரியிடம் இப்படி யாரேனும் நடந்து கொண்டால் அவனுக்கு எப்படி இருக்கும் என்றுதான் உடனடியாகக் கேட்கப்படும். மாறாக, எல்லாப் பெண்களுக்கும் அவன் மரியாதை கொடுக்க வேண்டியது அவசியம் என்பதால் அவனது நடத்தை தவறென்றோ, அவனைப் போலவே அப்பெண்ணும் சக கல்லூரி மாணவி என்றோ அவனிடம் சொல்லப்படுவதில்லை. தொடர்பேயில்லாமல், சகோதரி, தாய் என்ற குடும்பசார் உறவுகளின் அடிப்படையிலேயே குடும்பம் சாராத பொது வெளிகளிலும் நியதிகள் இந்து தர்மத்தில் உண்டாக்கப்படுகின்றன என்பதை அம்பேத்கர் கூற்றின்வழியே நிறுவுகிறார் வந்தனா.

அன்றாட நடவடிக்கைகள், சடங்கு சம்பிரதாயங்கள் வழியே சாதியத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களாக இந்துமதத்தில் – இந்துக் குடும்பத்தில் – பெண்களே இருக்கிறார்கள். எப்படி சாதியத்தின் எல்லை மீறலைக் கண்காணிக்க இடைநிலைச் சாதியினரை ‘சேனை’களாக பார்ப்பனீய ஆதிக்கசாதி இந்துத்துவம் நியமிக்கிறதோ, அதே போல், ஆணாதிக்கச் சமூகத்தின் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பு அந்தந்தக் குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் மீதே இந்து மதத்தில் திணிக்கப்படுகிறது. சாதியும் ஆணாதிக்கமும் எப்படி இயைந்து வேலை செய்கின்றன என்பதை வந்தனா சொனால்கர் நூலில் குறிப்பிடுவது கவனப்படுத்தப்பட வேண்டிய கருதுகோளாகும். அதன்படி, நாங்கள் எங்கே கலவரம் செய்கிறோம்? எல்லாம் இடைநிலைச் சாதியினர்தான் என்று உயர்சாதியினரும், பெண்களுக்கு பெண்களே எதிரி என்று ஆண்களும் ‘முற்போக்கு முகமூடி’ அணிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது.

கிறித்துவம், இசுலாம் போன்ற மதங்களும் நல்லது கெட்டதைத் தீர்மானிக்கும் திறனற்றவர்களாகத்தான் பெண்களைக் கருதுகின்றன என்று ஆசிரியர் நூலின் சில இடங்களில் குறிப்பிட்டாலும், இந்துத்துவ அரசியலின்பால் ஏற்பட்ட வெறுப்பினால் பல இடங்களில் மேற்படி ஆபிரகாமிய மதங்களில் பெண்களின் நிலை ஒப்புநோக்குங்கால் பரவாயில்லை என்ற தொனியே மேலோங்கித் தெரிகிறது. என்னைப் பொருத்தமட்டில் எல்லா மதங்களிலுமே பெண்களின் நிலை சமத்துவமின்மையின் அடித்தளத்திலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதே ஆகும். அதற்கான ஸ்தூலமான எடுத்துக்காட்டுகளாக – இலக்கிய உலகில் – தமிழில் பாமா, சல்மா ஆகியோரின் பிரதிகளையும் சர்வதேச அளவில் தஸ்லிமா நஸ்ரின் போன்றோரின் பிரதிகளையும் கைக்கொள்ளலாம். இசுலாமை அரசு மதமாகக் கொண்ட சில நாடுகளில் பெண்களின் நிலை நெகிழ்வுத்தன்மையுடன் தாராளப் போக்குடனும் விளங்குவதாக ஆசிரியர் கூறுவதும் விவாதத்துக்குரியது.

வெறும் கருத்தியல்கள், கோட்பாடுகள் வழியாக மட்டுமின்றி தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களின் வழியே தான் ஏன் இந்துப் பெண் இல்லை என்ற நிலைக்கு வந்துள்ளதை விளக்குகையில் அது இன்னும் நமக்கு நெருக்கமாகவும் ஆழமாகவும் பதிந்து விடுகிறது.

‘சந்திரசேனிய காயஸ்தா பிரபு’ என்ற மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பெருநகரம் சார்ந்த பெரும்பாலும் கல்வியறிவு பெற்ற உயர்சாதியைச் சேர்ந்த பெண்ணாக இருந்து – அதுவும் அதே சாதியைச் சேர்ந்த பால்தாக்கரே போன்றோர் ‘சிவசேனா’ என்ற இந்துத்துவ அமைப்பை உருவாக்கி நிர்வகித்து வரும் நிலையிலும், ‘கிட்டத்தட்ட பிராமணர்கள் மாதிரி’ என்ற தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அந்தச் சாதியின் இன்றைய காலகட்டத்தில் – அந்தச் சாதிக்கே உரிய சில சிறப்பு அனுகூலங்களைப் பெற்ற வாழ்சூழ்நிலையை எந்த ஒளிவுமறைவுமின்றி ஒத்துக்கொண்டு, ஆனாலும் ஒரு பெண்ணாகத் தனக்கு ஏற்கமுடியாத அமைப்பாக இந்து மதத்தைத் தான் கருதுவதை தன் அனுபவங்களின்வழி நேர்மையாக முன்வைத்துள்ள வந்தனா சொனால்கரின் இம்முயற்சியை நாம் பாராட்டியாக வேண்டும். அதே போல், மொழிபெயர்ப்பு என்ற தொனி எங்கும் தோன்றிவிடாத வகையில் வாசிக்க இலகுவாக மொழிபெயர்ப்பை மேற்கொண்டுள்ள ம.சுசித்ராவுக்கும் பாராட்டுகள்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:நான் ஏன் இந்துப் பெண் அல்ல (கட்டுரைகள்)
ஆசிரியர்:வந்தனா சொனால்கர் (தமிழில் ம.சுசித்ரா)
வெளியீடு:காலச்சுவடு பதிப்பகம்
விலை:₹.200
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 அன்புச்செல்வன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *