ஆய்வு செய்ய விரும்பு – ஆயிஷா. இரா. நடராசன்

ஆய்வு செய்ய விரும்பு – ஆயிஷா. இரா. நடராசன்



நீங்கள் பொறியியல் பட்டதாரியா. இயற்பியல்  வேதியியல்  உயிரியல் மருத்துவம் அல்லது இன்று கல்லூரியில் அறிமுகமாகி இருக்கும் எத்தனையோ புதுத்துறைகளில்  ஒன்றில் அறிவியல் பட்டம் பெற்றவரா. உங்களில் சிலர் முதுகலை அறிவியல் படித்து வரலாம் அல்லது படிப்பு போதும் என்று ஆசிரியராகவோ வங்கியோ ஓட்டலோ கிடைத்த வேலைக்குபோய் விட்டவரா நீங்கள் எது எப்படியோ பள்ளியில் தொடங்கி கல்லூரி முடிக்கும் வரை அறிவியல் கற்றுவிட்டீர்களே .

  1. உங்களுக்கு என்று வீட்டின்  மூலையில் ஒரு ஆய்வு மேசை உள்ளதா?
  2. அறிவியல் சம்பந்தமான இதழ்கள் (ஜெர்னல்ஸ்) என்று வாங்கி வாசிக்கும்   
      பழக்கம் உண்டா?
  3. வீட்டில் மிக்ஸி முதல் மின் விசிறி வரை பழுதானால் சரிசெய்ய முயற்சிக்க
      உடைந்த பொருளை பத்தவைக்க ஒரு அறிவியல் (உங்கள் சொந்த) டூல்ஸ்
      பாக்ஸ் உள்ளதா?

மேற்கண்ட எல்லா கேள்விகளுக்குமே இல்லை என்பதே இந்தியாவில்  தொன்னூற்றி ஒன்பது  சதவிகித அறிவியல் பட்டதாரிகளின்  பதிலாக உள்ளது. தபால்தலை சேகரிப்பது போல டிகிரி வாங்கியவர்களே அதிகம். ரயிலில்  பணம் செலுத்தினால் டிக்கெட் தருவார்கள். கல்லூரியில் பணம் செலுத்தினால்  பயிற்சியின் முடிவில் பட்டம் தருவார்கள்.

பெரும்பாலும் ஆய்வுசெய்வது என்றால் அது முனைவர் பட்டம் வாங்க நடக்கும் ரொம்ப கஷ்டமான வேலை என்றே பலரும் கருதுகிறார்கள். ஆய்வுசெய்து என்பது ஒரு கம்பெனி வேலை. அல்லது நம் சூழலில் பெரும்பாலோர் நம்புவது ஆய்வுசெய்வது அமெரிக்கா போன்ற அயல்நாடுகளில் நடப்பது அச்சிட 2000 வருடம் முன் பயன்பட்ட இந்தியன் இங்க் முதல் கல்லணை கட்ட பயன்பட்ட தண்ணீரில் கரையாத நேனோ களிமண் வரை நமது பாரம்பரியமே ஆய்வு செய்ய விரும்பிய  ஒன்று என்பதற்கு  சாட்சிகள் அதிகம். ஆனால் அறிவியலின் பங்கேற்பாளர்களாக இல்லாமல் வெறும் நோக்கர்களாக  நுகர்வோர்களாக அறிவை பயன்படுத்தும் அவசியமே  இல்லாத வேலைக்கு போகும் இயந்திரங்களாக நம் கல்வியும் கலாச்சாரமும் நம்மை கும்பலில் ஒருவராக்கி வீழ்த்திவிட்டதே உண்மை. ஆனால் எல்லாரும அப்படி அல்ல என்பதற்கு சாட்சிகள் பல உண்டு. 

ஆய்வு மனம் என்பதை புரிந்துக்கொள்ள அந்த சாட்சியங்களை எடுத்து முதலில் பார்ப்போம் . காவ்யா விக்னேஷ் தனது 12 வயதில் தேனீக்களை காப்பாற்றும் ரோபோ ஒன்றை செய்து டென்மார்க் ரோபா-சவால்  நிகழ்வில்  2017ல் முதலிடம் பெறுகிறார். அவநீதன்  தனது சாதாரண சைக்கிளை சோலார்-டூவீலர்  ஆக்கி- ஒரு ஆள் அமர்ந்து செல்லும் மணிக்கு 20 கிமீ வேகத்தில்  செல்லும் மின் மோட்டார் (தானே) செய்து பொருத்தி ஐரோப்பிய  இன்னோவேட்டர் மீட்டில் 17 வயதில் அசத்துகிறார்.  காவ்யா விக்னேஷ் பெங்களூர்காரர். அவநீதன்  ஹரியானாவை சேர்ந்தவர் மதுராவை சேர்ந்த சிகாந்தோ மண்டல் – தானியங்கி குப்பை அள்ளும் இயந்திரம் ஒன்றை குப்பையில் வீசப்பட்ட பொருட்களை கொண்டே உருவாக்கி  தன் 16 வது வயதில் குஜராத் அரசுக்கு யோசனை தெரிவித்து அங்கே நகராட்சிகளில் அறிமுகம் செய்கிறார்.

எல்லாமே சிறார்கள் என்கிறீர்களா. அதுதான் இல்லை. சித்தார்த்தா ராய் 67 வயது இளைஞர். உயிர்வேதியியல் மருந்துஇயல் தொடர்பான 16 கண்டுபிடிப்புகளின் உரிமம் வைத்திருக்கிறார்.  பி.எஸ். ராகுல் பிரியன் 54 வயது . நம் மின்விசிறி ரெகுலேட்டர் முதல் கார் குளிர்சாதன அமைப்பின் பிராண வாயு இண்டிகேட்டர் வரை ஆறு தொழில் நுட்ப உரிமங்கள். இத்தனைக்கும்  பி.எஸ். ராகுல பிரியன் படித்தது பொறியியல் அல்ல கணிதம். அஜய் குமார் சூட்-70வயது , நேனோ தொழில் நுட்பத்தில் மொத்தம் ஏழு கண்டுபிடிப்புகளின் உரிமம் பெற்றவர். பெங்களூர்காரர். சையது சாதிக் இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். நம் ஊட்டியில் வசித்து வரும் 62 வயது இளைஞர். ஆறு மொழிகளில் எந்த மொழியில் பேசினாலும் அப்படியே தட்டச்சு செய்யும் கணினி மென்பொருள் ஆப் ஒன்றை அறிமுகம் செய்து அசத்தி இருக்கிறார்.

No description available.

நம் இந்தியாவில் இப்படி ஒரு பட்டாளம். அதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது. அது சரி ‘ஆய்வு செய்ய விரும்பும் ஒருவர் அதில் வெற்றி அடைய என்ன செய்யவேண்டும் அதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் ஏதேனும் இருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம். ஏனெனில் எதற்கெடுத்தாலும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது இப்போது ஃபேஷன். சமீபத்தில் பணம் இருந்தால் செலவு செய்வது எப்படி. வழிகாட்டு நெறிமுறைகள். சுவையான வெற்றிலைபாக்கு போடுவது எப்படி வழிகாட்டு நெறிமுறைகள் என யூ டியூபில் – எல்லாவற்றுக்கும் வந்துவிட்டது. ஆனால் அதில் ஆபத்துகளும் அதிகம். வீட்டில் விதவிதமாக சமைத்து (யூ-டியூப்) உணவாளி ஆக்கி டாக்டரிடம் போகிறவரில் இருந்து பிரசவம் கூட யூ-டியூப் வழிகாட்டும் நெறிமுறைபடி பார்த்து மரணம் வரை போகிற மாமனிதர்கள் இன்று அதிகம்.

ஆய்வு செய்வதற்கு அதுமாதிரி வழிகாட்டு நெறிமுறைகள் என எதுவும் கிடையாது. கொஞ்கம் ஆர்வம் அதற்கான டூல்ஸ், மற்றும் நேரம் இருந்தால் போதும் என்பது ஒரு சாரார் கருத்து நேர்மறாக முறைப்படி செய்தால் மட்டுமே அது ஆய்வு. இல்லையேல் ஏற்க முடியாது என்று மற்றொறு சாராரும் சொல்கிறார்கள். நாம் நமது மதிய உணவு சாப்பிடுவதோடு ஒப்பிடலாம் . முதலில் சாம்பார் சாதம், அடுத்தது ரசம் சோறு, பிறகு இறுதியாக மோர் ரைஸ் என்று  ஒரு படிநிலை முறைபடி சாப்பிட்டாலும் அது உணவு தான். கலந்த சோறு வடைகறி என புசித்தாலும் அது உணவுதான் அதுபோலவே இருவகை ஆய்வர்கள் இருக்கிறார்கள்.

‘முழுசாப்பாடு’ ஆய்வர்கள் கண்டுபிடிப்பு வேறு ‘வடைகறி’ ஆய்வர்கள் கண்டுபிடிப்பு வேறு ஆனால் என்னைப் பொறுத்தவரை இருவருமே ஆய்வர்கள் தான் . ஆங்கிலத்தில் கண்டு அடைதல்- டிஸ்கவர் என்று அழைக்கப்படுகிறது. ஏற்கனவே இருப்பதை இவர்கள் கண்டு அடைந்து வெளியே கொண்டு வருபவர்கள். நமது டி.என்.ஏவின் கட்டுமானம் வெள்ளை காக்கா அது எங்கே எப்படி வாழ்கிறது என்று வெளி கொணர்வது இப்படி கண்டு அடைபவர் உலகம் உள்ளது.

கண்டுபிடிப்பவர் என்பதற்கு இன்வெண்ட் எனும் சொல் ஆங்கிலத்தில் பயன்படுகிறது. லத்தீன் மொழியில் இன்வையர் என்றால் புதிதாக ஒன்றை உருவாக்குதல். தொலைக்காட்சி, வானொலி கைபேசி உட்பட கருவிகளை கண்டுபிடிப்பது, அல்லது தொலைநோக்கி, சாட்டிலைட், காப்பி போடும்  ரோபோ என்று எல்லாமே கண்டுபிடிப்பு ரகத்தில் சேறும் . உலகில் நமது வரலாற்றை புரட்டிப் போட்டவை என்றால் இரண்டு ரகமும் எனலாம் . கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு அடைந்தது. (டிஸ்கவர்) ஒரு திருப்புமுனை என்றால், அலெக்சாந்தரோ வோல்ட்டா மின்-பாட்டரியை கண்டுபிடித்தது வேறுவகை திருப்புமுனை. ரயில் வந்தது, விமானசேவை, தடுப்பூசிபோடுவது, உயர் ரக தாவரங்களை நாமே உருவாக்குவது, கிருமிநாசினி, நுண்ணுயிர்க்கொல்லி (ஆண்டி பயாடிக்) இணையம் என பல்வேறுவகை  பங்களிப்புகளை ‘ஆய்வு’ எனும் ஒன்றை செயல்பாடு உருவாக்கியது. என்பது கண்கூடு.

‘ஆய்வு‘ என்பது ஒரே செயல்பாடு என்றாலும் பல (அல்லது சில) சிறுசிறு செயல்பாடுகளின்  கொத்தான புரிதலே ‘ஆய்வு’ செய்தல் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.நமது வடைகறி வகையறாவும் அதை ஏற்றுக்கொள்கிறது. இன்று ‘ஆய்வு’ எனும் பொது வெளியில் – கூர்ந்தாய்தல், கண்டடைதல் கண்டுபிடித்தல் மற்றும் புதுமை அல்லது பதுமுறை காணல் (Innovation) என நாலும் அடக்கம் . நுண் ஆய்தலில் ஏற்கனவே உள்ள ஒரு நடைமுறை அல்லது ஒரு கருவி சார்ந்து சிறப்பான கேள்விகளை எழுப்பவேண்டும் இது முதல்படி. எதையும் சந்தேகி என்கிற ஒரு இடத்திலிருந்தே அது வருகிறது.  ஆர்வமான மனநிலை மட்டுமே ஆக சரியான கேள்விகளை எழுப்பிக்கொள்ள முடியும் . இந்த முதல் படியில் ஏராளமான தகவல்களை திரட்டுகிறார்கள், இப்படியான ‘ஆய்வு’ பகுதிகளை புரிந்து அறிய (இப்போது இதை நீங்கள் வாசிப்பதே ஒரு கண்டு பிடிப்புதான் ) ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

பாராசூட் . விமானத்தில் இருந்து குதித்தால் குடைமாதிரி விரிந்து மெதுவாக உங்களை தரை இறக்கும். சூப்பர் பயன்பாட்டு பொருளை எடுத்துக் கொள்வோம்.         கி.பி 852-ல் ஸ்பெயின் தேசத்தில் ஆர்மன் பிர்மான் எனும் ராணுவவீரர் உயரமான லைட்- ஹவுஸ்- அதாவது கலங்கரை விளக்கம் ஒன்றிலிருந்து (உயிரை பணயம் வைத்து) குதித்துப்பார்த்து விஷயத்தை தொடங்கி வைக்கிறார். ஆனால் 1480 களில் லியோனார்டோ டாவின்சி தனது முறையான வரைபடங்களை ஆய்வு- முடிவுகளுடன் சேர்த்து வெளியிடுகிறார். ஃபாஸ்டோ வெரான்ஸோ, ஜான்வில்கின்ஸ, ஆன்ட்ரி ஜெர்மெய்ன் என்று வரலாற்றில் ஒரு  தொடர் நிகழ்வாக பாராசூட் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து. முதல் உலகப் போரின் போது கெல்ப் கோடலிங்கோவ், ஒரு பள்ளிகூட சிறுவன் போல முதுகில் சுமக்கும் பையாக அதை மாற்றுகிறார். ஸ்லோவேக்கியா நாட்டின் ஸ்டீபன் பானிக் அதில் வேக தடைகளை அறிமுகம் செய்த வருடம் 1914. ஆனால் இன்று விண்வெளி வீர்ர் தரை இறங்கும் பாராசூட், விமானியின் பாராசூட், மரமேறுபவர் பாராசூட், மலை ஏறுபவர் பாராசூட், ராணுவ பாராசூட் என பலவகை வந்துவிட்டது. சூப்பர்சானிக் ( ஒலியை விட வேகமாக )  வேக தரையிரங்கும் பாராசூட்கள் கூடவந்து விட்டன.



மேற்கண்ட இந்த பாராசூட் தரை இறங்கலில் கூர்ந்தாய்தல் மற்றும்  யோசனையை அடைதல் என்பதை செய்தவர் ஆர்மன் பிர்மன், கண்டடைய வைத்தவர் டாவின்சி கண்டுபிடிப்பை முன் வைத்தவர் கோடலிங்கோவ் அதில் புதுமைகளை புகுத்தி, (innovation) செய்தவர்கள்தான் அடுத்தடுத்து வருபவார்கள். உங்களுக்கு மல்லிகாவைத் தெரியுமா. நான் சொல்வது மங்கை மல்லிகா. இப்போது ஒரு ஐ.ஐ.டி புரொபஸர். ஆனால் மங்கை என்பவரின் மகளான மல்லிகா பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஏதோ குடும்ப தகராறு காரணமாக தாய் மங்கை விட்டத்து மின்விசிறியில் தனது சேலையில் தூக்கிட்டு இறந்துவிட்டார். மல்லிகா துவண்டு விடவில்லை, அறிவியலை சும்மா மனப்பாடம் செய்து தேர்வு எழுத பயன்படுத்தாமல் செயலில் இறங்கினார். மங்கை மல்லிகா என்று பெயரையே மாற்றிக்கொண்டார். ‘ஆய்வு’ விரும்பியாக களம் இறங்கினார், தற்போது ஒரு புதிய வகை விட்டத்து மின் விசிறி சந்தைக்கு வந்துள்ளது. பதினைந்து கிலோ எடைக்குமேல் கட்டி தொங்க விட்டால் மின் விசிறியின் தண்டு ஒரு ஸ்பிரிங்காக மாறி தரையை நோக்கி வந்து விடும். தற்கொலை செய்து கொள்ளயாராலும் முடியாது. இந்த விட்டத்து மின் விசிறி ஐடியா கிளிக் ஆனது. மின் – விசிறியை மல்லிகா கண்டுபிடிக்கவில்லை. 1882ல் பிலிப் டைல் என்பவர் ஜெர்மனியில் கண்டுபிடித்த்து. மல்லிகா அதை நமது சூழலுக்காக புதுமை தன்மை (innovation) புகுத்தி முன்னேற்றி (developed) உள்ளார். 

ஆய்வு விரும்பிகளின் அழகான முன் உதாரணம் மங்கை மல்லிகா தேவைகளே கண்டுபிடிப்புகளின் பிறப்பிடம் என்று இதை வைத்து தான்  சொல்கிறார்கள். இன்று மல்லிகா உரிம்ம் பெற்ற ‘ஆய்வு’ விரும்பி ஆனால் எல்லாருக்குமே இப்படி நடக்காது. உங்கள் காலத்தில் நீங்கள் அங்கீகரிக்க படாமலும் போகலாம் அப்புறம்  இன்னொரு விஷயம் . மேசைமீது நேரடியாக- டூல்ஸ் பாக்சுடன் களம் இறங்குவது மட்டுமே கண்டுபிடிப்பும் அல்ல. உதாரணமாக ‘நான்கு நிறங்கள் கோட்பாடு‘ என்பதை சொல்லலாம். ஒரு மேப்- அதாவது வரைபடத்தில்- நாடு அல்லது கண்டம் என்று ஏற்படுத்தும்போது ஒரு மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்கும் அருகருகே ஒரே நிறம் திரும்பவராமல் வண்ணமிட்டு  வரைபடத்தில் கொண்டுவர குறைந்த பட்சம் எத்தனை விதவிதமான  நிறங்கள் தேவை எனும் தேடலில் 1879 ல் ஆல்பிரட்கெம்ப் எனும்  இங்கிலாந்துகாரர் நான்கு நிற கணித கோட்பாட்டை முன் மொழிந்தார். இது ஒரு சூப்பர் கண்டுபிடிப்பு. முதலில் நான்கு- நிற- கணித  அனுமானம் என்று இதை அழைத்தார்கள். 1881ல் இதை பாராட்டும் விதமாக கெம்ப் ராயல் கழக உறுப்பினராகக்கூட சேர்க்கப்பட்டார். ஆனால் 1890-ல் பெர்சி ஹீவுட் என்பவர் ஐந்து நிறங்கள் தேவை என்றும்  நான்கு-நிற கணித அனுமானம் தவறு என்றும் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டார். கெம்ப் வாழ்நாளின் இறுதிவரை தனது நான்கு- நிறங்கள் கோட்பாடே சரியாக இருக்கும் என பலவாறு வாதாடி அலுத்து நொந்து போனவராக 1922-ல் காலமானார். காரணம் எப்படி முயன்றாலும் கணக்கீடுகள் செய்வது மனித திறனுக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. ஆனால் 1976 –ல் ஆப்பல் மற்றும் ஹேக்கன் எனும் இருவர் ஹாவர்டு பல்கலை கழக கணினியை பயன்படுத்தி ஆல்பிரட் கேம்ப்பின் நான்கு- நிறங்கள் அனுமானமே சரி என்று நிரூபித்தனர். ராயல் கல்வியகம் முன்பு கேம்ப்பை உறுப்பினர் அந்தஸ்த்திலிருந்து வெளியேற்றியதையும் திரும்பப்பெற்று  மன்னிப்பு கோரியது.

அதேபோல ‘ஆய்வு’ அனைத்தும் முடிவு தருபவையும் அல்ல. ஒரு எடிசன் முழுமையான மின்சார பல்பை தருவதற்கு 900முறை தோல்வி அடைந்தார் என்று படித்திருப்பீர்கள். அவரைவிட வீடுகளுக்கு மின் இணைப்பு தந்த டெஸ்லா அதிக பங்களிப்பு செய்தவரும் கூட. அதேபோல ஒருத்தர்  ஒரு ஆய்வில் வெற்றி பெற்று அத்தோடு நிறுத்தி விடுவதும் இல்லை ஆய்வு செய்தல் என்பது இசையை ரசிப்பது, பிரியாணி சாப்பிடுவது, டூர்போவது, வீடியோகேம்ஸ் விளையாடுவது போல ஃபேவரேட் விஷயமாகி ஒட்டிக் கொள்ளும். 

No description available.

சார்லஸ் டார்வின் பரிணாமவியலை வெளியிட்டபிறகு ஏராளமான ஆய்வுகளை செய்து இறுதிவரை சலிக்காமல் முடிவுகளை வெளியிட்டவர், இறுதியாக எழுபத்தி இரண்டு வயதில் பறவைகளின் எச்சங்களை திரட்டி இந்திந்த எச்சம் இந்திந்த பறவையுடையது என்பதை கண்டறியும் அறிவியல் முறையை கண்டு பிடித்து அசத்தியவர். நம் சர்.சி.வி ராமன் நோபல் பரிசுபெற்ற பிறகு இசைக்கருவி ஆராய்ச்சி முதல்,ஸ்படிக கல் ஆய்வுவரை ‘ஆய்வு’ பித்தராகவே வாழ்ந்தவர்.‘

ஒவ்வொறு, வீடு, பள்ளி, அலுவலகம் என எல்லா மேசைகளிலும் ஒரு மேசைகணினி (desk top) இருக்க வேண்டும் என பில்கேட்ஸ் நினைத்தார் . இந்தப்புவியின் ஒவ்வொறு மனிதரும் தன்சட்டை பாக்கெட்டில் ஒரு கணினி ஃபோன் வைத்திருக்கவேண்டும் என்று ஸ்டீவ் ஜாப்ஸ் நினைத்தார். இரண்டுமே நிறைவேறியது, சரி, ஒரு ‘ஆய்வு’ செய்யும் போது படிநிலைப் படி முறையாக (முழுசாப்பாடு) செயல்படுதல் என்றால் என்ன?

  1. முதலில் சரியான பிரச்சனையை குறித்து கேள்வியை எழுப்பிக் கொள்வது
  2. அதற்கு தீர்வாக அனுமனங்களை உருவாக்குவது.
  3. அனுமானத்தை  சரிபார்ப்பது – புள்ளி விபரம் சேகரித்தல் 
  4. நேரடி செயல்விளக்க ஆய்வு முயற்சி
  5. முடிவுகளை பட்டியலிடுவது (கண்டுபிடிப்பு)

இதுதான் முழு சாப்பாடு நமது கல்யாண வீட்டில் பந்தியில் இலையில் பொறியல் இங்கே வரவேண்டும் கூட்டு இங்குதான் வைக்கவேண்டும் ஊறுகாய் உப்பு இந்திந்த இடத்தில்தான் என இருப்பது போல ஆய்வு அறிக்கை இப்படித்தான் எழுத வேண்டும் எனவும் உண்டு.

இதை நம் ‘வடைகறி’ ஆய்வுக்குழு ஏற்பது இல்லை. சுவரில் இருக்கும் மின் விசிறியின்  சுவிட்சை ரிமோட் ஆக்கி ஒருவரது கையில் தருவதற்கு இந்தமாதிரி படிநிலைகள் தேவையில்லை நாங்கள் நேரடியாக களத்தில் இறங்கினால் போதும். என்பது அவர்களது வாதம். நம்நாட்டில் நடக்கும் வேடிக்கையான விஷயம் என்ன தெரியுமா? இந்த ‘வடைகறி’ ஆய்வுவாதிகள் இல்லாமல் பொறியியல் கல்லூரிகளே இல்லை என்பதுதான். ‘ஆய்வுத்திட்டம்’. (புராஜக்ட்) என்று இறுதி ஆண்டில் பொறியியல் மாணவர்கள்  சமர்பிக்க வேண்டும். ஒவ்வொறு ஊரிலும் உள்ள ‘மெக்கானிக்’ நண்பாஸ் செய்து கொடுப்பதை அப்படியே வாங்கிசென்று சமர்பித்து விடும் ‘தருமி’களாக நம் மாணவர்கள் உள்ளனர். கல்லூரி புராஜக்ட் செய்து தருவது பெரும்பாலும் நம் ‘வடைகறி’ ஆய்வு வகையறாதான் என்று ஒரு (ரகசிய) கணக்கீடு சொல்கிறது.

  எது எப்படியோ, நமது அறிவியல் கல்வி இன்னும் ஆய்வு செய்ய விரும்பு எனும் பாலபாடத்தை நம் இளம் தலைமுறையினர்களின் தலையில் ஏற்றாத ஏட்டு சுரைக்காய் அளவிலேயே உள்ளது. ஒரு கோடி கணினி ஆசிரியர்கள் இருந்தாலும் ஒரு தினேஷ் படேல் (மும்பை) 38 மொழிகள் புரிந்துபேசும் ரோபோட் உருவாக்கி  (ரோபோட் பெயர் ஷாபு) அசத்துகிறார். லட்சக்கணக்கான வேதியியல் பேராசிரியர்களுக்கு மத்தியில் மதுரை தியாராஜா பொறியியல் கல்லூரியின் வேதியியல் பேராசிரியர் ராஜகோபாலன் வாசுதேவன் , குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி நல்ல சாலைகள் அமைக்கும் முறையை கண்டு பிடித்து உலக கவனம் பெறுகிறார் . ‘ஆய்வு’ செய்ய விரும்புகிற ஒருவருக்கு வயதோ படிப்போ வசதிவாய்ப்போ ஒரு பொருட்டல்ல என்பதற்கு பல சாட்சிகள் உள்ளது என்பதே உண்மை. முழுசாப்பாடு பாணியோ, வடைகறி  வழியோ ஆய்வு செய்ய விரும்பு என்பதே நமது முழக்கம்.

•••••

நன்றி: அறிவியல் பலகை



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *