ஆறாவது வார்டு - அந்தோன் சேகவ்

ஆன்டன் செகாவ்(1860-1904) அடிப்படையில் ஒரு மருத்துவர். மாஸ்கோவில் மருத்துவம் பயின்ற செகாவ், அங்கே களப் பணியாற்ற சென்றபோது, அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டும், வறுமையில் உழலவிட்டும் மக்களை எவ்வாறு நோயாளிகளாக உருமாற்றுகிறார்கள் என்றறிந்து அதிர்ச்சியுற்று, இவர்களுக்குச் சேவை செய்வதையே முழுநேரத் தொழிலாக்கிக் கொண்டார்.
44 வயதில் மரணத்தைத் தழுவியபோதும், 400க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். பற்றிக் கொள்ள எந்தவிதமான நம்பிக்கையும், எதிர்காலம் குறித்த சிந்தனையும் அற்ற மனப்பிறழ்வாளர்களே, பெரும்பாலும் செக்காவின் பாத்திரங்கள்.

இக்குறுங்கதைதான், தன்னை ஒரு போராளியாக மாற்றியது என்று லெனின் பதிவு செய்திருக்கிறார். சுகாதாரமற்ற அரசு மருத்துவமனையின் மனநல பிரிவான ஆறாவது வார்டில் நடக்கும் நிகழ்வுகளே கதை. மருத்துவமனையின் தோற்றத்தை விவரிக்கும் வரிகள். “ஆணிகள் அடர்ந்த சாயம் போன மருத்துவமனை வேலியடைப்பால் இது வயல் வெளியிலிருந்து பிரிக்கப்படுகிறது.”

புரட்சிக்கு முந்தைய இரஷ்ய ஆட்சி மன்றமான சேம்ஸ்த்தேவோவினால் நடத்தப்படுகிறது ஒரு மருத்துவமனை. அரசால் நிர்வகிக்கப்படும் அமைப்புகளுக்கே உண்டான அலட்சியங்களால் நிரம்பப் பெற்ற; அன்பற்ற; சுகாதாரமற்ற மருத்துவமனைக்கு மருத்துவராக பொறுப்பேற்கிறார் டாக்டர் ஆந்திரேய் எபிமீச். மத போதகராக விரும்பிய எபிமீச்சை, அவர் தந்தைதான் மருத்துவராக வேண்டும் என நிர்பந்தித்தார். அதனால்தானோ என்னவோ, எபிமீச் இந்த அவலங்களைக் கண்ணுற்ற போதும், அதை மாற்ற எவ்வித செயலிலும் ஈடுபடாமல், இந்த மருத்துவமனைத் தானாகவே விரைவில் மூடிவிடும் என நினைத்து, இயந்திரத்தனமாக பணியாற்றி வந்தார். இயல்பிலேயே, தத்துவங்களில் ஆர்வம் கொண்டவர்; தனிமை விரும்பி; வாசிப்பாளரும் கூட.

ஐந்து நோயாளிகள் தங்கியிருக்கும் ஆறாவது வார்டிற்கு, நிகிதாதான் காவல்காரன். காண்போரைக் கலங்க வைக்கும் தோற்றமுடைய இவன், நோயாளிகளைக் கவனிக்காமல், அடி, உதை, குத்து போன்ற வன்முறையால் அடக்கு முறையைக் கையாள்வதோடு, அவர்களின் உரிமையைப் பறிக்கும் கொடூர குணமுடையவன்.

காச நோயின் ஆரம்பக் கட்டத்திலிருக்கும் நெட்டையான ஒல்லி மனிதன், முதல் கட்டிலில் அமர்ந்து கொண்டு எப்போதும் வெறித்து பார்த்துக் கொண்டேயிருப்பான். யூத இனத்தைச் சேர்ந்த தொப்பி தயாரிப்பாளரான மோசஸ், தனது கடை தீக்கிரையானதிலிருந்து இருபது ஆண்டுகளாய் ஆறாம் வார்டில் இருப்பவர். சாதுவாக இருக்கும் மூடன் என்பதால், இவனுக்கு மட்டுமே மருத்துவமனைத் தாண்டி வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஓயாமல் பரபரத்து கிளர்ச்சியூட்டும் நிலையிலிருக்கும், முப்பத்தி மூன்று வயதாகும் இவான் திமிரிச், தன்னைக் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்துடனேயே எப்போதும் இருக்கிறார்.

அவருடைய பேச்சில் ஆரோக்கியமான மனிதர் மற்றும் மனப்பிறழ்வாளரின் தன்மை ஆகிய இரண்டுமே வெளிப்படும். நிகிதாவைத் தவிர அனைவரிடமும் தோழமையுணர்வுடன் அன்பாக பழகும் இயல்புடையவர். இவானின் அகம் ஒரு இலட்சிய மனிதனுக்குரியதாகத் தென்படுவதால், மருத்துவர் எபீமிச்சிற்குப் பிடித்தமானவராக இருக்கிறார். இவான், தன் துன்பத்தை ஏற்க மறுத்து விவாதம் நிகழ்த்தும் போது, அவருக்கு வாழ்க்கையையும், விடுதலையையும் போதிக்கும் தத்துவங்களைக் கூறி ஆற்றுப்படுத்துகிறார், மருத்துவர். “பாதுகாப்பான வாழ்க்கை வாழும் உங்களால் புரிந்து கொள்ள முடியாது” என வாதிட்டு சமாதனமடைய மறுப்பவராக சித்தரிக்கப்படுகிறார்.

ஒரு மன நோயாளிக்கும், மனநல மருத்துவருக்கும் இடையேயான வாக்குவாதத்தின் வழி, அன்றைய இரஷ்யாவின் நிலை, அரசியல் எப்படி அதிகாரத்தின் குவிமையமாக செயல்படுகிறது, அதனை தனிநபர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை விவரிக்கிறது கதை. தற்செயலாக, இவானுடன் துலங்கும் உரையாடல்களும், மருத்துவ அமைப்புக்குள் பொருந்திப் போகாத எபிமீச்சின் இயல்பும், தடுமாற்றத்திற்கு உள்ளாகும் அவரது நடவடிக்கைகளும், ஒரு கட்டத்தில் அவரையும் மன நோயாளியாக அதே மருத்துவமனையில் அடைக்கப்பட்டு கொடூரமாக மரணிக்கிறார். பொதுவாக எதற்கும் போராடும் குணமில்லாத எபிமீச், முற்றிலும் லட்சிய வேட்கையில் மூழ்க முடியாமலும், பிழைப்புவாதியாக வாழ முடியாமலும் போராடித் தவிக்கும் காட்சி தத்ரூபம்.

செகாவ், தான் கண்டுணர்ந்து காட்சிப்படுத்திய மனிதர்களின் ஆழ்மன போராட்டங்கள் மூலம் சமூக அவலங்களை முன் வைக்கிறார். நம்முடைய சமூகம், அதன் கட்டமைப்புக்குள் பொருந்தி வராத மனிதர்களை பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது, எல்லா காலங்களிலும், எல்லா நாடுகளிலும் என்பது தெள்ளத் தெளிவாகிறது. நன்றி!

 

நூலின் தகவலால் 

நூல் : ஆறாவது வார்டு

ஆசிரியர் : அந்தோன் செகாவ்
மொழிப்பெயர்ப்பு குறுநாவல்

தமிழில்ரா. கிருஷ்ணையா

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

பக்கங்கள் : 87 

விலை :ரூ 70/

 

எழுதியவர் 

பா. கெஜலட்சுமி

 

 

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *