நூல் அறிமுகம்: ’வார்டு எண்: 6’ – அன்டன் செக்காவ்வின் தத்துவங்களின் மோதலைச் சித்தரிக்கும் கதை..! – பெ.விஜயகுமார்.

நூல் அறிமுகம்: ’வார்டு எண்: 6’ – அன்டன் செக்காவ்வின் தத்துவங்களின் மோதலைச் சித்தரிக்கும் கதை..! – பெ.விஜயகுமார்.

 

இலக்கிய வகைமைகளில் சிறுகதை நுட்பமானது. அன்டன் செக்காவ் (1860-1904) சிறுகதைகளில் அனைத்துப் புதுமைகளையும் சாத்தியமாக்கி ரஷ்ய சிறுகதை இலக்கியத்தை அதன் உச்சிக்கு எடுத்துச் சென்றவர். நாற்பத்து நான்கு வயதில் மரணத்தைத் தழுவியபோதும், நானூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி  சாதனைகள் நிகழ்த்தியுள்ளார். இப்சன், ஸ்ரின்பெர்க் போன்ற ஐரோப்பிய நாடக ஆசிரியர்களுக்கு இணையாக நவீன நாடக இலக்கியத்திலும் தடம் பதித்துள்ளார். இன்றும் நாடகவியலில்  ’செக்காவ்வின் துப்பாக்கி’ எனும் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.  நாடகத்தின் முதல் காட்சியில் துப்பாக்கியை காட்சிப்படுத்தினால் அடுத்த சில காட்சிகளில் துப்பாக்கியின் வெடிச் சத்தம் கேட்க வேண்டும் என்பதே அதன் தாத்பரியமாகும். நாடகத்திற்குத் தேவையற்ற எதையும் காட்சிப்படுத்தக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று செக்காவ் வலியுறுத்துகிறார். நாடக இலக்கியத்திற்கு செக்காவ்வின் மிகப் பெரும் கொடையாக Three Sisters, Cherry Orchard, Sea Gull, Uncle Vanya ஆகிய நாடகங்கள் திகழ்கின்றன.

ஆறாவது வார்டு by அந்தோன் சேகவ்

1890இல் ஷெக்காலின் தீவிலிருக்கும்  சிறைச்சாலையின் நிலைமை குறித்து ஆய்வு மேற்கொள்ளச் செல்கிறார். சிறைக் கைதிகள் கொடூரமாக நடத்தப்படுவது குறித்து அதிர்ச்சிக்குள்ளானார். இந்த அவலங்களை ’தி மர்டர்’, மற்றும் ’வார்டு எண்,6’ சிறுகதைகளில் காட்சிப்படுத்தினார். 1892இல் மெலிக்கொவோ எனுமிடத்தில் பண்ணை வீடு வாங்குகிறார். அவரின் நிலப்பிரபுத்துவ அனுபவம் அலாதியானது. இருபது மைல் சுற்றுப்புறத்தில் இருக்கும் கிராம மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கிறார். அதுவொரு தொற்று நோய் காலமாகவும் இருந்தது. தன்னுடைய காச நோயையும் பொருட்படுத்தாது இரவும், பகலும் அற்புதமான சேவைகள் புரிந்தார். Ward No:6, The Murder, The Dead Body, The Lady with the Little Dog போன்ற சிறுகதைகள் செக்காவ்வின் காத்திரமான படைப்புகளாகும்.

’வார்டு நம்பர்:6’ சிறுகதையில் (1892) ராகின் என்ற மருத்துவரின் மனித வாழ்வு குறித்த புரிதலில் ஏற்படும் மாற்றமே கதையாகப் பரிணமித்துள்ளது. சோவியத் புரட்சிக்கு முந்தைய காலத்தில் ரஷ்யாவில் மருத்துவம் சார்ந்த பிரச்சனைகள் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தன என்பதைச் சித்தரிக்கிறது. அதிகார வர்க்கத்தின் அலட்சியப்போக்கு மற்றும் ஆணவத்தினால் மக்களின் அன்றாட வாழ்வு எவ்வாறு பாதிக்கப்பட்டன என்பதையும் காட்டுகிறது. லெனின் தன்னைச் சோசலிசப் புரட்சிக்குத் தூண்டிய ரஷ்ய படைப்புகளில் செக்காவ்வின் ’வார்டு எண்:6’ கதையையும் குறிப்பிடுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ’வார்டு எண்:6’ ஒரு வகையில் அன்றைய ஒட்டு மொத்த ரஷ்யாவின் பிரதிபலிப்பே.   ராகின் பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப் பணியாற்றி அறிவு ஜீவியாகவே வாழ்ந்திட விரும்பினார். ஆனால் தந்தையின் விருப்பத்திற்கிணங்கி மருத்துவத்தைத் தேர்ந்தெடுத்தார். மருத்துவப் பணியில் சேர்ந்ததும் ஆர்வத்துடனேயே செயல்பட்டார். அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத மருத்துவமனை, துறையிலிருந்த ஊழல்கள், நகரக் கவுன்சில் தலைவர்களின் அலட்சியம், இவைகள் எல்லாம் அவரது ஆரம்ப கால ஆர்வத்தை நீர்த்துப்போகச் செய்தன.

Ebook › Ward No. 6 › Read free for 14 days › Soundshelf.MT

பெரிய மருத்துவமனை வளாகத்தில் ’வார்டு எண் 6’ மட்டும்  மனநலம் குன்றிய நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டது. ஐந்து நோயாளிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருந்தனர். வளாகம் முழுவதும் அடிப்படை சுகாதார வசதிகள் ஏதுமில்லாமல் நாற்றமெடுத்துப் போயிருந்தன. தேவைப்படும் மருந்துகளும் இல்லை. நோயாளிகள் ஐவரும் சிறைக் கைதிகளைப்போல் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். வார்டராக நிகிடா என்ற முரடன் நியமிக்கப்பட்டிருந்தான். மனநோயாளிகளை தேவையின்றி அடித்துத் துன்புறுத்துவதில் அவனுக்கொரு அலாதி இன்பம். ராகின் துவக்கத்திலேயே இந்தக் கொடுமையைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். நிகிடாவின் வன்முறைகளைக் கண்டிக்கத் தவறினார். நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் உணவின் தரம் குறித்தும் அவர் அக்கறை எடுத்ததில்லை. தேவைப்படும் மருந்துகள் வாங்கிடவும், வளாகத்தைச் சுத்தமாக வைத்திருக்கவும் அவர் சிரத்தை எடுத்துக்கொள்ளவில்லை. மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள் செவிலியர்கள், சூப்பிரெண்ட் ஆகியோரின் ஒழுங்கீனத்தையும் அவர் தட்டிக் கேட்கத் தவறினார். மொத்தத்தில் மருத்துவ மனையின் மோசமான நிலைமைகளுக்கு அவரின் சோம்பேறித்தனமும் ஒரு காரணமாகும். காலையில் சிறிது நேரம் மட்டுமே மருத்துவமனை வந்து நான்கைந்து நோயாளிகளை மட்டும் பார்த்துவிட்டு போய்விடுவார்.

மற்ற நோயாளிகளை துணைமருத்துவர் செர்ஜி பார்த்துக்கொள்வார். துணை மருத்துவர் செர்ஜி எந்நேரமும் பைபிளும் கையுமாக அலைவார். அவருக்கு மருத்துவத்தில் இருந்த  நம்பிக்கையைவிட ஆன்மீகத்தில் நம்பிக்கை அதிகம். மருத்துவப் பணிக்குப் பதில் இறைப்பணியையே அங்கு செய்துவந்தார். செர்ஜி சொந்தமாக ஒரு மருத்துவமனையும் நடத்திவந்தார். ரெகின் தனிப்பட்ட மருத்துவமனை நடத்திட விருப்பமில்லாதவர். ரெகின் தங்குவதற்கு மருத்துவமனையின் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. அவருக்குப் பணிவிடை செய்திட டெரியுஸ்கா என்ற பெண்மணி இருந்தார். காலையில் மருத்துவமனையிலிருந்து அறைக்குத் திரும்பியதும் புத்தகங்களில் மூழ்கிவிடுவார். வரலாறு, தத்துவம் சார்ந்த புத்தகங்களை அதிக ஆர்வத்துடன் படிப்பார். சம்பளத்தில் பெரும் பகுதியை புத்தகங்கள் வாங்குவதற்குச் செலவிடுவார். அவருக்கு சம்பளத்தைத் தவிர வேறு எந்த வருமானமும் கிடையாது. நீண்ட நேரப் படிப்பிற்குப்பின் வோட்கா அருந்துதல், சாப்பிடுதல், மீண்டும் படித்தல் இவ்வாறு பகல் பொழுது முழுவதும் கழிந்துவிடும். மாலையில் ஊரில் அவருக்கிருந்த ஒரே நண்பர் மிஹைல் வருவார். இருவரும் பீர் அருந்தியவாறே அறிவார்ந்த உரையாடலில் ஈடுபடுவார்கள். மிஹைல் அந்த ஊரின் தபால்துறை அதிகாரி. பொதுவாக அரசியல், சமூகப் பிரச்சனைகளை இருவரும் அலசுவர்.  மிஹைல் சென்றதும் இரவு நீண்ட நேரம் படித்துவிட்டு உறங்கச் செல்வார். டெரியுஸ்காவின் பராமரிப்பு அவருக்கு ஆறுதலாக இருந்தது.

Ward No. 6 and Other Stories (Barnes & Noble Classics Series ...

மருத்துவமனையில் ஐந்தாவது நோயாளியாகச் சேர்ந்த கொமரொவ் சற்று வித்தியாசமானவர். மற்ற நால்வரும் சாதாரணத் தொழிலாளர்கள். ஆனால் கொமரொவ் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தவர்; செல்வச் செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவர். தன்னைக் காவல்துறையும், உளவுத்துறையும் தொடர்ந்து கண்காணிப்பதாக கற்பனை செய்துகொள்வார். யாரைப் பார்த்தாலும் தன்னைக் கைது செய்யவந்திருப்பதாக நினைத்துக்கொள்வார். எந்நேரமும் பதற்றத்திலும், பயத்திலுமே இருப்பார். இந்த மன அழுத்தமே அவரின் மனப்பிறழ்விற்குக் காரணம். அவருக்கும் தத்துவத்தில் ஈடுபாடு இருந்தது. இதை அறிந்த மருத்துவர் ரெகின் தினமும் மருத்துவமனையில் அதிக நேரம் தங்கி கொமரொவ்வுடன் பேசத் தொடங்கினார். கொமரொவ்வின் படுக்கையில் அமர்ந்தவாறு இருவரும் நீண்ட நேரம் தத்துவ விஷாரத்தில் ஈடுபடுவார்கள்.

கொமரொவ் இந்த மருத்துவமனையில் சிக்கி, ”நான் ஏன் இவ்வளவு வேதனைப்பட வேண்டும்”, என்று கேட்பான். ”இதை ஏன் வேதனை என்று எடுத்துக்கொள்ள வேண்டும்; இன்பம், துன்பம் என்பதெல்லாம் நம் மனதில் தோன்றும் பிரமைகள்தானே”! என்று ரெகின் பதில் கூறுவார். டியொஜினஸ் போன்ற ஸ்டாய்க் தத்துவ ஞானிகள் (Stoic Philosophers) எவ்வளவு எளிமையுடன் வாழ்ந்தார்கள். வாழ்வின் அனைத்து சுகங்களையும் வெறுத்து, ஒதுக்கி ஒரு தொட்டியில்  வாழ்ந்தவர்தானே டியோஜினஸ் என்று விளக்கம் அளிப்பார். ”எங்களை ஏன் இப்படி பூட்டி வைத்து சித்திரவதைகள் செய்கிறீர்கள்”, என்ற கொமரொவ் கேட்கவும், ”சிறைச்சாலைகளுக்கு கைதிகள் தேவைப்படுகிறார்கள். மனநல மருத்துவமனைகளுக்கு பைத்தியக்காரர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த மருத்துவமனையின் தேவையை பைத்தியக்காரர்களாகிய நீங்கள் பூர்த்தி செய்கிறீர்கள். யார் மனநலம் குன்றியவர் என்பதை நாங்கள் முடிவெடுக்கிறோம்”’ என்று ரெகின் பதிலளிக்கிறார். இவைகள் எல்லாம் வாழ்வின் தவிர்க்க முடியாத விதிகள். வாழ்வின் நியதிகளை எதிர்த்துப் போராடக் கூடாது; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் தத்துவ ஞானி மார்க்கஸ் ஒரேலியஸ் வலியுறுத்தினார்.

Feature: 9 Facts about Chekhov - Sydney Theatre Company

இதையெல்லாம் மீறி இங்கிருந்து தப்பிக்க முயன்றால் திரும்பவும் பிடித்துக்கொண்டு வரப்படுவீர்கள். அவரவருக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று தத்துவம் பேசுகிறார் ரெகின். இப்படியான விவாதங்களில் இருவரும் ஈடுபட்டவண்ணமே இருப்பார்கள். ரெகினின் இந்நடவடிக்கை மருத்துவமனையில் அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவருக்கு மனநோயாளியுடன் இவ்வளவு அன்னியோன்னியம் ஏன் என்று பேசினர். அவருடைய மனநிலையும் பாதித்துள்ளதோ என்று சந்தேகம் கொள்ளலாயினர். இச்சமயத்தில் ஹொபடொவ் என்ற இளம் மருத்துவ அதிகாரி அந்நகருக்கு மாற்றலாகி வருகிறான். செர்ஜி மருத்துவமனைப் பிரச்சனைகள் குறித்து ஹொபடொவ்வுடன் விவாதிக்கிறான். நோயாளி கொமரொவ்வுடன் மருத்துவர் ரெகின் மெய்மறந்து பேசிக்கொண்டிருப்பதை இருவரும் ஒளிந்திருந்து பார்க்கின்றனர். மருத்துவமனையைவிட்டு ரெகினை விரட்டிவிட சதித்திட்டமிடுகின்றனர்.

நகரசபை அலுவலகத்தில் கூட்டமென்று மருத்துவர் ரெகினுக்கு அழைப்பிதழ் வருகிறது. அங்கு சென்ற பின்னரே அக்கூட்டம் அவர் மீதான விசாரணைக் கூட்டமென்பதை அறிகிறார். கூட்டத்தின் முடிவுகளையும் அவருக்குத் தெரிவிக்கவில்லை. அவரைச் சில நாட்கள் விடுமுறையில் போகச் சொல்லி வற்புறுத்துகின்றனர். சதித் திட்டத்திற்கு மருத்துவர் ரெகினின் நண்பர் மிஹைலையும் பயன்படுத்துகின்றனர். ரெகினுக்கு மனநலம் சரியில்லை என்று மிஹைலை நம்பவைக்கின்றனர். விவரம் தெரியாமல் அவரும் தன் நண்பருக்கு மனநலம் சரியில்லையென நம்பிவிடுகிறார். மிஹைல் வழக்கமான மாலை நேரச் சந்திப்பில் ரெகினிடம் சுற்றுலா சென்று வரலாம் என்ற ஆலோசனையைச் சொல்கிறார். ரெகினுக்குச் சுற்றுலா செல்வதில் எல்லாம் விருப்பமில்லை. இருப்பினும் நண்பரின் வலியுறுத்தலுக்கு இணங்கி ஒத்துக்கொள்கிறார். பயணச் செலவு முழுவதையும் ரெகின் ஏற்றுக்கொள்கிறார். மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க், வார்ஷா என்று ஊர் சுற்றிவருகிறார்கள். பயணத்தின் போது மிஹைலின் பேச்சுக்கள் ரெகினுக்கு மிகவும் அலுப்பைத் தருகின்றன.

Anton Chekhov, “Home”: A Short Story | NEH-Edsitement

அவருடன் வெளியில் செல்வதைத் தவிர்த்து அறையிலேயே தங்கிக்கொள்வார். வார்ஷாவில் ஒரு சூதாட்டத்தில் 500 ரூபிள்களை மிஹைல் இழந்தார். அந்த இழப்பையும் ரெகின்தான் ஏற்றுக்கொண்டார். ஒருவாறு பயணம் முடிந்து ஊர் திரும்பினார்கள். ரெகினுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. விசாரணைக் குழுவின் முடிவின்படி அவரை வேலையிலிருந்து நீக்கியிருந்தார்கள். பென்சனும் மறுக்கப்பட்டிருந்தது. இருபதாண்டு காலம் பணியில் இருந்தும் ரெகின் பணமும் சேமித்திருக்கவில்லை. கையிலிருந்த பணத்தையும் பயணத்தில் செலவழித்துவிட்டு வெறுங் கையுடன் திரும்பியிருந்தார். அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த தங்குமிடத்தையும் விலக்கிக் கொண்டனர். வேறு ஒரு சின்ன அறையில் வாடகை கொடுத்துத் தங்கினார். ஒரு நாள் மிஹைல், ஹொபடொவ் இருவரும் அவரைப் பார்க்க வருகின்றனர். ரெகின் உடல்நலம் குறித்து விசாரிக்கின்றனர். ஹொபடொவ் பைத்தியக்காரர்களுக்கு வழங்கப்படும் பொரமைடு மருந்தை கொடுத்துச் செல்கிறான். ரெகின் கோபத்தின் உச்சியில் பாட்டிலைத் தூக்கி எறிந்து அவர்கள் இருவரையும் விரட்டுகிறார். இருவரும் ரெகினின் பைத்தியம் உறுதியாகிவிட்டது என்று பேசிக்கொண்டு வெளியேறுகிறார்கள். மறுநாள் காலை நண்பர் மிஹைலைப் பார்க்க அவரின் அலுவலகம் செல்கிறார். முந்தைய நாள் தான் கோபத்தில் திட்டியதற்கு வருந்துகிறார். மிஹைல் அன்புடன் பேசி அனுப்பிவைக்கிறார்.

ஹொபடொவ் மருத்துவ மனையில் ஒரு புதுவிதமான கேஸ் வந்திருப்பதாகவும் ரெகினின் ஆலோசனை தேவைப்படுவதாகவும் வீட்டுக்கு வந்து அழைத்துச் செல்கிறான். ரெகின் அவன் வார்த்தைகளை நம்பி அவனுடன் செல்கிறார். மருத்துவமனையின் வார்டு எண்: 6 சென்றடைந்ததும் அவரை உள்ளே தள்ளி அடைத்துவிடுகிறான். கொமரொவ் படுக்கைக்கு அருகிலேயே அவருக்கு படுக்கை கொடுக்கிறார்கள். அவருடைய ஆடையைப் பிடுங்கி எறிந்துவிட்டு நோயாளிகளுக்கான சீருடை  கொடுக்கப்படுகிறது. ஆடையின் துர்நாற்றம் சகிக்க முடியவில்லை. ரெகின் நிலைமையைக் கண்டு கொமரொவ் வருத்தப்படுகிறார். சிறிது நேரம் கூட ரெகினால் அங்கே இருக்க முடியவில்லை. அவர் நம்பிய  தத்துவங்கள் அவருக்குக் கைகொடுக்கவில்லை. நிகிடாவை கதவைத் திறக்கச் சொல்லி ஆணையிடுகிறார். நிகிடா அவரின் கட்டளையை மதிக்கவில்லை. கதவைத் திறக்க மறுக்கிறான். ரெகின் கதவைத் தட்டித் தகராறு செய்கிறார். நிகிடா உள்ளே வந்து அவரை நையப் புடைக்கிறான். நேற்றுவரை மருத்துவமனையின் தலைமை அதிகாரியாக இருந்த ரெகின் இன்று அதே மருத்துவமனையின் வார்டு எண்:6 இல் அடைக்கப்படுகிறார். அன்று அவர் காக்கத் தவறிய அறம் இன்று அவரை உருத்துவந்து உறுத்துகிறது. இரவு முழுவதும் தூங்காமல் அழுதுகொண்டே இருக்கிறார். கொமரொவ் ஆறுதல் சொல்கிறான். மறுநாள் காலை ஜன்னி கண்டு இறந்துவிடுகிறார். எளிமையான முறையில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. நண்பர் மிஹைல், பணிப்பெண் டெரியுஸ்கா இருவர் மட்டும் இறுதி மரியாதை செய்கிறார்கள்.

ஆறாவது வார்டு AARAVATHU VARDU

இப்புத்தகம் தமிழில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

 

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/aaravathu-ward-4621/

  —பெ.விஜயகுமார்.

————————————————

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *