வயநாடு -இயற்கை இடர் துன்பங்கள் தவிர்த்திருக்க இயலுமா?
சமீபத்தில், நம் அருகிலுள்ள கேரளா மாநிலத்தில் நடந்த இயற்கை இடர் பாடு, மிகவும் துயரம் நிறைந்தது. 30.07.24 அன்று அதிகாலை வயநாடு மாவட்டத்தில் மேப்பாடி, சூர மலைப்பகுதியில், அடுத்து அடுத்து நிகழ்ந்த, மழை வெள்ள நிலச் சரிவினால், கிராமங்கள் அழிந்து விட்டன. ஏராளமான
பொது மக்கள், உருத்தெரியாமல், புதைந்து போன அவலம்!
உண்மையில், மலைகளில் மழை வருவதால், நிலச்சரிவு ஆபத்து உள்ளதா? அப்பாவி மக்கள் ஏதும் அறியாமல் தங்கள் வாழ்க்கைக்காக இயற்கைப் பகுதிகளில் குடியேறி, விவசாயம் மற்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், இத்தகைய நிலை முன்னரே வரும் என்று ஆய்வு முடிவுகள் அடிப்படையில், ஆபத்தினை உணர்த்திய சூழல் அறிவியல் அறிஞர்கள் குழு அறிக்கைகள் அலட்சியம் செய்யப்பட்டதா? சற்று நாம் சிந்தித்து பார்ப்போம்.
மேற்கு மலைத் தொடர் என்பது இந்தியாவில் வடக்கு, தெற்காக, காணப்படும், மேற்கு அரபிக்கடல் ஒட்டிய அருமையான இயற்கை வளப்பகுதியாகும். சுமார் 1600 கிலோமீட்டர் நீளம் கொண்ட இது குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மாநிலப் பகுதிகளில் பரவியுள்ளது. இந்தியாவின் தெற்கு முனையில் மருந்து வாழ் மலை, சுவாமிதோப்பு என்ற இடத்தில் இந்த அழகு மலைத்தொடர் முடிவடைகிறது. மிக பழமை வாய்ந்த இயற்கை, தாவர, விலங்கினங்கள், கொண்ட இங்கு புவித் தோற்ற பண்புகளும், சற்று வேறுபட்டவை. குன்றுகள், மலைகள், சிகரங்களும், அமைந்துள்ள மேற்கு மலைத் தொடரின் சராசரி உயரம் 1200மீட்டர் ஆகும். இப்பகுதியில் தென்மேற்கு பருவக் காற்றின் மூலம் வழக்கமாக மழை பெய்து வருகிறது.இங்கு, இயற்கையாக, நிலச் சரிவு
ஏற்படும் நிலை, காணப்படுகிறது. ஆம்.!மழை நீர் உறிஞ்சுதல் காரணமாக,கடும் மழை, நிலத்தடி நீர் அழுத்தம், மலைப் பாறைகளில் காணப்படும் விரிசல், தெறிப்புகளின் உட்பகுதியில் “நீரியல் அழுத்தம் “, மலைக் காடுகளில் தாவர இழப்பு, மண்ணின் வழுக்கு தன்மை மற்றும் சத்துப்பொருள் மாறுபாடு, நில அதிர்வு காரணிகள் போன்றவை இயற்கைக் காரணிகளாக இருக்கிறது.
ராஜஸ்தானில் உள்ள J. J. T. பல்கலைக்கழகம் சார்ந்த ஆய்வாளர்கள்,சோபன் கேல்கர் & அக்ஷ்யால் வயால் மற்றும் டாக்டர் M. B. கும்தேகர் (VNLT,NAGPUR)ஆகியோரின் சமீபத்திய ஆய்வு கட்டுரையின் படி, மனித காரணிகளும் நிலச்சரிவுகளுக்குக் காரணமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
மலைகளில் மரங்கள் அழிவு, கட்டுமானங்கள்,சாலை போடுதல், சுரங்கப் பணிகள், ஆழ் குழாய் கிணறுகள், விவசாயத்திற்கு நில பயன்பாடு, ஆழம்கொண்டு மரங்கள் பெயர்த்தல், ஆகிய காரணங்கள் இத்தகைய பேரழிவு ஏற்படும் நிலையினை உருவாக்குக்கிறது. (Land slide Disasters in Western Ghats :Need of identifying causes, effects, &protective measures…. PURAKALA -UGC -JOURNAL Vol. 31-Issue 50-June, 2020) ஆய்வு கட்டுரைகளின் உண்மைகள் ஒருபுறம், இருக்க, 2011 ஆம் ஆண்டில் மேற்கு மலைத்தொடர் இயற்கை பற்றிய ஆய்வு அறிக்கை, பரிந்துரைகள் வழங்கிய மாதவ் காட்கில் நிபுணர் குழு அறிக்கையில் 1.மிக தீவிரமாக மேற்கு மலைத்தொடரில் பாதுகாக்கப்படவேண்டிய பகுதிகள் 2.சுற்று சூழல் முக்கியம் வாய்ந்த பகுதிகள், 3.சாதாரண பகுதி என நடவடிக்கைகளை அப்பகுதிகளுக்கு ஏற்ற வாறு எடுக்க ஆலோசனைகள் கூறப்பட்டன. 18 சூழல் அபாய பகுதிகள் வரையறை செய்யப்பட்டன. ப்ரம்ம கிரி, திருநெல்லி, வயநாடு பன சுரா சாகர், குட்டியடி, வயித்திரி மானந்த வாடி, சுல்தான் பதிரி, நீலம்பூர் ஆகியவைகள் அதில் அடங்கும். ஆனால் இக்குழுவிற்கு பின்னர் கஸ்தூரி ரெங்கன் குழு, முந்தைய குழுவின் அறிக்கையின் நிலையினை, மாற்றி இலகுவாக ஆக்கியது. இதனால் மலைகளில்குறிப்பிட்ட பகுதியில் அதிக குடியேற்றம், சுரங்க தொழில் செழித்தது என்பதும் உண்மை.
2018 ஆம் ஆண்டிலும், இதே போல் இயற்கைப் பேரிடர், மழை, வெள்ளம், மிகவும் கடுமையாக மேற்கு மலைத்தொடர் பகுதியில் நிகழ்ந்தவிட்டன.பின்னர் , தொடர்ந்து பருவ கால மாற்ற விளைவுகள் அதிகரித்து வரும் நிலையில் அரசு சிந்தித்து செயல்பட வேண்டும். அறிவியல் சார்ந்த தீர்வுகள் ஆலோசனைகள் பெற ஆய்வு க் குழுக்கள் அமைக்கப்பட்டு வருவதுஅரசின் கடமை என்பது உண்மை. ஆனால், அந்த அறிக்கை சாமானிய மக்கள் நலன் பற்றி அக்கறை எடுத்துக்கொண்டாலும், மீண்டும் வேறு விரும்ப தகாத காரணங்களுக்கு குழுவின் அமைப்பு மாற்றப்பட்டு வேறு அறிக்கை பெறுவது, நியாயம் அல்ல.
மக்கள் தொகை பெருக்கம், பொருளாதாரம் தேவை என்ற காரணங்களினால், இயற்கை ஒவ்வொரு நாளும் பாதிக்கச் செய்யும் நிலை ஏற்படுகிறது.
வெள்ளம், மழை, நிவாரணம் உதவி அரசு செய்வது என்பது இயல்பாக மக்களுக்கு ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை உள்ளது. ஆனால், வாழ்வாதாரம் என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில், காடுகள், மலைகளில், ஆக்கிரமிப்பு செய்வது “நுனிக்கொம்பில் அமர்ந்து, மரத்தின் நடுப் பகுதி வெட்டும் “நிலை ஆகிவிடும் என்பதை நம் மக்கள் உணர்வார்களா!? உரிய அறிவியல் விழிப்புணர்வு அடைவார்களா!? ஆயிரக்கணக்கான மக்கள், வீடுகளில், தாம் அழியப் போகிறோம் என்று அறியாமல், வசித்து வரும் பரிதாபங்கள் மாறவேண்டும்.பேரிடர்கள் தொடர்ந்து ஆண்டு தோறும், நடக்கையில், தொலைநோக்கு பார்வை கொண்டு நாம் இயற்கை பாதுகாப்பு சார்ந்த செயல்பாடுகளை, கூரிய கவனம் கொண்டு அணுகுவது நன்று.
சூழ்வார் கண்ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.
மேற்கண்ட வள்ளுவர் வாக்குப்படி ஒரு அரசு, அறிவார்ந்த அறிஞர்கள் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ள மனம் உவந்து விரும்பினால் நாடு நன்றாக இருக்கும். சமநிலை பேணி, சாமான்ய மக்களின் உயிர்கள், இயற்கை இடர் பாடுகள் மூலம் போவது தவிர்க்க இயலும். மனித வளர்ச்சி என்பது இயற்கை, மலை காடுகள், விலங்குகள் அழித்து மட்டும் வருவதல்ல என்பதை இனியாவது நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
எழுதியவர் :
முனைவர். பா. ராம் மனோகர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

