இயற்கையின் குழந்தைகள் நாம்(We are children of nature)- Environment - செல்லையா முத்துக்கண்ணன் - பருவநிலை, இயற்கை ,வெப்பநிலை - https://bookday.in/

இயற்கையின் குழந்தைகள் நாம் !

இயற்கையின் குழந்தைகள் நாம் !

“மூலதனம் நூலில் மார்க்ஸ் இயற்கைக்கும், மனிதனுக்குமான தொடர்பு குறித்து கூறும் போது உழைப்பு என்பது எல்லாவற்றும் மேலானது, இயற்கையின் ஒரு பகுதியாக உள்ள மனிதன் தன் உழைப் பாற்றல் மூலம், இயற்கையில் உள் அடங்கி யுள்ள அனைத்து வளங்களை யும், ஆற்றல்களையும் கை, கால் உழைப்பின் மூலம் மட்டுமே தனதாக்கி கொள்கிறான்.  இது மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள பரஸ்பர பரிமாற்ற  உறவாகும்.  ஆனால் இதனை மீறும் வகையில் முதலாளித்துவம் தனது சுரண்டல் கொள்கையால் இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவில் பகைமையை வளர்க்கிறது.  மனித உழைப்போடு இயந்திரங்கள் உதவி கொண்டு பூமியின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் நிலையை  முதலாளித்துவ உற்பத்தி முறை மேற்கொள்கிறது ”

உருக்கும் வெப்பம்

1850 மற்றும் 2019க்கு இடையில் உலகளாவிய சராசரி மேற்பரப்பு வெப்பநிலை 1.07 °C (1.9 °F) ஆகும். தொழில்துறைக்கு முந்தைய காலத்திலிருந்து உலகளாவிய சராசரி வெப்ப நிலை 0.8 முதல் 1.2 டிகிரி செல்சியஸ் (1.4 மற்றும் 2.2 டிகிரி பாரன்ஹீட்) வரை அதிகரித்ததற்கும், 1850 -1900 சராசரியுடன் ஒப்பிடுகையில் 2100 ஆம் ஆண்டளவில் உலகளாவிய சராசரி மேற்பரப்பு வெப்பநிலை 1.0 மற்றும் 1.8 °C (1.8 மற்றும் 3.2 °F) வரை அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.

இயற்கையின் குழந்தைகள் நாம்(We are children of nature)- Environment - செல்லையா முத்துக்கண்ணன் - பருவநிலை, இயற்கை ,வெப்பநிலை - https://bookday.in/

உலக சராசரி வெப்பநிலை இவ்வளவு குறுகிய காலத்தில் 2°C (3.6°F)க்கு மேல் உயர்ந்தால் குறிப்பிடத்தக்க சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்று  காலநிலை விஞ்ஞானிகள் பலர் ஒப்புக்கொள் கிறார்கள். இதனால் பல தாவர மற்றும் விலங்கு இனங்களின் அழிவு, விவசாய முறைகளில் மாற்றங்கள் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவை அடங்கும் .

1901 மற்றும் 2018 க்கு இடையில் உலகளாவிய சராசரி கடல் மட்டம் சுமார் 20 செமீ (7.9 அங்குலம்) உயர்ந்துள்ளது என்றும், முதல் பாதியை விட 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் கடல் மட்டம் வேகமாக உயர்ந்தது என்றும் AR6 அறிக்கை குறிப்பிட்டது.

வளிமண்டலத்தில் கார்பன்-டைஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடுகளின் செறிவுகள் 800,000 ஆண்டுகளுக்கு முந்தைய பனிக்கட்டி களில் காணப்பட்டதை விட தற்போது அதிகமாக இருப்பதாக 2014 இல் IPCC ( காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு) முதன் முதலில் அறிவித்தது. இந்த அனைத்து வாயுக்களிலும், கார்பன்டைஆக்சைடு மிக முக்கியமானது.

18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொழில்துறை யுகத்தின் தொடக்கத்தில், வளி மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு செறிவுகள் ஒரு மில்லியனுக்கு தோராயமாக 280 பிபிஎம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் இறுதியில் அவை 419 ppm ஆகவும், மேலும், புதைபடிவ எரிபொருள்கள் தொடர்ந்து எரிக்கப்பட்டால், 21 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அவை 550 ppm ஐ எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இயற்கையின் குழந்தைகள் நாம்(We are children of nature)- Environment - செல்லையா முத்துக்கண்ணன் - பருவநிலை, இயற்கை ,வெப்பநிலை - https://bookday.in/

பல்லாயிரம் ஆண்டுகளாக உறை நிலையில் இருந்த பனிப்பாறைகள் இன்று வேகமாக உருகி வருகின்றன. நாள்தோறும் வெள்ளப்பெருக்கு, வறட்சி, புயல்கள், நிலச் சரிவுகள், காட்டுத்தீ என்பது பூமியின் ஏதாவது ஒரு பகுதியின் நிகழ்வாக நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்துபோகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் 100க்கும் மேற்பட்ட வகையான தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சி இனங்கள் காடுகள் அழிப்பின் காரணமாக அழிவுக்குள்ளாகின்றன. மழைகாடுகள் அழிப்பால் ஆண்டுக்கு 4000க்கும் மேலான தாவர இனங்களை இழக்கிறோம். 30 சதவீதம் மர இனங்கள் அழியும் தருவாயில் உள்ளதாக பிஜிசிஐ அறிக்கை கூறுகிறது.  இதுவும் அதிகமான தாக்கத்தை உருவாக்கும் கூறுகளில் ஒன்றாகும்.

வெப்ப மயமாதலால்  பரவும் நோய்கள்

மக்களின் வாழ்வாதாரத்தில் குறிப்பாக மனித ஆரோக்கியத்தில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.. உலக சுகாதார அமைப்பு (WHO) அறிக்கையின்படி, கடந்த அரை நூற்றாண்டில் 20 லட்சம் பேர் இறப்பும், 4.3 டிரில்லியன் டாலர் பொருளாதார இழப்பும் பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கிறது. கடும் வெப்ப அலை காரணமாக 65 வயதுக்கு மேற்பட்டவர் களும், பிறந்த ஒரு மாத குழந்தைகளிலும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. குறிப்பாக இருதய நோய், நீரிழிவு, மனநலம், ஆஸ்துமா, புற்றுநோய் மற்றம் சில தொற்று நோய்கள் பிரதான காரணமாக உள்ளது.

தொற்று நோய்கள் சுகாதார நிலைமைகளை மோசமாக்கும் என்று IPCC (Intergovern mental Panel on Climate Change) கணித்துள்ளது. குறிப்பாக வெப்பமண்டல நாடுகளில், வெப்ப நிலை அதிகரிப்பது கொசு பெருக்கம் மற்றும் பிற பூச்சிகளால் மலேரியா, டெங்கு போன்ற நோய்த் தொற்றுகள் அதிகரிக்கும். வெப்பநிலை மாற்றங்களை பொறுத்துக்கொள்ளும் திறன் பிராந்தியத்திற்கு பிராந்தியம் வேறுபடுகிறது.

ஆஸ்துமா மற்றும் பிற சுவாச நோய்கள். இதயப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக ஏற்கனவே சூடான பகுதிகளில் வசிப்பவர்கள், அதிக வெப்பநிலையால் பாதிக்கப் படுகின்றனர், ஏனெனில் அவர்களின் இருதய அமைப்பு தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க கடினமாக உழைக்க வேண்டும். வெப்பநிலை ஓசோன் செறிவை அதிகரிக்கிறது, இது மக்களின் நுரையீரல் திசுக்களை சேதப்படுத்தும் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் மற்றும் நுரையீரல் நோய்கள் உள்ளவர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என மருத்துவ அமைப்புகள் கூறுகிறது.

இயற்கையின் குழந்தைகள் நாம்(We are children of nature)- Environment - செல்லையா முத்துக்கண்ணன் - பருவநிலை, இயற்கை ,வெப்பநிலை - https://bookday.in/

மனித உடலில் சேமிக்கப்படும் வெப்பத்தின் அளவு (1) சுற்றுச்சூழல் வெப்ப அழுத்தத்தின் காரணமாக வளர்சிதை மாற்ற செயல்முறைகளினால் வெப்பத்தை அகற்ற இயலாத நிலை ஏற்படுகிறது. (உதாரணமாக, அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம், குறைந்த காற்று, அதிக வெப்ப கதிர்வீச்சு) ஆகியவைகளால் தீர்மானிக்கப்படுகிறது.  (2) வெப்ப இழப்புக்கு தடையை உருவாக்கும் ஆடை,  (3) வெளிப்புறத்தில் இருந்து உடலில் ஏற்படும் வெப்ப அதிகரிப்பு, இவற்றின் காரணமாக உடலின் உட்புற வெப்பநிலையை சீராக்க முடியாமல், வெப்ப அதிகரிப்பை அகற்றும் முயற்சியில் வெப்ப சோர்வு மற்றும் வெப்பமூட்டும் அபாயத்தை அதிகரிக்கிறது. குளிர்ச்சியடைய முயற்சிக்கும் போது உடலில் ஏற்படும் சுமை, இதயம் மற்றும் சிறுநீரகங்களை அழுத்துகிறது. இதன் விளைவாக, உடலின் நாள்பட்ட வெப்ப உச்சநிலை  இருதய அழுத்தம், நுரையீரல் சுவாசம்,  சீறுநீரக பாதிப்புகள், நீரிழிவு மற்றும் அது சார்ந்த பாதிப்புகளை தீவிரமாக்குகின்றன.

பணக்கார சமூகங்கள் அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்தலாம்,  எடுத்துக்காட்டாக, அதிக சக்தி வாய்ந்த குளிரூட்டிகளின் பயன்பாடு மற்றும் வீடுகளின் கட்டுமானம் ஆகியவை வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கின்றன. மறுபுறம், சாமான்ய மக்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை

கார்ப்ரேட் லாபவெறியும் – மாற்று நடவடிக்கைகளும்

பருவநிலை நெருக்கடிக்கு வழிவகுக்கும் வளிமண்டல பசுமை வாயுவின் அதிகரிப்பு நிச்சயமாக மனித நடவடிக்கைகளால் குறிப்பாக ஏகாதிபத்திய நாடுகளால் பெரும் பகுதி ஏற்படுகிறது.  2030ல் 50 சதவீதம் குறைய வேண்டிய உலகளாவிய உமிழ்வுகள் உண்மையில் 16 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வளர்ந்த நாடுகளில் அதிக வருமானம் உள்ள 10 சதவீதம் வீடுகளில் இருந்து 45 சதவீதம் பசுமை குடில் வாயு வெளியிடப்படுகிறது. அதே நேரத்தில் உலகின் கடைநிலையில் வருமானம் உள்ள 50 சதவீதம்  வீடுகளில் 15 சதவீதம் வெளிப்படுகிறது. ஆனால் உண்மையில் அதிகம் பாதிக்கப் படுபவர்கள்  சாமான்ய ஏழை, எளிய மக்களே. உண்மையில் இன்று  3.6 பில்லியன் மக்கள் கடும் பருவநிலை மாற்ற பாதிப்பால் அவதிக்குள்ளாகின்றனர். ( ஆர்டிக், மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகள், தெற்கு ஆசியா, சஹாரா ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் சிறு தீவு பகுதிகளில் கடும் வறுமையும், நீர் பற்றாகுறையும் கடும் பிரச்சனைகளாக மாறி வருகின்றன ).

இயற்கையின் குழந்தைகள் நாம்(We are children of nature)- Environment - செல்லையா முத்துக்கண்ணன் - பருவநிலை, இயற்கை ,வெப்பநிலை - https://bookday.in/

பசுமை வாயு உமிழ்வு என்பது 2019ல் 59 ஜிகாடன்னாக இருந்தது. 2010ம் ஆண்டை விட 12 சதவீதம் அதிகமாகும். 1990 யை விட 54 சதவீதம் அதிகரித்துள்ளது. இது உலகமயத்தின் சாபக் கொடையாகும். வரும் ஆண்டுகளில் 2030ல் 33.7 ஜிகா டன்னாகவும், 2040ல் 18.3 ஜிகா டன்னாக வும் குறைக்கப்பட வேண்டும்.

இதற்காக 160 நாடுகள் ஒன்று சேர்ந்து பருவநிலை மாற்றத்திற்கான  ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை உருவாக்கி அதில் வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்றும் பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கோரினால், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் வளர்முக நாடுகளுக்கு குறைந்தபட்சம் 100 பில்லியன் டாலர் நிதி உதவி தருவது என்ற உறுதிமொழியை தள்ளிப்போட்டது மட்டுமல்ல, சுமையை வளர்முக நாடுகள் மீது திணிக்க முயற்சி செய்கின்றன. ஆண்டுக்கு  127 பில்லியன் டாலர் செலவழிக்க வேண்டிய தருணத்தில், 23 பில்லியன் டாலர் முதல் 46 பில்லியன் டாலர் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. பசுமை வாயுவை அதிகரிப்பதில் ஏகாதி பத்திய நாடுகளின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது

கொரோனா தொற்றுக்குபின் உலக அளவில் வளர்முக நாடுகள் கடும் பாதிப்பை பொருளாதார தளத்தில் சந்தித்து உள்ளன. இந்த நிலையில்  பாரீஸ் ஒப்பந்த அடிப்படையில் கூடுதலான நிதியை வளர்ந்த நாடுகள் ஒதுக்க வேண்டும். உலகளாவிய வெப்பமயமாதலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உற்பத்தி சக்திகளின் நெருக்கடி, உலகளாவிய தெற்கில் உள்ள பல நூற்றுக்கணக்கான கோடி மக்களின் நல்வாழ்வுக்கு ஆபத்தாக இருக்க கூடாது எனில் இதற்கு சமபங்கு அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும்.

உலகமயத்தின் லாபவெறி காரணமாக காடுகளும், விவசாய நிலங்களும் மாற்றி அமைக்க ப்படுகின்றன. நகரமயமாக்கலை வேகமாக ஊக்குவிக்கின்றன.  நகர கட்டமைப்புகளை மாற்றி அமைத்து பிரமாண்ட மாக்குகின்றன. ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் உழைக்கும் மக்களின் குடியிருப்புகளை அப்புறப்படுத்தி அழகிய நகரங்கள் என வானுயுயர்ந்த கட்டுமானங்களை முன் வைக்கிறது. மின் உற்பத்தி, கட்டிடங்கள், தொழில்துறை மற்றும் தனி நபர் போக்குவரத்து ஆகியவை உலகளாவிய உமிழ்வுகளில் 80% க்கு காரணமாகின்றன.  மீதி விவசாயம், வனவியல் மற்றும் பிற நில பயன்பாடுகள் ஆகியவையாகும்.

இந்தியாவில் கூட மொத்த உற்பத்தியில் 75 சதவீதம் நகர்புறம் சார்ந்து உள்ளது.  நாடு விடுதலை அடைந்த போது 14 சதவீதம் நகர்புறங்களில் இருந்த மக்கள் தொகை இன்று 35 சதவீதத்தை கடந்துள்ளது.  தமிழகத்தில் ஏறத்தாழ 48 சதவீதத்தை  கடந்துள்ளது. உலகின் மாசடைந்த காற்றை சுவாசிப்பதில் 30ல் 21 நகரங்கள் இந்தியாவில் தான் உள்ளது.

இயற்கையின் குழந்தைகள் நாம்(We are children of nature)- Environment - செல்லையா முத்துக்கண்ணன் - பருவநிலை, இயற்கை ,வெப்பநிலை - https://bookday.in/

பூமி பந்திற்கு விரோதமான   பருவநிலை மாற்றத்தை குறைக்கவும், கரிய மில வாயுவை கட்டுக் குள் கொண்டு வர உடனடியாக பல செயல்திட்டங் களை உருவாக்க வேண்டும் என உலக ஆதார நிறுவனம் சில  ஆலோசனைகளை முன்வைக்கிறது. குறிப்பாக, நிலக்கரி பயன்பாட்டை குறைப்பது,  இயற்கை ( சூரிய, காற்று, நீர் ) வள ஆற்றல்களை அதிகப் படுத்துவது, சுற்றுசூழலுக்கு கேடுவிளைவிக்கும் கட்டுமானப்பணிகளை குறைப்பது,  மின் வாகனங் களுக்கு முக்கியத்துவம் அளிப்பது, பொது போக்குவரத்துகளை அதிகப் படுத்துவது, தனிநபர் வாகனங்களை குறைப்பது, சைக்கிள் பயணத்தை ஊக்குவிப்பது,  உணவுப் பொருட்கள், காய்கறிகள் வீணாக்குவதை குறைப்பது, வனங்களை அழிக்கப்படுவதை தடுப்பது, சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தும் நெகிழிகளை கட்டுப் படுத்துவது அவசியமாகும்.

கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் இயற்கை சார்ந்த வாழ்வியல்

சங்க காலம் தொட்டு இன்று வரை மனிதர்களுக்கும், இயற்கைக்குமான போராட்டத்தில் இன்று முதலாளித்துவ அமைப்பு முறை இயற்கையை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தீவிர முயற்சிகளை மேற்கொள்கிறது.  இதன் விளைவை பூமி பந்து சந்தித்து வருகிறது. புவி வெப்பமய மாக்கலும், புதிய நோய்களின் தோற்றங்களும் மனித குலத்தை கலங்கடித்து வருகிறது.

“சேரும் நாற்றமும் பலவின் சுவையும்,

வேறு படக் கவினிய தேம்  மாங் கனியும்,

பல் வேறு உருவின் காயும், பழனும்,

கொண்டல் வளர்ப்பக் கொடி விடுபு கவினி,

மென் பிணி அவிழ்ந்த குறு முறி் அடகும்,

அமிர்து இயன்றன்ன தீம் சேற்றுக் கடிகையும்,

புகழ் படப் பண்ணிய பேர் ஊன் சோறும்,

கீழ்  செல விழ்ந்த கிழங்கோடு பிறவும்,

இன் சோறு தருநர் பல் வயின் நுகர”,.

இயற்கையின் அழகுணார்ந்த நாச்சினார்கினியர் மதுரை காஞ்சியில் பாடுகிறார்..

இந்த வளமிகுந்த நாடும் ஊரும்,

“நாடு எனும் பேர் காடு ஆக,

ஆ சொந்த வழி மா சேப்ப,

ஊர் இருந்த வழி பாழ் ஆக,

என ஒரு பகுதி மனித கூட்டத்தின் போர் வெறியில் படையெடுப்பிற்கு முன் நாடாக, ஊராக இருந்தது பின் காடாக மாறியது அத்தோடு கொடிய விலங்குகளின் தங்குமிடமானது என்று கூறுகிறது கி.பி இரண்டாம் நூற்றாண்டு இலக்கியமான மதுரை காஞ்சி.

இயற்கையோடு இணைந்த மனித வாழ்வும்,  சங்க காலமும்.

ஐம்பூதங்களின் அவசியத்தை,

“மண் திணிந்த நிலனும்

நிலம் ஏந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித்தலை இய தீயும்

தீ முரணிய நீரும்

என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை போல” என்ற புறநானூற்றுப் பாடல் மானிடத்தின் தேவைக்குப் பயன்பட வேண்டும் என்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் சூழலியல் சார்ந்த சிந்தனை இருந்தமை அறியமுடிகிறது.

இயற்கையின் குழந்தைகள் நாம்(We are children of nature)- Environment - செல்லையா முத்துக்கண்ணன் - பருவநிலை, இயற்கை ,வெப்பநிலை - https://bookday.in/

நெய்தல் நிலத்தில்  இயற்கையின் பேரழிவில் இருந்து காக்க,

“தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ

படப்பை நின்ற முடந்தாள் புன்னை” (அகநானூறு.180)  கடல் நிலப்பரப்புகளில் ஆழிப் பேரலைகள் போன்ற சேதங்கள் ஏற்படாமலிருக்க புன்னை, தாழை ஞாழல் மரங்களைக் கொண்டு கடல்நீரைத் தடுத்துள்ளனதை அறியமுடிகிறது.

மருத நிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, நிலச்சரிவுகளினால் மக்களுக்கு பாதிப்புகள் நிகழாத வண்ணம்  பாதுகாக்க, மரங்கள் இருந்தமை குறித்து

“வளிபொரு மின்னொடு வான்இருள் பரப்பி,

விளிவு இன்று கிளையோடு மேல்மலை முற்றி,

தளிபொழில் சாரல் ததர் மலர் தாஅய்,

ஒளிதிகழ் உத்தி உருகெழு நாகம்,

அகரு, வாழை, ஞெமை, ஆரம் இனைய,

தகரமும், ஞாழலும், தாரமும், தாங்கி,

நனிகடல் முன்னியது போலும்,

தீம்நீர்,, வளிவரல் வையை வரவு” (பரிபாடல்.12)

வைகையில் ஆறு கடல்போல் விரைந்து வந்தாலும் நிலச்சரிவுகள் ஏற்பட்ட செய்திகள் இல்லை.சங்க இலக்கியங்களில் ஆற்றுப் பெருக்கு ஏற்பட்டிருந்த காலங்களிலும் உயிர்ச்சேதம் நிகழவில்லை என்பதை அறியமுடிகிறது.

நம் சூழல்களைச் சுற்றிலும் மாசுபாடு ஏற்படுகிறது.  அதனால், பழந்தமிழரிடம் காற்று மாசுபாடு இருந்தமை பட்டினப்பாலையில்,

கோள் தெங்கின் குலைவாழைக்,

காய்க்கமுகின் கமழ் மஞ்சள்,

இனமாவின் இணர்ப்பெண்ணை,

முதற்சேம்பின் இளைஇஞ்சி”( பட்டினப்பாலை.9-19)

இப்பாடலில், தென்னை, வாழை, பாக்கு, பனைமரங்கள் போன்றவைகள் மருதநிலத்தில் காணப்பட்டிருக்கும். இவை புகைகளையும், தூசுகளையும் தடுக்கின்றவைகளாக இருந்துள்ளதை காண முடிகிறது.  காற்று மாசுபாட்டினைத் தடுக்க மரங்கள் பயன்பட்டிருக்கிறது.  மரங்கள் காற்றில் கலந்து வருகின்ற மாசுக்களை இலைகளால் தடுப்பதற்கு பயன்பட்டுள்ளமை அறியமுடிகிறது.

இயற்கையின் குழந்தைகள் நாம்(We are children of nature)- Environment - செல்லையா முத்துக்கண்ணன் - பருவநிலை, இயற்கை ,வெப்பநிலை - https://bookday.in/

 

இன்னும் ஒரு படி மேலே சென்று தமிழ்மரபில் இயற்கையை தனது குடும்பத்தில் ஒருவராக பார்ப்பதும் நிகழ்ந்துள்ளது. மரங்களையும், செடிகளையும், போற்றியுள்ளமையைக் காட்டிலும், உடன்பிறப்பாக எண்ணி வாழ்ந்துள்ளதை,

“விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி,

மறந்தனம் துறந்த காழ்முளை அகைய,

நெய்பெய் தீம்பால் பெய்து இனிது வளர்ப்ப,

நும்மினும் சிறந்தது, நுவ்வை ஆகுமென்று,

அன்னை கூறினள் புன்னையது சிறப்பே”(நற்றிணை.172)

இவற்றில் தலைவி தான் சிறுவயதாக இருக்கும் போது புன்னைச் செடி ஒன்றினை வளர்த்து வருகிறாள்.  அச்செடிக்கு நெய்கலந்த பாலினை நீராக ஊற்றி வளர்க்கிறாள்.  அதனால் தன் தலைவனுடன் பேசி மகிழ நாணம் கொள்வதாக அமைந்துள்ளது. இயற்கையை போற்றி வாழ்ந்துள்ளதை அறியமுடிகிறது.  எல்லா உயிர்களையும் தம் உயிர் போல எண்ணி வாழந்த்தை அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் மக்கள் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்துள்ளனர். மரங்கள், நீர், நிலம், காற்று போன்ற இயற்கை சார்ந்த சூழல்களில் வாழ்க்கையை நடத்தியுள்ளமை போற்றற் குரியதாகும்.

இயற்கையின் குழந்தைகள் நாம்(We are children of nature)- Environment - செல்லையா முத்துக்கண்ணன் - பருவநிலை, இயற்கை ,வெப்பநிலை - https://bookday.in/

பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன், கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன், மண்மீதுள்ள  மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள், யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே இன்பமுற்றன் புடன், இணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும் என எட்டையபுரத்து கவிஞன்  சூழலியலைக் காக்க வரம்கோரி கோரிக்கை வைக்கிறார்.

கோர முகத்தை தோலுரித்த மார்க்சியம்

19 ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவத்தின் கோர முகத்தை கிழித்து தொங்கவிட்ட காரல் மார்க்சும், ஏங்கல்சும் முதலாளித்துவ பாணியிலான உற்பத்தி முறையில் உற்பத்தி உறவுகளில் ஏற்படும் மாற்றங்களால் இயற்கையை எப்படி சீரழிக்கிறோம். அதன் பதிலடி எப்படி இருக்கும் என்பதை தெள்ள தெளிவாக அறிவியல் பூர்வமாக முன் வைத்தார்கள்.

“நமது வாழ்க்கைக்கான முதல் நிபந்தனையாக உள்ள ஒரே ஒரு புவி மண்டலத்தை முதலாளித்துவம் கூவி விற்கப்படக் கூடிய ஒரு வணிகப் பொருளாக்கியுள்ளது” நமது வாழ்க்கை இயற்கையிலிருந்து பெறப்பட்டது. எனவே நம் பயணம் தொடர வேண்டுமானால் இயற்கையுடன் இடைவிடாத உரையாடலை செய்ய வேண்டும்”.

நாம் இயற்கையின் ஒரு பகுதியாக பிணைக்கப் பட்டுள்ளோம். ”நாம் வாழும் காலத்தைப் பொறுத்தவரை எவ்வகையிலேனும், இலாபமீட்டுவதையே ஒரே குறிக்கோளாகக் கொண்ட முதலாளியச் சமூக அமைப்பு முறையும், அதனோடு சேர்ந்த அரசியல் சக்திகளும் தான் மனித குலத்தின் இருப்புக்கே அச்சுறுத்தலாக இருக்கும் அளவிற்கு இயற்கையை அழிப்பதிலும், சற்றுச் சூழல் கேடுகளை மாசுகளை உருவாக்குவதிலும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன”  என மார்க்ஸ் கூறுகிறார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் 23 ஆவது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானம் பத்தி 1.63ல் ‘’பருவநிலை மாற்றம் என்பது ஒரு வர்க்கப் பிரச்சனையே ஆகும். ஏனெனில் இயற்கை வளங்களை கட்டுப்பாடில்லாமல் முதலாளித்துவம் கொள்ளையடிப்பதே தற்போதைய பேரழிவு நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என பட்டவர்த்தனமாக முதலாளித்துவத்தின் இயற்கை வள சூறையாடல்களை சாடுகிறது.”

இன்னும் ஒருபடி மேலே போய் ”பூமிக்கோளத்தின் வடபகுதியில் 1.5 செல்சியஸ் வெப்பநிலை உயருமானால் நம் முன்னால் காத்திருக்கும் பயங்கரங்களை வெளிப்படுத்துவதாகவும், இது அமைகிறது. 2021 கோடை காலத்தில் வெளிப்பட்ட மிக மோசமான பருவநிலை நிகழ்வுகள் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை மட்டுமல்லாது அதன் தாக்கம் என்பது மையப் பகுதியில் உள்ள வளரும் நாடுகளை குறிப்பாக இந்தியாவிலும் கூட அதிக மழைப் பொழிவு, அதன் விளைவாக நிலச்சரிவு, மண் சரிவு, வெள்ளம், நகர்ப்புறங்களை வெள்ளம் சூழ்தல் ஆகிய நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது” என குறிப்பிடுகிறது. உண்மையில் 2024 கோடைக்கு பிந்தைய காலத்தில் இதன் தாக்கம் உத்தரகண்ட், கேரளா, ஆந்திரா உள்ளிட்டு நாட்டின் பல பகுதிகளில் இந்த பாதிப்பை பார்த்து வருகிறோம்.

முதலாளித்துவ உற்பத்தி முறையை ஒழிக்காமல் இயற்கையையும்மனித குலத்தையும் காப்பாற்ற முடியாது என்பதுதான் ” மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரின் கருத்துகளாகும்.  மார்க்ஸ் மனிதனின் எதார்த்த வாழ்வியலின் தேவைகளை பற்றித்தான் கூறுகிறாரே தவிர, வரம்பற்ற நுகர்வுகளை பற்றி கூறவில்லை. ஆனால் முதலாளித்துவம் சந்தைக்கான மனிதர்களை உருவாக்கு கிறது. நுகர்வை நுகர்வு வெறியாக மாற்றுகிறது. இதன் லாப வேட்கையே அனைத்தையும் அழித்தொழிக்கும் கட்டுபாடற்ற நிலைக்கு முதலாளித்துவத்தை தள்ளிச் செல்கிறது. அதை மனிதர்கள் ஏற்கும் வண்ணம் பண்பாட்டின் பெயரில், பல அடையாளங்களின் பெயரில் முன்னெடுக்கிறது.

எனவே இந்த பூமி பந்து மனிதர்கள் விருந்தினர்களாக வந்து செல்லும் உரிமையே உள்ளது. இது இயற்கையின் அனைத்து உயிரினங்களுக்குமானது என்ற காரல் மார்க்ஸ் மகத்தான வார்த்தைகளே, பூமி வெப்பமயமாக்கல், பருவமநிலை மாற்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க உதவிடும். ஏகாதி பத்திய உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்டம் என்பது புவிப்பந்தை பாதுகாக்கும் போராட்டத்தோடு மட்டுமல்ல, உழைக்கும் மக்களின் சமத்துவ உரிமைக்களுக்காகவும், ஆரோக்கியமான வாழும் உரிமைக்களுக்கான போராட்டத்தோடு இணைந்தது.

கட்டுரையாளர் : 

இயற்கையின் குழந்தைகள் நாம்(We are children of nature)- Environment - செல்லையா முத்துக்கண்ணன் - பருவநிலை, இயற்கை ,வெப்பநிலை - https://bookday.in/

செல்லையா முத்துக்கண்ணன்

நன்றி : https://aravinthanmr.blogspot.com/

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *