தடுப்பூசி போட நாங்க ரெடி.. நீங்க ரெடியா..? – தேனி சுந்தர் TNSF



மக்கள் மத்தியில் இன்னும் கொரானா பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை.. அச்சம் இல்லை..  இன்னொரு புறம் தடுப்பூசி குறித்து தவறான கருத்துகள் மிக மோசமான அளவிற்கு பரவியுள்ளன. எனவே மக்கள் அனைவரும் அச்சம் தவிர்த்து தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும். அவ்வாறு சமூகத்தில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்தி சமூக நோய்த் தடுப்பாற்றல் பெற்றால் மட்டுமே கொரானா பெருந்தொற்றில் இருந்து மானுட சமூகம் மீண்டு வர முடியும் என்று கூறப்படுகிறது.. தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்படுகிறது.. அந்த கருத்துகள் முற்று முழுதாக உண்மையானவை.. மறுப்பதற்கு ஏதுமில்லை..
அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு அதிபர் ஜோபைடன் பேசியது விவாதமாகி இருக்கிறது.. தடுப்பூசி முழுமையாக செலுத்தியவர்கள் முகக் கவசம் களைந்து முகத்தில் புன்னகையோடு மற்றவர்களை வரவேற்கலாம்.. இன்னும் முழுமையாக தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசியுள்ளார்.. அதில் தான்  முகக்கவசம் தொடர்பாக இவ்வளவு தூரம் அவசரப்பட வேண்டியதில்லை என்று கருத்துகள் வந்துள்ளன..
அவ்வளவு நம்பிக்கையோடு அவர் பேசுவதற்கு காரணம் அந்த நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளது.. எனவே அங்கு தொற்று பரவும் வீதம் குறைந்துள்ளது.. தினசரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.. சாவும் குறைந்துள்ளது.. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் நோயால் மரணித்தவர்களின் எண்ணிக்கை ஆகிய இரண்டிலும் அமெரிக்காவை முந்தும் தகுதி உலகில் மோடி தலைமையிலான இந்தியாவிற்கு மட்டுமே உள்ளது என்று நகைச்சுவையாக நக்கலடிக்கப்படுகிறது.. அந்த நக்கலுக்கு பின்னுள்ள துன்பமும் துயரமும் கையறு நிலையும் எதிரி நாட்டுக்கும் கூட வந்து விடக்கூடாது என்பதே நமது கவலை..
அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் 12 கோடி பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. அந்நாட்டின்  மொத்த மக்கள் தொகையில் அது கிட்டத்தட்ட 37 சதவீதம் ஆகும்.. இந்தியாவில் அதுவே 4 கோடி மக்களுக்கு மட்டுமே முழுமையாக செலுத்தப் பட்டுள்ளது.. மொத்த மக்கள் தொகையில் அது கிட்டத்தட்ட 4 சதவீதம் ஆகும்..


உலக அளவிலேயே இதுவரையில் 150 கோடி டோஸ்கள் தான் போடப்பட்டுள்ளன.. அதிலும் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 35 கோடி பேர் மட்டுமே.. இது உலகின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 4.4% மட்டுமே ஆகும்.. ஆக உலக அளவில் நாம் பேசுவதாக இருந்தாலும் உள்ளூர் அளவில் பேசுவதாக இருந்தாலும் நாம் இப்போது தான் தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கி இருக்கிறோம் என்று தான் கூற வேண்டும்..
இந்தியாவில் தடுப்பூசி பணிகள் தொடங்கி இத்தனை மாதங்கள் கடந்தும் இதுவரை நாம் எட்டியுள்ள மக்கள் வெறும் 4% மட்டுமே.. மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரம்மாண்ட அறிவிப்பு வெளிவந்து இவ்வளவு நாட்கள் ஆகியும் கூட இன்னும் பல மாநிலங்களில் அந்தப் பணி தொடங்கப் படவில்லை.. பொதுவாக எல்லா விசயங்களிலும் மையப்படுத்தப்பட்ட அணுகுமுறையைக் கையாளும் மத்திய அரசு, வலுக்கட்டாயமாக மாநில உரிமைகளைப் பறித்து அடியில் போட்டு உட்கார்ந்து கொண்டு அதிகாரம் செய்யும் மத்திய மோடி அரசு, இந்த சுகாதாரப் பேரிடர் காலத்தில் மட்டும் இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் நான் கவனிப்பது இல்லை.. என் தம்பிமார்களே பார்த்துக் கொள்வார்கள் என்பது போல மாநிலங்களின் தலையில் கட்டிவிட்டு பேடித் தனமாக ஒளிந்து கொண்டிருக்கிறது..
எடுத்ததற்கெல்லாம் ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே மதம் என்று பாட்டுப்பாடும் மத்திய அரசு தடுப்பூசியைப் பொருத்தவரை ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்து நாட்டின் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்குவது என்கிற தனது பொறுப்பில் இருந்து தப்பி ஓடியது மட்டும் அல்லாமல் தனக்குப் போக மற்றவர்களுக்கு எந்த விலைக்கும் விற்றுக் கொள் என்று தடுப்பூசி விலை நிர்ணய உரிமையை தனியார் நிறுவனங்களுக்கே வழங்கி விட்டு விலகி நின்று வேடிக்கை பார்க்கிறது..
கிட்டத்தட்ட 150 கோடி மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே என்று பார்த்தாலும் 100 கோடி பேர் வருகிறார்கள்.. ஒருவருக்கு 2 டோஸ் என்றால் 200 கோடி டோஸ் உடனடியாக வேண்டும்.. 45 வயதிற்கு மேற்பட்ட மக்கள் 30 கோடி என்று வைத்துக் கொண்டாலும் மீதமுள்ள 70 கோடி மக்கள் சந்தையில் நிறுத்தப்படுகிறார்கள்.. அவர்களில் இருக்கக்கூடிய பொது சுகாதார கட்டமைப்பின் மூலம் தடுப்பூசி பெறுபவர்கள் சரி பாதி என்று வைத்துக் கொள்வோம்.. மீதி மக்கள் தனியாரின் வேட்டைக்காடாகத் தான் பார்க்கப்படுவார்கள்..
தடுப்பூசி குறித்த அச்சமின்றி அனைவரும் தயாராகி விட்டோம்.. தடுப்பூசி போட வருகிறோம் என்றே வைத்துக் கொள்வோம்… யதார்த்த நிலைமை என்ன..? அரசின் தயார் நிலை என்ன..? கொரனா தொற்றாளர்களைக் கூட கையாண்டு விட முடியும்.. எந்த அரசாக இருந்தாலும் மக்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்பதை தவிர இப்போதைக்கு வேறு எந்த வழியும் இல்லை..


காரணம், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்னும் தடுப்பூசி போட்டு முடிக்கவில்லை.. போட முடியவில்லை.. தடுப்பூசி இருப்பில்லை.. உற்பத்தி போதுமான அளவில் இல்லை.. 18-45 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி குறித்து சரியான பதில் இல்லை.. காரணம் ஒட்டுமொத்த இந்திய மக்களின் உயிரும் சீரம் நிறுவனம், பாரத் பயோ டெக் ஆகிய  இரண்டே இரண்டு நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.. அவர்கள் முக்கி முக்கி உற்பத்தி செய்தாலும் அனைத்து மக்களுக்கும் 2 டோஸ் தடுப்பூசி தயாரிக்க வருடக் கணக்கில் ஆகும்.. அதற்குள் ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்களுக்கு ஆறு மாதம், ஒரு வருடம் கடந்து விடலாம்.. வைரஸ் மேலும் மேலும் மாற்றம் அடையலாம்.. எனவே ஒட்டுமொத்த மக்களின் எதிர்காலமும் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது.. வழக்கம் போல ரஷ்யா உதவிக்கு வந்துள்ளது. ஸ்புட்னிக் 80 கோடி டோஸ்கள் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது…
இந்த சூழ்நிலையில் தான் ஆரம்ப கட்டங்களில் ஆய்வுக்கு உட்படுத்தி மருந்துகளின் எதிர்ப்பாற்றல் காலம் கணக்கிடப்பட்டது.. ஆனால் இப்போது மேடைகளில் சிறப்பு பேச்சாளர் வரும் வரையில் நேரத்தை இழுப்பதற்காக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்  பேசிக் கொண்டிருப்பார்கள் அல்லவா அதுபோல  மருந்துகள் வந்து சேரும் காலத்தை மனதில் வைத்து மருந்தின் வீரியம் குறித்து கணக்கிடப்படுவதாக அல்லது அவ்வாறு கூறப்படுவதாகவே தெரிகிறது…
எனவே இந்த கொரானா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள இந்த சுகாதார பேரிடர் காலத்தில் நாம் முன்னுரிமை கொடுத்தும் முக்கியமாகவும் பிரதானமாகவும் எதைப் பேச வேண்டும்..?
ஆம், நீங்கள் நினைப்பது சரிதான்..
நாட்டில் உள்ள அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும் பயன்படுத்த வேண்டும்.!
அரசே பொதுத் துறை நிறுவனங்கள் மூலமாக தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும்..!!
இதற்கான குரல் தேசமெங்கும் ஒலிக்க வேண்டும்..!!!
*தேனி சுந்தர்*