1839 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வில்லியம் எராஸ்மஸ் டார்வின் பிறந்த போது, அவரது தந்தை சார்லஸ் தன்னுடைய முதல் குழந்தை பற்றி தான் கவனித்த அனைத்தையும் ஒரு குறிப்பேட்டில் பதிவு செய்யத் தொடங்கினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் இப்போது இருக்கும் அந்தக் குறிப்பேடு ஒரு தந்தை தன்னுடைய மகனின் நடத்தைகளை மகிழ்ச்சியுடன் கவனித்து பதிவு செய்ததைப் போல அல்லாமல், சிறந்ததொரு ஆய்வு ஆவணமாகவே இருக்கிறது. ‘முதல் வாரத்தில், கொட்டாவி விட்டு கைகளை முறுக்கிக் கொண்டு, வயதான மனிதரைப் போலவே விக்கல், மூக்கை உறிஞ்சுவது …’ என்று அதில் உள்ள முதல் குறிப்பு செல்கிறது.

C:\Users\Chandraguru\Pictures\Darwin\p03mww9p.jpg
Image Source: Pinterest

டார்வின் கோட்பாடுகளைப் பற்றி இன்றைக்கு நமக்கு நன்றாகத் தெரியும் என்றாலும், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை – குறிப்பாக அவருடைய குடும்ப வாழ்க்கை – அவரது ஆய்விற்கு எவ்வாறு உதவியது என்பது பற்றி நாம் அறிந்திருக்கவில்லை. அவர் எழுதிய விரிவான கடிதங்களும், குறிப்பேடுகளும் பரிணாம வளர்ச்சியின் தந்தை என்றழைக்கப்படுபவரின் மற்றுமொரு சுவாரஸ்யமான பக்கத்தை, அதாவது டார்வினை குடும்ப மனிதனாக வெளிப்படுத்துகின்றன. மனித பரிணாம வளர்ச்சி பற்றிய புரிதலுக்கு அவருடைய குழந்தைகளின் வளர்ச்சி டார்வினுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.

லண்டன் மிருகக்காட்சிசாலையின் முதல் ஒராங்குட்டானான ஜென்னியை டார்வின் பார்த்து வந்த ஓராண்டிற்குப் பிறகு டார்வினின் மகனான வில்லியம் பிறந்தார். டார்வினைப் பொறுத்தவரையில் அந்த ஒராங்குட்டான் மனித இனம் தோன்றியதைக் காண்பதற்கான ஜன்னலாக இருந்தது என்று டார்வினின் பதிப்புகள் அனைத்தையும் கொண்டிருக்கும் டார்வின் ஆன்லைன் என்ற தளத்தின் இயக்குநரும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவருமான ஜான் வான் வைஹ் கூறுகிறார். டார்வினிடம் மனிதன் எவ்வாறு தோன்றினான் என்பது குறித்த கருத்து அதற்கு முன்னரே தோன்றியிருந்த போதிலும், தனது கோட்பாடுகளைச் சோதித்துப் பார்க்கும் வகையில் மனித இனத்தோடு மிக அதிகமான உறவைக் கொண்டிருக்கும் மனிதக்குரங்கு வகை எதையும் அதற்கு முன்னர் அவர் பார்த்திருக்கவில்லை. ஜென்னியைச் சந்தித்த பிறகு மனிதக்குரங்குகளுடன் நமக்குள்ள உறவு பற்றிய அவரது கருத்துக்கள் உறுதிப்படுத்தப்பட்டன. தான் கொண்டிருந்த கருத்துக்கள் சரியானவையே என்ற முடிவிற்கு ஜென்னியின் முகத்தோற்றங்கள், சமூக நடத்தைகள் ஆகியவற்றைக் கண்ட போது மனிதர்களுக்கும், மனிதக்குரங்குகளுக்கும் இடையே உள்ள உண்மையான உறவை அறிந்து கொள்ள விரும்பிய டார்வின் வந்து சேர்ந்தார் என்று வான் வைஹ் கூறுகிறார்.

ஜென்னியின் நடத்தைகள் எவ்வாறு மனிதர்களைப் போலவே இருந்தன என்பது பற்றி தனது சகோதரி சூசனுக்கு டார்வின் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் ‘அங்கிருந்த காப்பாளர் அவளிடம் ஆப்பிள் ஒன்றைக் காண்பித்தார். அவர் அதை அவளிடம் கொடுக்கவில்லை என்றதும் தரையில் படுத்து, கால்களை உதைத்து, சப்தம் எழுப்பி குறும்புத்தனம் கொண்ட  குழந்தையைப் போலவே ஜென்னி நடந்து கொண்டாள்’ என்று டார்வின் குறிப்பிடுகிறார்.

அதற்குப் பிறகு மகன் பிறந்த போது, மனிதர்களின் குழந்தைகள் எவ்வாறு வளர்ச்சி அடைகின்றன என்பதை நேரடியாகக் கண்டறிந்து, மனிதர்களுக்கும், விலங்குகளுக்குமான உறவை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு டார்வினுக்கு கிடைத்தது. தன்னுடைய மகனை அவர் பல வேளைகளில் ‘அது’ என்றே குறிப்பிடுகிறார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டார்வினின் கடிதத் தொடர்புகள் திட்டத்தில் பணிபுரியும் ஆலிசன் பியர்ன் கூறும் போது, பல பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளைப் பற்றிய குறிப்புகளை எழுதி வைத்திருக்கும் போதிலும், அவை எதுவும் இது போன்று ஆய்வுக் குறிப்புகளாக இருந்ததில்லை என்கிறார்.

மனிதக்குரங்கைப் போல எண்ணிக் கொண்டு தன்னுடைய இளம் குழந்தையிடம் சீண்டி விளையாடியது பற்றி டார்வின் எழுதியுள்ள குறிப்புகள், நகைச்சுவை உணர்வு கொண்ட, அதே நேரத்தில் ஆர்வமுள்ள தந்தையாக டார்வின் இருந்ததாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன என்று வான் வைஹ் கூறுகிறார்.

C:\Users\Chandraguru\Pictures\Darwin\Two Books.jpg
The Expression of the Emotions in Man and Animals Book by Charles Darwin

தன்னுடைய குடும்பத்தினர், ஜென்னி பற்றி டார்வின் ஆரம்பத்தில் எழுதிய குறிப்புகளின் பாதிப்பைக் கொண்டதாகவே அவரால் எழுதப்பட்டு 1871ஆம் ஆண்டு வெளியான மனிதனின் தோற்றம் (தி டிசண்ட் ஆஃப் மேன்), மனிதர்கள், விலங்குகளின் உணர்வுகளின் வெளிப்பாடு (தி எக்ஸ்பிரஷன் ஆஃப் தி எமோஷன்ஸ் இன் மேன் அண்ட் அனிமல்ஸ்) என்ற புத்தகங்கள் இருந்தன.

வில்லியம் பற்றிய எழுதிய குறிப்பில், பயமுறுத்துகின்ற சப்தங்களை எழுப்பி தனது மகனிடம் பரிசோதனைகள் செய்தது குறித்து எழுதிய டார்வின், ‘அவனுடைய முகத்திற்கருகே சென்று நான் எழுப்பிய பலத்த குறட்டை ஒலி அவனை அச்சுறுத்தியதன் விளைவாக அவன் அழ ஆரம்பித்தான். திரும்பவும் நான் அந்த சோதனையைத் தொடர்ந்தேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Babies and orangutans share many traits (Credit: Trinity Mirror/Mirrorpix/Alamy)

அவர் பிறகு உணர்வுகள் (எமோஷன்ஸ்) என்ற புத்தகத்தில், மனிதர்கள் எவ்வாறு சப்தங்களுக்கு எதிராக எதிர்வினையாற்றுகிறார்கள் என்பது பற்றி எழுதுகிறார். தன்னுடைய குழந்தைகள் முன்பாக ஒரு பெட்டியை ஆட்டி தான் கொண்டிருக்கும் கருத்துகளை அவர் சோதிக்கிறார். ‘இரண்டு வாரக் குழந்தைகளாக இருக்கும் போதே என்னுடைய குழந்தைகளை திடீரென்று எழுகின்ற சப்தங்கள் பயமுறுத்தின…’ அதுபோன்றே மனிதக்குரங்குகளும் தங்களுடைய பயத்தை வெளிப்படுத்தியதை அவர் கண்டார். ‘முதன்முதலாக ஆமையை பார்த்த போது தன்னுடைய பயத்தை ஒராங் வெளிப்படுத்தியது’ என்று எழுதியுள்ளார்.

மகிழ்ச்சியான உணர்வுகளை வெளிப்படுத்துவது பற்றியும் டார்வின் கண்டறியத் தலைப்பட்டார். அவர் வில்லியம் முதன்முதலாக எப்போது சிரிக்கத் தொடங்கினான் என்பதைக் குறித்து வைத்திருந்தார். பிறந்து ஐந்து வாரங்களில் அவனுடைய சிரிப்பு இயல்பாக இருந்தது என்றும், ஆறாவாது வாரத்தில் அவனது கண்களில் சிரிப்பைக் கண்டதாகவும் எழுதியுள்ளார். மனிதக்குரங்குகளும் அவ்வாறே தங்களுடைய கண்கள் பிரகாசமாக ஜொலிக்கும் வகையில் சிரிப்பதாகவும்,  மிக இளைய ஒராங்குட்டான் சிரிப்பதைப் பார்க்கும் போது மனிதன் ஒருவனின் முகத்தைப் பார்ப்பது போலவே இருக்கும் என்று டார்வின் எழுதுகிறார்.

C:\Users\chandaraguru\Downloads\Orang utan Female.jpg
Image Source: Jenny (orangutan) – Wikiwand

இவ்வாறாக எழுதப்பட்ட குறிப்புகள் பலவற்றையும் நாம் வாசித்து வந்த நிலையில், 2015ஆம் ஆண்டு வெளியான புதிய கண்டுபிடிப்பு ஆச்சரியம் அளிப்பதாக இருந்தது.  வான் வைஹ், டென்மார்க் இயற்கை வரலாறு மியூசியத்தைச் சார்ந்த பீட்டர் ஜெர்கார்ட் ஆகியோர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் மறைந்திருந்த டார்வினின் மிகப் பழைய குறிப்புகளைக் கண்டறிந்தனர். மனிதன் என்ற தலைப்பில் இரண்டு தாள்களில் டார்வின் எழுதிய குறிப்புகள் இருந்தன. ஆனால், அந்த குறிப்பில் பார்வையாளர்களைக் கவர்வதற்காக ஜென்னி மனித உடைகளை அணிந்து கொண்டிருந்ததைத் தவிர, மனிதர்களைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தனித்துவமாக மனிதர்களிடம் மட்டுமே இருப்பதாகக் கருதப்பட்ட உணர்ச்சிகளை ஜென்னி வெளிப்படுத்தினாள். போதுமான கவனம் செலுத்தப்படாத போது தவறுகளைப் பொறாத உணர்வை மிகவும் தீர்மானகரமாக ​​ஜென்னி வெளிப்படுத்தியதாக எழுதியுள்ள டார்வின் ‘தன்னிடம் இருக்கும் சால்வையை விரித்து மூடிக் கொள்ளும் சிறுமியைப் போல இரண்டு கைக்குட்டைகளைக் கொண்டு அவள் தன்னை மூடிக் கொண்டாள்’ என்று குறிப்பிடுகிறார். ஒராங்குட்டான்கள் ‘மிக ஆர்வமாக, குறிப்பாக சிறுவர்கள் குளிப்பதைப் பார்ப்பது அவற்றிற்கு மிகவும் பிடிக்கும்’ என்றும்  ‘தொந்தரவு தரும் போது, குழந்தையைப் போல் நடந்து கொள்ளும்’ என்றும் டார்வின் எழுதியுள்ளார்.

இன்று நாம் உணர்வுநிலையின் குறியீடாகப் பார்க்கின்ற சுயஅறிவை ஒராங்குட்டான்கள் பெற்றிருந்தனவா என்பதை அறிந்து கொள்ளத் துவங்குகிறார். எளிமையான கண்ணாடி பரிசோதனையை நடத்தி, கண்ணாடியில் தெரியும் தங்கள் உருவத்தைப் பார்த்து அவை புரிந்து கொள்கின்றனவா என்பதை அறிவியலாளர்களால் அறிந்து கொள்ள முடியும். அந்த சோதனை 1970ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது. அந்த சோதனையின் முன்வடிவை முன்கூட்டியே டார்வின் 1838ஆம் ஆண்டிலேயே நடத்தியுள்ளார். ‘ஜென்னியும், இன்னொரு ஒராங்குட்டானும் கண்ணாடியில் தங்களுடைய முகங்களை கோணலாக உருவாக்கிப் பார்த்துக் கொண்டன… கண்ணாடியின் தங்களைப் பார்ப்பதில் அவை அளவிடமுடியாத அளவிற்கு ஆச்சரியமடைந்தன, பல்வேறு கோணங்களில், பக்கவாட்டில் தங்களை தொடர்ந்து ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டன’ என்று தான் பார்த்தவற்றை டார்வின் பதிவிடுகிறார்.

பின்னர் கண்ணாடியின் முன்பாக அவை எவ்வாறு நடந்துகொண்டன என்பது பற்றி மேலும் புரிந்து கொள்ள டார்வின் முயன்றார். அவருடைய மகனின் செய்கைகளைப் பற்றி கேள்விகளை எழுப்பிக் கொள்கிறார். ‘மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்பாக கண்ணாடிக்குள் தன்னைப் பார்த்து அவன் சிரித்துக் கொண்டான் – கண்ணாடியில் தெரிந்த பிரதிபலிப்பு மனிதன்தான் என்பதை அவன் எப்படி அறிந்து கொண்டான்? அவன் அவ்வாறான எண்ணத்துடன்தான் சிரித்தான் என்பதை நான் நன்றாக உணர்கிறேன்’.

C:\Users\chandaraguru\Downloads\darwin emma.jpg
Image Source: Spectator.com.au

திருமண ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவது டார்வினின் அறிவியல் ஆய்வுகளுக்கானதொரு பொருளாக தான் இருக்கப் போவதற்கும் சேர்த்துத்தான் என்பதை அவருடைய மனைவியான எம்மா அவர்களுடைய திருமணத்திற்கு முன்னதாகவே அறிந்திருந்தது டார்வினுக்கு கிடைத்ததொரு நல்வாய்ப்பாகவே இருந்தது.

1839 ஜனவரியில் டார்வினுக்கு எழுதிய கடிதத்தில் ‘உங்கள் மனதில் இருக்கும் கருத்துக்களின்படி, என்னை மாதிரிப்பொருளாகவே நீங்கள் கருதுவீர்கள் என்றே நான் நினைக்கிறேன்… சில கோட்பாடுகளை என்னை வைத்து நீங்கள் உருவாக்குவீர்கள். நான் தொல்லை கொடுத்தாலோ அல்லது கோபமடைந்தாலோ ‘அது எதை நிரூபிக்கிறது’ என்று மட்டுமே நீங்கள் கருதுவீர்கள்’ என்று எம்மா எழுதினார்.

சிறிது காலத்திலேயே அவருடைய குழந்தைகள் அவருடைய ஆய்விற்கான பொருள் என்பதில் இருந்து விலகி அவருடைய உதவியாளர்களாகவே மாறினர்.

இதற்கு முன்பு அறியப்பட்டிராத ஹென்றியெட்டா, வில்லியம் என்றழைக்கப்பட்ட டார்வினின் இரண்டு குழந்தைகளின் 112 கடிதங்களை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகம் சமீபத்தில் வாங்கியது. அந்தக் கடிதங்கள் டார்வின் எழுதிய மற்ற கடிதங்களுடன் இணைந்து அவருடைய ஆய்விற்கு  எந்த அளவிற்கு  உறுதுணையாக இருந்தார்கள் என்பதை வெளிப்படுத்துவதாக இருந்தன.

மாலைப் பொழுது நடனத்தைப் பற்றி எழுதப்பட்ட ஒரு கடிதத்தில், தாவரத்தை உறிஞ்சுகின்ற பூச்சியை தான் கவனித்ததைப் பற்றி வில்லியம் ‘நான் அந்த பூச்சியைப் பார்த்ததைப் பற்றி எட்டி [ஹென்றியட்டா] உங்களிடம் சொன்னாளா என்று எனக்குத் தெரியவில்லை. அது ஆர்க்கிஸ் மாக்குலேட்டாவை உறிஞ்சிக் கொண்டிருந்தது’ என்று தனது தந்தைக்கு எழுதியிருந்தார்.

எல்லோரிடமிருந்தும்  அவர்  சற்று ஒதுங்கியிருந்ததாகவே நாங்கள் நினைத்திருந்தோம் என்று வில்லியம் பற்றி கூறுகின்ற பியர்ன், தான் எழுதிய குறிப்புகளை தந்தைக்கு அனுப்பி வைத்து தன்னுடைய கருத்துக்களை அவருடன் வில்லியம் விவாதித்ததாக அந்தக் கடிதங்கள் மூலம் தெரிய வருகிறது என்கிறார்.

டார்வினின் மகள் ஹென்றியெட்டா மற்றுமொரு முக்கியமான வேலையைச் செய்து வந்தார். அதாவது அவர் டார்வினின் ஆசிரியராக இருந்து வந்தார். ஐரோப்பாவில் இருந்த விடுமுறை நாட்களில் கூட, தன்னுடைய மனிதனின் தோற்றம் (டிஸெண்ட் ஆப் மேன்) என்ற புத்தகத்தின் கையெழுத்துப் பிரதியை அனுப்பி வைத்து அதனை வாசிக்குமாறு டார்வின் கேட்டுக் கொண்டார். அப்போது தனது மகளுக்கு எழுதிய கடிதத்தில் ‘முழுமையாக வாசித்த பிறகு ஆழமான விமர்சனங்கள், எழுத்து நடையில் திருத்தங்கள் ஆகியவற்றிற்காக நேரத்தை உன்னால் ஒதுக்க முடியுமானால், நான் மிகவும் நன்றியுடன் இருப்பேன்’ என்று டார்வின் குறிப்பிட்டிருக்கிறார்.

டார்வின் குடும்பத்தில் இருந்த யாரும் வேலையில் இல்லாமல் இருந்தது அவருக்கு உதவிகரமாகவே இருந்தது. ஒரு அறிவியலாளராக டார்வினுக்கு ஒருபோதும் ஊதியம் வழங்கப்பட்டதில்லை. தன்னார்வம் கொண்ட இயற்கையியலாளராக இருந்த டார்வின் தன்னுடைய வேலைகளுக்காக தனது குடும்ப சொத்துகளையே செலவிட்டு வந்தார். தன்னுடைய வாழ்க்கை முழுவதும் உழைத்து வந்த அவர் ஒருபோதும் பணத்திற்காக உழைத்தது இல்லை.

‘உண்மையில் பொறாமைப்படக் கூடிய குடும்ப வாழ்க்கையாகவே இருந்தது. அங்கே எல்லா இடங்களிலும் அறிவியல் இருந்தது. டார்வின் தன் கையில் இருந்த அனைத்தையும் – தன்னுடைய குழந்தைகள், குடும்பத்தில் இருந்த பொருட்கள், சமையல் தோட்டத்தில் உள்ள தாவரங்கள் என்று எல்லாவற்றையும் ஆய்விற்குப் பயன்படுத்தி வந்தார். அவரது குடும்பத்தினர் கோழிக்குஞ்சுகள், புறாக்கள், முயல்கள் போன்றவற்றை வளர்த்து வந்தனர். அவரது வீட்டின் வரவேற்பறை சன்னல்கள், சரக்குகள் வைக்கின்ற அறை என்று எங்கும் வேற்று நாட்டுத் தாவரங்கள், பரிசோதனைக்கான தாவரங்கள் நிறைந்திருந்தன’ என்றும், டார்வினின் குடும்ப வாழ்வு வேடிக்கை, கேலி நிறைந்ததாக இருந்தது என்கிறார் பியர்ன்.

இந்த தாவரங்களில் சில ஊனுண்ணிகள் இருந்தன. அவற்றிற்கு எல்லா வகையான உணவுகளையும் அளித்து டார்வின் பரிசோதனைகளைச் செய்தார். அது குறித்து கூறுகின்ற பியர்ன் ‘வேகவைத்த முட்டை, சமைத்த இறைச்சித் துண்டுகள், ஆலிவ் எண்ணெய் – தாவரங்களுக்கு உணவளிப்பதற்காக சமையலறைக்குச் செல்லும் அவரை கற்பனை செய்து பாருங்களேன்’ என்கிறார்.

இன்றும் டார்வினின் கருத்துக்கள் அறிவியலை ஊடுருவிச் செல்பவையாக இருக்கின்றன. விழித்திருந்த ஒவ்வொரு நிமிடங்களிலும், மிகவும் உள்ளார்ந்த தனிப்பட்ட நேரங்களிலும்கூட தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தை அவர் கவனித்து வந்ததைக் கருத்தில் கொள்ளும்போது, ​​அவர் முன்வைத்த கருத்துகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக ஒருவேளை நீங்கள் கருதக் கூடும். அவரிடம் இருந்த ஆழ்ந்த கவனித்தல், திறந்த மனது, பேரார்வம் போன்றவையே அவருடைய வெற்றிக்கான  காரணமாக இருந்தன என்கிறார் பியர்ன்.

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னரே டார்வின் தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டிருந்த போதிலும், பழங்கால மனிதர்களின் ஒப்பீட்டளவிலான படிமங்கள் இல்லாத நிலையில் அவருடைய ஆரம்பகால கருத்துகளே மிகவும் துல்லியமானவையாக இருந்தன என்று பீட்டர் ஜெர்கார்ட் கூறுகிறார். மனிதக்குரங்குகளே வாழ்ந்து கொண்டிருக்கும் நம்முடைய நெருங்கிய உறவினர்களாக இருக்கின்றன என்பதே டார்வின் சொல்ல வந்தது. அவை மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான இடைவெளி மெதுவாக நிரப்பப்படுவதை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன.

டார்வின் பின்னர் மனிதனல்லாத குரங்குகளிலிருந்து நாம் தரத்தால் வேறுபடுகிறோம் – வகையால் அல்ல என்று எழுதினார். அவருடைய இந்த ஆரம்பகால ஆய்வுகள் இப்போது முழுத் துறையாகவே மாறி இருக்கின்றன. மனிதகுலத்தைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள விழையும் ஆரம்பகால மனிதர்கள் குறித்த அறிவியலாளர்கள் நம்முடைய  நெருங்கிய உறவினர்களைக் கவனிக்க வேண்டும். அதற்காக அந்த ஜென்னி என்ற ஒராங்குட்டானுக்கு மட்டுமல்லாது, டார்வினின் குழந்தைகளுக்கும் நாம் நன்றி சொல்லியாக வேண்டும்.

http://www.bbc.com/earth/story/20160315-did-charles-darwin-use-his-children-for-science

நன்றி: பிபிசி எர்த் மார்ச் 2016

தமிழில்: தா.சந்திரகுரு



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *